குஜராத், உத்தரப்பிரதேசத்துக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்தை நிரந்தரமான இந்துத்துவ மாநிலமாக மாற்றும் பரிசோதனையில் பாஜக வென்றுள்ளது.பெரும்பான்மை இந்து மெய்தேய்  சாதியினரின் வாக்குகளை அறுவடை செய்யவும், சிறுபான்மை குக்கியினரின் வாக்குகளை இந்து-கிறிஸ்தவர் என  மத ரீதியாக பிளவு படுத்தி வெல்லும் நோக்கிலும் அது வென்றிருக்கிறது.  78 நாள்களுக்குப் பின்னர் மெய்தி கும்பலால் இரண்டு பழங்குடி கிறிஸ்தப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட நிர்வாண ஊர்வலக் கொடுமை உணர்த்தும் உண்மை இதுவே!

பாஜகவுக்கு முன் மணிப்பூர்

மணிப்பூர்  மாநிலம் காடுகள் VS சமவெளி என்றும், பழங்குடிகள் VS சாதி இந்துக்கள் என பிளவுண்டாலும் இந்தப் பிளவுகளுக்கு மத்தியில் பழங்குடிகளும் மெய்தேய்களும் இணைந்தே ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வந்தார்கள். மணிப்பூரில் ஒன்றிய அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டங்கள்தான் அந்த மாநிலத்திற்குத் தனித்த தேசிய இனம் என்ற பார்வையை நமக்குள் ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பிளவுகளைக் காங்கிரஸ் அரசியல் களத்தில் பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இந்த பிளவு பாஜக அரசியலுக்கு இனம், மதம், சாதி என வெவ்வேறாகப் பயன்படுத்தத் துவங்கிய போது ஒன்றுபட்டு நின்ற மக்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள்.  ஒன்று பட்ட ஒன்றிய எதிர்ப்பு என்ற நிலை மாறி உள்நாட்டுக் கலவரம் என்ற சூழலை உருவாக்கியது பாஜக. அதனால்தான் மணிப்பூர் வரலாற்றை பாஜகவுக்கு முன் பின் எனப் பார்க்க வேண்டும்.

மணிப்பூர்  மாநிலம் காடுகளாலும், பள்ளத்தாக்குகளாலும் நிரம்பிய மலை மாநிலம். மணிப்பூர் பல மதங்கள், பல மொழிகள், பல இனங்களைக் கொண்ட மாநிலம் ஆகும். மணிப்பூரின் மலைப்பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக சுமார் 33 பழங்குடி இனங்கள் உள்ளது. இதில் குக்கி பழங்குடிகள் அடர்த்தியாக காடுகளில் எண்ணிக்கையில் பெரிய அளவில் வாழ்கிறார்கள். நாகா என பல்வேறு பழங்குடிகள் வாழ்ந்தாலும் இந்தப் பழங்குடிகள் அனைவருக்கும் பொதுவான மொழி என்ற ஒன்று இல்லை.ஆனால், குக்கி- சின் என இந்த இரண்டு குழுக்களுக்கும் பொதுவான மொழி உள்ளது.ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுக்கென தனி மொழிகள் பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பழங்குடிகள் என்ற அளவில் இவர்களுக்குள் ஒரு பொதுவான அய்க்கியம்  உருவாக்கப்பட்டுள்ளது. தொன்ம நம்பிக்கைகள், வரலாற்று உண்மைகள்  புவியியல் ரீதியாகக் காடுகளோடு தங்களுக்கு இருக்கும் பிணைப்பு என இவர்கள் இந்தியர்களாகத் தங்களைக் கருதுவதில்லை. ஒன்றிய அரசும் டெல்லி அதிகாரமும் இவர்களை இந்தியக் குடிகளாக கருதுவதில்லை.

இவர்கள் தங்களின் தொடர்புகளை நாகாலாந்து, அசாம், அருணாச்சலப்பிரதேசம், அண்டை நாடான மியான்மருடன்  பகிர்கிறார்கள்.அல்லது தொடர்கிறார்கள். காரணம் மலைக்காடுகளில் வாழும் இந்தப் பழங்குடிகள் பாரம்பரியத் தொடர்புகள் இவர்களோடுதான் இருக்கிறது, டெல்லியோடு இல்லை. விடாப்பிடியாகத் தங்களின் பாரம்பரிய நம்பிக்கைகளோடு வாழும்  இவர்கள் வேறு இனங்களுடன் கலப்பதில் கடும் ஒழுக்கம் பேணக்கூடியவர்கள்.

இதே மணிப்பூர் சமவெளிகளில் வாழும் மெய்தேக்கள் மணிப்பூரின் பள்ளத்தாக்கில் வாழ்கிறார்கள். தலைநகர் இம்பாலையொட்டி வாழ்கிறார்கள். புரியும் படிச் சொன்னால் அரசு என்ற கட்டமைப்புக்கு அருகில் வாழ்கிறார்கள். துவக்கத்தில் தங்களை இந்து எனக் கருதாத மெய்தேக்கள் 18-ஆம் நூற்றாண்டு முதல் தங்களை சாதி ரீதியாக மேல் நிலையாக்கம் செய்து கொண்டார்கள். மெய்திகள் தங்களை வைணவர் என அழைத்துக் கொண்டனர். இந்துக்கள் என்ற போர்வைக்குள் சென்றனர். அவர்களின் மெய்தேய் மொழிகள்  இந்திய அரசின் உத்தியோகப் பூர்வ மொழிகளில் ஒன்றானது. ஒன்றிய அரசால் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேக்கள் சமூக அந்தஸ்தில் மேம்பட்டிருந்தார்கள்.  சுமார் 35 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் மெய்தேக்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் நிலம் மட்டுமே அவர்களின் பெரிய பிரச்சனையாக இருந்தது. வெறும் பத்து சதவீத நிலம் மட்டுமே அவர்களிடம் இருந்தது. ஆனால் அரசின் எல்லா அனுகூலங்களையும் மெய்தேக்கள் அனுபவித்து வந்தனர்.

மணிப்பூரில் இன்று நிலவும் கலவரங்கள் இன்று நேற்று உருவானது அல்ல, அது நிலத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. மலைகளுக்கும் பள்ளத்தாக்குப் பகுதிக்கும் நிலவும் வேறுபாடுகள் கலாச்சார மத முரண்பாடுகளை இயல்பாகவே கொண்டிருக்கிறது. ஆனால், மணிப்பூர் வரலாற்றில் இன முரண்பாடு இருந்துள்ளது, மோதலும் இருந்துள்ளது. மெய்தேக்களின் விளை நிலங்களுக்கு குக்கிகள் நெருப்பிடுவார்கள். குக்கிகளின் குடியிருப்புகளுக்கு மெய்தேக்கள்  தீயிடுவார்கள். ஏன் குக்கிகளும், நாகாக்களும் கூட மோதிக் கொள்வார்கள். ஆனால், கும்பலாக நடைபெறும் இந்த வன்முறையில் எங்கும் எப்போதும் பெண்ணுடல் நிர்வாணப்படுத்தப்பட்டு வெற்றியின் அடையாளமாக மாற்றப்பட்ட ஆதாரமே இல்லை.முதன் முதலாக குக்கிப் பெண்களை மெய்திகள் சூறையாடி வெற்றியை பறைசாற்றியிருக்கிறார்கள். இந்த முதல் முதலான நிகழ்வை நாம் மறந்து விடக்கூடாது. பண்பளவில் மணிப்பூரை ஆளும் பாஜக எப்படி பிளவுபடுத்தியுள்ளது என்பதற்கு இது எடுத்துக் காட்டு!

பிரிட்டீஷார் இந்தியத் துணைக்கண்டத்தை ஒருங்கிணைக்க முயன்ற போது தனித் தனி தேசங்களாக இருந்த ஏழு சகோதரிகளையும் இணைத்தார்கள். மணிப்பூரையும் இந்தியாவோடு இணைத்தார்கள். 1891-க்கு முன்னர் மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. அது இந்தியாவை விட மியான்மருடன் நெருக்கமான கலாச்சார,பொருளாதாரப் பரிவர்த்தனையைக் கொண்டிருந்தது. முதன் முதலாக அது ராஜா சுராசந்த் சிங் மன்னிரிடம் ஒப்படைக்கப்பட்டு பிரிட்டீஷாரின் கண்காணிப்பில் மணிப்பூர் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. குக்கி உள்ளிட்ட பழங்குடிகள் எதிர்த்து நின்று போராடினார்கள்.

19-ஆம் நூற்றாண்டின்  மத்தியில் கத்தோலிக்கர்களும், சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் தங்களின் சேவைப் பணிகளை வடகிழக்கில் விரிவுபடுத்திய போது மணிப்பூரில் நாகா பழங்குடிகள்தான் முதன் முதலாக கிறிஸ்தவம் தழுவுகிறார்கள். தொடர்ந்து குக்கிகளும் கிறிஸ்தவம் தழுவுகிறார்கள்.

இதே காலக்கட்டத்தில் மெய்திகள் வசித்த பள்ளத்தாக்குகள் வளர்ச்சி அடைந்தன. சிவில் நிர்வாகத்தில் எல்லா அனுகூலங்களும் மெய்தேய்களுக்கு எளிதில் கிடைக்க மெய்திகளும் வளர்ந்தார்கள். அரசுப்பணிகள் உள்ளிட்ட அனைத்திலும் பெரும்பான்மையாக மெய்திகள் பங்கேற்று தங்களை வளர்த்துக் கொண்டார்கள். ஆனால், அவர்களிடம் நிலம் குறைவாக இருந்தது.  நிலம் தொடர்பான உரிமைக்காகவே அவர்கள் தங்களை பங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தார்கள்.

ஆனால், மலைக்காடுகளில் வசித்த பழங்குடி குக்கி- நாகா உள்ளிட்ட ஏராளமான குழுக்கள் தங்களின் நம்பிக்கைகளையும் கைவிட முடியாமல் சமவெளிக்கும் இடம்பெயர முடியாமல் பிரிட்டீஷ் அரசோடும் மோதிய நிலையில் அவர்கள் தங்கள் நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்த நம்பிக்கைகள் சார்ந்த தனித் தன்மைகளைக் காக்கப் போராடினார்கள்.

 

பிரிட்டீஷார் மணிப்பூரை இணைத்த பின்னர் கணிசமான அளவு பழங்குடிகள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய போதும் சிந்தனை ரீதியாக அவர்கள் அய்ரோப்பிய மரபை ஏற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்தவப் பழங்குடிகள் காட்டோடு தங்களுக்கிருக்கும் தொடர்புகளைக் கைவிடவில்லை. நிலத்தோடு தங்களுக்கிருக்கும் பிணைப்பை அறுத்துக் கொள்ளவில்லை. அவர்களால் அது மட்டுமே முடிந்தது. நாளடைவில் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டம். ஒன்றிய அரசின் சிறப்பதிகாரச் சட்டத்துக்கு எதிரான மணிப்பூர் மக்களின் வீரம் செறிந்த போராட்டம். நாகாக்களின் ஆயுதப் போராட்டம் என எந்த ஒரு பழங்குடிக்கும்  மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. ஒன்று அவர்கள் காடுகளை விட்டு வெளியேறி பிழைப்புக்காக இடம் பெயர வேண்டும் அல்லது ஆயுதக் குழுக்களோடு இணையலாம், அல்லது போதைப் பயிர் சாகுபடியில் ஈடுபடலாம்.

 

அதிக அளவு ஹெராயின் மரணங்களும், அதிக அளவு எச்.ஐ.வி மரணங்களும் மணிப்பூர் மியான்மர்-எல்லையோர மாவட்டங்களில் நிகழ்வது உணர்த்தும் செய்தி ஒன்றுதான், ஏழ்மை, வேலையின்மை. மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர்  தெற்கு எல்லை பகுதிகளான சுராசந்த்பூர் போதைப் பொருள் அதிகம் புழங்கும் பகுதியாக உள்ளது.போதைப் பொருள் மரணங்களும், எச்.ஐ.வி மரணங்களும் கூட இப்பகுதியில் அதிகம். மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் அபின் மியான்மர் வழியே உலகெங்கும் பாய்கிறது. நம்மூரில் மிகச்சாதாரணமாக மளிகைக்கடைகளில் கிடைக்கும் கச கசாதான் அது. அபினிச் செடி என்றும் பாப்பி என்றும் அழைக்கப்படும் செடிகளின் விதைகளில் இருந்து கச கசா தயாரிக்கப்படுகிறது.2017-18 -ஆம் ஆண்டுகளில் தோராயமாக 6 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பாப்பிச் செடிகள் பயிரிடப்பட்டதாகச் சில தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாப்பிச் செடிகள் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை மணிப்பூர்க் காடுகளில் நிலவுகிறது. ஒரு பாப்பிச் செடி முழுமையாக பூத்து வெடிக்கும் போது அதன் விதைகளில் இருந்து கச கசா கிடைக்கிறது. அது முதிர்வதற்கு முன்பே அதன் விதைப்பைகளை கீறி விட்டால் அதில் வடியும் பாலைச் சேகரித்தால் அதுதான் ஓபியம். கடும் போதை தரக்கூடிய இந்த ஓபியம் பழங்குடி மக்களின் பயிற்செய்கையாக இருக்கிறது. மணிப்பூரின் நீண்ட வரலாற்றில் பழங்குடி மக்கள் கண்டு கொள்ளப்படாததன் விளைவே அவர்களின் போதைப் பயிர் சாகுபடி. ஒரு பக்கம் மெய்தேக்களின் வளர்ச்சி, இன்னொரு பக்கம் வன்முறையான விளிம்புகளுக்குத் தள்ளப்பட்ட பழங்குடிகள் என ஒரு மாநிலத்தில் நிலவிய முரண்பாடுகளைச் சட்ட ரீதியாக அணுகியதன் விளைவையும் இந்த வன்முறைகளில் பார்க்க முடியும்.

 

மெய்தி மக்கள் ஒன்றிய அரசாலும், மணிப்பூர் அரசாலும் பேணப்பட்ட நிலையில் பழங்குடிகள் வந்தேறிகள், அவர்கள் மியான்மரில் இருந்து வந்தவர்கள் என்று நீண்ட கால கதை கட்டப்பட்டது. போதைப் பொருள் பாவனையைத் தடுக்க வனத்தில் இருந்து பழங்குடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிகார மட்டத்தில் முன் வைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மெய்தேய்  மக்கள் பள்ளத்தாக்குகள் சமவெளிகள் குக்கிகளை விட வசதியான வாழ்க்கை வாழ்ந்த போதும் அவர்கள் அதையும் கடந்து காட்டின் மீதான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் அத்தனை அனுகூலங்களையும் அனுபவித்த மெய்ப்தேய் மக்கள் தங்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றார்கள். காரணம் காடும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. குக்கி-மெய்தி மோதல் திவீரமடைய அடிப்படையான காரணம் இதுதான்.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி மணிப்பூர் சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பழங்குடிகளுக்கு நில ரீதியான உத்தரவாதமும் வழங்கப்பட்டது. மணிப்பூரின் முரண்பாடுகள் மிக்க  இந்த மிக நீண்ட வரலாறு போராளி இரோம் ஷர்மிளா 2017-ஆம் ஆண்டு  90 வாக்குகள் பெற்றுத் தனது அரசியல் வாழ்வில் தோல்வியடைந்து தமிழ்நாட்டின் குடியேறியதோடு மணிப்பூர் சிறப்பதிகாரச் சட்டத்தின் கதை முடிவுக்கு வருகிறது.

2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வென்றது.பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. மணிப்பூரில் இயற்கையாகவே நிலவிய முரண்பாடுகளைக் காங்கிரஸ் தன் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.ஆனால் டெல்லி அதிகாரம் என்ற அளவில் எப்போதும் அது மணிப்பூரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நிறுவ ராணுவத்தை அதிக அளவில் பயன்படுத்தியது. இராணுவம் நிகழ்த்திய வன்முறைகளுக்கு மெய்திகளும் பலியானார்கள். மணிப்பூர் மக்களுக்கோ காங்கிரஸ் நன்மையும் செய்யவில்லை தீமையும் செய்யவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முரண்பாடுகளை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள  முயன்றது.

மெய்தேய்  மக்களிடம் இந்துத்துவக் குழுக்கள் ஊடுருவின. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் மெய்திகளிடம் பணியாற்றிய பின்னர் மணிப்பூரில் நிலவிய நிலம், இனம் தொடர்பான முரண்பாடுகளுக்கு மதச்சாயம் பூசப்பட்டது.

அரசின் ஆதரவு மணிப்பூர் தலைநகர் இம்பாலையொட்டிய பகுதிகளில் அதிகாரக் குவிப்பு அந்த பகுதிகளைக் கட்டுப்படுத்திய இந்து மெய்தேய்  என இந்த வளர்ச்சியும் , பின்தங்கிய எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத பழங்குடிகளும் எதிர் எதிராக நிறுத்தப்பட்டனர்.

இதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் குக்கிகள் வாழும் காடுகளும் அவர்களது வாழ்விடங்களும்தான் மிகவும் பின் தங்கியிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களிலேயே இம்பாலைச் சுற்றி வாழும் மெய்தேய் மக்கள் அதிக அரசு வேலைகளையும் வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பாரபட்சமான வளர்ச்சி இந்த மாநிலத்தை இரண்டாக பிளவுபடுத்தியுள்ளது.

பாஜகவுக்குப் பின் மணிப்பூர்

பாஜக தனக்கான நிரந்தரமான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள மெய்தேய் இந்து மக்களின் முழு ஆதரவையும் நம்பியிருக்கிறது. மெய்தேய் மக்கள்  60 சதவீதமும், குக்கி நாகா உள்ளிட்ட ஏனைய எல்லாப் பழங்குடிகளும் 40 சதவீதமாகவும் உள்ள மணிப்பூரில் பாஜக மெய்தேய்களை தங்களின் நிரந்தர வாக்கு வங்கியாக மாற்ற முடிவு செய்தது.

பாஜக காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை அபகரித்தது. பின்னர் கடந்த தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது. அதன் பின்னர் அதன் நிலம், போதைப் பொருள் பாவனைத் தடுப்பு, சட்ட விரோதக் குடியேற்றம் என மூன்று முனைகளில் பழங்குடிகளைக் கடுமையாக குறி வைத்தது. பல தாசாப்தங்கள் நீடித்த இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதல்ல பாஜகவின் நோக்கம், மாறாக ,அதை எப்படி அரசியல் ரீதியாகத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே  பாஜகவின் நோக்கம்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மெய்தேய் மக்கள் தங்களின் பழங்குடி கோரிக்கைக்காக நீதிமன்றத்தை நாடினார்கள் அதற்குரிய  உகந்த சூழல் உருவாகி விட்டதாகவும் கருதினார்கள். ஏப்ரல் 19-ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய்தெய் மக்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்கப் பரிசீலிக்குமாறு உத்தரவிட அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மே- 3 ஆம் தேதி போராட்டம் பேரணி அறிவிக்கப்பட்டது. கோபமடைந்த பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களுக்கும் ஆங்காங்கே மோதல் அன்றே வெடித்தது.

இன்னொரு பக்கம் பாஜக அரசில் இருந்த குக்கிக் காவல்துறை அதிகாரிகள் சட்டம்  ஒழுங்கு துறைகளில் இருந்து வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டார்கள். மே-3 அதற்கு அடுத்த நாள் 4-ஆம் தேதிகளில் கலவரம் திவீரமாகிறது.

பல இடங்களில் ராணுவச் சீருடைகளில் வந்தவர்கள் குக்கி மக்களைத் தாக்கினார்கள்.சுட்டுக் கொலை செய்தார்கள். பல இடங்களில் காவல் நிலையங்களில் இருந்த ஆயுதங்களை மெய்தேய் குழுவினர் எடுத்துச் சென்றார்கள்.  ராணுவம் ஆயுதங்களை இங்கே கைவிடுங்கள் என்ற போதும் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை.குக்கிகளிடமும் ஆயுதங்கள் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. மெய்தேக்களிடம் ஆயுதங்களும் இருந்தது அரசின் ஆதரவும் இருந்தது.

இக்கலவரத்தில் 150 பேர்வரை  கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் எல்லா ஊடகங்களிலும் பதிவாகியிருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் சுமார் 115 பேர் வரை குக்கிகள். அதாவது 99 சதம் பேர் குக்கிகள்.  பழங்குடிகளின் 250 தேவாலயங்கள் முழுமையாகத் தகர்த்துத் தீக்கிறையாக்கப்பட்டுள்ளது. மெய்தேக்களின் இந்து ஆலயங்கள் சிலவும் குக்கிகளால் தீவைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலவரங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள். அவர்கள் 99 சதம் பேர் கிறிஸ்தவக் குக்கிகள். முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட முகாம்களின் அருகிலும் துப்பாக்கி மோதல் நடந்துள்ளது. அப்படி ஒரு மோதலில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் காயமடைகிறான்.  அச்சிறுவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததால் முகாம் நிர்வாகிகள் சிறுவனை தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்கிறார்கள். முகாம் நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்கிறார்கள். தாய் தன் மகனை ஏற்றிக் கொண்டு துணைக்குத் தன் முகாமில் இருந்த இன்னொரு பெண்ணையும் அழைத்துக் கொண்டு மூவரும் ஆம்புலன்சில் செல்கிறார்கள்.

வழியில் மெய்தேய் கும்பல் ஒன்று மறித்து அவர்கள் குக்கிக் கிறிஸ்தவர்களா என்பதையும் எந்த முகாமில் இருந்து வருகிறார்கள் என்பதையும் உறுதி செய்து விட்டு ஆம்புலன்சுக்குத் தீ வைக்கிறது. அந்த மூவரும் தீயில் கருகி வேனோடு எரிந்து போகிறார்கள். அவர்கள் முகாமில் இருந்து கிளம்பிய போது இப்படி ஒரு குடும்பம் ஆம்புலன்சில் வருகிறது என்ற தகவல் மெய்தேய் வன்முறை கும்பலுக்கு முன்பே தெரிந்திருக்கிறது.

இந்த ஒரு நிகழ்வு போதும் அரசு ஆதரவோடு குஜராத் போன்று நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலைதான் மணிப்பூர் நிகழ்வுகள். அவர்கள் லூசி மாரிங் என்ற முதிய பெண்ணைக் கூட விட்டு வைக்கவில்லை.

79 நாள்கள் உணர்த்தும் செய்தி என்ன?

இரண்டு மணிப்பூர் கிறிஸ்தவப் பழங்குடிப் பெண்கள் மெய்தி  ஆண் கும்பலால் நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வு அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.  இரண்டு பெண்களின் உடல்கள் அவமதிக்கப்பட்ட நிகழ்வினூடே மணிப்பூர் வன்முறைகள் நினைவுகூறப்பட 79 நாள்கள் ஆகியிருக்கிறது.

இந்த 79 நாள்களுக்கும் மணிப்பூரை உலகின் பார்வையில் இருந்து திரை போட்டு மறைத்தவர்கள் யார்? என்ன காரணத்துக்காக அது மறைக்கப்பட்டது? எப்படி மறைக்கப்பட்டது என்பதுதான் குஜராத் கலவர படிப்பினைகள்.

மணிப்பூர் வரலாற்றின் முதன் முதலாக சொந்த சகோதரர்களாலேயே பெண்கள் நிர்வாணச் சித்திரவதைக்குள்ளானதும், கொல்லப்பட்டதும், பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வும் நடந்து முடிந்திருக்கிறது. பழங்குடிகளுக்குள் நடக்கும் மோதலில் விளை நிலங்களுக்குத் தீ வைப்பதும், குடியிருப்புகளைக் கொளுத்துவதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள்தான் என்றாலும், இது போன்று பெண்களை அபகரித்து எந்த ஒரு இனக்குழுவும் தங்கள் வீரத்தை நிறுவிக் கொண்டதில்லை. இந்த நிகழ்வு அங்குள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம் மணிப்பூர் உள்நாட்டுக் கலவரம் புதிய வடிவத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலவரம் துவங்கிய முதல் சில நாள்களிலேயே மணிப்பூரில் கலவரங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என இணையத் தளங்களை முடக்கியது பாஜக அரசு. நீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாக 79 நாள்களுக்குப் பின்னர் வேறு வழியில்லாமல் சில இடங்களில் இணையத் தள வசதிகளை அரசு அனுமதிக்க அப்போது வெளியான ஒரே ஒரு க்ளிப்தான் இந்த நிர்வாண ஊர்வலம். வெளியாகாத கொடுமைகள் பலப்பல.

மோடி ஆட்சிக்கு வந்த 2015-ஆம் ஆண்டு முதல்  இணைய முடக்கத்தையும் ஒரு போர்த்தந்திரமாக முன்னெடுத்தது மோடி அரசு.டெல்லிக் கலவரம், முசாபர் நகர் கலவரம், குடியுரிமை திருத்தச் சட்டக் கலவரங்கள் என ஒவ்வொரு பகுதியிலும் முதலில் இணையத் தளங்களை முடக்கி விடுகிறது பாஜக. இது குஜராத் கலவரங்களில் இருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் செய்திப் பரவலைத் தடை செய்வதும் உண்மைகளை அறிந்து கொள்ளத் தடுப்பதுமான நோக்கத்தில்தான் இணையப் பாவனைக்கு தடை விதிக்கிறது.

கலவரப் பூமிகளில் எப்போதெல்லாம் இணையம் முடக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அங்கு அவலம் மறைக்கப்படுகிறது. உண்மைகள் புதைக்கப்படுகிறது. மணிப்பூரில் இணையத் தளத்தை முடக்கிய நிகழ்வுதான் நிலமையை மேலும் மேலும் மோசமாக்கியது.  வழக்கமாக இந்துத்துவ வெறியர்கள் இணையம் வழியே பரப்பும் வதந்திகளுக்கு பதிலாகவும், மறுப்பாகவும் செய்திகளை இணையத்தில் பரப்ப முடியும். ஆனால் மணிப்பூரில் எது உண்மை எது பொய் என வேறுபடுத்த முடியாத வண்ணம் செவி வழியில் பரப்பட்ட வதந்திகளும் இந்தக் கோரங்களுக்குக் காரணம். இணையத் தள முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டபோது இந்த இரு பழங்குடிப் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வயல் வெளியில் கும்பலால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட உண்மை வெளியானது.

ஆனால், அந்த 79 நாள்கள் மணிப்பூர்க் காவல்துறை இந்தக் கொலைகளை, பாலியல் வன்முறைகளை அமைதியாக வேடிக்கை பார்த்தது. சில இடங்களில் காவல் நிலையங்களில் தஞ்சமடைந்தவர்கள் மெய்தேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. செயலற்ற பாஜக நிர்வாகம் குஜராத் மாடலில்தான் மணிப்பூர் வன்முறையை நடத்தியுள்ளது.

மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங் வெறுப்பைக் கக்குவதில் முன்னணி இந்துத்துவராக செயல்பட்டுள்ளார்.  வன்முறை வெடித்த முதல் சில நாள்களில் அவர் குக்கிகளை பயங்கரவாதிகள் என்றும், மியான்மர்  வந்தேறிகள் என்றும் சொன்னார். பலரும் அவரை விமர்சிக்க அவர்களைக் குக்கீஸ் என்று கிண்டல் செய்தார்.இடையில் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகும் நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினார். உடனே மெய்தேய் மக்கள் போராட்டம் நடத்திய பின்னர் தனது ராஜிநாமாவைத் திரும்ப பெற்றுக் கொண்டார். இந்த  வன்முறை நெருப்பு அணையாமல் பற்றி எரியும் அவரது விருப்பதை இந்த வெறுப்பு வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வன்முறைகளில் டஜன் கணக்கில் பெண்கள் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன ரீதியாக முரண்பட்ட மக்களை மத முரண்பாடுகளைக் கூர்மையாக்கி எதிர் எதிராக நிறுத்தியுள்ளது பாஜக.இனி மணிப்பூரில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சாத்தியமாகப் பல  ஆண்டுகள் ஆகும். குறைந்த பட்சம் வகுப்புவாத அரசியலை முன்னெடுக்கும் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு நல்லிணக்கம் முன்னெடுக்கப்பட்டால் பல ஆண்டுகளுக்குப் பின்னர் காயங்கள் ஆறி பழங்குடிகளும் சமவெளி மக்களும் ஒன்று சேரலாம். காரணம் அதன் வரலாறு அப்படி.

 

arulezhilan@gmail.com