1. மெளனத்தானின்
கல்லறை வாசகம்

அவர்
இப்போது
மட்டும்தான்
பேசவில்லை
என்று நினைத்துவிடாதீர்கள்.

இப்போதாவது
கொஞ்சம் பேசுகிறார்
உயிரோடு இருக்கும்போது
இதுகூடப் பேசியதில்லை.

அவர்
என்ன நினைத்தார்
என்பது
தெரியவில்லையே
என்று நினைத்துவிடாதீர்கள்.

அது
அவருக்கும்
தெரியாது.

அவர்
ஏதாவது
ஒரு கருத்தாவது
சொல்லி இருக்கலாமே
என்று நினைத்துவிடாதீர்கள்.

இருந்தால்
சொல்லி
இருப்பார்.

அவரை
அயோக்கிய ராஸ்கல்
என்று
நினைத்துவிடாதீர்கள்.

அய்யோ
அதற்கெல்லாம்
அவருக்குத் தகுதி இல்லை.

அவரை
நல்லவர்
என்று
நினைத்துவிடாதீர்கள்.

அய்யோ
அதற்கெல்லாம்
அவருக்குத் தகுதி இல்லை.

என்னதான்
செய்தார்?
சாப்பிட்டார்.

இன்னும்கூடக்
கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாம்
பாதியில் போய்விட்டார்.

தூங்கினாரா?
இன்னும்கூடக்
கொஞ்சம் தூங்கிவிட்டுப் பிறகு
போயிருக்கலாம்.

2. புகைப்படம்

எங்கள்
பழைய
முதலாளி
இருக்கும்வரை
அவரைப் பற்றிய
புகழ் பாடல்கள்
கேட்டுக் கொண்டே இருக்கும்.

இன்று
போய்ப் பார்த்தபோது
ஒரு புகைப்படம்தான் இருந்தது.
அதுகூட
அவர் போல் இல்லை.

கல்லாவில் நின்றவன்
அவரைப் பற்றிப் பேசக்கூட
விரும்பவில்லை.

ஏதோ
எடுத்தான்
மடித்தான்
கொடுத்தான்.

கேட்டிருந்தால்
அந்தப் புகைப்படத்தைக் கூட
ஒரு நல்ல விலைக்கு
மடித்துக் கொடுத்திருப்பான்

3. பாட்டி

பாவம்தான்
எங்கள் பாட்டி.

வீட்டுக்குக் கீழே
காபிக் கடைக்குப்
பக்கத்தில்
ஒரு பள்ளிக்கூட மேஜையும்
பிளாஸ்டிக் நாற்காலியும் போட்டு
நன்றாகத்தான்
நடந்து கொண்டிருந்தது
அவள் வியாபாரம்.

தமிழ் முரசு இருக்காது
சீனப் பத்திரிகையும்
ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சும்
மட்டுமே விற்றாள்.

ஒரு கருங்காபியும்
ரொட்டித் துண்டுகளும்
வாங்கிக் கொண்டு
மெல்லக் கடிப்பாள்
மெல்லச் சிரிப்பாள்.

என்டியுசி இருக்கிறது
711 இருக்கிறது
நவீன மயிர்த் திருத்தகம்
பழைய மத்தாய் கடையாய் மாறிப்போனது
அரசியல் பேசுவதற்கு
பேனா பேப்பர் விற்கும் கடையும் இருக்கிறது
எப்போதும் கூட்டம் அலைமோதும் க்ளினிக் உண்டு
பாட்டி கடை மட்டும் இல்லை.
இப்போதெல்லாம்
வீட்டு வாசலில்
தனியாக
அமர்ந்து
சொந்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்..

4. கட்டியங்காரன்

சிராங்கூன்
பிளாசா
வாசலில்
சந்தித்துக் கொண்ட
இரவுகளைத்
தேடித் திரும்பி
அவன்
என்னைப் பார்க்க வந்தான்.

சிராங்கூன் பிளாசா
இல்லை என்றான்.

விகேகே கடை இல்லை.

இரவு பத்து மணி என்றால்
அன்பு உணவகம்தான்
அன்றெல்லாம்
திறந்திருக்கும்
காபிக்கும் தோசைக்கும்.

அதுவும் இல்லை.

கோசா மகன்
ஜெயராம் அமர்ந்திருப்பார்.

வீட்டில் கொண்டுபோய் விடட்டுமா என்று
கேட்பார்.

அவரும் இல்லை என்றான்.
நாடகம் எல்லாம்
ஓய்ந்துவிட்டதாகச் சொன்னான்.

எதுவும் இல்லை என்றான்.
அவன் என்
குறுக்கேதான்
நின்று கொண்டிருந்தான்.

நீயும்தான் இல்லை
என்று
சொல்ல நினைத்தேன்.

5. புளோக் 70

எங்கள்
புளோக்கைப்
போய்ப் பார்க்க
வேண்டும் என்று
ஆசை வந்தது.
காலையில்
சேவல்கள் கூவும்.

இரவெல்லாம்
ரயில் கூவும்.

போனோம்.

வானம்கூடக்
கொஞ்சம் மாறியிருந்தது.

மரவள்ளிக் கிழங்கும்
கரும்புச் செடிகளும்
மாமரங்களும்
இல்லாமல்
பளிச்சென்று
கண்கூசியது.

சேவல் எல்லாம்
இடம்பெயர்ந்துவிட்டது.

ரயில்?
அதுவும்.

தண்டவாளமும்
இரும்புத் துண்டுகளும்
முள் செடிகளும்
மண்போட்டு மூடப்பட்ட
வழவழப்பான
செந்நிறப் பாதையில்
வெள்ளைக்கார மணியொலிகளைச்
சிந்தும் சைக்கிள்கள் போய்க் கொண்டிருந்தன.

ரயிலோரத்துச்
சிறுகோவில்
அகன்று
தொடுவான் நோக்கிய
புதுக் கட்டடம்.

எங்கள்
புளோக்?
காணவில்லை.

பிடுங்கிவிட்டார்கள்.
indrajit8363@gmail.com