பாதி இரவின் சங்கதி 

 

உறக்கம் பிடிபடாத இந்த நள்ளிரவை

எப்படிக் கடப்பது என்று உண்மையிலேயே

எனக்குத் தெரியவில்லை.

சற்றொப்ப என்னைப் போலவே

உறங்காமல் தவிக்கும் இந்த நீள் இரவினையும்,

நிலவினையும், விண்மீன்களையும்,

நாளை காலை என்னை சந்திக்க விருக்கும்

ஞாயிற்றையும் எனக்குத் தழுவ வேண்டும் போல் உள்ளது.

மழை நீர் கசியும் ஓட்டின் ஓட்டைகளை ஊடுருவ

என் பார்வைக்குப் போதுமான திராணி இல்லை.

அதை நான், ‘நீ, நீர் போலிரு’ எனச் சபித்ததும்

அது எல்லாவற்றையும் ஒரு நிமிடம் அலைத்துக் காண்பித்துவிட்டது.

கதவைத் திறந்து பார்க்கும் வானமெல்லாம்

ஒரு நீரறுபடா கிணற்றைப் போல, அலைந்தும் ஆழ்ந்தும்.

அந்த நிலா வளைகிறது, நெளிகிறது.

விண்மீன்கள் ஓடுகின்றன. ஒரு கல்லை மேலெறிந்தால் குழம்புகின்றன.

என் பார்வை என் மேனியையும் இழுத்துக் கொண்டு போகிறது.

வானத்தைத் தாண்டி, பூமியைத் தாண்டி, விண்மீன்களைத் தாண்டி,

ஒளியெல்லாம் வெளி, வெளியெல்லாம் ஒளி;

இருளும், வெற்றிடமும், வெளிச்சமும், காற்றின்மையும்,

சர்வமும், மூச்சின்மையும்.

நான் மிதக்கிறேன்.

என் காற்று பறிபோகிறது.

நான் சவமாகிறேன்.

என் உறக்கம் நித்தமாய் இனி வாய்க்கிறது.

அதற்குள் என் பார்வையோ

ஒரு காற்றாடியின் கயிற்றினைப் போல

என் மேனியை அறுத்துக் கீழே தள்ளிவிட்டது.

ஒரு நிமிடம்.

சில உறக்கம்.

மீண்டும் இந்த இரவு நீள்கிறது;

அதை எப்படிக் கடப்பது என்று உண்மையிலேயே

எனக்குத் தெரியவில்லை.

**

உறக்கம் பிடிபடாத உறவு

யாருக்காகக் காத்திருக்கிறது?

இரவில் உறங்காத எண்ணற்ற ஜீவன்களை

ஒளிரும் பச்சை விளக்குகளை வைத்து

நான் கண்டறிந்து விட்டேன்.

அவர்களோடு ஜோடி போட,

அவர்களின் கதவுகளைத் தட்டுகிறேன்.

 

ஒரு கேளித் தொனியுடன், ஐயா உள்ளீரா!

உறங்க வில்லையோ?

அடியே காமக் கிழத்தி என்று அனுப்பிவிட்டு,

உடனே, அதை டெலீட்டும் செய்துவிட்டேன்.

அவளிடம் அப்படிச் செய்தால் மட்டும்

சீக்கிரம் பதில் வரும் என்பதொரு நித்திய உண்மை.

 

நீ உறங்கவில்லையா சகோ?

நீங்கள் உறங்கவில்லையா தோழர்?

Don’t you sleep yet buddy ? என்ற வாக்கியத்துடன்

இரண்டு இதயக் குறிகளும், ஒரே ஒரு உம்மா எமோஜியும்.

நூ இங்கா நித்தர போலேதா றா எர்ரி?

உனக்கேன் இன்னும் தூக்கம் பிடிக்கவில்லை?

உன்னை ஏன் நித்திரை தழுவவில்லை?

……………………

கேட்டபடியே இருக்கிறேன்.

 

அவள் வீட்டின் வாசல் முன் நிற்கும் போது,

அடிமனதின் ஓரத்தில் இப்படித் தோன்றுகிறது.

கேட்டுவிட்டேன்.

நீ இப்போதுதான் உன் சல்லாபத்தை முடித்தாயா?

ஆமாம் என்கிறாள் சிநேகிதி!

அவன் என்ன செய்கிறான்?

’குறட்டை.’ வெடுக்கென்ற பதில்.

உனக்கு?

’நான் இனித்து முடித்ததும்;

எனக்கு வெறுத்து விடும்;

நான், உன் சவத்தைத் கடித்துத் தின்னவா?’

என் ஜீவனையும்?

’நான் பல மன நேயளல்ல.’

நான் உடல் கீறவா?

நான் உன் கேசத்தை அறுத்தறுத்து எறியவா?’

அவள் யட்சிபோல் அலறுகிறாள்.

 

ஓர் யட்சியோடு வசிக்கும் அவனால் எப்படி

சாவகாசமாய்க் குறட்டை விட முடிகிறது?

சாவகாசமாய்க் குறட்டைவிடும் போது யட்சிகள்

அருகிருந்தும் அச்சப்படத் தேவையில்லை

அஃது ஒரு கொலைவாள் போல்

அவர்களின் குரல் வளையை நெறிக்கிறது.

 

எனக்கு, உறக்கம் பிடிபடாத இந்த நள்ளிரவை

எப்படிக் கடப்பது என்று உண்மையிலேயே தெரியாதபோது

எனக்கொரு குறட்டை வாய்த்தால் தேவலாம் என்று

திடமாய்த் தோன்றுகிறது.

என் தேவனே! ஒரு குறட்டை அருளும்.

ஒரு யட்சி அருளும்;

ஆனால், இவளும் காணாமல் போய்விட்டாள்;

ஒரு பச்சை பின்புலம் 2m என்று காட்டுகிறது.

**

சில பச்சை விளக்குகள் இன்னமும் தொடர்ந்து எரிகின்றன.

எனக்கோ எல்லோரையும் பிடித்திருக்கிறது.

ஆனால், எல்லோரிடமும் பேசப் பிடிக்கவில்லை.

சன்னமாய், தேகமாய், பூசணியாய், நேந்திரமாய்,

ரதியாய், மன்மதனாய், ஒரு பெரும் தசைக் கரும்புத் தேகமாய்,

என் தேகம், வேண்டி வேண்டி யாசிக்கிறது..

மேலும் அது துணைக்கழைக்கிறது

ஒரு சிறு கரும்புத் துண்டை.

பாழ்படு என்று சபிக்கையில்,

அது மேலும் திடப்படுகிறது.

’சாகு! மனமே! அழி, ஒழி!’

நான் அரற்றுகிறேன்.

 

உறக்கம் பிடிபடாத இந்த நள்ளிரவில்

உண்மையிலேயே எனக்கு என்ன செய்வதென

தெரியாத போதும்

இந்தக் குறி என்னை விடுவதில்லை,

அதற்கு அதன் வேதனை

அன்றி, அதைக் கழற்றி ஒரு நாய் போல்

துரத்தவும் முடியவில்லை;

தேவனே அதற்கும் வழி செய்வாயாக;

இதைவிட, உனக்கு வேறென்ன வேலை?

**

நள்ளிரவின் பச்சை விளக்குகளும் சலித்துவிட்டன;

இல்லை இல்லை; சலிப்படைந்துவிட்டன.

நான் யாசித்தவர்கள் என்னை யாசிக்கவில்லை.

யாரோ நான் விரும்பாத போதும்

என் பச்சைத் தாழ்க் கதவத்தினைத் தட்டுகிறார்கள்..

கடைசியாய், எனக்கு இயலாமல் போகிறது..

தேவனே! இவர்கள் என்னை உன்னிடம் யாசித்தார்களா?

தேவனே! நீதான் இவர்களுக்கு என்னை அருளினாயா?

அங்கெனில், உனக்கொரு பாடையும் சேர்த்தருள்வாய்!

 

இந்த உறக்கம் பிடிபடாத நள்ளிரவில்

என்ன செய்வதென்றே எனக்குத் தெரியாத நிலையில்,

நான் தேவனுக்கொரு பாடை செய்தேன்.

பவளமாய், முத்தாய், மணிகள் பல கோர்த்து,

மாதுளைப் பற்கள் தெறித்து அதன் மீது அவன் தேகம் கிடத்தி

மதுரமாய் ஒரு பாடலிசைத்து, மாரிபோல் காதல் சிந்தி,

’உறக்கம் கொள்ளடி அன்பே’ என்பேன்.

ஆனந்தமாய்ச் சிரிக்கும் என் தேகத்தைப் பார்த்து

’ஆராரீரோ தேவனே என்பேன்’

அந்தியின் சூரியனைப் போல மெல்ல ஆன்மா அமைதியுற்றதும்

இருளைக் கண்களில் அப்பி, அதில் நான் தொலைவேன்.

கனவில், அவள் தேகம்,

கனவில், அவள் மிருகம்,

கனவில், யட்சியின் கொலை தாண்டவம்

கனவில், தேகம் காலாவதியான ஒரு கம்பளிப்பூச்சி,

அது நெளிகிறது என் தேகமெல்லாம்

வேதனை அறுவறுப்பு.

 

தூக்கம் பிடிபடாத இரவை

எப்படிக் கடப்பது என்பது உண்மையிலேயே எனக்குத்

தெரியவில்லை; தூங்கியதன் தவற்றை உணர்ந்து

நான் திடுக்கிட்டு எழுந்தேன்.

சற்றொப்ப என்னைப் போலவே

உறங்காமல் தவிக்கும் இந்த நீள் இரவினையும்,

நிலவினையும், விண்மீன்களையும்,

நாளை காலை என்னைச் சந்திக்கவிருக்கும்

ஞாயிற்றையும் எனக்குத் தழுவ வேண்டும் போல் உள்ளது;

இந்தமுறை நிஜமாகவே ஒரு நித்திய உறக்கத்தின் பொருட்டு.