1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் நாள் அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற மூன்று விண்வெளி வீரர்களில் இரண்டு பேர் நிலவில் இறங்கி மனித குல வரலாற்றில் மகத்தான சாதனையை நிகழ்த்தினார்கள். இது முழுக்க முழுக்க அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து நிகழ்த்திய சாதனை. அதே போன்ற ஒரு சாதனையைத்தான் சந்திராயன் 3 வாயிலாக இந்தியா 2023ம் ஆண்டு ஆகஸ்டு 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி நிகழ்த்தியிருக்கிறது. அது பெரும்பாலும் ஆராயப்படாத ஒரு இருண்ட இடம் என்பதால் உலகெங்கும் இந்தப் பயணத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இஸ்ரோவின் சாதனைகளில் இது ஒரு பெரிய மைல் கல். இதை தேசமே கொண்டாடி வந்தாலும் ஆங்காங்கே சில எதிர்ப்புக் குரல்களும் விமர்சனங்களும் எழுகின்றன.

அமெரிக்கா ஒரு தன்னிறைவு அடைந்த நாடு. தன்னிடம் இருக்கும் செல்வத்தை மக்களுக்குச் செலவளித்தது போக விண்வெளியில் இறைக்கக் கூடிய வல்லமை பெற்றிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாத மக்கள் இருக்கிறார்கள். நமக்கு விண்வெளிப் பயணம் என்ற ஒன்று தேவைதானா? கழிப்பறைகள் கூட அனைவருக்கும் சரியாக இல்லாத ஒரு நாட்டில் இது ஆடம்பரம் இல்லையா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறார்கள். மங்கள்யான் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவும் இல்லாத கழிப்பறைகளும் என்ற கட்டுரையை நான் 2017ல் எழுதியிருந்தேன். ஆனால், இந்தக் கேள்விகளை ஒரேயடியாகப் புறக்கணித்து விட முடியாது. உண்மையிலேயே சந்திரயான் வெற்றி சாதாரண மக்களுக்குப் பலனளிக்குமா அல்லது விண்வெளி ஆராய்ச்சி என்பது வெற்றுப் பெருமை மட்டுமா என்ற கேள்விகளுக்கு விடை தேடுவது இந்த நேரத்தில் அவசியமானது.

இப்போது அமெரிக்காவின் அப்போலோ 11 வெற்றிகரமாக நிலவில் இறங்கிய வரலாற்றுக்கு வருவோம். அது ஓர் இருண்ட காலம். இரண்டாம் உலகப் போர் முடிந்து பெரும்பாலான நாடுகள் தங்கள் காயங்களை ஆற்றிக் கொண்டிருந்தன. பொருளாதாரம் நொண்டியடித்துக் கொண்டிருந்தது. நேரடிச் சண்டையில் ஈடுபடத் தயங்கி மறைமுக ஆயுதப் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம். ரஷ்யாவும் அமெரிக்காவும் நீயா நானா என்று அணுக்குண்டுகளையும் ஏவுகணைகளையும் விட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அந்தப் போட்டியில் முக்கியமானது விண்வெளியை வெற்றி கொள்வது யார் என்பதுதான். ஆனால் விண்வெளியை விட தங்கள் ராக்கெட் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதும் அதன் மூலம் ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொள்வதும்தான் அவர்கள் நோக்கமாக இருந்தது.

விண்வெளி ஆராய்ச்சியைப் பொறுத்த வரை ரஷ்யா பல விதங்களில் முதன்மையான நாடாக இருந்தது. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது தொடங்கி க்ரையோஜெனிக் ராக்கெட்டுகளை உருவாக்குவது வரை பெரும்பகுதி முன்னணியில் இருந்தது. ஆனால் அமெரிக்காதான் முதலில் மனிதனை நிலவில் இறக்கியது. அந்த வெற்றி அமெரிக்காவின் வெற்றியாக மட்டுமல்லாமல் அதுவரை விண்வெளியில் கோலோச்சிக் கொண்டிருந்த கம்யூனிசத்தை மக்களாட்சியும் முதலாளித்துவமும் முந்திச் சென்ற முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது. அமெரிக்கா நிலவில் கால் வைத்து 20 ஆண்டுகள் ஆன பிறகு அந்த ஒற்றை நிகழ்வு அந்த தேசத்தின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் மக்களின் பொது மனப்போக்கிலும் எத்தகைய மாறுதல்களை உண்டாக்கியிருக்கிறது என்று ஒரு பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வு முடிவுகள் 1989ம் ஆண்டு வெளியாயின.

நிலவுதான் அழகென்று நம்பிக்கொண்டிருந்த மனித இனத்துக்கு பூமியோடு ஒப்பிட அது ஓர் உயிரற்ற வெற்றுப் பாலைவனம் என்று அப்போதுதான் முதன் முறையாகத் தெரிய வந்தது.  அப்போலோ பயணத்தின்போதுதான் முதல் முறையாக விண்வெளியிலிருந்து பார்க்க நமது பூமி எப்படி இருக்கிறதென்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இருண்ட வானவெளியில் நீளமும் வெள்ளையுமாக ஜொலித்த பூமியின் தோற்றம் பலரையும் மயக்கியது. அதுவரை இத்தனை அழகான ஒரு கிரகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதே மனிதர்களுக்குத் தெரியாமல் இருந்தது. அந்தப் புகைப்படம், நாம் வசிக்கும் கிரகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் பரவலாக உருவாக்கியது. அதுவரை இல்லாத அளவு சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை அந்தப் படங்கள் ஏற்படுத்தின என்று அந்த ஆய்வு சொல்கிறது. அது மட்டுமல்லாமல் அப்போலோ பயணத்தின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் இரண்டு மடங்காகியிருந்தது. அப்போலோ பயணத்திற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் சில ஆண்டுகளில் முன்னேற்றம் பெற்று பொது மக்களின் பயன்பாட்டுக்கும் இதர அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக விண்வெளி, கணினிகள், மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரமும் மேம்பட்டது.

அப்போலோ பயணம் அடைந்த வெற்றி அந்த நாட்டு மக்களின் மனதில் ஒரு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கியது என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. மக்களாட்சி நிலவும் ஒரு நாட்டில் மேற்கொண்டு இது போன்ற பெரிய கடினமான முயற்சிகளுக்கு வரிப்பணத்தை செலவு செய்யலாம் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியது.  இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் நாசாவை விமர்சிப்பவர்கள் இருந்தார்கள். அவர்களை சற்று அமைதிப்படுத்தியது இந்த நிகழ்வு. பெரிதினும் பெரிது கேள் என்ற மனநிலையை அந்த நாட்டு மக்களிடம் ஏற்படுத்தியது. அமெரிக்காவின் மக்களும் முதலாளிகளும் துணிச்சலோடு பெரிய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். இது பின் வரும் காலங்களில் அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டது.

அப்போது உலகம் பல்வேறு அணிகளாகப் பிரிந்து அடித்துக் கொண்டிருந்தது. விண்வெளியில் பெறப்படும் தகவல்களும் தொழில்நுட்பங்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டன. ஆனால் அதுவரை இல்லாத அளவு அப்போலோ 11 பயணத்தின் போது பெறப்பட்ட தரவுகளும் ஆய்வு முடிவுகளும் உலகத்தின் பல நாடுகளின் விண்வெளி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. உலகெங்கும் பல கோடி மக்கள் இதை நேரலையிலும் செய்திகளிலும் பார்த்தார்கள். கொண்டாடினார்கள். பல்வேறு வகையில் வேறுபட்டுக் கிடந்த ஒட்டு மொத்த மனித இனத்தையும் சில நிமிடங்கள் ஒரே புள்ளியில் நிறுத்தியது மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு. ஒவ்வொரு மனிதனும் இதைத் தனது சாதனையாக நினைத்தான். மனித வரலாற்றில் இப்படி ஒரு தருணம் அதற்கு முன்பு நிகழ்ந்திருக்கவில்லை.

அது நடந்து கிட்டத்தட்ட 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகம் நிறைய மாறிவிட்டது. சந்திரயான்-3 வேறொரு நாடு. வேறொரு சூழல். நாம் மனிதர்களைக் கொண்டுசென்று நிலவில் இறக்கவில்லை. இன்றைய சூழலில் அதற்கு அவசியமும் இல்லை. மனிதன் செய்யும் வேலைகளை இயந்திரங்களும் நுண்ணுணர் கருவிகளும் செய்துவிடும். அமெரிக்காவை விடப் பல மடங்கு மலிவாக நிலவை அடையும் தொழில்நுட்பத்தை நாம் பெற்று விட்டோம். ஆனால் சந்திரயான் வெற்றியால் இந்தியா எனும் தேசத்துக்கு என்ன நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதென்று பார்க்கலாம்.

அப்போலோ நிலவில் இறங்கியபோது விண்வெளி என்பது விஞ்ஞானிகளின் விளையாட்டுக் களம். அங்கிருந்து வருமானம் ஈட்ட முடியாது. பல ஆயிரம் கோடிகள் விண்வெளியில் இறைத்துவிட்டு  கற்களைத்தான் எடுத்து வந்து அருங்காட்சியகத்தில் வைத்தார்கள். அதற்காக வரும் கட்டணம் அருங்காட்சியகத்தை கூட்டிப் பெருக்கத்தான் காணும். ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பம், தொலைக்காட்சிகள், ராணுவம் என்று தொடங்கி பல துறைகளுக்கு செயற்கைக் கோள்கள் தேவை. அவற்றை ஏவுவதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கப் பல நாடுகளும் நிறுவனங்களும் காத்திருக்கின்றன. ஏற்கனவே இஸ்ரோ இந்தப் போட்டியில் முன்னணியில் இருக்கிறது. நிலவில் இறங்கிய ஒரு நிறுவனத்தின் ராக்கெட்டுகள் மேல் வாடிக்கையாளர்கள் கூடுதல் நம்பிக்கை வைப்பார்கள். இஸ்ரோவின் எதிர்கால வியாபார வளர்ச்சிக்கு இந்த வெற்றி ஒரு முக்கியமான படிக்கல்.

இஸ்ரோவுக்குச் செலவு செய்ய இனி அரசாங்கமும் தயங்காது. வரி செலுத்துபவர்களிடமும் இஸ்ரோவுக்கு நிதி ஒதுக்குவதில் பெரிய எதிர்ப்பு இருக்காது. அனுமதித்தால் வங்கிகளும் தனியார் நிறுவனங்​களும்கூட இஸ்ரோவில் முதலீடு செய்ய விரும்பி வருவார்கள். அரசியல் காரணங்களுக்காக அதை அரசு செய்யாது என்றாலும் விண்வெளி என்பது முழுக்க முழுக்க அரசுகள் மட்டுமே முதலீடு செய்யும் துறை என்ற நிலை இனி இருக்காது. சந்திரயான் அந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வினையூக்கியாக இருக்கும்.

ஏற்கனவே அமெரிக்காவில் எலான் மஸ்க் ஸ்பேஸ்-எக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு நாசாவும் உதவி வருகிறது. கூடிய விரைவில் டாடா, அம்பானி, அதானி போன்றவர்களும் இந்த வியாபாரத்தில் இறங்கக் கூடும். நீண்ட காலக் காத்திருப்பு, நிச்சயமற்ற லாபம் போன்றவை பெரு நிறுவனங்களைத் தடுத்தாலும், விண்வெளித்துறையில் தனியார்களின் ஈடுபாட்டை இஸ்ரோ தொடர்ந்து ஊக்குவிக்கிறது. சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஏவுகலன் தொடங்கி அதன் அனைத்து பாகங்களும் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. சந்திரயானின் வெற்றி ஐடி துறை போன்ற ஒரு புதிய துறையை இந்தியாவில் உருவாக்கும் சாத்தியக் கூறுகள் தெரிகின்றன. ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப் என்ற சொல்லை நாம் இனி நிறைய கேட்கவிருக்கிறோம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு உலக அளவில் மரியாதை இருந்தது. மிளகு, வாசனைப் பொருட்கள், மஸ்லின் துணி, பட்டு, கைத்தறி, மயிலிறகு, புகையிலை என்று இந்தியா என்றால் தரம் என்ற சூழல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நிலவியது. ஆனால் கடந்த நூறு ஆண்டுகளில் இந்தியா என்றால் தரமற்ற மலிவு என்ற ஒரு பிம்பம்தான் நிலவி வருகிறது. தரத்தில் பெரிய அளவு நாட்டம் இல்லாத குறைந்த தரத்திலான சேவையையும் பொருட்களையும் சகித்துக் கொள்கிற ஒரு தேசமாகத்தான் நாமும் இருந்திருக்கிறோம். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இஸ்ரோவின் அடுத்தடுத்த வெற்றிகள் அதுவும் பிற நாடுகளை விட மிகவும் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களைத் துல்லியமாக அனுப்பும் திறன் நம் தரத்தின் மீதான நம்பிக்கையை உலகெங்கும் உயர்த்தியிருக்கிறது. எது அதிகம் பேசப்படுகிறதோ அதுவே கவனிக்கப்படுகிறது. சந்திரயான் வெற்றி மூலம் இந்தியா எனும் பிராண்ட் ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது என்று சொல்லலாம்.

குறுகிய காலத்தில் கோடிகளை ஈட்டும் தனி மனிதர்களும் நிறுவனங்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய இன்ஸ்டாக்ராம் சூழலில் இஸ்ரோ நமக்கு உணர்த்தும் செய்தி மிகவும் முக்கியமானது. பெரிய காரியங்களைச் செய்ய பெரிய திட்டங்கள் தேவை. பொறுமையும் காத்திருப்பும் அவசியம். ஒரு விண்வெளி  நிறுவனம் இயல்பிலேயே அங்கே வேலை செய்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடியது என்றாலும் அவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் மிகவும் நீண்டவை. பல நேரங்களில் தோல்வியும் எரிச்சலும் தரக் கூடியவை. பல ஆண்டுகள் உழைத்த பிறகு இது நடைமுறைக்கு ஒத்து வராது என்று முதலிலிருந்து தொடங்குவதெல்லாம் அங்கே சாதாரணமாக நடக்கும். இவை அனைத்தையும் தாண்டித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றும் ஒரு மரபு அங்கே நிறுவப்பட்டிருக்கிறது.

இஸ்ரோ என்ற நிறுவனத்திலிருந்தும் அதன் சாதனைகளிலிருந்தும் இந்தியாவும் இந்திய நிறுவனங்களும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. குறிப்பாக முப்பது ஆண்டுகள், நாற்பது ஆண்டுகள் என்று நீண்ட கால நோக்கில் திட்டங்கள் வகுப்பதும், பிறகு அவற்றைச் சிறிய திட்டங்களாகப் பிரித்துத் துல்லியமாக நிறைவேற்றுவதையும் வேறு எந்த நிறுவனத்தையும் விட இஸ்ரோ சிறப்பாகச் செய்து வருகிறது. சந்திரயான் திட்டம் வாஜ்பாய் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இடைப்பட்ட ஆண்டுகளில் அரசியல், பொருளாதாரம் என்று புறச்சூழலில் எத்தனை மாறுதல்கள் வந்தாலும் தோல்விகள் ஏற்பட்டாலும் இஸ்ரோ தனது பாதையில் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறது. அடுத்தடுத்து இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்களும் முன்னோர்களால் வகுக்கப்பட்ட பாதையில் மாறாமல் சீராகப் பயணித்து வந்திருக்கிறார்கள். இதை அவர்கள் எப்படி சாத்தியப்படுத்துகிறார்கள் என்பது ஆராயப்பட்டு ஆவணம் செய்யப்பட்டு கல்லூரிகளில் மேலாண்மையைக் கற்றுத் தரும் பாடங்களில் இடம் பெற வேண்டும்.

இந்தியாவின் கல்வி முறையில் சில அடிப்படைக் கோளாறுகள் இருக்கின்றன. அதிலிருந்து வெளி வரும் பெரும்பான்மை மாணவர்கள் உலக அளவில் போட்டியிடும் திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது புள்ளி விவரம் சொல்லும் கதை. ஆனால், அதே பின்னணியிலிருந்து வந்த எளிய மாணவர்கள் குறிப்பாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களைக் கூட பெரிய சாதனையாளர்களாக மாற்றும் சூழல் இஸ்ரோவில் இருக்கிறது. இஸ்ரோவில் பணி புரிபவர்களில் இரண்டு சதவீதம் கூட இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனங்கள் என்று சொல்லப்படும் ஐஐடி ஐஐஎம் படித்தவர்கள் இல்லை. சொல்லப்போனால் பலரும் சிறிய பொறியியல் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் படித்து வந்தவர்கள்தாம். இந்தியாவில் கிடைக்கும் சராசரி மனிதவளத்தைக் கொண்டே உலகம் போற்றும் சாதனைகளைச் செய்ய முடியும் என்பதையும் இஸ்ரோ தொடர்ந்து நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.

இறுதியாக, இந்தியாவின் ராக்கெட்டுகள் தொடர்ந்து கடலில் விழும் செய்திகளைப் படித்து வளர்ந்தவன் நான். ஒலிம்பிக் பதக்கப்பட்டியலிலும் ஆசிய விளையாட்டுகளின் பதக்கப் பட்டியலிலும் அடி ஆழத்தில் இருக்கும் நமது தேசத்தின் பெயரைப் பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் வலிக்கும். மொத்த உலகமும் நாலு கால் பாய்ச்சலில் இருக்கும்போது நம் தேசம் மட்டும் ஏன் தவழ்ந்து கொண்டிருக்கிறது என்று தோன்றும். முதல் முறையாக உலகத்தின் ஓட்டத்தோடு இந்த தேசம் இணைந்து கொண்டது தகவல் தொழில்நுட்பத் துறையில். இந்தியாவின் சந்தை உலகத்துக்குத் திறக்கப்பட்டதும் நமக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு அது. அதை ஓரளவு சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம். குறைந்தபட்சம் உலகத்தோடு நாமும் பயணித்தோம். ஆனால், நமக்கு இன்னும் வெற்றிக் கதைகள் தேவை. அடுத்து வரும் தலைமுறைக்கு நாம் மாறுபட்ட நேர்மறைச் செய்திகளை உருவாக்கித் தரவேண்டும். அது அவர்களை இந்த தேசம் குறித்துப் பெருமை மிக்கவர்களாக உணரச் செய்யவேண்டும்.

இஸ்ரோவை விட்டால் இது குறித்து நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்விக்கு ஒரு சோகமான புன்னகைதான் பதிலாக இருக்கும். அரசியல் களத்தில் தொடர்ந்து சிதைக்கப்படும் விழுமியங்கள், சேவைகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் அரசுகள் காட்டும் ஆமை வேகம், எங்கு பார்த்தாலும் புரையோடிப் போயிருக்கும் ஊழலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மக்களும் என்று இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த தேசம் குறித்துப் பெருமைப் பட்டுக் கொள்ளப் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு கூட்டம் பழைய பெருமைகளையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளையும் பேசி அவர்களை சமாதானப்படுத்த முயல்கிறது. ஆனால், இது அறிவியல் தலைமுறை. அவர்களுக்குத் தேவை கண்முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு சாதனை.  அந்தப் பிள்ளைகளுக்கு நாம் ஒரு பிரகாசத்தைக் காட்டித்தான் நம்பிக்கை ஊட்ட வேண்டியிருக்கிறது. சந்திரயான்-3 அப்படியான ஒரு ஒளி. அந்த ஒளி அவர்களைப் பின்னோக்கி அல்லாமல் முன்னோக்கி இட்டுச் செல்லும். அவர்களோடு இந்த தேசத்தையும்.