கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் வாழ்வது ஒரு மிகப்பெரிய திருவிழா மைதானம். அங்கே இன்னார்தான் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்த முடியும் என்கிற தடைகள் இல்லை. யாரும் திறமையை வெளிப்படுத்தி கூட்டம் சேர்க்கலாம். எல்லோருக்கும் மைதானத்தில் மேடை உண்டு.

இந்த மைதானத்தில் இப்படிப்பட்ட திறன்களைத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. உங்களுக்கு ஆட வருமா ஆடுங்கள். பாட வருமா பாடுங்கள். சமைக்க வருமா சமைக்கலாம். பேச வருமா பேசலாம். தலைகீழாக நிற்பீர்களா நில்லுங்கள். அல்லது பச்சை பச்சையாக திட்டவும் பிடிக்குமா திட்டுங்கள், ஆனால் எதைச்செய்தாலும் கட்டாயம் கூட்டம் சேர்க்கவேண்டும். மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் அது ஒன்றே உங்களுடைய பிரதான இலக்கு.

எவ்வளவுக்கு எவ்வளவு அதிக கவனத்தை ஈர்க்கிறீர்களோ அவ்வளவு பணம் உங்களுக்கு கிடைக்கும். அவ்வளவு புகழ் கிடைக்கும். கடந்த இருபது ஆண்டுகளில் இணைய உலகம் வந்து அடைந்திருக்கிற இடம் இதுதான்! கட்டற்ற சுதந்திரம், சாமானியர்களுக்கும் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிற மேடை என்பதை எல்லாம் தாண்டி இன்று எலிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் எல்லோரும் கண்ணைக்கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம்.

78345396 – woman hand touch smartphone screen with social stats icons

யூடியூப் வீடியோ போடுகிறவர்களுக்கு காசு கொடுக்க ஆரம்பித்த போது இப்படி ஒரு நிலை உருவாகும் என அந்த நிறுவனமுமே நினைத்திருக்காது. உலகம் இன்று காணொலிகளால் நிறைந்துவிட்டது. எல்லோரும் காணொலிகளில்தான் மூழ்கிக்கிடக்கிறோம். ஒவ்வொரு நாளும் 37லட்சம் வீடியோக்கள் யூடியூபில் சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் 500 மணிநேரம் பார்க்கக்கூடிய அளவுக்கு வீடியோக்கள் யூடியூபில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. சலிக்க சலிக்க பார்க்கலாம். எதைப்பற்றியும் தேடலாம்.

நமக்கும் எத்தனை பார்த்தாலும் கண்களுக்கு சலிப்பதில்லை. அத்தனை காணொலிகள் இருக்கின்றன. அது போதாது என்று நெட்ப்ளிக்ஸ் அமேசான் ப்ரைம் என காசுகட்டியும் பார்க்கிறோம். பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இது கண்களுக்கான காலமோ!

யூடியூப் மாத்திரமல்ல, இன்ஸ்டாகிராம், ட்விட்டர்… ஏன் இத்தனை ஆண்டுகளும் எழுத்துகளால் வாழ்ந்த ஃபேஸ்புக்கும் கூட முழுநேர வீடியோ வெறி ஸ்தலமாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் எழுதுபவர்களை மட்டுப்படுத்திவிட்டு வீடியோ போடுபவர்களுக்கு முன்னுரிமை தருகிறது.

உண்மையில் இந்த வீடியோ தளங்கள் பலரை தொழிலதிபர்கள் ஆக்கி இருக்கின்றன. நடிகர்களை தந்திருக்கின்றன. பாடகர்களை, நடனக்கலைஞர்களை, சமையல்கலைஞர்களை உற்பத்தி செய்திருக்கின்றன. பலரும் பல விஷயங்களை இதன் வழி கற்கிறார்கள். வெளி உலகமே தெரியாதவர்களுக்கு பொது அறிவு கிடைக்கிறது. கிராமத்து ஜனங்களுக்கு கல்வி கிடைக்கிறது. எத்தனையோ பேர் இதன் மூலம் கல்வி பெற்று வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள். இதெல்லாம் நேர்மறைப்பக்கங்கள் என கொள்ளலாம். ஆனால் எதிர்மறை பக்கம் இந்த நேர்மறையை விட பல ஆயிரம் மடங்கு பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் பல பிரபலங்களை இந்த வீடியோ தளங்கள் உருவாக்கித்தள்ளி இருக்கின்றன. பலரை ஜெயிலிலும் தள்ளி இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட பத்ரி சேஷாத்ரி, மதன் ஓபி, சவுக்கு சங்கர் தொடங்கி டிடிஎஃப் வாசன் வரை எத்தனை எத்தனை பேர்! எல்லோரும் செய்த ஒரே செயல் வீடியோ போட்டதுதான். அய்யோ இது ஆபத்தான இடம்போல என நினைத்து யாரும் சும்மா இருந்துவிடவில்லை. மக்கள் முன்பைவிட அதிகமாக ஒவ்வொரு நாளும் முண்டி அடித்துக்கொண்டு என்னென்னவோ செய்து வீடியோ போடுகிறார்கள். அவர்களாகவே படமெடுத்து நடிக்கிறார்கள் வெட்டி ஒட்டி எடிட் பண்ணுகிறார்கள், கோமாளித்தனங்கள் செய்கிறார்கள். குழந்தைகளை ஆட விடுகிறார்கள். தன்னுடைய அங்கங்ககளை விதிகளின் எல்லைக்குட்பட்டு நிர்வாணத்திற்கு சற்று அருகில் வெளிப்படுத்துகிறார்கள். பழைய பத்திரிகையாளர்கள் தங்களுடைய கிசுகிசுக்களை பரப்புகிறார்கள்… கவனம் ஈர்த்தாக வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருந்து இன்று வெறியாக மாறிவிட்டது. செய் எதாவது செய் என்று தூண்டப்படுகிறார்கள்.

பேஸ்புக் தளத்தில் தன் மார்பைக்காட்டி குழந்தைக்கு பால் கொடுக்கிற வீடியோக்கள் குவிகின்றன. மார்பை முழுவதுமாக காட்ட பேஸ்புக் அல்காரிதங்கள் அனுமதி தருவதில்லை. ஆனால் தாய்ப்பால் தருகிற வீடியோக்களாக இருந்தால் அனுமதி உண்டு. ஆகவே எல்லோரும் பால் கொடுக்கத்தொடங்கி விட்டார்கள். அதுவே அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் பணம் ஈட்டுத்தருகிறது. வடமாநிலங்களில் இது ஒருகுடிசைத்தொழில் போல பரவிவிட்டது.

தன் மனைவி அல்லது குடும்பத்தினர் உறங்குவதை அவர்களுடைய உடைகள் விலகுவதை லைவில் காட்டுகிறார்கள். அதை மில்லயன் கணக்கில் ஆட்கள் பார்க்கிறார்கள். காசு கிடைக்கிறது. வக்கிரமான உலகத்திற்கு எவ்வளவு தீனி கொடுத்தாலும் போதாது! இன்னும் எழுதவியலா எத்தனையோ வக்கிரங்கள் அரங்கேறுகின்றன. எல்லாமே காசுக்குத்தான்.

அதிகமான ஆட்கள் பார்க்க பார்க்க அதிகமான பணம் கிடைக்கிறது. ஒருவன் ஓடும் ட்ரைனுக்கு எதிரில் நின்று ட்ரைன் வரும்போது தப்பிச்செல்ல முயன்று செத்துப்போகிறான். உயரமான மலை உச்சியில் நின்று வீடியோ எடுக்க முயன்று ஒருவன் வழுக்கி விழுந்து செத்துப்போகிறான். ஒருவன் இன்னொரு ஆள் போட்ட ட்ரால் வீடியோவுக்காக வீடு புகுந்து வெட்டிக்கொல்கிறான். அவனும் ஜெயிலுக்குப் போகிறான்.

சாமானியர்கள் சரி, அறியாமையில் செய்கிறார்கள் என எடுத்துக்கொள்வோம். இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களும் சிக்கித்தவிக்கின்றன. எப்படியாவது பார்வையாளர்களை தங்களுடைய சேனலுக்கு அழைத்துவந்துவிட வேண்டும் என்று தியேட்டர் வாசல்களில் காத்திருந்தார்கள். பிரபலங்களை மறைந்திருந்து படம் பிடித்தார்கள். பிரபலங்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால் அங்கும் கேமராவோடு போய் அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். துஷ்டி கேட்க வந்தவர்களிடம் கேமராவை நீட்டி கேட்க கூடாத கேள்விகளை கேட்கிறார்கள்.

இன்றைய உலகமே ஒருவிதமான நார்ஸிஸ மனோபாவத்தில் உளவியல் பாதிப்பில் சிக்கி இருக்கிறது. தன்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த தயாராக இருக்கிறது. எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்த முடியுமோ அத்தனை அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள். லைக்குகளும் பார்வையாளர் எண்ணிக்கையும் நம்மை இயக்கும் கருவிகளாகிவிட்டன. வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு அதையாருமே பார்க்கவில்லை என வருந்துகிற பாட்டிகளும் தாத்தாகளும் கூட பெருகிவிட்டார்கள்!

இங்கே ஒரு லாட்டரிக்கான சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் அதில் போட்டியிட வேண்டும். உங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எல்லா திறமையும் இருக்கும். ஆனால் உங்களால் அதில் வெல்ல முடியாது. எந்தத்திறமையும் இல்லாமல் ஒருவன் காத்துகறுப்பு கலை போல கத்துவான், ஜிபி முத்து போல செத்தப்பயலே நாறப்பயலே என திட்டுவான், பயில்வான் ரங்கநாதன் போல பிறர் குறித்து ஆபாசமாகப் பேசுவான் அவனுக்கு புகழ் வெளிச்சம் பாயும்.

கூல் சுரேஷ் என்கிற மனிதன் இந்தக்காலக்கட்டத்தின் கண்ணாடி போல நம்மிடையே வலம் வருகிறார். அவருடைய திறமை என்ன? மனநலம் பாதிக்கப்பட்டவனைப்போல தியேட்டர் வாசல்களில் கத்தி கூப்பாடு போட்டு எதையாவது உளறுவது. எத்தனை மைக்குகள் அவருக்கு முன்னால் ஒவ்வொரு முறையும் நீட்டப்படுகின்றன. ஏன்? எத்தனையோ திறமைசாலிகள் இருக்க கூல் சுரேஷுக்கு ஏன் இத்தனை வெளிச்சல். கல்லூரி விழாக்களில் திருச்சி சாதனாவும், ஜிபி முத்துவும், கூல்சுரேஷும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். மாணவர்களிடம் என்ன செய்தியை கொண்டு சேர்க்கிறார்கள்.

சென்ற ஆண்டு அரெஸ்ட் ஆன ஒரு ஆள் மதன் ஓபி. வெறும் கேமிங் ஆடியே ஆடிக் கார்  வாங்கியவர். தான் ஆடுகிற கேமை நேரடி ஒளிபரப்பு செய்கிறார். அதை லட்சக்கணக்கான சிறுவர்கள் பார்க்கிறார்கள். இதை எல்லோரும்தான் செய்கிறார்கள். இவருக்கு ஏன் இத்தனை வரவேற்பு. ஆபாச வசைகள். மதன் ஓபி ஒரு படி மேலே போய் பெண்களை பற்றி கீழ்த்தரமாகப் பேசுகிறார், பையன்களுக்கு போதை மாதிரி மோசமான விஷயங்களை கற்றுத்தருகிறார். கடைசியில் காவல்துறையிடம் சிக்கி ஜெயிலுக்கு போகவேண்டியதானது. இன்னொரு பக்கம் பாரிசாலன் போன்ற முட்டாள்கள், வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதும், எதற்கெடுத்தாலும் இலுமினாட்டி சதி, தமிழர்கள் பெருமை என்று வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாக திரித்து பேசுவதுமாக திரிகிறார்கள். மைக் அவர்களுக்கு முன்னால்தான் நீட்டப்படுகிறது. இன்று யூடியூபை திறந்து யாரெல்லாம் பெரிய பிரபலங்கள் என்று பார்த்தால் வினோதமான முடிவுகள் கிடைக்கும்.

இத்தகை கவன ஈர்ப்புக்கான போட்டியில் எதை செய்தாலும் ஏற்கனவே செய்து கொண்டிருப்பவரை விட ஒருபடி மேலே செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. புதியவர்கள் உள்ளே நுழையும்போது அவர்கள் தங்களுக்குனா பார்வையாளர்களை உருவாக்க சாம,தான,பேத,தண்ட அஸ்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு சமையல் சேனல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு, அதில் உலகில் இருக்கிற எல்லா உணவுகளையும் சமைத்து தள்ளிவிட்டார்கள். புதிதாக ஒருவர் ஆரம்பித்து என்ன சொல்லிவிட முடியும். கடலுக்குள் போய் சமைக்கிறார்கள். மலையில் ஏறி சமைக்கிறார்கள். படகில் போகிறார்கள். கவன ஈர்ப்புக்கான உந்துதல் ஒருபக்கம் அவர்களுடைய படைப்பாற்றலை தூண்டினாலும் ஆபத்துகளை நோக்கி தள்ளவும் செய்கின்றன.

இது புதியவர்களுக்கு மட்டுமல்ல ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களுக்கும் இதே நிலைதான். ப்ளூ சட்டை மாறனை எடுத்துக்கொள்வோம். அவர் ஆரம்பத்தில் இருந்தே பிரபலம்தான். ஆனால் இன்று எண்ணற்ற விமர்சகர்கள் வந்துவிட்டார்கள். அவர்களோடு போட்டிபோட வேண்டும் என்பதால் எல்லா படங்களையும் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்துவிட்டார். அவர் கடைசியாக பாராட்டிய படம் எதுவென்று தெரியவில்லை. தன்னுடைய திட்டுதலில் மேலும் மேலும் புதுமைகளை புகுத்துகிறார். நிச்சயம் அவர் திட்டுவார் எப்படி வித்தியாசமாக திட்டுகிறார் என்பதைத்தான் பார்க்க புகுகிறார்கள்.

இதேதான் டிடிஎஃப் கதையிலும் நடக்கிறது. ஆரம்பத்தில் வெறும் சாகசம் மட்டும் பண்ணிக்கொண்டிருந்த பையனுக்கு இப்போது பல நூறு போட்டியாளர்கள். அவர்களை மீறி தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதனாலேயே மற்ற எல்லோரையும் விட அதிக சக்தி வாய்ந்த பைக்குகளை வாங்குகிறான். ஹெல்மெட் வாங்குகிறான். மற்றவர்கள் இருநூறில் சென்றால் இருநூற்றி ஐம்பதில் செல்கிறான். அப்படி சென்றுதான் விபத்து ஒன்றை சந்தித்து இப்போது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான் வாசன்.

அந்த விபத்தே ஒரு திட்டமிடப்பட்ட ஸ்டன்ட்தான் என்கிறார்கள் இணையவாசிகள். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இன்று இணையத்தில் வெளியாகிற வீடியோக்களில் எது உண்மை எது நாடகம் என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. ப்ராங்க் பண்றோம் என்ற பெயரில் நடக்கிற பெரும்பான்மை நிகழ்ச்சிகள் எல்லாமே திட்டமிடப்பட்டவைதான். அதுபோக எங்க வீட்ல இன்னைக்கு சண்டைங்க என்று ரீல்ஸில் அழும் தம்பதிகள் அதிக வியூஸுக்காக நடிக்கிறார்கள். எல்லாமே நாடகம்தான். நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு என்று பாஜகவும் அதிமுகவும் எப்படி சண்டை போடுகிறார்களோ அப்படித்தான் காணொலி தளங்கள் முழுக்க காட்சிகள் கிடைக்கின்றன.

ஆமாங்க இந்த டூகே கிட்ஸே இப்படித்தான் என பூமர்த்தனமாக நினைக்காதீர்கள். இந்த கவன ஈர்ப்பு வெறிக்கு வயது வித்தியாசம் இல்லை. குழந்தைகளில் தொடங்கி அடுத்த வாரம் மரணத்திற்கு காத்திருக்கிற தாத்தாக்கள் வரை எல்லோருக்கும் இந்தபித்து பிடித்து ஆட்டுகிறது.

இந்த கவன ஈர்ப்புகளால் இரண்டு விஷயம் மனிதர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. அபரிமிதமான பணம். நாம் மாதந்தோறும் உழைத்தாலும் கிடைக்காத பணம் இன்ஸ்டாகிராமில் ரீஸ் போடுகிற ஒருவருக்கு ஒரே ஒரு விளம்பரத்திற்கு கொடுக்கிறார்கள். கொரியர் நிறுவனத்தில் மாதம் பத்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்த்த ஒரு ஆள், தன் மனைவியோடு பொழுதுபோக்காக ரீல்ஸ் போடத்தொடங்கி இன்று ஒரு சோஸியல் மீடியா இன்ப்ளூயன்ஸர் ஆகிவிட்டார். இன்று அவருடைய பக்கத்தில் ஒரு விளம்பரம் போட மூன்றிலிருந்து ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார். இதை ஒரு பேட்டியிலும் சொல்கிறார். தான் ஒருமாதத்தில் சம்பாதித்த தொகை என்பது தன்னுடைய வாழ்நாள் வருமானம் என்கிறார்!

சமையல் கலை சேனல்கள் நடத்திக்கொண்டிருந்த ஒருவர் துபாயில் சொகுசு படகு ஒன்றை பல கோடிகளுக்கு சமீபத்தில் வாங்கி இருக்கிறார். அவர் செய்ததெல்லாம் ஒன்றுதான் பிரியாணி எப்படி செய்ய வேண்டும் என்று வீடியோ போட்டார்!

இவ்வளவு பணம் வருகிறதென்றால், ஏன் மக்களெல்லாம் பித்தேறி கேமராவும் கையுமாக திரியமாட்டார்கள். இன்று குடும்பங்கள் எல்லோரும் லைஃப்ஸ்டைல் சேனல் என்கிற பெயரில் சாப்பிடுவதை, தூங்குவதை, குழந்தைகளை கொஞ்சுவதை என அனைத்தையும் வீடியோவாக்கிப் போடுகிறார்கள். ஆனால் அந்த அதிர்ஷ்டச்சக்கரம் யாருக்கு நிற்குமோ யாருக்கு லாட்டரி விழுமோ தெரியாது!

இன்னொன்று அங்கீகாரம். இன்றைய உலகில் எல்லோருக்கும் ஒரு அங்கீகாரம் தேவைப்படுகிறது. ஒருவெற்றி தேவைப்படுகிறது. எல்லோருமே புகழ்பெற்றவர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். புகழற்றவர்கள் வாழ்வதே வீண் என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அதிகபட்சம் யூடியூப் வீடியோக்களுக்கு கீழே 2023லும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் லைக் பண்ணுங்க என்று லைக்ஸ் பிச்சை எடுக்கிறோம். அதை வைத்து என்ன செய்யமுடியும். காசுகூட கிடைக்காது. திரையரங்கில் படம் பார்க்காமல் யாருக்காக அத்தனை கேமராக்கள் படம் பிடிக்கின்றன? லைக்ஸ் கிடைக்கும்.  வாழ்வதற்கு உணவு உடை இருப்பிடம் போல பத்து லைக்ஸும் தேவைப்படுகிறது. அதனாலேயே யூடியூபும் ஃபேஸ்புக்கும் ரீல்ஸும் தருகிற இந்த புகழ்மயக்கம் வாழ்க்கையை முழுமையாக்குவதாக நினைக்கிறோம்.

உண்மையில் இந்த இணைய புரட்சி பலரை புகழடைய செய்திருக்கிறது. பல ஏழைகளை கோடீஸ்வர்ரகளாக ஆக்கி இருக்கிறது. ஆனால் பெரிய பயிற்சிகளோ திறமைகளோ கொண்டு இத்தனை ஆண்டுகளும் அடைந்த உயரங்களை எதுவுமே இல்லாத கோமாளித்தனங்கள் உங்களுக்கு கொடுக்கத் தொடங்கி இருப்பதுதான் ஆபத்தாக மாறுகிறது. அடுத்த தலைமுறைக்கு தவறான முன்னுதாரணங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். கஷ்டப்பட்டு நான்காண்டுகள் என்ஜினியரிங் படித்து வேலைக்கு போய் சம்பாதிப்பதை விட ஒரு கேடிஎம் பைக் வாங்கி நாப்பது வீடியோ போட்டால் தன் தந்தையை விட அதிகமான வருமானம் பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள்.

இன்றைய தலைமுறைக்கு எல்லாமே அவசரமாக கிடைக்க வேண்டும். அவர்கள் பயிற்சி எடுக்க தயாராயில்லை. வெற்றிக்குரிய நேரத்தை தர தயாராயில்லை. டிடிஎஃப் போல பைக் ஓட்டி பணம் சம்பாதிக்கலாம், மதன் ஓபி போல கேமிங் ஆடலாம், மதன்கௌரி போல வீடியோ போடலாம். ப்ளூசட்டை மாறன் போல விமர்சனம் பண்ணலாம் நிறைய பணமும் புகழும் கிடைக்கும் என நினைக்கிறார்கள். குட்டி டிடிஎஃப்கள், குட்டி கூல் சுரேஷ்கள் என நிறைய குட்டிகள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த டைனோசர் குட்டிகளை யாராலும் காப்பாற்ற முடியாது. பெற்றோர்கள் கண்டிக்கலாமே ஆசிரியர்கள் கண்டிக்கலாமே என நினைக்கிறீர்களா?

ஆசிரியர்களே வகுப்புக்குள் நடனமாடி வீடியோ போடுகிறார்கள், பெற்றோர்கள் இன்னொரு பக்கம் என்ன வீடியோ போட்டால் வியூஸ் வரும் என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மேல் நம்மை ஆளும் பிரதமரே விதவிதமாக உடை அணிந்துகொண்டு அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். ஆகவே தோழர்களே கவன ஈர்ப்புப்போராட்டத்துக்கு தற்சமயம் முடிவுக்கு வர வாய்ப்பே இல்லை. அதுவரை சர்க்கஸ் தொடரும்!