திரும்பிய திசையெங்கும் கட்டற்ற சுதந்திரம் பற்றி பேச்சு பெருகி வழியும் இதே காலத்தில்தான் ஒரு இஞ்ச் விடாமல் எட்டு திசைகளிலும் கண்காணிக்கப்படுகிறோம். அதுவும் நம்மை அறியாமாலேயே நடக்கிறது.

‘ஏங்க, எனக்கு புதுசா ஒரு நைட்டி வாங்கனும்ங்க..’ என்று மனைவி கேட்க, ‘போன மாசம்தானே நாலு நைட்டி வாங்கினே’ என கணவர் சொல்ல… அடுத்த நிமிடம் ஃபேஸ்புக்கை திறந்தால் ஒரே நைட்டி விளம்பரங்கள். ‘போன மாசம்தான் பிரதர் இந்த வீட்டுக்கு குடிவந்தேன். எதிர்வீட்டு ஆளை எனக்கு யார்னு கூடத் தெரியாது. ஆனால் அவரை என் facebook Friend suggestion லிஸ்ட்-ல காட்டுது பிரதர்’ என்கிறார் நண்பர். நமக்கு ஒரு கணம் திகைப்பாக இருக்கிறது. நம்மையார் கண்காணிக்கிறார்கள்? நம் ஒவ்வொருவரின் அந்தரங்க வாழ்வுக்குள்ளும் ஒரு பெகாசஸ் ஸ்பைவேரை பொருத்தி வைத்தது யார்?

இது கட்டற்ற சுதந்திரத்தின் மறுபக்கம். ‘ஒரு அரசன் குடிமக்களுக்கு வழங்கும் சுதந்திரத்தின் எல்லை எப்படி  இருக்க வேண்டும் எனில், குதிரையின் லஹானை அவிழ்த்துவிட வேண்டும். லாயத்தை பூட்டி வைத்துவிட வேண்டும்’ என்று படித்திருக்கிறேன். நாம் லஹான் அவிழ்ந்த குதிரையின் சுதந்திர லயிப்பில் இருப்பதால், பூட்டப்பட்ட லாயத்தின் கதவுகள் கண்ணுக்கு புலப்படவில்லை. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில் சமூக ஊடகங்களுக்கு நம் வாழ்வை ஒப்புக்கொடுத்திருக்கிறோம். நமது அன்றாட வாழ்வின் மீது அவை பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.

பாரம்பரிய ஊடகங்கள்மீது மக்கள் மதிப்பிழந்த தருணங்களில்… அது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு, செய்தி ‘வழங்கும்’ இடத்தில் இருந்து அருள் பாலிக்க தொடங்கியபோது… தன் சொந்த மனநிலையை; தன் சொந்த அரசியலை அது பிரதிபலிக்காத ஏக்கத்தில் மக்கள் மூச்சுமுட்ட நின்றபோது… ஒரு ரட்சகரின் வருகை போல You tube வந்தது. யார் வேண்டுமானாலும் ஒரு சேனல் தொடங்கலாம், யாரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தலாம், எந்த பெருமித ஒளிவட்டமும் தேவையில்லை, யாருடைய சிபாரிசும் அவசியம் இல்லை… எத்தனையோ ஆயிரம் சேனல்கள் முளைத்தன. எந்தெந்த மூளையில் இருந்தெல்லாமோ ஏதேதோ திறமைகள் வெளிவந்தன. ஒரு வகையில் அது மூச்சுமுட்டிய நிலையில் இருந்த சமூகத்தின் ஆசுவாசம், ஒரு பெருமூச்சு.

பொழுதெல்லாம் சமையற்கட்டில் கிடந்த பெண்கள், அதையே மூலதனமாக்கி குக்கிங் சேனல் தொடங்கினார்கள். எங்கோ ஒரு குக்கிராமத்து இளைஞன் தன் 6MP Front camera செல்போனை வைத்துக்கொண்டு டிராவல் வ்லாக் செய்தான். இவ்வாறாகவளர்ந்து உயர்ந்து… இன்று யூடியூப் சேனல் என்பது, ஒரு பெரும் இயக்கமாக, தனக்கென ஒரு பார்வையாளர் தொகுப்பை கொண்டதாக மாறியிருக்கிறது. சொல்லப்போனால், முந்தைய தலைமுறையில் கணிசமானோரும், இந்த தலைமுறையில் ஆகப் பெரும்பான்மை யானோரும் இவற்றின் வழியாகவே தங்கள் அரசியல் அறிவையும், பொழுது போக்கையும் பெற்றுக்கொள்கின்றனர். வீட்டில் 50 இஞ்ச் டி.வி. இருந்தாலும் கையகல செல்போனே அவர்களின் பெரும்பகுதி நேரத்தைப் பிடிக்கிறது.

இந்த அல்காரிதம், இது யூ டியூப் சேனல்களுக்கு மட்டுமின்றி, இன்ஸ்டா, ஃபேஸ்புக், ஷேர்சாட், டிக்டாக் என அனைத்துக்கும் பொருந்தும். இவையெல்லாம் ஒரு புதிய உலகத்தை திறந்திருக்கின்றன. குடும்ப பெருமிதம் இல்லாத, சமூக பின்புலம் இல்லாத பல்லாயிரம் பேர் இதை ஒரு கயிறு போல பற்றிக்கொண்டு மேலே வருகிறார்கள். பொதுக் கருத்தை உருவாக்குவதில் இந்த சமூக ஊடகங்கள் முதன்மையான செல்வாக்கு சக்தியாக இருக்கின்றன. ஒரு காலத்தில், ‘பேஸ்புக்-ல என்னத்தையோ உருட்டுக்கிட்டு இருக்காங்க.. கிரவுண்ட் நிலவரமே வேற’ என்ற குரல்கள் இருந்தன. அது மட்டுப்பட்டு, மெய்நிகர் உலகத்துக்கும், மெய் உலகத்துக்கும் இருந்த இடைவெளி நலிந்துவிட்டது. இனிமேலும், சமூக ஊடக கருத்துக்கள் வெறும் மாயை அல்ல. அவற்றைப் பொருட்படுத்தாமல் கடந்துசெல்வது நம் அறியாமையாகிவிடும்.

இது எல்லாம் உண்மைதான். ஆனால் இதற்கான வரம்பு என்ன? நீங்கள் ‘இந்த பிரியாணி கடையில டேஸ்ட் செமயா இருக்கும், வாகமன் டூர் போனீங்கன்னா இந்த ஹோட்டல்ல தங்கலாம்’ என ஃபுட் வ்லாக், டிராவல் வ்லாக் போடும் வரையிலும் பிரச்னை இல்லை… ‘பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே’ என டான்ஸ் ஆடி வீடியோ போட்டாலும் சிக்கல் இல்லை… அந்த கோட்டைத் தாண்டாத வரையிலும் நீங்கள் உண்டு, உங்கள் சப்ஸ்க்ரைபர் உண்டு என இருக்கலாம். டி.டி.எஃப்.வாசன் என்று ஒரு யூடியூபர். வேகமாக பைக் ஓட்டுவது, அதை வீடியோ எடுத்து போடுவது.. இதைத் தவிர அவர் வேறு எதையும் செய்யவில்லை. போகும் இடமெல்லாம் அவ்வளவு கூட்டம். அவர் இப்போது சினிமா ஹீரோவாக நடிக்கவும் போகிறார். இவரைப்போல, இன்னும் எத்தனையோ பேர் யூடியூபில் இருந்து நட்சத்திரங்களாக உருவாகி வளர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிரச்னை இல்லை.. அப்போது யாருக்குப் பிரச்னை? அதைத்தான் நாம் பேச வேண்டும்.

சமீபத்தில் Roots Tamil என்ற யூடியூப் சேனல் தடை செய்யப்பட்டது. கரிகாலன் என்ற இளைஞர் இதை நடத்தினார். இடதுசாரி அரசியல் பின்புலத்துடன் துடிப்புடன் இயங்கக்கூடிய கரிகாலன், பாரதிய ஜனதா கட்சியின் போலி முகங்களையும், நாம் தமிழர் கட்சியின் பாசங்கு பம்மாத்தையும் நேருக்கு நேர் கேள்விகள் கேட்டவர். ஊடக சந்திப்புகளில் சீமான், அமர்பிரசாத் ரெட்டி, ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றோரை அம்பலப்படுத்தி, அவர்களைப் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளியவர். இந்த அடிப்படையிலேயே கரிகாலன் பிரபலமும் ஆனார். ஆனால் அவரது சேனலில் வெளியான சில வீடியோக்கள் மீது புகார் எழுந்ததாக சொல்லி, ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் Roots Tamil-ஐ முற்றிலுமாகத் தடை செய்துவிட்டது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் 1.5 லட்சம் சந்தாதாரர்களை கொண்ட சேனலாக இதை வளர்த்தெடுத்தார் கரிகாலன். இது குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கைதான் என்றாலும், பெரிய வருவாய் ஈட்டிவிட முடியாது. தன் அரசியல் நோக்கத்தில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இப்பணியை செய்துவந்தார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், தன்னை அம்பலப்படுத்தும் மாற்றுக்குரல்களை முற்றிலுமாக முடக்கிப் போடும் விதமாக Roots Tamil-ஐ தடை செய்தது ஒன்றிய அரசு.

இதில் இருந்து இரண்டாவது நாள், ‘இந்த தடைக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்’ எனச் சொல்லி, Roots 24×7 என்ற புதிய சேனலைத் தொடங்கினார். மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சந்தாதாரர்களுக்கு மேல் சேர்ந்தார்கள். ஆனால், அந்தப் புதிய சேனலையும் தடை செய்துவிட்டனர். இந்த முறை இந்த தடையை விதித்தது, யூ டியூப் நிறுவனம். எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை.

அவர்கள் சொல்லவில்லை என்றாலும், கரிகாலன் அவரது சேனலில் பேசிய அரசியல்தான் தடைக்கு காரணம் என்பது தெளிவு. எந்த பின்னணியும் இல்லாத ஒரு சராசரி இளைஞர்… தன் சொந்த உழைப்பில் கொஞ்சம், கொஞ்சமாக ஒரு சேனலை வளர்த்து எடுக்கிறார்… திடீரென ஒரு நாள் அதைக் காணாப்பிணம் ஆக்குகிறார்கள். இன்னொரு சேனல் ஆரம்பித்தால் அதையும் முடக்குகிறார்கள் என்றால், இது கரிகாலன் போன்ற மாற்றுக் கருத்துக் கொண்டோரை செயல்படவே முடியாமல் முடக்கிப் போடும் செயல். இது ஒரு நாளில், ஒரு குறிப்பிட்ட வீடியோவால் நிகழ்ந்தது இல்லை. பல நாட்களாக அவரைக் கண்காணித்து, இலக்கு வைத்து தடைசெய்திருக்கின்றனர்.

செய்வது யார் என்று பார்த்தால் ஒன்று இந்திய தேசியம் பேசும் பா.ஜ.க.வும், தமிழ்த் தேசியம் பேசும் சீமான் உள்ளிட்ட நபர்களும். இவர்கள் ஏதோ ஒரு வகையில் இந்த தடைக்குக் காரணமாக இருக்கிறார்கள் அல்லது தடையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஆனால், அன்றாடம் வெறுப்பை பரப்பும் எத்தனையோ யூ டியூப் சேனல்கள் ஏராளம் இருக்கின்றன. தொழில்முறையில் இதைச் செய்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் எந்தத் தடையும் இல்லை. மாறாக, பா.ஜ.க. நிதியளிக்கிறது. அவர்களை ஊக்குவிக்கிறது. இப்போது Roots tamil மீண்டும் தொடங்கினால் மூன்றாவது நாள் தடை செய்கிறார்கள். ஆனால் இந்துத்துவ ஆதரவு சேனலான ‘பேசு தமிழா பேசு’ என்ற யூடியூப் சேனலுக்கு இதேபோல ஒரு தடை வந்து சேனல் முடக்கப்பட்டபோது, அதை நடத்தும் ராஜவேல் நாகராஜன் என்பவர் கிட்டத்தட்ட அதேபெயரில் இன்னொரு சேனல் தொடங்கினார். அதற்கெல்லாம் எந்தத் தடையும் இல்லாமல், இப்போதுவரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இத்தனைக்கும் மதன் ரவிச்சந்திரன் என்ற யூடியூபர் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், பணமும் மது பாட்டிலும் வாங்கி கையும் களவுமாக சிக்கியவர்தான் இந்த நாகவேல் நாகராஜன். இவர் மட்டுமல்ல… அந்த ஸ்டிங்-கில், ‘ஆதன் தமிழ்’ சேனலின் மாதேஷ், சத்யம் டி.வி.யின் முக்தார், சாதி ஆராய்ச்சி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, கலாட்டா சேனலின் அய்யப்பன் ராமசாமி… இப்படி எத்தனையோ பேர் சிக்கினார்கள். யாருக்கும் வேலை போகவில்லை. அவர்களின் சேனலுக்கு வியூஸ் குறையவில்லை. சப்ஸ்க்ரைபர்ஸ் குறையவில்லை. அவர்களை யாரும் ரிப்போர்ட் அடிக்கவும் இல்லை, அரசும் தடை செய்யவில்லை… யூடியூப்பும் தடை செய்யவில்லை…

தடையெல்லாம் கரிகாலன் போன்றோருக்குதான். ஏற்கனவே இந்த வகையில் ‘கருப்பர் கூட்டம்’ என்ற சேனல் தடை செய்யப்பட்டது. அவர்களும் இந்துத்துவத்தை அம்பலப்படுத்தி சேனல் நடத்தியவர்கள். வெகுமக்கள் வரவேற்பைப் பெற்ற சேனல் அது. மொத்தமாக இழுத்து மூடினார்கள். இப்போது ரூட்ஸ் தமிழுக்கு இது நேர்ந்திருக்கிறது. நாளை இந்த தடை யாரை நோக்கியும் வரக்கூடும் என்பதுதான் இதில் உள்ள மெய்யான அபாயம்.

இந்தப் பாரதிய ஜனதா அரசின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை; மக்கள் விரோத நடவடிகைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களை பாரம்பரிய ஊடகங்களில் இருந்து சுத்திகரிக்கும் பணியை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்கள். News18 Tamilnadu தொலைக்காட்சியில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேறிய பலர், தனித்தனியே யூ டியூப் சேனல் தொடங்கி, சமூக ஊடக ஆதரவைப் பெற்று, கருத்துருவாக்கம் செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான், இப்போது சமூக ஊடகங்களிலும் இந்த சுத்திகரிப்பு பணியை பா.ஜ.க. தொடங்கியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் வேலையில், இந்த நெருக்கடி இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். அதற்கான முன்னோட்டம்தான், அண்மையில் கேரளாவில், பா.ஜ.க.-வை விமர்சிக்கும் யூடியூப் சேனல் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி
யிருக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் என்ன விளைவை உருவாக்கும் என்றால், யூ டியூபர்கள் தன்னியல்பாக சுய தணிக்கைக்குள் போவார்கள். ‘எதற்கு வம்பு.. நாமளே ரெண்டு மூணு வருஷம் உசுரை கொடுத்து உழைச்சு இந்த சேனலை உருவாக்கி வெச்சிருக்கோம். இதை நம்பி நாலஞ்சு பேர் இருக்கோம். தேவையில்லாம வாயை விட்டு மொத்தத்தையும் இழந்திட வேண்டாம். கொஞ்சம் அடக்கி வாசிப்போம்’ என்று நினைப்பார்கள். இதுதானே ஆளும் பா.ஜ.க. அரசுக்கு தேவை? இதைத் தானே அது எதிர்பார்க்கிறது?

தங்களுக்கு எதிரான நபர்களைச் செயல்படவே முடியாமல் முடக்கிப் போடும் இந்தப் போக்கு இப்போது தொடங்கியது அல்ல. மோடிக்கு எதிராகவோ, ஆளும் பா.ஜ.க.-வை விமர்சித்தோ சமூக ஊடகங்களில் கட்டுரைகள் எழுதினால், காணொளிகள் வெளியிட்டால் அதற்கான visibility குறைக்கப்படுகிறது. பயனர்களின் கண்களுக்கு காட்டப்படாமல் மட்டுப்படுத்தப்படுகின்றன. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது அது தொடர்பான செய்திகளை news feed-ன் பின்னால் கொண்டு செல்வதற்கும், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து எழுதும் ட்விட்டர் கணக்குகளை முடக்கச் சொல்லியும்… இந்திய பா.ஜ.க. அரசு தங்களுக்கு எவ்வாறெல்லாம் அழுத்தம் கொடுத்தது என்பதை ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. ஜாக் டோர்ஸி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறினார்.

இதையெல்லாம் கடந்து பா.ஜ.க.-வை விமர்சித்து செயல்படுவோரை தாக்குவதற்கு என்றே ட்ரோல் ஆர்மி நடத்துகிறார்கள். இந்த ட்ரோல் ஆர்மியை பா.ஜ.க. எவ்வாறு இதைத் திட்டமிட்ட வகையில் செய்கிறார்கள் என்பதை ‘I am a trool’ நூலில் விவரிக்கிறார் ஸ்வாதி சதுர்வேதி. ட்ரோல் என்பது அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கோரைப் பொதுவெளியில் மதிப்பிழக்கச் செய்யும் நோக்கம் கொண்டது. உதாரணமாக, ராகுல்காந்தியை ‘பப்பு’ என அழைத்து அவரை ஒரு விவரமற்ற சிறுவன்போல சித்தரிக்க பா.ஜ.க.-வின் ட்ரோல் ஆர்மி ஏராளமான ஆற்றலை செலவிட்டது. அதில் பகுதியளவில் வெற்றிபெற்றனர் என்றபோதிலும் ராகுல் அதில் இருந்து தன் அறிவால், செயல்பாட்டால் முன்னேறி எங்கோ சென்றுவிட்டார்.

கரிகாலனின் Roots Tamil- ஐ தடை செய்ததிலும் இந்த பா.ஜ.க. ட்ரோல் ஆர்மி-க்கு கணிசமான பங்குண்டு. இவர்களிடம் இருந்து தொழில் கற்றுக்கொண்டு இந்த ட்ரோல் ஆர்மி வேலையை தமிழ்த் தேசிய பிரிவினரும் செய்யத் தொடங்கியுள்ளனர். Internet penetration அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதால், களத்தில் செல்ஃப் எடுக்காத பா.ஜ.க. மற்றும் தமிழ்த் தேசிய பிரிவினர், தங்களது இணைய ஊடுருவல் மூலமாக இந்த ட்ரோல் தாக்குதல்களை நிகழ்த்துகின்றனர். தேர்தல் காலத்தில் இது இன்னும் பன்மடங்காகப் பெருகும்.

இதில் நாம் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டிய அம்சம்… யூடியூப் என்பது சுதந்திர ஊடகம் என்ற கருதுகோளை. அவ்வாறு நம்மிடம் முன் தள்ளப்பட்ட ஒன்று.. சமூகத்தில் கருத்துருவாக்கம் செய்யும் நிலையை எட்டியபிறகு, ‘எந்தெந்த கருத்துக்களை உருவாக்கும் சேனல் மட்டும் இயங்க வேண்டும்’ என்பதை அரசு தீர்மானிக்கிறது. மற்றவற்றை இதுபோன்ற உதிரி காரணங்களைச் சொல்லித் தடை செய்கிறது. எனினும், இணையம் என்ற சுதந்திர வெளியில் இந்த வெறுப்பின் பாதை நெடுங்காலம் நீடிக்க முடியாது.

நமது இயங்குதளம் வரையறுக்கப்பட்டது என்றாலும், கண்காணிப்பின் சாத்தியத்துக்குள்தான் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும்… எண்ணிக்கையில் பெருந்திரளாய் சேரும்போது மாற்றுக்குரல்களுக்கு மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

barathithambi@gmail.com