வெப் சீரிஸ் திரைப்படங்களைப் போன்ற பொழுதுபோக்குக் கலை இல்லை. திரைப்படத்தைத் தாண்டிய ரசனையை வெப் சீரிஸ்கள் தருகின்றன.  வெப் சீரிஸ்கள் மனித வாழ்வியலைக் கற்பிக்கின்றன; நாவலைப் போல விசாலமான பார்வையை முன்வைக்கின்றன: ஒரு நாணயத்தின் மறுபக்கத்தையும் காட்டுகின்றன. சினிமாவால் ஒருபோதும் ஒரு நல்ல வெப் சீரிஸின் இடத்தை நிரப்பவே முடியாது என்பது என் எண்ணம். குறிப்பாக Crime Branch Police, Intelligence Bureau, Anti-Terrorism Squad, Police Department ஆகியவற்றில் புதைந்து கிடக்கும் அழுக்குகளை Scoop வெப் சீரிஸைப் போல ஒரு திரைப்படத்தால் கொடுக்கவே முடியாது.

அதேபோல ஹன்சல் மேஹ்தாவின் படைப்புகளில் தனித்துவமான உழைப்பு இருக்கும். அதனை வேறு எந்த இந்திய இயக்குநர்களிடமும் பார்க்க முடியாது. ஒரு பிரச்சனையின் ஆழத்தை மிக அழகாகக் காட்டுவதில் அவர் சிறந்தவர். அவருடைய Shahid என்ற திரைப்படத்தைப் பார்த்தப்பிறகுதான் மும்பையில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களின் அவலநிலையை நன்கு உணர்ந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட அவர் இயக்கிய Scam 1992 என்ற வெப் சீரிஸைப் பற்றி உயிர்மையில் எழுதியிருந்தேன். அந்த வெப் சீரிஸைப் பார்த்த பிறகுதான் ஹர்சத் மேத்தா பங்கு மார்க்கெட்டில் கொள்ளையடிக்கவில்லை அப்பாவி மக்களை கொள்ளையடித்துள்ளார் என்பது தெரிந்தது. இப்போது மீண்டும் ஒருமுறை ஹன்சல் மேத்தாவின் படைப்பான Scoop வெப் சீரிஸைப் பார்க்கவும் எழுதவும் முடிந்திருக்கிறது.

1993 – மார்ச்-12ஆம் நாள் மும்பையில் பன்னிரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்தன. இந்தக் குண்டுவெடிப்புக்கு பாபர் மசூதி இடிப்பும், அதன்பிறகு வெடித்த கலவரங்களும் காரணங்களாக அமைந்தன. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், குண்டு வைப்பவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் அதிகமாகப் பரவ இந்த மும்பை குண்டுவெடிப்பும்  முக்கியமான காரணம். கடிகார முள் டிக் டிக் என நகர, குண்டுவெடிப்பில் சாகக் கிடக்கும் மக்களை, விரைந்து சென்று காப்பாற்றும் நாயக சாகசம் அதன்பின் நிறைய தோன்றின. ஆனால் குண்டுவெடிப்புகளைப் படமாக்கும் இயக்குநர்கள் அந்தக் குண்டுவெடிப்பிற்குப் பின்னுள்ள சமூக அவலத்தைப் பற்றிச் சிறு ஆய்வுகூட செய்து படம் எடுத்ததில்லை. இந்தச் சூழலில் மிரத் திரிவேதி, மிருன்மயீ லகூ வைகுல், கரன் வியாஸ்  ஆகியோரது எழுத்தில், ஹன்சல் மேத்தாவின் இயக்கத்தில் சென்ற ஜுன் மாதம் நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்த ஸ்கூப்பை இந்தியத் திரைக்கலையின் அதிசயம் என்றே சொல்வேன்.

முதலில் ஸ்கூப் கதையைப் பார்ப்போம்: 1993 மும்பை குண்டு வெடிப்புக்குப் பின்னால் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமும், அவனுடைய வலதுகரமாக இருந்த சோட்டா ராஜனும் பிரிந்துவிட்டார்கள். இருவரும் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைச் செய்தாலும் சோட்டா ராஜன் இந்திய தேசப்பற்றைப் பேசியதோடு பாகிஸ்தான், தீவிரவாதம், ISI போன்றவற்றை எதிர்த்தான். இது கவித்துவமான முரணாக நமக்குத் தோன்றலாம். ஆனால், அவனுக்குப் பின்னால் வலுவான இந்து அமைப்புகள் இருந்தன என்கிறார்கள். தாவூத்தின் D Company Nexus-க்குள் இன்றும்கூட மும்பைப் போலிஸ் அதிகாரிகள், கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், அடியாள்கள் பலர் உள்ளனர் என்று கூறுகிறார்கள்.

இந்தப் பின்னணியை விளங்கிக்கொண்ட பிறகு, 2010இல் மும்பையில் குண்டுவெடிப்பதை வைத்துக் கதை தொடங்குகிறது. Jigna Vora என்ற பெண் பத்திரிகையாளர் சிறையில் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி , ’Behind bars in Byculla: My days in prison’ என்ற நூலில் எழுதியுள்ளார். ஸ்கூப் இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டாலும், நபர்களின் பெயர்கள், இடங்கள், சம்பவங்கள், நாட்கள் ஆகியவற்றை மாற்றியிருக்கிறார்கள்.  அந்த வகையில் மும்பையில் 2011-இல் குண்டு வெடித்தது. கதைக்காக 2010இல் குண்டு வெடித்ததாக மாற்றியுள்ளனர்.

ஜாகுருதி பாதக் (Jaguruti Pathak) என்ற பெண் பத்திரிக்கையாளர் Eastern Age என்ற பத்திரிகையில் Senior crime reporter and Deputy Bureau Chief-ஆக இருக்கிறாள். மிக குறுகிய காலத்தில் இந்த உயர்ந்த பதவியை அடைந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு ரகசிய tips கிடைக்கிறது. அதன்படி, “மும்பையில் குண்டு வெடிக்கப் போகிறது என்ற தகவல் குண்டு வெடிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ATS (Anti – Terrorism Squad) மூலம் மும்பைப் போலிஸுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் மும்பைப் போலிஸ் இந்தத் தகவலைப் புறக்கணித்துள்ளனர்” என்பதுதான் அந்தத் தகவல். “ஒருவேளை மும்பை போலிஸ் இதைக் கவனத்தில் கொண்டிருந்தால் குண்டுவெடிப்பைத் தடுத்திருக்கலாமே” என இணை ஆணையர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரோஃபிடம் கேட்கிறாள். “அந்த tip சரிதான், ஆனால், அத off the record குடுத்தாங்க.” என்கிறார் ஷ்ரோஃப்.

மும்பைப் போலிஸுக்கும் ATS-க்கும் இடையில் பனிப்போர் நடந்துகொண்டிருந்திருந்த காலம் அது. ஒரு காவல் அதிகாரி இன்னொருவர் காலை வாரத் துடித்துக்கொண்டிருந்துள்ளார். அதே போல மும்பை போலிஸிலும் இணை ஆணையரின் நாற்காலியைக் குறிவைத்துத் துணையாணையர் செயல்பட்டுக்கொண்டிருந்துள்ளார்.  ஜாகுருதி போன்ற புத்திசாலி பத்திரிக்கையாளர்கள் இவர்களின் ஈகோவைக் கிண்டிச் சில தகவல்களைக் கறந்துள்ளனர்.

“மாலிக்கைப் பற்றிய முழு விபரம் நிரூபணம் ஆகாமல் இதுபோன்ற செய்தியைப் போடக்கூடாது” எனக் கறாராகச் சொல்லிவிடுகிறார் ஈஸ்டர்ன் ஏஜ் பத்திரிகைத் தலைமையாசிரியர் இம்ரான். எப்படியாவது முட்டிமோதி முதல் பக்கத்தில் செய்தியைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த ஜாகுருதிக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. அப்போது துராக்கியா தெருவில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு ஓடுகிறாள் ஜாகுருதி.

தாவூத்தின் தம்பி கஸ்கரின் ட்ரைவரும் பாதுகாவலனுமான ஹுசைன் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். கொலை நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் இணை ஆணையர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரோஃப் வருகிறார். “கொலை நடந்த விதத்தைப் பார்க்கும்போது இதனைச் சோட்டா ராஜன் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்கிறார். மும்பையின் பிரபலமான பத்திரிகையாளர் ஜெய்தேப்சென் என்பவர் சொல்கிறார், “ஹுசைன் வெறும் ட்ரைவர்தான் ஒரு வேள ராஜன் அவன கொல்லனும்னு நினைச்சிருந்தா அவனோட பைகுல்லா வீட்ல போய் ஈஸியா கொன்னுருப்பான். எதுக்காக ராஜன் தாவூத் ஏரியாவுக்குப் போய் கொலை பண்ற ரிஸ்க் எடுக்கணும்.  இப்போ ராஜன் powerful-ம் இல்ல. அவனோட நெட்வொர்க் அவ்ளோ strong-கா இல்ல. கடந்த நாலைஞ்சு தடவ தாவூத்துக்கு எது நடந்தாலும், சுத்தி வளைச்சு ராஜன் பேர்தான் அடிபடுது. அடுத்த 24 மணிநேரத்துல ஏதாவது ஒரு நியூஸ் சேனல்ல ராஜன் உக்காந்து தான்தான் அத செஞ்சேன்’னு பொறுப்பு ஏத்துக்கிறான். இப்போ இந்த shoot out பழியவும் ராஜன் தலையில போட்டாச்சு” என்கிறார்.

“ஒருவேள இது கிரைம் பிராஞ்சோட வேலையா இருந்தா அத நாம பெரிய கேஸா மாத்தணும்.  கிரைம் பிராஞ்ச் ராஜன் பேரைச் சொல்லி யாரக் காப்பாத்துறாங்க? சோட்டா ராஜன் வெளிநாட்லதான் இருக்கான். அவன்கிட்ட பேட்டி வாங்குறது அவ்ளோ எளிமையான விசயம் இல்லை. புரமோத் இரானி என்பவனைத் தொடர்பு கொண்டால் எப்படியாவது சோட்டா ராஜன் பேட்டியை வாங்கிவிடலாம். ஆனால் புரமோத் இரானி ஜெய்தேப்போடு மட்டும்தான் பேசுவான். என்ன செய்வது” எனத் தெரியாமல் தவிக்கிறாள் ஜாகுருதி.

அன்று இரவு இணை ஆணையர் ஷ்ரோஃப் ஜாகுருதிக்கு மட்டும், ‘crime branch nabs Dawood Den shooter in a late night (சோட்டா ராஜன்)’ என்ற ஒரு உறுதியான குறுஞ்செய்தி அனுப்புகிறார். ஜாகுருதி இதை முதல் பக்கச் செய்தியாக்குகிறாள். அவளுக்கு மேலும் புகழ் கூடுகிறது. என்றாலும் இந்த ஷூட் அவுட் கேஸ்ல இன்னும்கொஞ்சம் போகவேண்டும் என்று நினைக்கிறாள்.  முன்னாள் IB (Intelligence Bureau) officer ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்கிறாள். அவர், “இது ஒரு தோல்வியடைந்த ஷூட் அவுட். ஏழு வருஷத்துக்கு முன்னால ராஜனோட ஆளுங்க ரெண்டு பேர கைது பண்ணாங்க. IB-தான் அவுங்களுக்கு ட்ரைனிங்க் கொடுத்தாங்க. தாவூத் துபாய்ல்ல அவனோட பொண்ணு கல்யாணத்துக்கு வர்றதா இருந்தான். IB அவன அங்கேயே தீத்துக்கட்றதா பிளான் பண்ணாங்க. IBக்கு ராஜன்தான் ஷூட்டரைக் கொடுத்தான். ஆனா வேலைக்கு ஆகல” என்கிறார்.

“அப்படின்னா ஹுசைனைக் கொன்னது தாவூத்த காப்பாத்துறதுக்கா. கிரைம் பிராஞ்சுக்கும் தாவூத்துக்கும் தொடர்பு இருக்கா? அப்படின்னா போலிஸ்ல யாரெல்லாம் இதுல தொடர்புடையவங்களா இருக்காங்க, அவுங்க ஏன் தாவூத்த காப்பாத்தணும்?’ எனக் கேள்வி எழுப்புகிறாள் ஜாகுருதி. இது தொடர்பாகத் தலைமையாசிரியர் இம்ரானிடம் பேசுகிறாள். “நீ சிங்கத்து வாயில கை வைக்கிற!” என அவர் அவளை எச்சரிக்கிறார். “புள்ளிகளை இணைச்சா இதுதான கிடைக்குது!” எனச் சொல்கிறாள் ஜாகுருதி. உண்மையை சொல்வதற்குப் பயம் எதற்கு? யாராக இருந்தால் என்ன? என்று நினைப்பதுதான் ஜாகுருதி செய்யும் தவறு.

ஜெய்தேப்சென் சொன்னதுபோலவே அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் ஒரு டிவியில் வந்து கொலைக்கு பொறுப்பு ஏற்கிறான் சோட்டா ராஜன் (குரல் மட்டும்). ‘மும்பை போலிஸோடும், மும்பை IB-யோடும் எப்படி சோட்டா ராஜன் ஒத்துழைக்கிறான்? இது அவனைக் காத்துக்கொள்வதற்கான ஒரு தந்திரமோ’ என நினைக்கிறாள். அந்த நேரத்தில் அவளுக்கு மும்பை போலிஸ் மூலம் ஒரு தகவல் கிடைக்கிறது. மும்பையில் நான்கு இடங்களில் குண்டு வெடிக்கப் போவதாக ATS-க்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் இரண்டு இடங்களைத்தான் காப்பாற்றியிருக்கிறார்கள். ATS தலைவர் ரமேஷ் மாலிக்கிடம் இது குறித்துக் கேட்கிறாள் ஜாகுருதி.

இதனால், அவளுக்கு இரண்டு எச்சரிக்கைகள் வருகின்றன. ஒன்று கிரைம் பிராஞ்ச் ஆஃபிஸில் அவளைப் பார்க்கும் ஜெய்தேப்சென், “அந்த ஸ்டோரிய பண்ண வேணாம். என்னை நம்பு!” எனச் சொல்கிறார். மற்றொன்று, ஜாகுருதி மாலிக்கிடம் பேசிவிட்டு அலுவலகத்திற்குச் செல்லும் முன்பாக, “ஜாகுருதிய இது குறித்து விசாரிப்பதை நிறுத்தச் சொல்லுங்க” என ATS அலுவலகத்திலிருந்து மிரட்டல் வருகிறது. ‘ஒருவன் மிரட்டல் விடுக்கிறான் என்றால் நாம் சரியான திசையில் போகிறோம் என்று அர்த்தம்’ என நினைத்துக்கொள்கிறாள் ஜாகுருதி.

இதற்கிடையில் சாம்சன் என்பவன்மூலம் புரமோத் இரானியை நெருங்குகிறாள் ஜாகுருதி. அவனிடம் சோட்டா ராஜனின் பேட்டி வேண்டும் என்று கேட்கிறாள். ஆனால் இரானி, “ஜெய்தேப்சென் தனியாக ஐரோப்பா சென்றுள்ளான். அதன் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டு வா, நான் உனக்கு சோட்டா ராஜனோடு பேட்டி எடுக்க ஏற்பாடு செய்கிறேன்” என்கிறான்.

இது நடந்து சில நாள்களில், சோட்டா ராஜன் ஈஸ்டர்ன் ஏஜ் அலுவலகப் ஃபோன் வழியாக ஜாகுருதிக்குப் பேட்டி கொடுக்கிறான். அதில், “நான் தனியா இருக்கேன். ஆனா தாவூத்துக்கு பாகிஸ்தானோட சப்போர்ட் இருக்கு. அதோட டெல்லி போலிஸ் என்னைத்தான் தேடுறாங்க. தாவூத்துக்கு இந்தியாவிலயும் சப்போர்ட் இருக்கு. 2003லர்ந்து IB-க்கு நிறையா tips குடுத்திருக்கேன். ஆனா என்மேல 800 FIR போட்ருக்காங்க. தாவூத்துக்கு வயசாகுது. ஆனா நீங்க அவனப்பத்திப் படம் எடுக்குறதுலயே ரொம்ப மும்புறமா இருக்கீங்க” எனச் சொல்கிறான். ஜாகுருதி சோட்டா ராஜனிடம் இந்தப் பேட்டி எடுத்த பிறகு அவள் வாழ்வில் என்றும் அடையாத இன்பம் அடைகிறாள். மும்பையில் எத்தனையோ ரிப்போர்டர்கள் அலையாக அலைந்தும் கிடைக்காத சோட்டா ராஜனின் பேட்டி அவளுக்குக் கிடைத்துவிட்டது. அலுவலகமே அந்த வெற்றியைக் கொண்டாடுகிறது. ஆனால் அந்த சந்தோஷம்தான் பிற்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தாகிறது.

அடுத்த சில தினங்களில், ஜாகுருதி குடும்பத்தோடு காஷ்மீர் சுற்றுலா போன இடத்தில் பிரபல பத்திரிகையாளர் ஜெய்தேப்சென் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைகிறாள். ‘ஜெய்தேப்சென்னுக்கு ஏராளமான எதிரிகள் இருக்கலாம். அவர் ஐபிஎல் சூதாட்டத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். 10000 கோடி எண்ணெய் மோசடியை வெளியில் கொண்டுவந்துள்ளார். அதில் தொடர்புடையவர் சிறையில் இருக்கிறார்.  ஆனால் அவையெல்லாம் அவருடைய கொலைக்குக் காரணமாக  இருக்க வாய்ப்பில்லை. அவர் Anti–Corruption Bureauகிட்ட சீனியர் IPS Officer பத்தி ரிபோர்ட் செய்திருக்கிறார். அதுதான் அவருடைய கொலைக்குக் காரணமா இருக்கலாம்’ என்று பேசிக்கொள்கிறார்கள்.

இம்ரான் ஜெய்தேப்சென் பற்றிச் சொல்லும்போது, “ஒரு பெரிய ஸ்டோரி பண்ணனும், அது தோனியோட சிக்ஸ் மாதிரி பெரிசா இருக்கும். அதுக்கப்புறம் ரிடையர் ஆயிருவேன்னு சொன்னார்” என்கிறார். சென்னின் நெருங்கிய நண்பர், “கடைசியா சில corrupt IPS Officer-ர ரிபோர்ட் பண்ணாரு அதுல ஒருத்தரான ACP மஹானந்தே சென் மேல கோபப்பட்டிருக்காரு. மஹானந்தேவுக்கு தாவூத்தோட நேரடித் தொடர்பு இருக்கு” என்கிறார்.

ஜெய்தேப்சென் கொலை பத்திரிகையாளர்கள் அனைவரையும் போராட வைக்கிறது, “ உபி-ல்ல விஜய்குமார், சத்தீஸ்கர்ல்ல உமேஷ் சிங்க், கர்நாடகாவுல ஷகீன் கான் இப்போ சென்… ஒவ்வொரு ரெண்டு மாசத்துக்கும் ஒரு தடவ ரொம்ப முக்கியமான ரிபோர்டர கொன்னுருக்காங்க. இதுக்குச் சரியான சட்டம் வேண்டும்” என்கிறார்கள். மறுபடியும் மும்பை போலிஸ் கமிஷ்னர் ஷ்ரோஃப் பத்திரிகையாளருக்குச் சொல்கிறார், “Prima facie evidence இருக்கு. நிச்சயமா இதுக்குப் பின்னால சோட்டா ராஜன் கைதான் இருக்கு. யாரோ எதிரி பத்திரிகையாளர் ஒருத்தர் ஜெய்தேப்சென்னைப் பற்றிய தகவல்களை எல்லாம் சோட்டா ராஜனுக்குக் கொடுத்திருக்கிறார்” என்கிறார்.

ஜெய்தேப்சென் கிண்டலடித்த சோட்டா ராஜன் பற்றிய செய்தி அவருடைய மரணத்திலேயே சொல்லப்படுவதை நினைத்துப்பார்க்கிறாள் ஜாகுருதி.  ஜெய்தேப்சென்னுக்காக நடக்கும் போராட்டத்தின்போது போலிஸ் பக்கமிருந்து புதிய புதிய புரளிகளைப் பரப்புகிறார்கள். ‘அவர் தாவூத்துக்கு எதிரா எழுதினாரு அதனாலத்தான் கொன்னுட்டாங்க’ என்கிறார்கள். ‘ஜெய்தேப்சென்னுக்கு பூணம் கிருஷ்ணன் என்ற சகப் பணியாளரோடு தொடர்பு இருந்தது’ என்கிறார்கள். ‘அவர் பணம் வாங்கிட்டு Positive Story எழுதினார்’ என்கிறார்கள். இறந்தவன் உயிரோடு வந்து பேசமாட்டான் என்பதால் இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் பரப்புகிறார்கள். “ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவரைப் பற்றி Negative Story பண்ணியதற்காகக் தாதாக்கள் கொல்ல ஆரம்பித்தால் இந்தியாவில் ஒரு பத்திரிகையாளரும் உயிரோடு இருக்க முடியாது” என்கிறார் இம்ரான்.

இது தொடர்பாக, “7 பேரைக் கைது செய்திருக்கிறோம். அதில் ஒருவன் சுரேஷ் காலியா என்னும் ஷூட்டர். ஜெய்தேப்சென்னைக் கொல்லச் சொன்னது சோட்டா ராஜன்தான் என்கிறான்” என்று கமிஷ்னர் ஷ்ரோஃப் சொல்கிறார். ஆனால் சுரேஷ் காலிக் 12 வருடத்திற்கு முன்பு அவனுடைய சொந்த கிராமத்தில் செட்டிலாகிவிட்டான் என்கிறார் சீனியர் பத்திரிகையாளர் தல்வி. இப்படி ஒவ்வொரு முறையும் மொக்கைவாங்கிக்கொண்டிருப்பதால் தப்பிக்க ஏதாவது வேண்டும் என நினைக்கிறார் மும்பை போலிஸ் கமிஷ்னர். அந்த நேரத்தில் சோட்டா ராஜன் ஷிர்தேசானி என்பவனிடம் பேசிய ஆடியோ ஒன்று அவர்கள் கையில் கிடைக்கிறது. அதில், “ஜெய்தேப்சென்’னை நான் தான் கொன்றேன்.  அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள ஜாகுருதி பாதக்தான் உதவினாள்” என்கிறான்.

அடுத்ததடுத்த சில நாள்களில் ஜாகுருதிக்கு எதிராகப் பொய்யான சில ஆதாரங்களைக் காட்டி அவளை Mcoca (Maharashtra Control of Organized Crime Act ) சட்டத்தின்கீழ் கைது செய்கிறார்கள். தடா சட்டத்தைவிட கொடுமையானது Mcoca. அவ்வளவு எளிதாக ஜாமீனில் வெளிவரமுடியாது. குற்றம் செய்திருக்க வேண்டியதில்லை. அதற்கான சந்தேகம் இருந்தாலே சிறையிலிருந்து வெளியில் வருவது கடினம். அந்தச் சட்டத்தின்கீழ் ஜாக்ருதி சிறையில் அடைக்கப்படுகிறாள். எட்டு மாதத்துக்கு மேல் சிறையில் கொடுமைகளை அனுபவிக்கிறாள். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அவளுக்கு ஜாமின் கிடைக்கிறது என்பது இந்த சீரிஸின் விரிவான கதை.

நீங்கள் The family Man என்ற வெப் சீரிஸைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் தீவிரவாதத் தடுப்புத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவன் உண்ணாமல் உறங்காமல் இந்தியா முழுவதும் எங்கே Bomb வைத்திருக்கிறார்களோ…! என்பதைத் தேடுவதையே தன் தொழிலாக வைத்திருப்பான். மன அழுத்தம் மிகுந்த இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் நேரத்தில் அந்த நாயகனின் மனைவியை ஒருவன் கவர்ந்துகொள்வான். அவனுடைய மகளை இளம் இஸ்லாமிய வாலிபன் ஒருவன் காதலிப்பதுபோல ஏமாற்றிக் கெடுப்பான் (லவ் ஜிகாத்) தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடும் அதிகாரியின் அவலத்தைப் பார்த்தீர்களா!? என்பதுபோல கதையை எடுத்திருப்பார்கள்.

The family Man என்ற வெப் சீரிஸைப் பார்க்காவிட்டாலும், துப்பாக்கி, பீஸ்ட்டை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இதுபோன்ற கதைகளுக்கு நடுவே புலனாய்வு அமைப்புகளை விமர்சித்து சீரிஸை எடுப்பது எவ்வளவு கடினமானது தெரியுமா? ஹன்சல் மேஹ்தா மிகப் பெரிய இயக்குநர் என்பதால் இவையெல்லாம் சாத்தியமாகின்றன என நினைக்கிறேன். என்றாலும், இன்னும் முழுமையாகச் சொல்வதற்கான இடமிருந்தும் பலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கிறார் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சான்றாக,

2011 மும்பை குண்டுவெடிப்பு மூன்று இடங்களில் நடக்கிறது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 130 பேர் படுகாயமடைந்தார்கள்.  இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாஹிதினைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்தக் குண்டுவெடிப்புக்கு முன்பு, 20 மே 2011 அன்று, தாத்ரா நாகர் ஹவேலியில் இருக்கும் உமர்குய் சாய்லி என்ற இடங்களில் 35 டிடெனேட்டர்களையும், கெல்லடின் குச்சிகளையும், மிகப் பெரிய அளவிலான அம்மோனியம் நைட்ரேட்டையும் போலிஸார் கைப்பற்றித் தங்கள்  கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். ஆனால் போலிஸ் கண்காணிப்பில் இருந்த அந்தப் பொருள்கள் எல்லாம் காணாமல் போயிருக்கின்றன.

படத்தில் ஜெய்தேப்சென் என்பவர் உண்மையில் பத்திரிகையாளர் ஜோதிர்மய் தேய் (Jyothirmoy Dey). Mid–Day என்னும் பத்திரிகையில் பணியாற்றியவர். “காணாமல் போன அந்த வெடிபொருள்கள்தான் 2011 மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  RDX, Ammonium, Fuel oil என இந்த வெடிவிபத்தில் பயன்படுத்தப்பட்ட அதே பொருள்களின் கலவைதான் 2006 ஜூலை மாதம் நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” எனச் சொல்கிறார். இந்த வழக்கு இப்போதும்கூட முடிவுக்கு வரவில்லை. “எல்லா ஏஜென்ஸியிடமிருந்தும் ரிபோர்ட் வராமல் எங்களால் எதுவும் சொல்லமுடியாது” என நாசிக் காவல் கண்காணிப்பாளர் இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்படியென்றால் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைத்திருக்காது என்று பொருள்.

இந்தக் குண்டுவெடிப்புகளாவது இந்துக்கள் இருக்கும் பகுதியில் நடந்தவை. 2006 செப்டம்பர் 8ஆம் தேதி மாலேக்கான் குண்டுவெடிப்பு ஒரு மசூதியின் அருகில் நடந்தது. பல இஸ்லாமியர்கள் இறந்துவிட்டனர்.  இந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக ATS மும்பையிலுள்ள Students Islamic Movement of india (SIMI) நபர்களைக் கைது செய்தார்கள். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்பட்ட ஷபீன் பேட்டரிவாலாவும், SIMI இயக்கத்தைச் சேர்ந்த ராஸ் அஹம்மதுவும் கைது செய்யப்பட்டார்கள். அபிநவ் பாரதி, பஜ்ரங்க் தள் அமைப்பைச் சார்ந்தவர்கள்தான் இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்றாலும் தொடர்புடையவர்களைக் கைது செய்யவில்லை. இந்தக் குண்டுவெடிப்பின்போதும் RDX, Ammonium, Fuel oil கலவையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதிலிருந்து தெரிவது 2003-க்குப் பிறகு காவல்துறை, தீவிரவாதத் தடுப்புத் துறை, இண்டலிஜெண்ட் பிரோ, தேசியப் புலனாய்வு நிறுவனம், ரா போன்ற அமைப்புகள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் நேரடித் தொடர்பில்லை என்றாலும் கண்ணுக்குத் தெரியாத நூலினால் கட்டப்பட்டு இயக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்களைத் திட்டமிட்டுச் சூறையாடியிருக்கின்றனர். பொதுமக்களிடம் இஸ்லாமியர்களுக்கு எதிரான அச்சத்தை ஆழமாகப் பதிய வைத்துள்ளனர். 2011ஆம் ஆண்டு குண்டுவெடிப்புக்கூட, இந்தியா-பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தம் நடைபெறவிருந்த சூழலில் நடந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பலமான அதிகார அமைப்புகள் எல்லாம் தீவிரமாக வலதுசாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். 1999இல் பாஜவின் ஊழலை அம்பலப்படுத்திய அன்னா ஹசாரே 2000 ஆண்டுக்குப் பிறகு வலதுசாரிகளால் ஆதரிக்கப்பட்டு மிகப் பெரிய போராட்டத் தலைவராகச் சித்திரிக்கப்பட்டார். மகாராஸ்ட்டிராவிலும், மத்திய அரசிலும் காங்கிரஸ் இருந்த போதும் அவர்கள் ஸ்திரமில்லாமல் இருந்திருக்கிறார்கள். வலதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோதும் அதிகாரத்தில் வலிமையாக இருந்திருக்கிறார்கள். இதற்கான சில சான்றுகளைச் சொல்லமுடியும்.

2011 குண்டுவெடிப்பில் இந்தியன் முஜாஹிதின்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று ATS சொன்னது. 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் குண்டு வைத்தவர்கள்தான் மும்பையிலும் குண்டுவைத்துள்ளனர் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு சொன்னது. இந்த வழக்கின்போது நாஜி அஹம்மது என்ற 22 வயது இளைஞனும், வாதின் அக்தர் என்ற 23 வயது இளைஞனும் கொல்லப்பட்டனர். 2008இல் குண்டு வைத்தவன் ஒருவனுடைய குடும்பத்தில் பிறந்த இன்னொருவன் 2011ஆம் ஆண்டு மும்பைக்கு வந்து குண்டு வைக்க முடியுமா? ஆனால் ஃபைஸ் உஸ்மானி என்பவன் 2008 ஆம் ஆண்டு அஹ்மதாபாத்தில் குண்டு வைத்தவனின் சகோதரன் என்றார்கள். அவன்தான் மும்பையில் குண்டு வைத்தவன் எனச் சொல்லி லாக்கப்பில் வைத்து போலிஸ் அவனையும் அடித்தே கொன்றுவிட்டார்கள்.

அதேநேரத்தில் மாலேகான் குண்டுவெடிப்பில் பிரக்ஞா சிங்க் தாகூர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தும் அவரைத் தொடவே இல்லை. சிமி இயக்கத்தில் இருந்தவர்களைத்தான் கைது செய்து சித்ரவதை செய்தார்கள். மும்பை போலிஸுக்கும் ATS-க்கும் நடந்த சண்டையில் இறுதியாகத் தேசியப் புலனாய்வு அமைப்பு தலையிட்டு அதன்பின்புதான் பிரக்ஞாவைக் கைது செய்தார்கள். அப்படிக் கைது செய்யப்பட்டாலும் சிறைக்குள் ஒரு ராணியைப்போலத்தான் இருந்திருக்கிறார் என்பதை ஸ்கூப் வெப் சீரிஸைப் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம்.

ஸ்கூப் என்ற வெப்சீரிஸை ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டபோது, “ஏன் என்றால் 2011இல் நடந்தாலும் இன்றைக்கும் இந்தக் கதை நூறு சதம் பொருத்தமாக இருக்கிறது” என்கிறார். சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை பேசுவது. ஆனால் உண்மையைப் பேச முடியாது. பத்திரிகையாளர் பேசினால் கொல்லப்படுவார்கள். பெண்கள் பேசினால் அவர்களுடைய நடத்தைமீது வன்முறைத் தாக்குதல் நடக்கும். மணிப்பூர் உள்ளிட்ட எந்தப் பிரச்சனையைப் பற்றியும் பேசமுடியாது. முகநூலில் எதையும் பதிவிட முடியாது. உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசுவதற்கு ஆயிரம் ஆயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் இதுதான் இந்திய ஜனநாயகம். இந்த இந்திய ஜனநாயகத்துக்கான திட்டத்தை இருபது வருடத்திற்கு முன்பே தீட்டியிருக்கிறார்கள்.  இந்தக் கதைக்கு தாவூத்தும், சோட்டா ராஜனும் சும்மா ஊறுகாய் மாதிரிதான். உண்மையான வில்லன் நிழல் உலக தாதாவைவிட கொடூரமானவன். அவன் யார் என்பதை நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் அவனைப் பற்றி ஒரு tip கொடுக்கிறேன். அவன்தான் நாட்டுப்பற்றைப் பற்றி நிறைய பேசுவான்…! அதுதான் அவன் கேடயம்…! அதுவே அவன் ஆயுதம்…!

sankarthirukkural@gmail.com