“இது,” டன்ரேவன் சொன்னான், கைகளை வீசியளக்கும் ஒரு சைகையோடு, இருண்டு கிடந்த ஒரு பெருவெளி, கடல், மணற்குன்றுகள், உடன் ஏதோ வகையில் வெகுகாலமாய்ப் பழுதுற்றுக் கிடக்கும் குதிரைலாயத்தை நினைவுறுத்திய ஒரு பிரம்மாண்டமான, இடிந்த கட்டடத்தையும் தனக்குள்ளே விழுங்கிக்கொண்ட அந்தச் சைகை, மூடுபனி சூழ்ந்த நட்சத்திரங்களையும் தழுவத் தவறவில்லை, “இதுதான் என் மூதாதைகளின் நிலம்.”

அன்வின், அவனது நண்பன், தனது வாயிலிருந்த புகைக்குழாயை வெளியே எடுத்தபடி அதை ஆமோதிக்கும் மெல்லிய சப்தங்களை வெளிப்படுத்தினான். அது 1914-ன் முதல் கோடைக்கால மாலைப்பொழுது; ஆபத்தின் பெருமதிப்பை உணர்ந்திடாத உலகை எண்ணி நொந்தவர்களாக, கார்ன்வாலின் இந்தத் தொலைதூரப் பிரதேசங்களின் மீது இரண்டு நண்பர்களும் மிகுந்த மரியாதை வைத்து வந்திருந்தார்கள். டன்ரேவன் அடர்த்தியாகத் தாடி வளர்த்திருந்ததோடு தன்னை ஓர் அற்புதக் காவியத்தின் ஆசிரியராக – அது குறித்து விவாதிக்க அவனுடைய சமகாலத்தவர்களுக்குச் சாத்தியப்படாது – எண்ணியிருந்தான், சொல்வதெனில் அதன் உள்ளடக்கம் இன்னும் அவனுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை; அன்வின் ஓர் ஆய்வறிக்கையைப் பிரசுரித்திருந்தான், டையோஃபேண்டஸின் ஒரு பக்கத்தின் விளிம்பில் ஃபெர்மாட் எழுதியதாக நம்பப்பட்ட ஒரு கருதுகோளை ஒட்டி அது அமைந்திருந்தது. இரண்டு பேருமே – இதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? – இளைஞர்களாகவும் கனவுகளோடும் பேரார்வத்தோடும் இருந்தனர்.

“இன்றைக்குக் கால் நூற்றாண்டுக்கு முந்தைய சங்கதி” என்றான் டன்ரேவன், “அதாவது இப்ன் ஹக்கன் அல்-பொக்காரி, எந்த நைல்நதிதீரத்துப் பழங்குடியினரின் தலைவன் அல்லது அரசன் அவன் என்று எனக்குத் தெரியாது. இந்த வீட்டின் மத்திய அறையில் அவனுடைய ஒன்றுவிட்ட தம்பியான ஸெய்த்தின் கரங்களால் கொல்லப்பட்டான். இத்தனை வருடங்களுக்குப் பிறகும், அவனது மரணத்தைச் சூழ்ந்திருக்கும் சங்கதிகள் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளன.”

அன்வின், அவனிடம் எதிர்பார்க்கக்கூடியதைப் போலவே, ஏன் என்று கேட்டான்.

“பல்வேறு காரணங்களுக்காக” என்று பதில் கிட்டியது. “முதலிடத்தில், இந்த வீடு ஒரு புதிர்வழிப்பாதை. இரண்டாம் இடத்தில், இது ஒரு அடிமையாலும் ஒரு சிங்கத்தாலும் பாதுகாக்கப்பட்டது. மூன்றாம் இடத்தில், ஒளித்துவைக்கப்பட்ட ஒரு புதையல் மாயமாக மறைந்து போனது. நான்காம் இடத்தில், கொலை நிகழ்ந்தபோது கொலையாளி செத்திருந்தான். ஐந்தாம் இடத்தில் –”

சோர்வுற்றவனாக, அன்வின் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“மர்மங்களை வளர்த்துக்கொண்டே போகாதே,” அவன் சொன்னான். “அவற்றை எளிமைப்படுத்த வேண்டும். போ-வின் திருடப்பட்ட கடிதத்தை மனதில் நிறுத்து, ஸாங்வில்லின் பூட்டப்பட்ட அறையை மனதில் நிறுத்து.”

“அல்லது கடினமாக்க வேண்டும்,” டன்ரேவன் பதிலளித்தான், “பிரபஞ்சத்தை மனதில் நிறுத்து.”

செங்குத்தான மணற்குன்றுகளின் மீதேறி, அவர்கள் புதிர்வழிப்பாதையை வந்தடைந்தார்கள். அங்கு நெருக்கத்தில், ஒரு மனிதனின் சிரத்தைக் காட்டிலும் சற்றே உயரமான, பூசப்படாத செங்கற்களால் ஆன, நீண்ட, கிட்டத்தட்ட முடிவேயற்ற ஒரு சுவரென்பதாக அது அவர்களுக்குத் தோன்றியது. அந்தக் கட்டடம் ஒரு வட்டத்தின் வடிவைக் கொண்டிருந்ததாக டன்ரேவன் சொன்னான். ஆனால் அந்த வட்டம் மிகவும் அகலமாயிருந்ததால் அதன் வளைவரை ஏறத்தாழக் கண்ணுக்குப் புலப்படாததாக இருந்தது. க்யூசாவின் நிக்கோலஸை அன்வின் நினைவுகூர்ந்தான், அவரைப் பொருத்தமட்டில் நேர்க்கோடு என்பது ஒரு முடிவில்லாத வட்டத்தின் வளைவரையே. அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தார்கள், கிட்டத்தட்ட நடுயிரவுப்பொழுதில், ஓர் இருண்ட, பாதுகாப்பற்ற பாதைக்கு இட்டுப்போன ஒரு குறுகிய திறப்பைக் கண்டுபிடித்தார்கள். வீட்டிற்குள்ளே கிளைபிரியும் பாதைகள் நிறைய இருந்ததாக டன்ரேவன் கூறினான் என்றாலும், எப்போதும் இடப்பக்கமாகத் திரும்புவதன் மூலம், ஒருமணிநேரத்துக்குச் சற்றே கூடுதலான நேரத்தில் துல்லியமாகக் கிளைப்பின்னலின் மத்தியப்பகுதியைத் தாங்கள் சென்றடையமுடியும் என்றும் சொன்னான். அன்வின் அதற்கு இணங்கினான். கவனங்கூடிய அவர்களின் காலடிகள் கல்-பாவிய தரையில் மோதி எதிரொலித்தன; அந்த நடைக்கூடம் பிற குறுகலான நடைக்கூடங்களுக்கு இட்டுச்சென்றது. கூரை மிகவும் தாழ்வாயிருந்தது, ஏதோ அந்த வீடு அவர்களைச் சிறைப்பிடிக்க விரும்பியது என்பதைப்போல, ஒருவர் பின் மற்றவர் என்பதாக அந்தக் குழப்பமான இருட்டுக்குள் அவர்கள் நடக்க வேண்டியிருந்தது. அன்வின் முன்னால் நடந்தான், கரடுமுரடான கட்டுமானங்கள் மற்றும் பற்பலத் திருப்பங்களின் பொருட்டு தனது வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டவனாக. கண்ணுக்குப் புலப்படாத அந்தச்சுவர் அவனுடைய கைகளினூடாக வழிந்தோடியது, முடிவே இன்றி. அன்வின், கருமைக்குள் மெல்ல நகர்ந்தவாறே, தன்னுடைய நண்பனின் உதடுகள் உதிர்த்த இப்ன் ஹக்கானின் மரணம் குறித்த கதையைச் செவிமடுத்தான்.

“அனேகமாக எனது நினைவுகளில் மிகப்பழமையானது,” என்றான் டன்ரேவன் “பென்ட்ரீத் துறைமுகத்தில் இப்ன் ஹக்கன் அல்-பொக்காரியைப் பார்த்தது பற்றியதே. ஒரு கருப்பு மனிதன் ஒரு சிங்கத்தோடு அவனைப் பின்தொடர்ந்து சென்றான் – மறுக்கமுடியாதவகையில், விவிலியத்தில் செதுக்கப்பட்டிருந்த சங்கதிகளுக்கு வெளியே, என் கண்கள் வாழ்நாளில் முதன்முதலாகப் பார்த்த முதல் கருப்பு மனிதனும் முதல் சிங்கமும் அவர்கள்தான். அப்போது நான் சிறுவனாயிருந்தேன். ஆனால், கதிரவனின் நிறத்திலிருந்த மிருகமும் இரவின் நிறத்திலிருந்த மனிதனும் இப்ன் ஹக்கனை விடக் குறைவாகத்தான் என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். எனக்கு அவன் மிக உயரமாகத் தெரிந்தான்; வெளுத்த சருமமும், பாதி-மூடிய கருப்பு விழிகளும், துடுக்கான நாசியும், அடர்த்தியான உதடுகளும், காவிநிறத்தில் தாடியும், உறுதியான மார்பும், அத்துடன் சுய-திடமும் அமைதியும் கூடிய ஒருவகை நடையும் கொண்ட மனிதனாயிருந்தான். வீட்டுக்கு வந்து நான் சொன்னேன், ‘ஓர் அரசன் கப்பலில் வந்திருக்கிறான்.’ பிற்பாடு, கொத்தனார்கள் இங்கு பணியாற்றி வந்த நேரத்தில், அவனது பட்டத்தை நான் விரிவுபடுத்தி ‘பாபேலின் அரசன்’ எனப் பெயர் சூட்டினேன்.

இந்த அந்நியன் பென்ட்ரீத்தில் குடியேறப்போகிறான் எனும் செய்தி உளப்பூர்வமாக வரவேற்கப்பட்டது. ஆனால், அவனுடைய வீட்டின் அளவும் வடிவமும் அங்கு எதிர்ப்பையும் திகைப்பையும் உண்டாக்கின. ஒரு வீடு ஒற்றை அறையும் மைல்கணக்கில் நீளும் தாழ்வாரங்களும் உடையதாக இருக்குமெனில் சரியல்ல. ‘வெளிநாட்டவரிடையே இதுபோன்ற வீடுகள் இயல்பாக இருக்கலாம்,’ மக்கள் சொன்னார்கள், ‘ஆனால் இங்கு இங்கிலாந்தில் மிகவும் அரிதாகத்தான்.’ எங்களின் ஊர்வட்டகை முகவர், திரு. ஆலபை, வழக்கத்தை-மீறிய வாசிக்கும் பழக்கங்களைக் கொண்ட மனிதர், ஒரு புதிர்வழிப்பாதையை நிர்மாணித்ததற்காக இறைவனால் தண்டிக்கப்பட்ட அரசன் குறித்த ஒரு கீழைத்தேயக் கதையை வெளிச்சமிட்டுக் காட்டினார். மேலும் அவர் இந்தக்கதையை பலிபீடத்தின் மீதிருந்து கூறினார். அதற்கடுத்த நாளே, இப்ன் ஹக்கன் முகவரின் மனைக்கு வருகைபுரிந்தான்; அந்தச் சுருக்கமான நேர்காணல் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் பற்றி அக்காலத்தில் ஏதும் தெரியவரவில்லை. ஆனால், அதன்பிறகு எந்தப் பிரசங்கமும் பெருமிதத்தின் பாவம் குறித்து மறைமுகமாகக்கூட குறிப்பிடவில்லை. ஆகவே கட்டுமானக்காரர்களோடு மேற்கொண்டு ஒப்பந்தம் செய்துகொள்ள மூருக்குச் சாத்தியமானது. பல வருடங்களுக்குப் பிறகு, இப்ன் ஹக்கன் இறந்திருந்த சூழலில், தங்களது உரையாடலின் சாரத்தை ஆலபை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

“இப்ன் ஹக்கன், உட்கார மறுத்தவனாக, இதே அல்லது இதேபோன்ற வார்த்தைகளை அவரிடம் சொல்லியிருக்கிறான்: ‘நான் தற்போது செய்துகொண்டிருப்பது குறித்த அறுதித்தீர்மானங்களை எந்த மனிதனும் சொல்லவியலாது. எனது பாவங்கள் எப்படியானதென்றால் கடவுளின் அற்புத நாமத்தை நூறாயிரம் ஆண்டுகளுக்கு நான் தொழுதுகொண்டேயிருந்தாலும், என் வேதனைகளில் ஆகச்சிறியதையும் விலக்கிட அதற்கு ஆற்றல் இருக்காது; எனது பாவங்கள் எப்படியானதென்றால் எனது இதே கரங்களால் உன்னை நான் கொன்றாலும், மகாகனம் பொருந்திய ஆலபை அவர்களே, நியாயத்தீர்ப்பு நாளில் எனக்குக் காத்திருக்கும் துயரங்களில் சிறிதளவைக்கூட எனதிந்த செயல் அதிகரிக்காது. எனது பெயர் தெரியாத நிலமென்று இந்தப் பூமியில் எவ்விடமும் இல்லை. நான் இப்ன் ஹக்கன் அல்-பொக்காரி, மேலும் எனது நன்னாட்களின்போது இரும்புக்கரம் கொண்டு பாலைவனப் பழங்குடியினரிடையே ஆட்சி புரிந்தேன். எண்ணற்ற வருடங்கள், என் ஒன்றுவிட்ட தம்பி ஸெய்த்தின் உதவியோடு, அவர்களின் கூப்பாடுகளைக் கேட்டு எனக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு கடவுள் அவர்களுக்கு ஆணையிடும் வரைக்கும், எனது பாதங்களின் கீழே அவர்களை நான் நசுக்கியிருந்தேன். எனது ராணுவங்கள் சிதறடிக்கப்பட்டு கத்திக்கு இரையாக்கப்பட்டன; எனது கொடூர ஆட்சிக்காலத்தில் சேர்த்த செல்வங்களோடு தப்பிப்பதில் நான் வெற்றிபெற்றேன். ஒரு கல்மலையின் அடிவாரத்தில் ஒரு புனிதரின் கல்லறைக்கு ஸெய்த் என்னை இட்டுச்சென்றான். பாலைவனத்தின் முகப்பைக் கண்காணிக்கும்படி எனது அடிமைக்கு நான் ஆணையிட்டேன். தங்கக்காசுகள் நிரம்பிய எங்களின் பேழையோடு நானும் ஸெய்த்தும் உள்ளே சென்று உறங்கிப்போனோம், முற்றிலும் களைப்புற்றவர்களாக. அன்றிரவு, சர்ப்பங்களின் ஒரு குவியல் என்னைச் சிறைப்பிடித்ததாக நான் நம்பினேன். திகிலோடு விழித்தெழுந்தேன். என்னருகே, விடியலில், ஸெய்த் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்; எனதுடலின் மீது படர்ந்திருந்த சிலந்திவலை என்னை அந்தக் கனவைக் காணச்செய்திருந்தது. ஒரு கோழையான ஸெய்த், அங்கு அத்தனை நிம்மதியாக உறங்கிய விசயம், என்னைக் காயப்படுத்தியது. செல்வமென்பது எப்போதும் தீராத ஒன்றல்ல எனவும் அதன் ஒரு பகுதியை ஸெய்த் தனக்கென கேட்க விரும்பலாம் எனவும் நினைத்தேன். எனது இடைவாரில் வெள்ளிக்கைப்பிடியுடன் கூடிய என்னுடைய குறுவாள் இருந்தது; அதன் உறையிலிருந்து அதை நான் உருவியெடுத்து அதைக்கொண்டு அவனுடைய தொண்டையில் ஓங்கிக்குத்தினேன். தனது மரணாவஸ்தையில், என்னால் புரிந்து கொள்ளவியலாத சில வார்த்தைகளை அவன் முணுமுணுத்தான். நான் அவனைப் பார்த்தேன். அவன் செத்திருந்தான். ஆனால், அவன் எழுந்து கொள்ளக்கூடும் என்று பயந்தவனாக, ஒரு கனமான பாறையால் செத்துப்போனவனின் முகத்தைச் சிதைக்குமாறு என்னுடைய அடிமைக்கு நான் ஆணையிட்டேன். பிற்பாடு சூரியனுக்குக் கீழே நாங்கள் அலைந்தோம். வேறொருநாள் கடலை வேவுபார்த்தோம். மிக உயரமான கப்பல்கள் அதனூடாக ஒரு பாதையை உழுதுச்சென்றன. இதுபோன்றக் கடல்களைக் கடக்கச் செத்தவனுக்குச் சாத்தியப்படாது என்று நான் எண்ணினேன், ஆகவே மற்ற நிலங்களைத் தேடிக் கண்டடையத் தீர்மானித்தேன். கப்பலில் நாங்கள் பயணப்பட்ட முதல்நாளிரவில், ஸெய்த்தை நான் கொன்றதாகக் கனவு கண்டேன். எல்லாமும் மிகத்துல்லியமாக அதேபோலத்தான் இருந்தது. ஆனால், இம்முறை அவனுடைய வார்த்தைகளை நான் புரிந்துகொண்டேன். அவன் சொன்னான்: “இப்போது நீ என்னைக் கொல்வது போல, ஒருநாள் நானும் உன்னைக் கொல்வேன், எங்கு சென்று நீ ஒளிந்தாலும்,” அந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க நான் உறுதிபூண்டேன். ஒரு புதிர்வழிப்பாதையின் இதயத்துக்குள் என்னை நானே புதைத்துக்கொள்வேன். ஆக ஸெய்த்தின் ஆவி வழியறியாமல் தடுமாறிப்போகும்.’

“இதைச் சொன்னபிறகு, அவன் கிளம்பிச் சென்றான். அந்த மூர் ஒரு பைத்தியக்காரன் என்றும் அவனுடைய அபத்தமான புதிர்வழிப்பாதை அவனது பைத்தியக்காரத்தனத்தின் அடையாளம் மற்றும் ஒரு தெளிவானச் சான்று என்றும் நினைக்க ஆலபை தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். பிறகு அவர் யோசித்துப் பார்த்தார், இயல்புமீறிய கட்டடத்தோடும் இயல்புமீறிய கதையோடும் இந்த விளக்கம் ஒத்துப்போனது. ஆனால், இப்ன் ஹக்கன் என்கிற மனிதன் விட்டுச்சென்ற தீர்க்கமான அபிப்பிராயத்தோடு அல்ல. இத்தகைய கட்டுக்கதைகள் எகிப்தின் வீண் மணற்பரப்புகளில் இயல்பானதாக இல்லாமல் இருந்தனவா என்பது யாருக்குத்தான் தெரியும். இத்தகைய புதிரான சங்கதிகள் (ப்ளீனியின் டிராகன்களைப்போல) ஒரு கலாச்சாரத்தோடு ஒப்பிட தனிப்பட்ட மனிதனோடு குறைந்த தொடர்புடையதாக இருந்தனவா என்பதும் யாருக்குத்தான் தெரியும்? தன்னுடைய ஒரு லண்டன் வருகையின்போது, ஆலபை எண்ணற்ற டைம்ஸ் பத்திரிகைகளைப் புரட்டினார்; அல்-பொக்காரி மற்றும் அவனது மந்திரியின் (அவனுடைய கோழைத்தனம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தது) எழுச்சியும் அதன்பிறகான வீழ்ச்சியும் பற்றிய உண்மைகளை அவர் உறுதிபடுத்திக் கொண்டார்.

அல்-பொக்காரி, கொத்தனார்கள் பணியை முடித்தவுடனே, தன்னை புதிர்வழிப்பாதையின் மத்தியில் நிலையமர்த்திக் கொண்டான். மறுமுறை அவனை நகரத்தில் பார்க்க முடியவில்லை; சில சமயங்களில், ஸெய்த் அரசனைக் கண்டடைந்து அவனைக் கொன்றுவிட்டதாக ஆலபை அச்சம் கொண்டிருந்தார். இரவில், சிங்கத்தின் கர்ஜனையைக் காற்று எங்களிடம் சுமந்து வந்தது, தங்களின் பட்டிகளுக்குள் இருந்த செம்மறியாடுகள் ஒரு புராதான அச்சத்தோடு நெருக்கி நின்று கொண்டன.

கார்டிஃப் அல்லது பிரிஸ்டலுக்குத் தலைப்படுகிற, கீழைத்தேயத் துறைமுகங்களில் இருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு, அந்தக் குட்டி வளைகுடாவில் நங்கூரமிடுவது, வழக்கமான ஒன்றுதான். புதிர்வழிப்பாதையில் இருந்து அடிமை கீழிறங்கிச் செல்வான் (அந்நாட்களில் புதிர்வழிப்பாதை, எனக்கு நினைவிருக்கிறது, தற்போதுள்ள இளஞ்சிவப்பு நிறத்தில் அது இல்லை, மாறாகக் காவி நிறத்தில் இருந்தது) பிறகு கப்பல்களின் பணியாளர்களிடம் கர்ணகொடூரமாக ஒலிக்கக்கூடிய வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்வான். அவர்களுக்கு மத்தியில் அவன் மந்திரியின் ஆவியைத் தேடியதாகத் தோன்றியது. அந்தக் கலங்கள் கள்ளக்கடத்தல் சாமான்கள் அடங்கிய சரக்குகளைச் சுமந்துசென்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒருவேளை அவற்றில் சாராயமும் அல்லது தடைசெய்யப்பட்டத் தந்தங்களும் இருக்குமெனில், ஏன் இறந்தவர்களும் இருக்கக்கூடாது?

வீடு கட்டி முடிக்கப்பட்டு ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஓர் அக்டோபர் காலையில் ஷாரோனின் ரோஜா செங்குத்தானக் கற்பாறைகளுக்குக் கீழே நங்கூரமிட்டு நின்றது. கடலில் மிதந்து வந்த இந்தப்படகைப் பார்த்தவர்களுக்கு மத்தியில் நான் இருக்கவில்லை, மேலும், எனது மனதுக்குள் பதிந்துள்ள அதன் பிம்பம் அபுகீர் அல்லது ட்ரஃபால்கரின் மறக்கப்பட்ட பிரதிகளின் பாதிப்பில் உருவாகியிருக்கலாம். ஆனால், வெகு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டது எனும் வகைமையைச் சார்ந்த கப்பல்களுள் அதுவும் ஒன்று என நான் நம்பினேன். அது எத்தனை நுணுக்கமானதெனில், ஒரு கப்பல்கட்டுபவனின் பணியென்பதை விட ஒரு தச்சனுடையது என்பதைப்போல, ஒரு தச்சனின் பணியென்பதை விட ஒரு கைப்பேழை தயாரிப்பவனுடையது என்பதைப்போல. அது (உண்மையில் அவ்வாறு இல்லையென்றாலும், குறைந்தபட்சம் எனது கனவுகளில்) பளபளப்பாகவும், கருநிறமாகவும், உறுதியானதாகவும், உடன் அமைதியானதாகவும் இருக்க, அதன் பணியாளர் குழு அராபியர்களையும் மலேயர்களையும் உள்ளடக்கியிருந்தது.

புலரியில் அது நங்கூரமிட்டது. பிறகு அதேநாளின் பின்மதியப்பொழுதில் ஆலபையைச் சந்திக்க இப்ன் ஹக்கன் ஊர்வட்டகைக்குள் புயலாய் நுழைந்தான். கட்டுப்படுத்தவியலாத அச்சவுணர்வால் அவன் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தான் – முழுக்கவே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தான் – மேலும், ஸெய்த் புதிர்வழிப்பாதைக்குள் நுழைந்துவிட்டதையும் அவனுடைய அடிமையும் அவனுடைய சிங்கமும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதையும் தெளிவாக விளக்கிச்சொல்லவும் அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அதிகாரிகளால் தனக்கு உதவயியலுமா என்று அவன் மிகுந்த தீவிரத்தோடு வினவினான். ஆலபை ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்னாலேயே, அல்-பொக்காரி சென்றிருந்தான் – ஏதோ, இரண்டாவது அல்லது கடைசி முறையாக அவனை அங்கு ஊர்வட்டகைக்கு அழைத்து வந்த அதே பேரச்சத்தால் அவன் கிழித்தெறியப்பட்டதைப்போல. பயத்தால்-விரட்டப்பட்ட இந்த மனிதன்தான் கத்தியின் துணையோடு சூடானியப் பழங்குடிகளை அடக்கி ஆண்டான், போர் என்றால் என்னவென்று அவனுக்குத் தெரிந்திருந்தது, கொலை செய்வது எப்படியென்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது – இதையெல்லாம் தனது நூலகத்தில் தனியே அமர்ந்தவராக, ஆலபை ஆச்சரியத்துடன் யோசித்துப் பார்த்தார். அந்தக் கப்பல் ஏற்கனவே கடலுக்குள் பயணப்பட்டிருந்தது என்பதை மறுநாள் ஆலபை அறிந்து கொண்டார் (சுவாக்கின் செங்கடல் துறைமுகத்தை நோக்கி அது தலைப்பட்டது, பிற்பாடு அவருக்குத் தெரிய வந்தது). அடிமையின் மரணத்தை உறுதிசெய்வது தனது கடமை என்றெண்ணி, அவர் புதிர்வழிப்பாதைக்கு மேலேறிச் சென்றார். அல்-பொக்காரியின் இந்த உணர்வுப்பூர்வமான கதை அவருக்கு முழுக்கவே ஒரு கற்பனையாகத் தோன்றியது, ஆனால் தாழ்வாரத்தின் ஒரு திருப்பத்தில் அவர் சிங்கத்தைக் கண்டார். சிங்கம் செத்திருந்தது. மற்றொரு திருப்பத்தில் அடிமை இருந்தான், அவனும் செத்திருந்தான். பிறகு மத்திய அறையில் அவர் அல்-பொக்காரியைக் கண்டுபிடித்தார் – அவனது முகம் சிதைந்திருந்தது. அந்த மனிதனின் பாதத்துக்குக் கீழே முத்துச்சிப்பிகள் பதித்த ஒரு சிறிய பேழை கிடந்தது; அதன் பூட்டு உடைத்துத் திறந்திருக்க அதற்குள் ஒற்றை நாணயம் கூட மிச்சமிருக்கவில்லை.

ஒரு சொற்பொழிவினை ஒத்த நிறுத்தங்களுடன் கூடிய டன்ரேவனின் இறுதி வரிகள் உணர்வுப்பூர்வமாக ஒலிக்க எத்தனித்தன; தனது நண்பன் இதற்கு முன்பும் பலமுறை அவற்றைப் பேசியிருக்கலாம் என அன்வின் யூகித்தான். எப்போதும் இதேபோன்ற நம்பிக்கையோடு – அத்துடன், இதேபோன்ற தட்டையான தர்க்கத்தோடும். அவன் கேட்டான், தனக்கு அதில் ஆர்வமுள்ளதாகக் காட்டிக்கொள்ள, “சிங்கமும் அடிமையும் எவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்கள்?”

ஒருவிதத் துயரார்ந்த மனநிறைவோடு இரக்கமற்ற அந்தக்குரல் தொடர்ந்து பேசியது, “அவர்களின் முகங்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.”

மனிதர்களின் காலடிச்சத்தங்களோடு இப்போது மழைத்தாரைகளின் சத்தங்களும் இணைந்து ஒலித்தன. அன்றைய இரவை அவர்கள் புதிர்வழிப்பாதையில் அதன் மத்திய அறைக்குள் கழிக்க நேரிடலாம் என்பதை அன்வின் உணர்ந்தான். ஆனால், எதிர்காலத்தில் அசௌகரியம் நிரம்பிய இந்த அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கையில் ஒரு சாகசப்பயணமாக எண்ணிக்கொள்ளலாம் என்பதையும் அவன் அமைதியாயிருந்தான். டன்ரேவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை, ஆகவே அவன் கேட்டான், இறுதித்துளியையும் பிதுக்கியெடுக்க விழைந்திடும் ஒருவனின் பாணியில், “இந்தக் கதையை விளக்கிச் சொல்ல முடியுமா?”

அன்வின் பதிலளித்தான், எதையோ உரக்கச் சிந்திக்கும் ஒருவனின் தொனியில், “இதை விளக்கிச் சொல்ல முடியுமா இல்லையா என்பது குறித்து எனக்கு எந்த யோசனையும் இல்லை. இதுவொரு பொய் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும்.”

பிரவாகமெனப் பொங்கிய மிகக் கடுமையான வார்த்தைகளால் டன்ரேவன் அதை மறுத்தான். பென்ட்ரீத்தின் ஒட்டுமொத்த மக்களும் அவன் கூறிய உண்மைக்குச் சாட்சியாக இருப்பார்கள் என்றான். ஒருவேளை அவனொரு கட்டுகதையை உருவாக்க விரும்பியிருந்தால், அவனே ஒரு எழுத்தாளன்தான் எனும்போது இதைக்காட்டிலும் சிறப்பான ஒரு கதையை உருவாக்கியிருப்பான். டன்ரேவனைப் போலவே தானும் அதிர்ந்தவனாக, அன்வின் மன்னிப்பு கேட்டான். இருட்டுக்குள் நேரம் நீண்டுகொண்டே போவதாகத் தோன்றியது; தாங்கள் வழிதவறிவிட்டோமோ என இரண்டு பேரும் அச்சங்கொள்ளத் தொடங்கினார்கள், பிற்பாடு, தலைக்குமேல் தெரிந்த ஒளியின் மெல்லிய கீற்று ஒரு குறுகலான படிக்கட்டின் கீழ்ப்படிகளை அவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியபோது தங்களின் களைப்பை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் மேலேறி இடிந்து கிடந்த ஒரு வட்டமான அறைக்கு வந்து சேர்ந்தார்கள். சபிக்கப்பட்ட அரசனின் அச்சத்தைப் பறைசாற்றிய இரண்டு சங்கதிகள் அங்கிருந்தன: பெருவெளியையும் கடலையும் பார்க்குமாறு அமைந்த ஒரு சாளரப்பிளவு, உடன் தரை மீதமைந்த ஒரு புழைக்கதவு – படிக்கட்டுகளின் வளைவுக்கு மேலே அது திறக்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த அறை, மிக விசாலமாக இருந்தாலும், ஏதோவொரு வகையில் சிறைக்கூடத் தனியறையின் தன்மையைக் கொண்டிருந்தது.

மழை என்பதைக் காட்டிலும் நண்பர்களுக்காக ஓர் உபகதையைத் தயாராக வைத்திருக்கவேண்டும் என்கிற விருப்பத்தின் காரணமாக, இருவரும் அன்றிரவைப் புதிர்வழிப்பாதைக்குள் கழித்தார்கள். கணிதமேதை ஆழ்ந்து உறங்கினான்; ஆனால் கவிஞனுக்கு அது சாத்தியப்படவில்லை, எந்தப் பயனுமற்றவை என மனதுக்குள் தீர்க்கமாக நம்பிய வரிகளால் அவன் அலைக்கழிக்கப்பட்டான்:

 

அச்சுறுத்தலும் மிதமிஞ்சிய ஆற்றலும் கூடிய சிங்கத்துக்கு முகமில்லை,

மூதூர்ந்த அடிமைக்கு முகமில்லை, அரசனுக்கு முகமில்லை.

 

அல்-பொக்காரியின் மரணம் குறித்த இக்கதை தன்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை என்பதாக அன்வின் உணர்ந்தான், ஆனால் அதன் சிக்கலை அவிழ்த்துவிட்ட திடமான நம்பிக்கையோடு அவன் கண்விழித்தான். அன்று முழுதும், அவன் யோசனையில் தொலைந்தவனாகவும் எல்லாவற்றிலிருந்தும் தனிமைப்படுத்திக்கொண்டவனாகவும் இருந்தான், புதிரின் வெவ்வேறு கூறுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பவனாக, இரண்டு இரவுகளுக்குப் பிறகு டன்ரேவனை அவன் மீண்டும் லண்டனின் மதுவிடுதி ஒன்றில் சந்தித்து இதே அல்லது இதேபோன்ற வார்த்தைகளைக் கூறினான்: “கார்ன்வாலில், உன்னுடைய கதை பொய்யென்று நான் உரைத்தேன். அந்தத் தகவல்கள் உண்மைதான், அல்லது உண்மையென்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால், நீ சொன்னதுபோன்ற வழிமுறையில் சொல்லும்போது வெளிப்படையான முறையில் அவை பொய்யாகி நிற்கின்றன. இவற்றில் இருப்பதிலேயே ஆகப்பெரிய பொய்யிலிருந்து நான் தொடங்குகிறேன் – நம்பவே முடியாத அந்தப் புதிர்வழிப்பாதையில் இருந்து. ஓர் அகதி தன்னை ஒரு புதிர்நெறிக்குள் ஒளித்து வைக்கமாட்டான். கடலைப் பார்த்தவாறிருப்பதாகக் கதைபண்ணிக்கொண்டு தனக்கென ஒரு புதிர்வழிப்பாதையை அவன் நிர்மாணிக்கமாட்டான், அதுவும் எந்தவொரு கப்பற்குழுவாலும் எத்தனைத் தொலைவிலிருந்தும் அடையாளம் காணக்கூடிய ஒரு காவிநிற புதிர்வழிப்பாதையை. இந்த மொத்தவுலகமும் ஏற்கனவே அப்படி புதிர்வழிப்பாதையாக இருக்கும்போது புதிதாத ஒன்றை நிறுவும் தேவை அவனுக்கில்லை. உண்மையாகவே ஒளிந்துகொள்ள விரும்பும் யாருக்கும், ஒரு கட்டடத்தின் அத்தனைத் தாழ்வாரங்களும் இட்டுச்செல்லும் ஒரு கண்காணிப்புக் கோபுரத்தை விட லண்டன்தான் மேம்பட்ட புதிர்வழிப்பாதையாக இருக்கக்கூடும். தற்போது நான் உன்னிடம் எடுத்துக்கூறும் இந்த எளிய அவதானிப்பு நேற்றைக்கு முந்தைய இரவில்தான் எனக்குத் தோன்றியது, கூரையின் மீது விழுந்த மழையின் ஒலியைக் கேட்டபடி உறக்கம் நம்மீது கவிழ்ந்திட நாம் காத்திருந்தவேளையில். அதன் ஆதிக்கத்தின் கீழ், உனது அபத்தங்கள் யாவையும் ஒதுக்கி சற்றே அறிவார்த்தமான சங்கதிகளை யோசிக்க நான் தீர்மானித்தேன்.”

“எனில், தொகுதிகளின் கோட்பாடு அல்லது விண்வெளியின் நான்காவது பரிணாமம் பற்றியா?” டன்ரேவன் கேட்டான்.

“இல்லை,” என்றான் அன்வின், தீவிரமான குரலில். “நான் க்ரீட்டின் புதிர்வழிப்பாதையை யோசித்தேன். எருதுத்தலையுடன் ஒரு மனிதன் நடுநிலையாய் அமைந்த புதிர்வழிப்பாதை பற்றி.”

துப்பறியும் கதைகளுக்குள் ஆழமாய் மூழ்கியிருந்த டன்ரேவன், ஒரு மர்மத்தைக் காட்டிலும் அந்த மர்மத்துக்கான தீர்வின் மதிப்புக்கு எப்போதும் ஒரு மாற்று குறைவு என்று நம்பினான். இயற்கைக்குமீறிய எதையோ ஒரு மர்மம் தனக்குள்ளாகக் கொண்டிருக்கிறது, சொல்லப்போனால் ஒரு தெய்வீகத்தன்மையையும்; என்றபோதும், அதன் தீர்வோ, எப்போதும் மனித சாமர்த்தியத்தால் களங்கப்பட்டிருக்கிறது. தவிர்க்கமுடியாத அந்த விசயத்தைச் சற்றே தள்ளிப்போடுவதற்காக, அவன் சொன்னான், “நாணயங்களிலும் சிற்பங்களிலும் ஒரு மினோடாருக்கு எருதின் தலை இருக்கும். தாந்தே அதை எருதின் உடலோடும் மனிதனின் தலையோடும் இருப்பதாகக் கற்பனை செய்தார்.”

“அந்தக்கூற்றும் கூட எனது தீர்மானத்தோடு ஒத்துப்போகிறது,” அன்வின் ஆமோதித்தான். “இங்கு எது முக்கியமெனில் வசிப்பிடமும் வசிப்பவரும் என இரண்டுமே கொடூரமாக இருப்பதுதான். மினோடார் தன்னுடைய புதிர்நெறியை சரியான வகையில் நியாயப்படுத்துகிறது. ஆனால் கனவில் விடுக்கப்பட்ட ஓர் அச்சுறுத்தல் பற்றி இதே வார்த்தைகளை நாம் சொல்லவியலாது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து மினோடாரின் உருவம் எனக்குள் கிளர்ந்து வந்தபிறகு, (சொல்லப்போனால், தவிர்க்கமுடியாத வகையில், அதுவும் புதிர்வழிப்பாதையை உள்ளடக்கிய ஒரு மர்மம் என்பதால்) இந்தப் பிரச்சினை ஏறத்தாழத் தெளிவாகிவிட்டது. என்றாலும்கூட, இந்தப் புராதான உருவம்தான் நம்முடைய புதிருக்கான சாவியை வைத்திருந்ததை நான் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன், ஆனால் உனது கதையில் எனக்குப் பயன்படக்கூடிய ஒரு தகவலை நான் கண்டுபிடித்தேன் – சிலந்திவலை.”

“சிலந்திவலையா?” டன்ரேவன் திருப்பிச் சொன்னான், குழம்பியவனாக.

“ஆம். ஒருவேளை அந்தச் சிலந்திவலை (அதாவது ப்ளாட்டோனிய சிலந்திவலை – நாம் இதை நேரடி அர்த்தமாகவே எடுத்துக் கொள்வோம்) கொலைகாரனிடம் (அப்படி ஒரு கொலைகாரன் இருக்கும்பட்சத்தில்) அவனது குற்றத்தைப் பற்றிச் சொல்லியிருக்கக்கூடும் எனும் சங்கதி என்னை எந்த விதத்திலும் ஆச்சரியப்படுத்தாது. அல்-பொக்காரி, கல்லறைக்குள், சர்ப்பங்களின் குவியலைக் கனவில் கண்டது உனக்கு நினைவிருக்கலாம். கண்விழித்தபோது ஒரு சிலந்திவலைதான் தனது கனவுக்கு வித்திட்டிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். அல்-பொக்காரியிடம் அந்தக் கனவைக் கண்ட அந்த இரவுக்கு நாம் திரும்பப்போகலாம். தோற்கடிக்கப்பட்ட அரசனும் அவனது மந்திரியும் அடிமையும் புதையலோடு பாலைவனத்தின் வழியே தப்பியோடி வருகிறார்கள். இரவு ஒரு கல்லறைக்குள் அவர்கள் தஞ்சமடைகிறார்கள். மந்திரி, அவனொரு கோழை என்பது நமக்குத் தெரியும், உறங்கிப்போகிறான்; அரசன், அவனொரு தைரியமான ஆள் என்பது நமக்குத் தெரியும், உறங்குவதில்லை. புதையலைப் பங்குபோடத் தேவையில்லை என்பதற்காக அரசன் மந்திரியை குத்திக்கொல்கிறான். பல இரவுகளுக்குப் பிறகு, மந்திரியின் ஆவி அரசனை ஒரு கனவில் அச்சுறுத்துகிறது. இவை யாவுமே நம்பமுடியாததாக உள்ளன. என்னுடைய புரிதலின்படி, இந்தச் சம்பவங்கள் யாவும் வேறொரு விதமாக நிகழ்ந்திருக்கின்றன. அன்றிரவு, அரசன், தைரியமான ஆள், உறங்கிப்போகிறான், ஸெய்த், அந்தக் கோழை, முழித்துக் கிடந்தான். உறங்குவதென்பது உண்மையில் அத்தனை சங்கதிகளையும் மறப்பதும்கூட, ஆனால், உருவப்பட்ட நீள்வாள்களால் நீங்கள் தொடர்ச்சியாக வேட்டையாடப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் சூழலில் இந்தக் குறிப்பிட்ட மறதி அத்தனை எளிதில் வராது. ஸெய்த், பேராசையோடு, அவனுடைய அரசனின் உறங்கிக்கொண்டிருந்த உருவத்தின் மீது குனிந்தான். அரசனைக் கொல்வது குறித்து ஸெய்த் யோசித்தான் (அனேகமாகத் தனது குறுவாளோடு அவன் விளையாடியிருக்கவும் செய்யலாம்), ஆனால், அவனுக்கு அதற்குத் தைரியம் வரவில்லை. அரைத்தூக்கத்தில் இருந்த அடிமையை அவன் எழுப்பினான், புதையலின் ஒரு பாதியை அவர்கள் கல்லறைக்குள் புதைத்தார்கள், பிறகு சுவாகினுக்கும் அதன்பின்பு இங்கிலாந்துக்கும் தப்பியோடினார்கள். அல்-பொக்காரியிடம் இருந்துத் தங்களை ஒளித்துக்கொள்ள அல்ல, மாறாக அவனை வஞ்சனையாக வரவழைத்துக் கொல்ல, அவர்கள் – சிலந்தி தனது வலையைப் பின்னுவதுபோல – கடலைப் பார்த்தவாறிருந்த உயரமான மணற்குன்றுகளின் மீது காவிநிறப் புதிர்வழிப்பாதையைக் கட்டினார்கள். சிவப்புநிற தாடியுடன் கூடிய மனிதன், அடிமை, மற்றும் சிங்கத்தின் கதையைக் கப்பல்கள் நூபியத் துறைமுகங்களுக்கு எடுத்துப்போகும், ஆக கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ அவர்களைத் தேடிக்கொண்டு புதிர்வழிப்பாதைக்கு அல்-பொக்காரி வருவான் என்பதை மந்திரி அறிந்திருந்தான். புதிர்நெறியின் கடைசிப் பாதையில், ஒரு பொறி காத்திருந்தது. அல்-பொக்காரி எப்போதும் ஸெய்த்தைக் குறைவாகவே எடைபோட்டான், ஆகவே அச்சமயத்துக்கு வேண்டிய மிகக்குறைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமளவுக்குக்கூட தன்னை அவன் தாழ்த்திக் கொள்ளவில்லை. கடைசியாக, ஆசைப்பட்ட அந்த நாளும் வந்தது; இப்ன் ஹக்கன் இங்கிலாந்தில் தரையிறங்கிறான், நேராகப் புதிர்நெறியின் கதவுக்குச் சென்றான், அதன் இருட்டான தாழ்வாரங்களுக்குள் புகுந்து நடந்தான், மேலும் உத்தரத்திலிருந்த புழைக்கதவு வாயிலாக அவனது மந்திரி அவனைக் கொன்றபோது அனேகமாக – ஒரு தோட்டாவாலா என்று எனக்குத் தெரியாது – முதற்படிகளில் அவன் ஏற்கனவே பாதங்களைப் பதித்திருந்தான். சிங்கத்தை அடிமை முடித்துக்கட்ட மற்றொரு தோட்டா அடிமையை முடித்துக்கட்டியது. பிறகு ஸெய்த் மூன்று முகங்களையும் ஒரு பாறையைக் கொண்டு நசுக்குகிறான். அவ்வாறுதான் அவன் அதைச் செய்ய வேண்டியிருந்தது; ஒரேயொரு மனிதன் மட்டும் முகம் சிதைக்கப்பட்டுக் கிடந்தானெனில் அது அடையாளச்சிக்கலை உண்டு பண்ணியிருக்கும். ஆனால் மிருகம், கருப்பன், பிறகு அரசன் என்பது ஒரு வரிசையை உருவாக்குகிறது. இவற்றில் முதலிரண்டு சங்கதிகளை வைத்துப் பார்க்கும்போது, கடைசியில் உள்ளதும் இயல்பானதாகத்தான் தோன்றும். ஆலபையோடு பேசும்போது அவன் அச்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது குறித்து வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அவன் அப்போதுதான் தனது கேவலமான செயலை முடித்துவிட்டு, இங்கிலாந்தில் இருந்துத் தப்பியோடி புதையலைத் தோண்டி எடுக்கவிருந்தான்.”

யோசனையுடன் கூடிய ஓர் அமைதி அல்லது அவநம்பிக்கை, அன்வின்னின் வார்த்தைகளைத் தொடர்ந்து வெளிப்பட்டது. தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னால் டன்ரேவன் மற்றொரு குடிகலனைத் தருமாறு பணித்தான்.

“நான் ஒப்புக்கொள்கிறேன்,” அவன் சொன்னான், “எனது இப்ன் ஹக்கன் என்பது ஸெய்த்தாகவும் இருந்திருக்கலாம் என்பதை. இதுபோன்ற உருமாற்றங்களும் ஆட்டத்தின் மரபான விதிகள்தான் வாசகனின் விருப்பத்துக்கு இணக்கமான சங்கதிகள். இவற்றில் எதை எனக்கு ஒத்துக்கொள்ள விருப்பமில்லை என்றால், புதையலில் ஒரு பகுதி பிறகும் சூடானில் இருந்தது எனும் உன்னுடைய யூகத்தைத்தான். அரசன் மற்றும் அரசனின் எதிரிகள் என இருவரிடமிருந்தும் ஸெய்த் தப்பியோடினான் என்பதை நினைவில் நிறுத்து; புதையலின் ஒரு பகுதியைப் புதைக்க அவன் நேரமெடுத்துக் கொண்டான் என்பதை விட மொத்தக்குவியலையும் திருட முயன்றான் என நம்புவதே எளிதாயிருக்கும். ஆகக்கடைசியில், அனேகமாகப் பேழைக்குள் எந்தக்காசையும் கண்டுபிடிக்க முடியவில்லை ஏனென்றால் எந்தக்காசும் மீதமிருக்கவில்லை. கொத்தனார்கள் ஒரு மிகப்பெரிய தொகையை விழுங்கியிருக்கக்கூடும். காரணம் யாதெனில், நைபுலங்கின் சிவப்புத் தங்கம் போலல்லாது, செல்வம் தீர்க்கமுடியாத ஒன்றல்ல. ஆக ஏற்கனவே ஊதாரித்தனமாகச் செலவிடப்பட்ட ஒரு புதையலை மீட்கத்தான் இப்ன் ஹக்கன் கடல்களைக் கடந்து வந்திருந்தான்.”

“ஊதாரித்தனமாகச் செலவிடப்பட்டதாக நான் சொல்லக்கூடாது,” அன்வின் சொன்னான். “மந்திரி அதனை முதலீடு செய்திருந்தான், மதநம்பிக்கையற்றவர்கள் நிரம்பிய ஒரு தீவில் செங்கலால் ஆன ஒரு வட்டவடிவப் பொறியை அவன் உருவாக்கியிருந்தான், ஓர் அரசனை வஞ்சகமாக வரவழைக்க மட்டும் என்றல்லாது அதையே அவனது கல்லறையாக மாற்றுவதற்கும். ஸெய்த், உன்னுடைய யூகம் சரியாக இருக்குமேயானால், அச்சம் மற்றும் வெறுப்பின் காரணமாகவே அவ்வாறு நடந்து கொண்டான், பேராசையால் அல்ல. அவன் புதையலைத் திருடினான், ஆனால் உண்மையில் தான் தேடியது வேறெதையோ என்பதைப் பிற்பாடுதான் அவன் உணர்ந்தான். உண்மையில் இப்ன் ஹக்கன் இறந்து கிடப்பதைப் பார்க்கத்தான் அவன் விரும்பினான். அவன் இப்ன் ஹக்கனாக நடித்தான், அவன் இப்ன் ஹக்கனைக் கொன்றான், பிறகு இறுதியில் அவன் இப்ன் ஹக்கனாக மாறினான்.”

“ஆம்,” டன்ரேவன் ஒத்துக்கொண்டான். “அவன் – மரணத்தால் அடையாளம் தெரியாத ஒருவனாக மாறிப்போவதற்கு முன்னால் – என்றேனும் ஒருநாள் தான் அரசனாக இருந்ததை அல்லது அரசன் என மற்றவர்கள் நம்பியதை திரும்பிப்பார்க்க ஆசைப்பட்ட, ஒன்றுக்குமாகாத ஒரு மனிதன்.”