சந்தைக்கு ஒரு வழக்கமுண்டு. யார் அதிகமாக அதைத் துய்க்கிறார்களோ அவர்களுக்கானதாக அதை மாற்றி அவர்களுடைய எதார்த்தத்தை அதற்கேற்ப மாற்றிவிடுவது. நம் சமூகத்தில் பெரும்பாலான பண்டங்கள் இரு பாலினங்களும் பயன்படுத்தக் கூடியவையே. மது கூட ஆண்கள் அதிகமாகத் துய்க்கக் கூடியதாகி, இன்று பெண்களும் சமமாகப் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. பைக், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கும் இதைச் சொல்லலாம். பாலினத்தைப் போன்றே சாதிக்கும், தேர்தல் அரசியலுக்கும், ஊடகத்துக்கும் மற்றும் இலக்கியத்துக்கும் இதைச் சொல்லலாம்.

குடும்பத்துக்குள் குழந்தைகளை ஒரு பண்டமாக எடுத்துக்கொண்டால் அதை விரும்பியோ விரும்பாமலோ கட்டுப்படுத்துகிறவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள். நீண்ட காலமாக நமது மரபும், அதைத் தொடர்ந்து நம் குடும்பநலச் சட்டமும், தற்போதைய குடும்ப அமைப்பும் மறைமுகமாக இதையே வலியுறுத்துகிறது. அண்மைக் காலத்தில் குழந்தை வளர்ப்பு எனும் உழைப்பில் ஆண்களுக்கும் முக்கியமான பங்கு இருந்தும், ஆண் உழைப்பை சமூக உற்பத்திக்காக ஒரு புள்ளியில் குவிக்கும் நோக்கில் குழந்தைக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு முழுக்க பெண் மீதே சுமத்தப்படுகிறது. பெண் வெளியே சென்று வேலை பார்க்கையில் இது ஒரு முரணையும், அதனாலான பூசலையும் ஏற்படுத்துகிறது. இது கசப்புக்கு, குற்றவுணர்வுக்கு, நோய்மைக்கு, மணமுறிவுக்கு ஒரு காரணமாவதுண்டு. மனக்கசப்பும் அதனாலான பிரிவும் ஏற்பட பாதுகாப்பற்றுப் போகும் பெண், குழந்தை எனும் பண்டத்தின் மீதான தன் முதலீட்டு உரிமையைக் கையகப்படுத்த முனைகிறாள். ஆணின் உபரி மதிப்பை மறுக்கிறாள். குடும்ப நல நீதிமன்றமும் பெண்களையே பிரதான “நுகர்வோராகக்” கருதுவதால் இதை அங்கீகரிக்கிறது. இவ்வாறு குழந்தைகள் ஒருவித ‘ஒருவழிப் பண்டமாக’ உள்ளனர். இன்னொரு பக்கம், குற்றநீதிமன்றங்களுக்கு ஆண்களே முக்கிய “நுகர்வோர்”. உலகம் முழுக்க ஆண் மாணவர்களின் தேர்வு எண்ணிக்கை வீழ்ந்து வருவதால், கல்வி நிலையங்கள் பெண் மட்டுமே தமது பிரதான “நுகர்வோராக” ஆகிவிடலாகாது எனும் பதற்றத்தில் உள்ளன. ஆடை உற்பத்தியை எடுத்துக்கொண்டாலும் அங்கு பெண்களே முக்கிய நுகர்வோர் என்பதால் ஆண்களுக்கான தரமான அழகான ஆடைகள் மிக மிகக் குறைவே.

நம் வீடுகளின் கட்டமைப்பு நீண்ட காலமாக ஆண்கள் வந்தமரும் திண்ணை, பெரிய ஹால் என இருந்து வந்தது. சமையலறை வீட்டின் உட்பக்கமாக இடுங்கியதாக அழுக்கானதாக இருக்கும். புகையைக் கக்கும் விறகடுப்புகள் வேறு. அடுத்து திண்ணையில் யார் அமர்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு சமூகத்தில் / சந்தையில் பெண்களுக்கான இடத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். எங்கள் ஊரான பத்மநாபபுரத்தை எடுத்துக்கொண்டால் முன்பு மாலை வேளைகளில் பெண்களும் (அரட்டை, புறம் பேசுதல்), காலையில் ஆண்களும் (செய்தித்தாள், தேநீர்) அதிகமாகத் திண்ணையைப் பயன்படுத்துவார்கள். முற்பகலில் பெண்கள் அதே திண்ணையை எதையாவது புடைக்கப் பயன்படுத்துவார்கள். இப்போது நிலைமை மாறியிருக்கும். இன்று பெருநகர வீடுகளில் ஹாலுக்கும் உணவருந்தும் அறைக்கும் நடுவிலான ஐலாண்ட் கிச்சன், பெரிய நவீன சமையலறைகள் என சமையலை ஒரு நல்ல அனுபவமாக மாற்றியிருக்கிறார்கள். கழிப்பறையைப் பயன்படுத்தும் வழக்கத்துக்கு மனதளவில் பழகாததாலோ ஏனோ இன்றும் மத்திய வர்க்க வீடுகளில் கழிப்பறையை எலிப்பொறி மாதிரிதான் அமைக்கிறார்கள். வீட்டின் அமைப்பில் – வர்க்கத்தைப் பொறுத்து – ஆண்களிடம் இருந்து பெண்களை நோக்கி நுகர்வைப் பொறுத்து மாற்றம் நடந்துள்ளது, சந்தை யாரை முக்கிய நுகர்வோராகக் கருதத் தொடங்கியுள்ளது என்பதற்கு உதாரணம்.

மாற்றுத்திறனாளிகளை எந்த விதத்திலும் நுகர்வோராக ஏற்றுக்கொள்ளாத மனநிலையை இங்குள்ள கணிசமான கட்டிட அமைப்புகளையும் பெரிய படிகளையும் குன்றுகளின் மேலுள்ள கோயில் கட்டமைப்புகளையும் வைத்துப் புரிந்துகொள்ளலாம். நமது பக்தி யுக வரலாற்றில் ஆண்களுக்குச் சமமாக அல்லவெனினும் ஓரளவுக்குப் பெண்களும், தலித்துகளும் கூடத் துறவிகளாக இருந்துள்ளார்கள். ஆனால் ஒரு மாற்றுத்திறனாளி கூட இருந்ததில்லை. வழிபாட்டிடங்களுக்கே போக முடியாதவர்கள் எப்படித் துறவிகளாக முடியும்? இந்து மதக்கோயில்களின் வாடிக்கையாளர்களாக மாற்றுடலாளர்கள் இல்லை. இக்கோயில்களுக்கு என்று சொத்துகளும், நிறைய உண்டியல் பணமும் வரும் வரை, ஒரு கைப்பற்றப்பட்ட வாடிக்கையாளர் சமூகம் அவர்களுக்கு உள்ளவரை இதில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. நான் மசூதிக்குள் போனதில்லை என்பதால் தெரியவில்லை. ஆனால், தேவாலயங்கள் மாற்றுடலாளர்களுக்கு இடமளிப்பவை. அங்கு நீங்கள் செருப்பணிந்து செல்லலாம். அங்குப் பெரும்பாலும் ‘இறைவன்’ எனும் பண்டம் பக்தர்களான நுகர்வோருக்கு சமதளத்தில் உள்ளது. பண்டத்தைச் சுற்றி சுற்றி நடக்கவோ, திரளுக்கு நடுவே நசுங்கிப் பிதுங்கி தீபாரதனையைத் தரிசிக்கத் தேவையில்லை. மிக நீண்ட வரிசைகளில் நின்றும் அமர்ந்தும், கிரிவலம் செய்து, மலையேறிச் சென்று தெய்வ தரிசனம் பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கு கூடாது, சுயமதத்தவராக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் இல்லை. ஒப்பிடுகையில் கிறித்தவத்தில் இறைவன் எனும் பண்டம் நுகர்வோரிடம் நேரடியாக வருகிறது. இந்த நவீனத்தன்மையை நாம் சமத்துவம் எனப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. மாறாக, நவீன சந்தையின் தாராளவாதத்தை ஆரம்பம் முதற்கொண்டே பின்பற்றிய மதம் என கிறித்துவத்தைக் கூறலாம். இதை நவீன சந்தையின் தன்மைகளற்ற மாற்று மதத்தவர்கள் மதமாற்ற முயற்சி எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். நவீன சந்தை மதங்களில் சொர்க்கம் (பண்டத்தின் நேரடி நுகர்வனுபவம்), பாவ மன்னிப்பு (கடன் அட்டைக் கழிவு) போன்ற வெகுமதிகளும் உண்டு. இந்து மதத்தைப் போன்ற முன்-சந்தை மதங்களோ நுகர்வை இருத்தலியல்பு இயல் (ontology) சார்ந்து உருவாக்கியது. இதன் மூலம் துறவு, அன்றாட வாழ்க்கை, புலனின்ப மறுப்பு எனத் தொய்வடையத் தொடங்கியிருந்த பௌத்தத்திற்கு ஒரு மாற்றாக பக்தி இயக்கம் வழியாக பிராமணியம் தன்னை முன்வைத்தது. இந்து மதம் ஒரு நடைமுறை உலகம், இன்பத் துய்ப்புசார் மதமாகத் தன்னை மாற்றிக்கொண்டது. இதன் வழியாக நாட்டார் தெய்வங்களையும், நாட்டார் விழாக்களையும், நால்வர்ணங்களுக்குள் வர முடியாத தலித்துகளையும் பெயர் மற்றும் தோற்றக்கதைகளை மாற்றி விழுங்கிக்கொண்டது. அதாவது எளிமையாகச் சொன்னால் வாழ்தலையும் இறை நுகர்வையும் இந்துமதம் ஒரு புள்ளியில் இணைத்தது. இது ‘சந்தைக்கான’ தேவையை இல்லாமல் பண்ணியது. சந்தை மதங்களோ இரண்டையும் தனித்தனியாக வைத்துத் தம்மைப் பரப்பிக் கொண்டன. இன்று இம்மதங்களுக்கு இடையிலான மோதல் ஒரு பொருளாதார மோதலாக, புவிசார் யுத்தமாக மாறியுள்ளது. ஆனால், மதத்தின் தளத்தில் வைத்துப் பார்த்தாலும் இது முன்-சந்தை × சந்தை மதங்களுக்கு இடையிலான எதிர்வில் இருந்து தோன்றுவதே. இன்னொரு கோணத்தில், நுகர்வின் அடிப்படையிலான நவீன சந்தையையே நாம் கிறித்தவம் போன்ற சந்தை மதங்களின் நீட்சியாகப் பார்க்க முடியும்.

டிஸ்கோத்தே, இரவு விடுதிகளை எடுத்துக்கொண்டால் பெண்களைப் பண்டமாகவும் வாடிக்கையாளராகவும் ஒரே சமயத்தில் அங்குப் பயன்படுத்துகிறார்கள். இவ்விசயத்தில் இரவு விடுதியைக் கோயிலுடனும், உடற்பயிற்சி நிலையத்துடனும் ஒப்பிட இயலும். இம்மூன்றிலும் நுகர்வு (கேளிக்கையாளர், பக்தர், உடற்பயிற்சியாளர்), உழைப்பு (கேளிக்கை ஈடுபாடு, பக்தி, உடற்பயிற்சி), சந்தைப்படுத்துதல் (செக்ஸுக்கான சமூகமாக்கல் சடங்கு, பொதுவெளியில் இறைவழிபாடு, மற்றும் உடலைக் காட்டி பயிற்சி செய்தல்) மற்றும் விலை செலுத்துதல் (கட்டணம், காணிக்கை / வரி மற்றும் கட்டணம்) ஆகியவற்றைச் செய்பவர் ஒரே நபரேதான். அதாவது மக்கள் தாமாகவே ஒன்றைத் தம் உழைப்பால் உண்டு பண்ணி, அதைச் சந்தைப்படுத்தி, நுகர்ந்து, விலையும் கொடுத்து அதன் உபரியை / லாபத்தை அந்த அமைப்புக்குக் கொடுக்கிறார்கள். இந்த மூன்று அமைப்புகளிலும் முக்கியப் பயனர்கள் + நுகர்வோர் / கவர்ச்சிப் பண்டங்களாகப் பெண்களே நீண்ட காலமாக இருந்து வருகிறார்கள். ஆனால், விசித்திரமாக இந்த அமைப்பு வெளிகளே அவர்களுக்கு அதிகாரத்தை அளிப்பதாக ஒரு மயக்கமும் நமக்கு ஏற்படுகிறது. இதுவே சந்தை அவர்களுக்கு அளிக்கும் ஒரு ‘மாயக்’ கூலி எனலாம். கூடுதலாக, இதிலிருந்து ஒருவித உடல்சார் அதிகாரமும் உற்பத்தியாகிறது. இதைப் பயன்படுத்தித் தேர்தல் அரசியலில் மக்கள் தம்மை ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தும் ஒரு கண்காணிப்பு உடலரசியலை உற்பத்தி செய்து அளிக்கிறார்கள். அதாவது உடல் சார்ந்து மக்கள் தம்மைப் பயனர்களாகவும் நுகர்வோராகவும் ஒரே சமயம் இருக்கும்போது, அவர்களை மதிப்பிட்டு நெறிப்படுத்துவது ‘மக்களாட்சிக்குச்’ சுலபமாகிறது.

இம்மூன்றிலும் பெண்களின் (நுகர்வு + பண்டமாக்கல் + சந்தைப்படுத்தல்) பங்களிப்பை ஏற்க விரும்பாத இஸ்லாத்திற்கு கடும் எதிர்ப்பு (புர்க்கா, முகத்திரை) நவீன சமூகத்தில் நிலவுவதை இவ்வாறு சுலபத்தில் புரிந்துகொள்ளலாம். ‘பிற்போக்கு’ என்பது அடிப்படையில் ‘உடல்சார் சந்தை நுகர்வு எதிர்ப்பு மனநிலை’தான். இதை இந்து மதம் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு தகவமைத்ததற்கு இணையாக இஸ்லாம் செய்யவில்லை. இந்து மதத்தில் 19ஆம் நூற்றாண்டு துவங்கியே இந்து சீர்திருத்த இயக்கங்கள் ராஜாராம் மோகன்ராய், வினோபா பாவே, மகாத்மா காந்தி, விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்ற வெளிநாடு போய்க் கற்றுவந்த பாரிஸ்டர்கள், அவர்களைப் பின்பற்றியவர்கள் மற்றும் நவீனத்துவ ஆதரவாளர்களான மரபாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. இவர்களுடைய நோக்கம் நவீன சந்தைக்கு ஏற்ப இந்து சமூகத்தைத் தகவமைப்பதே. நவீன சந்தையில் பெண்களின், பெண்ணுடலின் இடத்தை வெகுசீக்கிரமாக இவர்கள் வழியாக இந்து சமூகம் புரிந்துகொண்டது.

தமிழ் இந்து சமூகத்தில் இருந்து ஒரு சிறு உதாரணம் தருகிறேன்: பெண்கள் பூப்பெய்தியதும் அவர்களை சில நாட்கள் வீட்டுக்குள் அமர்த்துவது, அதை அறிவித்து விழா எடுப்பது ஒரு முக்கிய வழக்கம். ஆனால், கடந்த சில பத்தாண்டுகளிலே இது நகரங்களிலிருந்து துடைத்தெறியப்பட்டது. கிராமங்களிலும் நிலவுடைமையாளர்களால் மட்டுமே ஓரளவு பின்பற்றப்படுகிறது. இன்று 8-9 வயதுக் குழந்தைகள் பள்ளியில் வைத்துப் பூப்பெய்துவதும், காதும் காதும் வைத்தாற்போல அவர்களுக்கு சுகாதாரப் பழக்கங்கள் சொல்லித் தரப்பட்டு சுகாதாரப் பட்டை அணிவிக்கப்பட்டு உடனடியாகவே பள்ளிக்கு அனுப்பப்படுவது வழக்கமாகியுள்ளது. அதேபோல பெண் குழந்தைகளுக்கான நவீன அன்றாட இயல்பாடைகள் (casual wear) இன்று உடலை இறுக்கமாகப் பிடிக்கும், கவர்ச்சியாகக் காட்டும் விதம் மாறியுள்ளன. இருபதாண்டுகளுக்கு முன்வரை பிராக், சட்டைப்பாவாடை என இருந்த பெண்குழந்தை ஆடைகள் இன்று வெகுவாக மாறிவிட்டன. மாவுச்சத்து அதிகமான துரித உணவுகளால் குழந்தைகள் சராசரியாக 6 ஆண்டுகளுக்கு முன் பூப்பெய்திட, அவர்கள் குழந்தைக்கும் பெண்ணுக்கும் இடையிலான நிலையை அடைகிறார்கள். உடனே ஆடைச் சந்தை அவர்களையும் உழைப்பவர்-சந்தைப்படுத்துபவர்-நுகர்வோர் எனும் முப்பரிமாணச் சந்தைச் செயல்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது. இதுவே சில இஸ்லாமிய குடும்பங்களிலோ இக்குழந்தைகளுக்குத் தலைக்கவசமோ புர்காவோ அணிவித்து எதிர்த்திசையில் செல்கின்றன. (ஏனெனில் ‘சீர்திருத்தவாதம்’ எனும் சந்தைக்குப் பழக்கப்படுத்துதல் இஸ்லாத்தில் பெருமளவில் நிகழவில்லை.) அதே நேரம் அவர்களில் மேற்தட்டினரோ இந்துக்களைப் போல முப்பரிமாணச் சந்தைச் செயல்பாட்டுக்கு முன்வருகிறார்கள்.  நாம் இதை முற்போக்கு × பிற்போக்கு / பெண்ணியம் × ஆணாதிக்கம் எனத் தட்டையாகப் புரிந்துகொள்கிறோம்.

அடுத்து மக்களாட்சிக்கு வருவோம். பக்குனின் தனது ‘தெய்வமும் தேசமும்’ எனும் நூலில் முதலீட்டியத்திற்குச் சந்தையை உருவாக்கி நிர்வகிக்க வழிவகை செய்தளிக்கும் ஓர் ஏற்பாடு மட்டுமே மக்களாட்சி என்கிறார். நவீன சமூகத்தில் மக்களாட்சி மதத்தின் இடத்தையும், இறையாண்மை இறைவனின் இடத்தையும் எடுத்துக்கொள்கிறது. மத விழுமியங்களின் இடத்தை சமத்துவம், முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்கள் எடுத்துக்கொள்கின்றன. அதுவரை பக்தி மரபின் முதலீட்டாளர்கள், நிர்வாகிகள், பரப்புரையாளர்களாக இருந்த சமூகத்தினர் இப்போது ஜனநாயகத்தைத் தெய்வமாக வழிபட்டு அதற்கான திருப்புகழ், திருவாசகம் எல்லாம் எழுதுகிறார்கள்.

அதே நேரத்தில், மக்களாட்சி என்பதே ஒரு மாற்று முதலீட்டியச் செயல்பாடுதான். அதாவது, வணிக நடவடிக்கைகளுக்கு மாற்றான ஒரு பொருளாதார இயக்கமாக அது உள்ளது. இதில் வாக்காளர்கள் பண்டத்தை உற்பத்தி செய்கிறவர்களாக (வாக்களிப்பு, அதிகாரக் கைமாற்றம்), சந்தைப்படுத்துபவர்களாக (வாக்குச்சாவடிக்குப் படையெடுத்துச் சென்று வரிசையில் நிற்பது), இறுதியில் அதிலேயே மறைமுகமாக நுகர்வோராக (மக்களின் ஆட்சி எனும் தோரணை, வாக்குக்குப் பணம்) உள்ளனர். இவ்வாக்காளர்கள் அடுத்து பழையபடி குடிமக்கள் ஆனதும் அவர்கள் பண்ட உற்பத்தியாளர்கள் எனும் தகுதியை இழக்கிறார்கள். அத்தகுதி நாடாளுமன்றத்திற்குச் சென்றுவிடுகிறது. அங்கு வாக்கு எனும் அரூப உழைப்பானது சட்டம் இயற்றுதல், சந்தைக்குத் தோதான பொருளாதார முடிவுகளை எடுத்தல், ஒப்பந்தப் பணிகளையும் அரசுடைமை நிறுவனங்களையும் தமக்குத் தேவையான முதலாளிகளுக்குத் தாரை வார்த்தல், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இடுதல் எனப் பொருண்மையான உழைப்பாகிறது. வாக்களிப்பு எனும் ஒப்பீட்டளவில் தற்காலிகமான அதிகாரம் சட்டமியற்றல், நிர்வாகம் எனும் ஒப்பீட்டளவில் நிரந்தரமான அதிகாரம் ஆகிறது. இதில் பண்டத்தை உற்பத்தி செய்தல், உபரி மதிப்பில் ஒரு கணிசமான பகுதியைத் தனக்கான கூலியாக (ஊழல்) எடுத்துக் கொள்ளுதல் ஆகிய இரண்டையும் ஆட்சியாளர்களும், நுகர்வையும் உபரியையும் முதலீட்டாளர்களும் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் இரண்டு விசயங்கள் நடக்கின்றன: 1) குடிமக்கள் தாம் வாக்காளர்களாக இருந்தபோது இருந்த அதிகாரம் இப்போது இல்லை என அந்நியப்பட்டு உணர்கிறார்கள். 2) நவதாராளவாத ஆதரவாளர்கள் ஊழலைச் சமூக வளர்ச்சிக்கான இடையூறாகப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பிரதான புகார் உபரி மதிப்பிலிருந்து அதிகமான பணத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக்கொள்வதால் முதலீட்டுக்கு / சந்தைக்கு (இரண்டுமே ஒன்றுதான்) அப்பணம் செல்வதில்லை என்பதே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பான கணக்குப்படி நாடாளுமன்றத் தேர்தலில் 60,000 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் 100 கோடி ரூபாய். இது ஒரு முக்கியமான இடையூறைச் சந்தையில் ஏற்படுத்தி சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து பணப்பரிமாற்றம் நடக்க உதவுகிறது. அதே போல இன்று மாநில அரசுகளுக்கு இணையாகவே ஒன்றிய அரசும் மானியத்தொகை, உதவித்தொகைகளை வழங்குகிறது. இலவச மனைத்திட்டத்தை நிறைவேற்றுவதுடன் அனைவருக்கும் வங்கிக்கணக்குத் திட்டத்தையும் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. (இந்தக் கணக்குகளில் ஒரு பகுதியை வட இந்திய மோசடிக்காரர்கள் பணப்பரிமாற்றத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.) இந்த இரண்டையும் தீவிர நவ-தாராளவாத சந்தை ஆதரவாளர்களான (வலதுசாரிகள்) மேற்தட்டு, மத்திய மேல்தட்டினர் இலவசம், பணம் விரயம் எனும் பெயரில் கடுமையாக எதிர்ப்பதைப் பார்க்க முடியும். அதற்குக் காரணம் மேற்சொன்னதேதான். முதலாளிகளின் ஜேப்பிற்கு போக வேண்டிய பணம் சமூகத்தின் அடித்தட்டுக்குப் பாய்வதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இவர்களில் மிதவாதிகளோ, (மையவாதிகள்) இல்லை, இப்பணம் சமூகத்திற்குப் போனால் நுகர்வு அதிகமாகிப் பொருளாதாரம் வளரும்’ எனத் தீவிர தாராளவாதிகளைச் சமாதானப்படுத்துகிறார்கள். ஆனால், தற்காலிகமாகவேனும் இப்பணம் சமூக அடித்தட்டுக்குப் பாய்ந்து தம்மிடம் இருந்து மறைவதன் பதற்றம் அவர்களை பாஜக போன்ற தீவிர நவ-தாராளவாதிகளை ஆட்சிக்குக் கொண்டு வரச் செய்கிறது. (ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அவர்களும் தேர்தலை நெருங்கும்போது மித-தாராளவாத நடவடிக்கைகளை எடுத்து வாக்காளர்களைப் பண்ட உற்பத்தியாளர்களாகவும் நுகர்வோராகவும் இருக்க அனுமதிக்கிறார்கள்.)  இந்த மாற்று-முதலீட்டிய இயக்கத்தின் துவக்கப் பகுதி என காந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால் அதில் பெண்கள் கணிசமான அளவுக்குக் கலந்துகொண்டார்கள். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது கைதான 30,000 பேர்களில் 17,000 பேர்கள் பெண்களே. ஆனால், காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்த பிறகு பாலின அடிப்படையிலான தனித்தொகுதிகளை வழங்கும் கோரிக்கையை நிராகரித்தது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கான ஒதுக்கீடு பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் அது முறியடிக்கப்படுவதை நாம் ஒரு சுவாரஸ்யமான சந்தை  × நாடாளுமன்றப் போராட்டமாக வாசிக்க முடியும்.

சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவில் முதலீட்டியம் நீண்ட காலமாகவே பெண்களை ஆண்களுக்குச் சமமான உற்பத்தியாளர்களாகவும் நுகர்வோராகவும் உருமாற்ற கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. தேர்தல் அரசியலில் ஒதுக்கீடு வழங்க மறுத்தாலும் காங்கிரஸ் துவக்கத்தில் இருந்தே பல்வேறு பெண் முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டுவந்தது. விவசாயத்தை ஊக்கப்படுத்தாமல் தொழில்மயமாக்கலுக்குச் சாதகமான சூழலை மட்டும் ஏற்படுத்தி மக்களைப் பெருமளவில் நகரங்களை நோக்கிப் படையெடுக்க வைத்து விவசாய நிலம்சார்பு சமூக அமைப்பை உடைத்தது. இது இயல்பிலேயே பெண்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. ஒரு பக்கம் பெண்களுக்கான சொத்துரிமை வழங்கப்பட்டதுடன், நகரங்களில் ஆண்கள் தமக்கான சமூக அந்தஸ்தை வழங்கும் நிலத்தை, பண்பாட்டுக் குறியீடுகளை, சமூகமாக்கல் வாய்ப்பை இழந்தனர். நகரத்துச் சிறிய வீடுகளில் கூட்டுக் குடும்பங்கள் சாத்தியமற்றதாகி தனிக்குடும்பங்கள் தோன்றின. அடுத்து, நகரத்தில் பிழைக்க பெண் கல்வி அவசியம் என்பதால் அதில் கணிசமான கவனத்தை சமூகமும் அரசும் குடும்பமும் செலுத்தியது. இது எந்தளவுக்குச் சென்றுள்ளது என்றால் இன்று உலகம் முழுக்க ஆண் பிள்ளைகளின் தேர்வு விகிதம் குறைந்து போய், குறைவான ஊதியம் பெறும், கடும் உடலுழைப்பைக் கோரும் வேலைகளில் ஆண்கள் அதிக அளவில் ஈடுபடும் நிலை தோன்றி வருகிறது. கூடுதலாக, காங்கிரஸ் அரசு விவாகரத்தைப் பெண்களுக்கு லாபமானதாக மாற்றும்விதம் குடும்பநலச் சட்டங்களைக் கொண்டு வந்தது. நகரமயமாக்கலின்போது சிறுநிலங்கள் விற்கப்பட்டு பெருமுதலாளிகளின் கையில் அது சென்றதென்றால், பணமாக உள்ள அசையும் சொத்தை மேலும் உடைக்க (ஜீவனாம்சம், சமரசத் தொகை, தனிநபர் நுகர்வு அதிகரிப்பு) விவாகரத்துகள் உதவுகின்றன. உலகம் முழுக்க முதலீட்டிய சமூகங்களில் உள்ள நடைமுறை இதுவே. இவை அனைத்தும் பெண்களின் சமூகப் பொருளாதார அதிகாரத்தை வலுப்படுத்தியது. இதன் நீட்சியான ஒரு விளைவாகவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் கிட்டத்தட்ட ஆண்களுக்கு நிகராக முதன்முறையாகப் பெருமளவில் பங்கேற்றனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாக்காளர் இடைவெளி 1.8% மாறியது. சந்தையின் தேவைக்கேற்ப அரசு பெண் பாலின பங்களிப்புக்கான தீவிர முயற்சிகளை எடுத்ததன் விளைவாக பெண் வாக்காளர்களின் வாக்களிப்பு சதவீதம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள போதும் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் அரசுக்குப் பெரும் தயக்கம் உள்ளது. ஏனெனில் முதலில் முதலீட்டியம் உடைக்கக் கேட்டது சமூகத்தின் அசையா, அசையும் சொத்துகளை. இப்போது அது கேட்பது மக்களவை உழைப்பின் வழி அரசியல்வாதிகள் சேர்க்கும் கணிசமான உபரி மதிப்பை. அரபியும் ஒட்டகமும் கதையைப் போல ஆகிவிட்டது இந்திய மக்களாட்சியின் பாலின சமத்துவ முயற்சி!

மேற்கில் இலக்கியத்தில் நீண்ட காலமாகவே ஆண்-பெண் பிரிவினை உண்டு – 16-17ஆம் நூற்றாண்டுகள் வரை இங்கிலாந்தில் பிரசித்தமான வடிவமாக கவிதையும் நாடகமும் இருந்து வந்தன. நகரமயமாக்கல், எந்திரமயமாக்கலின் துவக்கம், அச்சு எந்திரத்தின் வருகை, நாளிதழ்களில் தொடர்கதைகள் என ஒரு மாற்றம் நிகழ்ந்ததும் 18-19ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் (அதை ஒட்டி இன்னொரு பக்கம் அமெரிக்காவிலும்) நாவல் வடிவம் அறிமுகமாகி வளர்ந்த போது அதன் பிரதான நுகர்வோராக ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் இருந்தார்கள். ஜேன் ஆஸ்டின், பிரான்ஸிஸ் பர்னி, சார்லட் ஸ்மித், சார்லட் பிராண்டி என முக்கியமான பெண் படைப்பாளிகள் இவ்வாறு தோன்றினார்கள் என கேட் வில்லியம்ஸ் கூறுகிறார். இன்று மேற்கில் பெண்களுக்கென்றே தனியான ரொமான்ஸ் வகை நாவல்கள் எழுதப்படுகின்றன. அதன் நீட்சியாகவே ஹாலிவுட்டிலும் இத்தகைய படங்கள் எடுக்கப்பட்டன. தமிழிலும் தொடர்கதை காலத்தை ஆதிக்கம் செலுத்தியது பெண் வாசகிகளே. அவர்களே இத்தொடர்களை கிழித்துத் தைத்து வைக்கும் வழக்கத்தை உருவாக்கினார்கள். தொண்ணூறுகள் வரை எழுதியே வீடு, சொத்து என வாங்கி நட்சத்திர எழுத்தாளர்கள் ஆனார்கள் தொடர்கதையாளர்கள். ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலில் ஜெயமோகன் இந்த வெகுஜன இலக்கிய வகைமை கேபிள் டிவியின் நெடுந்தொடர்களின் வருகையுடன் காணாமல் போனது என்றார்.

ஊடகங்களை எடுத்துக்கொண்டால், நாளிதழ்களில் ஆண் பெண் பிரிவினை நவீன காலத்தில் ஏற்பட்டது. தூரதர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம், மகாபாரதம் போன்ற தொலைகாட்சித் தொடர்கள் பரவலாகப் பார்க்கப்பட்டன. கேபிள் டிவி வந்த பிறகு முக்கியமான மாற்றங்கள் தோன்றின. குறிப்பாக, நெடுந்தொடர்கள்.

மேடை நாடகம் எனும் வடிவம் என்றுமே இரு பாலினத்தோருக்கானதே. தமிழில் சினிமா வந்த பின்னர் அது ஆண்களுக்கான வடிவமாக ஆரம்பித்து நடுவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் ஓரளவுக்குப் பெண் பார்வையாளர்களையும் உள்ளடக்கி கடந்த இருபதாண்டுகளில் மீண்டும் ஆண் பார்வையாளர்களே போதும் எனும் இடத்துக்கு வந்துவிட்டது. அதே நேரம் ஆரம்பம் முதலே தொலைக்காட்சித் தொடர்கள் பெண் பார்வையாளர்களுக்கான தனி வடிவமாகவே உருவாக்கப்பட்டன. சமூகமாக்கல் வாய்ப்புகளோ, நேரடி உற்பத்தி மதிப்போ இல்லாமல் முடங்கிப் போகும் ஏராளமான பெண்களுக்கு இத்தொடர்கள் இன்றும் தம்மை நுகர்வு மதிப்பு கொண்ட ஒரு தொகுப்பாகக் கருதி மகிழ இடமளிக்கின்றன. தம் வாழ்வில் கொந்தளிக்கும் பல்வேறு உணர்ச்சிகளுக்குத் திரையில் இடமளிப்பதுடன் அவற்றுடன் உறவாடவும் உதவுகின்றன. அதனாலே நெடுந்தொடர் நடிகர்களைக் கிட்டத்தட்ட தம் குடும்பத்தில் ஒருவராக அவர்கள் பாவிக்கிறார்கள். இன்னொரு பக்கம், விசுவின் ‘அரட்டை அரங்கம்’ உள்ளிட்ட விவாத நிகழ்ச்சிகளும் இரு பாலினத்தோருக்கும் பொதுவாக இருந்தன. ‘நீயா நானா’ போன்ற ரியாலிட்டி ஷோக்கள் புதிய விவாத நிகழ்ச்சிகள் எனும் இடத்தைப் பெற்ற பின்னர் – குறிப்பாக, கடந்த 2016க்குப் பிறகு – குடும்பச் சிக்கல்களைப் பெண்களின் தரப்பில் இருந்து பேசுபொருளாக்கி அவர்களையே பிரதான பங்கேற்பாளர்களாகவும் நுகர்வோராகவும் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.டி.டி வகைமையில் மேற்கத்திய ஆங்கில, இந்தி இணையத்தொடர்களில் பெண் நுகர்வுக்கெனத் தனியான படைப்புகள் தோன்றி வருகின்றன. தமிழிலும் மலையாளத்திலும் “முதல் ஷாட்டை ஓப்பன் பண்ணினா குப்பைத் தொட்டியில் ஒரு தலை வெட்டப்பட்டு கிடக்குது சார்” வகையான திரில்லர் தொடர்களே அதிகமாக வருகின்றன. ஆனால் ஓ.டி.டியின் வருகைக்குப் பின்னர் மலையாள சினிமாவில் பெண்ணுலகை மையப்படுத்திய, குடும்பப் பிரச்சினைகளைப் பேசுகிற படங்கள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. இப்படங்களில் பெரும் நட்சத்திர நடிகர்கள் இல்லை. ஆண் ஹீரோக்கள் சற்று மென்மையானவர்களாக, பெண்களைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவோ, அல்லது முரட்டுத்தனமும் போலித்தனமும் மிக்கவர்களாக இருந்து பின்னர் திருந்துபவர்களாகவே இருப்பார்கள். இத்தகைய படங்களின் வழியாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரஜிஷா விஜயன், நிமிஷா சஜயன், தர்ஷனா ராஜேந்திரன், ஆனா பென் போன்ற நட்சத்திர நடிகைகள் தோன்றி வருகிறார்கள். இவர்கள் வழக்கமான மலையாள நடிகைளைப் போல அழகுப் பொம்மைகள் அல்லர். நாணிக்கோணி சேலையில் மினுங்குபவர்களோ இடையழகிகளோ அல்லர். மாநிறத்தில், சற்றுப் பருமானமாக, சில நேரங்களில் மிகப் பருமனாகக் கூட இருக்கிறார்கள். இவர்களே மலையாள பட்ஜெட் சினிமாவைத் தோளில் தாங்குகிறார்கள்.

தமிழ்க் கவிதைகளில் மனுஷ்ய புத்திரன் “மிஸ் யூ” துவங்கி பல்லாயிரம் நெகிழ்வான உணர்ச்சிகரமான கவிதைகளைப் பெண்மொழியில் ஆணின் மன்றாடல் குரலில் எழுதி நவீன உறவுச்சிக்கல்களைப் பேசுபொருளாக்கி வருகிறார். நவீன கவிதையில் பெண் சந்தையைப் பெருமளவில் கையகப்படுத்திய முதல் எழுத்தாளராக இவர் உள்ளார். நகைமுரணாக, இதற்கு முன்பு பல சிறந்த உடலரசியல் கவிதைகள் பெண் மொழியில், பெண்ணின் தரப்பிலிருந்து எழுதப்பட்டபோது ஆண் வாசகர்கள் அதற்கு அமோக வரவேற்பை வழங்கினர். மற்றபடி, வெகுஜனத் தொடர்நாவல்கள், பாக்கெட் நாவல்களுடன் ஒப்பிட்டால் தீவிர இலக்கியம் முழுக்க ஆண் உழைப்பு, ஆண் நுகர்வை சார்ந்தே இயங்குகிறது.

ஐ.பி.எல் ஆரம்பம் முதலே பெண்களையும் குழந்தைகளையும் உள்ளிழுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது. ஐ.பி.எல்லுக்குப் பிறகு பெண்களின் கிரிக்கெட் ஞானமும் ஆர்வமும் பெருமளவில் அதிகரித்துள்ளன. அண்மையில், “தமிழா தமிழா” தோனியைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சியை நடத்தியபோது பெண் ரசிகைகள் கணிசமாகக் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினர். மொபைல் விளையாட்டு, சமூக வலைதளங்கள் எனப் பாலின ரீதியான பொருளடக்கம் தோன்றி வருகிறது. பேஸ்புக்கில் பெண் வாசகர்களைக் கவரும் நோக்கில் சௌந்தர்ய உபாசனை எழுத்தில் ஒரு பக்கமும், பெண்ணிய ஆதரவு எழுத்தில் இன்னொரு பக்கமும் ஆண்கள் ஈடுபட, பெண் நுகர்வாளர்களோ ஆண் பெண்ணியவாதிகளை நம்ப முன்வராமல், பெண் நுகர்வு உபாசகர்கள் பக்கமே அதிகமாகச் சாய்வது ஒரு நகைமுரண்.

கடைசியில் போர்னோகிராபிக்கு வருவோம். திரையரங்கிலும் வீடியோ காஸெட்டிலும் மட்டுமே போர்னோகிராபியை நுகரும் நிலையிருந்த காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே அணுகும் உரிமை இருந்தது. இணையம் கம்பியூட்டர் செண்டர் வழியாகக் கிடைத்த போதும் அப்படியே தொடர்ந்தது. ஆனால், திறன்பேசி வழியாக இன்று போர்னோகிராபி ஆண்கள் (91.5%), பெண்கள் (60.2%), குழந்தைகள் + பதின்பருவத்தினர் (56% ஆண்கள், 39% பெண்கள்) என அநேகமாக எல்லாரையும் போய் அடைந்து வருகிறது. 2021இல் கனடாவில் போர்னோகிராபி நுகர்வைப் பற்றிய தரவுகளை போர்ன்ஹப் நிறுவனம் வெளியிட்ட போது 84% திறன்பேசி வழியாகவே பார்ப்பதாகக் கூறினர். இந்தியாவில் ஒருவேளை இதைவிட அதிக சதவீதத்தினர் போர்னை திறன்பேசி வழியாக நுகரலாம். 2021இல் போர்ன்ஹப் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் இருந்து பெண் நுகர்வோரின் சதவீதம் 35ஆக வளர்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது. அடுத்து முக்கியமாக பெண்கள் தேடுபொறியில் பயன்படுத்தும் சொற்களில் ‘லெஸ்பியன்’ (168%), கேங் பேங், பி.டி.எஸ்.எம் (163%), பெண்-சார்பானது (218%) ஆகியவை அதிகரித்துள்ளன. 2022இல் அமெரிக்காவில் போர்ன்ஹப்பில் மிக அதிகமாகத் தேடப்பட்ட சொல் “லெஸ்பியனே”. அடுத்து ஹெண்டாய்’, ’ஜப்பானியர்’, ‘மூன்றாம் பாலினத்தவர்’ ஆகிய குறிச்சொற்கள் வருகின்றன. பாலின ரீதியாகப் பகுத்துப் பார்த்தால் பெண்கள் அதிகமாக ஓரினச் சேர்க்கை உள்ளீடுகளையும், ஆண்கள் வயதில் மூத்த பெண்களின் பாலுறவு உள்ளீடுகளையும் பார்க்கிறார்கள். புவியியல் ரீதியாகப் பார்த்தால் பிலிப்பைன்ஸ் போன்ற வளரும் நாடுகளிலே மிக அதிகமாக போர்னோகிராபி நுகரப்படுகிறது.

இத்தரவுகள் நான்கு விசயங்களைக் காட்டுகின்றன:

வளரும் நாடுகளில் உடலைப் பண்டமாக்கி நுகரும் அதிகாரம் ஒரு முக்கியச் சந்தையாகிறது.

பெண்கள் இதில் முக்கிய நுகர்வோராகத் தோன்றி வருகிறார்கள்.

ஓரினச் சேர்க்கைப் பாலுறவை ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக ரசிக்கிறார்கள். இதை நுகர்வின் பாலுணர்வு ஏகபோகம் என்று புரிந்துகொள்ளலாம். பெண்கள் பாலுறவில் சுதந்திரத்தையும் தனிமையையும் அதிகமாக எதிர்கொள்ளும் போது, அதில் ஒரு திளைப்பும் வறட்சியும் அவர்களுக்கு அதிகமாகும் போது, தற்புணர்வுக் கொண்டாட்டம் முக்கியமாகிறது. அதற்கான உருவகமாக ஓரினச்சேர்க்கை தோன்றுகிறது.

மேற்சொன்ன காரணத்தினாலே வன்முறை விருப்பம் + தற்புணர்வு இச்சை = பி.டி.எஸ்.எம், பலாத்கார கற்பனை எனப் பெண் மனத்தில் உருமாறுகிறது.

முக்கியமாக பாலியல் கேளிக்கை, பாலுடல் சார்ந்த கூச்சத்தை போர்னோகிராபி ஒழித்திருக்கிறது. அதே நேரத்தில், போர்னோகிராபி பார்க்கையில் நமது பாலுடல் குறித்த தாழ்வுணர்வும், மெய்நிகர் (virtual) உடல் குறித்த பிரக்ஞையும் ஒரே சமயத்தில் தோன்றுகின்றன. நம்மைக் குறைபட்டவராகவும், கட்டற்றவராகவும் ஒரே சமயத்தில் உணர்கிறோம். இதை அப்படியே பக்திப் பண்பாட்டுடன் ஒப்பிடலாம். குறையுடல் (ஜீவாத்மா) × கட்டற்ற உடல் (பரமாத்மா). பொருண்மை உலகில் இருந்து கடவுள் வழியாக மீபொருண்மை உலகுக்கு நம்மை பக்தி கடத்துவதைப் போல போர்னோகிராபி புலன்களால் அறியத்தக்க, நிபந்தனைக்குட்பட்ட பால் அனுபவத்தில் இருந்து நுண்ணுணர்வால் நுகரத்தக்க, நிபந்தனைக்கு அப்பாலான மெய்நிகர் பால் அனுபவத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது. நிஜ உடலில் இருந்து மெய்நிகர் உடலை நோக்கித் திளைக்க வைப்பதால் பல உளவியல் சிக்கல்களை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுத்துகிறது. பெண்கள் சதா தமக்குத் தோற்றம் சார்ந்த போதாமை உள்ளதாகவும், ஆண்கள் தமக்குப் பாலுறவு சார்ந்த செயல் நிறைவில் குறையுள்ளதாகவும் தாழ்வுணர்வு கொள்கிறார்கள். நேர்மறையாக, போர்னோகிராபி நம் பாலுறவையும், பாலியல் உரையாடலையும் இன்னும் திறந்ததாக மாற்றியுள்ளது, பெண்கள் ஆண்களுடன் போர்னோகிராபி பார்த்து பாலுறவில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு ஆண் பெண் இடையிலான ஒரு ‘கண்ணாடிச் சுவர்’ தகர்ந்துள்ளது. எனில் போர்னோகிராபி என்பது கடவுளற்ற யுகத்தின் கடவுள் நுகர்வாகிறது. அதை அவ்விதத்தில் மக்களாட்சியின் அடுத்த கட்டம் என்று கூடப் பார்க்கலாம். மக்கள் அதிகாரம் எனும் புலப்படாத அரூபக் கடவுளைக் காட்டி மக்களை உழைக்க வைத்த முதலீட்டியம் இன்று மெய்நிகர் பாலுடலின் கட்டற்ற இன்பத்தைக் காட்டிச் சுரண்டுகிறது.

பொருண்மையான பண்டங்களில் பொதுவான நுகர்வு தொடரும் பட்சத்தில், டி.வி, ரியாலிட்டி விவாதங்கள், சமூகவலைத்தளம், ஓ.டி.டி, போர்னோகிரபி போன்ற அரூப பண்டங்களின் நிலைமை வேறாக உள்ளது: உள்ளடக்கத்தைப் பொறுத்தமட்டில் பாலின ரீதியாக ஆண்களும் பெண்களும் எதிர்காலத்தில் தனித்தனியாகப் பிரிவதற்கான சாத்தியங்கள் அதிகமாகி வருவதாகத் தோன்றுகிறது.