ஜூலை 18, 2023 அன்று தில்லியில் சாகித்ய அகாடெமியால் ஒருங்கிணைக்கப்பட்ட ‘அகில இந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் சந்திப்பு’ நடந்தது. எல்லா பொது நிகழ்வுகளும் அடிப்படையில் ஒரு நகைமுரணத் தமக்குள் கொண்டிருக்கும். இந்த நிகழ்வும் அப்படியே.

உடல் சார்ந்த, பார்வைப் புலன் சார்ந்த பல்வேறு சவால்களைக் கொண்டவர்களே இதன் பங்கேற்பாளர்கள். ஆனால் நிகழ்ச்சி நடந்த கட்டடத்திலோ மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமான கழிப்பறைகளோ மேடையோ இல்லை. சரி அது ஒரு பழைய கட்டடமே. ஆனால் தற்காலிக ஏற்பாடுகளைப் பண்ணியிருக்கலாமே. முன்பு ஜீ டீவி மாற்றுத்திறனாளிகளைப் பங்கேற்பாளர்களாக வைத்து “தமிழா தமிழா” நிகழ்ச்சியை நடத்திய போது மாற்றுத்திறனாளிகளுக்குத் தற்காலிக சறுக்குப்பாதைகளை மேடையில் அமைக்க மெனெக்கெட்டிருந்தார்கள். இதை நான் குறிப்பிடக் காரணமாக ஒரு சம்பவம் நடந்தது:

என்னுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிழக்கிந்திய மாநிலம் ஒன்றைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளிப் பெண் கவிஞர் அன்றைய நாள் முழுக்க அமர்ந்த நிலையிலே மூத்திரம் பெய்வதற்காக டயபர் அணிய வேண்டி வந்தது. இதை நான் அறிந்து கொண்டது ஒரு தோழியின் மூலமாக. அவர் கழிப்பறைக்குச் சென்றிருந்த போது இந்த வங்காளக் கவிஞர் சக்கர நாற்காலியில் தன் சுடிதாரின் பேண்டையும் உள்ளாடையையும் கழற்றிவிட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அவரால் தன் கையையும் சரிவரப் பயன்படுத்த முடியாது. அந்தக் கழிப்பறைக்குள் அவரால் நுழைய முடியவில்லை என்பதால் அவரது அண்ணன் அவரைத் தூக்கி உள்ளே அமர வைத்து, அவரையே தன் அந்தரங்க இடத்தைச் சுத்தம் செய்ய வைத்து, அவரே தன் தங்கைக்கு டயபர் அணிவித்தும் விடுகிறார். இதைக் கழிப்பறைக்குள் வரும் பிற பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை என் தோழி என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் சொன்னார். எனக்கு இதைக் கேட்டு மனம் கசந்தது. ஒரு மாற்றுத்திறனாளியின் அடிப்படை சுயமரியாதையை ஒரு கழிப்பறையின் கட்டமைப்பு கீழே போட்டு நசுக்குகிறது. ஒரு சின்ன மாற்றத்தைச் செய்திருந்தால் அவர் டயபர் அணியத் தேவையிருந்திருக்காது. அவர் சுயமாக கழிப்பறைக்கு உள்ளே போய் தன்மானத்துடன் இருந்திருக்க முடியும். சில நேரங்களில் தன்மானத்தைக் காக்க பெரிய பெரிய லட்சிய முழக்கங்களோ அரசியல் இயக்கங்களின் பேரணியோ தேவையில்லை. ஒரு சின்ன உள்கட்டமைப்பு மாற்றம் போதும், சில ஆயிரம் ரூபாய்கள் போதும்.

நாங்கள் 2 மணிநேர விமானப் பயணத்தில் தில்லியைப் போய் சேர்ந்துவிட இந்த பெண்ணோ 18 மணிநேரங்கள் ரயிலில் பயணித்துத் தன் மாநிலத்தில் இருந்து தில்லிக்கு வர வேண்டி இருந்தது. அவரது சகோதரருக்கும் பார்வைத் திறன் பிரச்சினை உள்ளது. அதனால் அவரை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள். இத்தனைக்கும் கடந்த ஆண்டு ஒரு டவுன் நோய்க்குறி கொண்டவரை இண்டிகோ விமானத்தில் அனுமதிக்க மறுத்தார்கள். அவரது பெற்றோர் விமான நிலையத்திலேயே பிரச்சினை பண்ணி பின்னர் அதைப் பற்றி ஊடகங்களிடமும் பேச அது பிரம்மாண்டமான விவாதமாகியது. விமான சேவை நிறுவனமோ தங்கள் பயணிகளுக்குப் பாதுகாப்பு இடைஞ்சல் வரக் கூடாது என்றும், சம்மந்தப்பட்ட கற்றல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடக் கூடாது என்றும்தான் அவரை ஏற்ற மறுத்ததாக பலவிதமாக வாதிட்டுப் பின்னர் அதைப் பின்வாங்கியது. அதன் பிறகு டிஜிசிஏ மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக பாரபட்சம் காட்டக் கூடாது என விதிமுறையைக் கொண்டு வந்தது. ஆனால் அதற்குள்ளும் உபவிதிகளை வைத்துள்ளார்கள் என இப்போதுதான் தெரிகிறது – பார்வை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் விமானத்தில் பயணித்தால் அவர்கள் தவறி விழுந்துவிடுவார்கள் என்றோ அவர்களால் பயணத்திற்கு இடைஞ்சல் வருமென்றோ விமான நிர்வாகத்துக்கு அபத்தமான அச்சம் இன்னும் உள்ளது. விளைவாக இந்த அண்ணனும் தங்கையும் எங்குப் போனாலும் ரயிலிலே போக வேண்டிய நிலை. ரயிலில் கழிப்பறை எந்தளவுக்கு இடுங்கலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நுழைவு வசதி அற்றதாக இருக்கும் என அறிவோமே. ஆக, இப்பெண் 18 மணிநேரம் டயப்பருடனே இருக்க வேண்டும். அடிக்கடி அவரது அண்ணன் அவரைக் கழிப்பறைக்குள் தூக்கிப் போய் டயபரை மாற்ற வேண்டும். என்ன பிரச்சினை என்றால் அப்பெண்ணால் தன் கால்கள் இரண்டையும் மடிக்க முடியாது. அவர் காலை நீட்டிய நிலையில் எப்படி அந்தச் சிறிய ரயில்வே கழிப்பறைக்குள் நுழைய முடியும்? எனக்கு இதை நினைத்தாலே தலைவலி அதிகமாகிறது.

இன்னொரு விசித்திரமான முரண்பாட்டையும் நான் இங்குக் குறிப்பிட வேண்டும் – கவியரங்கமும் உரையாடல்களும் நடந்த போது கம்பீரமான துணிச்சலான படைப்பாளிகளாகத் தோன்றிய மாற்றுத்திறனாளிப் பெண்கள் நிகழ்ச்சி முடிந்ததும் தம் கடும் துன்பமான உலகுக்குத் திரும்புவதைக் கவனித்தேன். ஒரு தென்னிந்தியப் பெண் படைப்பாளி தன் சொந்த ஊரில் சமூகவலைத்தளங்களிலும் ஊடகத்திலும் பிரசித்தமானவர். கடந்த முறை தேர்தல் ஆணையம் அவரை யூத் ஐகானாக அங்கீகரித்து விருதளித்தது. அவரை வைத்து இளைஞர்களிடம் வாக்களிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியது. அவரது இந்த சாதனைகளைப் பற்றி ஒரு பி.பி.டி படத்தைக் காட்டினார்கள். அப்பெண் சிறுவயது முதலே பல்வேறு சவால்களைக் கடந்து வந்ததைப் பற்றி அற்புதமாக உரையாற்றியதைக் கேட்டு சிலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். நான் கவிதை வாசிக்க வேண்டிய முறை வந்த போது நான் மேடையில் இருந்தபடி அப்பெண்ணைக் கவனித்தேன். அவர் அடிக்கடி தாள முடியாத வலியில் முகத்தை மூடிக்கொண்டிருந்தார். நான் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் விசாரித்தேன். அவர் தான் விடிகாலையில் விமானத்தில் வந்து இறங்கிய பின்னர் சரியாக ஓய்வெடுக்க இயலாததால் கடுமையான முதுகுவலி என்றார். அதன் பிறகு அவராக மனம் திறந்து பேசினார். அவர் 12 மணிநேரங்களாக மூத்திரம் பெய்யாமல் இருந்தார். ஓட்டல் அறைக்குத் திரும்பினாலே அவரால் கழிப்பறையைப் பயன்படுத்த முடியும். இத்தனைக்கும் அவரது அக்காவின் மகனே அவருடன் வந்திருந்தார். ஓட்டல் அறையிலும் அவர்தான் இவரைத் தூக்கி உள்ளே வைக்க முடியும். ஏனென்றால் அங்கும் கழிப்பறையின் வாயிலில் ஒரு பெரிய படிக்கட்டு இருக்கிறது. (ஏன் இப்படித் தவறாமல் கழிப்பறைக்குப் படிக்கட்டு வைக்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. எவ்வளவோ படித்திருக்கும் ஒரு கட்டட வடிவமைப்பாளருக்கு ஏன் இந்த எளிய சிக்கல் புரியவில்லை?) ஒருவேளை அங்கு அவரது அக்காவின் மகன் அவரைத் தூக்குவதைப் பொருட்படுத்தாத அவரால் அதை இங்குள்ள கழிப்பறையில் செய்வதை ஏற்க முடியவில்லை என நினைக்கிறேன்.

அன்று இவரைப் போல முழுக்க சக்கர நாற்காலியைச் சார்ந்திருப்போர் வேறு நபர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் கவியரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பொன்னுலகம் பற்றி கோரிக்கைகளை வைக்கிறார்கள், தம் கனவுகளை கவிதைகள் வழி பகிர்ந்து கொள்கிறார்கள், உலகையே தம் மொழி வழியாக வெற்றி கொண்டதாக நினைக்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் சிறுநீர் கழிப்பதற்குக் கூட வாய்ப்பில்லாத ஒரு அபத்தமான உலகுக்கு மீள்கிறார்கள். எனில் இலக்கியம் எனும் இந்த மொழிவழி சாகசங்களின் தேவை, பொருள்தான் என்ன? தம் உலகம் பற்றி நேர்மறையாகவும் லட்சியப்பூர்வமாகவும் உலகுடன் உறவாடுகையில் தன்னம்பிக்கை கொள்ளும் இவர்களால் ஏன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நேரடியாக ஒரு அடிப்படையான உரிமையைக் கூடக் கேட்க இயலவில்லை? இதுவே அரசு நடத்தும் தலித் இலக்கியக் கருத்தரங்கு ஒன்றில் தலித் பங்கேற்பாளர்களை உணவருந்தும் அறையிலோ பொதுக்கழிப்பறையிலோ அனுமதிக்கவில்லை என்றால் அதை ஏற்பார்களா? அரசு நடத்தும் பெண்ணியக் கருத்தரங்கு ஒன்றில் பெண்களுக்கான கழிப்பறை இல்லையென்றால் அதை அப்பெண்கள் ஏற்றுக்கொண்டு அடக்கிக் கொள்வார்களா? ஏன் மாற்றுத்திறனாளிகள் மட்டும் தம் நடப்புலகப் பிரச்சினைகளை வெளியே பேசத் தயங்குகிறார்கள்? ஏன் அஞ்சுகிறார்கள்? நன்கு படித்தவர்களாக இருந்தும் கூட அவர்களுக்கு உரிமைக்குரல் எழுப்பும் தன்னம்பிக்கை இல்லாமல் ஒருவிதக் கூச்சமும் பயமும் உள்ளதே அது ஏன்? ஏன் பொதுவெளியில் தம் உடலை ஆயுதமாக முன்வைக்கத் தயங்குகிறார்கள்? இந்த கேள்விகளை நான் என்னை வைத்தும்தான் எழுப்புகிறேன் – என்னுடைய துணிச்சல் மொழியின் வெளிக்குள் மட்டுமே. வெளியே ஒரு கடையிலோ அரங்கிலோ நான் நுழைவதற்கு உள்கட்டமைப்பு வசதி இல்லாத போது ஒவ்வொரு முறையும் நான் ஒன்று அதை சகித்துக் கொண்டு திரும்புகிறேன் அல்லது என் தேவைகளை அடக்கிக் கொண்டு அங்குக் கஷ்டப்பட்டேனும் நுழைய முயல்கிறேன்.

இதை நான் ஒரு இரட்டை ஒடுக்குமுறையாகப் பார்க்கிறேன் – ஒன்று உள்கட்டமைப்புப் போதாமை காரணமாகச் சமூகத்தால் உருவாக்கப்படும் ‘ஊனம்’. இரண்டாவது, இந்த ‘ஊனம்’ பின்னர் நம் மன அமைப்பையே சமூகத்துக்கு ஏற்ப மாற்றுவது. இது தாழ்வுணர்வு அல்ல. அதையும் தாண்டிய ஒன்று. சமூகத்தின் ஆதிக்கக் கருத்துருக்களை நம் மனமும் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்வது. இதற்கான ஒரு உதாரணத்தை இனவாதத்தில் இருந்து பார்க்கலாம். பிராண்ட்ஸ் பேனன் எனும் உளவியல் ஆய்வாளர் தனது “கறுப்புத் தோல், வெள்ளை முகமூடிகள்” எனும் நூலில் கறுப்பினத்தவரின் மனதில் வெள்ளையின ஆதிக்கவாதம் ஏற்படுத்திய தாக்கம் எப்படித் தமது தன்னிலையை வெள்ளையர்களின் கண்ணோட்டத்தில் இருந்து மதிப்பிடவும் வடிவமைக்கவும் செய்தது எனப் பேசுகிறார். இதை தாழ்வுணர்வு என்றல்ல, ஒரு உளவியல் காலனியாதிக்கம் என்றே நாம் பார்க்க வேண்டும். (தாழ்வுணர்வு என்பது தனிமனிதரின் தவறான சுயமதிப்பீட்டில் இருந்து வருவது.) மாற்றுத்திறனாளிகளின் மனத்திலும் ஆளுமையிலும் இயல்புடலர்களின் சமூக உளவியல் காலனியாதிக்கம் வலுவாக உள்ளது என்பதை நான் அண்மையில் இந்த அனுபவங்கள் வழி உறுதி செய்துகொண்டேன்.

ஒற்றுமையில் வேற்றுமை

இந்தியா பல்வேறு பிளவுகளைச் சந்தித்து வரும் இந்தக் காலத்தில் இப்படி அனைத்து மாநில மொழிகளில் இருந்து மாற்றுத்திறனாளிப் படைப்பாளிகளை அழைத்து கலந்துரையாடல்-கவியரங்கம் நடத்திய சாகித்ய அகாடெமியை பாராட்ட வேண்டும். ஆனாலும், வேற்றுமையில் ஒற்றுமையைப் போல ஒற்றுமையில் வேற்றுமையையும் நான் அதிகமாகக் கண்டேன் என்பதையும் பதிவு செய்தாக வேண்டும்.

பண்பாட்டுத் துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசினார். அவர் சில சூர்தாஸ் வரிகளை அழகாகப் பாடிக் காட்டினாலும் அவர் பேசப் பேச இந்த மனிசன் பாட்டோடயே நிறுத்தியிருக்கலாம் என்று யோசிக்க வைத்துவிட்டார். முதல் பிரச்சினை, இது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. அந்த ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காகத்தான் நேரு இந்த சாகித்ய அகாடெமியை உருவாக்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஒரு மத்திய அமைச்சர் இந்துமத புராணக் கதைகள், ஆன்மிகக் கதைகள், கவிதைகள் என மேற்கோள் காட்டிப் பேசினால் மற்ற மதத்துக்காரர்கள் எப்படி உணர்வார்கள்? இந்த அடிப்படையான நாகரிகம் இன்றி அவர் பேசினார் என்று சொல்வதை விடப் பிடிவாதமாக அப்படிப் பேசுவதே அவரது கட்சியின் சித்தாந்தமாக இருக்கிறது என்று சொல்வது சரியாக இருக்கும். அடுத்து அவர் ஓரிடத்தில் ‘நம் மார்வாரியில் இப்படித்தானே’ என சாதி அடையாளத்தை வேறு சுட்டிக்காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டார். எனில் அவர் யாருக்கான அமைச்சர்? இவரை அடுத்து வந்த இந்துமத வட-இந்தியக் கவிஞர்கள் பெரும்பாலும் கடவுளை வாழ்த்தியே தம் கவிதை வாசிப்பைத் துவங்கினார்கள். சமஸ்கிருதக் கவிஞர் ஒருவர் முழுக்க முழுக்க இந்துமதக் கடவுளர்களை வாழ்த்தியே சுலோகங்களைப் பாடி அமர்ந்தார். நான் வாழ்வது பத்தாம் நூற்றாண்டா அல்லது நவீன காலமா எனச் சற்று நேரம் எனக்குத் தலைசுற்றி விட்டது. இவர்களுக்குப் போட்டியாக்க் காஷ்மீரத்து கவிஞர் ஒருவர் ‘இன்ஷா அல்லா’ சொல்லி ஆரம்பித்தார்.

வடகிழக்கத்தியப் படைப்பாளிகளுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் ஒரு போக்கு உள்ளது – அவர்கள் தமது இனக்குழுவின் அடையாளத்தைக் குறிப்பிட்டு அதன் சடங்கு சம்பிரதாயங்கள், வாழ்மொழி வரலாற்றைப் பேசி மெச்சி விட்டு அமர்வார்கள். இத்தனைக்கும் வடகிழக்கினர் அதிகமாக மேற்கத்திய மரபை வரித்துக் கொண்டவர்கள், நகரங்களில் பரவலாக வசிப்பவர்கள், அங்கு முழுமையான இனக்குழு வாழ்க்கையை வாழ்பவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். ஆனால் பொதுவெளி என்றால் அவர்கள் தம் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து இனக்குழுப் பெருமைகளைப் பாடிவிட்டு அமர்வார்கள். அடுத்த நாளே ஜீன்ஸ் அணிந்து மாலில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இது என்ன விசித்திரமான மனநிலை என்று எனக்குப் புரியவில்லை. வட இந்தியர்களுக்கு வைதீக இந்துமத அரசியல் என்றால், இவர்களுக்கு இனக்குழு பெருமிதவாதம். இந்த நிகழ்விலும் இப்போக்கு தொடர்ந்தது. அதை எக்ஸாட்டிக்காக்க் கண்டு சமவெளி இந்தியர்கள் வழக்கமாக கைத்தட்டுவதும் அன்று தொடர்ந்தது.

தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தவர்களிடம் இயல்பான ஒரு பிராந்திய தேசியவாத உணர்வு இருப்பதை உணர்ந்தேன். அதை அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதில் வெளிப்பட்டது. வடகிழக்கத்தவரிடமோ தாம் ‘இந்தியர்’ என வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருந்தது. குறிப்பாக நேப்பாளி மொழி பேசும் ஒருவரிடம் நான் உங்கள் மாநிலம் எது எனக் கேட்டதும் அவர் “இந்தியா” என்றார்.

கவிதையின் வடிவம், நோக்கத்தைப் பொறுத்தும் வட இந்தியர்களின் படைப்புகள் வானம்பாடி மரபைத் தாண்டி வரவில்லை. தென்னிந்தியக் கவிதைகள் மட்டும் நவீனத் தன்மையுடன் அடக்கமாக ஒலித்தன. உள்ளார்ந்த விசாரணையைக் கொண்டிருந்தன. அவர்களுடைய அலங்காரமான, சந்தம் மிக்க கற்பனாவாதக் கவிதைகளுக்கு இந்தி அறிந்த பார்வையாளர்கள் “வாரே வாஹ், கியா பாத் ஹை” என வரிக்கு வரி சிலாகித்து ஓசையெழுப்ப, கூட்டத்தில் தனித்துணர்ந்த நானும் ஒரு கட்டத்தில் அவர்களுடன் இணைந்து சத்தமாக ‘வாரே வாஹ்’ என்று சிலாகித்துச் சத்தமிட்டு என் எதிர்ப்புணர்வை பகடியாகக் காட்டினேன். ஆனால் அதை அவர்கள்தாம் பகடியாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஆனால், இந்த வேறுபாடுகள் அனைத்தும் நிகழ்ச்சி முடிந்து மாற்றுத்திறனாளிப் படைப்பாளிகள் தத்தமது உடல்களுக்கு மீண்டதும் மறைந்து போயின. எங்களை ஒரு புலப்படாத சக்தி பிணைத்து ஒரே புள்ளிக்குக் கொண்டு வந்தது. இதுதான் நிஜமான வேற்றுமையில் ஒற்றுமையோ என யோசித்தேன். இன்னொரு விசயம் என்னதான் அவர்கள் என் மொழியைப் பேசாதவர்கள் எனினும், அவர்களில் சிலர் என் அரசியலைச் சாராதவர்கள் எனினும், எனக்கு அவர்களுடைய வெள்ளந்தியான சுபாவம் பிடித்திருந்தது. தில்லியில் நான் சந்தித்த பல சாதாரணர்களிடம் ஒரு கனிவு இருந்தது. பெங்களூரில் நான் இங்குக் காணும் மற்றமை உணர்வை, முரட்டுத்தனத்தை, வெறுப்பரசியலை நான் அந்த ஊரில் பார்க்கவில்லை. இந்தச் சூழலில் கன்னடர்களை விட கன்னடர்கள் அல்லாதவர்களே கன்னடப் போலிகளாக, வெறுப்பரசியலைப் பரப்புபவர்களாகத் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் கன்னடத்தைக் கற்றதும் தாய்மொழியை வீட்டுக்குள் ஒளித்து ஒளித்து பேசுவார்கள். வெளியே சட்டென கன்னட தேசியவாதிகளாக பாவனை பண்ணி கன்னடம் பேசாதவர்களை விமர்சிப்பார்கள், வெறுப்பைப் பொழிவார்கள், ‘கன்னடம் கத்துக்காம இருக்கிறது, வேற மொழியில் பேசுறது தடித்தனம்’ என நம்மைக் கண்டிப்பார்கள். அடேய் நீங்கல்லாம் யாருடா எனத் தோன்றும். தில்லியில் நான் இந்தப் பாவனைகளையும் பைத்தியக்காரத்தனங்களையும் பார்க்கவில்லை. இங்கு நீங்கள் இந்தியில் பேசவில்லை என்றாலும், அவர்களுடைய அரசியலுக்கு எதிராக்க் கருத்து சொன்னாலும் அதைக் கேட்டுத் தலையாட்டிவிட்டுக் கடந்து விடுகிறார்கள். சில சூழல்கள் நம்மை இலகுவாக பிறரை ஏற்க வைக்கிறது.

நான் அன்று வாசித்த என்னுடைய கவிதைகளிலும் இதே கருத்தைத் தான் முன்வைத்திருந்தேன். உலகில் உள்ள பல்வேறு பாரபட்சங்கள், ஏற்றத்தாழ்வுகளில் ஒன்றாக ஒரு மாற்றுத்திறனாளி தன் உடல்சார்ந்த அடையாளத்தை வைக்கும் போது அவன் பல ஒடுக்கப்பட்ட குரல்களில் ஒன்றாக. தன்னை மாற்றிக் கொள்ள இயலும் அப்போது அவன் தன் பேதங்களைக் கடந்துவிட முடியும் எனக் கோரியிருந்தேன். அந்தக் கவிதைகளை வாசித்த பின்னர் சிலர் என்னிடம் வந்துத் தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். அக்கவிதைகள் அவர்களை வலுவாக பாதித்திருப்பதையும், நவீன கவிதைகளாலும் ஒரு போலிக் கவிதைச் சந்தை இரைச்சல் சூழலை வெற்றிகொள்ள முடியும் எனப் புரிந்துகொண்டேன். நான் எனக்கே சொல்லிக் கொண்டேன், “க்யா பாத் ஹை!”.