ஆத்தூர், அரசு கலைக்கல்லூரியில் ஓராண்டு முதல்வர் பொறுப்பில் இருந்தேன். பதவி உயர்வு பெறாமல் பொறுப்பில் இருப்போர் முதல்வர் நாற்காலியில் உட்கார்வதில்லை என்னும் முறையை முந்தைய தலைமுறையினர் கடைப்பிடித்தனர். முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்னும் ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தனர் என்றும் சொல்லலாம். அதைப் ‘போலி அடக்கம்’ என்று இப்போது சொல்கிறார்கள். முதல்வர் நாற்காலி காலியாகவே இருக்கும். மேஜையின் பக்கவாட்டில் சாதாரண நாற்காலியைப் போட்டுக்கொண்டு பொறுப்பு முதல்வர் உட்கார்வார். உட்காரும் இடமும் நாற்காலியும் முதல்வரா, பொறுப்பா என்பதைச் சொல்லிவிடும்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்படியல்ல. எப்போது அந்த நாற்காலியில் உட்கார்வோம் என்னும் ஆசையை அடக்க முடியாத மனம் கொண்ட புதிய தலைமுறையினர் ‘முதல்வர் பொறுப்பில் இருப்போர் உட்காரக் கூடாது என்று விதியேதும் இல்லை’ என்று கொஞ்ச நாள் பேசினர். முதல்வர் நாற்காலியை அவ்விடத்திலேயே சற்றே தள்ளி வைத்துவிட்டுப் பக்கத்தில் புதிய நாற்காலி ஒன்றைப் போட்டுக் கொஞ்ச நாள் உட்கார்ந்து பார்த்தனர். இந்தப் போலி அடக்கம் எதற்கு என்று தோன்ற ‘முதல்வர் நாற்காலியில் பொறுப்பும் உட்காரலாம்’ என்று சொல்லிவிட்டு உட்காரத் தொடங்கினர். இப்போது அதுவே நடைமுறையாகி விட்டது. ஆசிரியர்களுக்குள் ஏற்படும் மூத்தோர் – இளையோர் பிரச்சினை நீதிமன்றம் வரை செல்வதுண்டு. வழக்கு முடியும்வரை முதல்வர் பதவி உயர்வு தர முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஓராண்டு, ஈராண்டு கூட பொறுப்பு முதல்வரே கல்லூரியை நடத்தும்படி நேரும்.

பட்டியலில் இருப்போர் எல்லோரும் சேர்ந்து ஒரு தொகையைத் திரட்டிக் கொடுத்தால்தான் பதவி உயர்வு கிட்டும் என்னும் நிலையும் ஏற்பட்டதுண்டு. அதில் சிலர் பணம் கொடுக்க விரும்ப மாட்டார்கள். இயல்பாக வந்தால் போவேன், பணம் கொடுத்துப் பதவி பெற மாட்டேன் என்போரால் தாமதமாவது உண்டு.  நான் பொறுப்பெடுத்துக் கொண்டபோது வழக்கு நடந்து கொண்டிருந்தது. மூத்தோர் இளையோர் பிரச்சினைதான். தன் மாணவர் ஒருவர் தனக்கு முன் முதல்வர் பதவி உயர்வு பெற்றுவிட்டார் என்று வெதும்பிப் பேசியவர்களும் வழக்கு தொடுத்தவர்களில் இருந்தனர். பணியமர்த்தும் போதே சுழற்சித் தரவரிசைப் பட்டியல் சரியாகப் போட்டுவிட்டால் இது எளிதாகத் தீர்ந்துவிடும். ஏனோ அரசு அதைச் செய்வதில்லை. ஆசிரியர்களை மோதவிட்டுப் பார்த்து ரசிப்பது அரசு இயந்திரத்தின் இயல்பு போலும்.

பணிமூப்பில் யார் மூத்தோர், யார் இளையோர் என்னும் குடுமிப்பிடிச் சண்டை ஆசிரியர்களுக்குள் அடிக்கடி நடக்கும். வழக்கு இப்போதைக்கு முடியாது என்பது தெளிவாக இருந்ததால் எப்படியும் ஆறு மாதமேனும் நிதி அதிகாரம் பெற்ற முதல்வராகப் பொறுப்பில் நான் இருந்தாக வேண்டும் என்னும் நிலை. அதையும் கடந்து ஓராண்டு முழுவதும் அப்பொறுப்பு வகித்தேன். பொறுப்பேற்ற நாளில் வாழ்த்துச் சொல்ல வந்த நண்பர்கள் எல்லோரும் முதல்வர் நாற்காலியில் உட்காரும்படி வற்புறுத்தினார்கள். எனக்கு ஏனோ தயக்கமாக இருந்தது.

முதல்வர் பொறுப்பு வகிப்போர் ஓரமாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்து வந்த தலைமுறை நான். அதனால் இருக்கலாம். குஷன் வைத்து முதுகு நீண்டு சிம்மாசனம் போலிருந்த நாற்காலியைப் பார்த்து ஏற்பட்ட பயமும் காரணமாக இருக்கலாம். அரசுப் பணியில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் இருந்த போதும் அரசு அலுவலகம் பற்றிய அச்சம் எனக்குப் போனபாடில்லை. ஓரளவு குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொறுப்பு வகிப்போர் முதல்வர் நாற்காலியிலேயே உட்கார்வதுதான் வழக்கம் என்று சொன்னார்கள். இது கிராமத்துக் கல்லூரி, வரும் பெற்றோர்கள் படிக்காதவர்கள், மாணவர்களும் விவரம் இல்லாதவர்கள், முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தால்தான் மதிப்பார்கள், பக்கத்து நாற்காலியில் இருந்தால் வேறு யாரோ என்று மதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லி என்னைக் கரைக்கப் பார்த்தார்கள்.

ஒருவர் சொன்னார், ‘நாற்காலிக்குத்தான் மதிப்பு. அதில் உட்கார்ந்திருந்தால்தான் ஆசிரியர்களும் மதிப்பார்கள்.’ நாற்காலிக்குத்தான் மதிப்பு என்று சொன்ன சொல்லுக்கு மதிப்புக் கொடுக்காமல் இருக்க முடியுமா? சரி, நாற்காலி ஒரு ஜடப்பொருள்தானே, அதிலென்ன இருக்கிறது என்று ஒருவழியாக உட்கார்ந்து கொண்டேன். உண்மையைத்தான் சொல்கிறேன், நம்புங்கள். எனக்குப் பதவி ஆசை ஏதுமில்லை, எல்லோருடைய வற்புறுத்தலுக்கு இணங்கித்தான் உட்கார்ந்தேன். அதை நாற்காலி என்று சொல்வது பொருத்தமில்லை. சிம்மாசனம். அரசர்  ஆட்சியை ஒழித்துவிட்டோம்; அதன் சின்னமான சிம்மாசனத்தை ஒழிக்க முடியவில்லை. ஜனநாயகத்தில் ஆயிரமாயிரம் சிம்மாசனங்கள்.

ஆனால் அச்சிம்மாசனம் எனக்குக் கொஞ்சம்கூட வசதியாகவே இல்லை. பிளாஸ்டிக் கைப்பிடியில் கைகளை வைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் வேர்த்துவிடும். குஷன் கொண்டது என்பதால் பிருஷ்டமும் வேர்த்து எரிச்சல் எடுக்கும். முதுகுப் பகுதிக்கும் காற்றே வராது. சாய்ந்து ஆசுவாசமாக உட்கார முடியாது. நாற்காலியில் போட்டிருந்த தேங்காய்ப் பூத்துண்டு எத்தனை ஆண்டுகளாகத் துவைக்காதது என்று தெரியவில்லை.  அதை எடுத்து வீசி விட்டேன். வேறு இரண்டு புதிய துண்டுகளைப் போட்டு உட்கார்ந்து பார்த்தேன். முதுகுக்கு ஒன்று; பிருஷ்டத்திற்கு ஒன்று.

அறையில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதன் வேலைத்திறன் குறைவு. சத்தம் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும். குளிர்சாதன வசதி எனக்கு ஒத்துக்கொள்ளவும் செய்யாது. எதற்கு இப்படிச் சிரமப்படுவானேன் என்று தோன்றியது. முதல்வரைப் பார்க்க வருவோர் உட்காரப் பழைய கால மர நாற்காலிகள் இருந்தன. ஒயர் பின்னல் கொண்ட அவை காற்றோட்டம் கொண்டவை; உடலுக்கு உகந்தவை.  என்ன, சிம்மாசனம் போலப் பிரம்மாண்டத் தோற்றம் இல்லை. கல்லூரி தொடங்கிய போது நல்ல தேக்கில் செய்து போட்ட நாற்காலிகள் அவை. ‘புறத்தோற்றம் முக்கியமில்லை; வசதிதான் முக்கியம்’  என்று  எனக்குள்ளாகவே ஓரிரு நாள் சொல்லிச் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு சிம்மாசனத்திலிருந்து இறங்கினேன்.

இப்போதைய நாற்காலி சாதாரணமானது, பழையது, மர நாற்காலி. நாற்காலியை மாற்றியதைப் பார்த்து ஒவ்வொருவரும் துக்கம் விசாரித்தனர். அதில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிம்மாசனத்தை எங்கே போடுவது என்பது ஒரு பிரச்சினை. முதல்வருக்கு எதிரில் போட்டால் யாரும் உட்கார மாட்டார்கள். அதைப் பயன்படுத்தாமல் கிடங்குக்குள் போடவும் வேண்டாம் என்று நினைத்தேன். முதல்வர் அறைக்கு வெளியே போட்டு விடலாம் என்று தோன்றியது. பெரிய மேஜைக்குப் பின்னால் அது கிடந்த போது காட்டிய தோற்றத்திற்கும் வெளியே வந்த பின்னால் அது காட்டிய தோற்றத்திற்கும் பெருத்த வேறுபாடு தெரிந்தது. குஸ்திக்கு அழைத்த வீராவேச காலம் முடிந்து ஓய்வெடுக்கும் பழைய பயில்வான் போன்ற தோற்றம் எனலாம்.

கல்லூரியில் மட்டுமல்ல, அரசு அலுவலகங்களில் அமர்வதற்கு ஓரிடமோ நாற்காலியோ அற்றவர்கள் அலுவலக உதவியாளர்கள்தான். எப்போதும் நின்றுகொண்டோ நடந்துகொண்டோ இருப்பார்கள். வேலை இல்லாத போது உட்காரலாம் என்றால் இருக்கை கிடையாது. அரசு அலுவலர் ஒருவருக்கு இருக்கையே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். தங்கள் சாப்பாட்டுப் பையை வைப்பதற்குக் கூட அவர்களுக்கென்று தனியிடம் இல்லை. ஒருகாலத்தில் அவர்களைப் பியூன் என்னும் பெயரால் அழைத்தார்கள். அதை மாற்ற வேண்டும் என்று போராடிப் பெற்ற பதவிப் பெயர்தான் ‘அலுவலக உதவியாளர் (OA – Office Assistant). ஆனால் அவர்களுக்கு யாரும் இருக்கை பெற்றுத் தரவில்லை.

முதல்வர் அறைக்கு முன் உட்கார வேண்டும் என்று நான் சொன்னதால் எங்கிருந்தோ ஒரு ஸ்டூலைக் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அதற்கு அருகில் இந்தச் சிம்மாசனத்தைப் போடச் சொன்னேன். சிம்மாசனத்தில் யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். குறிப்பாக, அலுவலக  உதவியாளர்கள் தாராளமாக உட்காரலாம் என்று சொன்னேன். மாணவர்கள் உட்காரலாம். பார்வையாளர்கள் உட்காரலாம். யாருக்கெல்லாம் அதில் உட்கார வேண்டும் என்று ஆசையிருக்கிறதோ அவர்கள் எல்லாம் தாராளமாக உட்காரலாம். என் அறிவிப்பைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

அலுவலக உதவியாளராக இருந்த மூவரும் ‘நாங்கெல்லாம் உக்கார மாட்டோம்’ என்று ஒரே குரலில் சொன்னார்கள். அந்த நாற்காலியின் வடிவம் கொடுத்த அச்சத்தில் யாரும் அதில் உட்காரவே இல்லை. ஆசிரியர்கள் சிலர் ‘உதவியாளருக்கு நாற்காலி வேண்டாம் சார்’ என்றும் ‘அதுவும் இந்த நாற்காலி வேண்டாம்’ என்றும் சொன்னார்கள். ‘அது ஒரு ஜடப்பொருள் தானே. அதற்கு நாம்தான் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோம். ஆனால் யார் உட்கார்ந்தாலும் அது ஒன்றும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளும்’ என்றெல்லாம் சொன்னேன். அவர்கள் புரிந்தும் புரியாமல் சென்றார்கள். எழுத்தாளர்களுக்குக் கொஞ்சம் கிறுக்கு இருக்கும், இவர் பெரிய கிறுக்கு போல என்று நினைத்திருப்பார்கள்.

முதல்வரின் உதவியாளராக இருந்த தேவராஜிடம் ‘அதுல உக்காருங்க. இல்லீனா உக்காரணும்னு ஆர்டர் போட்டிருவன்’ என்று மிரட்டிப் பார்த்தேன். அவர் மசியவில்லை. அது மட்டுமல்லாமல் ‘ஐயா, எங்களால சாதாரண நாற்காலியிலேயே உட்கார முடியாதுங்கய்யா. ஸ்டூல்ல உக்காரும் போதே தூரத்துல ஒரு ஆசிரியர் தலை தெரிஞ்சா ஒடனே எந்திரிச்சு நிக்கணும். ஆபீஸ் ஸ்டாப் யாராச்சும் வந்தா ஒடனே எந்திரிச்சு நிக்கணும். நீங்களும் அடிக்கடி மணியடிச்சுக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க. எந்திரிக்காத இருந்தா மரியாத கொடுக்கலீன்னு திட்டுவாங்க. எங்களால உக்காரவே முடியாதுங்கய்யா. அதுவும் நீங்க போட்டிருக்கற நாற்காலியில எப்படிங்கய்யா நாங்க உட்கார முடியும்?’ என்று விளக்கமாகச் சொன்னார்.

அவர் சொன்னவை எல்லாம் நியாயமானவை. இந்த ‘மரியாதை’ என்னும் விஷயம் ஒருவரை எப்படியெல்லாமோ தொந்தரவு செய்கிறது. ஆசுவாசமாகச் சில நிமிடம் உட்காரக்கூட அது அனுமதிப்பதில்லை. தம்மைவிட உயர்ந்த பதவி வகிப்பவர் வந்தால் எழுந்து நிற்க வேண்டும் என்பது யார் கொண்டு வந்த விதி? அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தால் என்ன? ஒருவரைப் பார்த்ததும் எழுந்து நிற்க வேண்டும் என்பது சாதிய சமூக வழக்கத்தின் எச்சம்தானோ? இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில் இன்னொரு விஷயம் நடந்தது.

துறைத்தலைவர்களை எல்லாம் கொண்ட கல்லூரி ஆட்சிக்குழு என ஒன்றுண்டு.  கல்லூரி சார்ந்த பல விஷயங்களை முடிவெடுப்பதற்கு முன் ஆட்சிக்குழுவில் விவாதிக்க வேண்டும். அப்படி ஒருநாள் ஆட்சிக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது. வெளியே சென்ற துறைத்தலைவர்கள் எல்லோரும் கூடிப் பேசிவிட்டு மீண்டும் முதல்வர் அறைக்குள் வந்தனர். ‘ஐயா, ஒரு வேண்டுகோள்’ என்றார்கள். என்னவென்று கேட்டேன். வெளியே போட்டிருக்கும் முதல்வர் நாற்காலியை அங்கிருந்து எடுத்துவிட வேண்டும் என்றார்கள். தனக்குப் பிடித்த முதல்வர்கள் இருவர் பெயரைச் சொல்லி ‘அவர்கள் எல்லாம் அமர்ந்திருந்த அந்த நாற்காலியை நீங்கள் வெளியே போட்டிருக்கக் கூடாது, ஐயா’ என்றார் ஒருவர். அழுவது போல அவர் முகம் இருந்தது. அந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த முதல்வர்கள் பலர் இப்போதும் வாழ்ந்திருந்தனர். ஏதாவது வேலையாகக் கல்லூரிக்கு அவர்கள் வரும்போது தாம் உட்கார்ந்திருந்த நாற்காலி வெளியே கிடப்பதைப் பார்த்தால் மனம் நோவார்கள் அல்லவா என்று ஒருவர் விளக்கினார்.

‘முதல்வர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலியை உதவியாளர்களுக்குப் போட்டிருப்பதைப் பார்த்து என் மனம் தாங்கவில்லை’ என்றார் இன்னொருவர். சில ஆண்டுகளுக்குள் முதல்வர் பதவி தமக்கு வரும் என்னும் எதிர்பார்ப்புடன் இருப்பவர் அவர். ‘உங்களுக்குப் பிடிக்கலன்னா, நீங்க உட்கார வேண்டாம். முதல்வர் அறைக்குள்ளேயே ஒருமூலையில போட்டு வைங்க. அடுத்து வர்ற முதல்வர் அதுல உட்கார விரும்பலாமே’ என்றார் ஒருவர். அக்கல்லூரியிலேயே பல்லாண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒருவர் அந்நாற்காலி எப்போது வாங்கியது, எந்த நிதியில் வாங்கியது, வாங்கிய முதல்வர் யார், புதிய நாற்காலியில் உட்கார்ந்து அவர் எப்படிச் சந்தோசப்பட்டார் என்பதை எல்லாம் விளக்கி விரிவுரையாற்றத் தொடங்கினார்.

‘சரி, நான் என்ன செய்யணும் சொல்லுங்க’ என்றேன். முதல்வர் வழிக்கு வந்துவிட்டார் என்பதை அறிந்து அந்த நாற்காலியைப் போட்டு வைக்க ஆளுக்கொரு இடத்தைச் சொன்னார்கள். முதல்வர் அறைக்குள்ளேயே ஓரிடத்தை ஒருமித்து முடிவு செய்து அதைக் கொண்டு வந்து உள்ளே போட்டுவிட்டோம். சில வாரங்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த காரியத்தைச் சாதித்துவிட்ட வெற்றிப் பெருமிதத்தோடு அவர்கள் கிளம்பினர். அந்தச் சிம்மாசனத்தில்தான்  அமர வேண்டும் என்று என்னை வற்புறுத்தாத வரைக்கும் நல்லது என்றெண்ணிப் பெருமூச்சு விட்டேன். அனிச்சையாகப் பிருஷ்டத்தை என் கை தொட்டுப் பார்த்துக் கொண்டது. நாற்காலி என்பது வெறும் ஜடப்பொருள்தான் என்பதில் சிறிதும் உண்மையில்லை.

—–