1.

அம்மாதான் எல்லாம். அம்மாவுக்காகத்தான் எல்லாமும்.

அம்மா நிர்மான் பவனில் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்தாள். எனக்குப் புதுதில்லி பிடிக்கவில்லை என்றபடி தனது கைப்பையை சோபாவில் தூக்கி எறிந்துவிட்டு சோர்வாக உட்கார்ந்தவளின் அருகே சென்று உட்கார்ந்தேன்.

“ஏம்மா ஒருமாதிரி இருக்க, ஏன் தில்லி பிடிக்கல?”

“சலிப்பா இருக்குடி இந்த வாழ்க்கை. வீடு, ஆபீஸ், திரும்பவும் வீடுன்னு கோடு போட்டாப்புல இருக்கு”

“சரி என்ன செய்யலாம்னு நினைக்கிற?”

“சென்னைல எங்க ப்ரான்ச் இருக்கு, ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன், கிடைச்சா உடனே போயிடலாம். எனக்குக் கடல் பார்க்கணும் அத்வைதா.” அம்மாவுக்கு கடல் பார்ப்பதென்றால் இவ்வுலகமே மறந்துவிடும். மணிக்கணக்கில் கடல் முன் அமர்ந்திருப்பாள். அப்படி என்னதான் அந்தக் கடலில் இருக்கும் எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏன் கடல் பிடிக்கும் என்று கேட்டால் ஒரு மெல்லிய புன்னகைமட்டுமே அம்மாவிடமிருந்து பதிலாய் வரும். அதுவொரு மென்சோகத்தின் வெளிப்பாடு. அம்மா அப்பாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவள். பதினெட்டு வயதில் காதல் திருமணம். பத்தொன்பதில் நான் பிறந்தேன். இப்பொழுது எனக்கு இருபத்தி இரண்டாகிறது. அப்பா என் ஐந்தாவது வயதில் விபத்தொன்றில் இறந்துபோனார். அதற்குப் பின் அம்மாதான் எல்லாமுமாக இருந்தாள். அம்மாவை இரும்புப் பெண் என்பாள் சித்தி.

அம்மா எதிர்பார்த்திருந்த டிரான்ஸ்பர் ஆறுமாதத்தில் கிடைத்தது. தில்லிக்கு குட்பை சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தோம். சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் விண்ணப்பித்திருந்தேன். வேலையும் கிடைத்தது. இனி அம்மாவின் பாரங்களை நானும் சுமந்து கொள்ளலாம் எனத் தோன்றியபோது மனசு இறகைப் போலானது. கம்பெனியில் சேர்ந்த மூன்றாவது நாளில் ப்ராஜக்ட் ஒன்றிற்கு தேர்வாகினேன். அந்த டீமில் ஆறுபேர் இருந்தனர்.  ஏழாவதாக நான் சேர்ந்த அதே நாளில்தான் சித்திரனும் எங்கள் டீமில் வந்து சேர்ந்தான்.இருவரும் ஒரே நாளில் சேர்ந்ததால் புதிய ப்ராஜக்ட்டைக் கற்றுக்கொள்ளும் போது சேர்ந்து கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களைப் பரிமாறிக்கொண்டு தெளிவுபெறவும் அடிக்கடி எங்களுக்குள் பேசிக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. மதிய உணவிற்குச் செல்லும்போது சித்திரனும் நானும் ஒன்றாகவே போக ஆரம்பித்தோம்.

 

2.

சித்திரனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு கவிதை எழுதுவதும் உலகத் திரைப்படங்கள் பார்ப்பதும்தான். எனக்குக் கவிதை வாசிக்கப் பிடிக்கும் என்பதால் அவன் எழுதிய கவிதைகளை முதல் ஆளாய் வாசித்து அதைப் பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பேன். முதலில் அவனது கவிதைகளை மட்டுமே ரசித்துவந்தவள் மெல்ல அவனையும் ரசிக்க ஆரம்பித்தேன். ஆறடி உயரம், மெல்லிய பூனை மீசை, அடிக்கடி நெற்றியில் விழுகின்ற முடியைச் சரிசெய்யும் இடதுகை, அந்தக் கையில் நீண்ட விரல்கள், முப்பத்துமூன்று வயது என்று அவனாகச் சொன்னால்தான் தெரியும். கச்சிதமான உடற்கட்டு, பார்த்தவுடனே ஈர்க்கும் காந்தக் கண்கள்.  கவிதைகளைப் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் விரிகின்ற அவனது விழிகளுக்குள் விழுந்தவள் மீண்டு வர முடியாத ஆழத்தில் அவனது மனதில் புதைந்தே கிடந்தேன். அவனுக்கும் புரிந்தபோது இருவருமே வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் நேசிக்கத் துவங்கியிருந்தோம்.

என்னை விட அவன் அதிகம் நேசிப்பது அவனது கவிதைகளைத்தானோ என்று அடிக்கடித் தோன்றும் அளவிற்கு தொடர்ந்து கவிதை பற்றிய நினைவிலோ அல்லது உரையாடலிலோ உணர்வுப்பூர்வமாகக் கரைந்திருப்பான். நான்கு கவிதைநூல்கள் வெளியாகியிருந்தன. ஐந்தாவது கவிதை நூல் வெகு சீக்கிரம் வெளியிடப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தான். அவனது நான்கு நூல்களையும் வாசிப்பதற்காக எடுத்துச் சென்று என் வீட்டில் என் படுக்கையில் படுத்தபடியே ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு கவிதையும் என்னை வேறோர் உலகிற்கு இழுத்துச் சென்றன. ஒரு மனிதனால் இவ்வளவு ரசிக்க முடியுமா? அப்போதுதான் என்னுள் பல கேள்விகள் வந்து விழுந்தன. இவ்வளவு ரசிக்கத் தெரிந்தவனை இதுவரை யாருமே நேசித்ததில்லையா? ஏன் முப்பத்துமூன்று வயதிலும் திருமணம் ஆகாமல் இருக்கிறான்? அவசரப்பட்டு அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டேனோ? நாம் நேசிக்கும் ஒருவரைப் பற்றிய சந்தேகக் கேள்விகள் நம்முள் எழ ஆரம்பித்தவுடனே அதைக் கேட்டுவிடுவது நம் உறவைப் பாதிக்காமலிருக்கச் செய்யும். காலம் தாழ்த்திய கேள்விகள் பெரும் இடைவெளியை நம் நேசத்தின் இடையே உருவாக்கிவிடும் என்பதை அறிந்தே இருக்கிறேன். நாளை அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக இதைப் பற்றி கேட்டுவிட வேண்டும் என்று நினைத்தபடியே உறங்கிப்போனேன். விளக்கை அணைப்பதற்காக என் அறைக்குள் நுழைந்தாள் அம்மா.

 

3.

இரவு பதினொரு மணி. என் அறையிலிருந்து வெளியேறினேன். இரண்டு நிமிடம் நடந்தால் திருவான்மியூர் கடற்கரை. ஆட்கள் அதிகமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரு நாய்கள் தென்பட்டன. இன்று மாலை மனிதர்கள் விட்டுச் சென்ற மிச்சங்களைத் தின்பதற்காகப் பசியுடன் அலைந்துகொண்டிருந்தன. கடற்கரை மணலில் ஈரம் படர்ந்திருந்தது. இந்த மழைக்காலத்தின் இரவுக் கடற்கரைக்கெனத் தனியொரு வசீகரம் இருக்கிறது. அது ஒரு ரகசிய மலர் முகிழ்வதைப் போல யாரும் அறியாமல் அந்த வசீகரத்தை வெகு சிலருக்கே கடத்திவிடும் மாயத்தை கொண்டிருக்கிறது. எனக்குள் அந்த வசீகரம் கடத்தப்படும் போதெல்லாம் நான் அதிகமாய்க் கவிதைகள் எழுதுகிறேன். கடற்காற்று தருகின்ற அதீத இதமும் மகிழ்வும் வேறெதுவும் தருவதில்லை. வாழ்வின் கசப்பான தருணங்களை கடந்து செல்ல கடலோ அல்லது கடல் பற்றிய நினைவுகளோதான் எனக்குத் தந்திருக்கிறது. அலை ஒதுக்கிக் கரை சேர்கின்ற குப்பைகளென மனதின் கசடுகளை அலையின் ஞாபகங்களைக் கொண்டே அகற்றியிருக்கிறேன். ஆனாலும் இப்போது மனதை உறுத்தும் ஓர் உறவை என்ன செய்வது? இது சரியா அல்லது தவறா என்பதை யாரிடம் கேட்பது? தலைசாய மடியில்லாத வாழ்வில் என் தலையைக் கொய்து என் மடிக்கிடத்தி நானே தலைகோதினால்தான் தீருமோ இந்தத் தவிப்பு? இத்தனை வருடங்கள் இல்லாத ஓர் அன்பைக் கண்டடைந்தது என் துரதிர்ஷ்டமா? அலைபாயாத மனதை எது இப்படி அலைக்கழிக்க வைக்கிறது?

என் அத்வைதாவுக்கு நான் செய்வது துரோகமில்லையா? எனக்குள் எழுகின்ற கேள்விகளுடன் வெகு தூரம் நடந்தேன். வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னிக்கொண்டிருந்தன நட்சத்திரங்கள். என் கேள்விகளுக்கு அவை பதிலிட்டால் வாழ்வு எவ்வளவு அர்த்தமுள்ளாக இருக்கும் எனத் தோன்றியது.

அத்வைதா, என் கண்மணி! என்னை மன்னித்துவிடு என்று முணுமுணுத்தன என் இதழ்கள். மனதில் ஆழத்தில் அவள் என் மனதைப் புரிந்துகொள்வாள் எனவும் தோன்றியது. கடல் மெளனித்துக் கிடந்தது.

 

4.

சித்திரன் ட்ரெயினிங் ஒன்றிற்காக பெங்களூரு சென்றிருந்தான். வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். எனக்கு அவனைப் பார்க்காமல் மனமும் முகமும் வாடிப்போனது. எனக்குத் திடீரென்று அம்மாவை நினைத்து கவலை வந்தது. தன் இருபத்து மூன்றாவது வயதிலிருந்து துணையின்றி இருக்கிறாள். எனக்காக மறுமணம் செய்துகொள்ளாமல் வேலை வேலை என்று அலைந்து என்னை வளர்த்தவள். ஆனாலும் அவள் தனிமையில் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அது அப்பாவுக்கான கண்ணீரா அல்லது துணையற்ற தன் நீண்ட வாழ்வைப் பற்றிய கண்ணீரா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. அம்மா அழகி. சிரிக்கும்போது கன்னக்குழியும் மின்னும் கண்களையும் கொண்டவள். பார்த்தவுடனே சட்டென்று பிடித்துப்போய்விடும். எத்தனை எத்தனை கண்கள் அவளுக்காகத் தவமிருந்திருக்கும்? யாரையுமே பொருட்படுத்தாத அவளது வைராக்கியம் எவ்வளவு உறுதியானது? எவ்வளவுதான் மனதைக் கட்டுப்படுத்தினாலும் அவளது உடலை எப்படி அவள் கட்டுப்படுத்தினாள் என்பது இப்போது எனக்குப் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. உடலின் தேவையைக் கடந்து செல்லத்தான் கடல் மீது காதல் கொண்டாளோ என்று கூட நினைத்திருக்கிறேன்.

இந்த நாற்பத்தியொரு வயதிலும் கச்சிதமான உடலும் அழகும் கொண்டவளாகவே அம்மா இருக்கிறாள். வேலை முடிந்து தெருவிலிருந்து வீடு நோக்கிக் காட்டன் புடவையில் அம்மா நடந்து வரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அம்மாவை ஏன் மறுமணம் செய்துகொள்ளச் சொல்லக்கூடாது என யோசித்திருக்கிறேன். மறுமணம் என்கிற பேச்சை எப்பொழுதாவது நடராஜ் மாமா எடுத்தால் பார்வையால் அவரை அடக்கிவிடுவாள். அதனால் என்னாலும் அதைப் பற்றிப் பேச இயலாமல் போனது. அவள் எந்தவொரு ஆணைப் பற்றியுமே இதுவரை என்னிடம் பேசியதில்லை. ஒருவேளை திருமணத்தின் மீதே வெறுப்புற்றிருக்கலாம்.

வாட்ஸப்பில் சித்திரனின் பதிலுக்காகக் காத்திருப்பது பெரும் வேதனையையும் வலியையும் தந்தது. என்னதான் ட்ரெயினிங் என்றாலும் காதலிப்பவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப முடியாதா? நான் அவன் மீது கொண்டிருக்கும் நேசத்தில் பாதி அளவாவது அவன் என்னை நேசிக்கிறானா? ஏனிப்படி என்னைத் தவிக்க விடுகிறான்? அவனுக்கு என் மேல் விருப்பம் இருக்கிறதா இல்லையா? வரட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று நினைத்துக்கொண்டே அவனது கவிதை புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன்.

4.

அத்வைதாவிடம் என்ன சொல்லி புரியவைப்பது எனத் தெரியவில்லை. அவளைச் சந்தித்த பின்புதான் அந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது. மின்னஞ்சலைப் படித்தவுடனே அவளிடம் சொல்லியிருக்க வேண்டும். சொல்லாமல் விட்டது இப்போது என்னை நிலைகொள்ளாமல் இருக்கச்செய்கிறது. கவிஞருக்கு ஓர் ஒற்றைப்பூவின் மடல் என்கிற கவித்துவ சப்ஜக்ட் லைனோடு வந்திருந்த மின்னஞ்சலை ஆர்வமுடன் திறந்து பார்த்த நாளை நினைவுகூர்கிறேன். அதுதான் வர்ஷிணி எனக்கு எழுதிய முதல் மடல். என் கவிதைப் புத்தகத்தை வாசித்திருந்தவள் அதிலிருந்த என் மின்னஞ்சல் முகவரிக்கு மடலிட்டிருந்தாள். அதற்குப் பின் தினம் தினம் பத்துக்கும் மேற்பட்ட மடல்கள். கவிதை குறித்து நிறைய எழுதுவாள். என் அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்திருந்தாள். அந்தக் குரலின் வசீகரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அத்வைதாவின் மீதான நேசம் தன் நிறத்தை இழக்கத்துவங்கியிருந்தது. வர்ஷிணியின் ஒவ்வொரு மின்னஞ்சலுமே கவித்துவம் நிரம்பியதாக இருக்கும். ஒவ்வொரு மடலின் முடிவிலும் குறுங்கவிதையொன்றும் அமர்ந்திருக்கும்.கவிதைகள் மீதான அவளது புரிதலும் ஆழ்ந்த அவளது வாசிப்பனுபவத்தின் வெளிப்பாடாக வந்து விழுகின்ற அவளது சொற்களிலும் திளைத்துப்போகும் என் மனம். கொஞ்சம் கொஞ்சமாக என்னை வர்ஷிணி ஆக்கிரமிக்கத் துவங்கியிருந்தபோது கைகளில் ஏந்தியிருக்கும் மழைநீர் நழுவிச் செல்வது போல அத்வைதா என்னிலிருந்து நழுவ ஆரம்பித்திருந்தாள்.

குற்றவுணர்வுடன் எவ்வளவு காலமிருப்பது. அத்வைதாவிடம் வர்ஷிணியைப் பற்றி சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள்? என்னைப் புரிந்து விலகிவிடுவாள் எனில் உடனே சொல்லிவிடலாம். ஒருவேளை அவள் தவறான முடிவெதுவும் எடுத்துவிட்டால் அந்தக் குற்றவுணர்வே என்னைக் கொன்றுவிடாதா? தவிப்பிலும் பெரிய தவிப்பென்பது மனதிலிருக்கும் சொற்களைச் சொல்லவும் இயலாமல் மனதின் ஆழத்தில் புதைக்கவும் முடியாமல் தவிப்பதுதான். வர்ஷிணிக்கும் அத்வைதாவைப் பற்றி நான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் எதன் பொருட்டும் வர்ஷிணியை இழந்துவிட மனம் ஒத்துக்கொள்ளவில்லை. வர்ஷிணியின் வரவுக்குப் பின் அத்வைதாவுக்கான பொழுதுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க ஆரம்பித்திருந்தேன். அவளாகவே புரிந்துகொண்டு விலகிவிடுவாள் என்றொரு குரல் உள்ளுக்குள் ஒலித்தபடியே இருந்தது.

ஒருவரை நேசிக்கும்போது அவருடனான நேரம் செலவிடல் எவ்வளவு அதிகமோ அதுதானே அவ்வுறவை நிலைத்து நீட்டிக்கச் செய்யும் என்று தீர்க்கமாக நம்பியதால், அத்வைதாவிடமிருந்து விலக அவளுக்காகச் செலவிடும் நேரத்தைக் குறைத்தால் அவளுக்கும் எனக்கும் இடையேயான நேசமென்னும் சரடு வலுவிழந்து அதுவாகவே வீழ்ந்துவிடும் எனும் முடிவுக்கு வந்தேன்.

என்னை மன்னித்துவிடு அத்வைதா, இனி நான் வர்ஷிணிக்கானவன்.

5.

சித்திரனை வீட்டிற்கு அழைத்திருந்தாள் வர்ஷிணி. திருவான்மியூரிலிருக்கும் அவளது வீட்டிற்கு முன்பாகத்தன் காரை நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து அழைப்பு மணியை அழுத்தினான். கருநிறப் புடவையில் கண்கள் விரிய அவளது மின்னஞ்சலில் வருகின்ற குறுங்கவிதை போல கதவைத் திறந்தவள் நின்றிருந்தாள். உள்ளே அழைத்து வரவேற்பறையில் உட்காரச் சொன்னாள். அவளது வீட்டு வரவேற்பறையின் நேர்த்தியும், சுவரில் தொங்கும் ஓவியங்களும் கவிதையாகவே இவள் வாழ்கிறாளே என்று அவனை வியக்கச் செய்தது. ஒரு குழந்தைபோல துள்ளி ஓடி கிச்சனுக்குள் சென்றவள் கையில் ஆரஞ்சு ஜூஸுடன் வந்தாள். அவன் எதிரே அமர்ந்து முகம் மலரப் பேசிக்கொண்டிருந்தவள் சிணுங்கும் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

பின் சித்திரனைப் பார்த்து,

“என் மகளைப் பார்க்கணும்னு சொன்னீங்களே, இப்ப வந்துருவா, மெசேஜ் அனுப்பியிருக்கா” என்றாள்.  சித்திரனுக்கு ஏற்கனவே தன் மகளைப் பற்றிச் சொல்லியிருந்தாள். தன் மகளிடமும் சித்திரனைப் பற்றிச் சொல்லிய போது முதலில் ஆச்சர்யப்பட்டவள் பின் சந்தோஷமாக ஒத்துக்கொண்டாள். கடந்த கால வாழ்வைப் பற்றி எவ்வித மறைவுமின்றி வர்ஷிணி சொன்னது அவள்மீதான நேசத்தைச் சித்திரனுக்கு அதிகப்படுத்தியது. ஆர்வமுடன் அவளது மகளை, வெகு விரைவில் தன் மகளாகப் போகிறவளைக் காண ஆவலுடன் காத்திருந்தான்.

அழைப்பு மணி சத்தமிட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் வர்ஷிணி.

வீட்டிற்குள் நுழைந்த மகள் அம்மாவின் முகத்தில் முதல் முறையாக வழிகின்ற வெட்கத்தைப் பார்த்து வியந்தபடி நின்றாள்.

சித்திரனைக் கண்டவள் ”லேசா தலைவலிக்குதுமா” நீங்க பேசிக்கிட்டு இருங்க என்றபடி தன் அறைக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாளிட்டுப் படுக்கையில் போய் விழுந்தாள். கண்களிலிருந்து நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது கண்ணீர். சில நிமிடங்கள் கழித்துத் தனக்குத் தானே “அம்மாதான் எல்லாம். அம்மாவுக்காகத்தான் எல்லாமும்”  எனச் சொல்லிக்கொண்டாள் அத்வைதா.

 

(முற்றும்)