நக்ஸல்பாரி எழுச்சியை அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை ஒருங்கிணைத்து சாரு மஜும்தார் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கிய போது ஒரு குழு அதில் இணையாமல் வெளியே நின்றது. புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்பு என்பது இப்படித் தலைமை மட்டத்தில் நடக்கக் கூடாது, பல்வேறு கட்டங்களாகக் கட்சிகளின் ஒவ்வொரு மட்டத்திலும் நடைபெற வேண்டுமென்ற கருத்து கொண்டிருந்த இந்தக் குழு தக்‌ஷின் தேஷ் குழு என்று அது வெளியிட்ட இதழின் பெயரில் அழைக்கப்பட்டது. சீனா வடக்கு தேசம் என்றும், இந்தியா தெற்கு தேசம் என்றும் இந்த அமைப்பு வகைப்படுத்தியதால் இந்தப் பெயர். அமூல்ய சென், கனாய் சட்டர்ஜி ஆகியோர் இக்குழுவுக்குத் தலைமை வகித்தனர். இக்குழு முதலில் இருந்தே தனிநபர் அழித்தொழிப்பை அடிப்படையாகக் கொண்ட சாருவின் பாதையைப் பயங்கரவாதம் என்று வரையறுத்திருந்தது. முதலில் மேற்கு வங்காளத்தின் பார்துவான், ஜங்கல் மஹால் பகுதிகளில் பணிபுரிந்த இந்தக் குழு பின்னர் பிஹாருக்குத் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.

1975 ஆம் ஆண்டு இக்குழு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டர் என்று பெயர் சூட்டிக் கொண்டு ஒரு கட்சியாக மாறியது. இக்கட்சியானது அரசியல் ராணுவக் குழுக்களை உருவாக்கி கிழக்கு பிஹாரின் கயா, ஜெஹானாபாத், பலமு மாவட்டங்களில் ஆதரவுத் தளங்களை உருவாக்கியது. மிகவிரைவில் ஐநூறு முழு நேர ஊழியர்களையும், பத்தாயிரம் பகுதி நேர ஊழியர்களையும் கொண்டதாக எம்சிசி வளர்ச்சி பெற்றது.  புரட்சிகர விவசாயிகள் கமிட்டிகள், ஜன சுரக்‌ஷா சங்கர்ஷ் மஞ்ச்,  கிரந்திகாரி புத்திஜீவி சங்க், கிரந்திகாரி சத்ரா லீக் ஆகிய அமைப்புகளையும், லால் ரக்‌ஷா தல் என்ற ஆயுதப் படையையும் நிறுவியது.

பிஹாரின் மத்தியப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், தலித்துகள் மீது மிகக் குரூரமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு வந்தது. அப்போது ஆளும் கட்சியாகவிருந்த காங்கிரஸ் கட்சியில் பூமிஹார், ராஜ்புட் சாதிகளைச் சேர்ந்த பெருநிலப்பிரபுக்களே ஆதிக்கம் செலுத்தினர். வினோபா நடத்திய பூதான் இயக்கம் எல்லா இடங்களைப் போலவே இங்கும் முற்றிலும் தோல்வியடைந்தது. தலித்துகள் பெரும்பாலும் இந்த நிலப்பிரபுக்களிடம் பண்ணையடிமைகளாகவே இருந்தனர். அடுத்த பெரிய சாதியான யாதவ்களும் இந்த நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டு வந்தனர். போஜ்பூர் போன்ற பல இடங்களில் யாதவ் சாதியினரும் தலித்துகளும் இணைந்து பெருநிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராடி வந்தனர்.

தலித்துகள் வெள்ளை வேட்டி அணிவது இங்கே தடை செய்யப்பட்டிருந்தது. இங்கு நிலவிய அடக்குமுறைகளிலேயே மிகக் குரூரமானது டோலா ப்ரதா ( Dola pratha ) என்ற வழக்கமாகும். இந்த டோலா ப்ரதா வழக்கப்படி புதிதாகத் திருமணமான தலித் மணமகள் முதலிரவை புமிஹார் நிலப்பிரபுவின் வீட்டில் கழிக்க வேண்டும். இது தலித்துகளுக்கு அவர்களது உடல்கூட சொந்தமில்லை என்று நிறுவும் வழக்கமாகும்.

பலமு மாவட்டத்தில் தலித் ஆண்களிடமே அவர்கள் மனைவிகளையும் மகள்களையும் தங்கள் மாளிகைகளுக்கு அனுப்பிவைக்கக் கேட்கும் வழக்கமும் இருந்தது. தலித்துகள் ஏதேனும் தவறிழைத்து விட்டால் அதற்குத் தண்டனையாகப் பெண்களை அவர்கள் குடும்ப உறுப்பினர் முன்னால் பாலியல் வன்முறை செய்யும் வழக்கமும் இருந்தது. அடுத்த நாள் உயிர்வாழ்வதற்குப் போதுமான அளவே தலித் மக்களுக்கு ஊதியமாகத் தானியம் வழங்கப்பட்டு வந்தது. பத்து வயதிலிருந்தே தலித் மக்கள் ஆண்டைகளின் வயல்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. இது பெரும்பாலும் கட்டாய, கூலியில்லாத உழைப்பாகும்.

எல்லா நிலப்பிரபுக்களும் பெரும் எண்ணிக்கையிலான அடியாட்படைகளைக் கொண்டிருந்தனர். இந்தப் படைகள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொண்டவையாக இருந்தன. பிஹாரில் காங்கிரஸ் கட்சி உட்பட  அனைத்து அரசியல் கட்சிகளும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் இயங்கும் தனியார் படைகளாகவே செயல்பட்டு வந்தன. நக்ஸல்பாரி கட்சி மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைக் கோரும் எல்லாக் கட்சிகளும் ஆயுதம் ஏந்தியே செயல்பட வேண்டிய சூழ்நிலையே பெரும்பாலான இந்தியக் கிராமப் புறங்களில் நிலவியது. அது பிஹாரில் இன்னும் கொடுமையான வடிவம் கொண்டிருந்தது.

தேர்தல்களின் போது வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களின் வீடுகளிலேயே அமைக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் அடியாள்களே அனைத்து வாக்குகளையும் போட்டுவிடும் வழக்கம் பரவலாக இருந்தது. தலித்துகள் வாக்களிக்கவே அனுமதிக்கப்படவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் பிஹாரில் நக்சலைட்டுகள் கால்வைத்ததும் தனிநபர் அழித்தொழிப்பு என்ற அரசியல் நடைமுறையைப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையே இல்லாமல் இருபக்கமும் மாறிமாறிக் கொலைகள் நடந்தன. போஜ்பூர் போன்ற இடங்களில் நக்சல் இயக்கம் நிலப்பிரபுக்களை ஒழித்துக் கட்டும் அளவுக்கு வலிமை பெற்றதும், அரசு நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக்க் களம் இறங்கிப் போராளிகளைக் கொன்று குவித்து, இயக்கத்தை அடக்கி ஒடுக்கி நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைக் காப்பாற்றியது.

1974 ஆம் ஆண்டிலிருந்தே மத்திய பிஹாரில் மேல்சாதி ஆயுதப் படைகளை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கின. ஆர் எஸ் எஸ் இந்தப் படைகளுக்கு பயிற்சி முகாம்கள் அமைத்து ஆயுதப் பயிற்சியளித்தது என்று Towards a new dawn இணைய இதழ் கூறுகிறது.

1974-75 இல் குன்வர் சேனா என்ற மேல்சாதிப் படை உருவாக்கப்பட்டு அதன் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் குன்வர் சேனாதான் பெராத், ஏக்வாரி, பூலாரி ஆகிய பகுதிகளில் தலித் மக்கள் குடியிருப்புகளைத் தாக்கிப் படுகொலைகளை நடத்தியது.

மே 28, 1975 அன்று பிஹார் போலீசின் நக்சல் செல் டி ஐ ஜி சிவாஜி பிரசாத் சிங் “ போஜ்பூர்ப் பாட்னா பகுதிகளில் உள்ள எல்லா ஆரோக்கியமான நபர்களுக்கும் நக்சலைட்டுகளை எதிர்த்துப் போராட அரசு ஆயுதங்களும் பயிற்சியும் அளிக்கும்” என்று அறிவித்தார். அவர் கலெக்டர்கள் கிராமம் கிராமமாகச் சென்று தகுதி வாய்ந்த நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆயுத லைசன்ஸ்சுகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். போஜ்பூரில் நிலப்பிரபுக்களின் மகன்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையம் ஒன்றை அப்போதைய பிஹார் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா ரகசியமாகத் திறந்து வைத்தார்.

இவ்வாறு அரசின் உதவியுடன் நக்சலைட்டுகளை எதிர்கொள்ள உயர்சாதி நிலப்பிரபுக்கள் குன்வர் சேனா, சன்லைட் சேனா, சவர்ன லிபரெசன் பிரண்ட், பிரம்மரிஷி சேனா, பூமி சேனா  ஆகிய படைகளை உருவாக்கினர். இந்தப்  பூமிஹார், ராஜ்புட் சாதிகளின் ஒவ்வொரு உட்பிரிவும் தனக்கான தனி ஆயுதப்படையைக் கொண்டிருந்தது.

தற்காலிகத் தோல்விகள் ஏற்பட்டாலும் நக்சலைட்டுகளின் தலைமையில் நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராட முடியும், அவர்களைப் பீதிக்குள்ளாக்க முடியும், விரட்டியடிக்கவும், ஒழித்துக் கட்டவும் முடியும் என்று கண்டுகொண்ட மக்கள் வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் பதில் தாக்குதல் நடத்தினர். லிபரேஷன், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டர், பார்ட்டி யுனிட்டி ஆகிய நக்சல் அமைப்புகளில் திரண்டனர்.

1971 ஆம் ஆண்டு ராஜ்புட் நிலப்பிரபுக்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பதினான்கு சந்தால் விவசாயக் கூலிகளை சுட்டும் வெட்டியும் கொன்றனர். பின்பு இது போன்றப் படுகொலைகள் வழக்கமாகின. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாவட்டத்தில், ஒரு கிராமத்தில் இது போன்றக் கூட்டக் கொலை நிகழ்த்தப்படுவது தவறாமல் நடந்தது. மேல்சாதி தனியார் ஆயுதப்படைகள் உருவான பின்பு இந்தப் படுகொலைகள் மிகவும் அதிகரித்தன. 1980 இல் பராச்பிகா என்ற இடத்தில் 11 யாதவ மக்கள் பூமிஹார்களால் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு பிரா என்ற இடத்தில் ஐந்து முஷாஹர் பிரிவு மக்கள் இந்தப் படையால் கொல்லப்பட்டனர். 1982ல் கைனி என்ற இடத்தில் , ஏழு தலித்துகள் கொல்லப்பட்டனர். முங்கேர் என்ற இடத்தில் ஐந்து தலித்துகள் கொல்லப்பட்டனர். 1986ல் பதினைந்து தலித்துகள் கன்சரா என்ற இடத்தில் கொல்லப்பட்டனர். வெளியுலகின் கவனத்துக்கு வந்த நிகழ்வுகள் இவை.

இப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி உழைக்கும் மக்கள் அமைப்பாகத் திரண்டதற்காகவும், தங்கள் உரிமைகளைக் கேட்டதற்காகவும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இவ்வளவு படுகொலைகள் நடந்த போதும், கொடுமையான அடக்குமுறைக்கு நடுவிலும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தைச் சேர்ந்த நக்சலைட்டுகள் கயா, பலமு, அவுரங்காபாத் பகுதியில் கிராம மக்கள் கமிட்டிகள் அமைப்பதில் வெற்றி கண்டனர். இந்தக் கமிட்டிகள் ரகசியமாகவே இயங்க வேண்டியிருந்தது. இவை மக்கள் நீதிமன்றங்கள் நடத்தின. மக்களிடமிருந்து நன்கொடை வசூலித்தன. பாதுகாப்புக் குழுக்கள் அமைத்து போலீசின் நடவடிக்கையைக் கண்காணித்தன. பாட்னா அதிகாரிகள் இந்தப் பகுதிகளில் போட்டி அரசாங்கம் நிலவுவதாகக் கூறினர்.

போர்க்குணம் கொண்ட கிராம இளைஞர்கள் எம் சி சி அமைப்பில் இணைவது தொடர்ந்து அதிகரித்து வந்தது.  1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம்தேதி அவுரங்காபாத் மாவட்டத்தில் பரஸ்டிஹ் கிராமத்தில் பாங்காலி சிங் என்ற நிலப்பிரபுவின் ஆள்கள் ஒரு தலித் குடியிருப்பைத் தாக்கி ஆறுபேரைக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்ட்டர் அமைப்பைச் சேர்ந்த மக்கள் கூட்டமாகத் திரண்டு கொலைக்குக் காரணமான நிலப்பிரபுவின் வீட்டைத் தாக்கினர். பத்துக்கும் மேற்பட்ட நிலப்பிரபுவின் உறவினர்கள் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டர் அமைப்பு கட்சிக் குழுக்கள், ஆயுதக் குழுக்களின் நடவடிகைகளை விட மக்கள் நேரடியாகச் செயல்படுவதை ஊக்குவித்து வந்தது. இதன் காரணமாக மக்கள் அணிதிரண்டு தாக்குதல் நடத்தும் போது தடுப்பதற்கான சாத்தியங்கள் கட்சிக்கு இல்லாமலிருந்தன. கோபம் கொண்ட மக்கள் நிலப்பிரபுக்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தே கொன்றனர். கட்சி உறுப்பினர்களை விட உள்ளூர் மக்களும், உறவினர்களைப் பலி கொடுத்தவர்களும் தாக்குதலில் முன்னின்றனர்.

இது எம் சி சி அமைப்பிலும் பொதுவான நக்சல் ஆதரவாளர் நடுவிலும் கடும் விவாதங்களை உருவாகியது. எம் சி சி இந்த மக்கள் திரளின் நடவடிக்கைகளைத் திட்டமிட்ட ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

அதுவரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிலப்பிரபுக்கள் கூட்டப் படுகொலைகளில் ஈடுபடும் போது நக்சல் அமைப்புகள் அக்குறிப்பிட்ட நிலப்பிரபுக்களையும் அவர்களது அடியாள்களையும் பிடித்து வந்து மக்கள் நீதிமன்றங்களில் நிறுத்தி அழித்தொழிப்பது வழக்கம். பிஹாரில் இது முற்றிலும் வேறுவிதமாக அமைந்ததற்கு அங்கு நிலவிய தனித்துவமான சாதி அமைப்பே காரணம் என்று செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். உத்திரப் பிரதேசத்தில் பூலான் தேவி இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக 20 ராஜ்புட் கொள்ளைக்காரர்களைச் சுட்டுக் கொன்றார். இதன் தாக்கம் வட இந்தியா முழுவதிலும் எதிரொலித்தது.  நிலப்பிரபுக்கள், உயர் சாதியினரை எதிர்த்த போராட்டத்தில் பூலான் தேவியின் தாக்குதல் பெருமளவுக்குச் செல்வாக்கு செலுத்தியது. பொதுமக்கள் நடத்திய தாக்குதலுக்கு இதுவும் ஒரு ஊக்கியாக அமைந்தது.

அடுத்த ஆண்டு செச்சானி என்ற கிராமத்தில் ராஜ்புட் நிலப்பிரபுக்கள் ஏழு யாதவ் சாதியினரைக் கொன்றனர்.  பகுவாரா-தலேல்சக் கிராமம் உயர்சாதி நிலப்பிரபுத்துவ படைகளின் முக்கியத் தளமாக இருந்தது. அதை மையமாகக் கொண்டே நிலப்பிரபுக்கள் சுற்றுப் புற கிராமங்களின் உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். அதே ஆண்டு மே 29 ஆம் தேதி எம் சி சி அமைப்பினர் அந்தக் கிராமத்தைத் தாக்கினர். 41 ராஜ்புட் சாதியினர் கொல்லப்பட்டனர். அந்தக் கிராமத்திலிருந்த ஒவ்வொரு ராஜ்புட் வீடும் எரிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவிய ஒரு தலித் டிராக்டரின் ஸ்டீர்ங் வீலில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

செச்சானி தாக்குதல் பிஹாரின் உயர்சாதியினரிடையே சொல்ல முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த உயர்சாதியினரின் படைகள் ரண்வீர் சேனா என்ற பெயரில் இணைந்து ஆயிரக்கணக்கானோரைக் கொண்ட வலிமை வாய்ந்த படையாக மாறியது. இவ்வாறு உயர்சாதிப் படைகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியவர் பீஷ்ம நாராயண் சிங் என்பவராவார். அவரது இந்தச் சேவைக்காக அவருக்குத் தமிழ் நாட்டு கவர்னர் பதவியை வழங்கி கௌரவித்தது காங்கிரஸ் அரசு.

இத்தனைக்கும் எம் சி சியோ பார்ட்டி யுனிட்டியோ லிபரேஷனோ நிலப்பிரபுக்களின் நிலத்தைக் கேட்கவில்லை. நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும், பாலியல் சுரண்டல்கள், வன்முறைகள் ஆகியவற்றுக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்றே கோரினர்.

எம் சி சி நடத்திய பகுவாரா தலேல்சக் தாக்குதலுக்குப் பிறகு ஓராண்டு காலம் அமைதி நிலவியது. நாடு முழுவதும் நக்சலைட்டுகள் சாதியவாதிகளாகிவிட்டனர் என்ற பிரச்சாரம் எல்லா அரசு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டது. பின்பு வழக்கமான நிலைமை திரும்பியது. 1989லிருந்து 1991 வரை நூற்றுக்கணக்கான தலித்துகள் ரண்வீர் சேனாவால் கொல்லப்பட்டனர்.

பதிலடியாக எம் சி சி கட்சியானது பாரா என்ற ரண்வீர் சேனா கிராமத்தைத் தாக்கியது. இந்தக் காலகட்டத்தில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்ட்ருக்கும் மக்கள் யுத்தக் கட்சிக்கும் இடையே தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. எம் சி சி அமைப்பின் உறுப்பினர்கள் பாரா கிராமத்தைச் சுற்றி வளைத்துத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 34 ரண்வீர் சேனாவைச் சேர்ந்த பூமிஹார் சாதியினரைப் பிடித்து ஒரு கால்வாய்க்குக் கொண்டு சென்று கழுத்தை அறுத்துக் கொன்றனர். பின்பு பழிக்குப் பழி, வர்க்க விரோதிகளைத் துண்டு துண்டாக்குவோம் என்று முழங்கியபடி கிராமத் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர்.

அடுத்த சில ஆண்டுகளில் ரண்வீர் சேனா கொலைவெறித் தாண்டவம் ஆடியது. எம் சி சியும், பார்ட்டி யுனிட்டி என்ற நக்சல் அமைப்பும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தினர். மெல்ல மெல்ல நக்சல் செல்வாக்குப் பிரதேசங்களில் ரண்வீர் சேனாவின் ஆதிக்கத்தில் உள்ள கிராமங்கள் தனித் தீவுகளாக ஒதுக்கப்பட்டன. ரண்வீர் சேனாவின் பலம் தொடர்ந்து குறைந்து வந்தது.

எண்பதுகள் முழுக்கத் தொடர்ந்து நடந்து வந்த படுகொலைகளின் காரணமாக பிஹார் அரசியலில் மாற்றம் செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் நக்சல் ஆதிக்கம் பரவிவிடும் என்ற அச்சம் ஆளும் வர்க்கங்களுக்குத் தோன்றியது.

1989-90 ஆம் ஆண்டுகளில் வி பி சிங் ஆட்சியில் இடைநிலைச் சாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உபி, பிஹாரில் யாதவ் போன்ற இடைநிலைச் சாதிகளிடையே இது பெரிய அளவுக்கு அரசியலுணர்வை ஏற்படுத்தியது. பல புதிய கட்சிகள் சமூக நீதியின் அடிப்படையில்  தோன்றின.

நக்சல்களுடன் தொடர்ந்து நடந்த மோதல்களில் பூமிஹார், ராஜ்புட் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் பெரிய அளவுக்குச் சிதறிப் போனது. அவர்களால் முன்பைப் போலத் தேர்தலைத் தங்கள் இரும்புப் பிடியில் வைத்து அரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரு முதலாளிகளும், அதிகார வர்க்கமும் மிகவும் பிற்போக்கான காங்கிரசுக்குப் பதில் சமூக நீதி பேசிய கட்சிகளால் நக்சல் வளர்ச்சியைச் சமாளிக்க முடியும் என்று கருதின. இவற்றின் காரணமாக லல்லு பிரசாத் யாதவ் 1990 ஆம் ஆண்டு பிஹாரின் முதலமைச்சரானார்.

யாதவ் சாதியைச் சேர்ந்த லல்லு பிரசாத் யாதவ், ரண்வீர் சேனாவை ஆதரித்து அதன் மூலம் கிராமப் புறங்களில் ஆதிக்கம் செலுத்த பெரிய அக்கறை காட்டவில்லை. ரண்வீர் சேனா பலமடைந்தால் அது காங்கிரஸை பலப்படுத்தும் என்று லாலு கருதினார். எனவே ரண்வீர் சேனா நக்சல் போரில் தலையிடாமல் இருந்து விட்டாலே போதும் நக்சல்கள் ரண்வீர் சேனாவை அழித்து விடுவார்கள் என்று அரசு எதிர்பார்த்தது. இதுவும் ரண்வீர் சேனா பலவீனப்படக் காரணமாக அமைந்தது. ரண்வீர் சேனாவுடனான நக்சல் அமைப்புகளின் முரண்பாடும் படுகொலைகளும் விட்டுவிட்டுத் தொடர்ந்தன. ரண்வீர் சேனா ஒழிக்கப்பட்ட பின்பே பிஹார் அரசு நேரடியாக நக்சல் அமைப்புகளின் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியது.

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்த அதே நிலைமையை பிஹாரில் எம் சி சி சந்தித்தது. மக்கள் யுத்தக் கட்சி நெருக்கடியைக் கையாண்ட அதே வழியில் கங்கைச் சமவெளிக்குத் தெற்கே இருந்த சோட்டா நாகபுரி பீடபூமி என்றழைக்கப்பட்ட பழங்குடிப் பகுதிக்கு பின்வாங்குவது என்று கட்சி முடிவு செய்தது.

எம் சி சி அமைப்பானது சோட்டா நாகபுரி பழங்குடிப் பகுதிகளில் அரசியல் பணிசெய்யத் தொடங்கியது. அங்கு ஏற்கெனவே பழங்குடி மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் ஜார்கண்ட் என்ற தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற அமைப்புகள் இதற்காகப் போராடி வந்தன.

பிஜேபி கட்சியானது 1988 ஆம் ஆண்டு பிஹாரைப் பிரித்து வனாஞ்சல் என்ற பழங்குடி மக்களுக்கான மாநிலம் அமைக்க வேண்டும் என்று தீர்மானித்தது. பிஜேபி நீண்டகாலமாகவே பெரிய மாநிலங்கள் உடைக்கப்பட்டு சிறிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதே அவற்றை நிர்வகிக்கச் சிறந்த வழி என்று கூறிவந்தது. தெலங்கானா, ஜார்கண்ட் போன்ற கனிம வளம் மிகுந்த பகுதிகள் தனி மாநிலங்கள் ஆக்கப்படுவது கார்ப்பரேட் வளர்ச்சிக்கு ஏற்றதும் நக்சல் பிரச்சினையைச் சமாளிக்க ஏதுவானதும் ஆகும் என்று ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினர் கருதினர். இந்தப் போராட்டங்களை ஆதரிக்கவும் செய்தனர்.

———————————————–

1982 ஆம் ஆண்டு உருவான பார்ட்டி யுனிட்டி என்ற நக்சல் அமைப்பு பிஹாரின் அவுரங்காபாத், நாலந்தா, நவாடா, கயா, ஜெனானாபாத் ஆகிய பகுதிகளில் பணி செய்யத் தொடங்கியது. இந்த அமைப்பும் ஏறக்குறைய எம் சி சியின் பாதையையே பின்பற்றி வந்தது. பல மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கியிருந்தாலும் ஆயுதக் குழுக்களைக் கொண்டே ரண்வீர் சேனா போன்ற அமைப்புகளைச் சமாளிக்க முடியும் என்ற நிலை இருந்ததால் செங்குழுக்கள் என்ற படைப்பிரிவுகளை உருவாக்கியது.

மஸ்தூர் கிஸான் சங்க்ராம் சமிதி ( MKSS ) என்ற பலம் வாய்ந்த தொழிற்சங்கத்தை பார்ட்டி யூனிட்டி கட்டியெழுப்பியது. இந்தச் சங்கம் விவசாயக் கூலிகளின் சம்பள உயர்வுக்காகப் போராடியதுடன், அனைத்து சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நின்றது. சிறுவனப் பொருட்கள் சேகரிக்க மக்களுக்குச் சட்டபூர்வ உரிமை இருந்தாலும் நடைமுறையில் அதை நிலப்பிரபுக்களும் வனத்துறையுமே பிடுங்கிக் கொள்வது வழக்கம். சங்கம் மக்களுக்குச் சிறுவனப்பொருட்கள் சேகரிக்கும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடியது. இந்த நிகழ்ச்சிப் போக்கில் சங்கத்தை உள்ளூர் நிலப்பிரபுக்களும் போலீசும், வனத்துறையும் கடுமையாக வெறுத்தன.

1986 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எம் கே எஸ் எஸ் அமைப்பானது இந்தத் தனியார் படைகளுக்கு எதிராக ஒருமாதகால போராட்ட நிகழ்வை முன்னெடுத்தது. பல்லாயிரம் மக்கள் பங்கு கொண்ட பல பேரணிகள் நடத்தப்பட்டன. இவ்வளவு பெரிய மக்கள் திரளை நேரடியாக எதிர்கொள்ளத் தனியார் படைகள் தயங்கியதால் அரசு நேரடியாகத் தலையிட்டது என்கிறார் நீலாஞனா தத்தா என்ற பத்திரிகையாளர்.

ஏப்ரல் 19, 1986 ஆம் ஆண்டு ஜெஹானாபாத் மாவட்டத்தின் அர்வால் பகுதியில் ஒரு பணம்படைத்த விவசாயி போலீஸ் ஆதரவுடன் ஒன்பது ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தார். அந்த இடத்தில் பல நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் வசித்து வந்தன. ஆக்கிரமித்தவர் அந்தக் குடும்பங்களை போலீஸ் உதவியுடன் அங்கிருந்து விரட்டிவிட்டு அந்த நிலத்தைச் சுற்றி வேலி எழுப்பினார். மஸ்தூர் கிஸான் சமிதியைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகள் அதற்கு எதிராக வேலியை நோக்கி ஊர்வலம் சென்றனர். காந்தி நூலகம் அருகே வரும் போது அவர்கள் மீது போலீஸ் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் நக்சலைட்டுகள், போலீஸ் மீது துப்பாக்கிகளுடன் தாக்குதல் நடத்தினர் என்று காங்கிரஸ் முதல்வர் பிந்தேஸ்வரி டுபே இந்தப் படுகொலையை நியாயப்படுத்தினார். இதற்குப் பின்பு அரசு MKSS அமைப்பைத் தடை செய்தது.

அதன் பின்பு பார்ட்டி யூனிட்டி அமைப்பானது நேரடி ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. 1987 ஆம் ஆண்டு குர்மி சாதியின் படைப்பிரிவான பூமி சேனா என்ற படை பார்ட்டி யுனிட்டி அமைப்பிடம் முழுமையாகச் சரணடைந்தது. இந்த அமைப்பு ஜமீன் ஜப்தே, ஃபஸல் ஜப்தே ( நிலத்தைக் கைப்பற்றுவோம், பயிர்களைக் கைப்பற்றுவோம் ) என்ற முழக்கத்துடன் 5000 ஏக்கருக்கு மேலான நிலங்களைக் கைப்பற்றி விநியோகம் செய்தது.

—————————————-

 

மத்திய பிஹாரில் லிபரேஷன், எம் சி சி, பார்ட்டி யுனிட்டி ஆகிய மூன்று ஆயுதந்தாங்கிய பலமான நக்சல் அமைப்புகள் பணி செய்ததானது ஏராளமான மோதல்களுக்கு வழி செய்தது.

1997 ஆம் ஆண்டு ரண்வீர் சேனா லஷ்மன்பூர் பாதே என்ற பார்ட்டி யுனிட்டி கிராமத்தைத் தாக்கி 63 தலித்துகளைக் கொலை செய்தது. ரண்வீர் சேனாவுடன் மோதல்கள் நடந்து வந்த அதே நேரத்தில் பார்ட்டி யுனிட்டி லிபரேஷன் அமைப்பின் 82 ஊழியர்களைக் கொன்றுவிட்டதாக அந்தக் கட்சி குற்றம் சாட்டியது. லிபரேஷன் நடத்திய பதிலடியில் பார்ட்டி யுனிட்டியின் 65 தோழர்கள் கொல்லப்பட்டனர். எம் சி சிக்கும் பார்ட்டி யுனிட்டிக்கும் இடையே நடந்த மோதல்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நேரத்தில் மக்கள் யுத்தக் கட்சியானது ஆந்திராவிலும், தண்டகரண்யப் பிரதேசத்திலும் மிக வேகமாக வளர்ந்து வந்தது.  தொடர்ந்து நடந்து வரும் அரசின் தாக்குதல்களைத் தாங்கி நிற்க ஒத்த கருத்துடைய மார்க்சிய லெனினிய அமைப்புகளின் ஐக்கியம் அவசியம் என்ற கருத்து கொண்டிருந்தது. மக்கள் யுத்தம் இணைப்புக்கு ஏற்ற கட்சிகளாகப் பார்ட்டி யுனிட்டியையும், எம் சி சியையும் கருதியிருந்ததால் இந்த இரண்டு கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தது. இவர்களுக்கு இடையேயான மோதல்களைத் தடுக்கவும் தீவிரமாக முயன்று வந்தது. 1993 ஆம் ஆண்டு இந்த மூன்று கட்சிகளும் இணைந்து all india people’s resisitance forum –AIPRF  என்ற அமைப்பை உருவாக்கின. இந்த மூன்று கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கானத் தளமாக அகில இந்தியப் புரட்சிகர மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் ஏற்படுத்தின.

ரண்வீர் சேனாவுக்கும் நக்சல் அமைப்புகளுக்கும் இடையே மோதல், நக்சல் அமைப்புகளுக்கு இடையே மோதல், நக்சல் அமைப்புகளுக்கும் அரசுக்கும் இடையே மோதல் என்று பலமுனைகளில் போராட்டங்கள் நடந்து வந்த நேரத்திலேயே இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளும் நடந்து வந்தன.

பார்ட்டி யூனிட்டி கட்சியானது மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல இடங்களில் பணி செய்து வந்தது. கல்கத்தா கல்லூரிகள் சி பி ஐ எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ் எஃப் ஐயின் இரும்புப் பிடியில்  இருந்த நேரம் அது. மேற்கு வங்காளத்தில் சி பி ஐ எம்மையும், பிஹாரில் ரண்வீர் சேனா, லிபரேஷன், எம் சி சி ஆகிய அமைப்புகளையும் எதிர் கொள்ள வேண்டிய சூழலில் இருந்த பார்ட்டி யுனிட்டி 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மக்கள் யுத்தக் கட்சியுடன் இணைந்தது. இந்த இணைப்பின் பயனாக மக்கள் யுத்தக் கட்சி வட இந்தியாவிலும் இயங்கத் தொடங்கியது.

பார்ட்டி யுனிட்டி மக்கள் யுத்தக் கட்சியுடன் இணைந்ததன் காரணமாகப் புதிய உத்வேகம் பெற்றது. இது எம் சி சியுடனான மோதலைப் பல மடங்கு அதிகரித்தது. நேற்று வரை ஒருங்கிணைப்புக்காகப் பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்த எம் சி சி, பார்ட்டி யுனிட்டியின் மீது உக்கிரமான தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. பார்ட்டி யுனிட்டி இப்போது மக்கள் யுத்தக் கட்சியுடன் இணைந்துவிட்ட காரணத்தால் எம் சி சி மக்கள் யுத்தக் கட்சியின் மீதே தாக்குதல் நடத்துவதாகக் கருதப்பட்டது. மக்கள் யுத்தக் கட்சியும் எம் சி சி மீது கடும் தாக்குதல்களை நடத்தியது. தொடர்ந்து நடந்த சண்டைகளில் 130க்கும் மேற்பட்ட தோழர்கள் இருபுறமும் உயிரிழந்தனர்.

இந்த மோதல் சர்வ தேச அளவில் மார்க்சிய லெனினியக் கட்சிகளிடையே கடும் அதிருப்தியையும் வெறுப்பையும் தோற்றுவித்தது. பெருவின் ஒளிரும் பாதை கட்சி, நேபாள மாவோயிஸ்ட் கட்சி, அமெரிக்காவின் பால் அவேக்கியான் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, துருக்கியின் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகிய மார்க்சிய லெனினிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இரண்டு கட்சிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தன. குறிப்பாக எம் சி சி அமைப்பானது தனது உக்கிரமான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அதை அனைத்து பன்னாட்டுக் கூட்டமைப்புகளில் இருந்தும் விலக்கி உலக அளவில் தனிமைப்படுத்தப் போவதாக அந்த அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சண்டைகளும், பன்னாட்டு இடதுசாரி அமைப்புகளின் அறிக்கையும் எம் சி சி அமைப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தின. எம் சி சி அமைப்பானது இந்த மோதல்களுக்குக் காரணமானவர் என்று தங்கள் தலைவர் மீது குற்றம் சாட்டி அவரை அமைப்பில் இருந்து வெளியேற்றியது. மக்கள் யுத்தக் கட்சியின் மீது தொடுத்த தாக்குதல்களுக்கு சுயவிமர்சனம் செய்து கொண்டது. அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளின் விளைவாக 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் தேதி எம் சி சியும் சி பி ஐ எம் எல் மக்கள் யுத்தமும் இணைந்து சி பி ஐ (மாவோயிஸ்ட்) என்ற புதிய கட்சி உருவானது.

இந்த இணைப்பானது நக்சல்பாரி இயக்கத்தின் போக்கில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த ஒரு பெரிய கட்சியாக நக்சல்பாரி இயக்கம் மாறியது. அதே நேரம் சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற பாரம்பரியப் பெயரைக் கைவிட்டு புதிய கட்சியாகவும் மாறியது. இந்த இணைப்பானது கட்சியின் ராணுவ பலத்திலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. மாவோயிஸ்ட் கட்சி ராணுவக் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கிப் பல புதிய ஆயுதங்களைப் பரிசோதித்துப் பார்த்தது.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவோயிஸ்ட் கட்சியானது ஜெஹானாபாத் நகரைத் தாக்கி அங்கிருந்த சிறையிலிருந்து 250 தோழர்களை விடுதலை செய்தது. சிறையிலிருந்த ரண்வீர் சேனாவின் தலைவர் கொல்லப்பட்டார். நகரம் முழுவதும் நக்சலைட்டுகள் வெளிப்படையாகப் பலமணிநேரம் இயங்கினர். இந்தத் தாக்குதல் அரசு மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற தாக்குதல்கள் ஒரிஸ்ஸாவிலும் பஸ்தர் மாவட்டத்திலும் நடத்தப்பட்டன.

அடுத்து வந்த ஆண்டுகளில் ரண்வீர் சேனா முழுமையாக முறியடிக்கப்பட்டது. லிபரேஷன் கட்சியுடனான மோதல்கள் அடியோடு நின்றுவிட்டன. அரசும் மாவோயிஸ்ட் கட்சியும் நேரெதிரே நிற்பதாகத் தோன்றியது. அரசு சற்றே பின்வாங்கி நிலைமையை அவதானித்து வந்தது. சோன், கோசி, கங்கை நதிகளில் பெருகியோடிக் கொண்டிருந்த குருதி காய்ந்து படிய, தெளிந்த நீர் ஓடத் தொடங்கியது.

பிஹாரின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்தில் சிபிஎம் கட்சியானது நந்திகிராம் போன்ற பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது. இங்கு நிலங்கள் பலவந்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராடுவதற்காக அந்தப் பகுதி மக்களிடையே சிறப்புப் பொருளாதார மண்டல எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றின. மக்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சிபிஐ எம் கட்சி காவல்துறையைக் கொண்டு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. நந்திகிராம், சிங்கூர் விவசாயிகள் தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள ஜீவ மரணப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வேறு வழி இல்லாத நிலையில் போலீஸ் நடத்திய கடும் தாக்குதல்களை எதிர்கொள்ள பூமி உச்செத் ப்ரடிரோஹி கமிட்டி போன்ற சிறப்புப் பொருளாதார எதிர்ப்பு இயக்கங்கள் எல்லைக்கு அப்பால் பிஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் செயல்பட்டு வந்த  மாவோயிஸ்ட் கட்சியுடன்  தொடர்புகொண்டன.

மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரி இயக்கம் ஒழிக்கப்பட்டு முப்பது  ஆண்டுகளுக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கட்சி அசைக்க முடியாத ஆளும் கட்சியாகத் திகழ்ந்து வந்த நேரத்தில், மாநிலத்தின்  எல்லைகளில் மாவோயிஸ்ட் கட்சி என்ற பெயர் பூண்ட இந்தப் புதிய நக்ஸல்பாரிக் கட்சி வந்து நின்றது.

—————————————