ஆரோக்கிய மேரி கையில் உள்ள செப்புக் கட்டையால், தன்னுடைய பாதத்தையே மென்மையாக வருடி, கண்ணை மூடி அந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். குழந்தைகள் விளையாடுகிற செப்புச் சாமான்கள் செய்வார்களே, அதைப் போல மரக் கட்டையால் செய்யப் பட்டிருந்தது அந்த உள்ளங்கை நீளக் கட்டை. முனையில் உருண்டு திரண்டும், கைப்பிடி போல நீண்ட வழுவழுப்பான மரத் தாங்குப் பிடிப்பும் கொண்டது. வாழைப்பழத்தின் நுனி போல் அதன் உச்சி இருக்கிறதோ என நினைத்துச் சிரித்துக் கொண்டாள். பிறகுதான் சரியாக அதைக் கண்டுபிடித்தாள்.

மழைக்கு முளைக்கிற மரக் காளான் போல அது இருந்தது. தலைக்கு மேல் குடைக்குப் பதிலாக, ஒருகூம்பு, அதுமட்டும்தான் வித்தியாசம். பார்ப்பதற்கு அந்தக் கூம்பு மொட்டையடித்த துறவியின் தலையைப் போலவும் இருந்தது. அதைப் பயன்படுத்துகிற கைகளைப் பொறுத்து அது பத்தும் செய்யும். உள்ளங்காலில் வைத்து பலம் கொண்டு அழுத்தி எடுத்தால், வலியில் காலைக்கூட வெட்டிக் கையில் கொடுத்து விடுவார்கள். அதே முனையை வைத்து வருடிக் கொடுக்கிற தோதில் தடவிக் கொடுத்தால், கூச்சத்தில் கண்ணில் நீர் சுரந்து விடும். அக்குபஞ்சர் மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிற கட்டை அது. வடிவத்தில் ஒருவகையில் சதுரங்க விளையாட்டில் நிற்கிற சிப்பாயைப் போலவே இருக்கும்.

ஆரோக்கிய மேரி அடம்பிடித்து அக்குபஞ்சர் கற்றுக் கொள்ளப் போனாள். ஆரம்பத்தில் அவளது எடையைக் குறைக்கத்தான் அவளுடய கொழுந்தியாள் ஒருத்தி இந்த மருத்துவத்தைப் பரிந்துரைத்தாள். அதைச் செய்கையில் ஆரோக்கிய மேரிக்குமே வலி இருந்ததுதான். ”வலித்தால்தான் இதில் விடிவு. அதன்பிறகு சுகம்தான்” என்றார் அங்கிருந்தவர். அதைத்தாண்டி அந்தச் சிப்பாயைக் கையில் வைத்துக் கொண்டு அதன் முனையை வைத்து ஒவ்வொரு புள்ளிகளாகப் பாதத்தில் கண்டுபிடித்துச் சரியாய் வைத்து அழுத்தும் அந்தப் பாங்கு பிடித்திருந்தது. பாதங்களுக்குள் ஓடும் நரம்புகள் அவளுக்கு இலையில்லாத மரத்தின் கிளைகளைப் போலத் தெரிந்தன. அவளுக்கு உடனடியாகவே அந்தச் சிப்பாயைப் பிடித்துப் போய்விட்டது.

அவனைத் தன்கைக்குள் போட்டுக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டாள். ஆரோக்கிய மேரிக்கு அப்போதுதான் இருபது வயதே ஆகிறது. அதற்குள் தாய்மாமனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். வறுமைப்பட்ட வீடு என்பதால் அவளை அதற்கு மேல் வைத்துக் கொள்ளப் பொறுமையில்லை அவர்களுக்கு. படித்ததுமே பத்தாம் வகுப்பு வரைக்கும்தான். படிப்பென்றால் அவளுக்குக் கொள்ளை பிரியம். வேறு வழியில்லாமல்தான் தன்நிலையைச் சகித்துக் கொண்டாள். கீழே கிடக்கும் ஒரு துண்டுக் காகிதத்தைக்கூட விடமாட்டாள். என்னதான் இருக்கிறது என அதையெடுத்து வாசிப்பாள். ஊரில் இருந்த வாத்தியார்கூட, “அவ பொது அறிவை தெரிஞ்சுக்கணும்னு நினைக்கா. இந்த உலகத்தில என்னல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும் அவளுக்கு. ஒழுங்கு மரியாதையா படிக்க வைச்சா இவ படிச்சு கலெக்டர் ஆகி உங்களுக்குக் கஞ்சி ஊத்துவா? நல்லா யோசிச்சுக்கோங்க” என்றார் அவளைப் பள்ளியில் இருந்து இடைநிறுத்திய போது.

ஆரோக்கியமேரியின் அம்மாவிற்குமே கஷ்டமாகத்தான் இருந்தது. தன்பிள்ளையும் தன்னைப் போலவே இரந்து வாழும் வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிற வருத்தம் அவளுக்கு. அவளுக்கு இன்னொரு கவலையும் இருந்தது. பார்த்தாலே பருத்த பெங்களூர்க் கத்தரிக்காய் ஒன்று ஆடியாடி உருண்டுவருவதைப் போல நடந்து வருவாள் ஆரோக்கியமேரி. அவளது இடுப்புச் சதைகள் தொங்கி யானையின் அடிவயிற்றைப் போல ஆடிவருவது தூரத்தில் இருந்தே தெரியும். “ஆனா ஒண்ணுடி. நீ ஆடா பெறந்திருக்கலாம். உன்னை வெட்டி கறி எடுத்தா திருவிழாவில ஒரு ஊரே வயிறாரச் சாப்பிடலாம். அம்புட்டுக் கறி” என அவளைக் கிண்டலடிப்பாள் லாவண்யா. இறுதியாய், “அவ நடந்து வந்தான்னு வைய்யி. தொடை ரெண்டும் உரசி தீப்பிடிக்கும் பார்த்துக்கோ” என தனபாண்டி சொன்னதுதான் அவளது அடையாளமாகவும் நிலைத்து விட்டது. தொடைகள் மலைப் பாறைகளைப் போல உரசித் தீ.

சின்னவயதில் இருந்தே அவளுடைய உடல்வாகு அதுதான். இத்தனைக்கும் மூன்று இட்லிதான் தின்பாள். இந்த நடிகைகள் உடலில் இருக்கிற கறியை எல்லாம் அறுவை சிகிச்சை மூலம் வெட்டியெடுத்து எறிந்து விட்டு, ஒல்லியாய் வந்து நிற்கிறார்களே, அதைப் போலச் செய்து கொள்ளலாமா? எனவும் யோசித்தாள். ஆனால் நிச்சயமாக அதற்கெல்லாம் குறைந்தது பல இலட்சங்களுக்கு மேலாகும் என அவளுடைய அறிவு சொன்னது. இங்கே செந்தூர் ஸ்டிக்கர் பொட்டு வாங்கவே வழியில்லை என நினைத்துக் கொண்டாள்.

அதற்காகக் கழிவிரக்கம் கொள்கிற ஆளும் கிடையாது அவள். மனதளவில் யாருக்கும் எதிராக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டாள். அவளது உடல் குறித்து கிண்டலடிப்பவர்களைக்கூட புன்னகையால்தான் கடப்பாள். இதுகுறித்து அவளது தோழி லாவண்யா கேட்கையில், “ஆமா இப்படிப் பொறந்துட்டோம். அதுக்காக சாகவா முடியும். உடம்பை விடு. வாழணும்னு மனசு சொல்லுதுல்ல” என்றாள். வேறு எங்குமே இவளைக் கட்டிக் கொடுக்க முடியாது என ஆரோக்கிய மேரியின் அம்மா உறுதியான முடிவிற்கு வந்துசேர்ந்தாள்.

அவளுடைய தம்பியான தங்கவேலுவுக்கு மகளைக் கட்டிக் கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்து விட்டாள். “அதுக்கு நீ அவளைக் கொண்டு போய் பாழுங்கிணத்தில தள்ளி விட்டிரலாம். நிம்மதியா சாகண்ணாலும் செய்வா” என்றாள் அவளுடைய நாத்தனார். “என்னோட பெறந்தவந்தானே? எனக்குத் தெரியாதா? எங்க கையை மீறிப் போயிடப் போறாங்க? பஞ்சத்தில கெடக்கிறதை விட கொஞ்சம் உக்காந்து சாப்பிடட்டும்” என்றாள் பதிலுக்கு.

உண்மையில் உட்கார்ந்து சாப்பிடத்தான் தங்கவேலுவுடன் கிளம்பிப் போனாள் ஆரோக்கியமேரி. அவளைவிட இருபத்தி மூன்று வயது மூத்தவன். அவன் என்ன தொழில் செய்கிறான் என்பது ஊரில் யாருக்குமே தெரியாது. திடீர் திடீரெனக் காணாமல் போவான். வரும் போது பழைய கார் ஒன்றில் வந்து இறங்குவான். “மதுரையில ஓடிக்கிட்டு இருக்கப்ப பார்த்தேன். தூக்கணும்னு தோணுச்சு. நேரா போயி ஓனர்ட்ட ரேட் பேசிட்டேன்” என்பான்.

அப்புறம் ஒரு பத்து நாளில் அந்தக் கார் காணாமல் போகும். புது வண்டியில் வந்து இறங்குவான். அதுவுமே சில தினங்களில் காணாமல் போய்விடும். “இவம் என்ன தொழில் செய்றான்ணே தெரியலையே? ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பாரு. இந்த கட்டாந்தரையில கப்பல்ல வந்து இறங்குறானா? இல்லையான்னு” என தேநீர்க்கடையில் அமர்ந்திருந்த ஊர்த் தலையாரி சொன்னார். எங்காவது தூர தேசத்திற்குப் போய் கொள்ளையடிக்கிறானா? அந்தச் சந்தேகமும் இருந்தது ஊருக்கு.

“அப்படில்லாம் பண்ணினா இப்படி வெளிப்படையா அலைய முடியாதுப்பா. எந்தத் திருடன் பகுமானமா வெளிப்படையா வாழ்ந்திருக்கான்னு சொல்லு. பானை நிறைய நகை நட்டு வச்சிருந்தாலும் அவன் சம்சாரம் வெறும் கயித்தோடுதான் கடை கண்ணிக்கே வர முடியும்” என்றார் ராசு தன்னருகே இருந்தவரிடம். தங்கவேலு ஊருக்குள் யாரிடமும் கையேந்திப் போய் நிற்கவில்லை. ஊரோடு எந்தச் சம்பந்தமுமே வைத்துக் கொள்ளவும் இல்லை. அவனுடைய வீடு அங்கிருக்கிறது, அதனால் போய்த் தங்கிக் கொள்கிறான். அவனைப் பொறுத்தவரை ஊர் என்பது ஜாமத்தில் போனாலும் படுக்கிற கயிற்றுக் கட்டில், அவ்வளவுதான்.

ஊர்க்காரர்களை நோக்கி எப்போதுமே மட்டமான பார்வையைத்தான் வீசியலைவான் தங்கவேலு. ஆனால் எவ்வளவுதான் அவனிடம் இருந்தாலும், பொறுப்பற்றவன் என்கிற முத்திரையையே அவனுக்குக் குத்தியது ஊர். மனிதன் என்றால் காலகாலத்திற்குள் கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்று ஒரு வீட்டில் அடைக்கலம் ஆக வேண்டாமா? நாற்பது கழிந்தும் அவன் இவ்வாறு மைனரைப் போலச் சுற்றிக் கொண்டிருப்பதை ஊர் விரும்பவும் இல்லை. “யாரா இருந்தாலும் காலா காலத்துக்கும் ரகசியமாவே சுத்திக்கிட்டு இருக்கக் கூடாது. எதுக்கு ஒரு மனுஷனுக்கு ரகசியம்ங்கறேன்? அப்ப நீ எதையோ மறைக்கிற. அப்பிடித்தானே?” எனச் சரியாகப் பிடித்தார் ராசு.

தங்கவேலுவுக்கு அவனுடைய அக்கா மகளோடு கல்யாணம் என்ற செய்தி வந்த போது ஊர் நல்லவிதமாகவே எடுத்துக் கொண்டது. “வயசு வித்தியாசம் இருக்குதான். ஆனா ஒண்ணுப்பா தூக்கத்தில விறைப்பு வர்ற வரைக்கும் துணிஞ்சு கல்யாணம் பண்ணிக்கலாம். அது அறுவது வயசா இருந்தாலும் சரி. ஏன் ஊர் உலகத்தில நடக்கலீயா?” என்றார் சித்த வைத்தியசாலை வைத்து நடத்துகிற நடேசன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருத்தன் தனக்கு ஏன் அதிகாலையில் விறைப்பு வரவில்லை என எண்ணத் துவங்கினான்.

தங்கவேலுவின் அம்மா மட்டுமே வீட்டில் இருந்தாள். அவளால் எழுந்து வந்து ஆரத்திகூட எடுக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த சொந்தக்காரர்களுக்கு அது உறைத்துப் பின்னர் அவசர அவசரமாகத் தயார் செய்து கொண்டு வந்தார்கள். குங்குமம் ஏதோ மிளகாய்ப் பொடியைப் போல அந்த வட்டத்தட்டில் மிதந்தது. அளவுக்கு அதிகமான தண்ணீரில் நாலைந்து வேப்ப இலைகளைப் பறித்து போட்டிருந்தார்கள். இங்கே என்ன அம்மன் ஊர்வலமா நடக்கிறது? அதைப் பார்த்ததும் ஆரோக்கியமேரிக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“நல்ல களையான சிரிப்பு. அவ உடம்பைப் பார்க்காம அவ சிரிப்பைப் பார்த்தாலே போதும் அவன் கட்டியாண்டுருவான் இவளை. உடம்பு மட்டுமா வா வான்னு அழைக்கும். ஒரு சிரிப்பு போதும்டி அதுக்கு” என்றாள் ஆரத்தி எடுத்த வசந்தா. ஆனால் தங்கவேலுவால் அவளது சிரிப்பைத் தலையைத் தூக்கிப் பார்க்கவே முடியவில்லை. அக்கா கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சியதால் ஒத்துக் கொண்டான். அவனுக்குமே பெரியளவிற்கு திருமண ஆசையெல்லாம் அதற்கு முன் இருந்தது இல்லை.

அப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் எனத்தான் நினைத்தான். வெளியே போய் அலைந்து திரிந்த வகையில், உடல் சுகத்திற்கும் குறையேதும் இல்லை. அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருதடவைதான் உடலே கேட்கிற பழக்கத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டது. ஆரோக்கிய மேரியின் உடலை மேய்ந்து பார்த்தபோது, ஒன்றுமே தோன்றவில்லை அவனுக்கு. ”கையில வச்சு தூக்கி வளர்த்த பொண்ணு இல்லையா? அதனால மனசு மாறுறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்ல?” என்றான். அவளுமே அதைப் புரிந்து கொண்ட மாதிரித் தலையை ஆட்டினாள்.

ஆனால் அவளுடைய அனுபவத்தில் இதெல்லாம் வெறும் காரணம்தான் என்கிற உண்மையை அறியக் கற்றிருந்தாள். சுண்டியிழுக்கிற உடல் எப்பேர்பட்ட மனிதனையும் கவிழ்த்து விடாதா? தன்னிடம் தங்கவேலு கவிழவில்லை என்பதைக் காலடி எடுத்து வைத்ததுமே அறிந்து கொண்டாள். முகத்தில் சிரிப்பைத் தேக்கி அவனருகில் வலைய வந்து பார்த்தாள். அவன் தலையைத் தூக்கிக் கூடப் பார்க்கவில்லை. எப்போது பார்த்தாலும் கையிலிருக்கிற செல்போனையே நோண்டிக் கொண்டிருப்பான்.

அவனருகில் போய் ஏதாவது பேச்சுக் கொடுத்தால் எரிச்சல்படுவான். தள்ளிப் போய் போனில் யாரிடமோ சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பான். “குட்டி இந்தா பாரு. போன்ல பேசறப்ப பக்கத்தில வந்து நின்னா மாமாவுக்குக் கெட்ட கோபம் வரும். ஒட்டுக் கேட்கறது தப்பு. யாரோட போனையும் நோண்டிப் பாக்க கூடாது. உன் போனே இருந்தாலும் அதைச் செய்ய மாட்டேன்” என்றான். “அப்ப எனக்கும் ஒரு போன் வாங்கித் தாங்க” என்றாள் ஆரோக்கியமேரி.

பேசிக் கொண்டிருந்ததைப் பாதியில் முறித்துவிட்டு வந்து, சட்டையை மாட்டிக் கொண்டு அவளையும் பின்னால் அமரவைத்து அழைத்துப் போய், இருபத்தைந்தாயிரம் ரூபாய் விலையில் செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அது வந்த பிறகிலிருந்து தங்கவேலுவுக்குத் தொல்லை ஓய்ந்த மாதிரி இருந்தது. அவள் பாட்டிற்கு ஒரு ஓரமாய் அதை வைத்து என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தாள். புகைப்படங்களாக எடுத்துக் கொண்டிருந்தாள். “ஆமா அழகிப் போட்டிக்கு அனுப்பப் போறீயா? குண்டானவங்களுக்கும் தனியா நடக்குதுதாம்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான் தங்கவேலு.

அவள் தலையைத் தூக்கிக்கூடப் பார்க்காமல் அதில் மூழ்கி இருந்தாள். அந்தக் கிழவிக்கும் அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. “ஏதோ சுருக்குப் பைய்யி மாதிரி கருகருன்னு ஒண்ணை கையில வச்சுக்கிட்டே எந்நேரமும் சுத்துறா. வாய்க்குச் சுருக்குன்னு ஒரு குழம்பு வைக்கத் தெரியலை. அவ ஆத்தாக்காரி என்னத்தைத்தான் வளர்த்தாளோ. கோவில் பன்னி கணக்கா கறுகறுன்னு கொழுத்து போயி திரியுது இது” எனப் புகார் வாசிப்பாள் கிழவி.

தங்கவேலுவின் குணம் அறிந்து பக்கத்து வீட்டில் இருக்கிற சொந்தக்காரர்கள்கூட அளவோடுதான் அவளோடு பேச்சு வைத்துக் கொண்டனர். “உம்புருஷன் கூறுகெட்ட கொணத்துக்காரன்மா. வாய்ல வந்ததை சில நேரம் பேசிப்புடுவான். எம்பொண்டாட்டியை கவர்ந்து என்னோட பணத்தை அபகரிக்கப் போறீங்களான்னு அவம் கேட்டாக்கூட அதிசயம் இல்லைம்மா” என்றாள் சரசு அக்கா.

அவனுமே ஒருதடவை வந்து, “நாம நல்லா இருக்கோம்ணு சுத்தி இருக்கறவங்க வயிறு எரியறாங்க. நீ என்னன்னா என்னன்னு எல்லார்ட்டயும் அளவா வச்சுக்கோ. இல்லாட்டி மாமாவுக்குக் கெட்ட கோபம் வந்திரும்” என்றான். அவளுக்குமே அவர்கள் யாரோடும் பேசவும் பிடிக்கவில்லை. போய் நின்றாலே தாம்பத்யத்தைப் பற்றித்தான் எடுத்த எடுப்பிலேயே பேசுகிறார்கள். என்னத்தை சொல்ல? என நினைத்துக் கொண்டாள் ஆரோக்கியமேரி.

செல்போனில் அவளது வயதுக்கு உகந்த ஒளிப்படங்களைப் பார்த்தாள். எல்லா படங்களிலுமே ஒல்லியாய், இல்லாவிட்டால் கொஞ்சம் பூசினாற் போல இருந்த பெண்களே இருந்தார்கள். ஆண்களுமே அப்படித்தான் இருந்தார்கள். அவளைப் போல உடல் தோற்றம் கொண்டவர்கள் அரிதாகத்தான் இருந்தார்கள். அந்த அரிய இடத்தில்கூட சும்மா முட்டி மோதி மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தார்கள். உடலை வளைத்து முறுக்கும் ஆட்டத்திற்கான உயிர்ப்பே இல்லை அதில். உடல் என்றால் வில்லாய் வளைய வேண்டுமோ? அதைப் பார்த்துப் பார்த்துச் சலித்து விட்டது ஆரோக்கிய மேரிக்கு. சிலநேரங்களில் எரிச்சலாகவும் இருந்தது. உடல் தோற்றம் மட்டுமா அளவுகோல்? இப்போது ஒருத்தன் இயலவே முடியாது என்கிற நிலையில் வந்தாலும் இருக்கிற வெறிக்கு அவனைத் தட்டி மேலெழுப்பி விடுவேன் என்று உறுதியாக நினைத்துக் கொண்டாள். தங்கவேலுவிடம் அதைச் செய்து பார்க்கலாமா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு.

கண்ணில் அழகாக மைதீட்டிக் கொண்டு முகம்கொள்ளாச் சிரிப்புடன் அவனது முன்னால் போய் அவள் நின்ற போது, “இதென்ன பேய் மாதிரி வந்து நிக்க?” என்றான் சிரித்துக் கொண்டு. முகத்தைச் சுழித்துக் கொண்டு திரும்பி விட்டாள். தங்கவேலு எந்த வகையிலும் தனக்கானவன் இல்லை என்கிற முழுமுடிவிற்கு வந்து சேர்ந்தாள். ஆனாலும், சதா அந்த நினைப்பாகவே இருந்தது. அப்போது கொழுந்தியாள் சொல்லித்தான் உடலைக் குறைக்கலாம் என்கிற நினைப்பில் அந்த அக்குபஞ்சர் மருத்துவச் சிகிச்சைக்குப் போனாள்.

“ஊர்ல ஒவ்வொருத்தனும் எண்ட்ட வட்டிக்கு கேட்டுக்கிட்டு அலையாறாங்க. நீங்க வேலைக்கு போயி சம்பாதிக்க போறீங்களோ?” என்று சொல்லி முடியாதென மறுத்தான். “நீங்களும் ஒண்ணுமண்ணா இல்லை. வெளிய போயி நின்னாலே அதை கேக்கறாங்க. நான் என்ன சொல்லட்டும்? அதுக்காக வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்க முடியுமா?” என்றாள் துடுக்கான குரலில். அமைதியாய் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தங்கவேலு. சரியான இடத்தில்தான் தட்டி விட்டாள்.

“சரி போ. ஆனா மானக்கேடான எதையும் இழுத்துட்டு வந்திராத. ஒண்ணை புரிஞ்சுக்கோ. உனக்கு ஒண்ணை தர முடியலைன்னு நினைச்சேன் பாரு. அது எனக்கும் வேண்டாம்னு எப்பவோ உதறிட்டேன். அது எங்கக்கா மேல சத்தியம்” என்றான். அந்த நேரத்தில் விநோதமான உணர்வொன்று ஆரோக்கிய மேரிக்குள் வந்து போனது. அடியாழத்தில் இருந்து “சரிங்க மாமா” என்றாள் அன்பாக.

ஆரம்பத்தில் அவளது நடை உடை பாவனைகள் மாறி இருக்கிறதா என நோட்டம் விட்டான் தங்கவேலு. அப்படியொன்றும் வித்தியாசம் தெரியவில்லை. பழைய மாதிரித்தான் கத்தரிக்காய் போலவே இடுப்பை ஆட்டிக் கொண்டு தீச்சுடர் பறக்க நடந்து வந்தாள். அவனே பாவம் பார்த்துத்தான், “வேலைக்கு போற இடத்தில இப்படியா பட்டிக்காட்டான் மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு சுத்துவ. வா நல்ல டிசைன்ல எடுப்போம்” என்று சொல்லி சுடிதார் எடுக்க அழைத்துப் போனான். அவளுடைய உடலுக்கு ஏற்ற மாதிரியான அளவு உடைகள் பல கடைகளில் இல்லை. ஒருகடை வாசலில் நின்று, “இவ அளவுக்கு சுடிதாரே கிடைக்க மாட்டேங்குது. என்னைக்கு இன்னொருத்தன் இவளுக்குக் கிடைக்கிறது?” என சிகரெட் புகைத்தபடியே யோசித்தான். புகை மெதுவாக உள்ளே நெஞ்சுக்குள் நுழைந்து சமாதான உணர்வைத் தோற்றுவித்தது.

புத்தாடை அணிந்து அந்த அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்குள் பயிற்சியை முடித்து வேலைக்காக உள்நுழைந்த நாளை கடைசி வரை மறக்கக்கூடாது என நினைத்துக் கொண்டாள் ஆரோக்கியமேரி. அவ்வளவு எடையிருந்தும் அத்தனை லகுவாக ஒரு பறவையைப் போல அந்த மையத்திற்குள் நுழைந்தாள். அந்தச் சிப்பாயை எடுத்து எண்ணெய் தடவி கைக்குள் வைத்து உருட்டிக் கொண்டே இருப்பாள். “வேற எதுவும்னு நினைச்சு உள்ளகிள்ள விட்டிராத மேரி. சிக்கிக்கும் இல்லாட்டி நங்குன்னு போயி குத்திரும். அதெல்லாம் வாய் அகலமான பொருள்களுக்கு ஏத்தது” என்றாள் அங்கிருந்தவர்களுள் மூத்தவள்.

அது புரிவதற்கு ஆரோக்கிய மேரிக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. பின்னர், “போங்கக்கா. தொழில் நடத்துற எடத்திலயும் அந்த நெனைப்போடவா இருப்பாங்க. எங்க மாமா அதில எல்லாம் எனக்கு குறையே வைக்கலை. வீடுகட்டிட்டுத்தான் குழந்தைன்னு வேணும்னே தள்ளிப்போடறோம்” என்றாள். “ஆனா மொகத்தில அதுக்கான குறிப்பே இல்லையே? அது என்னவோம்மா. இந்த மாதிரி எடத்தில நெனைப்ப உருவாக்கணும்னே தேடி வருவானுக. நாமதான் சூதானமா இருந்துக்கணும். உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆட்டு உரலை வச்சுக்கிட்டு அவம் என்ன பண்ணப் போறான்? இப்பல்லாம் இவனுகளுக்கு அழகிப் போட்டில வர்ற மாதிரி வரணுமாம். பூராம் சினிமாவை பார்த்துக் கெட்டுப் போயிட்டானுக” என நீட்டி முழக்கி விட்டுக் கடந்து போனாள்.

உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்கிற வார்த்தை குத்தீட்டியைப் போல அவளது நெஞ்சில் பாய்ந்தது. வெறித்துப் பார்த்தபடி அந்த வலி அடங்கும் வரை அமைதியாய் அமர்ந்து இருந்தாள். அவளையறியாமலே அந்தச் சிப்பாயின் உருண்டு திரண்டிருக்கிற நுனியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டு அதிலிருந்து விடுபட்டாள்.

பெரும்பாலும் அந்த மையத்திற்கு வயதானவர்களே வந்தார்கள். முட்டி வலிக்கு உள்ளங்காலுக்குள் கட்டையை வைத்து உருட்டும் இந்த வைத்தியம் நன்றாகக் கேட்கிறது என யாரோ கிளப்பி விட்டனர். சாரை சாரையாய் முதியவர்கள் படையெடுத்தார்கள். “ஆனா செய்றப்ப வலி உசுரே போகுதுப்பா. மருந்தை குடிச்சிடலாமான்னுகூட தோணும். ஆனா பண்ணி முடிச்ச பெறகு அது வரைக்கும் இருந்த வலில்லாம் காணாம போயிடுது. அடிச்சு போட்ட மாதிரி தூக்கம் வருதுப்பா. ரெத்தம் தலைக்கு ஏறுதாம். அங்க சொன்னாங்க. முட்டிக்கும் தலைக்கும் என்ன சம்பந்தம்னுதான் தெரியலை” என்று இன்னொருத்தருக்குப் பரிந்துரைத்தார் ஒரு முதியவர்.

ஆரோக்கியமேரிக்கு அவர்கள் ஆஊவென காலைத் தூக்கி ஆட்டிக் கொண்டு படுத்துக் கிடப்பதைப் பார்க்கச் சிரிப்பாணியாக இருக்கும். அதிலும் ஒரு பெரியவர் ஓதம் வந்து கொட்டை வீங்கிப் படுத்துக் கொண்டு அப்படியும் இப்படியும் ஆட்டினார். “அய்யா வேட்டியை ஒழுங்கா போட மாட்டீங்களா?” என அதட்டினாள் ஆரோக்கியமேரி. “அய்யோ நீ என் பேத்தி மாதிரி. தொங்கிப் போற வரைக்கும்தான் எதுக்குமே மதிப்பு. தொங்கிருச்சுன்னா கைகால்ல இருக்கற மாதிரி அதுவுமே வெறும் சதைதான்” என்றார்.

அன்றிரவு கண்ணாடி முன்நின்று பருத்துத் தொங்குகிற தனது மார்பகங்களைப் பார்த்தாள். பெரியவர் சொன்னது நினைவிற்கு வந்தது. அவர் இந்தத் தொங்கிப் போதலைப் பற்றிச் சொல்லவில்லை என்கிற அறிவும் அவளுக்கு இருந்தது. ஆனாலும் சிறுகவலை அவளது உள்ளுக்குள் தோன்றியது. இதிலிருந்து தனக்கு மீட்பே இல்லையா? யாரிடம் போய் இதையெல்லாம் சொல்வது? அப்படிச் சொல்வது சரியாக இருக்குமா? என்றெல்லாம் யோசித்தாள்

செல்போனை மேய்ந்து தன்னுடன் படித்த பையன்களின் எண்களையெல்லாம் வரிசையாகப் பார்த்தாள். ஏற்கனவே அதையெல்லாம் வாங்கிச் சேகரித்தும் வைத்து இருந்தாள். பாபுவின் எண்ணைப் பார்த்ததும் அவனை அழைக்கலாம் எனத் தோன்றியது. சின்ன வயதில் இருந்தே அவனை ரகசியமாகக் கண்காணித்தபடிதான் இருந்தாள். அவனாகப் பேசட்டும் எனப் பல தினங்கள் காத்திருந்திருக்கவும் செய்திருக்கிறாள்.

அவனிடம் பேசலாம் என முடிவு செய்து அழைத்து, “மேரி பேசறேன் பாபு. எப்டீ இருக்க? என்னையெல்லாம் மறந்துட்டீயா? என்னமோ உண்ட்ட பேசணும்னு தோணுச்சு” என்றாள். அந்த முனையில் அவன், “ஏய் குண்டம்மா உன்னை எப்படி மறக்க முடியும்? நம்ம ஸ்கூல் தண்ணி தொட்டியை விட பெரிசா இருப்ப. இப்ப எப்டீ இருக்க? ரோடு ரோலர் போல ஆயிட்டீயா? உன்னை எப்படி மறக்க முடியும்?” என்றான் சிரித்தபடி.

மேரிக்கு உடனடியாகவே பேச்சை முறித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே, “சும்மா தோணுச்சு பாபு. அதான் கூப்ட்டேன். அப்பறமா கூப்பிடறேன். எங்க வீட்டுக்காரர் வந்திட்டாரு இங்க” என அவசரமாகத் துண்டித்து விட்டு அமைதியாக அமர்ந்து யோசித்தாள் ஆரோக்கியமேரி.

அவனை அழைத்தது சம்மந்தமான குற்றவுணர்வும் வந்தது. “எங்கக்கா மேல சத்தியம்” எனத் தங்கவேலு சொன்னதும் நினைவில் எழுந்தது. வெறுமனே பேசத்தானே அழைத்தோம் என்கிற சமாதானமும் கூடவே வந்தது. தங்கவேலு குறித்து எண்ணவும் செய்தாள். அவன் வேண்டுமென்றே வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறான்? கலவி வேண்டாம், வெறுமனே கட்டிப் பிடித்துக் கொண்டுதானே தூங்க நினைத்தேன்? ஆசையாய் நாலு வார்த்தைகள் போதாதா? என்றெல்லாம் யோசித்தாள். இந்த மாதிரியான யோசனைகளில் இருந்தெல்லாம் எப்படித் தப்பிக்க? எதைப் பற்றிக் கொள்ள? என அவளுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் கேள்விகளோடு குறுக்கே மறுக்கே மூச்சுமுட்ட ஓடினாள் ஆரோக்கிய மேரி.

அவளைவிட வயதில் மூத்த பையன் ஒருத்தன் மையத்திற்கு வந்தான். அன்றைக்கு மற்றவர்கள் விடுமுறையில் இருந்தார்கள். அனுபவக் குறைவு இருந்தாலும் அவள் மட்டுமே இருக்கிறாள் என்பதால் சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டாள். அந்த அறையில் அவனைப் படுக்க வைத்து காலில் எண்ணையைத் தடவி, அதனைக் கொண்டு மெதுவாகத் தடவி விடத் துவங்கினாள். அவனுக்குக் குறுகுறுப்பாக இருந்தது. “வலிக்கும்னு சொன்னாங்க” என்றான். கூச்சத்தில் காலை நகட்டிய போது அதை இழுத்து தன் வயிற்றில் படும்படி வைத்து, “மெதுவா பழக்கம் வர்ற வரைக்கும் இப்படிப் பண்ணுவோம். அப்புறம் ட்ரீட்மெண்டை ஸ்டார்ட் பண்ணிடுவோம்” என்று சொன்னாள்.

பிறகு நிதானமாக அவனது உள்பாதத்தைச் அதனால் வருடி விடத் துவங்கினான். அவன் கூச்சத்தில் நெளிந்தான். ஒருதடவை கண்ணைத் திறந்து அவளைப் பார்த்தான். அவளுமே தன்னுடைய பிரத்தியேகச் சிரிப்பை உதிர்த்தாள். பிறகு அவன் ஏனோ கண்ணை மூடிக் கொண்டு, அந்தச் சுகத்தை அனுபவிக்கத் துவங்கினான். அன்றைக்கு அவனது உள்ளங்காலில் அக்கட்டையால் வெறிகொண்டு உருட்டி வலியில் துடிதுடிக்கச் செய்தாள் ஆரோக்கியமேரி. அவன் துடித்ததைக் கண்டு உரிமையாளரே உள்ளே வந்து, “மேரி வலிக்குதுன்னா விட்டிரு. அவங்களுக்கு வலி பொறுக்க முடிஞ்சளவு தகுந்த அழுத்தத்தை மட்டும் குடு. பெறகு திருப்பி வரவே மாட்டாங்க” என்றார். அப்புறம்தான் அவனை விட்டாள்.

ஒரு மனுஷி நின்று ஆர்வமாகச் சிரித்தால், கண்ணை மூடிக் கொள்கிறாயா நீ? எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள் மேரி. தேவலாயத்திற்குப் போய் கண்ணீர் உகுத்து நின்று பார்த்தாள். அங்கேயுமே எந்தச் சமாதானங்களும் கிட்டவில்லை. அதுவாக ஒருநாள் அடங்கட்டும் என அமைதி காத்தாள் ஆரோக்கிய மேரி. அவ்வப்போது அந்த யோசனைகள் வரும். மொட்டைத்தலைத் துறவியை எப்படித் தனக்காகப் பயன்படுத்துவது என்கிற தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொண்டாள். அதனால் ஓரளவிற்குச் சிக்கல் இல்லாமல் போனது வாழ்க்கை.

அப்போதெல்லாம் தங்கவேலுவின் நடை பாவனைகளில் தடுமாற்றம் தெரிந்தது. முகத்தில் அப்பட்டமான ஒரு திருட்டுக் களை வந்து ஒட்டிக் கொண்டதாகவும் ஆரோக்கிய மேரிக்குத் தோன்றியது. சின்ன வயதில் இருந்தே அந்த முகத்தைப் பார்க்கிறாளே? “மாமா ஏதாச்சும் பிரச்சினையா? எண்ட்ட இருந்து எதையாச்சும் மறைக்குறீங்களா?” என்றாள் அவனது கையைத் தொட்டு. அவளது கையைப் பிடித்துத் தன்கையில் தங்கவேலு வைத்துக் கொண்டபோது ஆச்சரியம் அடைந்தாள். “கொடுத்து வாங்குன வகையில ஏகப்பட்ட நஷ்டம் ஆயிருச்சு. அதான் எதைச் செஞ்சு இதை ஈடுகட்டணும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றான் சோர்வாக. “தைரியமா இருக்க மாமா. உங்களுக்கு நான் இருக்கேன்” என்று சொல்லி விட்டு ஆதுரமாகச் சிரித்தாள். அப்போதுகூட தங்கவேலு அவளுடைய கண்களைப் பார்க்கவில்லை. அது பெரிய விஷயமாகவும் தோன்றவில்லை அவளுக்கு அந்த நேரத்தில்.

திண்டில் அமர்ந்து தூரத்தில் பேசிக் கொண்டிருக்கும் அவனையே பார்ப்பாள். தூரத்தில் அவன் யாரிடமோ கத்திப் பேசிப் பின்னர் உடனடியாகச் சரிந்து மன்னிப்புக் கேட்கும் தோரணையில் பணிவாய்க் குழைகிற காட்சிகள் எல்லாம் தெரியும். சமாளிக்கவே முடியாத பெரிய பணமுடை போலிருக்கிறது என நினைத்துக் கொள்வாள். கையில் கழுத்தில் நிறையப் போட்டுக் கொண்டு வந்திருந்தாலும் கழற்றிக் கொடுத்து விடுவாள். கையறு நிலையில் நின்றதைப் போலத் தன்னை உணர்ந்தாள் ஆரோக்கியமேரி. அப்போது அவளது வீடு குறித்து அவளுக்குமே வெறுப்பு வந்தது. “நல்ல மாதிரியாகக் கட்டிக் கொடுக்க வக்கில்லாவிட்டால் எதற்காகப் பெற்றுக்கொள்ள வேண்டும்? ஏன் நான் இல்லையா? உடல் சுகமெல்லாம் வேண்டாம் என்று” எனவும் தோன்றியது அவளுக்கு,

தங்கவேலுவுமே மற்றபடி நல்ல மாதிரிதான். அவனும் முடியாவிட்டால் என்னதான் செய்வான்? உண்மையிலேயே அவனுக்குத் தான்         ஒரு குழந்தை மாதிரியே தோன்றியும் இருக்கலாம் என அவன் தரப்பாகவும் யோசித்தாள். வெளிப்படையாகப் பேசினால் ஆறுதலாகவும் ஏதாவது சொல்லலாம். மடியில் படுக்கப் போட்டுத் தலைகோதிவிட்டு அவன் பேசுவதைக் கேட்கலாம் என்றும் தோன்றியது ஆரோக்கியமேரிக்கு. ஒருநாள் போகிற அவசரத்தில் தன்னுடைய செல்போனை விட்டுவிட்டு, எடுத்துக் கொடுக்கலாம் என வாசலுக்கு ஓடுவதற்குள் வந்து நின்ற காரில் ஏறிச் சென்று விட்டான்.

நிலைவாசலில் நின்று அதைக் கையில் வைத்துப் பார்த்தாள். செல்போனுக்கு பூட்டுப் போடாமல் போயிருந்தான். பார்த்தாள் என்பதையே கண்டுபிடிக்க முடியாமல் அதை எப்படிக் கையாள வேண்டும் எனத் தெரியும் அவளுக்கு. கலெக்டருக்குப் படிக்கிற அளவிற்கு அறிவு நிரம்பியவள்தானே அவள்? நாலைந்து பெண்களோடு ஒரே நேரத்தில் உரையாடிக் கொண்டிருந்தான் தங்கவேலு. அத்தனையிலும் “ஐ லவ் யூ. ஐ லவ் யூ” எனக் குழைந்து வைத்திருந்தான். எவ்வளவு ஐ லவ் யூக்கள்? ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையெல்லாம் சொல்லி வைத்திருந்தான்.

அதைப் பார்க்கையில் பற்றிக் கொண்டு வந்தது ஆரோக்கிய மேரிக்கு. அதில் ஒரு ஐ லவ் யூவையாவது அவளுக்குச் சொல்லி இருக்கிறானா? இளம்பெண் எனத் தெரிந்தேதானே கல்யாணம் செய்து கொண்டான்? அவளுக்கும் மனதிருக்கும் என என்றைக்காவது யோசித்து இருக்கிறானா? ஊரில் போகிறவள், வருகிறவளுக்கெல்லாம் போதும் போதுமென விரட்டி விரட்டி அன்பைக் கொடுத்திருக்கிறான். தன்னிடம் இதுவரை அந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லவே இல்லையே? யோசித்து யோசித்துத் தலை வலிக்கிற மாதிரி இருந்தது ஆரோக்கிய மேரிக்கு. சிப்பாயை எடுத்துவந்து கையில் உருட்டிக் கொண்டே என்ன செய்யலாம் என யோசித்தாள். அப்போதெல்லாம் தடுமாற்றமான நேரங்களில் கையில் அதைப் பிடித்திருக்கையில் தைரியம் வந்தது மாதிரி இருக்கும் அவளுக்கு.

மேலும் அவனது செல்போனைத் தோண்டிய போது அவன் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கடனாக வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயமும் தெரியவந்தது. போலியான வங்கிக் கடிதங்கள் தயாரிக்கப்பட்டு அதை வைத்து ஆட்களை ஏமாற்றிக்கொண்டு இருந்தனர். அதைக்கூட தங்கவேலுவின் நண்பன் ஒருத்தனிடம் அவன் விளக்கமாகச் சொல்லிச் செய்தி அனுப்பியதில் இருந்தே புரிந்து கொண்டாள். அவளது வீட்டில் வறுமை தாண்டவம் ஆடினாலும் இதுவரைக்கும் ஒரு ரூபாயைக்கூட யாரிடமும் ஏமாற்றியது இல்லை. கீழே ஐந்துரூபாய் கிடந்தால்கூட, “அது நம்மோடது இல்லை பாப்பா. போயி கோயில் உண்டியல்ல போட்டுட்டு வந்திடு. அது என்னைக்கும் செரிக்காது” என்பாள் அம்மா.

மாமா செய்கிற காரியமெல்லாம் அம்மாவிற்குத் தெரிந்து இருக்குமா? தான் பார்த்த இரண்டில் எதை அவள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது? அதையா? இதையா? தீவிரமான குழப்பத்தில் ஆழ்ந்தாள் ஆரோக்கியமேரி. ஒன்றுமே நடவாதது போலே வீட்டுக்கு வந்த தங்கவேலு போனை வாங்கியபிறகு, “ஏதாச்சும் நோண்டுனீயா? நோண்டுனீன்னாலும் நான் கண்டுபிடிச்சிடுவேன்” என்றான். அதைச் சொல்லும்போது பதற்றம் எழுந்தது அவனது முகத்தில். வாங்கிப் பார்த்துவிட்டுச் சமாதானம் அடைந்த அவனிடம், “நீங்கதான் ஆரம்பத்திலயே சொல்லி இருக்கீங்களே மாமா. நான் எதுக்கு அதைப் பார்க்கணும்? நீங்க என்னை நம்புற மாதிரி நான் உங்களை நம்பறேன்” என்றாள்.

அந்தப் பதிலில் முழுச் சமாதானம் அடைந்து விட்டான் தங்கவேலு. ஆனாலும் நீண்ட நேரமாக யோசனையில் அதை நோண்டியபடியே அவன் இருப்பதையும் பார்த்தாள். இரண்டு விஷயங்களும் உள்ளே போட்டி போட்டு மாங்காயைத் துண்டு போடுவதைப் போல அவளது இதயத்தை நறுக்கிக் கொண்டிருந்தன. உப்புப் போட்டு அதைத் தின்கிற வேலையைத்தான் தங்கவேலு  அவளுக்குச் செய்து கொண்டிருப்பதாக நினைத்தாள். ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனுடன் சகஜமாகவே இருந்தாள்.

காலையில் அவள் வேலைக்குக் கிளம்பும் போதே, “இன்னைக்கு ரெம்ப முக்கியமானவர் ஒருத்தர் வீட்டுக்கு வர்றார். உன்னோட ட்ரீட்மெண்டுக்குதான்” என்றான். “ட்ரீட்மெண்ட்னா ஆபிசுக்கு வரச் சொல்லுங்க. எதுக்கு வீட்டுக்கு?” என இயல்பாகவே கேட்டாள். “இல்லை ரெம்ப முக்கியமானவரு. பெரிய பணக்காரரு. இப்ப மாமாவோட ஒரு முக்கியமான டீலிங்க்ல இருக்கார்” என்றான். அவளுக்கு ஏனோ அதை அவன் சொன்ன விதத்தில் பிடிக்காமல் போனது.

வேறுவழியில்லாமல்தான் விடுமுறை போட்டுவிட்டு வீட்டில் இருந்தாள். கருப்பு நிற நீளமான காரில் வந்திறங்கினார் அவர். ஆள் பார்ப்பதற்கு நல்ல மாதிரியாகத்தான் இருந்தார். ஐம்பது வயதிற்குப் பக்கத்தில் இருக்கலாம் எனக் கணித்தாள். தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்த போது பாந்தமாக, “வணக்கம்மா. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன். வலது முட்டியில பயங்கர வலி. அப்பத்தான் உங்க வைத்தியம் பத்தி உங்க வீட்டுக்காரர் சொன்னார். வீட்டையும் வந்து பார்த்த மாதிரி ஆகிக்கிடட்டும்ணு வந்துட்டேன். உங்களுக்குப் பிரச்சினைன்னா வேணாம்” என்றார் கண்களைக் கூர்மையாகப் பார்த்து.

“சே அதில என்னங்க. வாங்க. மருத்துவம்தானே பண்ணப் போறேன்?” என்றாள் ஆரோக்கியமேரி. பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த போது, “அது எதுக்கு? சும்மா கையிலயே பாயிண்ட பாத்து எனக்கு அன்னைக்கு பண்ணிவிட்டமாதிரி பண்ணி விடு. சொகமா இருந்துச்சு” என்றான் தங்கவேலு. “அவங்க என்ன பண்ணனும்னு அவங்க முடிவெடுத்துக்கிடட்டும் தங்கவேலு. நீ எதுக்கு எல்லாத்தையும் முடிவு பண்ற. நீ இருந்தா எனக்கு ஒருமாதிரியா இருக்கு” என்றார் அவர். அதற்குத்தான் காத்திருந்தான் என்பதைப் போல வீட்டிலிருந்து வெளியேறினான் தங்கவேலு.

“உங்களோட பேரென்ன?” என்று கேட்டதற்கு “பரமேஸ்வரன். உங்க வீட்டுக்காரர் சொல்லலீயா?” என்றார். அந்தப் பெயரைக் கேட்டதுமே தங்கவேலுவுக்கும் அவருக்கும் நடக்கும் பணப் பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட விஷயம் அவளுக்கு நியாபகம் வந்தது. அதை அழுத்தமாக ஊன்றிப் படித்து இருந்தாள் அப்போது. புகைப்படத்தில் இருந்த அவரது முகம்கூட நன்றாக நினைவில் மீண்டது. “என்ன ட்ரீட்மெண்ட்? என்ன பண்ணப் போறீங்க?” என்றார். “அதெல்லாம் பயப்படாதீங்க சார்” எனச் சொல்லிவிட்டு அவரைப் பார்த்துச் சிரித்தாள். “உங்களுக்கு நல்ல சிரிப்பும்மா. யார்க்குமே அமைஞ்சு வராதது” என்றார் அவர்.

அவள் சிப்பாயை எடுத்து அவரது உள்ளங்காலுக்குள் கொடுத்து மெதுவாக நீவிவிடத் துவங்கினாள். அவர் இடுப்பைத் தூக்கிக் காலையாட்டி, ஒருக்களித்துப் படுத்து கூச்சத்தில் நிலைதடுமாறிக் கொண்டு இருந்தார். உள்ளங்கால் ஏந்தும் அதிகப்படியான கூச்சங்கள்கூட வலியைத் தற்காலிகமாக மறக்கச் செய்துவிடும். அவர் உற்சாகமாக உணர்ந்து எழுந்தமர்ந்து. “மருத்துவம்னா அதுக்குரிய காசைக் கொடுக்கணும். அதுதான் தர்மம்” என்றார். “நான் வேணும்ங்கறப்ப கேட்கறேன் சார். எனக்குமே ஒரு உதவி இருக்கு. உங்க போன் நம்பர் தாங்க” என்றாள்.

அவர் போனபிறகு தங்கவேலுவுக்கு அவளது கண்ணைப் பார்க்கவே தயக்கமாக இருந்தது. என்ன செய்ய நினைத்துவிட்டான்? அவனுக்கே நெஞ்சுக்குள் சங்கடம் வந்தது. சிகரெட் பிடிக்கையில் அதிகமும் இருமினான். ஆரோக்கியமேரி அவனருகில் நின்று, “அதெல்லாம் சந்தோஷமாதான் போனார்” என்றாள் ஒருவார்த்தையில். என்ன சந்தோஷம்? எனக் கேட்க அச்சமாக இருந்தது தங்கவேலுக்கு. இரவு முழுவதும் ஆரோக்கியமேரிக்குத்தான் மனம் ஆற்றாமல் அடித்து அழுதபடியே இருந்தது. உட்கார்ந்து சாப்பிட வந்துவிட்டால், என்ன வேண்டுமானாலும் செய்வானா அவன்?

நான்கைந்து நாள் கழித்துப் பரமேஸ்வரனுக்கு “வணக்கம் சார். எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?” என்று செய்தி அனுப்பினாள். அவர் உடனடியாகவே, “சொல்லும்மா என்ன உதவி?” என்றார். “நான் பேசறது எங்க வீட்டுக்காரருக்குத் தெரியக்கூடாது. ப்ளீஸ் சொல்லிடாதீங்க. கொன்னே போட்டுருவாரு” என்று பதில் அனுப்பினாள். “நான் என்ன சின்னப் பையனா? இதையெல்லாம் போய் சொல்றதுக்கு?” என்றார். “நாளைக்கு சொல்றேன்” எனப் பதில் அனுப்பிவிட்டு அமைதியாக இருந்து விட்டாள்.

மறுநாள் என்ன விஷயம் என அவரே தொடர்பு கொண்டார். பத்தாம் வகுப்புப் படிப்புக்கு எங்கேயாவது அரசு வேலை கிடைக்குமா எனக் கேட்பதற்காக அழைத்தேன் என்று சொன்னாள். அவரும் அது சம்பந்தமான நிறைய விஷயங்களைச் சொன்னார். பின்னர் அடிக்கடி அவரோடு பேசத் துவங்கினாள். வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் நின்று நிதானமாகப் பேசிவிட்டே வீட்டிற்கு வருவாள்.

அவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரோ எனச் சந்தேகத்தில் தங்கவேலுவின் முகத்தைப் பார்ப்பாள். அவர் ஒன்றும் சொல்லவில்லை என்பது போலத்தான் தோன்றியது. அவளுடைய போனுக்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்த கட்டமும் வந்தது. ”உன் சிரிப்பு என்னம்மோ செய்யுது மனுஷங்களை” என்றார். மேலும் வசீகரம்கூடிச் சிரித்துக் காட்டினாள் அவரிடம்.

அப்போது அவரிடம், “உங்கட்ட ஒண்ணு சொல்லணும். என்னால மறைக்க முடியலை. ஆனா உயிர்போனாலும் இதை யார்கிட்டயும் நீங்க சொல்லிடக்கூடாது” என்றாள். “உன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு மேல சத்தியமா சொல்றேன். சொல்ல மாட்டேன்” என்றார் நெக்குருகி.

“எங்க வீட்டுக்காரர் உங்களை ஏமாத்திக்கிட்டு இருக்கார். இதுமாதிரி நிறையப் பேரை ஏமாத்திட்டார். பேங்க்ல அப்படி எல்லாம் கடன் தரலை. அந்த லெட்டர்லாம் டூப்ளிகேட்” என்றாள்.

அவர் உடனடியாகத் தொலைபேசியைத் துண்டித்து விட்டார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவள், தங்கவேலு ஜெயிலுக்குக்கூட போய்விடலாம். திரும்பவும் பிறந்த வீட்டிற்கே அவள் போகவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். ஆனாலும் என யோசித்துக் கொண்டிருந்த போது மறுபடி அழைத்தார் பரமேஸ்வரன்.

“இப்ப ஒரு பெரிய பேமெண்ட் ட்ரான்ஸ்பர் ஆகறதா இருந்துச்சு. அதை உடனடியா நிறுத்தறதுக்காகத்தான் கட் பண்ணிட்டுப் போனேன். நீ கோவிச்சுக்காதம்மா. உன் வீட்டுக்காரர் விட்டுட்டாலும் உனக்கு ஹெல்ப் பண்றேன். அவன் நிச்சயம் மாமியார் வீட்டுக்குத்தான் போவான். என்னை மாதிரி யாரும் ஏமாறக்கூடாது” எனப் பேசிக் கொண்டே இருந்தார்.

“இருங்க. இருங்க. அதை விடுங்க. அன்னைக்கு ஒருநாள் உங்கட்ட வேணும்ங்கறப்ப கேட்பேன்னு சொன்னேனே?” என்றாள் குரலில் குழைவைக் காட்டி.

“ஆமாம் நல்லா ஞாபகம் இருக்கு. கொள்ளை பணத்தை காப்பாத்திக் குடுத்துட்ட. உனக்கு தனியா பங்கே தரலாம்” என்றார்.

“பணத்தை விடுங்க. வேற ஒண்ணு” என்றாள்.

“என்னன்னு சொல்லு. என்னன்னு சொல்லு” என ஆர்வமானார்.

“ஒரு ஐ லவ் யூ சொல்லுங்க” என்றாள் ஆரோக்கியமேரி.

சிப்பாயின் வழுவழுப்பான முனை நுனியைத் தடவியபடி இருந்தாள் அப்போது.