போயே போச்!

இந்தியாவின் பிரபல ஊடகங்கள் வெளிப்படையாக, ஒன்றிய அரசின் பரப்புரை ஊதுகுழல்களாகவே மாறிவிட்டன என ஒன்பது வருடங்களுக்கும் மேலாக சொல்லிக்கொண்டே வருகிறார்கள். அர்ணாப், ரங்கராஜ் போன்றோரை மட்டுமே அத்தகைய ஊதுகுழல்களாக சாமானியர்கள் நினைக்கிறார்கள். மாறாக, விகடன், தினமணி, இந்து போன்ற ஊடகங்கள் நடுநிலையாகச் செயல்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைகளைத்தான் பல ஆண்டுகளாகச் சிதைத்துக்கொண்டே வருகின்றன இந்தப் பாரம்பரிய ஊடகங்கள்!

ஆண்டாளும், அய்யப்பனும் எமதிரு கண்கள்!

கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய தமிழாற்றுப்படை கட்டுரைகளை தினமணியில் எழுதிக்கொண்டு வந்தார். கவிஞர் வெளிப்படையாக கலைஞரை ஆதரிப்பவர் என்கிற தீராக்காழ்ப்பு பலருக்கும் உண்டு. ஆனால் கவிஞரும், கலைஞரும் தன்னை எதிர்ப்பவர்களை அணைப்பதில்தான் கொள்ளை இன்பம் என்பவர்கள். அதனால்தான் அவர் தினமணியைத் தேர்ந்தெடுத்தார். தமிழுக்காகத் தொண்டு செய்தவர்களை தன் அழகுத் தமிழால் சீராட்டியதை, பாராட்டியதை மட்டுமே நுகர்ந்திருக்க வேண்டிய அவர்களுடைய மூளைகள், வேறெதற்கோ காத்திருந்ததுபோல வந்தது அந்த ஆண்டாள் கட்டுரை!

அவ்வளவுதான். அந்தக் கூட்டம் தங்களுடைய வாழ்நாளில் முதன்முறையாக நீதி வேண்டி நடுவீதி வந்தது. வந்தது என்பது தவறு. வரவழைக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஆண்டாள் போராட்டங்கள் பெரியதாய் நடப்பதைப் போல கட்டமைக்கப்பட்டன. தினமணி ஆசிரியரை அழைத்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆண்டாளையும், அவளுடைய அழகான தமிழையும் தவிர வேறெந்தக் காழ்ப்புமில்லாத அந்தக் கட்டுரைக்காக, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்குச் சென்று பகிரங்க மன்னிப்பைக் கேட்டு, இனி வைரமுத்துவின் எந்தக் கட்டுரையையும் பிரசுரிப்பதில்லை என்று, எரியும் நெருப்பில் தன் சார்பாகப் பசு நெய்யை வார்த்தார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்!

அழுத்தங்கள் அதிகரிக்க தன் வருத்தங்களைத் தெரிவித்தார் வைரமுத்து. ஆனால் அவரும் வைத்தியநாதனைப்போல பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனப் பேசினார்கள்! ஹெச்.ராஜா போன்றோர் வைரமுத்துவின் தாயாரைப் பகிரங்கமாக இழிவு செய்து தூற்றியதையெல்லாம் அப்படி அப்படியே சார்ந்த ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன! அதுவரை, ஆண்டாள் போராட்டங்களை முதலிரண்டு பக்கங்களில் வண்ண உள்ளீடுகளோடு அனைவருக்கும் தெரிவதைப்போல் எழுதி வந்த இந்து தமிழ் திசை, என்னமோ நாட்டில் இனப்படுகொலைகள் நடப்பதைப்போல இதற்காக அலறிவந்த அது, தினமணி கழற்றிவிட்டதும் வைரமுத்துவை அழைத்துவந்து மிச்ச கட்டுரைகளை எழுத வைத்தது.

இந்தச் சாதுர்யம்தான் இவர்களை நூற்றாண்டுகள் கடந்தும் நீடித்து வாழவைக்கின்றன. இதுபோன்ற குறைகாணும் சுட்டிக்காட்டல்கள் நிகழும் போதெல்லாம், தன் நடுநிலை நியாயங்களை நிலை நிறுத்த அவை பயன்படும் என முன் தீர்மானித்தே அப்படிச் செய்கின்றன என்றால் அது மிகையில்லை!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் போகலாம் என்கிற உரிமையைத் தீர்ப்பாகத் தந்தது உச்சநீதிமன்றம். பொதுவாக இத்தகையப் பாரம்பரிய நாளிதழ்கள், உச்ச அல்லது உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக பகிரங்கமாக எதையும் எழுதுவதில்லை. அப்படி எழுதியேதான் ஆகவேண்டுமெனில், ஃபேக் ஐடிக்களில் எழுதும் வழக்கம் பல தசாப்தங்களாக இவர்களிடையே உண்டு!

அதற்கான சமீபத்தைய எடுத்துக்காட்டையும் உங்களுக்குச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அதற்கு முன் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவுப் பிரச்சினையை இவர்கள் கையாண்ட விதம் அத்துணை சதிமிக்கவை, அதை முதலில் காண்போம்! குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும்பாணியில், ஒருபக்கம் தலையங்கத்தில் வரவேற்க வேண்டிய தீர்ப்பு என எழுதிவிட்டு, மறுபுறம் முதல் பக்கத்தில் கொழுந்து விட்டு எரியும் எதிர்ப்புப் போராட்டங்கள் என பெண்களை அனுமதிக்க மறுப்பவர்களின் ஆவேசப் புகைப்படங்களை பிரசுரிப்பார்கள். கலாச்சாரம், இந்தியப் பண்பாடு என அவர்களுடைய உளறல்களையெல்லாம் அப்படியே எழுதி, தங்களின் மத அரிப்பை சொறிந்துவிட்டு சுகம் காணுவார்கள்.

இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக அடிப்பதுதான் அவர்களுடைய சாணக்கியத்தனம். தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஒன்றிய அரசு ஆதரித்த ஒரே காரணத்தினால்தான் அத்தகைய தீர்ப்பே வந்தது. ஆனால் மக்களிடம் அது ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசால் வந்தது என நிறுவ, இத்தகைய போராட்டங்களை ஹைலைட் செய்வதுதான் அந்த இரண்டாம் மாங்காய். போராட்டங்களைக் கட்டுப்படுத்த பினாரயி அரசு தடியெடுத்தால் கொடுங்கோல் ஆட்சி என தலையங்கம் எழுதவும் தயங்காது இத்தகைய நாளிதழ்கள்.

ஆபரேஷன் அமித்ஷா!

ஃபேக் ஐடியில் இந்து எழுதும் கட்டுரைக்கான தற்காலச் சான்றுதான் மேற்கண்ட தலைப்பில் வந்த ஒரு நடுப்பக்கக் கட்டுரை. இதை எழுதியவரின் பெயரும் அதிலிருந்தது. ஆனால் அது அவருடைய உள்ளக்கிடக்கை அல்ல. முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் ஒத்தூதிகளாக இருக்க விரும்பும் இந்துவின் உள்ளக்கிடக்கைதான் அது. அந்தக் கட்டுரை, ஒன்றிய அரசின் ஏவல்துறைகளாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத் துறை இருப்பதில் தவறே இல்லை என்கிறது. அப்பத்தானே எதிரிகளை வீழ்த்த முடியும் ? இந்தியா முழுக்க ஆட்சியைப் பரவலாக்கி நீடித்து நிலைக்க முடியும் என்று நீள்கிறது.

அப்பேர்ப்பட்ட அமித்ஷா வரும்போதே மின்சாரத்தை நிறுத்தி, இருளுக்குள் மூழ்கடித்து அவருடைய வருகையின் நோக்கத்தை நீ (அமைச்சர் செந்தில் பாலாஜி) சிதைப்பாய் என்றால், உன்னைத் தூக்க மறுநாளே டெல்லியிலிருந்து ஆட்கள் வரமாட்டார்களா என்ன என்று வெளிப்படையாக மிரட்டுகிறது.

அத்தகைய அதிரடி ஆபரேஷன்களால் அமித்ஷா, தமிழ்நாட்டின் முதலமைச்சரையே பயங்கொள்ளச் செய்து விட்டதாகவும், இனி இதுபோன்ற ரெய்டு நடவடிக்கைகள் அதிகரிக்கும், இதனால் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அடுத்தாண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டுமென தி.மு.க.வின் பழைய தலைவர்கள் முனகுவதாகவும் அந்தக் கட்டுரை முடிகிறது. இதுக்கெதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமான்னு வடிவேலு இழிப்பதைப் போல நாமும் தலையில் அடித்துக் கொள்ள வேண்டி வருகிறது. அவ்வளவு வெளிப்படையாக அவர்கள் தங்களுக்கு வேண்டிய கட்சியுடன் கூட்டணிக்கு கெஞ்சுமளவு கடுப்படித்திருக்கிறது தி.மு.க. – காங்கிரஸ் உறவு.

திராவிட வெறுப்பு!

பெரும்பாலான இந்தியர்கள் நம்பும் ஊடகங்கங்களாக இருந்தும், இத்தகைய பல பாரம்பரிய நாளிதழ்களின், முதலாளிகள், நிர்வாகிகள், திராவிட வெறுப்பாளர்களாக மாற்றப்பட்டுவிட்டனர் என்பது கசக்கும் உண்மை. இதெல்லாம் கடந்த ஒன்பது ஆண்டுகளில், குறிப்பாக 2019-க்குப் பிறகு பரவலாக்கப்பட்டுள்ளன. இவர்களையும் சாதி, மதம், பொருள், அரசு விளம்பரங்கள் என்று வலைவீசி படியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கெல்லாம் மசியாமலும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுமல்லவா ? அவர்களை தங்களுடைய ஏவல் துறைகள் மூலமாக, அல்லது நிர்வாகத் தலைமையை மிரட்டி பதவியிலிருந்து விலகச் செய்துள்ளனர். இதன் பின்விளைவாகத்தான் அவர்கள் இவ்வளவு வெளிப்படையாக இப்போதெல்லாம் திராவிடக் காழ்ப்புகளை கொட்டுகின்றனர்.

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்தான் சிறப்பான சான்று.

நடுநிலை ஊடகங்கள் எனில் அங்கு இதுவரை நடந்த 40% கமிஷன் என்கிற அரசு வேலைகளுக்கான ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்படும் லஞ்ச ஊழலைப் பெரிதாகப் பேசி, அத்தகைய ஆட்கள் மீண்டும் ஆளக்கூடாது என்றெழுதும் அல்லவா?

இஸ்லாமிய மாணவர்கள் வாடிக்கையாக அணிந்துவரும் ஹிஜாப் என்கிற ஆடையை மத அரசிய லாக்கி, தேவையே இல்லாமல் அவர்களைப் பள்ளிக்கு வராமல் செய்து, தேர்வெழுத விடாமல் முடக்கிய அட்டூழியங்களுக்காக, இத்தகைய சகிப்புத் தன்மையற்றவர்கள் மீண்டும் அரசாளக்கூடாது என்றெழுதியிருக்க வேண்டுமல்லவா ?

அதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல், அங்கு மீண்டும் பொம்மை தலைமையிலான ஆட்சியே மலருமென்றும், ஒருவேளை கணிப்பில் சொதப்பியதுபோல நேர்ந்தால், குமாரசாமியின் ஆதரவைப் பெற்று அமித்ஷா சாணக்கியத்தனத்தில், மீண்டும் பாரதிய ஜனதாவே கர்நாடகத்தை ஆளும் என்று எழுதினார்கள். இவர்கள் நடுநிலையாளர்கள் என நம்பி இதை வாசிக்கும் சாமானியனின் மூளை என்னவாகும்? கொஞ்சம் கொஞ்சமாய் இதை நம்ப ஆரம்பிக்கும்.

அட, அதையும் தாண்டி சித்தராமய்யாவும், சிவக்குமாரும் அங்கு தனிப்பெரும்பான்மையுடன் வென்று விட்டார்கள். அடுத்து என்ன செய்வது ?

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அபரிமிதமாக வென்று, ஆட்சியை அமைக்க ஒரு வாரமானது. அவ்வளவு தான். காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே பூசல். கட்சி உடையுமா? உடைந்த கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி மந்திரிசபை அமைக்குமா? எனக் குட்டையைக் குழப்பி பார்க்கிறார்கள். மாறாக, பல மாநிலங்களில் இதே நிலையை பாரதிய ஜனதா கட்சி அடையும்போது, அதையெல்லாம் ஷாவும், மோடியும் சேர்ந்து எளிதா ஊதித் தள்ளிடுவாங்க என்பது போலவும் கட்டமைக்கிறார்கள். கர்நாடகாவிலும் அதேபோல யார் முதலமைச்சர் என்கிற பிரச்சினை இழுத்தபோது, சிவக்குமார் தன் ஆதரவு உறுப்பினர்களோடு பிரிந்து போவார் என நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு எழுதினார்கள்.

சரி. ஆட்சியை அமைத்துவிட்டார்கள். இவர்கள் எழுதிய, எண்ணிய எதுவும் ஈடேறவில்லை. ஆனால் காழ்ப்பு வடியவில்லையே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா சித்தராமய்யா என்று முதலைக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏழைப் பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உதவித் தொகை என்றெல்லாம் வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு அதை எப்போது, எப்படி நிறைவேற்ற வேண்டுமெனத் தெரியாதா என்ன ? இவர்களுக்கு படபடப்பு கூடிப்போகிறது. ஆட்சிக்கு வந்த அடுத்த வாரத்திற்குள் இதையெல்லாம் சித்தராமய்யா நிறைவேற்றிவிட வேண்டுமென்றும், தாமதமானால் தவிக்கிறார், திணறுகிறார் என்றெழுதியும் இன்பம் காண்கிறார்கள்.

ஒவ்வோர் ஏழைக் குடும்பத்திற்கும் மாதம் பத்துகிலோ இலவச அரிசியைத் தருவதாக வாக்களித்த காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்றுவதுபோல, தங்களுடைய உணவுக் கழகத்திலிருந்து சகாய விலையில் அரிசியைக் கொடுப்பதில்லை என்று திடுக்கென அறிவித்திருக்கிறது ஒன்றிய அரசு.

ஒன்றிய அரசின் இந்தக் கோழைத்தனத்தை விமர்சிக்க வேண்டிய இத்தகைய ஊடகங்கள் / நாளிதழ்கள், ஏமாற்றுகிறாரா சித்தராமய்யா ? என கூச்சமில்லாமல் தலைப்பிட்டு எழுதுகிறார்கள்!

அவர்களுடையப் பதவியேற்பு விழா, குறைந்த நேரத்தில் அவசரக் கோலத்தில் திட்டமிடப்பட்டது. பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களைத் தவிர்த்து ஏனைய இந்தியக் கட்சித் தலைவர்கள், ஆட்சியாளர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மகிழ்ச்சியுடன் அனைவரும் விழாவில் பங்கேற்க வர, மேடையில் நெரிசல் அதிகமானது. கமல்ஹாசனை ஏதோ ஒரு கூட்டத்தின் நடுவில் அமர வைத்தனர். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவமதிக்கப்பட்டாரா எனத் தலைப்பிட்டு ஒரு பத்தி.

பத்தியைத் தலைப்பு வரையில் அணுகி, நமுட்டுச்சிரிப்போடு கடந்தவர் பலரிருக்க, உள்ளே போனால் தலைப்புக்கும், செய்திக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஸ்டாலின் அன்போடு சிறப்பாக வரவேற்கப் பட்டிருக்கிறார். அரவணைக்கப்பட்டிருக்கிறார். பெருந்தலைவரென அவருக்கு உரிய மரியாதைகள் தரப்பட்டிருந்தன. ஆனால் புகைப்படக்காரர்கள் ஏதோ ஒரு தருணத்தில் எடுத்த புகைப்படங்களுக்கேற்ப தலைப்பு வரிகளை வடிவமைக்கிறார்கள்.

அதேபோலத்தான் ‘சித்தராமய்யா புறக்கணித்த பெரியார் செங்கோல்’ என்றொரு தலைப்பு.

ஒன்றியத்தின் தலைமை அமைச்சருக்கு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தமைக்காக ஒரு செங்கோல், தமிழகத்திலிருந்து பரிசளிக்கப்பட்டது அல்லவா? அதேபோல, திராவிடத் தூணான சித்தராமய்யாவுக்கும் செங்கோலைப் பரிசளிக்க எண்ணி, அவருடைய சாதியைச் சேர்ந்த சிலர், இப்போது தமிழகத்தில் வசிப்பதால், பெரியாரின் தலையை உச்சியில் கொண்ட ஒரு செங்கோலைப் பரிசளிக்க, அவருடைய வீட்டுக்கே சென்றிருக்கின்றனர்.

பொதுவாக தனக்களிக்கப்படும் சால்வை, பொருட்கள் என எந்தப் பரிசுகளையும் சித்தராமய்யா ஏற்பதில்லை. இது புதுப்பழக்கமெல்லாம் இல்லை. அவர் இதற்கு முன்னும் அப்படியே இருந்திருக்கிறார். எனவே இந்தச் செங்கோல் பரிசையும் அவர் நிராகரித்திருக்கிறார். ஆனால் அவர்களுடைய அன்பை மதித்திருக்கிறார். அந்தச் செங்கோலின் செய்நுட்பங்களை ரசித்திருக்கிறார். இதெல்லாம் உள்ளே விரிவாகச் சொல்லப்பட்டிருந்த செய்திகள். ஆனால் தலைப்பில், அந்தச் செங்கோல் முகப்பில் பெரியார் முகம் இருந்ததால், சித்தராமய்யா செங்கோலை நிராகரித்ததாக கட்டமைக்கிறார்கள்.

பெரியார் அவர்களுக்கு என்றுமே எட்டிக்காய்தான். அதற்காக இவ்வளவு பச்சையாகவா புளுக வேண்டும்? ஆங், அதான் உள்ள விவரமா எழுதியிருக்கோம்ல என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

தோலுரித்த வெப்சீரிஸ்!

ஒரு தெலுங்கு வெப்சீரிஸ் பார்த்தேன். தொடரின் பெயர் ‘தலைப்புச் செய்திகள்.’ கதையின் மையக்கருவிலைபோன ஊடகங்கள். அதனால் பொதுமக்களுக்கு விளையும் இன்னல்கள்.

ஆந்திராவின் ஒரு சிறு நகரத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை திரைக்கதையாக வடிவமைத்திருந்தனர். ஊரின் இயற்கை வளங்களைச் சுரண்டும், சாதிப் பின்புல வலுமிக்க இரண்டு பணக்கார ரவுடி அரசியல்வாதிகளின் அட்டூழியங்களுக்குத் துணைபோகும் பத்திரிகைகள்.

அதற்காக அவர்களைத் தேடி வரும் கவர்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப திரித்து எழுதும் நிருபர்கள்.

குறிப்பாக ஓர் ஏழை உழவர் தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலம், ரவுடி அரசியல்வாதியால் ஆக்கிரமிக்கப்பட்டதை எண்ணி அழுது புலம்பி, அதுபற்றி எழுதுமாறு இவர்களிடம் வேண்டி கெஞ்சினாலும் அவர்கள் அதுபற்றி எதுவும் எழுதுவதில்லை. மாறாக, கவர் தருபவர்களுக்கு விசுவாசமாக, அந்த நில உடைமையாளருக்கு சின்ன வீடு இருப்பது போலவும், அவருடைய மனைவிக்கு கள்ளக்காதல் இருந்ததால், அவரே அந்த ரவுடி அரசியல்வாதிக்கு விற்றுவிட்டு இப்படி நாடகமாடுவதாகவும் எழுதுகின்றனர். ஒரு கட்டத்தில் ஊராரின் சாபங்களுக்கும், கோபங்களுக்கும் ஆளாகின்றனர். மனம் திருந்தி அவர்களுக்காக எழுதும் சில வரிகளுக்கே மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேர்கிறது. அது கொலை வரைக்கும் நீள்கிறது. முதல் பாகம் முற்றி, அடுத்த பாகம் வரும்போது என்ன நடக்கிறது எனப் புலப்படும். ஆனால்;

இங்கு 2016 இல், தமிழ்நாட்டின் சர்வாதிகாரமிக்க முதலமைச்சர் ஒருவர், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். முதல்நாள் காலை, அவருக்கு சாதாரணக் காய்ச்சலும், வயிற்றுப் போக்கும் எனச் சொல்லப்படுகிறது. அகில இந்திய ரீதியில் மிகப் பிரபலமான இவரைப் பற்றி நாளொரு சேதி, பொழுதொரு புரளி என மக்களிடையே உலவினாலும், இங்கிருந்த நூற்றுக்கணக்கான பிரபல ஊடகங்கள் செய்தது என்ன ?

அ.தி.மு.க. தொண்டர்களைப்போல அவர்களும் மருத்துவமனை வாசலில் போய் மைக் சகிதம் நிற்பர்கள். யாரேனும் அ.தி.மு.க. கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வந்து, முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு வசன அறிக்கையை அப்படியே ஒப்பிப்பார். இவர்களும் அடி பிறழாமல் அதுதான் உண்மையான செய்தி என்று எழுதுவார்கள், செய்திகளில் ஒப்பிப்பார்கள்.

ஊடக நேர்மை, ஊடகக் கடமை, ஊடகப்புலனாய்வு என ஊடகங்களின் அத்தனை லட்சணங்களும், அறங்களும் அன்றுதான் மண்ணோடு புதைந்தன என்பேன். அதன்பின் அது எழவே இல்லை. ஒரே ஓர் உண்மையைக்கூட அந்த எழுபத்தி ஐந்து நாட்களில் அவை நமக்குச் சொல்லவே இல்லை. எங்கோ கவருடன் மண்டபத்திலிருந்து சொல்லி அனுப்பப்படும் துணுக்குகளைத்தான் அப்படி அப்படியே வாசித்தார்கள், வாசித்துக் கொண்டு
மிருக்கிறார்கள். அட, இன்னுமா என்றுதானே திகைக்கிறீர்கள்? ஆமாம்.

என்று தணியும் இந்த ஊடக அநீதி ?

நம் சன் டி.வி.யில் இன்று காலை வாசிக்கப்பட்ட தலைப்புச் செய்தியும், அதன் உள்ளடக்கத்தையும் பாருங்கள்.

அமெரிக்கா, எகிப்து சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு டெல்லி வந்த ஒன்றியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு டெல்லி எம்.பி.க்கள் சேர்ந்து உற்சாக வரவேற்பளித்திருக்கிறார்கள். அங்கு வந்திருந்த பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டாவிடம் நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என வினவினாராம் மோடி. அதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடனும், நலமாகவும் இருக்கிறார்கள் எனப் பதிலளித்தாராம் நட்டா.

நம்புங்கள். இதை அப்படியே வாசித்தார்கள். தி.மு.க. சார்புத் தொலைக்காட்சி என அழைக்கப்படும் சன் டி.வி.யே இப்படி எங்கிருந்தோ எழுதிக் கொடுக்கப்பட்டதை அப்படியே வாசிக்குமென்றால், தந்தி டி.வி., புதியதலைமுறை, பாலிமரெல்லாம் எப்படி வாசிப்பார்கள்?

நாட்டுமக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம். இதை மணிப்பூர் போய் சொல்ல முடியுமா நட்டாஜி?

கடும் வெயில், கடும் மழை எனப் பாராமல் நடுவீதியில் போராடிக் கிடந்தார்களே மல்யுத்த வீராங்கனைகள்? அவர்களிடம் போய் சொல்லிப் பாருங்களேன் சன் டி.வி. 1500 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிக்கையை எழுதிய பின்பும் பாலியல் வன்கொடுமை செய்த ஒரு குற்றவாளியின் நிழலைக்கூட நெருங்க முடியாமலிருக்கும் டெல்லி காவல்துறையும், அதை நிர்வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான் நலமாக, வளமாக இருக்கிறார்கள்.

ரஷ்யாவிலிருந்து பீப்பாய் பீப்பாய்களாகப் பாதி விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கினாலும் இங்கு பெட்ரோல் விலை உச்சத்தில்தான் உள்ளது. எரிவாயு விலை ஏழைகளின் வயிற்றினை எரிக்கிறது, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். அதை எந்த நெருடலுமின்றி மக்களுக்கான ஊடகங்கள் என்று சொல்லிக் கொள்பவை ஒப்பிக்கின்றன.

மிகவும் மோசமான ஒரு சூழலில், மரத்துப் போன ஊடகங்களுக்கிடையேதான் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். விரைந்து காட்சிகள் மாற வேண்டும். மக்களுக்கான ஊடகங்கள் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும்.

rashraja1969@gmail.com