வரதன்

நாம் முதல்முறை சந்தித்து காமிக்ஸ் பற்றிப் பேசியபோது லோன் வுல்ஃப் அண்ட் கஃப் (Lone Wolf and Cub), ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் அறிமுகம் செஞ்சீங்க. உங்களுக்கு மாங்கா எப்படி அறிமுகமாச்சு?

மிஷ்கின் : எனக்கு மாங்கா-வை  அறிமுகப்படுத்தினது குரசோவாதான். நான் குரசோவா படங்கள் பார்க்கும்போது, இணையத்தில் ஒருநாள் யதார்த்தமா ஒரு பக்கத்தைப் பார்த்தேன். Lone Wolf and Cub அது. சீனாவுல மாங்கா வரையறாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அந்த வகைமையைத் தொடங்கினவர் ஹொக்குசாய் (Hokusai) அப்படின்னும் பதினாறாவது நூற்றாண்டுக் கலைஞர்னும் கேள்விப்பட்டிருக்கேன். அவர் நிறைய காமிக்ஸ் பேனல்களைப் போட்டுட்டு இருந்த கலைஞர். முதலில் மாங்கா காமிக்ஸ், பதினாறாவது நூற்றாண்டுல மர அச்சுல ((Wood Block) இருந்துதான் வருது.  ஹொக்குசாய், ஹிரோசிக்கி (Hiroshiki) இரண்டுபேரையும் மிக முக்கியமானவர்களாகப் பார்க்கிறேன். அவங்க புத்தங்களைப் போய்த் தேடினேன். என்னோட அதிர்ஷ்டம், அவங்க புத்தகங்கள் தேடியவுடன் கிடைச்சது.

அதுல இருந்து ‘லோன் உல்ஃப்’-க்கு வந்துட்டேன். அது படிக்கும்போது தான் தெரிஞ்சுது, லோன் உல்ஃப்க்கு ப்ராங்க் மில்லர் (Frank Miller) தான் அட்டைப்படம் போட்டிருக்காருங்கறது.

ப்ராங்க் மில்லரை எப்படித் தெரியும்னா, அவரோட காமிக் பேனல்ஸ பார்த்திருக்கேன். ரொம்ப இம்ப்ரெஷனிஸ்டிக்கா கருப்பு – வெள்ளைல  இருக்கும். ரொம்ப மினிமலிஸ்ட்டிக்கா இருக்கும். ஆனா ரொம்ப பவர்புல்லா இருக்கும். ப்ராங்க் மில்லர், ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் ஓவியங்களால் அதிகமான தாக்கத்தைப் பெற்றவர்.

ஹாலிவுட்ல சில இயக்குநர்கள், டிரண்டினோ முக்கியமாக மாங்காவால் தாக்கம் பெற்றவர். டேவிட் பின்ச்சர் படிச்சிருக்காரு. அப்படி ஒரு ரெண்டு மூனு இயக்குநர்கள் மாங்காவின் தாக்கம் பெற்றவர்கள்னு எனக்குத் தெரிஞ்சுது. அப்புறம் நான் படிக்கும்போது  அந்த குட்டிக் குட்டித் தகவல்கள் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும். நான் மொதல்ல Lone Wolf and Cub புத்தகத்தைத் தருவித்தேன். அது பெற்றோருக்கான வழிகாட்டுதல் குறிப்போட வரும். ஒரு காமிக்ஸ்க்கு ஏன் இந்த வழிகாட்டுதல் குறிப்புன்னு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. காமிக்ஸைத் திறந்து படிக்கும்போது  Kazuo Koike,  Goseki Kojima ரெண்டுபேரும் பண்ணிருக்காங்க; Goseki Kojima தான் ஆர்ட்டிஸ்ட், இல்லஸ்ட்ரேட்டர். அவரோட மாங்கா பாணியை, குரசோவா படத்துல இருந்துதான் எடுத்திருக்காரு; குரசோவாவோட படச்சட்டகத்தைக் கதைச் சட்டகங்களாகப் (panels) போட்டிருக்காருன்னு தெரியவந்திச்சு. எனக்குப் பெரிய ஆச்சர்யம் என்னன்னா, ஒரு திரைப்படம், மாங்கா காமிக்ஸ், 16ஆம் நூற்றாண்டுக் காலகட்டம் எல்லாமே மிக்ஸ் ஆகி வந்திருக்கு, அப்புறம் கதை ஜப்பானில் உள்ள சாமுராய்கள் பத்தியது. குரசோவாவின் மூதாதையர்கள் சாமுராய்கள். ஜிடாகைக்கி என்று அழைக்கப்படும் சாமுராய்ப் படங்களைப் பார்த்துதான், மேற்கில் தாக்கம் பெற்றிருக்காங்க. குறிப்பாக க்வண்டின் டிரண்டினோ. அவருதான் கிட்டானோவை (Kitano), மேற்குலகத்துக்கு அறிமுகப்படுத்தினவர். இப்படி ஒரு தொடர்பிணைப்பு ஏற்படுகிறது. அப்போது குரசோவாவைத்தான் நான் ரொம்ப ஆழமாப் பார்த்துட்டு இருக்கேன். இது சினிமாவுக்கு வருவதற்கு முன்னால். சினிமாமேல இண்ட்ரெஸ்ட் கிடையாது அப்ப.

வரதன் : வருடம்

மிஷ்கின் : வருடம் எப்படி சொல்றது.. ம்ம்..  நான் காலேஜ் முடிச்சுட்டு சென்னை வந்து சேல்ஸ்மேனா வேலை பண்ணும்போது. இதெல்லாம் எப்படி ஆரம்பிச்சுதுன்னு சொல்றேன். குரசோவா வைக்கும் ஃப்ரேம் எனக்குப் பிடிக்கும். அதுல ஒரு பெரிய ஜென் அமைதி எப்பவும் இருக்கும். ஒரு உச்சமான கோபத் தருணத்திலயும் ஒரு அமைதி இருக்கும். கொல்லணுங்கிற மனநிலையிலும் அதுல ஒரு நேர்மை இருக்கும். திருட்டுத்தனம் இருக்காது.

ஒரு சாமுராய் எப்படி இருக்கான்? ஏன் வீட்டுக்குள்ள போகும்போது அவன் வாளை வெளிய வச்சிட்டு போறான்? ஒரு சாமுராயின் வாளை ஏன் தொடக்கூடாது? சாமுராய்க்கும் புஷிடோங்கற நெறிமுறைக்கும் (Bushido Code) என்ன தொடர்பு? இதெல்லாத்தையும் நான் படிச்ச போது எனக்கு என் வீட்ல அம்மா அப்பாவைப் பத்தி படிச்ச மாதிரி ஆயிடுச்சு. திடீர்ன்னு Lone Wolf and Cub-ஐ ஒருத்தர் படிச்சா புரிஞ்சுக்க முடியுமானு தெரியல. ஒட்டுமொத்த கதைகளுமே தியாகமும், வீரமும், அன்பும், கடுமையான சோகமும் கலந்த பல சுவைகள்ல ரொம்ப ஆழமான விசயங்களைப் பேசறதா இருக்குது. அதைக் கதைகளாகப் படிச்சேன்னு சொல்றதவிட அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன்னுதான் சொல்லனும். அதாவது மாங்கா காமிக்ஸைப் பார்த்தேன். முழுக்க முழுக்க ஒரு விஷுவல் ஸ்டடி.

28 வால்யூம்ல கிட்டத்தட்ட 140 கதைகள். அப்பட்டமான பாலியல் சித்திரங்கள் வழியாகக் கதை சொல்லப்பட்டிருக்கும். அதில் வர்ற குழந்தை, தன்னோட சாமுராய் அப்பாவோட வன்முறை, தியாகம், மேன்மை எல்லாத்தையும் பார்க்குது. நானும் அந்தக் குழந்தை மாதிரியே இந்தக் காமிக்ஸைப் பாத்துட்டு இருந்தேன். ஒரு ரெண்டு பேர் சண்ட போடும்போது அந்தச் சட்டகத்தை எப்படி சீர்மை(balance) செய்றாருன்னு பார்ப்பேன். இதுக்குக் காரணம் குரசோவாவோட கம்போசிஸன்தான்னு கொசக்கி சொல்றாரு. குரசோவாவோட கம்போசிஸனும் இவரோட விஷூவல் ஞானமும் சேர்ந்து, ஒவ்வொரு நாவல் படிக்கும்போதும் எனக்கு ரெண்டு படம் பார்க்கற உணர்வைத் தந்துச்சு.

இதைத் தமிழ்ல பண்ணனும்னு நான் ஆசையா இருக்கேன். நான் பண்ணுவேன். உலகம் முழுக்கவும் இந்தக் கதைகளை ஒரு குறிப்பிட்ட வாசக வட்டத்தினர்தான் படிக்கிறாங்க. அமெரிக்கா, கனடாவுல காமிக்ஸ் கடைகளுக்குப் போகும்போது பிரத்யேகமான ஒரு மூலையில் இதை வெச்சிருப்பாங்க. ஒரு கல்ட்(ரகசிய வழிபாட்டுக் குழுவினர்) மாதிரி உலகம் முழுக்க அதைப் படிச்சாங்க.

வரதன் : சினிமாவுலயும் இலக்கியத்துலேயும் கிழக்குக்கும் மேற்குக்கும் ஒரு பெரிய பிரிவு இருக்கில்லயா? அதுக்கு இணையாகவே காமிக்ஸ்லயும் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு கிழக்கோட காமிக்ஸ்னாவே மாங்கான்னுதான் எடுத்துக்கனும், கிழக்கில் வேற எந்த நிலத்துலயும் காமிக்ஸ் அவ்ளோ பெருசா வரல. இந்தியாவுல அமர் சித்ர கதைகள் மாதிரி வந்திருக்கு. ரொம்ப சீரியஸான காமிக்ஸ் இப்பத்தான் வந்துட்டு இருக்கு. க்ராஃபிக் நாவல் மாதிரி பெருசா முயற்சி செய்யப்படல. ஜப்பானுக்கு இணையான கிராபிக் கதைசொல்லல் ஒரு கலாச்சார இயக்கமாகவும் இங்கே உருவாக்கப்படவில்லை. மேற்கத்திய காமிக்ஸ், ஜப்பானிய காமிக்ஸ் என்ற இரண்டு மரபுகள் தான் இருக்குது. ஐரோப்பிய காமிக்ஸ் பரப்பில் பெல்ஜியன் காமிக்ஸ், பிரெஞ்ச் காமிக்ஸ் தனித்தனியான தன்மைகளோட இருக்குது. அமெரிக்க காமிக் அப்படியே ஹாலிவுட் தன்மையைப் பிரதிபலிக்குது. அமெரிக்காவின் எல்லா வெகுஜனக் கலைகளும் அதன் சினிமாவில் பிரதிபலித்தபடிதான் இருக்கிறது. இப்போ சமீபத்துல அவெஞ்சர்ஸ் வரிசை படங்களோட பெரிய வெற்றியைப் பார்த்திருப்பீங்க. 27 சினிமாக்கள் பத்து வருசத்துல வந்திருச்சு. இந்த விசயத்த ஒரு வரலாற்று நோக்கில் பாத்தா, 1938-ல் சூப்பர்மேனும் 1939-ல் பேட்மேனும் வருது. பின்னாடி இன்னும் 50 வருசம் கழிச்சு பேட்மேனைப் படிக்கற குழந்தைகளுக்கு, பேட்மேன் என்னவாகத் தோற்றமளிக்கிறாரோ அது பேட்மேனோட மூலம் இல்லை. ஜோக்கர் கதாபாத்திரத்தைப் பற்றி நாம் பேசிக்கிட்டே இருக்கோம். இந்த 100 வருசத்துல தனித்தனியா இருந்த கதாபாத்திரங்கள், அவெஞ்சர்ஸ் வழியா ஒருங்கிணைக்கப்பட்டுட்டாங்க. அந்தக் கதாநாயகர்களுக்கு ஒரு  உலகளாவிய தன்மை வந்துடுச்சு. டாக்டர். ஸ்ட்ரேஞ்ச் ஒரு கீழைத்தேய நபரா, பௌத்த விழுமியங்களை, மாந்திரீகத் தன்மையைப் பிரதிபலிக்கிறவரா அங்க இருக்காரு.

Norse Mythology-ல இருந்து Thor மாதிரியான கடவுள்கள் கடவுள்களாகவே அதுல வராங்க. லோகி வர்றாரு. அவங்களுக்கு இணையாகவே கற்பனைல  இருந்து உதிச்ச ஸ்பைடர்மேன் மாதிரியான ஆட்களும் இதுக்குள்ள வர்றாங்க. எல்லோரும் தனித்தனியா வந்துட்டு இருந்தாங்க. அவங்களுக்குள்ள ஒரு நட்புறவேகூட இப்போ வந்திடிச்சு. இது ஒரு 80 வருசத்துல நிகழ்ந்திருச்சு. ராமாயணமும் மகாபாரதமும் இருந்த வெகுஜன கலாசாரத்துக்குள்ள ஆழமாகப் போய் இது பிரதிபலிக்க ஆரம்பிச்சுருக்கு. இன்னும் 50, 100 வருசம் கழிச்சு இந்த சூப்பர் ஹீரோஸ் என்னவா அறியப்படறாங்களோ அதுக்கும் அவங்களோட மூலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நாயகர்களோட உலகமயமாதலில் காமிக்ஸோட பங்கை, காமிக்ஸ் வாசகரா நீங்க எப்படிப் பார்க்கறீங்க?

மிஷ்கின்:

ரொம்ப சிம்பிள். ஒரு பேட்மேனை எடுத்துக்கலாம். அப்படியே Lone Wolf and Cub-ஐ எடுத்துக்கலாம். பேட்மேன் வசதியான குடும்பத்துல பிறந்தவன். அவனோட பெற்றோர் கொலை செய்யப்படறாங்க.  அவனுக்குக் கோபம். அதுக்குப் பழிவாங்கறதுதான் மூலக்கதை. அது பிற்காலத்துல மாறிவந்து மக்களுக்காக நல்லது செய்யப் பறவை உடை போட்டுட்டு இறங்கறான். மாங்கா காமிக்ஸ்ல பாதிக்கப்பட்ட மனிதன் தன் குழந்தையோட தப்பிக்க ஓடுறான். ஓடுறவன் அசாதாரணமான செயல்களெல்லாம் செய்ய வேண்டி இருக்கு. இவங்க ரெண்டு பேரோட கதைங்கறது ஒன்னுதான். இவனும் ரிவெஞ்ச்தான் அவனும் ரிவெஞ்ச்தான். ஆனா என்னன்னு கேட்டீங்கன்னா, இதுல கடுமையான வறுமைய சந்திப்பான். ஒருவேள சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவான், அதுல இந்த மாதிரி ஒரு இடமே இருக்காது. இதுல அந்த மாதிரி ஒரு இடமே இருக்காது. ஒரு பெரிய தீமையை எதிர்த்து இவன் போரிடுவான். ஆனா மாங்கா காமிக்ஸ்லயோ நமது கதைகள்லயோ அப்படி இல்ல. போற இடங்கள்ல எல்லாம் தீமை இருக்கும். வாழ்க்கைய ஒட்டி இருக்கும். நம்ம கிழக்குல பெரிய ஹீரோக்கள் அர்ஜுனன், ராமன் ரெண்டு பேரோட கதைகளும் வறுமைல இருந்துதான் ஆரம்பிக்குது ரெண்டு பேரும் அரசர்கள். ஆனா இவன் பதினாலு வருசம் ஆண்டியாக வனவாசம் போறான். கதை ஆரம்பிக்கற இடத்தில அவங்க ஒன்னுமே இல்லாம இருக்காங்க. அப்பத்தான் நிகழ்ச்சிகள் நடக்குது. ராவணன்  மனைவியைத் தூக்கிட்டு போறான். அப்போது ராமன் கையில் ஒன்றுமே இல்லை. கொஞ்சம் கொஞ்சமா படையைத் திரட்டி, ஆளுங்களைச் சேர்த்து அறத்தின் மூலமா போய் வெல்கிறான். அர்ஜுனனிடமும் முதலில் ஒன்றுமே இல்லை.

மேற்குல வேற மாதிரி. கடவுள்களா அவங்க இருக்கிறாங்க. தோர், லோகி இவங்கலாம் கடவுளா இருப்பாங்க ஆனா சின்னச் சின்ன தப்பு பண்ணிருப்பாங்க. தங்களுடைய சித்திகளோடயே அவங்க சாதாரண ஆட்களாக ஆகியிருப்பாங்க. ஆனா இங்க அப்டி கிடையாது. பிரம்மாண்டமான முதலீட்டோட மேற்கு இயங்கிட்டு இருக்கு. அவெஞ்சர்ஸ் என்ன பண்ணுது? எல்லா நாயகர்களையும் ஒன்னா சேர்க்குது. ஒரு ஹீரோவையும் இன்னொரு ஹீரோவையும் எப்படி ஒரே ரூம்க்குள்ள சேர்க்க முடியும்?

பேட்மேனை மட்டும் நாம போய்ப் பார்த்துட்டு இருந்தோம். இப்போ என்ன பண்ணறாங்க, சூப்பர்மேனைக் கூடக்கொண்டு வராங்க. அப்படி ஒன்னாக் கொண்டுவருவதற்கு என்ன காரணம்?

சினிமா வந்துட்டே இருக்கணும்? தயாரிப்புகள் நடந்துட்டே இருக்கணும். அப்பறம் மார்வல் மாதிரி பெரிய ஆளுங்க, இரண்டு பேர் சேர்ந்தா பத்தாது, நாலு பேர் போதாதுன்னு சேத்துட்டே போய் நாற்பது பேரைச் சேர்த்திட்டாங்க. இப்படி போய்கிட்டே இருந்தா என்ன ஆவும்? எல்லாம் முடிந்து முற்றுப்புள்ளியாகி, திரும்பி வந்து, கடுமையான வறுமைல ஒன்னுமே இல்லாம ஆகி, அதாவது  க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வருவாரு பாருங்க, ஒன்னுமே இல்லாம, கைல காசே இல்லாம ஒரு குதிரையோட உள்ள வருவாரு பாருங்க, ஒரே ஒரு துப்பாக்கி, கொஞ்சூண்டு ரவைகளோட, திரும்பவும் அப்படித்தான் ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். காமிக்ஸைப் பொருத்தவரை முழுக்க முழுக்க ஒரு பெரிய முதலீடு சார்ந்த தன்மை எப்பவுமே இருந்துட்டு இருக்கு. அப்புறம் கீழைத்தேயக் கதைகளில் உள்ள ஆழம் இதில் கிடையாது. அதுக்குக் காரணம் என்ன?

16-ஆம் நூற்றாண்டுல ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி நடக்குது. ஜப்பானிய ஓவியமரபில் ஏற்படுகிற மறுமலர்ச்சியைச் சொல்கிறேன். எளிய தீற்றல்கள், சுருக்கமான விவரணைன்னு மினிமலிஸ்டிக்காக ஓவியங்களை வரையறாங்க. அது பட்டுப்பாதை (Silk road) வழியாக வந்து வான்கோ வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனது வீட்டில் வான்கோ, ஜப்பானிய ஓவியர் Hiroshige-யின் உருவப்படத்தை வரைஞ்சி வைக்கிறாரு. அப்போ ஏதோ ஒரு வகையில ஓவியம் எல்லா இடத்துலையும் இருந்துச்சி. ஆனா காமிக்ஸ்ங்ற கதைசொல்ற தன்மையோட மூலம், என்னையப் பொருத்தவரை கிழக்குதான்னு நினைக்கிறேன். கிழக்குல என்ன சிறப்பம்சம்னு பார்த்தீங்கன்னா அதன் எளிமைத்துவம்தான்.

இன்னைக்கும் என்னால வெஸ்டர்ன் காமிக்ஸை எடுத்துப் படிக்க முடியல. ரொம்ப அழகான சட்டகங்கள் போடுறாங்க. ரொம்ப அழகான வண்ணவெளிப்பாடுகள் இருக்கு. ரொம்ப அபாரமான படைப்புகளாக இருக்கு. ஆனா என்னால படிக்கவே முடியல. காமிக்ஸ் படிக்கிறது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா நின்னுருச்சினு வச்சிக்கோங்களேன். இப்போ ரொம்ப ரொம்பக் கம்மியாதான் படிக்கிறேன். ரொம்ப வித்தியாசமாக இருக்குற காமிக்ஸ்தான் படிக்கிறேன். நானும் சினிமாவுக்குப் போயிட்டேன்.  இப்போ கடைசியாக நான் படிச்சது Spiral (Uzumaki-Junji Ito).

காமிக்ஸ் வணிகம்தான். ஆனா அந்த வணிகம் கதைக்குள்ளேயும் ஊடுருவிப் போயிருச்சு. மகத்தான கதைசொல்லிகளை காமிக்ஸில் நாம் இழந்துவிட்டோம்னு நினைக்கிறேன். ஸ்டான் லீக்கு அப்புறம் ஒரு பெரிய கதைசொல்லி வரலைன்னு நான் நினைக்கிறேன். இது நல்லதா கெட்டதான்னு பேச வேண்டியதில்லை. ஏதோ ஒரு வகையில வெகு  மக்கள்கிட்ட யுனிவர்சலாகப் போகணும்னு நிறையப் பண்றாங்க. இப்போ டாக்டர் ஸ்ட்ரேஞ்சைக் கொண்டுப்போய் தீட்சை கொடுக்கிறது மேற்கத்திய கதைகளில் இருக்கிறது. தீட்சை கொடுக்கிற மரபு இங்கே இருப்பது. மேற்கை நோக்கித்தான் எல்லாம் வருகிறது.

ஒரு ஹாலிவுட் படத்தில் கூட சீன நடிகர் நடிக்கிறார். அதேமாதிரி காமிக்ஸ்லயும் சீனாவுல இருக்கிற ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டுவந்து அவருக்கு ஒரு சக்தியைக் கொடுத்து அவரும் நடிக்கிறாரு. இதன் பின்னணியில் ஒரு கதைசொல்லும் மாபெரும் மரபை இழந்துட்டே வருகிறோம். ஒரு பெரிய மாற்றம் மேற்குல நடந்துட்டு இருக்கு. கிழக்குலயும் நடந்துட்டு இருக்கு. மாங்கா காமிக்ஸ்ல பாத்தீங்கன்னா வேறவிதமா இருக்கும். ஜப்பான் முழுக்க முழுக்க மாங்கா காமிக்ஸ மொத்தமா குத்தகைக்கு எடுத்துக்கிச்சு. இன்னைக்கும் சீனாவுல இருக்கு. கொரியாவிலயும் இருக்கு. மிச்ச ஊர்ல இருக்கு. ஆனா Japan அளவுக்கு இல்லை. ஒரு பெரிய சந்தையைக் கைல தக்கவெச்சிருக்கிற அளவுக்கு வேலையைச் செய்திருக்காங்க.

கியோட்டோவில் மாங்காக் கண்காட்சிக்குப் போனபோது, கிட்டதட்ட 25, 30 ஓவியர்களோட ’பேனா பிடிச்ச  கைகள’ அப்படியே அச்சு பண்ணி வச்சிருக்காங்க. இவ்வளவு ஆர்ட்டிஸ்ட்கள் இங்கே இருந்துருக்காங்களே, நமக்குத் தெரியலன்னு ஆச்சரியப்பட்டேன். நமக்குத் தெரிஞ்சது ஒரு அஞ்சாறு பேருதான்.ஒரு Tezuka, Miyazaki, Goseki-னு இப்படித்தான் நமக்குத் தெரியுது. அவங்களோட ஆவணக் காப்பகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தளவுக்குக் காமிக்ஸ யாரும் உலகத்துல படிச்சிருக்கவே முடியாதுங்கற மாதிரி ஒரு லைப்ரரி இருந்துச்சு.

வேதாகமத்திலயும் மகாபாரதத்திலயும் நீதிக்கதைகள் இருந்துச்சு. அந்த நீதிக்கதைகள்ல இருந்து வெளிய போனா, ரொம்ப தட்டையாக நல்லது (அ) கெட்டதுதான் இருக்கு. அதுக்குள்ள இருக்கிற நுட்பங்களை நாம் இழந்துட்டோம். இதில் கலர் கிராபிக்ஸ் வேற சேர்ந்தாச்சு. காமிக்ஸோட மிகப்பெரிய பலமே அதன் இருபரிமாணம்தான். அதை முப்பரிமாணத்தில் கொண்டுவந்தா, காமிக்ஸோட பவர் போயிடும். இரண்டு பரிமாணத்தில் வரைஞ்சதைப் படிக்கிறவன் தனது தலையில்தான் முப்பரிமாணமாகப் படைத்துக் கொள்கிறான். அந்தப் பரிமாணத்தை ஒரு டைரக்டரும் திரைப்படக் கம்பனியும் உருவாக்குறதால படம் பாக்கறவங்களோட அனுபவம் வெறுமே வேடிக்கை பார்ப்பதாகவே அமைகிறது. என்னால நெட்ப்ளிக்ஸ்லகூட அவெஞ்சர்ஸ் பார்க்க முடியல. எந்தக் கதையும் மூலக்கதாபாத்திரத்தின் பிரச்சினையோடு ஆரம்பிக்குது. இவங்க சூப்பர்ஹீரோவாக, கடவுளாக இருக்கும்போது என்ன பிரச்சினை இருக்கப்போகுது? அப்ப ஏதோ ஒரு சின்ன ஏமாற்றம் அல்லது கெட்டது அவனுக்கு நடக்குது. காதலிக்கற பொண்ணுங்களையோ, இல்ல அம்மாவையோ அப்பாவையோ கொடுமைப்படுத்துறாங்க. இவங்க அங்க போறாங்க. இப்படி குறைந்தபட்ச சிக்கலில்தான் கதை இயங்கிட்டு இருக்கே தவிர, மேஜரா பெரிய  போராட்டமான கதைகள் இல்லவே இல்ல. அது இல்லாததுனால அவெஞ்சர்ஸ் மாதிரி படங்கள் நாம படம் பார்த்துட்டு வெளிய வரும்போது ஒரு பத்துநிமிஷத்துக்கு மேல அந்த படம் அதோட தன்மையை இழந்து போயிருது. குறிப்பாக இப்படிச் சொல்லலாம். ட்ரான்ஸ்ஃபார்மர் சீரிஸ்ன்னு ஒன்னு  வந்துச்சு. அதுல பெரிய பெரிய கார்கள், வேன்கள், எல்லாம் பெருசா ஆயிடும். நானும் என் நண்பர் சொர்ணவேலும், தியேட்டருக்கு உள்ள போய் டைட்டில் போட்டு மூணாவது நிமிஷத்துலயே தூங்க ஆரம்பிச்சிட்டோம். ரெண்டு பேரும் குறட்டை விட்டுத் தூங்குகிறோம். அவங்க மனைவி எழுப்பிவிட்டாங்க. எந்திரிச்சிப் பார்த்தா 30 நிமிஷம் ஓடியிருந்துது. திரும்பி ஐந்து நிமிஷம் பார்த்தோம்; திரும்பத் தூங்கிட்டோம். நாங்க எந்திரிச்சு எந்திரிச்சுப் பார்க்கும்போதெல்லாம் எதோ ரெண்டு பேரு, சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க. ஒரே மாதிரி படம் ஓடிக்கிட்டே இருந்துச்சு. படம் முடியும்போதும் அதே மாதிரிதான் கதை. நாங்க வெளிய வந்துட்டோம். எங்களுக்கு ஒன்னுமே புரியல. இதுல யாரு? என்ன? கெட்டவனுக்கு கட்டைக்குரல் ஒன்று கொடுத்து கெட்டவன் மாதிரி காட்டறாங்க. அவன் என்ன கெட்டது பண்றான்னு தெரியல. நல்லவன் என்ன நல்லது பண்றான்னு தெரியல. எந்த ஒரு கதைமதிப்பும் இல்லாமல் இந்தப் படங்கள் அப்படியே நசிஞ்சு போய்கிட்டே இருக்கு. காமிக்ஸ் திரைப்படங்களாக ஆனதும் காமிக்ஸோட அடிப்படையான விசயங்களை இழந்திருச்சு. நாம் காமிக்ஸ் கொடுத்த அனுபவத்தை இழந்துகொண்டு இருக்கிறோம். இன்னிக்கு இருக்கிற எந்தக் குழந்தையும் காமிக்ஸ் வரைஞ்சு காமிக்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்னு ஆசப்படறதில்ல. எல்லாருமே டைரக்டர் ஆகணும்னுதான் ஆசப்படறாங்க. காமிக்ஸ் யாருமே படிப்பதில்லை. இதுக்கு வெஸ்ட்ல வந்த மாற்றம் ஒரு காரணமாக இருக்கும்னு நெனைக்கறேன்.

வரதன் : ஆனால் கடந்த 15 -20 வருசமா காமிக்ஸ் குறித்த பெரிய விழிப்புணர்வு உருவாகியிருக்குன்னுதான் நான் நினைக்கறேன். வெகுமக்கள் பரப்பு தாண்டி தீவிர இலக்கியம் சார்ந்து ஒரு வாசிப்பு மரபு உருவாகியிருப்பது போல காமிக்சுக்கும் உருவாகிக் கொண்டிருப்பதாக்க் கருதுகிறேன். கடந்த 80-100 வருசத்துல சர்வதேச அளவில் கிராபிக் இலக்கியம்னு சொல்லக்கூடிய 50-100 புத்தகங்கள நீங்களே கூட சொல்லிடலாம். ஆலன் மூரோட வாட்ச்மேன் (Alan Moore – Watchmen),ஆர்ட் ஸ்பீகல்மேனோட மவுஸ்(Art Spiegelman – Maus), க்ரிஸ் வேரோட ஜிம்மி காரிகன் (Chris Ware – Jimmy Corrigan). அந்த மாதிரி ரொம்ப சீரியஸான கலைஞர்களோட கதைகளை எடுத்துக்கிட்டாலுமே 50 கதைகளைக் கலையாகவே நான் வரையறுப்பேன். இளந்தலைமுறையும் இதற்கு முகம் கொடுப்பதைப் பார்க்க முடியுது. அது சினிமாவில் பிரதிபலிக்குது. வாட்ச்மென் இப்ப படமா வந்துது. வாட்ச்மென் திரும்ப சீரிஸாக எடுக்கப்படுது. வாட்ச்மென்னோட பாதிப்புல அதோட மையக்கருவை வச்சுட்டே வேற சீரிஸ்லாம் எழுதப்படுது. The Boys-னு பிரைம்ல ஒரு தொடர் வந்துருக்கு, அது வாட்ச்மென்னோட மையக்கருதான். அதாவது சூப்பர் ஹீரோஸ்னு சொல்லக் கூடியவங்களோட பெர்சனல் வாழ்க்கையோட அபத்தங்கள விவரிச்சி வெப்தொடரா வெற்றிகரமாகவும் ஆக்கியிருக்காங்க. தீவிர இலக்கியத்திலிருந்து எப்படி சினிமாவோ இல்ல வேற ஆர்ட் ஃபார்மோ வருதோ அதுக்கு இணையாகவே காமிக்ஸ்லருந்தும் சினிமாவும் வெப் சீரிஸும் நாடகங்களும் வருது. இப்போ ஜோக்கரை ஒரு நாடகமாக எழுதி நடத்த முடியும்.  அப்போ ஒரு கலைஞர், அந்தக் கலைவடிவத்தில் என்ன செய்கிறார் அப்படிங்கறதுதான் ரொம்ப முக்கியமா கருதப்படும்னு நினைக்கிறேன். வெவ்வேறு நாடுகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உலகமயமான ஒரு காலகட்டத்தில் எப்படி உலக இலக்கியமாக மாறியதோ, காமிக்சுக்கும் அப்படியான ஒரு வழி இருக்குமில்லையா? தமிழில் காமிக்ஸ் பெரிதாக  உருவாக சாத்தியமிருக்கு என்று நம்புகிறேன்.

மிஷ்கின் : ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டும் தான் அது இயங்கிட்டு இருக்கு. ராகவன்னு பிரண்ட் ஒருத்தரு. கும்பகோணம் பக்கம் இருக்காரு. அவரு சென்னைல ஒரு காமிக்ஸ் Fair மாதிரி நடத்துனாரு. அந்த விழாவுக்கு நானும் ட்ராட்ஸ்கி மருதுவும் போறோம். அந்த விழால நாப்பது, அம்பது பேர் இருந்தாங்க எல்லாரும் முத்து காமிக்ஸ் படிச்சவங்க. எல்லாரும் வந்து பாலமித்ரா, அம்புலிமாமா படிச்சவங்க. எப்படிச் சொல்றதுனா அதாவது 1970-கள்ல பொறந்தவங்க.  அப்ப வந்து எல்லாரும் சமமா பேசிக்கிட்டோம் பகிர்ந்துக்கிட்டோம். நான் இதப் படிச்சேங்க, அதப் படிச்சேங்கன்னு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அது அடுத்த வருஷம் நடக்கல. ஏன்னா அதுக்கப்புறம் நான் சிவகாசி போனேன். போய்ட்டு முத்து காமிக்ஸ் எல்லாம் வாங்குனேன். கிட்டதட்ட ஏழாயிரம், எட்டாயிரம் -ரூபாய்க்கு எல்லாதையும் வாங்கிட்டு வந்தேன். முத்து காமிக்ஸைப் புதுசா படிக்கிறதுக்கு ஒரு தலைமுறை வரவே இல்லை. ஒரு ஆறு மாசத்துக்கு ஒருதடவை ஆங்கிலத்துல, ஒரு இந்தியரால எழுதப்பட்ட காமிக்ஸ் ஒன்னு வருது. அதுல முக்கியமாக ஐம்பது சதவீதம், இதிகாசங்களை ஒட்டி இருக்கற காமிக்ஸ்களும் அதுக்கப்பறம் வந்து நம்ம சமகால வாழ்க்கையைப் பத்தி எதார்த்தமான காமிக்ஸ்களும்தான். ஒவ்வொரு சமயமும் தேடிப்பார்ப்பேன். ஏதாவது பயங்கரமான கதாபாத்திரத்தை உருவாக்கிருக்காங்களா அப்படின்னு பார்த்தா இல்லவே இல்லை.

நீங்க சொன்னமாதிரி, ஒரு ஸ்டான் லீ (Stan Lee)மாதிரி அவர் உருவாக்குன Spiderman மாதிரி ஒன்னைப் பார்க்கவே இல்ல. ஜப்பான்ல இன்னைக்கு ஒருத்தர் வந்து இருக்காருன்னு உங்களுக்கு Spiral-னு ஒன்னு குடுத்தேன். அது உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி. ஆனா இந்தமாதிரி ஏதோ அதிசயம் நடக்குது. கிராபிக் கலையில் ஒரு பெரிய மறுமலர்ச்சி, அதாவது ஒரு அறுந்து போகாத இழை ஒன்னு, நம்மகிட்ட வரல. அறுந்து போயிருச்சி நடுவுல. எப்பவுமே காமிக்ஸ்ங்கர வடிவம் ரொம்ப ரொம்ப அலாதியான வடிவம். யாராவது வந்து திடீர்னு கொஞ்ச நேரம் காமிக்ஸ் படிச்சாலே அவங்க காமிக்ஸ் ரசிகர் ஆகிடுவாங்க.

வரதன்:  இறந்தகாலம் பற்றிய ஏக்க உணர்வுல காமிக்ஸ் படிக்கிறாங்கன்னு சொன்னிங்க.எழுபதுகள்ல பிறந்து எண்பதுகளில் காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கிறவங்க கௌபாய் காமிக்ஸைத் தாண்டி வரலன்னு நீங்க சொல்ற விஷயத்தை இப்படிப் பார்க்கலாம். இலக்கியம் படிக்கிறவங்களுக்கும் கூட, தமிழ் மட்டுமே தெரிஞ்சா, தமிழ்ல மொழிபெயர்க்கப்பட்ட அளவுதான் உலக இலக்கிய அறிமுகம்இருக்கும். தமிழ்ல டால்ஸ்டாயை, தஸ்த்யெவ்ஸ்கி, மார்க்வெஸைக் கூடப் படித்துவிடலாம்.  உங்களுக்கு ஆங்கிலம் தெரியலேன்னா என்ன செய்றது. உலகளவில் எழுதப்பட்டு ஆங்கிலம் வழியாக வர்ற இலக்கியங்களை வாசிக்க முடியாமல் போய்விடும். சர்வதேச அளவில் கலைச்சாதனை என்று கருதப்படுகிற கிராபிக் நாவல்களை தமிழ் மட்டுமே தெரிஞ்சவங்களால் படிக்கமுடியாது. உதாரணமா ஸ்பீகல்மேனோட மவுஸ்-படிக்க முடியுமான்னா முடியாது. ஏன்னா அது மொழிபெயர்க்கப்பட்டாலும் இங்கே நவீன இலக்கியம் படிக்கிற வாசகர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் போகும். கிராபிக் நாவலை வாசிக்கிறவங்க, தீவிர இலக்கியம் வாசிக்கறவங்கன்னு சொல்லக்கூடிய பிரிவுக்குள்ளயே ஒரு சிறுபான்மைப் பிரிவாகத்தான் இருக்கிறாங்க. இலக்கியம் படிப்பவர்களிலேயே கொஞ்சப்பேர்தான் கவிதைகளுக்குப் போகிற மாதிரி. காமிக்ஸ் படிக்கிறவங்களுக்குள்ளயே, தமிழ்ல அதைப் படிச்சி வளர்றவங்களுக்கு மத்தியிலதான் கிராபிக் நாவல்கள் அறிமுகமாகுது. இலக்கிய வாசகர்களிடம் அல்ல. அந்த வாசகர்களின் எண்ணிக்கை ரொம்பக் குறைவு. லயன் காமிக்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வடிவத்தை அறிமுகப்படுத்துறதுக்கு எடுத்துக்கிற போராட்டத்தைப் பார்க்கலாம். அவங்க கடந்த பல வருஷமா சில கிராபிக் நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடறாங்க. அதை வாசிக்கும் சிறு குழுவின் ஒர் ஆளாக இருந்து வேடிக்கை பார்க்கிறேன். அவங்க என்ன பேசுறாங்கனு கேக்குறதுல எனக்கு ஒர் ஆர்வம் உண்டு. அந்த நாவல்களையும் நான் வாங்கிப் படிக்கிறேன். அது எதுவுமே தீவிரமான கிராபிக் நாவல்கள் அல்ல. ஆனா ஹொடொரோவ்ஸ்கியோட (Alejandro Jodorowsky) காமிக்ஸ் எல்லாம் பண்றாங்க.

மிஷ்கின் : ம்ம்ம்…

வரதன்: ஹொடொரோவ்ஸ்கியயும் இங்க வரவேற்றுப் படிக்கிறாங்க. ஆனா திரும்ப எங்க போறாங்கனா டெக்ஸ் வில்லர் கதைக்குதான் போறாங்க. கௌபாய் கதைகளுக்குதான் திரும்ப போறாங்க. ஒரு 25, 30 வருஷமா நீங்க ஒரு ரசனையை வளர்த்துக்கிட்டீங்கனா, பிறகு அதுக்கு மீறி புதிய ரசனைக்குள்ள வருவது கொஞ்சம் சிரமம்தான். நீங்க திறந்த மனத்தோட வேறு வேறு வாசிப்பு சாத்தியங்களை முயற்சி செய்யக்கூடிய ஆர்வமுள்ள வாசகராக இல்லைன்னா கொஞ்சம் சிரமம்தான். இப்போ தமிழ்ல வேறு வேறு பிரிவுகளில் மொழிபெயர்ப்புகள் செய்வது அதிகரித்திருக்கிறது. நவீன இலக்கியம் சார்ந்து அதிகமான மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டிருக்கிற அதேவேளையில் உலக காமிக்ஸ்கள் மொழிபெயர்க்கப்படவே இல்லை. இதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

மிஷ்கின் : அதையும் வர்த்தகம்தான் நிர்ணயம் செய்கிறது. இப்போ வந்து ஒசாமு டெசூகாவுடைய (OsamuTezuka-Buddha) புத்தாவை எடுத்துக்கலாம். புத்தர் நம்ம நாட்டைச் சேர்ந்தவர். நமது மூதாதை. அவருடைய ஞானம் இந்தியா முழுக்கப் பரவியிருக்குது. அவரைக் கடவுளுக்கு இணையா கும்பிட்றோம். டெசூகா உருவாக்குன அந்தக் காமிக்ஸை மகத்தான படைப்புகளில் ஒன்றாகச் சொல்வேன். அதை இலக்கியமாகவும் கட்புல இலக்கியமாகவும் படிக்கவும் பார்க்கவும் செய்யலாம். ஒரு பெரிய விசுவல் லிட்டரேச்சர் அது. லேண்ட்மார்க் புத்தகக் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அதை நான் பார்ப்பேன். ஏன் இதை யாருமே தமிழ்ல பண்ணலன்னு தோணும். வட இந்தியாவில கூட யாருமே எடுத்துப் பண்ணல. எந்த இந்திய மொழியிலயும் பண்ணல. என்னனா நம்ம நாட்ல இருந்த ஒரு தத்துவ ஞானியை, இன்னொரு நாட்ல வந்து ஒரு பெரிய ஆளு எழுதி அத பண்ணிருக்காரு. அத ஏன் நமக்கு பண்ண முடியல? அதைச் செய்வதற்கு ஒரு ஸ்தாபனம் தேவைப்படுது.

இதைச் செய்தால் அது எத்தனை பிரதி போகும்? ஒரு கலைப் படைப்பு, தமிழ்நாட்டுல எல்லார் வீட்லயும் இருக்க வேண்டிய ஒன்னு, பைபிள் போல, பகவத் கீதை போல, குரான் போல புத்தா கிராபிக் நாவலும் இருக்க வேண்டிய ஒன்று. புத்தா கதையில் இருக்கிறது பெரிய பரிவுணர்வு. அந்தக் கதைக்காக ஒசாமு டெசூகா போட்ட சட்டகங்கள். அது எவ்வளவு பெரிய விசுவல் ஸ்டடி. அது நம்ம குழந்தைகளுக்குக் கிடைக்கவேயில்லையே. என்னுடைய மகள் நாலாவது வருஷம் Art படிச்சிட்டு இருக்கா. கனடாவிலருந்து அவள் நேத்து ஒரு லிஸ்ட் அனுப்பிருக்கா. என்னனென்ன வாங்கி அனுப்பனும்னு. மிளகாப்பொடி, குழிப் பணியாரச்சட்டி, அஞ்சரைப்பெட்டி இப்படி ஒரு 20 பொருள் போட்டுட்டு, கடைசில எனக்கு டெசூகாவோட புத்தா வேணும்னு சொல்லிருக்கா. முழுத்தொகுப்பும் கனடாவிலயும் எளிதாகக் கிடைக்கவில்லை. அங்கேயும் அது அரும்பொருளாகத்தான் இருக்கு. இதுக்குக் காரணம் வணிகம்தான்.

கட்புலம் சார்ந்த ஒரு கல்வி இருந்தால் மட்டுமே காமிக்ஸை ரசிக்க முடியும். காமிக்ஸ் சின்னப்பசங்களுக்கானதுன்னு ஒரு பார்வை இருக்கிறது இங்கே. சொல்லப்போனா ரொம்ப அறிவான மனிதர்கள் படிக்க வேண்டியதுதான் காமிக்ஸ். சின்னப் பசங்க படிக்கிற காமிக்ஸ் இருக்கு. ஆனா, எப்படி நவீன இலக்கியம் படிக்கிறதுக்கு ஒரு பெரிய முதிர்ச்சி தேவையோ, அந்த முதிர்ச்சி உங்களுக்கு காமிக்ஸ் படிக்கிறதுக்கும் தேவைப்படுது. அந்தப் பார்வை ஒரு தீர்க்கமான ஒரு உற்று நோக்கும் பார்வை. அது இங்கே இந்திய சமுகத்துல இல்லைங்கறதுதான் ஒரு பெரிய சோகம்.

சினிமாவில் இருக்கிறவர்களாவது காமிக்ஸைத் தீவிரமாகப் படிக்க வேண்டும். காட்சி ரீதியாக்க் கதை சொல்லும் வலுவை இழந்துபோனதால எல்லாத்தையும் மொழியில் போட்டு கஷ்டப்படுத்திட்டு இருக்கோம். காமிக்ஸ் வணிகத்துக்குள்ள மாட்டி இருக்கு.

வரதன்மர்ஜானே சத்ரபியின் பெர்சேபோலிஸ் (Persepolis -Marjane Satrapi) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது….  

மிஷ்கின்:   ஆம், தமிழ்ல வந்துருக்கு…

வரதன்: நம்ம இலக்கிய நண்பர்களிடையே கூட அதைப் படிச்சவங்க ரொம்ப கம்மிதான். இப்போ அத வந்து லயன்காமிக்ஸ் படிக்கிறவங்க வாங்கிப் படிக்கப்போறதில்ல. ஆனா அது தீவிர இலக்கிய வாசகர்களை நோக்கித்தான் போடப்படுது. ஆனா அது பற்றியும் இங்க பெருசா ஒன்னுமில்ல. அப்ப தீவிர இலக்கிய வாசகர்களும்,ரொம்பச் சின்ன வயசிலிருந்தே காமிக்ஸ் படிக்கிற பழக்கம் இல்லாதவர்களாக இருந்தால், உலக இலக்கியப் பரப்பில் உள்ள முக்கியமான கிராபிக் நாவல்களை அவங்ககிட்ட குடுத்தாலும் அவங்களால படிக்க முடியாதா? நீங்க சொன்ன மாதிரியான பயிற்சி சின்ன வயசுலயே இல்லாத பட்சத்துல, ஒரு 25வயசுல காமிக்ஸை அனுகமுடியாதவர்களாக  ஆயிடுறாங்களா?

மிஷ்கின்:  எனக்கு ஒரு  நாலு வயசுல இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் கிடைக்குது. எப்படிக் கிடச்சுதுனு ஞாபகமில்ல. எங்க அப்பா வாங்கியாந்து கொடுத்தாரா,  யாரு மூலமா எங்க வீட்டுக்கு வந்துச்சோ; இல்ல யாரு வீட்டிலயாவது நான் போய் படிச்சனோ தெரியலை. ஒரு கை, ஒரு பெரிய சட்டகத்தில அந்தக் கை மட்டும் தனியா மின்னுது, தகதகனு மின்னுது. அதத்தான் நான் ஓவியத்தின் மூலமாக பார்த்த முதல்  closeup னு சொல்லுவேன். எனக்கு ஞாபகமிருக்கிறதுனு பார்த்தா வந்து; விக்கிரமாதித்யன்அம்புலிமாமால ஞாபகமிருக்கு. அந்த வேதாளம். அது Full shot. அப்போ close shotனு நான் பார்த்த ஒரே ஞாபகம் வந்து; எனக்கு இரும்புக்கை மாயாவியினுடைய ஒரே ஒரு கை. அட்டைப்படத்துல பாத்தீங்கனா அப்படியே ஒரே ஓரு கையிருக்கும். அந்தக் கைய நாலு வயசுல பாத்து வியந்துப்போயிட்டேன். அதுக்குப்புறம் அப்படியே உள்ள படிக்கும்போது, ஒருத்தன் வந்து மின்சாரத்தைத் தொட்ட உடனே காணாமல் போறான். அவன் நாட்டுக்கு  நல்லது செய்றான். கெட்டவர்களோட சண்டைப் போடுறான். அவன் சட்டத்தைக் காப்பாத்துகிறவன் அப்படிங்கிறது வந்து சின்ன வயசுலந்து தெரியுது. ஆனா இந்தக் கதைய விட்ருங்க. இந்தக் கதை வந்து நியாயக்கதை.  நம்ம இதிகாசங்களிலிருந்து எல்லாக் கதைகளும் நியாயதர்மக்கதைகள்தான்னு வெச்சிக்கோங்களேன். ஆனா காமிக்ஸ்க்குள்ள என்ன பயணப்பட வெச்சது வந்து, அந்த க்ளோசப்தான்.  அந்த இரும்புக்கை க்ளோசப்ல என்னையப் புடிச்சது மாதிரி இருந்துச்சு. இது ரொம்ப பிரத்யேகமானது.  நான் எப்பவுமே பாப்பேன். ஏன் என் அசிஸ்டெண்ட்கள் காமிக்ஸ் படிக்கமாட்டேன்றான்னு. இது என்னனு கேட்டீங்கன்னா, உலகம் முழுதும் ரெண்டு விதமான மனப்பான்மை இருக்குனு நினைக்கிறேன். அதாவது வந்து எழுத்து மூலமாக உலகத்த புரிஞ்சுக்கிறது, காட்சி மூலமாக உலகத்தப் புரிஞ்சுக்கிறதுனு. எழுத்து மூலமாக கேள்வி கேட்கறது. காட்சி மூலமாகக் கேள்விகள் கேட்கிறது. Visual மூலமா பதில சொல்றது, அல்லது Text மூலமா பதில சொல்றது. அதனால நான் இப்படி சொல்லலாம். ரெண்டு விதமான பார்வைதான் இருக்கு, ஒன்னு மொழிப்பார்வை, ஒன்னு வந்து ஒளிப்பார்வைனு சொல்லலாம்.

ஒளிஞ்சு நின்னு பார்த்து ரசிக்கிற Voyeurism ங்கிறது, ஒரு விஷயத்த உத்துப்பாக்குறது,அது வந்து ஒரு பெரிய அர்த்தம் குடுக்குது. குகைல வாழ்ந்த மனிதன், ஒரே ஒரு மனிதன மட்டும்தான் வரைஞ்சான். குகைல வாழ்ந்த மனிதர்கள் எல்லாருக்குமே அந்தத் தூண்டுதல் வரவே இல்லையே. 95 சதவீதம் பேர் எழுத்து மூலமாக வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிறாங்க. ஒரு ஐந்து சதவீதம் பேர் வாழ்க்கைய காட்சி மூலமாபுரிஞ்சிக்கிறாங்க. இது வந்து அவங்களோட இயல்பு. அமெரிக்காவில என் நண்பன் ஒருவன் காமிக்ஸ் கடை இருக்கான்னு கேட்கிறான். இதுவரைக்கும் கேள்விப்பட்டதேயில்லைன்னு சொல்றான். அங்கேயே 20 வருஷம்,30 வருஷம் வாழ்ந்துகிட்டிருக்கிற நண்பர்களே அப்படி இருக்காங்க. அர்ஜுனன்கிட்ட வந்து துரோணாச்சாரியார் கேட்கிறார். அந்த மரத்துல உங்களுக்கு என்ன தெரியுதுன்னு. அந்தப் பறவையினுடைய கண்ணுதான் எனக்கு தெரியுது, அப்டிங்கிறார். அது தான் அதிகபட்ச ஜீம் ஷாட். அதை வந்து ராமானந்த சாகர் பண்ணும்போது, சின்ன வயசுல பாத்திருக்கேன். அந்த மகாபாரதம் பாக்கும்போது ஷாக் ஆயிட்டேன். ஒரு இயக்குநரா எனக்கு வந்து அது ரொம்பப் பெருசா இருக்கு. மத்தவங்களுக்கு அது பெரியதா இருக்கணும்னு அவசியம் இல்லை. நான் வந்து லுவெர் அருங்காட்சியகத்துக்குப் போனபோது கிட்டதட்ட ஒரு நாள்பூரா பாத்துக்கிட்டுருக்கேன். சாயங்காலம் ஒரு மணிநேரம் மொனாலிசாவுக்காக ஒதுக்கிட்டேன். உடனே எல்லாம் சுத்திகித்திப் பாத்துட்டு, கடைசில எங்க மொனலிசானு எல்லாரும் மொனலிசா நோக்கி போயிக்கிட்டே இருக்கோம். மொனலிசா ரூம்க்குள்ள போகும்போது கூட்டம். அதாவது ஒரு நாலாயிரம்பேர்  வெளியே வர்றாங்க, ஒரு நாலாயிரம்பேர் உள்ள போறோம். அப்படியே உள்ள போனா, ஒரு நூறடி அகலம், நூத்தம்பதடி உயரம் உள்ள இடத்துல அப்படியே மொனாலிசாவோட படம் இருந்துச்சு. மொனாலிசாவுக்கு ஒரு பத்தடிக்கு முன்னால ஒரு பெரிய கயிறு இருந்துச்சு. நான் உள்ள போகும்போது ரொம்ப பயங்கரமா ஷாக் ஆயிடுச்சு. என்னனு கேட்டீங்கனா நான் மொனாலிசாவைப் பாக்கறதுக்கு முன்னால, எல்லாரையும் பாத்தேன். எல்லார் கையிலும் கேமரா இருந்துச்சு, எல்லாருமே மொனாலிசா பக்கத்துலருந்து செல்ஃபி எடுத்துக்கிட்டிருந்தாங்களே ஒழிய, யாருமே மொனாலிசாவப் பாக்கவே இல்ல. எனக்கு ரொம்பக் கவலை ஆயிடுச்சு. ஏன்னா, நான் வந்து ரொம்ப வறுமையான குடும்பத்துலந்து பிறந்து வந்த ஒருத்தன். மொனாலிசாவப் பாக்குறத வந்து ஒரு கனவா நினைச்சு நான் போகும்போது ஷாக் ஆயிட்டேன். அப்புறம் எனக்குப் புரிஞ்சுது. நான் உள்ள போயிட்டு  தனிமையா ஒரு ஓரமா நின்றுகிட்டு கிட்டத்தட்ட அரைமணிநேரம் அந்த அம்மாவப் பாத்தேன். வரும்போது வருத்தத்தோடதான் வெளியவந்தேன். ஒரு காட்சிய நம்ம பாக்குறதுக்கு, அதை நாம தரிசிக்கிறதுக்கு, ரொம்ப அமைதியோட பாக்குறதுக்கு, கடுமையான மெளனம் தேவப்படுதுனு நினைக்கிறேன். எல்லோருக்கும் தலையில யோசனைகள் ஓடிக்கிட்டே இருக்கிறதும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்.

வரதன் : Aphantasiaனு சொல்லி ஒரு ப்ராஜெக்ட். அவங்க நோக்கம் என்னன்னா, விஷுவலா ஒரு விசயத்தைக் கற்பனை செய்யக் கூடிய தன்மை கொண்டவங்க, அப்படி விஷுவலா கற்பனை செய்ய முடியாதவங்களைப் பற்றி  ஆராய்வது. ஆக,சிலபேருக்கு விஷுவலாகக் கற்பனை செய்யமுடியாத தன்மையுமே இருக்கு. இப்ப நம்ம ஏற்கனவே பார்த்த விஷயங்கள், ஒரு விஷயத்தைக் கற்பனை பண்ணிக்குற தன்மை, ஒரு ஓட்டிப்பாக்குற தன்மை, இப்ப ஒரு பாட்டுக்கேட்ட ஒடனே, ஒரு பாட்டோட ஆரம்பத்துலருந்து கடைசிவரைக்கும் அதோட எல்லா சத்தங்களையும் மூளையில நாம மறுபடைப்பு செய்றோம். அந்த உணர்வை நாம என்னைக்குமே விட்றமாட்டோம். அத ஓட்டிட்டே இருப்போம். அதே மாதிரி நம்மளால காட்சிகளாகவும் ஓட்ட முடியும் இல்லையா? ஒரு படத்தைப் பாக்குறோம், ஒரு Comicsஅ படிக்கிறோம்னா, அது விஷுவலா  ஓடிட்டே இருக்கு. இப்ப நீங்க சொல்ற அந்த இரும்புக் கை மாயாவியின் கை அல்லது கதைகளேகூட உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இப்ப நீங்க படிச்ச புத்தாவில சில இடங்கள்,மலைக் காட்சிகளைத் திரும்ப உங்களால மீளக்காண முடியும். விட்டால் கொஞ்சம் வரையக்கூட முடியும். இதுமாதிரிதான் இசையும் இருக்கு. இதை ஒருத்தரோட திறன் அப்படின்னு  எடுத்துக்குட்டோம்னா, இந்தத் திறன் உள்ளவங்கதான் காமிக்ஸ் வாசிக்கிறாங்கனு சொல்லலாமா? காமிக்ஸுடைய காட்சிமொழியைப் புரிந்துகொள்ளக்கூடிய திறன் கொண்டவர்கள். ஏன்னா, இப்ப இங்க எழுத்தை வாசிக்கிறதுக்கான பயிற்சி நம்ம  எல்லாருக்கும் பள்ளிக் கல்வி வழியாக இயல்பாக இருக்குறதுனால, தொடர்ந்து இப்ப whatsappல வாசிக்கிறோம், SMSல வாசிக்கிறோம், புத்தகங்கள்ல வாசிக்கிறோம். நியூஸ்பேப்பர்ல வாசிக்கிறோம். மொழிப்பயிற்சி கிட்டத்தட்ட ஒரளவுக்கு தன்னியல்பாகவே எல்லாருக்கும் இருக்குனு சொல்லலாம். ஆனா காட்சி ரீதியான வாசிப்புப் பயிற்சி குறைந்துகொண்டே வருது. பள்ளிப்பாடத்துலேயே, ஒரு ஆடு முன்னாடி வருது, இன்னொன்னு எதிர்த்தாப்பில வருது. குறுகிய இடம்தான் இருக்கு. ரெண்டும் மோதிக்கொண்டால் கீழ விழுந்துரும்னு ஒரு கதைய நம்ம சின்னவயசுல  பார்த்திருப்போம். தமிழ் பாடப் புத்தகத்துல. அது காமிக்ஸ்தான். அதேமாதிரி இரும்புக்கோடாலி, மரம்வெட்டி நீதிக்கதையைப் படிச்சிருக்கோம். அதுல எங்குமே எழுத்து இருக்காது. இப்படி ஒரு பயிற்சி இருந்திருக்கு. நமக்குக் கோயில்கள்ல சிற்பங்கள், ஓவியங்கள் வழியாகவிஷுவலாக ஒரு கதையப் புரிஞ்சிக்கிறதன்மை இயல்பாகவே இருக்கு. ஆனால், ஒரு கலாச்சாரப் பயிற்சியாகத் தொடர்ந்து அது நமக்கு அளிக்கப்படலைஆனா கோயில் அப்பிடியேதான் இருக்கு. சின்னவயசுலருந்து இதைப் பார்த்து வருகிறோம். கலாச்சாரமாகவே,இவ்வளவு செறிவான visual narrative கொண்ட இடங்களிலேயே புழங்கக் கூடிய ஆட்களுக்கு எந்த இடத்துல இது Missஆகுதுனு நீங்க நினைக்கிறீங்க?

மிஷ்கின் : இப்ப நீங்க கோயில் அப்டினு சொல்றீங்களே, நம்ப எல்லாருமே சின்னவயசுலருந்து, கோயில்லதான் வளர்க்கப்படுறோம். ஆனா, கோயில் வந்து ஒரு புனிதமான இடம். இப்ப, சிவன் கோயில்ல நந்தி பாக்குறோம். லிங்கமோ ஆணும்,பெண்ணும் சேர்ந்தது. அம்மா கிட்ட அம்மா இது என்னம்மான்னு, எல்லாக் குழந்தைங்களும் கேட்டுருக்கும். இல்லனா, அந்தக் குழந்தைங்களுக்கு முதல்நாளே இத பத்தி உள்ள பேசக்கூடாதுன்னு  சொல்லிப் பயமுறுத்திதான் அனுப்பியிருப்பாங்க. ஆனாலும் அந்தக் கேள்வி குழந்தைக்குள்ள இருக்கும். இது என்னம்மா,இது முன்னால நின்னு கும்புட்றனே? இது சிவன்பா. இது என்னம்மா, ஆண் மாதிரியும் இல்ல,பெண் மாதிரியும் இல்ல? இது என்னம்மா ஒரு மாதிரி உருண்டையா இருக்குன்னு கேட்ட உடனே, ஒரு அம்மாக்காரி, ஒரு யோனியும், ஒரு ஆண்குறியும் இணைந்ததுதாம்மா, ஒரு ஆணும், பெண்ணும் இணைந்ததுதாம்மா சிவம், அப்பிடினு சொல்லமுடியாது. சொல்ல முடியாததுக்குக் காரணம், அதுக்கு அவங்களுடைய காரணமும் இருக்கு. அப்ப குழந்தை யோனினா என்னனு கேட்கும், ஆண்குறினா என்னனு கேட்கும். அம்மாவுக்குச் சங்கடம்னு சொல்லமாட்டாங்க. ஆனா என்ன சொல்றாங்க, இதவந்து நீ சாமியா கும்பிடுமானுன்னு. இந்தப் புனிதத்தன்மைதான். இப்ப ஒரு நந்தி இருக்கு. போய்த் தடவிப் பாக்குறோம். தடவிக் கும்பிட்டு பாக்குறோம். உடனே அடையாளம் காண்கிறோம். ஓ இது மாடுன்னு.ஆனா திரும்பவும் அது புனிதம். ஏன்  இங்க வந்துச்சு அப்படின்னு ரொம்ப அரிதாதான் ஒரு குழந்தை வந்து கேக்கும். அப்ப ஒரு கோயிலுக்குள்ள அவ்ளோ சிற்பங்கள், வெளிய அவ்ளோ சிற்பங்கள் இருக்கு.  அந்தச் சிற்பங்கள், நிறைய உடலுறவு பண்றமாதிரிலாம் சிற்பங்கள் இருக்கும். எல்லாக் கோயில்கள்லயும் இருக்கும், அப்புறம் யாழி இருக்கும். அப்புறம் பிள்ளையார் இருக்கும். இது எல்லாமே வந்து ஒருத்தருக்குச் சின்னவயதுலயே கிடைக்கிற மகத்தான உருவங்கள்தான். அதுல ஒன்னும்  சந்தேகமில்லை. ஆனா, அந்தக் குழந்தைக்கு வந்து எப்படினா, கிட்டத்தட்ட அந்த இடம் வந்து அமைதியைக் கடைபிடிக்க வேண்டிய ஒன்னுன்னு அர்த்தப்படுத்தப்பட்டு விடுகிறது. கேள்வி கேக்குற இடமாஅது இல்ல. ஒரு விசாரணைக்கான இடம் கிடையாது அது. சாமியைக் கும்பிட்டுவிட்டு திரும்பி வரவேண்டிய இடம் அது. அங்கே அறிவுப்பூர்வமான விசாரணைக்கு இடம் இல்லை. இது நம்ம வந்து குழந்தைங்களுக்கு இழைக்கிற பெரிய தீங்கு அப்படின்னு சொல்வேன்.உங்க கேள்வில பார்த்தா,இதனால தான் நமக்கு வந்து விஷுவலா பயிற்சி இல்லை. இப்ப ஒரு கிராமத்துக்குப் போறோம். ஒரு நகரத்துல இருக்கறத விட கிராமத்துல நிறைய வெட்டவெளி இருக்குது. காலைல ஒருத்தன் குளிக்கப்போறான். இரண்டு கிலோமீட்டர் தூரம் ஒரு குளத்துக்கு நடந்து அவன் போறான்னா, அவ்ளோ காட்சிகள் அவனுக்குள் போயிக்கிட்டே இருக்கு. கோடிக்கணக்கான காட்சிகள். தேர்ந்தெடுத்துப் பார்த்தீங்கன்னு வெச்சுக்கிட்டாலும் ஒரு ஐம்பது காட்சிகள் கிடைக்கும். ஒரு ஆலமரத்தோட துளை என்னென்னவோ சொல்லக்கூடியது இல்லையா.

நா வெளிநாடு போயிருந்தப்ப தேவாலயத்துல Pieta சிற்பத்தைப் பார்த்தேன். கிம் கி டுக் அதை அடிப்படையாக வெச்சு ஒரு படமே எடுத்துருக்காரு. கருணை வடிவான மேரி முகத்துலயும் கிறிஸ்துவோட முகத்துலயும்‌ அப்படியே ஒரு சோகம் இருக்கும். ஆனா, அந்த இடத்துக்குப் போகும் போது ஒரு கிறிஸ்தவனாகப் போனிங்கன்னா வணங்கிட்டுதான் வருவீங்க. ஆனா எதுவுமே ஒரு அடையாளம் இல்லாம போனீங்கன்னா அது மிகப்பெரிய விசாரணையாக ஆயிடும். அதுக்கெல்லாம் போக வேண்டாம். நம்ம ஒரு மரத்த எடுத்துப்போம். ஒரு பெரிய மரம் எப்போதுமே சிலுவை தான். மரத்துல இருந்து வந்ததுனால சிலுவைன்னு சொல்லல. அதன் வடிவமே அப்படித்தான். அந்த மரத்த நாம எவ்வளவு நேரம் உறுத்துப் பாக்குறோம்? தொட்டுப் பாக்குறோம்? நான் தொட்டுப் பார்ப்பேன். மரத்தை உத்துப் பார்ப்பேன். காடுகளில் மூங்கில் தொட்டுப் பார்த்து இருக்கேன். அது சம்பந்தமாகப் படிக்கும் போது 1200 விதமான மூங்கில் இருக்கு. இப்ப மலேசியா போகும்போது, மலேசியா காடுகள்ல வேறுமாதிரியான மூங்கிலிருக்கு. அப்புறம் இன்னிக்கும் வந்து வடகிழக்கு நாடுகள்ல, குறிப்பாக தைவான், ஹாங்காங்ல கட்டிடங்களுக்கு சாரம் கட்டுறது பாத்தீங்கனா இன்னமும் மூங்கில்லதான். ஹாங்காங் அவ்ளோ முன்னேறிடுச்சு.  நம்ம நாட்ல அப்ப வீடுகட்டும்போது, பாத்தீங்கனா சாரங்கட்டுறது கட்டைல அடிச்சுப் பண்ணாங்க. இப்ப இரும்புல பண்றாங்க. ஆனால் இன்னமும் ஹாங்காங்ல  மூங்கில்லதான் பண்றாங்க. ஏன்னா மூங்கில் வந்து அவ்ளோ எளிமை. அவ்ளோ எடைய அது தாங்கிக்குது. கிட்டத்தட்ட  அவங்களுக்கு வந்து ஒரு ஆன்மிக வாழ்க்கைய கொடுக்குது.

எதையும் உத்துப்பார்க்க வேண்டியிருக்குது. காமிக்ஸ் படிச்சு என்ன கிடைக்கப்போகுது? ஒன்னுமே கிடைக்கப்போறதில்ல. காமிக்ஸ் படிச்சா உங்களுக்கு நட்டம்தான். இப்ப வந்து Lonewolf and Cub வாங்கினிங்கனு வச்சுக்குங்களேன், அது வந்து 6000 ரூபாய். கிட்டத்தட்ட, அது ஒரு மனுஷனுடைய சம்பளம். ஏன் சார் 6000ரூபாய் குடுத்து நான் ஏன் சார் படிக்கணும்னு அப்படின்னு கேட்டீங்கனா, நான் சொல்றது தப்பு சார், சும்மா உளறிக்கிட்டுதான் சார் போயிக்கிட்ருக்கேன், மன்னிச்சிக்கோங்கனுகூடச் சொல்லணும். ஆனா ஒரு நாப்பதாயிரம் ரூபாய சம்பாதிக்கிற ஒரு ஆள் வந்து,ஒரு 10% எடுத்து வச்சார்னா ரெண்டு மாசத்துல அதை வாங்க முடியும். நான் ரொம்ப வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கவங்களைப் பார்த்து அப்படிப் படிங்கன்னு சொல்லவே மாட்டேன். காமிக்ஸ வாங்கி வந்து, அந்த வறுமை கோட்டுல இருக்க பசங்ககிட்ட கொடுங்கனு சொல்றேன். ஒரு வீட்ல வந்து ஒரு நூறு புத்தகம் இருந்தால், அதுல வந்து ஒரு பத்து காமிக்ஸ் இருந்தாப் போதும். அந்த வீடு நிறைவா ஆயிடும்னு நினைக்கிறேன்.

ஒவ்வொரு காட்சியும் ஒரு குறியீடு. அது ஒரு சமிக்ஞை மட்டும் அல்ல. ஒவ்வொரு குறியீடும் நிறைய கருத்துகளை உள்ள பொதிஞ்சு வெச்சிருக்குது. இப்ப பிள்ளையார் அப்படின்னா அவர் கடவுளாக இருக்கிறார். ஆனால் அதுக்குள்ள எத்தனை கருத்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்குது.

எனக்குத் தெரிஞ்சு மயிலைவிட ஒரு அழகிய, அத்தனை உருவகங்கள் கலந்த ஒரு உருவம் வேறு எதாவது இருக்குமா? ஓவ்வொரு சமயம் அதைப் பார்க்கும்போதும் கண்ணு கூர்மையாகுது. கண் திறக்குது. எனது கண்கள் விரி ஆடி ஆகுது. ஒரு காட்சிப்புலத்தை நாம் கூடுதலாக களித்துப் பார்க்கிறோம். உலகத்தைக் கூடுதலாக அதனால புரிஞ்சுக்கிறோம்.

வரதன் : இப்ப காமிக்ஸ் படிக்காதவங்ககூட சினிமாவ பார்க்கிறாங்க. சினிமாவும் காட்சி மொழிதான். அதுல அவங்களுக்கு ஈடுபாடு இல்லன்னா, அவங்களால சினிமாவும் பாக்கமுடியாது. வாழ்க்கையில சினிமாவே பார்க்காத ஆட்களையும் நமக்குத் தெரியும்.சினிமாவுல பழக்கம் உள்ளவர் காமிக்ஸ் படிப்பாருன்னு சொல்லமுடியாது. பொதுவாக நாம் பார்க்கும் சினிமாங்கிறது ஒரு வகையில நம்மளோட அன்றாட வாழ்வைச் சின்னச்சின்னதா படம்பிடிச்சுக் காட்டறதுனால, அந்தக் காட்சி மொழிக்கு பழகுன ஒருத்தர்கூட, காமிக்ஸ் ஒரு சட்டகத்துக்கும் இன்னொரு சட்டகத்துக்கும் இடையில எந்த விளக்கமும் இல்லாத, தனித்தனி ஸ்டில்களாகத் தொகுக்கப்பட்ட படங்களைக் கதைவரிசையாகத் தொகுக்க சிரமப்படுறாரு. அப்படி சினிமா பாக்குற ஒருவரால கூட காமிக்ஸ் படிக்க முடியலனா, எது தடையா இருக்குனு நினைக்குறீங்க?

மிஷ்கின் : பயிற்சி ரொம்ப  முக்கியம். பயிற்சி அப்படின்னு நான் சொல்றது பழக்கத்தைத்தான் சொல்கிறேன். பழக்கம்தான் பயிற்சி ஆகுது. அந்தப் பழக்கம் எங்கே ஆரம்பிக்குது? சினிமாவின் சரித்திரத்திலே மூணு பேருடைய ப்ரேம்களை ரொம்ப வலுவான ப்ரேம்கள்னு சொல்வாங்க. எனக்குப் புடிச்சவங்க என்பதால் மட்டும் சொல்லல. பிரெஸ்சான், ஹிட்ச்காக், குரசோவா இந்த மூன்றுபேரும்.  ஹிட்ச்காக் ஸ்டோரிபோர்டு போட்டுத்தான்  படம்பிடிக்கப் போகிறார். ப்ரெஸ்ஸான் ஆரம்பகாலத்தில் தான் எடுக்கத் திட்டமிட்டிருப்பது எல்லாத்தையும் கிட்டத்தட்ட வரைஞ்சிட்றாரு. ஏன்னா அவரு பெய்ண்டர். அப்புறம் வரையக் கூடாதுனு முடிவுபண்ணுகிறார். தன்னோட சுயம்தான் அதுல இருக்கும்னு முடிவு செஞ்சு, அதை அழிக்கறதுக்கு முடிவு பண்றாரு. ஒரு ஐடியாவோட அவர் போறாரு. படப்பிடிப்புக்குப் போய் ஒன்றை ஆரம்பிக்கிறாரு. குரசோவா ஒரு ஓவியர். அவர் ஸ்டோரி போர்ட் பண்றதில்லை. நேரடியாகத் தனது காட்சிகளை ஓவியங்களாகவே வரையறாரு. ஒரு போர்க்காட்சியை ஓவியமாகவே வரைந்து விடுகிறார். சினிமா அதன் துவக்க காலத்திலிருந்து இந்த நூறு வருடத்தில இந்த மூணு பேரோட பங்களிப்புங்கிறது முக்கியமானது. குரசோவா சாமுராய் காலகட்டத்துக்குள்ளேயே நுழைஞ்சிடறாரு. அப்புறம் அதிலிருந்து வெளிய வர்றாரு. அதுக்கப்புறம் தனது காட்சி அனுபவத்தின் வலுவோட ’ஹை அண்ட் லோ’ போன்ற சமகால எதார்த்தப் படங்களிலெல்லாம் பயணப்படுகிறாரு. இந்திய சினிமால சத்யஜித் ரே தவிர எத்தனை பேரு ஸ்டோரி போர்ட் போட்ற ஆளுங்க இருக்காங்க? ரே அருமையான ஓவியர். ஓவியராக இருக்கிறவங்கதான் பெரிய ஆட்கள்னு நான் சொல்லவில்லை. ஆனால் காட்சி ரீதியான தெளிவு எல்லாருக்கும் அவசியம் என்பதைத்தான் சொல்கிறேன். உதாரணத்துக்கு சத்யஜித் ரேயின் ஒரு குறும்படம் இருக்கு. மாடிவீட்டில ஒரு பையன் இருக்குறான். கீழே ஒரு தோட்டத்துல ஒரு பையன் இருக்கிறான். மாடியில் இருக்கிற பையன்கிட்ட நிறைய பொம்மைகள் இருக்குது. அதை வெச்சு விளையாடுகிறான். ஆனால் அவனுக்கு அலுப்பாக இருக்குது. கீழே இருக்கிற பையன், ஒரு பட்டத்த எடுத்து விட்டுகிட்டுருப்பான். இந்த ரெண்டுபேருக்கும் உள்ள ஷார்ட்களைத்தான், இந்த குறும்படத்தை எடுத்திருப்பார். இதுல எந்த வசனமுமே இருக்காது.

சினிமாவுடைய ஆதி எங்கிருக்குனா? மௌனப்படத்தில் தான் இருக்கு. அதாவது ஐஸன்ஸ்டீன் படங்கள்லயும், அதுக்கப்புறம் பஸ்டர் கீட்டன், அதுக்கப்புறம் சார்லி சாப்ளின். இவங்க மூணுபேருடைய படங்கள், ரொம்ப முக்கியமான படங்கள்னு சொல்லலாம். இன்றைக்கு சினிமாக்கு வர இளைஞர்கள், இன்றைக்கு இருக்கிற வெகுஜன சினிமாவின் சத்தங்களையும், மிரட்டல்களையும், உருட்டல்களையும்தான் சினிமாவாகப் பாக்குறாங்க., அதாவது உதிரிப்பூக்கள்ல ஒரு shot இருக்கு. ஒரு கல்யாணம் பண்ணிடலாம் அப்டினு சொன்ன உடனே ஒரு ஒலிபெருக்கிக் குழாய் ஒரு ஷாட்டும், அப்றம் வந்து ஒரு குப்பைத் தொட்டில நாய் வந்து இலைகளைச் சாப்பிட்ற ஷாட்டும் வச்சுட்டு, கிட்டதட்டப் பத்துலட்சத்துக்கான பட்ஜெட்டை வந்து தயாரிப்பாளர்க்கு மிச்சம்  பண்ணிக்கொடுத்திருப்பார்.  இது ஒரு காட்சி ரீதியான நுண்ணுணர்வு. அதாவது சினிமா ஊடகத்தை அவர் எப்படி கையாண்டார் அப்படிங்கிறது வந்து, நிறைய பேரால பண்ண முடில. ரொம்பச் சிலர் அத்திபூத்த மாதிரி ரொம்ப அழகாப் பண்ணிருக்காங்க. எத்தனையோ வருஷத்து காதலிய நினைச்சிக்கிட்டே படுத்திருக்கான் ஒரு மனுஷன். காதலி ஜெயில்லருந்து வந்து, படகிலருந்து இறங்கி அந்த ஊரின் நிலத்தைத் தொட்டவுடனே, அந்த மனிதனுடைய உடல் ஆடுது பாத்தீங்களா? அந்தக் கட். தொட்டவுடனே மனுஷனுக்கு ஆடுறதுலந்து அமானுஷ்யத் தன்மை மாதிரி ஒரு spiritual ஆன இடத்துக்குள்ள போறோம்னு வெச்சிக்கோங்களேன். ஆனாலும் வந்து, அந்தக் கட்ல ஒரு காட்சி இருந்துச்சு. ரொம்ப அபூர்வமான பேர், படங்களைக் காட்சிரீதியாகப் பாக்கணும்னு பாக்குறாங்க.  ஆனால் இன்னும் அந்த இடம் வறுமையாகத்தான் இருக்குது.

வரதன் : சினிமா பார்க்குறது ஒரு பண்பாடாக  நம்மகிட்ட ரொம்பப் பரவலாகத்தானே இருக்கு. எல்லாரும் பாக்குறாங்க, தமிழர்கள் சினிமா பாக்குறாங்க. இந்தியர்கள் சினிமா பாக்குறங்க. அவங்களால ஏன்  காமிக்ஸ ரசிக்க முடியவில்லை?

மிஷ்கின் :எல்லோரும் சினிமாவை ஒரு காட்சி ஊடகமாகத்தான் ரசிக்கிறாங்க என்கிற மாதிரி உங்க கேள்வி இருக்கு.

வரதன் : அப்ப காமிக்ஸ் வடிவத்தை ரசிக்கக்கூடிய ஒரு சமூகமா இருந்தா, சினிமாவயும் அது மேலும் சிறப்பாகப் புரிஞ்சிக்க முடியும்னு எடுத்துக்கலாமா?

மிஷ்கின் :  நிச்சயமா எடுத்துக்கலாம். காமிக்ஸ் படிக்கும்போது எடுத்துக்கொள்ளும் அவகாசம் ரொம்ப முக்கியமானது. வேகமா யாருமே காமிக்ஸப் படிக்கமாட்டாங்க. படிக்கும்போது, சட்டகத்தில் இருக்கிற வசனக் குமிழைப் படிச்சிருவாங்க, பாப்பாங்க. திரும்பப் படிச்சிட்டு திரும்பிப் பாப்பாங்க. திரும்பிப் போவாங்க, திரும்பி வருவாங்க, திரும்பிப் பாப்பாங்க. திரும்பிப் பாப்பாங்க. மனசுல நிக்கும். அப்புறம் திரும்பிப் பாப்பாங்க. இது வந்து ஒரு பெரிய போராட்டமே நடக்கும், அப்படி ஏன்னா?அந்தச் சட்டகத்துக்குள்ள இருந்த, அந்த சீர்மை, அந்த ஓவியம், அந்த உள்ளடக்கம் மற்றும் அங்கேயுள்ள வஸ்துக்கள் எல்லாம் சேர்ந்த ஒரு பெரிய உஷ்ணம் வந்து அவனைத் தாக்குது. அப்ப அந்த அவகாசத்தை அதில் செலவிடுகிறான். அது மிகவும் முக்கியமானது. அவன் செலவழிக்கிற அவகாசம்தான். அவங்கதான் காமிக்ஸ ரொம்ப ரொம்பப் படிக்கிறாங்க. எல்லாருக்கும் அந்த ஆற்றலைப் போட முடியாது. ஏன்னா? ரொம்ப சிம்பிள்? இப்ப ஒரு கவிதையை பத்து வருஷமா படிக்கிற ஆளும் இருக்காங்க. பத்து செகண்டுல படிக்கிற ஆளுங்களும் இருக்காங்க. அந்த மாதிரி தனிப்பட்ட ருசி மற்றும் அந்த வடிவத்துடனான பிணைப்புதான் திரும்பத் திரும்ப.

வரதன் : காமிக்ஸ் படிக்கிறவங்களுக்கு, கூடுதல் பொறுமை தேவை, அப்படின்னு நீங்க சொல்றீங்களா?

மிஷ்கின் : அதாவது, படித்தல் அப்படிங்கிறது வந்து, ஆழமாகப் பயணம் பண்றதுதான்; பார்த்தல் அப்படிங்கிறதும் , ஆழமாகப் பயணம் பண்றதுதான். நான் ஒரு உதாரணம் சொல்றேன். நார்வேக்குப் போயிருக்கும்போது எட்வர்ட் மன்ச்சின் கண்காட்சிக்குப் போயிருந்தேன்.  அவருடைய புகழ்பெற்ற ஓவியமான ஸ்க்ரீம்(Scream)-ஐ பாத்துக்கிட்டு இருந்தேன். ரொம்ப அமைதியா இருந்தேன். கெளம்பும்போது, ஒரு மாடி மேலருந்து ஒருத்தர் பாத்துக்கிட்டுருந்தார். என்னடா மேலருந்து பாக்குறாரு, அப்டின்னு வேணும்னே, நான் கொஞ்சம் நேரமெடுத்துக் கொண்டு, வேற ஓவியத்தைப் பார்க்கிற மாதிரி அவரையே தெரியாமல் கவனிச்சுக்கிட்டிருந்தேன். அவரு பாக்குறாரு, அப்றம் அந்தப் பக்கம் திரும்பி பாக்குறாரு, அப்றம் இந்தப் பக்கம்  போயிப்பாக்குறாரு. அப்றம் கீழருந்து பாக்குறாரு, படிக்கட்டில நின்று பாக்குறாரு, பக்கத்துல வந்து பாக்கிறாரு, அப்றம் பக்கவாட்டிலருந்து பாக்குறாரு; கிட்டதட்ட 360 டிகிரில பாக்குற மாதிரி பார்த்தாரு. அப்ப நான் வந்து, ரொம்ப  அதிர்ச்சி ஆயிட்டேன். இப்படிச் செலவழிக்கிற நேரம் ஒரு ஓவியத்தைப் பார்க்குறதுக்கு முக்கியமானது. அதுக்குக் கடுமையான பொறுமை தேவைப்படுகிறது. அதுக்கு மேல அந்தப் பொறுமைக்கு இமாலயம் அளவுக்கு ஆற்றலும் தேவைப்படுதுன்னு நினைக்கிறேன்.

ஷங்கர்ராம சுப்ரமணியன் :எண்பதுகள்ல பூந்தளிர், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், சிறுவர்மலர்ல கொஞ்சம். சிறுவர் மலரோட முடிஞ்சு போச்சு. இந்த அடிப்படைல, எங்கோ ஒரு இடத்துல காட்சி ரீதியான கல்வி நடக்கத்தானே செஞ்சிருக்கு; ஆனா அது  தடமாற்றம் ஆகல இல்லையா?

மிஷ்கின் : காலைல ஏன் நடைபயிற்சிக்கு வெளியில  போகிறோம். ஏன் வீட்டுக்குள்ளயே walking போலாம்ல. walking போறது காட்சிகளைத்‌ தரிசிக்கதான். மேலயும் கீழேயும் பாக்குறது. ஆளுங்களைப் பாக்குறது. நாய்க்குட்டிகள் பாக்குறது. ப்ளாட்ஃபார்ம்ல கால வைக்குறது, புடிச்ச மரத்தின் மேல சாய்ந்து நிக்குறது. அல்லது ஒரு இடத்தில நின்னு ஒரு கட்டடத்தைப் பாக்குறது. ஒரே தெருல  நாம் ஏன் தொடர்ந்து வாக்கிங் போவதில்லை?

ஒரே காட்சியைப் பார்ப்பதில் மனம் சீக்கிரத்திலேயே அலுத்துவிடுகிறது. புதிய காட்சிகளுக்கான ஏக்கம் நமக்குள்ளயே ஆழமா இருக்கு, இதான் மனிதரோட இயல்பு, இதனால்தான் படகைக்கட்டி தண்ணீல போறான், அதனால்தான் அவன் வானத்துக்குப் போறான். ஒவ்வொரு தருணத்துக்கும் அவனுக்குப் புதுக்காட்சி தேவையா இருக்கு, ஒவ்வொரு நொடிக்கும்.

இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் இல்லாத ஒரு காலம் இருந்திருக்கும் இல்லையா? அது எவ்வளவு காட்சிகளோட இருந்திருக்கும்? விதவிதமாக? அப்ப இங்க மனிதர்களே இல்லை. கண்களே இல்லாம இருந்தாலும் ஏன் இத்தனைக் காட்சிகளால இந்த உலகம் நிறைஞ்சிருக்கு. காட்சிகள் மனித உயிர்க்கு முன்னால் இருந்தது. மனித உயிர்களுக்குப் பின்னாலயும் இருக்கபோகுது.

வரதன் : மைக்கேல் ரொசென்னுடைய தெ சேட் புக்  (The Sad Book – Michael Rosen) எனக்குப் படிக்கக் கொடுத்தீங்க. அந்தப் புத்தகத்துல நாய் பாத்தீங்கனா, அது நாய் ‌இல்ல. ஆனா நாய்னு நமக்குத் தெரியும். சித்திரங்களைப் பொறுத்தவரை முழு எதார்த்தத்துக்குப் போக வேண்டியதில்லை. கார் மாதிரி ஒரு தோற்றத்த நீங்க வரைஞ்சிங்கனா நான் கார்ன்னு புரிஞ்சிப்பேன். நான் வரைகிற நாய் அது ஒரு தன்மையா இருக்கு. இன்னொரு கலைஞர் நாய் ஒன்றை வரைறாரு, அது வேற தன்மையில இருக்கு. அப்ப இரண்டையும் நாய்னு பார்வையாளன் புரிஞ்சிக்குறான். அது கிட்டத்தட்ட குகை ஓவியங்கள்ல இருந்தே வரக்ககூடிய மரபுன்னு நினைக்கிறேன் அப்படி ரொம்ப ரொம்ப பழைய ஓவிய மரபுலருந்துதான் காமிக்ஸ் வருது. இது ஒன்னும் புது வடிவம் இல்லை. எப்படி இரண்டு கொம்பு,நான்கு கால். ஒரு வால் போட்டா மாடுன்னு நாம ஏற்றுக்கொள்ள முடியுதோ, இன்னைக்கு வரையற ஒரு சிறுவனும் அதே வழியில ஒரு நாயை உருவாக்க முடியுது. இப்ப எதார்த்த சினிமாக்கள், எதார்த்த இலக்கியம் நம்ம படிக்குறப்ப அந்த உருவகப்படுத்தல் கம்மியா இருக்கு. உரையாடல் கற்பனைதான் இருக்கு. உரைநடை இலக்கியத்தை ஆழமாகப் படிக்கக் கூடியவங்க கூட கவிதை படிக்காம இருக்காங்களே அதே மாதிரிதான் காமிக்ஸ் வாசிக்காம இருக்காங்கன்னு சொல்லலாம் இல்லையா?

 மிஷ்கின்: இப்ப நீங்க சொன்னத, நான் இப்படி புரிஞ்சிக்கிறேன். மனரீதியான பூர்த்திசெய்தல் (Psychological closure) னு சொல்றேன். இப்ப வந்து ஒரு 4 கோடுகளைப் போட்டுட்டு ஒரு இரண்டு கொம்பு மாதிரி இருந்தா, உடனே  நம்ம மனசு என்ன பண்ணுது, அது ‌இருக்கும், அது மாடாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்துகுள்ள போகுது. அந்தக் குச்சிக்கோடுகளை என் மனம் பூர்த்தி செய்யுது. அது இல்லாம நம்ம வாழ்க்கைல நடக்குற நிகழ்ச்சிகளை நம்மால புரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கையில ஒவ்வொரு முடிவும், மனோரீதியான பூர்த்திப்படுத்தல்தான்னு நான் நினைக்கிறேன். ஒரு நிச்சயப்படுத்தலை எனக்கு நானே கொடுத்துக்கிறது. அதாவது எனக்குத் தெரியறது பாதிதான் இருக்கு. மிச்சத்தை நான் என் கற்பனையால நிரப்பிக்குறது. இதை ஒரு half narrative னு சொல்லலாம்.

இப்ப சினிமாலனு பாத்தீங்கனா, ஒருரூம் காலியாக இருக்க, அதைத் திறந்துட்டு ஒரு ஆளு வந்து, ஒரு சோபா கீழ வெடிகுண்டை செட் பண்ணிட்டு வெளிய போய் விடுகிறான். அவன் வெளியே போன ஒடனே ஒரு 10 பேரு அந்த ரூம்ல வந்து உட்கார்றாங்க. இப்ப வந்து நமக்கு என்ன ஆகுதுனா டென்ஷன் ஆயிடுது. என்னடா வெடிகுண்டை வச்சிட்டு போனான், வெடிக்கப் போகுதுனு. அப்ப ஒருத்தர் வாங்க போகலான்னு சொல்லிக் கிளம்பப் போறாங்க. அப்ப ஒருத்தர் வந்து, இல்ல இல்ல, அது லேட் ஆகுமாம், நீங்க இருங்கனு சொல்றான். நம்ம இப்படித்தான் சஸ்பென்ஸ் வைப்போம். வேற மாதிரி எடுக்கலாம்னா, இந்த பாம்ப் வைக்குற ஷாட்டை விட்டுடுட்டு, எல்லாரும் ரூம்ல உட்கார்ந்துட்டு இருக்கப்ப திடீர்னு வெடிக்குதுனு வைக்கலாம். இது வந்து சர்ப்ரைஸ். இந்த சர்ப்ரைஸ், சஸ்பென்ஸ் இரண்டையும் காட்சி ரீதியாகவும் உண்டு பண்ணினால்தான் சினிமா.

காமிக்ஸ் வடிவத்துடைய உள்ளார்ந்த தன்மை என்னன்னு கேட்டீங்கன்னா, அதில் பாதிக்கதை தான் சொல்லபடுகிறது. இல்லன்னா அந்த வடிவம் தேய்ந்து போய்டும். அடுத்த சட்டகத்துக்குப் போக முடியாது.  அடுத்த சட்டகமே தேவைப்படாது. ஒவ்வொரு சட்டகத்துக்கும் ஒவ்வொரு சவால் இருந்துகிட்டே இருக்கு. காமிக்ஸைப் பொருத்தவரை ஒவ்வொரு சட்டகம் முடியும்போதும் ஒரு கேள்வி. அடுத்தது என்னன்னு எதிர்பார்ப்பைக் கொடுத்துட்டு, ஒவ்வொரு சட்டகமா தைத்துக்கொண்டே வந்தால்தான் வாசகன் கவனிக்க வேண்டிய தேவையை உருவாக்குது.  ஆனா சினிமாவுக்கு அந்தக் கவனம் தேவையில்லை. ஒரு ஹீரொவுடைய படத்த வச்சி நம்ம பாத்துட்டு வந்துடலாம். ஒரு ஹீரோயின் புடிச்சதனால ஒரு படத்த பாக்குறோம். இல்ல வடிவேலு நல்லா நடிச்சதுக்காக ஒட்டுமொத்த சினிமாவையே பாத்துட்டு வந்துடலாம்.

ஆனா காமிக்ஸ் அப்படிக் கிடையாது. ஆனா, அது இரு பரிமாணத்தில் இருக்கு.

வரதன் :அப்ப நீங்க சொல்கிறத, கவிதை எப்படி வாசிக்கறவரோட கூடுதல் கவனத்தையும் பங்கேற்பையும் கோருதோ, அதுக்கிணையாகவே காமிக்ஸ் சித்திரத்தை வாசிப்பவரின் பங்கேற்பையும், கூடுதல் கவனத்தையும் கோருதுனு எடுத்துக்கலாமா?

மிஷ்கின் : ரொம்ப வலுவாகவே சொல்லலாம். அதாவது எப்படிச் சொல்லலாம்னா? எப்படி கவிதை வந்து ஒரு புதிரோ,காமிக்ஸும் கவிதை போலவே புதிர். ஒரு சட்டகத்தை ஒருத்தர் வரையிறதுக்கான தருணத்தை ஒரு புதிராகத்தான் அவர் கையாண்டு அதை விடுவித்துக் கொண்டே போகிறாரு. ஓவியம் என்னைப் பொருத்தவரை கித்தானில் உருவாக்கப்படுகிற புதிர்தான். கிட்டத்தட்ட வடிவங்கள் வேறுபட்டாலும், அதனுடைய பார்வையும், தீர்க்கதரிசனத் தன்மையும் உள்ளே மாறவே இல்ல. ஸ்பீகல்மேனுக்கு (Art Spiegelman) வந்து எப்படி மவுஸ் (Maus) பண்ணனும்னு ஆசை வந்துச்சு? தன்னுடைய ஒட்டுமொத்த வலியையும் மவுஸ்ங்கிற, ஒரு காமிக்ஸ்ல பண்ணனும் அப்படிங்கிற உணர்வு எப்படி உருவானது? அந்தக் கதைய நிச்சயமாக அவர் ஒரு நாவலாகத்தான் எழுதியிருக்கணும் இல்லையா? ஆஸ்விட்ச் இலக்கியம் எத்தனை காமிக்ஸாக வந்திருக்கு? எனக்குத் தெரிஞ்சு அதிகபட்சம் பத்து வந்திருக்கலாம். இப்ப வன்னிங்கிற (Vanni) பேர்ல ஒரு கிராபிக் நாவல் வந்துருக்கு. ஈழப்போர் தொடர்பானது. ஸ்பீகல்மேன் முழுக்க முழுக்கத் தன்னுடைய கதையை எழுத்துல சொல்லியிருக்கலாம், ஒரு டையரியா எழுதியிருக்கலாம். ஏன்னா எல்லா ஆஸ்விட்ச் இலக்கியமும் அந்த நிகழ்ச்சி நடந்ததுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டதுதான். ப்ரைமோ லெவியாக (Primo Levi) இருந்தாலும் சரி எலீ வீசலாக (Elie Wiesel) இருந்தாலும் சரி. ஸ்பீகல்மேன் என்ன பண்றார்னா, மனிதர்களுக்குப் பதிலாக எலிகளை வைக்கிறார். அதில் ஒரு உச்சப்புள்ளியைத் தொடக்கூடிய படைப்பு வந்திருது. அந்தமாதிரி ஒரு தன்மை காமிக்ஸ்ல மட்டுமின்றி, எல்லா ஊடகத்திலயும் இயங்குது. குரசோவாவ அப்படித்தான் பாக்குறேன் நான். ’அல்யோஷா தி பாட்’  கதையில் அப்படிப்பட்ட ஒரு உயரத்தைத்தான் டால்ஸ்டாய் அடைகிறார். அந்தக் கதையில் உள்ள காட்சியை இனிமே யாரும் எழுதமுடியாதென்று நான் நினைக்கிறேன். கண்ணீர் வருது, அந்தக் கண்ணீரத் தொடைக்கும்போது, ‘ஒட்டிப்போயிருந்த அந்த முகத்தில் வழிந்த கண்ணீரு’ ன்னும்போது, அது வேற ஒரு அர்த்தம் ஆயிடுது. அது குழந்தையுடைய கண்ணீர்தான், ஆனா குழந்தையுடைய மூஞ்சி வந்து ஒட்டிப்போயிருக்காம். அதுல ஒரே ஒரு adjective சேர்க்கும் போது, இப்ப திரும்பவும் அது காட்சிக்குள்ளதான் போயி நிக்குது. ஒவ்வொரு மீடியமும் உச்சமடைகிற இடமெல்லாம், காட்சித் தன்மை கொண்டதா ஆகுது.

ஒரு மகத்தான கவிதை, ஒரு நம்பமுடியாத காட்சி உச்சத்துல போயி மேல இருக்கும்போது, அதைத் தாண்டுது. எல்லா கலை ஊடகமும் அமைதிக்குள்ள பயணம் பண்ணுது. அமைதி சித்திரத்துக்குள்ள மட்டும்தான் ஒளிஞ்சுருக்கு. கடந்து போகுது. கடந்துப்போறதுதான் உண்மையில.  அதுவே ஒரு சட்டகத்தைத் தாண்டுற ஒரு இடமும் இருக்கு. ஒவ்வொரு கலை வடிவமும், ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு ஊடகமும் கடக்குற இடமெல்லாம் சித்திரத்துக்குள்ளேதான் போகுதுன்னு சொல்லலாம்.

வரதன் : இசை காட்சிக்குள்ளதான் போகுது.

மிஷ்கின்: ஆமாம்.

வரதன் : நீங்கள் உங்கள் திரைக்கதையை எழுதும்போது கதைச்சட்டகங்களை வரைகிறீர்களா?

மிஷ்கின் : என்னுடைய கதை அமைப்பை (Structure) எழுதிமுடிச்ச பிறகு, ஒன் லைன் எழுதுவேன். அந்த  ஒன்லைன் எழுதும்போது என்ன பண்ணுவேன், கார்டு எழுதிடுவேன். A3 சைஸ் கார்ட்போர்டுல அஞ்சு கலர் எடுத்துப்பேன். கிட்டதட்ட, பத்து படத்துக்கு இதைப் பண்றேன். கதாநாயகனுக்கு ஒரு கலர் கொடுத்துடுவேன்; வெள்ளைக் கலர் கொடுத்துருவேன் எப்பவுமே; ஏன்னா என் கதாநாயகன்லாம் வெள்ளைய நோக்கிதான், பயணப்பட்டுகிட்டு இருப்பாங்க. வில்லனுக்கு ஒரு  கலர் கொடுத்துருவேன். ஹீரோயினுக்கு ஒரு கலர். முக்கியமான கதாபாத்திரம்  போலீஸ்னா ஒரு கலர் கொடுத்துருவேன். 60 சீன் ஒன் லைன் எழுதிட்டு இப்படி அடுக்கிடுவேன். அடுக்கிட்டு அப்படியே நடந்துக்கிட்டே இருப்பேன். அதாவது interval ரெண்டா இருக்கும், அதுல 32வது சீனை 13வதுல போட்டுப்பாப்பேன்.  கலைச்சு கலைச்சு போட்டுப் பாப்பேன். சில சமயம் நிக்கும். ஏன்னா நேர்க்கோட்டு கதைசொல்லல் எப்பவுமே அலுப்பு தரக்கூடியதுதான். ஒரு காட்சிக்கு அப்புறம் அந்தக் காட்சி அடுத்த காட்சியைத் துப்பிடுச்சுன்னா அந்தக் காட்சி வீண்.

ஒரு காட்சி குட்டிப்போடுதுன்னு வெச்சிக்கோங்களேன். அந்தக் குட்டி இன்னொரு குட்டிப் போட்டுச்சுனு வெச்சிக்கோங்களேன். அது நேர்கோட்டுக் கதைகூறல். ஒரு காட்சி அங்கேயே செத்துப்போயிடுது. துண்டுபட்டு அதுக்கு மேல நகரமாட்டாமல் நிற்கிறது. ஆனா அதுக்கு ஒரு தொடர்பு இருக்கு.  கண்ணுக்குத் தெரியாத ஒரு தொடர்பு இருக்கு. அப்ப அடுத்த நகர்வு என்ன? அதை நாம உருவாக்கணும். அதாவதுஇப்படிச் சொல்லலாம். இப்ப ரெண்டு சாமுராய்கள் இருக்காங்க; ரெண்டு பேருமே வாள் வெச்சிருக்காங்க. எதார்த்தத்துல என்ன நடக்கும்; இதுல யாரோ ஒருத்தன்  ஜெயிக்கப் போறான். யாரு ஜெயிப்பா? யாருக்கு நல்லா வாள் வித்தை தெரியுமோ அவன் ஜெயிக்கலாம். ஓடி வரும்போது கால் இடறி‌ கொஞ்சம் தவறினாலும் அடுத்தவன் ஜெயித்துவிடுவான். ஆனா கதையில் இரண்டுபேருமே சம பலம் உள்ளவர்கள். முக்கியமான வேற வேற குருக்களிடமிருந்து வந்தவங்க. அப்ப என்ன பண்ணுவான்? ஒருவன் முதல் நகர்வை வைப்பான். இன்னொருத்தன் இரண்டாவது நகர்வைச் செய்வான். யாரோ ஒருத்தன் வெட்டுவான். இன்னொருத்தன் செத்துப் போய்டுவான். இதை காமிக்ஸ் ஆகப் பண்றோம். அப்படின்னு வச்சிக்கோங்க. காமிக்ஸ் என்ன பண்ணுதுனா, panel ல இது பத்தாவது சீன்ல நடக்குதுனா, சினிமாவிலயும் சீனாக அப்படிதான்.

காமிக்ஸ் முதல்ல என்ன பண்ணும்னா ஹீரோவைக் காட்டும். அவன் நிக்குறத, அவன் முகத்தைக் காட்டலாம். ஒரு wide-ல இரண்டு பேரையும் காட்டியாச்சு.  அதுக்கப்புறம் இவன் முகத்த. இரண்டு பேரையும் காட்டியாச்சு. ஆனா இந்த காமிக்ஸ்ல யாரு கதாநாயகனோ அவன் முகத்தைக் காட்டலாம்.வில்லன் முகத்தைக் காட்டலாம். இவன் என்ன மாதிரியான பார்வையோட இருக்கான், என்ன மனசுக்குள்ள ஓடுதுன்னு, மேல ஒரு குமிழ் (Speech bubble) போட்டு எழுதிக் காட்டலாம். அது வந்து ரொம்ப மோசமான கலை. அந்த இடத்தில காமிக்ஸ் தோத்துப் போயிடுது. மனசுக்குள்ள நினைச்சத எங்கே குமிழ் சொல்லுதோ அது மாதிரியான ‌மோசமான காமிக்ஸ் எதுவுமே கிடையாது. ஆனா இரும்புக்கை மாயாவி முழுதும் அப்படித்தான் வரும். அது பாப்புலர் காமிக்ஸ்ல எல்லாமே வரும். ஒரு நல்ல காமிக்ஸ்ல அப்படி பண்ணமாட்டாங்க. முகத்துல எதாவது கோவம் இருந்துச்சுனா, ’கோவம்’னு ஒரு panel போட்டா அதுவும் மோசமான காமிக்ஸ். கோவம் உள்ள இருக்குறது சித்திரம் வழியாக  நமக்குத் தெரியும். வில்லன் வந்துருக்கான். ஜப்பானிய காமிக்ஸ்ல இரண்டு பேரு நிப்பாங்க, அப்படியே கட் பண்ணி காமிச்சிங்கனா, ஒரு ‌புத்தர்‌ சிலை அப்படியே மூலைல இருக்கும் . ஏன்னா எல்லா மாங்கா (Manga Comics)காமிக்ஸலயும் ஊர் எல்லையில்தான் சண்டை நடக்கும். அந்த எல்லையில் என்னைக்கும் ஒரு தெய்வம் இருக்கும். எல்லையில்தான் எப்பவுமே இடுகாடு இருக்கும். இரண்டு பேர் சண்டை போடும் போது, ஒரு இலைல, ஒரு பூவுல, ஒரு வண்டு வந்து உட்காரும். நிறைய காட்சிகள் அப்படி வந்துட்டே இருக்கலாம். மாங்கால அப்படிதான் இருக்கும். இப்ப காமிக்ஸ்ல என்ன ஆகுதுனா, இவன்‌ கத்தியால அவன வெட்டுறான். அவன் கத்தியால இவனை வெட்டுறான். அப்ப இவன் வெட்டும் போது லைட்டா மூவ் பண்றான். இவன் இப்படி வெட்டுறான். அப்பறம் இவன் இப்படி திரும்பி தலைல வெட்டுறதுக்கு பதிலாக வயித்துல செருகிட்டுப் போயிடுறான். சத்தம் மட்டும் வருது. இது சினிமால.

காமிக்ஸ்ல என்னன்னா தீடீர்னு,’அடப்பாவி’ அப்படினு ஒரு வார்த்தை  வரும். கதை முடிஞ்சிடுச்சி. இவன் வயித்துல வெட்டுப்பட்டதைக் காட்றான்.  அப்படியே , அதுக்கு பின்னாடி panel இருக்கும் . இப்ப இந்த இடத்தில வரும் போது வயித்துல வெட்டிதையும் ஒரு ஷாட் போட்டுட்டு , இவன் கத்திய போட்டுப் போனான்னு வச்சிக்கோங்களேன், அது நல்ல காமிக்ஸ் கிடையாது. அடப்பாவிங்குறது எல்லாம், அவன் ‌சொல்றான். அடப்பாவி என்ன ஏமாத்திட்டியடா? அது ஒரு பாராட்டு. அப்ப இவன், இல்ல இரண்டு பேரும் ஏமாந்துட்டோம்னு சொல்றான். இப்ப இந்த இடத்துல காமிக்ஸ் வந்து ஒர்க் ஆகுது. அது காமிக்ஸுக்கும் திரைப்படத்திற்கும் மட்டும்தான் ‌பண்ணமுடியும். மொழில சொல்லிக்கலாம். ரொம்பக் ‌கம்மி. கவிதைல பார்க்கலாம்.

என்னைப் பொறுத்த வரைக்கும் சினிமாவும் காமிக்ஸூம் ஒன்னு. . என்னன்னா, கோசக்கி கோசிமா உருவாக்கிட்டாரு இரண்டு பரிமாணத்துல. நான் ஒரு ஃபில்ம் மேக்கராக அதுல ஒரே ஒரு பரிமாணத்தைக் கூட்டணும். அந்தப் பரிமாணத்தைக் கூட்டுறது என்னன்னு கேட்டீங்கனா ஷாட் மூலமாக லென்ஸ் மூலமா அதை நான் உருவாக்கணும். ஏன்னா எல்லாமே அதுல இருக்கு. அதனால் எனக்கு காமிக்ஸுக்கும்  சினிமாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.ஆனா இருக்கு, உள்ள போனா இல்லாம இல்ல. ஆனா இது எனக்கு எழுத்து மூலமாகக் கிடைக்கவே கிடைக்கல .

டால்ஸ்டாயோட ஹாஜி முராத்ல, வந்து  ஒருத்தர் நடந்துவராரு. மைல்கணக்குல உழுது போட்டுருக்காங்க. கருப்பு மண். அது வந்து பனிக்காலம் கிடையாது . கோவில்பட்டி மண்ணு மாதிரி. மைல்கணக்கா டிராக்டர் மூலமாக தோண்டப்பட்டுருக்கு. அந்த மனிதன் அப்படியே போயிட்டு இருக்கான். போயிட்டே இருக்கும் போது பாத்திங்கனா அந்த டிராக்டர் ஏறி இறங்கின ஒரு செடி பாதி நைந்து போயிருக்கு. எப்படியோ உழுததுல மிஸ் ஆயிடுச்சு அந்தச் செடி. அந்தக் கலப்பைக்குள்ள மாட்டாம வந்துடுச்சு. செத்துப்போகத் துடிச்சிட்டு இருக்க அந்தச் செடியில அன்னைக்குக் காலைல ஒரு மலர் வந்து வெடிச்சு முளைச்சிருச்சு. அதைப் பார்க்கிறான். இறந்துகொண்டிருக்கும் அந்தச் செடியில இருந்து இன்னைக்கு மலரவேண்டிய மலர் அந்த நேரத்துல மலர்ந்துடுச்சு.அது பார்த்தவுடனே பெரிய ஆச்சரியம். என்னடா இது சாகுற தருணத்துலயும் வாழனும்னு ஆசைப்படுது. அல்லது இந்த உலகுக்கு ஒரு அழகைக் குடுத்துட்டு போகனும்னு ஆசைப்படுதா, என்ற கேள்விகளோட வீட்டுக்குப் போகும் போது, பூங்கொத்து கொண்டு போகணும்னு எண்ணி, மலர்களை எல்லாமே பறிச்சுப் பறிச்சு சேகரிக்கிறார். ஒரு ‌ஓடை ஓரமாக ஒரு செடியப் பாக்குறாரு. அங்க பார்த்த அதேசெடி. அதேமாதிரி ஒரு பூ முளைச்சி இருக்கு. எல்லா மலரையும் எடுத்தாச்சு. அந்த மலரையும் பறிக்கலாம்னு இறங்குறாரு. உள்ள இறங்கி என்ன பண்றாருனா செடியப் பிடுங்குறார். அது ஒரு முள்ளுச்செடி. பிடுங்கிப் பார்க்கப் பார்க்க அது முடியலை. கடைசில, உள்ள இறங்கி இரண்டு கைலயும் பிடுங்கும் போது அந்த முள்ளு டக்குன்னு கைல குத்திடுது. அப்பிடின்னு சொல்லிட்டு, இதுதான்ஹாஜி முராத் (Hadji Murad) அப்பிடினு ஆரம்பிக்குறாரு. இத விஷுவல்ல நம்ம ஒன்னும் பண்ண முடியாது. எழுத்து இங்க மகத்தானதா ஆகுது. நான் லெக்ச்சர்குடுக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. இங்க எழுத்து குடுக்குற அனுபவத்தை ஷூட் பண்ணவே முடியாது.

டால்ஸ்டாய் ஒரு இடத்துல ஒரு பூவைப் பாக்குறாரு. அப்புறம் அந்தச் செடி பாக்குறாரு. அந்தச் செடி எப்படி ஒடஞ்சி இருக்குனு பாக்குறாரு. அப்புறம் நேத்து வந்து உழுது போட்டதுல, அந்த டிராக்டர் ஏறி உழுது போட்டதுல அந்தச் செடி செத்து போச்சு அப்படிங்கும் போது,அதுல இருந்து ஒரு பூ முளைச்சிருக்கு அப்படிங்குறாரு..அந்தப் பூவுக்கு வந்து அந்தப் ‌பூ சித்திரத்தை விவரிச்சிட்டேதான் வாறார்.

ஷங்கர் : ஆனா அது பெயிண்டிங்கோடகுவாலிடி இல்லயா? நான் ஏன் கேக்குறனா, முகம், கை, முக விகாரம், இப்படிப் பாக்குறது எல்லாமே காமிக்ஸ்லதான் இருக்கு. டால்ஸ்டாய் போரும் வாழ்வும் எடுத்துக்கிட்டீங்கனா குதிரைகள் இருக்கு. ஒரு பெயிண்டிங் தன்மைதான் இருக்குது.

மிஷ்கின் : காமிக்ஸ் வடிவத்துக்கு நெருக்கமானவருனு டால்ஸ்டாய ஏன் சொன்னனா, நான் வார் அண்ட் பீஸ், படிச்சேன். அதுல ஒரு இசை நடனக்கூடத்தை அவரு விவரிக்கிறாரு. அதன் கதாநாயகன் அலெக்சீ. அங்க ஒரு அம்மா உள்ள உட்கார்ந்துட்டு இருக்காங்க. அவர் என்ன பண்றாரு கிட்டத்தட்ட பத்து பக்கம் விவரிச்சிக்கிட்டே இருக்காரு அந்த கூடத்தைப்பத்தி.ஒவ்வொருத்தரைப்பத்தியும் விவரணை கொடுத்துட்டே இருக்கார். அந்த மீடியத்துல விவரணை கொடுத்துதானே ஆகனும். அப்பத்தான் நம்ம அகத்துக்குள்ள போக முடியும்.கலர் பத்தி எழுதுறாரு. உயரத்தப் பத்தி எழுதுறாரு. திடீர்னு அந்த அம்மாவப் பத்தி சொல்றாரு. அந்த அம்மா அமைதியாகப் பாத்துட்டே இருக்காங்க. ஆனா அவங்க கண்கள் அலெக்சீயப் பாத்துட்டு இருக்கு. கடைசில எல்லாம் முடிஞ்சி போயிட்டதுக்கப்பறம் அந்த அம்மா அலெக்சீ பக்கத்துல போறாங்க. ‘அலெக்சீ, என்னுடைய மகன் 18 வயது பையன். அப்பா இல்லாதவன். ஒரு வேலை வாங்கிக்கொடுக்க முடியுமானு?’ கேக்குறாங்க. ஒடனே நான் டபால்னு மூடிட்டேன். ஏன்னா இதுதான் குளோஸப்.

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸோட தனிமையின் நூறாண்டுகள் நாவலில் ஒரு இடம் வருது. என்ன சொல்றாருனா, அந்தக்காலத்துல மொழியில்லை, அதுனால இது அப்படின்னு சுட்டிக்காட்டினாங்கன்னு சொல்றாரு. அப்ப ஒன்னைக் குறிக்க மொழி இல்லை அப்டிங்கும்போது இமேஜ் தான் வழி.

வரதன் : நீங்க manga பத்தி பேசுனதுக்கு இணையாக மேற்கோட பெரும் படைப்புகளைப் பத்தி நீங்க பேசிக் கேட்கவில்லை நான்.

மிஷ்கின் : மேற்கத்திய காமிக்ஸ்ல வந்து பெருசா படிக்கலை. Frank Miller, WillEisenerகொஞ்சம் கொஞ்சம், சின்ன வயசுல படிச்ச கதைகள்தான். அது ஏன்னு காரணம் தெரில. திரும்பத் திரும்ப ஒன்னே பேசப்படுகிறதைப் பார்த்தேன். மீண்டும் மீண்டும்  Japan நோக்கிதான் என்னுடைய காமிக்ஸ் தேடல் இருந்து வருது. முக்கியமா French comics, Aestrix லாம் வந்து நான் படிச்சதே இல்ல. நல்லாருக்குன்னு சொல்வாங்க. ஆனா எனக்கு அது தெரியவே இல்ல. Maus மாதிரி graphic novels எல்லாமே படிச்சிருக்கேன்.ஆலன் மூரோட Watchmen படிச்சிருக்கேன். ஸ்டான் லீயோட நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். ஆனா அது ரொம்ப ஆழமா இல்ல. இப்ப ஒசாமு டெசுகாவுடையது நாலஞ்சு படிச்சிருக்கேன்; மறக்கவே இல்ல. அதே மாதிரி  கசுவோ கோய்க்கே, கொசேக்கியோட (Kazuo Koike, Goseki Kojima) ஒட்டுமொத்தக் கதைகளும் தெரியும், அதுல இருக்க 120 கதைகளும் தெரியும். அதுல இருக்க சட்டகங்களைக்கூட என்னால சொல்லமுடியும். அந்தளவுக்கு நான் ஆழமாகப் பயணம் பண்ணியிருக்கேன்.

மேற்கில் நான் பார்க்கிற பெரிய ஆளுமை Frank miller. அவரு மேல ரொம்ப ஈடுபாடு வந்ததுக்குக் காரணம் வந்து lonewolf க்கு வந்து அவரு படம் போட்றாரு. அதனாலதான் எனக்குத் தெரியுது. அவரு கிழக்கையும் மேற்கையும் இணைக்கமுயற்சி பண்றாரு. ஒரு கலைஞனுக்கும் மேல ஒரு பெரிய மகாபுருஷரா நான் பாக்குறேன். அந்த ஹீரோவின் ஆகிருதி எனக்குப் பெரிய ஆச்சரியம். அந்த வன்முறையின் வலியை, ரணத்தை வெளித்தெரியாம உணரவைக்குற ஒரு தன்மை இருக்கிறது. அதை ரொம்ப அற்புதமாக பார்க்கிறேன். மேற்கத்திய காமிக்ஸ்ல ரொம்ப ஆழமாக நான் பயணம் பண்ணல. அது உண்மைதான். அதை ஒரு இழப்பாகவும் நான் நினைக்கவில்லை. நிறைய அறிவியல் புனைவுகளைப் படிச்சிருக்கேன். மேற்கிலிருந்து வருகிற காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிப் புரட்டுகிறேன். ரொம்ப அழகாகவும் வண்ணமயமாகவும் நுகர்வுக்குரியதாகவும் இருக்கு. நான் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போது, அந்தமாதிரி காமிக்ஸைப் படிச்சிக்கிட்டே இருப்பேன். அப்ப உதவி பண்ணுது. ஆனா மாங்கா நிக்கிற அளவுக்கு இல்லை. இப்ப டெசூகாவினுடைய புத்தாவில ஒரு இடம் வரும். திடீர்னு, ஒரு மழை பெய்யும், அந்த மழையினுடைய சத்தம் கேக்கும். zzzபோட்டு எழுதியிருப்பார். ஆனா நம்ம காதுக்குள்ள ஷ்னு சத்தம் கேக்கும்.. அந்த அளவு, ஒரு மனதுக்குள்ள ஒரு அனுபவத்தை உருவாக்குற ஒரு ஆளு.

அந்த ஈர்ப்பு மேற்கத்திய காமிக்ஸ் மேல் எனக்கு வரவில்லை.