மூன்றாம் சந்திரயானின் ஊர்தி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை தொட்டு விட்ட சாதனை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றின் பக்கங்களில் முக்கிய அத்தியாயமாக இடம் பெறப் போகிறது.

ஆனால் இதனை இரண்டு தரப்புகள் இரண்டு விதமாக கொண்டாடுகிறார்கள். செக்யூலர் இந்தியர்கள் சாதி மத பேதமற்ற முறையில் இதனை அறிவியலின் வெற்றியாக, நவீன இந்தியாவின் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். பாஜக அபிமானிகளோ இதனை மோடியின் வெற்றியாக, அதைவிட இந்து மதத்தின் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். சந்திரயான் 3 புறப்பட்ட போதே அந்த ராக்கெட்டை அனுமார் தூக்கிச் செல்வது போல போஸ்டர்கள் உருவாக்கி இணையத்தில் உலவ விட்டிருந்தனர்.

அந்த லேண்டர் தரையிறங்குவதற்கு சில கணங்கள் முன்பே பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைன் கான்ஃபரன்ஸ் மூலம் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் நுழைந்து பங்கெடுத்திருந்தார்.சிகரம் வைத்தாற்ப் போல சந்திராயான் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ என்ற இந்துக் கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் வெற்றியை பாஜக தனது வெற்றியாக உருவகித்துக் கொள்ள முயல்கிறது. அதில் சிறிதே சிறிதான நியாயம் இருக்கலாம். மன்மோகன் சிங் ஆட்சியில் 10 ஆண்டுகளில் விண்ணியல் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் சுமார் 37.8 ஆயிரம் கோடி. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் சுமார் 99 கோடி. இதில் பெரும்பாலான தொகை இஸ்ரோவுக்குத்தான் போகிறது. சந்திரயான் போன்ற அதிக செலவு பிடிக்கும் மற்றும் ரிஸ்க் எடுக்க வேண்டிய ப்ராஜக்ட்டுகளை தைரியமாக எடுத்து செய்ய உந்துதலாக இருக்கிறது. இது மூன்றாவது சந்திரயான் என்பது நினைவில் வைக்கத் தக்கது. முதல் இரண்டு சந்திரயான் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஆனால் பட்ஜெட் ஒதுக்குதலை தாண்டி பாஜக என்ன செய்தது என்பது முக்கிய கேள்வி. இதற்கே பாராட்டு போக வேண்டுமெனில் விண்ணியல் ஆய்வை முதன் முதலில் இந்தியாவில் துவக்கி வைத்த நேருவுக்கு எத்தனை கிரெடிட் போக வேண்டும்? அதற்குப் பின் அதனைத் தொடர்ந்து நடத்தி இஸ்ரோ என்று தன்னாட்சி நிறுவனமாக உருவாக்கிய இந்திராவுக்கு எவ்வளவுகிரெடிட் போக வேண்டும்?

சொல்லப் போனால் இன்றைக்கு இஸ்ரோவின் மேல் கோடிகளில் கொட்டுவதில் பெரிய ஆச்சரியம் இல்லை. காரணம் இஸ்ரோ என்பது தேசத்தின் பெருமையான சின்னமாக மாறி பல பத்தாண்டுகள் ஆகின்றன.

ஆனால் ஒரு காலத்தில் அது தோல்விகளின் குவியலாகவே இருந்தது. நாம் அனுப்பிய ராக்கெட்டுகள் எல்லாமே கடலில் விழுந்து கொண்டிருந்தன. எண்பதுகளில் எஸ்வி சேகர் நாடகத்திலேயே கூட ஒரு ஜோக் வரும்:

காதலி: நாம இன்னைக்கு பீச்சுக்கு போகலாமா?

காதலன்: அய்யோ இன்னைக்கா, வேணாம்மா!

காதலி: ஏம்பா?

காதலன்: இன்னைக்கி ஸ்ரீஹரிகோட்டால ராக்கெட் விடறாங்க. தலையில விழுந்துரப் போவுது.

அந்த லட்சணத்தில் இருந்த இஸ்ரோவை எப்போது வேண்டுமானாலும் மூடி இருந்திருக்கலாம். தேசத்தின் அவமான சின்னமாகத் திகழ்ந்த இஸ்ரோவை விடாப்பிடியாக தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு மாபெரும் பிடிவாதமும் தொலைநோக்கும் தேவைப்பட்டது.

அப்படி நடத்திக் கொண்டிருந்த மற்றும் தொடர்ந்த காங்கிரஸ் மற்றும் இதர ஆட்சிகளுக்கு எவ்வளவு கிரெடிட் போக வேண்டும்?

பிரச்சினை இங்கே கிரெடிட் பற்றியது மட்டுமல்ல. இதனை ஒரு அறிவியல் சாதனையாக எத்தனை வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளுவதில் பிரச்சினை இல்லை. ஒரு மதத்தின் வெற்றியாக மாற்ற முயல்வதுதான் பிரச்சினை.

காரணம் இந்த வெற்றி இந்து மதம் கொண்டு வந்ததல்ல. சுதந்திர இந்தியா கொண்டு வந்தது. மதங்களை, மத நம்பிக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு அறிவியலை நாடச் சொன்னவர் நேரு. ‘அறிவியல் பூர்வ அணுகுமுறை’ – Scientific Temper – எனும் சொற்றொடரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். கனரக தொழிற்சாலைகளையும், அணைக்கட்டுகளையும் ‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்று அழைத்தவர். ஐஐடி, ஐஐஎம், பிராந்திய பொறியியல் கல்லூரிகள் என்று நிறுவி உயர்கல்வியையும் அறிவியல் கல்வியையும் போற்றியவர். இந்தியாவின் முதல் ராக்கெட் இவர் காலத்தில்தான் அனுப்பப்பட்டது. அறிவியலையும் அறிவியல் பூர்வ சிந்தனையையும் இவரைப் போல போற்றிய வேறு பிரதமர் இந்தியாவில் இல்லை.

மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கும் இந்து மதத்தினால் நிலவில் காலடி வைத்திருக்கவே முடியாது. சந்திரயான் ப்ராஜக்ட்டுக்கு ஒரே ஒரு குந்துமணி அளவு கூட இந்து மதம் மட்டுமல்ல, வேறு எந்த மதமும் உதவவில்லை. வேதங்களில் ரிலேட்டிவிட்டி இருக்கிறது, மகாபாரதத்தில் ஜெனெடிக் இன்ஜினியரிங் இருக்கிறது என்று இந்துத்துவர்கள் விடுவதெல்லாம் புருடாக்கள் என்பது அவர்களுக்கே தெரியும். பண்டைய இந்தியா கணிதத்திலும் வான சாஸ்திரத்திலும் சில அதீத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் இவை எதுவும் சந்திரயான் ப்ராஜக்ட்டுக்கு உதவி இருந்திருக்காது. சொல்லப்போனால் 17ம் நூற்றாண்டுக்கு அப்புறம் உருவான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு முயற்சி செய்தால் ஒரு மாதத்திற்குள் நீங்கள் சந்திரனுக்கு அல்ல, சண்டிகருக்குக் கூடப் போக முடியாது.

மத ஒழுகுதலைத் தள்ளி வைத்தால்தான் நவீன அறிவியல் முன்னேற இயலும். அப்படித்தான் கடந்த 250 வருடங்களாக அறிவியல் முன்னேறி வருகிறது. மத நியமங்களை, மத ஆணைகளை முழுமையாகப் போற்றியும் பின்பற்றிக் கொண்டும் கூடவே அறிவியலையும் போற்றுதல் சாத்தியமில்லை.

கிறித்துவத்தை போற்றிக் கொண்டிருந்தவரை ஐரோப்பா கொடும் பஞ்சம், ஏழ்மை, போர்கள், நோய்கள், கொடூர தண்டனைகள் என்றுதான் உழன்று கொண்டிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கம் உருவாகி செக்யூலரிசம் என்ற ஒன்றை முன்னெடுத்து, மதங்களை ஒதுக்கி வைத்து, அறிவுத் தேடலில் ஈடுபடத் துவங்கிய பின்னர்தான் வரலாறு காணாத சமூகப் பொருளாதார முன்னேற்றங்களைக் கண்டது.

இஸ்லாமிய சமூகத்தில் இது எதிர்மறையாக நடந்தது. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டு அரேபியா தீவிர சமூக அறிவியல் தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இஸ்லாமிய பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு அங்கே அறிவியல் முன்னேறியது. ஆனால் அ’ஷரி எனும் இஸ்லாமிய மதவாத இயக்கம் தலையெடுத்த பின்னர் அறிவுத் தேடல்கள் நின்று போயின. இந்த அஷரிகளுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு கிட்டிய பின்னர் அறிவுத் தேடலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கொலையுண்டனர். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எரித்துப் போடப்பட்டன. அந்த இயக்கத்தின் பாதிப்பு இன்று வரை இஸ்லாமிய சமூகங்களின் முன்னேற்றத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது.

இந்து மதமும் கூட விதிவிலக்கில்லை. சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே இருந்திராத சமூகமாகவே நாம் உழன்று கொண்டிருந்தோம். இந்தியா என்ற ஒரு நாடே இருந்திருக்கவில்லை. ஆயிரக்கணக்கான குறுநில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியும் பொறாமையும் கொண்டு போர்களை வளர்த்துக் கொண்டு அடித்துப் பிடித்துக் கொண்டிருந்ததுதான் நம் வரலாறு. இதனிடையில் சிக்கிய சாமானிய மக்கள் கடும் துன்பியல் வாழ்வையே எதிர் கொண்டிருந்தார்கள். மூட நம்பிக்கைகள், சாதியம், எழுத்தறிவின்மை, நோய்கள், பஞ்சம், பெண்ணடிமைத்தனம் – இவைதான் நமது வாழ்வியல்.

நமக்கு நேர்ந்த ஒரு அதிர்ஷ்டம் சுதந்திர இயக்கம் ஒரு செக்யூலர் இயக்கமாகவும் செயல்பட்டதுதான். பிரிட்டிஷ் கல்வியில் வந்த பல்வேறு தலைவர்கள் சுதந்திரப் போராட்டதின் நடுவில் மத சீர்திருத்தத்திலும் ஈடுபட்டனர். சதி ஒழிப்பு, சிறார் மணம் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மணமுறிவு உரிமை, சொத்துரிமை, வரதட்சிணை ஒழிப்பு என்று நாம் கண்ட சீர்திருத்தங்கள் எல்லாமே கடந்த 150 ஆண்டுகளில் வந்தவைதான். போலவே குருகுலக்கல்வி நின்று போய் – கணிதம், வரலாறு, புவியியல், இயற்பியல், மொழிப்பாடங்கள் – என்று அறிவியல்-சார் கல்வி துவங்கியது.

இந்தக் கல்வியும், அறிவியலும், செக்யூலர் அணுகுமுறையும்தான் சந்திரயான் வெற்றிக்குக் காரணம். இந்த முன்னேற்றங்களை எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த மதம் இப்போது இதன் வெற்றியில் பங்கு கேட்டு வருவதுதான் ஆகப்பெரிய சோக முரண். தொடர்ந்து அறிவியலையும் செக்யூலரிசத்தையும் எள்ளி நகையாடி, மதத்தை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்த இந்துத்துவர்கள் அறிவியல் வெற்றியை தங்கள் வெற்றியாகக் கொண்டாடுவது இன்னொரு சோக நகை முரண். கடலைத் தாண்டுவதையே கொடும் பாவம் என்று நம்பிய சமூகம் எப்படி விண்ணைத் தாண்டி இருந்திருக்க முடியும்?

ஆனால் இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? காரணம் இருக்கிறது அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றத்தை தேச வெறிக்கு பயன்படுத்திக் கொள்வது இதுவே முதன் முறை அல்ல. இது மிகச் சாதாரணமான பாசிச டெம்ப்ளேட். முன்பு பாசிச சமூகங்களில் எல்லாம் இது நடந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ராணுவத் தொழில் நுட்ப முன்னேற்றங்களை வைத்து தேசியவாத வெறியை ஜெர்மனியில் உருவாக்க முடிந்தது. V2 எனும் ராக்கெட் உருவாக்கம் அப்போதைய பொறியியல் அதிசயமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதனை ஆரிய எழுச்சியின் சின்னமாக நாஜிகள் ஜெர்மனியில் பிரச்சாரம் செய்தனர். அப்படிப்பட்ட அந்த ‘எழுச்சி’ எங்கே கொண்டு போய் விட்டது என்பது நமக்கெல்லாம் தெரியும்.

போலவே முசோலினியின் இத்தாலியில் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே தேச பக்தியின் பலன்களாக பிம்பப்படுத்தப்பட்டன. விளைவு, பாசிசத்தின் கரங்கள் இறுகிப்போய் தேசத்தை அழிவுப் பாதையில் கொண்டு விட்டது.

இப்போது இஸ்ரோவின் வெற்றியையும் தேசவெறியை அல்லது மதவெறியை ஊக்குவிக்கப் பயன்படுத்தினால் இதே போன்ற விளைவுகளைத்தான் எதிர்கொள்ள வேண்டி வரும். பாசிசத்தின் கரங்கள் இறுகும். ஏற்கனவே ஜனநாயக கட்டமைப்புகளை துச்சமாக அணுகுவதையே மத்திய அரசு செய்து வருகிறது. மோடியின் சர்வாதிகார அணுகுமுறை இன்னமும் மோசமடையும்.

முன்பு ரஃபேல் விமானத்தை தேச பக்தியுடன் அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசினார். அதாவது ரஃபேலை விரும்புவது தேசபக்தியின் அடையாளமாக பிம்பப்படுத்தப்பட்டது. அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மட்டுமே. அதுவும் ஃபிரெஞ்சு நிறுவனம். அதற்கும் இந்திய தேச பக்திக்கும் என்ன சம்பந்தம்? மூட தேச வெறி என்பது இப்படித்தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாத தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு அறிவீன மயக்கத்தில் ஊறிக் கொண்டிருக்கும். சந்திரயான் வெற்றியின் கிரெடிட்டை இந்து மதம் மற்றும் மோடி இருவரின் காலடியில் சமர்ப்பிப்பதும் இந்த அறிவீன தேசவெறியின் நீட்சிதான்.

நாம் என்ன செய்ய வேண்டும்? செக்யூலர் சிந்தனையாளர்கள் மற்றும் பொதுவான இந்தியர்கள் இதற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடியே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மாபெரும் அறிவியல் சாதனை அது. ஆனால் அந்த சாதனையை நாம் இந்திய வரலாற்றுடன் ஒப்பிட்டே பேச வேண்டும். எழுத்தறிவற்ற, மூட நம்பிக்கைகள் நிறைந்த ஒரு தேசம் நிலவில் லேண்டர் இறக்கும் அளவுக்கு உயர்ந்ததுதான் சாதனை என்று பேச வேண்டும். பண்டைய இந்தியா குறித்து மேலை நாட்டவர் பேசும் போது ‘யானைகளும் பாம்பாட்டிகளும் மிகுந்த தேசம்,’ என்று சொல்லும் ஒரு சொலவடை இருக்கிறது. இது கொஞ்சம் இகழ்ச்சியான பதம்தான் என்றாலும், சில விதிவிலக்குகள் தவிர்த்து ஏறக்குறைய அந்த லெவலில்தான் இருந்திருக்கிறோம். அது மதங்களை போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்த காலம். அந்த வித்தியாசத்தை தொடர்ந்து சுட்டிக் காட்ட வேண்டும்.

நவீன இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் அல்ல. அவற்றை மீறி வளர்ந்த ஒரு நவீன தேசம். காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றோர் கட்டமைத்த செக்யூலர் சமூகம். பண்டைய கோயில்களை விடுத்து நவீன கோயில்களான அணைக்கட்டுகளையும் கனரக தொழிற்சாலைகளையும் போற்ற ஆரம்பித்த சமூகம். நேரு அதை சொல்லி கொஞ்ச காலம் ஆகி விட்டதால் இப்போது கோயில்கள் கொஞ்சம் அப்டேட் ஆகி விட்டன. நமது நவீன தெய்வங்கள் அணைக்கட்டுகளில் இல்லை. விண்ணியற்பியல் ஆய்வுகளில், ஜெனெடிக் இன்ஜினியரிங்குகளில், செயற்கை நுண்ணறிவுகளில் இருக்கின்றன. அந்த தெய்வங்களுக்கான புதிய நவீன கோயில்கள் கட்டும் முயற்சிகளில் நவீன இந்தியர்கள் இறங்க வேண்டும். இஸ்ரோவே கூட அப்படிப்பட்ட கோயில்தான்.

பாஜகவோ இன்னமும் பண்டைய கோயிலிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு அறிவீன-வன்முறை இயக்கம். அவர்களுக்கு நவீன கோயில்கள் தேவையில்லை. லேண்டர் பகுதிக்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியதன் மூலம் தான் இன்னமும் பண்டைய கோயிலைத் தாண்டவில்லை என்றுதான் பிரதமர் நிரூபித்து இருக்கிறார். பாம்பாட்டிகளின் காலத்தை பொற்காலமாக சித்தரிக்கும் இயக்கத்தின் தலைவர்  வேறு எபபடி யோசிப்பார்?

மாறாக, நவீன இந்தியர்கள் நவீன கோயில்கள் கட்டுவதைத் தொடர வேண்டும். மேலே சொன்னபடி அதற்கு பாஜக சரிப்பட்டு வராது. 2024ல் பண்டைய கோயிலர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு இந்தியா ஏறுமுகத்தில் முன்னேற வேண்டியது அவசியம்.

சிவசக்தி நமக்கு அதைத்தான் குறிக்கிறாள்.