மனுசனுக்கு எப்பாச்சிம் அவமானம் நடந்தா அதை அவன் அவ்ளோ சீக்கிரமா மறக்கமுடியாம உள்ளார வச்சுட்டேதான் இருப்பான். அப்படித்தான் பழனிச்சாமிக்கும் அவன் வாழ்க்கையில் ஆயிற்று.

பழனிச்சாமியின் ரப்பர் செருப்பைத்தாண்டி காய்ந்த கருவேலம் முள் அவனது வலது குதிகாலில் ஏறிவிட்டது. வயிற்றுக்கும் கீழ் பெயர் சொல்லமுடியாத உறுப்பில் யாரோ கிள்ளி வைத்துவிட்டது போல சங்கடத்தோடு நெளிந்தானவன். செருப்போடே உடனே காலைத்தூக்கிச் சேர்த்து வெளியிலிழுத்தான். நல்லவேளை இற்றுப்போன முள் அல்ல அது. அமர்வதற்கு வாகான இடம் தேடினான். சுற்றிலும் கிலுவை மரங்களே அடர்ந்து நின்றிருந்தன. ஒவ்வொரு மரத்தினடியிலும் குட்டான் குட்டானாய்க் காய்ந்துபோன கிலுவைகள் கிடந்தன. வலது குதிகாலை ஊன்றாமல் பெருவிரலால் உந்திக்கொண்டே சென்று கிலுவை ஒன்றின் கீழ் அமர்ந்தான்.

லுங்கியையும் தாண்டி சிறுநெருஞ்சிமுள் குத்திற்று அமர்ந்த இடத்தில். நேம்பாய் உயர்த்தி அவற்றை அகற்றிவிட்டு வலது காலை மடித்து உயர்த்தி தன் தொடை மீது வைத்துக்கொண்டான். அவனது பார்வை முள் ஏறிய தடத்தை உற்றுப்பார்த்தது. சமயத்தில் பூரான் ஒன்று மிகப்பதறிக்கையாய் இவனை நோக்கி அவ்வளவு விரைவாய் வந்ததைக் கவனித்து விட்டான். கீழே கிடந்த ரப்பர் செருப்பை எடுக்கக்கூட அவகாசமில்லாமல் வலது கையை ஓங்கிச் சப்பெனத் தரையோடு அதை அறைந்தான். அப்படியே நிலத்தில் ஒரு தேய் தேய்த்தவன் கையை உயர்த்திப்பார்த்தான்.

வேகமாய் வருகையில் பெரிய உருவமாய்த்தெரிந்த அது சப்பழிந்து புக்கிட்டியூண்டாய் உயிர்விட்டுக்கிடந்தது. அழுத்திய கையை உயர்த்தி நுகர்ந்து பார்த்தான். கெட்ட வாடை எதுவுமில்லைதான். நிலத்தில் கையை மீண்டும் ஒருமுறை தேய்த்துக்கொண்டவன் தன் குதிகாலை ஆராய்ந்தான். ரத்தம் ஏதும் கொப்பளித்து வரவில்லையாதலால் கருவேலம் முள்ளின் நுனி உள்ளே உடைந்திருக்க வாய்ப்பிருக்குமென நினைத்தவன் அந்த இடத்தில் எச்சிலைத்துப்பி விரல்களால் தேய்த்துக் கண்ணாடிபோலத் தெரிகிறதாவெனப்பார்த்தான். கறுப்பாய் பொட்டுப்போல ஏறிய தடத்தில் தெரிந்தது. கடுகடுவென வலி அங்கே இருந்துகொண்டுதான் இருந்தது.

தன் அரைஞாண் கயிற்றில் பின்னூசி இருக்கிறதாவென விரல்களாலேயே தேடினான். நீர்நிறைந்த நண்டு வங்கினுள் கையை நுழைத்து எங்கே கொடுக்கில் விரல்களை கவ்விவிடுமோவென்ற குட்டியான பயத்தில் நுழைத்த நண்டுபிடிப்பானின் தேடலாய் இருந்தது அது. ஒரு சுற்று வந்தபிறகு கைக்கு அகப்பட்டது பின்னூசி. அதைக்கழற்றி குதிங்காலில் முள் ஏறிய தடத்தில் நேம்பாய் குத்திக்குத்தி பாதையை ஏற்படுத்தினான். பிளைடு ஒன்றிருந்தால் பிசிறுகளை சீவிவிடலாம். இந்தக் கரட்டுக்குள் அதற்கெங்கே போவது. நேரமெடுக்கும் போலிருந்தது. பேசாமல் கொஞ்சமாய் நொண்டி நொண்டியேனும் வழுக்குப்பாறைக்குச் சென்றுவிடலாம் என்றும் நினைத்தான் அவன்.

பாக்கெட்டிலிருந்து தன் அலைபேசியை எடுத்து நேரம் என்னவெனப்பார்த்தான். நான்கு மணியைத்தொட இன்னும் பத்துநிமிடங்கள் இருந்தன. ரேவதி நாலரை மணிக்குத்தான் வழுக்குப்பாறைக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தாள். கடந்த நான்கு வருடங்களில் சொன்ன நேரத்திற்கு அவள் வந்து சேர்ந்ததேயில்லை. இவன்தான் ஒட்டர்வீட்டு நாய் டொக்குக்கு காத்திருந்தாற்போல முன்பாகவே வந்தமர்ந்து அவள் வருகைக்காகக் காத்திருப்பான். தனது காத்திருப்பு ஒரு பெண்ணுக்கானதாய் இருக்கையில் ஒவ்வொருவருமே வினோதமான மனநிறைவில், யாரோ அருகமர்ந்து அக்குளில் கிச்சுக்கிச்சு செய்தபடியே இருப்பதான மகிழ்வில் இருப்பார்கள் தானென இவனே பலமுறை நினைத்துப் புன்னகைத்திருக்கிறான்.

அதுபற்றி அவளிடம் ஒருமுறை கேட்கையில், துணியை எல்லாம் துவைத்து தூக்கில் காயப்போட்டுவிட்டு வந்தேன் என்றோ, காய்ந்த துணிகளையெல்லாம் எடுத்து மடித்து பீரோவினுள் அடுக்கி வைத்துவிட்டு வந்தேன் என்றோ எதோ ஒரு காரணத்தை சொன்னாள். எல்லா விசயத்திலுமே அவளிடம் ஒரு பொறுப்பில்லாத்தனம் இருப்பதைக் கூடிய சீக்கிரமே இவன் உணர்ந்திருந்தான். ஆனாலும் இவனுக்கு அவளை விட்டால் வேறு மார்க்கங்களும் ஊருக்குள் இல்லை. இவனையும் கூட மனிதர்களுக்கான லிஸ்டில் சேர்த்தி இவனைக்கட்டிக்கொள்ள ஊருக்குள் ஒருத்தி பறவையாய்ப் பறக்கிறாள் என்பது இவனுக்கே கூட இன்னமும் நம்பிக்கையைத் தருவேனா? என்கிறதுதான்.

ஆழத்தில் குத்தியிருந்த முள் பிசிறைப் பின்னூசி தொட்டதுமே சுரீரென உச்சிமண்டைக்கு வலி ஏறிற்று. அதை இருபுறமாக ஒவைத்தான் ஊசியால். கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றிவிடும் முனைப்பில் ஊசியானது ஆழத்தினுள் விளையாடியது. அவ்வளவுதானா? ஓர் இடுக்கி இருந்தால் அப்படியே பிசிறைக் கவ்வி வெளியே இழுத்துவிடலாம். இப்படியேகூட குந்திக்குந்தி வழுக்குப்பாறைக்குப் போய்விட்டால் ரேவதியிடம் காலை நீட்டிவிடலாம். அவளுக்கு முள் எடுத்து முன்னனுபவம் இருக்கிறதா? என்றுவேறு இவனுக்குத்தெரியாது.

அனுபவம் இல்லாதவர்களிடம் காலை நீட்டிவிட்டால் அவ்வளவுதான். கண்டமேனிக்கி குத்தி ரத்தம் வரச்செய்து அந்த ரத்தம் காரணமாக முள்ளே தெரியலை என்று சொல்லிவிடுவார்கள். எருக்கலஞ்செடியெல்லாம் இப்போது ஊருக்குள் கண்களுக்குச் சிக்குவதேயில்லை. முன்பெல்லாம் குட்டான் குட்டானாய்க் கண்ட இடத்திலும் நின்றிருக்கும். ஒரு தலையைக் கிள்ளி அதன் நுனியில் வரும் பாலை முள்தடத்தில் நனைத்துவிட்டாலே போதும். காலையில் சீப்பிடித்து நிற்கும். ஓர் அழுத்து கனமாய்க் கொடுத்தால் முள்ளின் பிசிறானது சீயோடு பிய்த்துக்கொண்டு வெளியேறிவிடும்.

ஒரு கட்டத்தில் பல்லைக் கடித்துக்கொண்டே முள்ளை நெம்பி வெளியே தூக்கிவிட்டான் இவன். சின்னதாய் நுனிக்கூண்டு பிசிறுதான் அது. முள்வெளிவந்ததும் துளி பொட்டு வைத்தாற்போல ரத்தம் முள்தடத்தில் தெரிந்தது. கொஞ்சம் நிம்மதியானான். பின்பாக எழுந்து தன் செருப்பைத் தொட்டுக்கொண்டு மேற்கு நோக்கி நடந்தான். இன்னமும் குதிங்கால்  நிலத்தில் அழுந்த ஊன்றுவேனா? என்று பயந்திருந்தது.

எதிர்க்கே தூரமாய்த்தெரியும் மலையுச்சியை இவன் பார்த்தான். எல்லாம் கொஞ்சம் காலம் முன்பாக ஆடிப் பதினெட்டு நாளில் நண்பர்களோடு ஏறிப்போனதுதான். கொஞ்சம் என்ன ஐந்தாறு வருடங்களுக்கும் மேலாயிற்று. இப்போது தனியே நடந்து உச்சியை அடைவது சாத்தியம்தானா? என்றால் நிச்சயமில்லைதான். ஊருக்குள் இவனது ஜோடி நண்பர்கள் எல்லோரும் திருமணம் செய்து பிள்ளைகுட்டி பெற்று அப்பாவாகிவிட்டார்கள். அவர்களது மனைவிமார்கள் இவனைப்பார்க்கையிலெல்லாம் புன்னகைக்கிறார்கள். தம் ஊட்டுக்காரனுக்கு நெருங்கிய நண்பன் இந்தப் பழனிச்சாமியண்ணன் என்றே சினேகமாய்ப் பேசுகிறார்கள். “ண்ணோவ்! அந்த ரேவதிப்பிள்ளே கோழி கேவுறாப்ல கேவுறாளுங்கண்ணா! ஒரு ஊனு ஊனியுடுங்க!” என்கிறார்கள்.

இவனுக்கு ஜாதகத்தில் கோளாறு இருக்கிறதாவெனப் பார்க்கவும் முடியாதபடி ஆகிவிட்டது. என்ன ராசி? என்ன நட்சத்திரம்? என்று எதுவும் தெரியாதவன் இவன். சொந்தத்தில் யாரும் பெண் தருவேனா? என்றே சுற்றினார்கள். ஜாதகம் இல்லாதவனுக்குப் பொண்ணை எப்படித்தருவது? என்றார்கள். போலியாய் ஒரு ஜாதகத்தைத் தயாரித்து அம்சமாய் வைத்துக்கொள்ளலாமென இவன் அம்மா சொன்னாள். இவனுக்கு மனத்துக்குப் பிடிக்கவில்லை. வயது முப்பத்தியொன்று ஆகிவிட்டது. நாற்பது வயதிலெல்லாம் பெண் கிட்டாமல் சுற்றும் அண்ணன்களைப் பார்க்கையில் இவனுக்குக் கொஞ்சம் பதற்றமாகவும் இருந்தது.

பெருமாள் கோவில் ஜோதிடன், இந்த வருடம் கண்டிப்பா உங்களுக்குத் திருமணம் ஆகிடுமென நடுரோட்டில் தன் டிவிஎஸ் வண்டியை நிறுத்தி சொல்லிவிட்டுப்போய் இரண்டு வாரங்களாயிற்று. அதே போல யாரேனும் ஒரு தந்தையார், தன் பின்னிருக்கையில் தன் வயதுக்கு வந்த மகளை அமரவைத்து பஜாஜ் டிஸ்கவரில் கூட்டிவருகையில் இவனை நடுரோட்டில் பார்த்து வண்டியை நிறுத்தி, ‘உன் பெயர் பழனிச்சாமிதானே?’ என்று விசாரித்து ‘அடுத்த வாரத்தில் கலைமகள் மண்டபத்தில் உனக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணம்.. தயாராயிரு!’ என்று சொல்லிப்போவார்கள் என நினைத்தான். ஆனால் அந்தப்பெண்ணைக் கட்டிக்கொண்டால் இவன் காதல் என்னவாவது?

ரேவதி எந்த நேரமும் இவனைப்பற்றிய நினைவுகளோடேதான் இருந்துகொண்டிருப்பதாய் இவனாக நம்பிக்கையை வளர்த்திருந்தான் இவன் மனத்தினுள். அவளை ஏமாற்றி வேறு ஒருத்தியுடன் திருமணம் என்பதை நினைத்துக்கூட இவனால் பார்க்க முடியாது. ஊருக்குள் பத்து நாட்களாகவே ரேவதியின் திருமணம் பற்றித்தான் ஆச்சரியமாய்ப் பேசுகிறார்கள். இவன் காதுக்கு நான்கைந்து நாட்கள் கழித்துத்தான் செய்தியானது வந்து சேர்ந்தது. செய்தி கேட்டதுமே ரேவதியின் அலைபேசிக்கு இவன் அழைத்தான். மூன்றாவது ரிங்கிலேயே அதை கட் செய்துவிட்டாள் அவள். சரி பாத்ரூமில் இருக்கலாம் அவள் என்று நினைத்தான். அவளாக அழைத்து விசயத்தை சொல்லிவிடுவாள் என்று காத்திருந்தான். அவள் அழைப்பு இவன் அலைபேசிக்கு வரவேயில்லை.

பின்பாக அடுத்த நாள் அழைத்தான். மூன்றாவது ரிங்கிலேயே கட் செய்துவிட்டாள். இவனுக்குள் மெலிதான பதைபதைப்பு அப்போது சேர்ந்துகொண்டது. வாழ்க்கையில் இவனது எல்லாக்கேள்விகளுக்குமான பதில்கள் இப்போது அவள் ஒருத்தியிடம் மட்டுமே இருப்பதாய் இவன் நம்பத்துவங்கினான். ரேவதி எப்போதுமே கொஞ்சம் அசட்டையானவளாக இருந்தாலும் தன்னம்பிக்கை உடையவள் தான். இவனாக அப்போது ஒரு கற்பனையை உருவாக்கி ஒருவாறு தன்னைக் குழப்பத்திலிருந்து மீட்டுக்கொண்டான்.

ரேவதி அவள் அம்மாவிடம், தன் திருமணத்திற்கு மணமகனாக வரவேண்டியவன் பழனிச்சாமி தவிர யாருமில்லை. மீறி அந்தக் கலையரசனுடன் திருமணம் நிகழ்த்த முடிவெடுத்தீர்களென்றால் என் பிணம் எல்லக்காட்டில் புளியமர வாதில் நாக்கைத்தள்ளிக்கொண்டு தொங்கும்! இது சத்தியம்!

மேலும் இரண்டு நாட்கள் இவன் அவளைக் கூப்பிடுவதை விட்டுவிட்டான். ஆனாலும் அவளைப்பற்றிய யோசனையில் தான் அந்த இரண்டு நாட்களும் கழிந்தன. மனதை வேறொன்றில் செலுத்திட அவனால் முடியாமல் போயிற்று. காதல் ஒருவனை நோயாளியாக்கிவிடும் என்பதை உணர்ந்தான். திரும்பிய பக்கமெல்லாம் அவள் சிரிப்பாணி காட்டினாள். இவனாகவே பல கற்பனைகளை உருவாக்கி மகிழ்ந்தான்.

அவள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவாள் என்று நினைத்தவன் அருகிலிருக்கும் குறுநகரில் காருக்கு சொல்லி வைத்திருந்தான். உள்ளூர் நண்பர்களுக்குத் தகவல் தெரியவே கூடாதென பிடிவாதமாய் இருந்தவன் குறுநகரில் பழகிய நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தான். சாட்சிக்கையெழுத்து இடுவதாக அவர்கள் வாக்குருதி கொடுத்திருக்கிறார்கள். ’கவலைப்படாதீங்கண்ணா! நாலுவருஷப்பழக்கமுன்னு சொல்றீங்க.. அந்தப்பொண்ணு கண்டிப்பா உங்ககூடத்தான் வாழுங்கண்ணா! நீங்க சாமத்துல கூப்பிட்டாலும் நாங்க ரெடி!’ என்றார்கள். அப்படி திருமணம் நிகழ்ந்தபிறகு இரண்டு வருடமேனும் உள்ளூர் மண்ணில் இவன் பாதமானது படக்கூடாது என்று முடிவெடுத்திருந்தான்.

ரேவதி இடைப்பட்ட காலத்தில் தன் அம்மாவைப்போய்ப் பார்த்தேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் என்றால் காதோடு அவளுக்கொரு அப்பட்டம் போடத்தானே வேணும்! நான் பெருசா? உங்க ஆயா பெருசா? கேக்கத்தானே வேணும்! கருமம் பிடித்த கற்பனைக்குதிரையானது ஓர் இடத்தில் நில்லாமல் கண்டபடி ஓட்டமாய் ஓடிக்கொண்டேயிருந்தது. அதற்கு ஓய்வென்பதேயில்லை. நடுஇரவிலும் கூட ‘டக்கிடிக் டக்கிடிக்கென’ ஓய்வெடுக்காமல் ஓடியது. ரேவதியும் இப்படியான கருமம் பிடித்த குதிரையொன்றை ஓய்வெடுக்காமல் ஓட்டிக்கொண்டிருப்பாளென நம்பினான்.

எப்போதும் வழுக்குப்பாறைக்கு இப்படிச் சுற்றியடிக்காமல் தெற்கிலிருந்து எளிதாக வந்து சேர்ந்துவிடுவான் பழனிச்சாமி. இன்றுமட்டும் ஏனோ ஒரு சுற்று சுற்றித்தான் போவோமே! என்று மாற்று வழியொன்றைக் கண்டறிந்தவன் போலக் கரட்டினுள் நுழைந்துவிட்டான். உள்ளே செல்லச் செல்ல மரங்களின் அடர்த்தி கூடிவிட்டதைக்கண்டான்.

அவனுக்கு எதிர்க்கே புள்ளிமானொன்று பல்லைக்காட்டிக்கொண்டு கிடந்தது கிலுவை மரத்தடியில். அதன் உடம்பைச்சுற்றிலும் ஈக்கள் மொய்த்தவண்ணமிருந்தன. வாசம் எதுவும் இவன் மூக்குக்கு அடிக்கவில்லை. எப்படியும் நாற்பது கிலோவுக்கும் மேலிருக்கும். இறந்து இரண்டு நாட்களாகியிருக்கலாமென நினைத்தான். தண்ணீர் கிட்டாத குறையாக இருக்கலாமென நினைத்துக்கடந்தான். மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் பாதையானது காய்ந்த மணலால் நிரம்பிக்கிடந்தது. அப்படியே சரிந்து சித்தங்கூரியம் படுத்துக்கொள்ளலாம்போல நெகு நெகுவென சலித்துப்போட்டது போல் மணல் இருந்தது.

ஆண்மயில் ஒன்று நான்கைந்து பெண்மயில்களுக்கருகில் நின்றவண்ணம் இரை பொறுக்கிக்கொண்டிருந்தது. இவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவைகள் தலையை உயர்த்திப்பார்த்துவிட்டுத் தம் காரியத்தில் ஈடுபட்டன. அப்படி என்னதான் கீழே கொட்டிக்கிடக்கிறது? என்று யோசித்தபடியே நகர்ந்தான் பழனிச்சாமி. ரேவதி இன்று எப்போதும்போல சுடிதார் அணிந்து வருவாளா? இல்லை சேலையிலா? சேலையில் அவளை ஒன்றிரண்டுமுறை பார்க்கையில் இரண்டு பெண்குழந்தைகள் பெற்றவள் போல இருப்பதாய்ச் சொல்லியிருந்தான். இவன் கடவாயைத் திருகியவள், ‘இருப்பேன் இருப்பேன்! ஏன் இருக்க மாட்டேன்!’ என்றாள்.

இதனால் அதிகமாய் அவள் சேலை அணிவதேயில்லை. பலமுறை இந்த நான்கு வருடங்களில் அவள் அம்மா உறவுக்காரர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டதென்றால் இரவு நேரத்தில் இவனை வரச்சொல்லிவிடுவாள். அந்த சமயங்களில் நைட்டியுடனோ அல்லது டீசர்ட் அணிந்தபடியோதான் வந்துசேர்வாள். வந்ததும் இவன் மடியில் படுத்துக்கொள்வாள். எப்போதுமே காணாத நட்சத்திரங்களின் வர்ணங்களைப்பற்றிப் பேசுவாள்.

இவன் கையானது அவளின் நெஞ்சுப்பகுதியில் அழுந்தப்பதியும் சமயத்தில், ‘ஸ்ஸ்ஸ்’ சென முனகுவாள்.  கொஞ்சம் அழுந்தப்பிடித்தான் என்றால், ‘வலிக்குது பன்னி!’ என்று கீச்சுக்குரலில் சப்தமிடுவாள். இவன் அழுத்தவேண்டுமென்றே வெறுமனே உள்க்கவச உடையின்றி வந்திருப்பாள் அவள். வயிற்றுப்புறத்திற்கு  கீழிருக்கும் பெயர் சொல்லமுடியாத உறுப்பும் கவச உடுப்பின்றித்தான் இருக்கும். எல்லாம் இவனது சிரமங்களைப் போக்கத்தான். அவனுக்கு ராக்காலங்களில் அவளின் உடல்பகுதியில் எந்த இடத்தில் கைவைத்தாலும் நெகு நெகுப்பு தீர்வதேயில்லை. அப்படியே வழுக்கிச்செல்லும் உடல்வாகு ஒழுங்குற அமையப்பெற்றவள் ரேவதி, என நினைத்துக்கொள்வான்.

கிட்டத்தட்ட வழுக்குப்பாறையை நெருங்கிவிட்டோமா? அல்லது அதைத்தாண்டிவிட்டோமா? என்று அடர்த்தியான மரக்கூட்டங்களுக்கிடையில் அவனுக்கு சந்தேகமாய் இருந்தது. ரொம்ப காலமாயிற்று இப்படி இவன் வந்து. மனிதன் காலடியே படாத பகுதியாக இப்போது கரடு மாறிப்போய்விட்டது. காய்ந்த விறகுகள் பொறுக்கக்கூட யாரும் இதனுள் வருவதில்லை. கேஸ்சிலிண்டரும் அடுப்பும் வந்து பரவலானபின் விறகுகள் பொறுக்க அவைகள் யாரையும் அனுமதிப்பதில்லை. ஒருவழியாய் இவன் வழுக்குப்பாறையை வந்தடைந்திருந்தான்.

ஆச்சரியம் என்னவென்றால் ரேவதி முதல்முறையாக இவனுக்காய் இவன் வரவை எதிர்பார்த்து ஒரு பாறை இறக்கத்தில் கொஞ்சமாய் நிழல்விழும் இடத்தில் அமர்ந்திருந்தாள். இத்தனைக்கும் அவள் தான் இன்று காலை பத்துமணிவாக்கில் இவனைக்கூப்பிட்டு ‘இன்று நாலரை போல சந்திக்கறோம் நாம!’ என்று சொல்லியிருந்தாள். அப்போதிருந்து இவன் மனம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. அவள் ஒரு மிகப்பெரிய திட்டத்தோடுதான் சந்திக்க வருகிறாளென நினைத்தான். ‘என்னை இப்போதே இங்கிருந்து எங்கேனும் கூட்டிப்போய்விடு பழனி!’ என்று சொல்லி கண்ணீர் விட்டு அழவும் வாய்ப்பிருக்கிறது.

அழும் அவளைத் தன் நெஞ்சின்மீது சாத்திக்கொண்டு அவளின் முடிக்கற்றைகளைக் கோதிவிட்டபடியே, “அழாதடி கிறுக்கி! நான் இருக்கேண்டி உனக்கு!” என்றெல்லாம் சொல்ல வேண்டும். அந்த நிமிடங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு நம்பிக்கைதரும் வார்த்தைகளை விதைக்கும் சமயத்தில் ஆண் நிச்சயமாகத் தன்னை ஆணென உணருவான். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோமெனப் பெண்ணும் உணர்வாள்.

வழுக்குப்பாறைக்குழியில் எப்போதும் நின்றிருக்கும் பாசம்பிடித்த தண்ணீர் சுத்தமாகவே இல்லை. ரொட்டி ரொட்டியாக வெடிப்புகளுடன் காய்ந்து கிடந்தது. இவன் நிதானமாய்ச் சென்று அவளையொட்டி அமரவும், அவளது இடுப்பைத் தன் வலது கையால் கோர்த்துக்கொள்ளவும் முயற்சித்து அமர்ந்தான்.

“இப்பிடி இடிச்சுட்டு உட்காராட்டித்தான் என்ன உங்களுக்கு? அப்படி எதுக்கே தரையில உட்கார்ந்தா கொறஞ்சா போயிடுவீங்க? நான் வேணா கீழ உட்கார்ந்துக்கறேன். நீங்க இப்பிடியே உட்காருங்க!” என்றவள் அவளாக எழுந்து குனிந்தவாக்கில் முன்புறமாய் இரண்டு அடிகள் வைத்து இவன் முகம் பார்த்தபடி அமர்ந்தாள். இவனுக்குத் திடீரென, என்னவாயிற்று இவளுக்கு? என்ற அதிர்ச்சி ஒருபக்கம் தாக்கியிருந்தது. இத்தனை வருடங்களில் இல்லாத புதுப்பழக்கத்திற்கு வந்திருக்கிறாளே!

“என்னோட சுடிதார் எப்படியிருக்குது? கலர் நல்லாயிருக்கா?” என்றாள். இவன் அப்போதுதான் வெல்வெட் துணியில் சாம்பல்நிறத்தில் அவள் அணிந்திருக்கும் சுடிதாரைப்பார்த்தான். அவன் பார்வை அவளின் நெஞ்சுப்பகுதிக்கும் போனது. குத்திட்டவைகள் போல இருப்பதை இவன் கவனிப்பதைக்கண்டதும் கழுத்தில் மாலையாய்ச் சுற்றியிருந்த ஷாலை எடுத்து விரித்துப் பாதுகாப்பாய் அவைகளைப் போர்வையாய்ப் போர்த்திக்கொண்டாள்.

“கலையரசனைப்பத்தி என்ன நினைக்கறீங்க நீங்க?” என்றாள் ரேவதி இவனிடம்.

“நான் உன்னைப்பத்தி மட்டும்தான் நினைச்சுட்டு இருக்கேன் ரேவதி!’ என்றான் இவன். அவளிடமிருந்து ‘பச்’சென ஓர் ஒலி இவனுக்குக் கேட்டது. ‘இங்கே ஈரமாயிடிச்சு எனக்கு!’ என்று போர்வைக்குள் இருந்த நெஞ்சுப்பகுதியை இவனுக்குக் கைகளால் காட்டினாள் ரேவதி. அப்போது அவளுடைய விழிகள் ஒரு ஆணினுடைய விழிகளைப்போன்றே இவனுக்குத்தெரிந்தது.

யாரோ நடுஇரவில் இவன் படுக்கையறை ஜன்னலைத்தட்டி இவனை விழிப்புறச்செய்து அது நீக்கப்படாவிட்டாலும் , ‘சீக்கிரம்டா, சித்தங்கூரியத்துல உலகம் அழிஞ்சு மண்ணுக்குள்ளார போகப்போவுது’ என்று சொல்லிப்போவது மாதிரி இருந்தது இவனுக்குள். இவனுக்கான இடத்தை எடுத்துக்கொள்ள ஒருவன் வந்து சேர்ந்தேவிட்டான்தான் போல! கறுத்த இருட்டான ஆர்வமொன்று அவனது சிந்தனைக்குள் அப்போது நுழைந்து அமர்ந்தேவிட்டது.

“அப்பிடியே என்னை வெறிச்சுப்பார்த்துட்டே உட்கார்ந்துட்டா எப்படிங்க? சொல்லுங்க. எங்கம்மா, எங்க மாமா, அத்தையெல்லாம் கலையரசனை நல்ல ஆள்னு சொல்றாங்க. உங்களுக்கு எதாச்சிம் தப்பா கலையரசனைப்பத்தி எதாச்சும் தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க!” என்றாள். இவன் கலையரசனை மனத்தினுள் கொண்டுவந்து நிறுத்தினான். இருந்தும் அவளது குழந்தைத்தனமான முகத்தைக்காண்கையில் உலகத்தின் அனைத்து அழகையும் ஒருங்கே பெற்றவள் இவளேதான் போல, என நினைத்துப் பெருமூச்சு ஒன்றை அப்போது அவளுக்குக் கேட்கும் விதமாகவே வெளியில் அனுப்பினான் பழனிச்சாமி. நீண்ட நெடுநாட்களாக அவளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட கேள்விகளில் அதுவும் ஒன்று என்பது போல அவள் கண்களைப்பார்த்தவண்ணம் தொண்டையைச் செருமினான் இவன்.

“கலையரசன் நல்லவன். எனக்கும் இரண்டு வயது மூத்தவன். அவன் பையன் நகரில் பத்தாவதோ என்னவோ படிக்கிறான் என்றுதான் தெரியும். அவனுக்கும் அவன் மனைவிக்கும் எதோ பிரச்சனை. அதனால் அவள் இவனை விட்டு பையன் பிறந்த சமயத்திலேயே போய்விட்டாள். கோர்ட்டில் டைவர்ஸ் வழக்கு போய்க்கொண்டிருப்பதாய்த் தெரியும். கலையரசன் நல்லவன். நிலபுரோக்கராக அவன் செல்வதால் இப்போது அவனிடம் காசுபணம் நிறைய இருக்கிறது. அவன் நல்லவன்தான். ஆனால் எதற்காக முதல்மனைவி அவனை விட்டுப் பிரிந்தாள்? தெரியாது” என்றான் பழனிச்சாமி.

“அப்பாடா! நீங்களும் கலையரசனை நல்லவர்னுதான் சொல்றீங்க எல்லாரையும் போல! அவரு வீட்டுலயும் அம்மாவும் அவரும் மட்டும்தான் உங்க வீட்டுல மாதிரியே! கோர்ட்ல டைவர்ஸ் அவருக்கு கிடைச்சிடுச்சாம் போன மாசமே. அவரு அம்மாவுக்கு வயசாயிட்டதால வீட்டு வேலைகளை செய்ய முடியறதில்லையாம். அதனால அவங்கம்மாதான் எங்கம்மாகிட்ட பேசியிருக்கு. எனக்கு நகை நிறைய போட்டு கட்டிக்குடுக்க எங்கம்மா கையில ஒன்னுமில்ல. நானா சம்பாதிச்சு நாலு பவுன் தான் வச்சிருக்கேன். ஆனா கலையரசன் எனக்கு இருபது பவுன் போடுறாப்டி. அவங்க வீடு கட்டி இப்ப என்ன நாலு வருஷம்தான் இருக்கும். ஆனா மாடிவீடு. ஏசி கார் இருக்கு. புல்லட் இருக்கு. காடு இருபது ஏக்கரா இருக்கு. இதெல்லாம் எங்க மாமன் தெளிவா சொன்னாரு. என்ன.. ரெண்டாந்தாரமா நான் கலையரசனைக் கட்டிக்கிறதான்னு பத்து நாளா ஒரே கொழப்பமா இருந்துச்சு. நினைச்சுப்பார்த்தா அசிங்கமாவும் தெரிஞ்சிச்சு. ஆனா உங்களைக் கட்டிக்கிட்டா என்ன என்ன கிடைக்கும்னும் யோசிச்சேன். உங்ககிட்ட காடு கிடையாது. வீடு இருக்கு. நீங்க வேலைக்கு போவீங்க ஒருபுத்தி வந்தா! மறுபுத்திவந்தா போக மாட்டீங்க! உங்ககிட்ட பைக்கு ஒன்னுதான் இருக்கு. எனக்குன்னு தேடிவர்ற வாய்ப்பை தவற உட்டுறக்கூடாதுன்னு இந்த பத்து நாளா என்கிட்ட உட்கார்ந்து நம்ம ஊருக்காரிங்களும் படிச்சுப்படிச்சு சொன்னாங்க. ஒரு கட்டத்துல நான் சரினுட்டேன்.”

இவனுக்குள் இருந்த எல்லா எதிர்பார்ப்புகளும் சுக்குநூறாய் உடைந்தவண்ணமிருந்தன.  அழுகை வரும்போலவுமிருந்தது. அழக்கூடாதென குனிந்து கால் முட்டிகளுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டான். பாறை வெடிப்புற்று இவனை உள்ளே இழுத்துக்கொண்டால் நன்றாக இருக்குமென நினைத்தான். உள்ளத்திலிருந்த எதோவொன்றை அந்த சமயத்திலேயே என்றென்றைக்குமாய் உருவியெடுத்து வீசியெறிந்துவிடமுடியாத சூழலில் அகப்பட்டுக்கொண்டதாய் நினைத்தான்.

இவனுக்கென இவளொருத்தி இருந்ததினால்தான் இத்தனை காலம் தன் துக்கங்களையெல்லாம் மறந்து சிறகடித்துக்கொண்டிருந்தான். எல்லாமும் இல்லையென்றானபின் சிறகுகள் உதிர்ந்துவிட்டதை உணரத்தெரியாமல் அமர்ந்திருந்தவன் முடிவாய் மேலும் இவள் என்னதான் சொல்லப்போகிறாளென அவள் கண்களைத் தலையுயர்த்திப்பார்த்தான். அவளது பெருத்த கீழுதடு நன்றாய்க் கடிபட்டிருப்பதையும், அவளது ஆணுக்குரிய கண்களில் ரெண்டு சொட்டு ஈரமிருப்பதையும் கண்டவன் கொஞ்சம் நம்பிக்கையாய் நிமிர்ந்து அமர்ந்தான்.

“எனக்கு சங்கடமில்லீன்னு நினைச்சுட்டீங்களா? நீங்க ஒவ்வொரு தாட்டியும் எனக்கு போனு பண்ணுறப்பெல்லாம் எடுத்துப்பேசலாம்னு நினைப்பேன். ஆனா என்ன பேசுறது போன்ல? உங்களை நேர்ல பார்த்து பேசணும்னுதான் நினைச்சேன். அப்படி ஒருநாளாச்சிம் நீங்க கூப்பிட்டு போனு எடுக்காம நான் இருந்திருப்பனா? ஆனா எல்லோரும் என்மேல அவ்ளோ ஆசையா இருக்காங்க. என் கல்யாணத்தை முடிச்சுட்டா திருப்தின்னு நினைக்கிறாங்க. அவங்க எல்லாருக்குமே உங்ககூட எனக்கிருக்கிற பழக்கம் தெரியுது. ஆனா உங்களையும் அவங்க குற்றமா ஒரு வார்த்தை என்கிட்ட பேசமாட்டேங்கறாங்க. பழகுறது இந்த வயசுல சகஜம்னு சொல்றாங்க. ஆனா வாழ்க்கைன்னு வந்துட்டா விவரமா இருக்கணும்னு சொல்றாங்க.” அவள் பேசப்பேச நில அதிர்வு ஏற்பட்டதுபோலத்தான் இவனுக்கிருந்தது.

பாறையைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டான். அவனது நம்பிக்கையே நாசுக்காய் இவனுக்கு விளக்கிச் சொல்கிறது தனக்கான பிடிமானங்கள் எங்குள்ளதென. இது முடிவுக்கு வந்துவிட்டது என்றபோது அப்படியே பாறையில் சாய்ந்து விடலாமென்றிருந்தது. அவளது விழிகளோ சுடர்விட்டு பிரகாசிக்கும் நிலைக்கு இப்போது வந்துவிட்டதைக்கண்டான். தன் வட்டிலில் விழுந்த எலும்புத்துண்டங்களை வாலை ஆட்டியபடி நோக்கும் நாயைப்போல அவளைப்பார்த்தான். எதுவோ உலகில் மிகத்தீவிரமாய் செயல்படுகிறது. அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஒவ்வொருத்தனின் துன்பத்தை அது கிட்டேயிருந்து காண்கையில்தான் இன்பத்தைத் தன்னுள் பெருக்கிகொள்கிறதென நினைத்தான். தினத்துக்குமான வாழ்க்கையில் துன்பத்தை நுழைத்து மகிழும் ஆவியாகக்கூட அது இருக்கலாம். அதுதான் வாழ்க்கையை எங்கோ  தூரநின்றபடி வேறுதிசைக்கு நகர்த்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

வெற்று வானத்தை தலையுயர்த்தித் தன் கருவிழியால் பார்த்தவள் மீண்டும் இவனைப்பார்த்தவாறு தன் கீழுதட்டைக்கடித்துக்கொண்டாள். இவனுக்கு இப்போது எதையேனும் சொல்லிவிட்டுச் சீக்கிரமாய் இங்கிருந்து சென்றுவிட வேண்டுமென்று அவள் ஆசைகொண்டாள். தன்  துப்பட்டாவை  விலக்கிவிட்டு நெஞ்சுப்பகுதியில் கையை சுடிதாரினுள் நுழைத்தவள் தன் திருமண அழைப்பிதழை வெளியிலெடுத்தாள். பின்பாக அதை இவனை நோக்கி நீட்டியவள், ‘கல்யாணத்துக்கு நேரம் காலமா வந்து சேர்ந்துடுங்க பழனி. கலையரசன் வீட்டுல இருந்தும் அழைப்பு வரும் உங்களுக்கு. இருந்தாலும் என்மேல எதாச்சும் கோபம் வச்சுட்டு நீங்க வராமப் போயிடக்கூடாதில்லையா!’ என்றாள். கைநீட்டி வாங்கியவனுக்கு அதற்கும்மேல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனி இவள் அவ்வளவுதான் என்கிற வெறுமை அவனை தாக்கியடிக்க குபீரென அழுகை வெடித்துவிட்டது.

என்ன இப்படியாகி விட்டதேயென பதைபதைப்புடன் எழுந்தவள் இவனருகில் அவசரமாய் அமர்ந்து தன் நெஞ்சில் இவன் முகத்தை இழுத்துப்பொத்திக்கொண்டாள். ‘சின்னப்பசங்களாட்டம் அழக்கூடாதுங்க பழனி! நான் என்ன ஊரை விட்டா வெளியூருக்கு கட்டீட்டு போறேன்? நான் இங்க தான் இருக்கப்போறேன். நாம எப்பயும்போல பழகலாம் பழனி. இப்ப எங்கம்மா இருக்கப்பவே நான் உங்களைத்தேடிவந்து பழகலையா? எனக்கு கலையரசன் இருந்தா என்ன? நீங்களும் இருக்கீங்க! இருப்பீங்க பழனி! சித்தே அழுவாச்சியை நிறுத்துங்க.. எனக்கு சங்கடமா இருக்கு..” என்று சொல்லிக்கொண்டே போனாள் ரேவதி.

இவன் தேம்பலும் நின்றது. அவள் எழுந்துகொண்டாள். சீக்கிரமாய் இந்த இடத்திலிருந்து தப்பித்துப்போய்விட வேண்டுமென்ற பரபரப்பு அவளைச் சூழ்ந்துகொண்டது. இங்கே ஏதோ நீரூற்று இருப்பது போலவும், அது இப்போது அமைதியாய்க் கொந்தளித்துக்கொண்டிருப்பதுவும்.. சீக்கிரமே மிகப்பெரிதாய் அது வெடித்து இவளையும் தன்னுள் இழுத்து ஆழமாய் இழுத்துப்போய் மூழ்கடித்து விடப்போவதாயும் நினைத்து மருண்டவள் பின்பாக அவனிடம் வார்த்தைகள் எதையும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.

பழனிச்சாமிக்கு இருள் அங்கே சூழ்ந்து இரவுப்பூச்சிகளின் ரீங்காரங்கள் ’கொய்ய்ய்யென’ சப்தமிடுவது வரை எதுவுமே நினைப்பில்லை. அவளின் வார்த்தைகள் பின்பாக அவன் காதுகளில் அவள் திருமணம் முடிந்து பத்து நாட்களுக்கும் மேலாகியும் ஒலித்தபடியே இருந்தது. என்ன இருந்தாலும் என் ரேவதி அல்லவா! யார் அவளுக்குப் பக்கதுணையிருந்தாலும் என்னை விட்டுவிடுவாளா என்ன? என்றே எந்த நேரமும் யோசித்தபடியிருந்தான். கோவிலின் திண்டின்மீது எப்போதும் அமர்ந்திருந்தான். எந்த நாளிலும் தாடியோடு இவனைப்பார்த்தறியாதவர்கள் ‘என்ன பழனிச்சாமி தாடியெல்லாம் உட்டுட்டே?’ என்றார்கள். ’பழனிக்கி ஒரு மொட்டை போடுறதா வேண்டுதல்!’ என்று பதில் சொன்னான்.

கலைரசனின் கார் ஊருக்குள் இருந்து கோவில் வழியாகத்தான் சாலையைப்பிடித்து வேகமெடுக்கும். தினமும் ஏதோ ஒரு நேரத்தில் இவன் அந்தக்காரை கண்ணில் காண்கிறான். முன்சீட்டில் கழுத்து நிறைய நகையணிந்து முகமெங்கும் பவுடர் அடித்து கலையரசனோடு சிரித்துப்பேசியபடி அமர்ந்திருக்கும் ரேவதியைப் பார்க்கிறான். அவளுக்கு அலைபேசியில் அழைப்பைப் போட்டுவிட்டு வழுக்குப்பாறைக்குச் செல்லலாமென நினைப்பான். புதுப்பொண்டாட்டியை இன்னும் பத்து நாட்கள்தாம், கலையரசன் கிட்டவே வைத்திருந்து கொண்டாடட்டுமே! என்று பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்பதாய் நினைத்து கோவில் திண்டில் அமர்ந்திருப்பான். தான் கூப்பிட்டதும் ரேவதி வழுக்குப்பாறைக்கு வரத்தான் போகிறாள் என்று முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தான் பழனிச்சாமி.

இப்படியிருக்க இவன் அம்மா அன்று வீட்டின்முன்பாக வளர்க்கும் பாலைக்கீரையை அறுவடை செய்து கட்டுப்போட்டு வைத்திருந்தது காலையில். ஊருக்குள் இன்னார் இன்னார் வீடுகளில் இதைக்கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்துடேன் பழனி! என்று இவனிடம் இறைஞ்சியது. அம்மா சொன்ன வீடுகளின் வரிசையில் கலையரசனின் வீடு இல்லாமல் போகவே இவனுக்குக் கடுப்பாய் இருந்தது. ரேவதியிடம் இந்த ஒருமாத காலமாகவே ஒரு வார்த்தை பேசாமல் பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான் இவன்.

அம்மாவிடம் ஒன்றும் சொல்லாமல் கீரைக்கட்டுகளை பையில் எடுத்துப்போட்டுக்கொண்டு ஊருக்குள் மெதுவாக நடையிட்டான். நேராக ஊருக்குள் செல்லாமல் கோவில் திண்டில் வந்து அமர்ந்துகொண்டான். தண்ணீர்க்குடமுடன் செல்லும் பெண்களில் இவனது நண்பர்களின் மனைவியர் பைக்கட்டைக்கண்டு, ‘அண்ணன் என்னமோ பையில வச்சிருக்குதக்கோவ்!’ என கிட்டே வந்து ஆளுக்கு இரண்டு புடிகளைத் தூக்கிப்போனார்கள். அந்த சமயத்தில் ஊருக்குள்ளிருந்து கலையரசனின் புல்லட் தட தடத்தபடி கோவிலைத்தாண்டி வடக்கே சென்று திரும்பி மேற்கே சென்றது. இவன் பரபரப்புடன் பையைப்பார்த்தான். மீதமாய் இரண்டு கட்டுகள் கீரை இருக்கவே எடுத்துக்கொண்டு கலையரசனின் வீடு நோக்கி வேகமெடுத்தான்.

கலையரசனின் வீட்டு முகப்பு கேட்டானது உள்புறமாய் கொக்கி போடப்பட்டிருந்தது. அதை கைவிட்டு விலக்கிவிட்டு உள்ளே சென்றான்.  மொசைக்தரையில் கவனமாய் நடந்தவன் சாத்தப்பட்டிருந்த பெரிய கதவினைக்கண்டான். பின்பாக காலிங்பெல்லை அழுத்தினான். கதவு நீக்க இரண்டு நிமிடங்களாயிற்று. கதவை நீக்கிய ரேவதி நைட்டியில் இருந்தாள். இவனை ஆச்சரியமாய்ப் பார்த்தவள், ‘உள்ள வாங்க பழனி! ஏது காலங்காத்தால என் வீடு தேடி வந்திருக்கீங்க?’ என்று சென்றவள் பின்னால் சென்றவன் ஹாலின் அகலத்தை கண்டு எதிர்ச்சுவற்ரைப்பார்த்தான். அங்கே நாற்பது இன்ச் டிவி சுவற்றில் தொங்கியது. ஆள் அமர்ந்தால் காணாமல் போகுமாறு ஷோபா இருந்தது. வீட்டினுள் கமகமவென மணம் இருந்தது. அது ஊதுபத்தியின் வாசமாகக்கூட இருக்கலாமென நினைத்தான் பழனிச்சாமி.

“டீ சாப்பிடறீங்களா? வச்சுத்தர்றேன். வீட்டுல அவரு டீ குடிக்கிறதேயில்லை. எப்பயும் குடிக்க மாட்டாராம் பழனி. அதனால நானும் டீக்குடிக்கிறதை விட்டுட்டேன். அதென்ன பையில?” என்றாள். இவன் பையிலிருந்து பாலைக்கீரைக்கட்டு இரண்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். ‘புடி பத்து ரூபாய்ங்களா பழனி? இதா பணம் எடுத்தாரேன்’ என்று நகர்ந்தவளின் கைப்பிடித்து இழுத்து அணைத்தான் பழனிச்சாமி. ‘வாய்ப்பிருக்கப்ப என்னைக் கூப்பிடு ரேவதி! உன் நினைப்பாவே இருக்குது எனக்கு! நாம் வழுக்குப்பாறையில சந்திப்போம்!’ என்றான் பழனிச்சாமி அவளிடம். அவளோ உடனேயே இவன் பிடியை விலக்கிவிட்டு சுவரோடு ஒதுங்கி நின்றாள்.

“இனிமேல் உங்களை நான் எப்பயும் கூப்பிடமாட்டேன் பழனி. உங்க நெம்பரை நான் டிலைட் பண்ணிட்டேன். எனக்குனு ஒரு வாழ்க்கை ஆரம்பிச்சிடுச்சு. உங்ககூடவெல்லாம் முன்ன மாதிரி பழகினா என்னை ஊரு என்ன சொல்லும்? தேவிடியான்னு உங்களால பேரு வாங்கணுமா நானு? போயி உங்கம்மாட்ட பொண்ணு பார்க்கச்சொல்லி அவளைக் கட்டிக்குங்க! அதான் நல்லது! அவரு செட்டிதோட்டம் வரைக்கும்தான் போயிருக்காரு. வந்தாருன்னா உங்களுக்குத்தான் பிரச்சனை”

“அப்புறம் நீதான ரேவதி அன்னிக்கி கலையரசன் இருந்தாலும் உங்களை வந்து நான் எப்பவும் போல பார்ப்பேன்னும் பழகுவேனும் சொன்னே! அது பொய்யா அப்ப?”

“லூசா நீங்க? தள்ளிப்போங்க நீங்க மொதல்ல.. மொதல்ல வெளிய போங்க.. அப்புறம் நான் கத்தீடுவேன் பார்த்துக்கங்க!” என்று அவள் சொல்கையில் வெளியே புல்லட்டின் ஒலி தடதடத்துக்கேட்டது இருவருக்குமே! பழனிச்சாமி பதைபதைப்பை முடிந்த மட்டிலும் கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டினுள்ளிருந்து வெளியில் வந்தான். அப்போது தான் புல்லட்டை ஓரமாய் நிப்பாட்டிய கலையரசன் இவனைப்பார்த்து, ‘அப்புறம் பழனி.. என்ன விசயமா வந்தே?’ என்றான்.

“பாலைக்கீரை மூனு கட்டு இருந்துச்சுங்க கலையரசு.. சின்னம்மாவுக்கு குடுத்துட்டு போலாம்னு வந்தேனுங்க!’ சொல்லியபடியே இவன் இயல்பாய் இருப்பதுபோல் நடிப்போடு வெளியில் வந்தான். கலையரசன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டுக்குக்கொடுத்தபடி தீக்குச்சியை உரசினான்.