எத்தனையோ பேர் எத்தனையோ தொழில்களைச் செய்கிறார்கள்.  ஆனால் சிலருக்கு மட்டுமே அவர்களது தொழில் பிழைப்பிற்கான வழி  என்பதைத் தாண்டி,  மறக்க முடியாத அனுபவங்களைத் தருகிறது. எத்தனையோ மருத்துவர்கள் எத்தனை எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளார்கள். ஆனால் கோனி மரியானா என்ற லத்தீன் அமெரிக்கப் பெண் மருத்துவருக்கு மட்டும் அவரது மருத்துவத் தொழில் வாழ்வில் என்றும் மறக்க முடியாத அனுபவங்களைத் தந்திருக்கிறது.  அவரது  மருத்துவத் தொழில் வாழ்வின் உச்சத்தில் அவர் மருத்துவம் பார்க்க வேண்டிய  குடும்பம் ஒரு கணவன் மனைவி மட்டுமே. அதிலும் அவருக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் தனது அந்த ஒரே நோயாளி தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்வதாக அமைந்தது. ஆம், கோனி மரியானா எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் தனிப்பட்ட மருத்துவராக வெள்ளை மாளிகையில் பணியாற்றியவர். அவரது The White House Doctor – My Patients were Presidents  என்ற நினைவுக் குறிப்புகள்  அந்த எட்டாண்டு அனுபவங்களின் சுவையான தொகுப்பாக வந்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர்தான் எல்லாம். அவர்தான் முதல் குடிமகன். அவர் குடும்பம்தான் முதல் குடும்பம். அவர் மனைவியே முதல் பெண்மணி. அவர் மகளே நாட்டின் முதல் மகள். அவரது செல்ல நாய் நாட்டின் முதல் நாய். அது போலவே அவர்தான் நாட்டின் முதல் நோயாளி.  அந்த முதல் நோயாளியின் மருத்துவர் என்ற வகையில் கோனிதான் அந்த எட்டாண்டுகளுக்கு நாட்டின் முதல் மருத்துவர்.

கோனியின் குடும்பம் லத்தீன் அமெரிக்காவிலிருந்து இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய குடும்பம். பரம்பரையாக அவர்கள் குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் அமெரிக்கக் கப்பற்படையில் Steward எனப்படும் சமையல் பரிசாரகர்கள். அப்பா உலகம் முழுவதுமுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளங்களில் கப்பற்படை அட்மிரல்களுக்குக் கோப்பையில் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டு. ஷுக்களுக்கு பாலீஷ் போட்டுத் தந்து கொண்டு, அவர்களின் ராணுவ சீருடைகளை அயர்ன் செய்து அணிந்து கொள்ள உதவி செய்து கொண்டு இருந்தவர் என்பதால் கோனி சிறுவயதிலேயே உலகம் சுற்றியவள். கப்பற்படை உதவித் தொகையில் படித்து, கப்பற்படை வீரர் குழந்தை என்ற இடஒதுக்கீட்டில் கப்பற்படை நடத்தும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து மருத்துவர் ஆகிறாள். இதுவரை குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் சேவகர்களாகப் பணிபுரிந்த அதே கப்பற்படையில் மருத்துவ அதிகாரியாகப் பணியில் சேர்கிறாள். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ஒரு பெரிய போர்க் கப்பலின் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்படுகிறாள். 600 ஆண் வீரர்களும், 150 வீராங்கனைகளும் பணிபுரியும் அந்தக் கப்பலின் ஒரே மருத்துவ அதிகாரி, அதுவும் இனரீதியாக coloured  என்று ஒதுக்கப்படும் லத்தீன் அமெரிக்கப் பெண் அதிகாரி கோனிதான்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் போது, வெள்ளை மாளிகையில் அனைத்து அதிகாரிகளையும் புது நிர்வாகத்தின் விருப்பத்திற்கேற்ப மாற்றிவிடுவார்கள். அதிபருடன் நாள் முழுக்க்க் கூடவே இருக்க வேண்டிய மருத்துவ அதிகாரிப் பதவியும் அதில் ஒன்று.  இந்த மருத்துவர் ராணுவ மருத்துவராக இருப்பது அவசியம். காரணம் ராணுவ மருத்துவர்கள் அவசர காலத்தில் பதற்றப்படாது, கிடைக்கக் கூடிய வசதிகளை வைத்து மருத்துவம் பார்த்து உயிர்களைக் காக்கக் கூடியவர்கள். எனவே, முதல் நோயாளியின் முதல் மருத்துவர் ராணுவ மருத்துவராக இருக்க வேண்டும்.   பில் கிளிண்டன் அதிபராக வருகிறார். அவருக்கான முதல் மருத்துவராக கோனி தேர்ந்தெடுக்கப்படுகிறார். கோனி அப்போது கப்பற்படையில் கேப்டன் அந்தஸ்தில் இருக்கிறார். தரைப்படையில் கர்னலுக்குச் சமமான பதவி. இவருக்கு உதவியாக ஆண் நர்ஸ் ஒருவர், பெண் நர்ஸ் ஒருவர் என்று ராணுவத்தினரே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதிபர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்னாலேயே போகவேண்டும்.  இவருக்கும், இவரது உதவியாளர்களுக்கும் அதிபரின் சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் பயிற்சி தருகிறார்கள். எப்போதும் கையில் வாக்கி டாக்கி. காதில் இயர் போன். துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களுக்குப் பதிலாக மருத்துவப் பெட்டி.

அதிபரை யாரேனும் சுட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்கெல்லாம் பயிற்சி தரப்படுகிறது. ஒரு ராணுவ வீரர் அதிபராக நடிப்பார். ஒருவர் தீவிரவாதியாக நடிப்பார். நடிப்பு அதிபர் சுடப்பட்டதும், கோனி தன் மருத்துவப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு  விழுந்து கிடக்கும் அதிபரிடம் ஓடுகிறார். இவர் மீது ஒரு போலி குண்டு பாய்கிறது. ரிகர்ஸல் நிற்கிறது. பயிற்சி தரும் அதிகாரி கோனியிடம் இப்படி நீங்கள் தடதடவென்று ஓடக் கூடாது. உங்களையும் சுட்டுவிட்டால், பிறகு யார் அவருக்கு முதலுதவி செய்வது? அவரை நாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திய பிறகு, “டாக்டர், வாங்க“  என்று அழைக்கும் போதுதான் வரவேண்டும். நீங்கள் உயிரோடு இருந்தால்தானே முதலுதவி செய்ய முடியும்? என்கிறார்.  முதல் நோயாளிக்கு மருத்துவம் பார்ப்பது பற்றிய முதல் பாடம் இப்படியாகக் கிடைக்கிறது கோனிக்கு.

இந்த வேலைக்கு அசாத்தியப் பொறுமை வேண்டும் என்கிறார் கோனி. அதிபர்  இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பப் போகிறார், தயாராக இருங்கள் என்று வாக்கி டாக்கி சொல்லும்.  மணிக்கணக்காகக் காத்துக் கொண்டே இருக்க வேண்டும். திடீரென அவர் வந்து கொண்டிருக்கிறார் என்பார்கள். அடுத்த கணம் காருக்கு ஓட வேண்டும். இரண்டு மூன்று மணி நேரம் காத்திருக்க நேரும். ஆனால் கிளம்பும் போது இரண்டு மூன்று நிமிடம் கூட கிடைக்காது.  டாக்டர் காரில் ஏறிவிட்டாரா? என்று யாரும் பார்க்க மாட்டார்கள். அவரவர் சைரனை அலற விட்டுக் கொண்டு கிளம்பி விடுவார்கள்! அதிலும் கோனிக்கு லக்கேஜ் அதிகம்.  தன் சொந்தப் பொருட்களை வைத்திருக்கும் பேக்  பாக், ஒரு ஹேண்ட்பேக், எல்லாவிதமான உபாதைகளுக்கும் அவசரத்திற்குத் தர வேண்டிய மருந்துகள் அடங்கிய மருத்துவப் பெட்டி, மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால் இதயத்திற்கு ஷாக் தருவதற்கான டிஃப்ரிப்லேட்டர் என்ற கருவி உள்ள பெட்டி ( தமிழ் சினிமாக்களில் இதய நோயாளிக்கு நெஞ்சில் வைப்பார்களே அயர்ன் பாக்ஸ் போன்ற ஒன்று – அதுதான் என்று நினைக்கிறேன்) பிறகு அதிபர் மற்றும் அவர் மனைவிக்கு தேவைப்பட்டால் ஏற்றுவதற்காக ரத்தம் இரு தனித்தனி பைகளில் என இத்தனையையும் தூக்கிக் கொண்டு காருக்கு ஓட வேண்டும். இவரது கார் அதிபரின் காருக்கு அடுத்ததாக வருவது. கோனி லத்தீன் அமெரிக்கர் என்பதால் மற்ற அமெரிக்கப் பெண்களைப்  போல வாட்ட சாட்டமான உருவ அமைப்பு இல்லாதவர். இவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடுவது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கும். வெளிநாட்டுப் பயணம் என்றால் இவற்றோடு துணிமணிகள் கொண்ட பெட்டிகளும் சேரும்.  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இன்னின்ன விதமான உடை என்ற மரபுகளுக்கு ஏற்ப உடைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

இதில் மற்றொரு விஷயம் அதிபர் உடன் எப்போதும் ஒரு மருத்துவர் பயணிப்பது வெளிப்படையாகத் தெரியக் கூடாது என்பது. அதிபர் பெரிய வியாதிஸ்தர் போல என்று அவரது இமேஜ் பாதிக்கப்படும் என்பதால், கோனி எப்போதும் புகைப்பட வெளிச்சத்தில் சிக்காது ஒதுங்கியே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. வெள்ளை மாளிகையில் முதல் நாள் வேலைக்குச் சேரும் போதே அதிபர் அலுவலகத்திலிருந்து இதைத் தெளிவாகச் சொல்கிறார்கள். Thou shalt be Invisible ! எனக்கு இதைத் தனியாகச் சொல்ல வேண்டாம் என்கிறார் கோனி. மூன்று நான்கு தலைமுறைகளாக கப்பற்படையின் சமையல் உதவியாளர்களாகவே இருக்கும் சிறுபான்மை லத்தீன் இனப் பெண்ணான நான் இயல்பாகவே யார் கண்ணிலும் படாமல் தலைகுனிந்து , இருக்கும் இடம் தெரியாமல் நடமாடப் பழகியவள் என்கிறாள்.  இனப்பாகுபாடு என்பதில் அமெரிக்கா என்ன, இந்தியா என்ன. எல்லாக் கழுதைகளும் ஒன்றாகத்தான் இருக்கின்றன ! அதைவிட மோசம், அதிபர் தரும் விருந்துகளில் இவர் போன்றவர்கள் நடத்தப்படும் விதம்.  அதிபருக்குப் பக்கத்திலேயே அவர் தன் கண் பார்வையில் இருக்கும் விதமாக, தான் மருத்துவர் என்று காட்டிக் கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். இது போன்ற விருந்துகளுக்கு வரும் மிகப் பெரிய இடத்துப் பொன் வால் நரிகள், கோனியைப் பார்த்து, “இந்தாம்மா, கொஞ்சம் ஒயின் கொண்டுவா“ என்று அதிகாரம் செய்வதும் உண்டு.  பக்கத்தில் இருக்கும் பணியாள்கள் அப்போதும் இவர் டாக்டர் என்று சொல்லமாட்டார்கள். விரைந்து அந்தப் பெண்கள் கேட்பதை தாம் கொண்டு வந்து தந்துவிடுவார்கள்.

அதிபரின் வெளிநாட்டுப் பயணம் என்றால் வேலை படு டென்ஷனாகி விடும். பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் செல்லக் கூடிய நாட்டிற்கு ஒரு அட்வான்ஸ் டீமை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள் அல்லவா? அது போல கோனியும் ஒரு ராணுவ டாக்டரை அனுப்பி, ஏதேனும் அசம்பாவிதம் என்றால் அந்த ஊரில் பெரிய மருத்துவமனை எது? அங்கு உள்ள வசதிகள் எப்படி? நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கும், அந்த மருத்துவமனைக்கும் எவ்வளவு தூரம்? மருத்துவமனையை அடைய எவ்வளவு நேரமாகும்? என்று எல்லாம் ஆராய்ந்து  அதற்குத் தகுந்தாற் போல் திட்டமிட வேண்டும்.  அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்களுடன் முதலிலேயே பேசி வைத்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் இவர்களது விமானம் அல்லது ஹெலிகாப்டர் இறங்கும் இடமே கூட பிரச்சனையாகிவிடும்.  ஒரு குட்டி ஆப்பிரிக்க தேசத்திற்கு ஒருமுறை செல்கிறார்கள். ஹெலிகாப்டர் ஒரு காடு போன்ற இடத்தில் புல்வெளியில் இறங்க வேண்டும். அந்தப் புல்வெளி நாற்பத்தியோரு விதமான நச்சுப் பாம்புகள் நடமாடும் பகுதி என்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். அவை என்னென்ன ரகம்? அவற்றின் விஷத்தை முறிக்க என்னென்ன மருந்துகள் வேண்டும்? என்று ஆராய்ந்து பார்த்து அவற்றைத் தனியாக ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு செல்கிறார் கோனி. ஜோர்டன் அதிபர் மரணமடைகிறார். இறுதி நிகழ்ச்சிக்கு  முன்னாள் அதிபர்களான ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர், பெரிய ஜார்ஜ் புஷ் ஆகியோரும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் கிளிண்டனுடன் வருகிறார்கள்.  அவர்களது  உடல்நலம், அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள் என்று எடுத்துக் கொண்டு எந்த நேரத்தில் எந்தக் கிழவருக்கு என்ன நடக்குமோ? என்று திக் திக்கென்று  ஒரு விநாடி கூட தூங்காது டென்ஷனாக ஜோர்டன்  போய் வருகிறார் கோனி. ஆனால், எல்லோருமே உலகையே ஆட்டிப் படைத்த ஏகாதிபத்தியக் கிழடுகள் என்பதால் ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை. கோனிக்குத்தான் பிபி எகிறியது ! இப்படி கோனி கிளிண்டனுடன் 132 நாடுகளுக்குச் சென்ற அனுபவங்கள் பற்றி 132 புத்தகங்கள் எழுதலாம் !

வெள்ளை மாளிகை டாக்டர் என்றால் எளிதான வேலையா? அங்குச் சின்ன விஷயம் என்பதே கிடையாது. எல்லாமே பெரிய விஷயங்கள்தாம். இதற்கு ஒரு நல்ல உதாரணமும் சொல்கிறார் கோனி. ஒரு முறை கிளிண்டனுக்கு காலில் அடிபட்டுவிடுகிறது.  முதலுதவி செய்து ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். முதலுதவி செய்து விடுகிறார் கோனி. வெள்ளை மாளிகையின் எந்த வாகனமும் சக்கர நாற்காலியை ஏற்றிச் செல்லத் தோதாக இல்லை. கிளிண்டன் ஸ்டிரெச்சரில் படுத்து வர மறுக்கிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்து டாட்டா காட்டியவாறே சென்று எனக்கு ஒன்றும் ஆகவில்லை, சின்ன அடிதான் என்று பத்திரிகைகளுக்குக் காட்ட வேண்டும் என்பது அவரது எண்ணம்.  எங்கெங்கோ விசாரித்து சமீபத்தில் விபத்தில் சிக்கிய ஒரு செனட்டர் சக்கர நாற்காலியை ஏற்றி இறக்கும் விதமாகத் தன் காரை மாற்றியிருக்கிறார் என்பதை அறிந்து அவரிடமிருந்து அந்தக் காரை ஓசி வாங்கி வருகிறார்கள். கிளிண்டனின் டாட்டா காட்டும் ஆசை நிறைவேறுகிறது. அடுத்து, அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து தருவது. கோனி முழு மயக்கம் அடையும்படியாக மயக்க ஊசி செலுத்த வேண்டும். லோக்கல் அனஸ்தீஷியா கூடாது என்கிறார். ஆனால், அரசியல் ஆலோசகர்கள் அதிபர் முழு மயக்கத்தில் ஆழ்ந்தால், அதற்கு இருபத்தியைந்தாவது அரசியல் சட்டத் திருத்தத்தை பிரயோகித்து, ஆட்சியைத் துணை அதிபரிடம் தரவேண்டும். அதற்கு ஏகப்பட்ட  நடைமுறைகள் உள்ளன என்கிறார்கள்.  கிளிண்டனுக்கும், அவரது அரசியல் ஆலோசகர்களுக்கும் அந்த அறுவை சிகிச்சைக்கான காலத்திற்குக் கூட அதிகாரத்தை துணை அதிபர் வசம் தர பயம் போலும் ! பிறகு தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்தி, அதிபர் முழு நினைவுடன் இருக்கும் போதே அறுவை சிகிச்சை நடக்கிறது. Here little things are big things என்று கோனிக்குச் சொல்லப்பட்டது சரிதான்.

செய்திகளில் அடிபடவே கூடாது. ஏனெனில் வெள்ளை மாளிகையைப் பொறுத்தவரை எந்தச் செய்தியுமே நல்ல செய்தியல்ல. கிளிண்டன் மோனிகா விவகாரம் அப்படித்தான்.  மோனிகா தன் உடைகளில் கிளிண்டனின் டிஎன்ஏ இருக்கிறது என்கிறார். கிளிண்டனின் ரத்தத்தை எடுத்து, அந்த டிஎன்ஏவுடன் ஒப்பிட வேண்டும். கோனிதான் கிளிண்டனின் ரத்தத்தை எடுக்கிறார். அதற்கு ஏகப்பட்ட சாட்சிகள். ஏகப்பட்ட ஆவணங்கள்.  கிளிண்டனுக்கு சிறு உடல் உபாதை என்றாலும் பதறிப் போகும் கோனி, முதன்முறையாக வெறுப்போடு அவர் கையில் ஊசி குத்தி ரத்தம் எடுக்கிறார். ஆனால் கோனி அதிகாரத்திற்குப் பணிந்தே பழக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கப் பெண்.  அதுவும் ராணுவ அதிகாரி வேறு. அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு செம்பர் கம்பை (semper gumby)  என்பது வேதவாக்கு. எப்போதும் வளைந்து கொடு என்பது அதன் பொருள். ஆற்றங்கரை மேட்டில் ஆடி நிற்கும் நாணலாக கோனி தன் கடமையைச் செய்கிறார்.

கிளிண்டன் ஆட்சியிலேயே கோனி அட்மிரலாக பதவி உயர்வு பெறுகிறார். அட்மிரலுக்கான சின்னங்களை அணிவிக்கும் சடங்கு வெள்ளை மாளிகையில் நடக்கிறது. கிளிண்டனே நேரில் வந்து அணிவிக்கிறார்.  வெள்ளை மாளிகையில் தனது பணிக்காலத்தில் அதிபரின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, அங்கு பணிபுரியும்  சமையல்காரரிலிருந்து, தோட்டக்காரரிலிருந்து, மிகப் பெரிய ராணுவ ஜெனரல் வரை எத்தனையோ பேருக்குத் தலைவலிக்கு, வயிற்றுப் போக்குக்கு என்று மருத்துவம் செய்திருக்கிறார் கோனி. கோனியின் இந்தப் புத்தகத்திற்கு  அணிந்துரை வழங்கியிருக்கும் கிளிண்டன் எனக்குக் காட்டிய அதே அக்கறையை வெள்ளை மாளிகையின் சமையல்காரிகளுக்கும், துப்புறவுத் தொழிலாளிகளுக்கும் காட்டியவர் கோனி என்று எழுதியிருக்கிறார்.  அட்மிரல் பதவியை விட அதைத் தான் பெரியதாக நினைக்கிறார் கோனி.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – The White House Doctor –  My Patients were Presidents by Connie Mariano.