எந்த ஒரு விசயத்துக்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். Lust Stories என்ற வெப் அந்தாலஜி  பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்ததற்குக் காரணம் தமன்னா! லஸ்ட் ஸ்டோரீஸின் முதல் சீஸன் 2018-இல் வந்தது. ஹாட்டாக ரிவீவ்ஸ் வந்ததால் சூட்டோடு சூட்டாக எல்லாக் கதைகளையும் பார்த்து முடித்துவிட்டேன். கடந்த ஜூன் (2023) மாதம் வெளியான அதன் இரண்டாம் சீஸனை உடனடியாகப் பார்க்கவேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. முதல் சீஸனில்கூட நடித்தவர் பலரை அந்த நேரத்தில் எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இரண்டாம் சீஸனில்  கஜோல், தமன்னா போன்றோர் நடித்திருக்கிறார்கள் என்றபோதும் ஏனோ தெரியவில்லை அதைப் பார்க்கக்கூடிய எண்ணம் வரவில்லை.

ஒரு risqué-blouse-wearing-இல்; உச்சகட்ட கிளாமரில்; உற்சாகம் கொடுக்கும் இசைப் பின்னணியில் இரண்டு ஆள்காட்டி விரலை மடக்கி “நூ காவாலய்யா” எனத் தமன்னா அழைத்த அந்தப் பாடல், எல்லோரையும் போலவே என்னையும் சொர்க்கவாசலுக்கு இழுத்துச் சென்றது. கூடவே, ‘இன்னும் என்னோட லஸ்ட் ஸ்டோரிய பாக்காம இருக்கியேடா’ என எனக்கு மட்டும் சொன்னதுபோலத் தோன்றியது. உடனடியாகப் பார்த்துவிட்டேன். உங்களுக்காகக் கிளுகிளுப்பான ஒரு தகவலை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டு சீஸனில் எட்டுக் கதைகள் வந்துள்ளன. இதில் so hot பகுதி எதுவென்றால் sex with ex என்ற தமன்னா நடித்த கதைதான். ‘ஹ்ஹேஏ…’ என அவசரப்பட்டுக் கொண்டாடித் தீர்த்துவிடாதீர்கள். “இது lust story இல்லை lost story” என்ற பெயரை வாங்கிக் கட்டிக்கொண்டதும் தமன்னா நடித்த அந்தக் கதைதான். முதலில் Lust Stories இரண்டு சீஸனிலும் வந்த கதைகளைப் பார்ப்போம்.

முதல் சீஸனில் வந்த நான்கு கதைகளும் ஏதோ ஒரு வகையில் எல்லோரையும் ஈர்த்தன. அவை sex கதைகள் என்பன போலத் தோற்றம் தந்தாலும் உண்மையில் பாலியலைத் தாண்டிய பெண்ணிய உணர்வுகளைப் பேசிய கதைகள். படம் பார்த்து நீண்ட நாள்கள் ஆன பிறகுகூட ”ஓஹ்… அந்தக் கதையில இததான் சொல்ல வந்திருக்காங்க இல்ல” என்று யோசிக்க வைக்கக் கூடியவை.

அவற்றில் முதல் கதையை இயக்கியவர் அனுராக் காஷ்யப். அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாத open relationship-பை மையப் பொருளாகக் கொண்டது அந்தக் கதை. இருபத்தைந்து வயது அல்லது அதைக் கடந்த கல்லூரிப் பேராசிரியையின் பெயர் காலிந்தி. அவளிடம் படிக்கும் பதினெட்டு வயது மாணவன் ஒருவனின் பெயர் தேஜாஸ் பாவே. தேஜாஸ் தன் பாட்டியோடு ஒரு வீட்டில் வசித்து வருகிறான். காலிந்தியும் தேஜாஸும் அவனுடைய அறைக்குள் நுழைவதிலிருந்து கதை தொடங்குகிறது.

தேஜாஸ் அழகான இளைஞன். அவனுடைய அறையில் நிறைய  சேத்தன் பகத் புத்தகங்கள் இருக்கின்றன. Stephen Chbosky எழுதிய The Perks of Being a Wallflower என்ற புத்தகமும் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறாள். அது introverted மற்றும் observant குழந்தையைப் பற்றிய நாவல். “நீ Shophia Kinsella புத்தகங்கள படிக்கிறியா?” எனக் கேட்கிறாள் காலிந்தி. “படிக்க முயற்சி பண்றேன் முடியல… ஏன்’னா அது மராட்டில இருக்கு” என்கிறான் தேஜாஸ். “கின்ஸில்லாவே புரியலைன்னா Wallflower -ர எப்பிடி படிப்ப?” எனக் கேட்கிறாள் காலிந்தி. “Wallflower is just like being a fly on the wall” என்கிறான். பையன் ரொம்ப புதுசா இருக்கான். போதாதற்கு introverted கதைகளைப் படிக்கிறான். அவனைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்கிறாள். பின்னர், அவனுடைய படுக்கையில் படுத்துக்கொண்டு, ஒரு புது அனுபவத்திற்கு அவனை அழைக்கிறாள். அவன் தயங்கி நிற்கிறான். “இதுக்கு முன்ன பண்ணதில்லையா?” எனக் கேட்கிறாள் காலிந்தி. அவன் இல்லை என மௌனத்தால் சொல்கிறான். “நிஜம்மாவா…? நான் சொல்லிக் குடுக்கிறேன்” என அவனை அழைக்கிறாள்.

இரவு முடிந்து விடிகிறது. “நேத்து பண்ணது நல்லாயிருந்ததுல்ல… fun’னா?” எனக் கேட்கிறாள் காலிந்தி. “அதப் பேசி கெடுக்க வேணா’ல்ல?” என்கிறான் தேஜாஸ். அவனிடம் எச்சரிக்கையாக ஒன்றைச் சொல்கிறாள், “Please don’t fall in love!” என்கிறாள். காலிந்தி தனக்குத் தானே பேசிக்கொள்வதை ஓர் உத்தியாக இந்தக் கதையில் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அவள் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறாள், “அவன் ரொம்ப எமோஷனல் ஆகக் கூடாது’ன்னு நினைக்கிறேன். ஏன்’னா மிஹிர் சொல்லியிருக்கான். பசங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கு. செக்ஸ்க்கு அப்புறம் எமோஷனல் ஆயிருவாங்களாம். அது அப்படியே love’வா மாறிடும்’மாம். You know they get obsessed and they start stalking you, எப்பிடி’ன்னா? நீ ஏன் அவன்கூட பேசுற? நீ ஏன் இவன்கூட பேசிட்டிருக்க? அப்புறம் ஏன் என்னோட Phone calls எடுக்கல. I mean எதுக்காக அவங்களுக்கு இதப் பிரிச்சுப் பாக்கத் தெரியலன்னு புரியல”

காலிந்தி குழப்பமானவள் என்று சொல்லமுடியாது. ஆனால் அவள் தெளிவானவள் இல்லை. அவள் மிக இளம்வயதில் திருமணம் ஆனவள். மிஹிர் என்று அவள் சொல்கிறாள் இல்லையா? அவனைத்தான் திருமணம் செய்திருக்கிறாள். அவன் இவளைவிட பன்னிரண்டு வயதுக்கு மூத்தவன். “’Open relationship மூலம் life-அ experience பண்ணு’ என அவன்தான் சொன்னான்” என்கிறாள். அதே நேரத்தில் கல்லூரியில் தன்னிடம் படிக்கும் ஒரு மாணவனோடு உறவு வைத்துக்கொள்வது Institutional sexual violence ஆகிவிடாதா? என்ற குழப்பமும் அவளுக்கு வருகிறது.

தேஜாஸ் தன்னுடன் படிக்கும் நடாஷா என்ற மாணவியோடு நெருக்கமாக இருப்பதைப் பார்த்துக் காலிந்தி கலவரமாகிறாள். அவனை Stalking செய்கிறாள். அவர்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களுக்குச் சென்று, அவர்கள் பகிர்ந்துகொள்ளும் ஃபோட்டோக்களைப் பார்த்துக் கோபம் கொள்கிறாள். அவனோடு சண்டை செய்கிறாள். “அந்த நடாஷா நல்லவள் இல்லை… உன்ன Instagram filter மாதிரி use பண்ணிக்குவாள்…. அவளோடு பேசாதே” என்கிறாள். காலிந்தியுடைய obsessive behavior எல்லையற்று போனாலும் தேஜாஸ் நடாஷாவோடு நெருக்கமாக இருப்பதைக் குறைத்துக்கொள்ளவில்லை.

ஒருநாள் காலிந்தி அவனிடம், “நீ அவளோடு உறவு வைத்துக்கொண்டாயா?” எனக் கேட்கிறாள். அவன் இல்லை என்கிறான். “பெண்களோடு உறவுகொண்ட பின்பு ஆண்கள் எமோசன் ஆகிவிடுவார்கள், stalking செய்வார்கள்” எனச் சொல்லிவிட்டு அதையெல்லாம் இப்போது அவளே செய்கிறாள்! “Romanticism has never been judged properly. Who is there to judge – critics? I’m selfish, I love Ayn Rand, she said, ’Selfishness is a virtue’” எனச் சொல்லிக்கொள்கிறாள்.

ஒருநாள் தேஜாஸின் வீட்டிற்குச் செல்கிறாள். அவன் படுக்கை அறையின் எல்லாக் கதவுகளையும் உள்புறமாகத் தாழிட்டுக்கொள்கிறாள்.  அந்த நேரம் தேஜாஸ் பக்கத்து அறையில் குளித்துக்கொண்டிருக்கிறான். குளியலறையிலிருந்து ஓடிவந்த தேஜாஸ் பதைபதைப்போடு கதவைத் தட்டுகிறான். அவனுடைய பாட்டியும் கதவைத் தட்டுகிறாள். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் காலிந்தி அவனுடைய படுக்கையறையைச் சல்லடைப்போட்டுத் தேடுகிறாள். கடைசியாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அதை ஒரு குச்சியால் எடுக்கிறாள். அது ஒரு பெண்ணின் உள்ளாடை (lingerie). நடாஷாவினுடையதாக இருக்கலாம்.  “He lied, that is my problem, I want honesty” எனத் தனக்குள் சொல்லிக்கொள்கிறாள்.

தன்மீது வெறித்தனமான காதலோடு இருக்கும் காலிந்தியைப் பார்த்து தேஜாஸ் சொல்கிறான் “எனக்குத் தெரியாது நீங்க இவ்வளவு காயம் பட்டிருப்பீங்க’ன்னு” என்கிறான். “இந்த நடாஷா மாதிரி பொண்ணுங்கள நம்பாத… அவுங்க இந்த மாதிரி Boyfriend இருக்கான்’னு காட்டுறதுக்குத்தான் love பண்ணுவாளுக… அவள நீ மறந்திரு” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். “காலிந்தி மேடம் நீங்க இந்தளவுக்கு என்ன லவ் பண்றீங்க’ன்னு எனக்குத் தெரியாது. நானும் உங்ககூட இருக்குறதுக்குத்தான் விரும்புறேன். உங்களுக்காக நான் வேணா எல்லாத்தையும் விட்றேன்” என்கிறான் தேஜாஸ். அவனைத் திரும்பிப் பார்த்துக் காலிந்தி சொல்கிறாள், “டேய் உனக்கென்ன பைத்தியமா…? நான் கல்யாணம் ஆனவள்…டா!”

இரண்டாவது கதையை எடுத்த இயக்குநர் சோயா அக்தர். சுதா என்ற வீட்டு வேலை செய்யும் இளம்பெண்ணுக்கும், அஜித் என்ற திருமணம் ஆகாத ஆளுக்கும் இடையே நடக்கும் உடலுறவோடு கதை தொடங்குகிறது. சுதா காதலும் அன்பும் கலந்த வேலைக்காரி. அவனுடைய வீட்டைத் தன் வீடு போலப் பார்த்துக்கொள்கிறாள். அவனுடைய உடைமைகளை அழகாகப் பராமரிக்கிறாள். ஒரு நாள், திருமண விசயமாக அஜித்தைப் பார்க்க அவன் பெற்றோரும், பெண் வீட்டாரும் வருகிறார்கள். சற்று நேரத்திற்கு முன்னர் சுதாவோடு உறவு கொண்ட அஜித், இப்போது எந்த மனத்தடையும் இல்லாமல் மனைவியாக வரப் போகும் பெண்ணிடம் பேசுகிறான். சுதாவைத் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறான். அஜித்தின் அம்மா அவளுக்கு ஸ்வீட் கொடுக்கிறாள்.

அன்று மாலை வீட்டு வேலை எல்லாம் முடிந்து சோகத்தோடு தன் வீட்டிற்குப் போவதற்காக லிஃப்ட் முன் நிற்கிறாள். அருகில் அவளுடைய தோழியும் வந்து நிற்கிறாள். ஒரு ஸ்வீட்டை அவளுக்குக் கொடுத்துவிட்டு இன்னொன்றை அவள் சாப்பிடுகிறாள். எதிர்பார்த்த ஓர் உறவு தள்ளிப்போகுபோது ‘ஸ்வீட் எடு கொண்டாடு என வாழ வேண்டும் அவ்வளவுதான்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள்.

மூன்றாவது கதை திபாகர் பானர்ஜி இயக்கியது. ஒரு பீச்சில் swimsuit அணிந்து குளித்துக் கரையேறுகிறார் ரீனா (மனிஷா கொய்ராலா) “நான் எப்பிடி இருக்கேன்?” என சுதிர் என்பவனிடம் கேட்கிறாள் “நீ ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா மாதிரி இருக்கே!” என்கிறான். அவன் பொய் சொல்லவில்லை. அவள் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாதான். ஆனால் அதை மறக்கத்தான் அங்கு வந்திருக்கிறாள். அந்த பீச் ஹவுஸில் ரீனாவும் சுதிரும் கலவி செய்துகொள்கிறார்கள்.

திருப்திகரமான கலவி முடிந்தபிறகு ரீனாவின் கணவன் சல்மானிடமிருந்து சுதிருக்கு ஃபோன் வருகிறது. “ரீனாவைக் காணவில்லை. என்னிடம் கோபித்துக்கொண்டு எங்கு சென்றாள் என்று தெரியவில்லை” என வருத்தப்படுகிறான். வேறு வழியில்லாமல், அவள் தன்னுடைய பீச் ஹவுஸிற்கு வந்திருப்பதாகச் சொல்கிறான் சுதிர். சல்மான் சுதிர்மீது நல்ல அபிப்ராயம் கொண்டவன். தன் மனைவி அவன் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள் என்றபோதும், துளியும் சந்தேகப்படாமல், தன்னிடம் சண்டைபோட்டுக் கோபித்துக்கொண்டு அவனிடம் சென்றிருக்கிறாள் என நினைத்துக்கொள்கிறான்.

ஆனால் ரீனாவிற்கு இப்படி மறைந்து வாழ்வது பிடிக்கவில்லை. ஒவ்வொருமுறையும் மொபைலை ஆஃப் பண்ணிவிட்டு, அல்லது லொகேசனை மியூட் பண்ணிவிட்டு சுதிரைச் சந்திக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது. சல்மானிடம் உண்மையைச் சொல்லப்போவதாகச் சொல்கிறாள். இதைக் கேட்டு சுதிர் பதற்றமாகிறான். “அப்பிடி எல்லாம் செய்யாத… உன் குழந்தைங்க என்ன ஆவாங்க’ன்னு யோசிச்சுப் பாத்தியா?” என்கிறான். “separate-ஆ வாழ்ற மத்த parents குழந்தைங்க மாதிரி என் குழந்தைகளும் நல்லாத்தான் இருப்பாங்க” என்கிறாள்.

சல்மான் வருகிறான். அவன் சுதிர்மீது துளியும் சந்தேகப்படவில்லை. ஆனாலும் அவனிடம், “நானும் சுதிரும் ரிலேஷன்ஷிப்’ல்ல இருக்கிறோம்” என்பதைச் சொல்கிறாள். அப்போதும்கூட சல்மான் அப்பாவியாக, “யார் சுதிர் பத்ராவா – இந்தியாபுல்ஸ்….? அவனா?” என்கிறான். அவனுடைய நண்பன் சுதிர் மறந்தும் தனக்குத் துரோகம் செய்யமாட்டான் என நினைக்கிறான். ஒரு வித்தியாசமான Piquant love triangle ensues என இந்தக் கதையை விமர்சிக்கிறார்கள்.

கடைசியாகத் தன் ஆருயிர் நண்பன் சுதிரும் மனைவி ரீனாவும் உறவில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறான். ”நம்முடைய குழந்தைகள் என்ன ஆவார்கள் என்று நினைத்துப் பார்த்தாயா?” என்று ரீனாவிடம் கேட்கிறான். “Why does everyone bringing up my children, when I’m talking about happiness” என்கிறாள். இது இந்தக் கதையின் ஆதாரமான வசனம் மட்டுமில்லை, பெண்கள் எல்லோரது மன ஆழத்தில் இருக்கும் வசனமும்கூட. ”நான் என்ன தவறு செய்தேன்” எனச் சல்மான் கேட்கிறான். “You want mother not wife” எனச் சுருக்கமாகச் சொல்கிறாள். மனைவியிடம் தன் குறைகளை ஒப்புக்கொண்டு சமாதானப்படுத்துகிறான்.

அடுத்த நாள் காலை ரீனா சல்மானோடு கிளம்புவதற்கு ஆயத்தமாகிறாள். காரில் ஏறப்போகும்போது சல்மானிடம் ரீனா சொல்கிறாள் “என்னோட sunglass-ஸ மறந்து வச்சுட்டு வந்திட்டேன். ஒரு நிமிஷம்….” எனச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்கிறாள். சுதிர் வீட்டிற்குள் இருக்கிறான். ரீனா சுதிரிடம் சென்று சொல்கிறாள், “நேற்று சல்மான் என்கிட்ட சொன்னது என்ன தெரியுமா? இது இத்தோட நிக்கணும். இந்த விசயம் அவனுக்குத் தெரியும்’னு உனக்குத் தெரியக்கூடாது!”

நான்காவது கதை ஒரு காமடி கலாட்டா, இயக்கியவர் கரன் ஜோஹர். மேகா ஒரு பள்ளி ஆசிரியை. பாராஸ் ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவன். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பாராஸ் உடலுறவுகளின்போது ஒரு சில விநாடிகளில் இன்பதை வழியவிட்டுவிடுகிறான். இதனால் மேகா dissatisfaction ஆகிறாள் என்பதையும் தெரியாமல் இருக்கிறான். ஒருநாள் அவனிடம், “Adult film எல்லாம் பாத்திருக்கியா?” என்று கேட்கிறாள். அவன் பார்த்திருப்பதாகத் தலையாட்டுகிறான். “அந்தப் படங்களில் அவன் Oh.. babe! oh babe…! என்பான். பதிலுக்கு அவள் Oh yeah! Oh yeah! என்பாள்” என்று சொல்கிறாள். இதற்கு அவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஷாக்காகி நிற்கிறான்!

மேகாவின் பள்ளியில் ரேகா என்ற நூலகர் இருக்கிறாள். ரேகா விவாகரத்து ஆனவள். அவளுக்கு அந்த ஆசை தோன்றும் போது இன்பம் கொள்ள கைவசம் ஆண்குறி வடிவ vibrator sex toy வைத்திருக்கிறாள். ஒரு நாள் நூலகத்திலேயே vibrator-ரைப் பயன்படுத்தி இன்பத்தில் மூழ்கிக் கிடப்பதை மேகா பார்க்கிறாள். “ஏன் மேடம் இங்கெல்லாம் பண்றீங்க…” என்கிறாள். “ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப selfish பெண்களுக்கு அவங்களால சந்தோஷத்தக் குடுக்க முடியாது. நம்மள நாமதான் சந்தோஷப்படுத்திக்கணும்!” என்கிறாள்.

ஒருநாள் மேகா ரேகாவின் vibrator sex toy-யை அவளுக்குத் தெரியாமல் எடுக்கிறாள். வீட்டிற்குச் சென்று படுக்கையில் உட்கார்ந்து வைப்ரேட்டர் கருவியைத் தனக்குள் பொருத்துகிறாள். அந்த நேரம் பார்த்து, சாலை விபத்தில் அடிபட்ட கணவன் பாராஸை வீட்டிற்குக் கொண்டுவந்து படுக்க வைக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் “மேகா மேகா” எனப் பதற்றத்தோடு அழைக்கிறார்கள். அவர்கள் கத்தி அழைப்பதால், தனக்குள் பொருத்திய வைப்ரேட்டரை வெளியில் எடுக்கக்கூட நேரம் இல்லாமல் அவசரத்தில் ஓடிவந்து கணவன் வீட்டார்முன் நிற்கிறாள்.

அந்த வீட்டில் உள்ள வயதான பாட்டியின் கையில் வைப்ரேட்டருக்கான ரிமோட் கிடைக்கிறது. அவள் அதைத் டிவி ரிமோட் என நினைத்து on பண்ணுகிறாள். அது மேகாவிற்குள் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. பாட்டி தெரியாமல் ஒரு பட்டனை அழுத்துகிறாள். வேகம் கூடுகிறது. பாட்டி வேகத்தை அதிகரித்துக்கொண்டே போகிறாள். நடுவீட்டில் எல்லார் முன்னிலையில் மேகா உச்சகட்டத்தைத் தொட்டுத் தணிகிறாள்.

தொடர்ந்து வரும் நாட்களில் கணவனும் மனைவியும் பிரிகிறார்கள். விவகாரத்து செய்துவிடலாம் எனப் பேசுகிறார்கள். விவாகரத்து விசயமாக ஒருநாள் ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார்கள். பேச்சுவாக்கில் “நீ தெரியாம தப்பு பண்ணிட்ட” என்கிறான் பாராஸ். “இங்க பாருங்க…! நான் எந்தத் தப்பும் பண்ணல… நடந்த எதுவும் தப்பும் இல்ல… நடந்த இடம்தான் தப்பு… பொம்பளைங்கன்னா குழந்தை பெத்துக்கிறதுக்கு மட்டும் இல்லை!” என்கிறாள் மேகா.

இரண்டாவது சீஸன் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் ரிலீஸ் ஆனது. சீனி கம், பா, பேட்மேன் போன்ற படங்களை எடுத்துப் புகழ்பெற்ற R.Balki: A death in the Gunj, Lipstick under my Burkha போன்ற படங்களை எடுத்துப் புகழ்பெற்ற கொங்கனா சென்;  கஹானி, அஹல்யா போன்ற படங்களை எடுத்துப் புகழ்பெற்ற  சுஜோய் கோஷ்: லைஃப்பாய் சோப்பு விளம்பரம் (ஒருவர் தலைகீழாக கையால் நடப்பாரே) எடுத்துப் புகழ்பெற்ற அமித் ரவிந்தர் சர்மா ஆகியோர் இணைந்து  நான்கு கதைகளைப் படமாக்கியுள்ளனர்.

Made for each other (இயக்குநர் பால்கி):  எல்லாவிதத்திலும் பொருத்தமான வேதா என்ற பெண்ணுக்கும், எல்லாவிதத்திலும் பொருத்தமான அர்ஜூன் என்ற பையனுக்கும் திருமணம் செய்விக்க இருவீட்டாரும் கலந்து பேசுகிறார்கள். அங்கு வேதாவின் பாட்டி வருகிறாள். வேதாவிடமும் அர்ஜூனிடமும், “நீங்கள் செக்ஸ் வைத்துக்கொண்டீர்களா….? ஒரு காரை எடுத்துக்கொள்ளும் முன்பு அதை ஓட்டிப் பார்த்து வாங்குகிறோம் இல்லையா…? அதுபோலத் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டு அதில் முழுமை இருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்” என்கிறாள். குடும்பத்தார் எல்லாம் அதிர்ச்சியாகிறார்கள்.

“ஜாதகத்தில் 10 பொருத்தம் ஒத்துப் போகுதோ இல்லையோ… ஒருவேள இவங்க செக்ஸ் ஒத்துப்போச்சுன்னா ஒருத்தர ஒருத்தர் விட்டுப்போகமாட்டாங்க” என்பது அவள் கொள்கை. இந்தக் கதையில் பாட்டி சொல்லும் இரண்டு விசயங்கள் என்னைக் கவர்ந்தன. பேத்தியிடம் ஓரிடத்தில் சொல்கிறாள், “எல்லோரிடமும் உடலுறவு வைத்துக்கொள் அதில் யார் சிறப்பாக இருக்கிறானோ அவனைத் திருமணம் செய் என்று சொல்லவில்லை. நீ ஒருவனைத் தேர்ந்தெடுத்துவிட்டாய் என்றால் அவன் அந்த விசயத்திலும் திருப்திகரமாக இருக்கிறானா என்பதையும் உறுதிசெய் என்றுதான் சொல்கிறேன்” என்கிறாள். இன்னோரிடத்தில் பேத்தி பாட்டியிடம் கேட்கிறாள், “தாத்தா அந்த விசயத்தில பயங்கரக் கில்லாடியா?” “Not he is good, we were good” என்கிறாள் பாட்டி.

The Mirror (இயக்குநர் கொங்கனாசென் சர்மா): இஷிதா என்ற கிராபிக்ஸ் டிசைனர் ஒரு நாள் நண்பகல் தன் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போகிறாள். உள்ளே நுழைந்ததும் அவளுடைய பெட்டில் அவள் வீட்டு வேலைக்காரப் பெண் சீமாவும், அவள் கணவனும் உடலுறவு கொள்வதைக் கண்ணாடி வழியாகப் பார்க்கிறாள். அதிர்ச்சியில் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுகிறாள். வேலைக்காரி இப்படி செய்துவிட்டாளே என்று கண்டிக்க அவளுக்குத் தைரியம் வரவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாள் இதேபோல வந்து தொடர்ந்து கண்ணாடி வழியாக அவர்கள் உடலுறவு கொள்வதை மறைந்துநின்று பார்த்து சுய இன்பம் கொள்கிறாள் (voyeurism).

அவள் தெரியாமல் வந்து பார்க்கிறாள் என்பது வேலைக்காரப் பெண்ணுக்கும் தெரிகிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் ஆனால் அவர்கள் செயல்களைத் தொடர்கிறார்கள். ஒருநாள் இது வெளியில் தெரியும்போது கடுமையாக வாய்ச்சண்டை போட்டுக்கொள்கிறார்கள். வேலைக்காரி வேலையைவிட்டு நின்றுவிடுகிறாள். சீமா போன பின்பு இஷிதாவும் எதையோ இழந்துவிட்டதைப் போல உணர்கிறாள். நீண்டநாள் கழித்து இருவரும் சந்திக்கிறார்கள். ”நான் ஒளிஞ்சு நின்னு பாக்குறேன் தெரிஞ்சும் ஏன் நீ அமைதியா இருந்த?” என்று கேட்கிறாள் இஷிதா. “ஏன்’னா அது எனக்கும் பிடிச்சிருந்தது, அதான்!” என்கிறாள் சீமா.

Sex with the ex (இயக்குநர் சுஜோய் கோஷ்) என்ற கதையை விஜய் வர்மா தமன்னாவின் ஹாட் காட்சிகளுக்காகப் பார்க்கலாம். Tilchatta (இயக்குநர் அமித் ரவிந்தர் சர்மா) என்றால் கரப்பான்பூச்சி என்று பொருள். ஆனால் அந்தத் தலைப்புக்கும் கதைக்கும் என்ன பொருத்தம் என்று விளங்கவில்லை. கஜோல் நடித்த இந்தக் கதைக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஏமாற்றிவிட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் Pornography படங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்த ஒரு டாக்குமெண்டரியைப் பார்த்தேன். அதில் போர்னோ படம் தயாரிப்பவனிடம், “இதுபோன்ற படங்களில் நடிப்பதற்குப் பெண்கள் எப்படிக் கிடைக்கிறார்கள்?” என்று கேள்வி கேட்கிறார்கள். அவன் கூலாகப் பதில் சொல்கிறான், “இந்த உலகத்தில் ஒவ்வொரு நாள் பிறக்கும்போது யாரோ சில பெண்கள் பதினேழைக் கடந்து பதினெட்டைத் தொடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த இண்டஸ்ட்ரிக்குப் புதிய பெண்கள் கிடைக்கிறார்கள். நாங்கள் யாரையும் தேடவேண்டிய அவசியம் இல்லை” என்கிறான்.

செக்ஸ் என்பது பல்லாயிரம் கோடிகள் புரளும் உலகத்தின் மிகப் பெரிய வணிகம். அதற்கான ஆள்களை வணிகம் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும். அதேபோல போர்னோ படங்களைப் பார்ப்பதற்கும் அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இணையத்தைத் திறந்தால் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், லஸ்ட் ஸ்டோரீஸ் கதைகளுக்கு செக்ஸ் என்பதைக் கடந்து சில common motifs உள்ளன. Sexual desire, its boring cousin, monogamous love ஆகியவற்றைப் பேசுகின்றன. குறிப்பாக,  எல்லாக் கதைகளும் பெண்களின் பார்வையில் அமைந்திருக்கின்றன (தமன்னா கதையைத் தவிர).

2013-இல் சோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி, கரன் ஜோஹர் ஆகிய நால்வரும் பாம்பே வெல்வெட் என்ற படத்தில் பங்கெடுத்தனர். வின்டேஜ் காலத்தைக் காட்டும் சினிமா வகைகளில் அந்தப் படம் தனித்துவம் வாய்ந்தது. அந்தப் படம் முடிந்த பிறகு அவர்கள் இணைந்து ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறார்கள். ’ஒரு துப்பட்டாவைப் போட்டு பெண்களின் மார்பகங்களை மறைப்பதுபோல, அவர்களின் செக்ஸுவல் எண்ணங்களை சமூகம் மூடி மறைத்திருக்கிறது. இதை வெளிக்கொணர வேண்டும்’ என்று முடிவு செய்கிறார்கள். இப்படித்தான் லஸ்ட் ஸ்டோரிக்கான common motif உருவானது.

லஸ்ட் ஸ்டோரீஸ் என்பது செக்ஸ் பற்றிய கதைகள் அல்ல. செக்ஸின் மூலாதாரப் பிரச்சனைகள் பற்றிய கதைகள். இது தனிமனிதப் பிரச்சனை இல்லை. பெண்களைப் பாலியல் ரீதியாக அடக்குமுறை செய்யும் சமூக உளவியல் பிரச்சனை. அதன்மீதுதான் இந்திய பண்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உயரத்தில்தான் இன்றைய இந்திய அரசு அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. ‘பெண்ணின் செக்ஸுவல் எண்ணங்களை பொதுவெளியில் வைத்து விவாதிக்கும்போது இந்திய அரசே ஆட்டம்காணும்’ என்பது இதன் கொள்கை. அனுராக் காஷ்யப்பின் வீட்டிற்கு மோடி அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று ஆய்வெல்லாம் நடத்தியிருக்கிறார்கள் என்பதைக் கேள்விபட்டிருப்பீர்கள் தானே!

ஆனால் இரண்டாவது சீஸன் எடுத்தவர்களிடம் இந்தப் புரிதல் இல்லை. இவர்கள் எல்லாம் மேல்தட்டுவர்க்கப் பார்வையில் சமூகப் பிரச்சனைகளை அணுகுபவர்கள். வடநாட்டு மணிரத்னங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்! இவர்களுக்கு லஸ்ட் ஸ்டோரீஸின் common motif புரிவது மிகக் கடினம்.

லஸ்ட் ஸ்டோரீஸ் என்பது வழக்கமான cliched extramarital affair கதைகள் இல்லை. இந்தக் கதைகளில் வரும் மனைவிகள் ஒரு கலவரத்தை உருவாக்குகிறார்கள். “நூ காவாலய்யா” எனத் தங்கள் மந்திரக் குரலால் பழைய காதலர்களை அழைக்கிறார்கள்; இன்னொருத்தியின் கணவரை அழைக்கிறார்கள்; பாய்பெஸ்டிகளை அழைக்கிறார்கள். ஆனால் கணவர்களை அழைப்பதில்லை! எது அவர்களை இப்படிச் செய்ய வைக்கிறது என்று நம்மைச் சிந்திக்க வைப்பதுதான் லஸ்ட் ஸ்டோரீஸ்!