அடுப்பில் வைத்திருக்கிற பால் அடக்கமாட்டாமல் பொங்குவதைப் போல, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது விமலாவிற்கு. அவளை எங்கே இருந்தெல்லாம் வந்து பெண் கேட்டிருக்கிறார்கள் தெரியுமா? தஞ்சாவூரில் கல்லூரிகள் நிறைய வைத்து நடத்தும் குடும்பத்தில் இருந்துகூட வந்து கேட்டார்கள். ஆனால் அதெல்லாம் வேண்டாம், பிரகாஷ்தான் வேண்டுமென, அவளது வீட்டின் புழக்கடையில் வசிக்கிற, அந்த உடும்பின் பிடிமானத்தைப் போலப் பிடிவாதமாக நின்றாள். அதற்கான பலனை அப்போது அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தாள்.

விமலாவும் பிரகாஷூம் ஒரே கல்லூரியில் ஒன்றாக மேற்படிப்புப் படித்தவர்கள். தென்கோடி மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். நெல்வயல் சூழ்ந்த தஞ்சையைச் சேர்ந்தவள் அவள். கடலுக்கும் நிலத்துக்கும் தனித்தனிக் குணங்கள் இருக்கின்றன அல்லவா? எப்போதும் அலையடித்துக் கொண்டிருக்கிற கடலின் மடியில் இருந்து வந்த பிரகாஷ், அதற்கு நேர் எதிர்மாறாக அமைதியாக இருப்பான். இவளோ அமைதியின் பள்ளத்தாக்கில் இருந்து வந்துவிட்டுக் கடல் வந்து மோதும் கரையைப் போலக் கொந்தளித்துக் கொண்டிருப்பாள். எதிரெதிர் முனைதான் எப்போதும் ஈர்க்கும் என்பது விதியல்லவா?

விமலாவைப் பொறுத்தவரை செல்வச் செழிப்பில், நிலத்தில் எப்போதும் தேங்கியிருக்கும் நீரைப் போல மிதப்பவள். தென்னையே போதும் போதுமென வயிறு நிறைந்து மிதப்பில் வளர்கிற நிலமது. பிரகாஷூம் ஒன்றும் இல்லாதவன் இல்லை. அவனுடைய அப்பா பெரிய மீன்பிடிப் படகு ஒன்றும்கூட வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இரு குடும்பங்களும் ஒத்துக் கொள்ளவே இல்லை. “ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? யாராலயும் ஒண்ணும் செய்ய முடியாது” என்றாள் விமலா. அதற்கு அவன், “சொத்துக்காக உடனடியா அடாவடியா பண்ண மாதிரி இருக்கும். காத்திருக்கலாம். அப்புறம் இன்னொன்னு என்னை விட்டு நீ எப்பன்னாலும் போலாம்ங்கற ஆப்ஷனும் இருக்கணும்” என்றான். அதைக் கேட்டவுடன் சப்பென இருந்தது விமலாவிற்கு. கூடவே எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்கிற வார்த்தை காய்ந்துதிர்ந்த நெருஞ்சியாய்க் குத்தியது. அதற்காகவா வருகிறேன்? என நினைத்துக் கொண்டாள். அப்புறம் வேறு சிந்தனையும் வந்தது.

அந்தக் காலத்து ராஜாக்களைப் போலக் குதிரையில் வைத்துத் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டாமா இந்நேரம்? ஏன் இப்படித் தொம்மென இருக்கிறான்? என யோசித்தாள் விமலா. அவன் காத்திருந்தது வீண் போகவில்லை. விமலாவின் அப்பா, “ஏதோ எங்களால முடிஞ்சதை செஞ்சிர்றோம். நீங்க போய் கல்யாணம் பண்ணிக்கோங்க. நாங்க வரலை. பிற்பாடு என்னைக்காச்சும் மனசு மாறினா வர்றோம்” என்று தெளிவாகச் சொல்லி விட்டார். அதற்கு மேல் தள்ளிப் போடமுடியாது என்கிற கட்டத்தில் விமலாவுமே அரை மனத்துடன்தான் திருமணத்திற்கே வரச் சம்மதித்தாள்.

“எங்கப்பாம்மா கல்யாணத்திற்கு வரலைல்ல. அத மாதிரி உங்க அப்பா அம்மாவும் வரக்கூடாது” என்றாள் விமலா. யாரோ பின்னால் இருந்து பொடணியில் அடித்த மாதிரி இருந்தது அவனுக்கு. “என்ன பேசற விமலா? தெரிஞ்சுதான் பேசறீயா? எங்கப்பாம்மாவ எப்டீ வர வேண்டாம்ணு சொல்ல முடியும். ரெம்பக் கொடூரமா இருக்கு. எனக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம்” என்றான் பிரகாஷ். “உனக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டு வருவேன். நீ ஒரு சின்ன விஷயத்தைக்கூட விட்டுத்தர மாட்ட?” என்றாள். “எது சின்ன விஷயம்?” என்று எக்கி முன்னேறினான் பிரகாஷ்.

அவர்களுடன் இருந்த நண்பர்கள்தான் சமாதானப்படுத்தினார்கள். “அவ சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்கு. அவ உங்கப்பா அம்மாவை முழுக்கவா விடச் சொல்றா? கல்யாணத்துக்கு அவங்க வீட்டில வரலை. இவள் இன்னொரு வீட்டோட நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்கறதை அவங்க பார்த்தா எப்டீ இருக்கும்? உனக்கும் வேண்டாம் அவளுக்கும் வேண்டாம். பேசாம ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோங்க. ரிசப்ஷன் அது இதுன்னு எந்த எழவும் வேண்டாம். காசுக்குப் பிடிச்ச கேடு. ஒருவகையில அதுவும் நல்லதுக்குத்தான்” என்றான் பிரபு.

அவன் சொல்வதே சரியென்று எல்லோருமே முடிவாக எடுத்தார்கள். பிரகாஷிற்குத்தான் அவனுடைய குடும்பத்தைச் சரிக்கட்ட மூச்சு முட்டிப் போய்விட்டது. “என்னைக்காச்சும் கண்ணைக் கசக்கிட்டு இந்தப்பக்கம் வா. அன்னிக்கி உன் காலை ஒடைச்சு அடுப்பில வைக்குதேன்” என்றாள் அவனுடைய அம்மா. அவள் சொன்னால் செய்துவிடுவாள், கடற்கரை வைராக்கியம் அது. அதனால்தான் அப்பாவே அவள் முன்னால் அடங்கிப் போய் அமர்ந்திருக்கிறார். எத்தனையோ புயல்களைப் பார்த்தவர், ஆழத்தில் அச்சமூட்டிப் பொங்கும் கடல்களைப் பார்த்தவர். ஆனால் விரித்தால் அதிகபட்சம் நான்கு அங்குலம் விரியக்கூடிய ஒரு வாயைக் கண்டு அப்படி அஞ்சுவார்.

விமலாவின் குடும்பத்தில் எப்படி? என ஒருதடவை யோசித்துப் பார்த்து இருக்கிறான். எந்நேரமும் ஏதோ கொண்டாட்டத்தில் இருப்பதைப் போலவே இருக்கும் அவர்களது வீடு. சொந்தம், பந்தம் என ஆட்கள் நடமாட்டம் இருந்தபடியே இருக்கும். அந்த ஊரிலேயே மிகப் பெரிய குடும்பமும். அங்கே இருந்து தன்னை நம்பி விமலா வருகிறாள் என்பதே அவனை ஆரம்பத்திலேயே பதற்றத்தில் தள்ளி விட்டது.

அவர்களது சொத்துகள் மீதெல்லாம் அவனுக்கு ஆசை இல்லை. அது அவளுக்குமே நன்றாகத் தெரியும். அவளையுமே அவனுக்கு அடியாழத்தில் இருந்து பிடிக்கும்தான். ஆனால் தனியாக அவளை மேய்த்துவிட முடியுமா? என்கிற கவலைதான் அவனுக்கு. குடும்பத்தோடு ஒட்டியிருந்தால் அவர்கள் என்ன ஓட்டை இருந்தாலும் தட்டிப் பெருக்கிச் சரிசெய்து, ஓரளவிற்குச் சமைப்பதற்குத் தோதாக, அந்தப் பாத்திரத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள். தன்னால் தனியாக அவளைச் சமாளிக்க முடியாது என்கிற சிந்தனையில் இருந்த போதுதான், பதிவுத் திருமணம் என எல்லோரும் முடிவு செய்தார்கள்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாலும் உள்ளுக்குள், திருமண விருந்தில் இலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் உப்பைப் போலச் சிறு அச்சமும் அவனுக்குள் இருந்தது. அதற்கப்புறம் எல்லாமுமே சுகப்படி, அவன் நினைத்த மாதிரியே நடந்தன. இரண்டு பக்கமும் போக்குவரத்து அடியோடு நின்று விட்டது. தொலைபேசியில் அவ்வப்போது மட்டுமே பேசிக் கொள்வார்கள். அந்த நேரங்களில் சண்டை சச்சரவுகள் பற்றியெல்லாம் சொல்லக்கூட முடியாது. வேண்டி விரும்பி முகத்திலேயே துப்பி விடுவார்கள் என்பது பிரகாஷிற்குத் தெரியும்.

அவள் வீட்டில் இருந்து ஒருத்தர்கூட அவனிடம் பேசவில்லை. பேசியிருந்தால், “நீங்க என்னமோ நினைக்கிறீங்க. உங்க பொண்ணு தங்கம்தான். அதுக்காக தங்க ஊசியை வச்சு கண்ணைக் குத்திக்கிட்டே இருக்க முடியுமா? தயவுசெஞ்சு நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லுங்க. உலகத்திலயே அவள் சொல்றது மட்டும்தான் கரெக்டுங்கறா. இவளெல்லாம் நல்லவேளை நீதிபதி ஆகலை. இல்லாட்டி வர்றவனுக்கு எல்லாம் தூக்குத் தண்டனை கொடுத்திருவா” எனச் சொல்லி இருப்பான்.

ஆனால் உள்ளுக்குள்ளேயேதான் குமுறிக் கொண்டிருந்தான். இம்மாதிரியான குமுறல்கள் அவள்மீதான பாசத்திற்கும் எந்த விதத்திலும் தடை போடவுமில்லை. ஒருமாதிரியான இரண்டும்கெட்டான் மனநிலையில் ஒரு புழுவைப் போலத் துடித்துக் கொண்டிருந்தான். அவளோ முழுவதுமாய் அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். பெரிய வேலையில் இருந்தவள், இனி அந்தப் பக்கமெல்லாம் போகவே மாட்டேன் என்றாள்.

“உனக்குன்னு ஒரு கெரியர் இருக்குல்ல. அதை விட்டுட்டு என்ன பண்ணப் போற? நிச்சயமா பைத்தியமாயிடுவ” என்றான் பிரகாஷ். “ஆமா உன் பைத்தியம்” என்று சொல்லிக் கண்சிமிட்டினாள். அவனுக்கு உடனடியாகச் சிரிப்புதான் வந்தது. “என்னம்மோ பண்ணு. ஆனா என்னைக்காச்சும் இந்த முடிவுக்கும் என் மேல பழியைப் போட்டிராத” என்றான். அவளுக்குப் பொக்கென இருந்தது. எந்த நேரத்தில் எதைப் பேசுகிறான்?

அவன் வேலையில் இருக்கிற சமயத்தில், முதன்முறையாக வீடியோ அழைப்பில் வந்தாள். அதைக்கூடப் பதறிப் போய்த்தான் எடுத்தான். என்ன சொல்லப் போகிறாளோ? என ஒரு யோசனை பின் மண்டையில் ஓடியது. எடுத்ததுமே எங்கே இருக்கிறோம் என்கிற எண்ணமே இல்லாமல், “உன்னைக் கட்டிக்கலாம் போல இருக்கு. எனக்கு ஒரு முத்தம் தர்றீயா?” என்றாள் கைகளை விரித்துக் காட்டி. “எங்கே?” என்றான் பிரகாஷ். “இங்கே” என இடத்தைக் காட்டினாள். “போன்ல எப்படிக் கட்டிக்க முடியும்? லூஸா நீ. ஒண்ணு அந்த எண்ட்ல இரு. இல்லாட்டி இந்த எண்ட்ல இரு. நடுவில ஒரு பாதை போகுதே அது உனக்குத் தெரியவே தெரியாதா? அதுதான் இருக்கறதுலயே நல்ல பாதை” என்று சொல்லிவிட்டு போனை அணைத்து விட்டான் பிரகாஷ். அதற்குப் பிறகு அவள் அம்மாதிரியான அழைப்பை அவனுக்குத் தொடுக்கவே இல்லை.

வீட்டுக்குப் போகும் போது அது சம்பந்தமான குற்றவுணர்வு அவனுக்கு இருந்தது. அன்பாகத்தானே அழைத்தாள்? சண்டையிடவா அழைத்தாள்? எதற்காகத் தன்னால் அதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை, அந்த நேரத்தில்? என பிரகாஷ் யோசித்தபடி வண்டியை ஒட்டிக் கொண்டு போனான். முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தாள். ஆனால் அதெல்லாம் அவளைத் தொட்டுத் தூக்குகிற வரைதான் என்பது அவனுக்குத் தெரியும்.

அவள் கோபத்தில் திமிறத் திமிற அவளைத் தூக்கிக் கட்டிலில் போட்டு. “எங்கே?” என்றான். இங்கேயென அவள் தொட்டுக் காட்டிச் சொன்ன இடத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். “ஏன் நேர்ல பண்ணலீயா? போன்ல எப்படி பண்ண?” என்றான் மூச்சு வாங்கி. “மீ டூன்னு சொன்னா போதும் லூஸூ. உனக்கு எதையுமே சாதாரணமாவே எடுத்துக்கத் தெரியலை. எல்லாத்துக்குமே முன்ன பின்ன யோசிக்கிற” என்றாள். பிறகும் நிறையப் பேசினாள். அமைதியாய் ம்ஹ்ஹ்ம் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

எல்லாத் தேனிலவுகளுமே ஒருகாலத்தில் முடிவுக்கு வந்துவிடும்தானே? காலம் என்றாலே முடிவதற்குமானதுதானே? ஒரே இடத்திலேயே குட்டையைப் போலத் தேங்கி நிற்கிற இயல்புடையதா அது? “இப்பல்லாம் உண்ட்ட பேசறதுக்கே எரிச்சலா இருக்கு. மன அழுத்தம்தான் கூடுது. சுத்த வேஸ்ட்டு. அதுக்கு உண்ட்ட பேசாமயே அந்த மன அழுத்தத்திலயே இருந்திடலாம்ணு தோணுது. தேவையில்லாம வந்து உண்ட்ட மாட்டிக்கிட்டேன்” என்று அவள் எதற்காகச் சொன்னாள் தெரியுமா? வீட்டில் பிளம்பர் வரவில்லை. “ஏன் அவருக்கு அடிச்சு உன்னால பேச முடியாதா? எந்நேரமும் உங்க வீட்டில வெட்டிக்கதைதானே பேசிக்கிட்டு இருக்க?” என்று சொன்னதற்காக அதைச் சொன்னாள் விமலா.

இப்படித்தான் இந்த முனையிலும் அந்த முனையிலும் உரையாடல்கள் கொடியில் தொங்கும் துணிகளைப் போலக் காற்றிலாடிக் கொண்டு இருந்தன. உலத்திலேயே யாருக்கும் இல்லாத பழக்கமொன்று திடீரென அவளை ஒட்டிக் கொண்டது. அவள் எல்லாவற்றையுமே அங்குலம் அங்குலமாக அவனிடம் சொல்லத் துவங்கினாள். வேலையின் நடுவே அழைத்து, “இன்னைக்கு சமையல்காரம்மா என்ன செஞ்சாங்கன்னா. என்னால முடியலை. ஆத்திர ஆத்திரமா வருது. எல்லாம் உன்னால” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வேலைக்கு வர்றவங்களை எதுக்கு இப்ப குற்றவாளிக் கூண்டில நிறுத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்க? காலையில எந்திரிச்சதும் கையில இருக்க சுத்தியலை வைச்சு யாரயாவது அடிச்சிக்கிட்டு விசாரணை பண்ணிக்கிட்டே இருக்கணுமா உனக்கு?” என்றான்.

“இப்பக்கூட உனக்கு என்னை சப்போர்ட் பண்ணனும்னு தோணலை. ஏன் எதுக்குன்னு கதையைச் சொல்ல ஆரம்பிக்கறப்பயே நாந்தான் குற்றவாளின்னு நீயா முடிவு எடுத்திட்ட? ஆனா கேட்டா நான் விசாரணை பண்றேம்ப” என்றாள். தொலைபேசியை அவள் துண்டித்த பிறகுதான், வேறுமாதிரியாக எதிர்வினை ஆற்றி இருக்கலாமோ என அவனுக்குத் தோன்றியது.

சமையல் விஷயம் என்றில்லை, அவளைச் சுற்றி நடக்கிற சின்னச் சின்ன விஷயங்களில்கூட அவனிடம் தீர்வு கேட்டு வந்து நின்றாள். “பை நிறைய பணத்தை வச்சு எண்ணிக்கிட்டு இருப்பேன் எங்க வீட்டில. இன்னைக்கு பால்காரர் வந்து நிற்கிறார். ஒரு ஆயிரம் ரூபாயைத் தேடறேன். தரித்திரியம் பிடிச்ச மாதிரி பர்ஸே காலியா இருக்கு. என் நிலை எப்படி ஆயிருச்சு பாத்தீயா? எல்லாம் உன்னாலதான்” என்றாள் ஒருதடவை. இத்தனைக்கும் அவளுடைய வங்கிக் கணக்கில் தேவைக்கு அதிகமாகவே பணமும் இருக்கிறது. இப்போதெல்லாம் தட்டு இட்லிக் கடையில்கூட மின்பரிவர்த்தனை இருக்கிறது. அதற்கெல்லாம் முயற்சியே செய்து பார்த்திருக்க மாட்டாள். எடுத்த எடுப்பில் பழி போடுவதற்கு ஒரு வாய்ப்பு அல்லவா? அதைப் பயன்படுத்தாமல் இருக்கவே கூடாது என்கிற வெறியில் தொலைபேசியைத் தூக்கி விட்டாள் விமலா என நினைத்துக் கொண்டான். தொலைபேசியை வைக்கையில், “உன்னை யாரு பதில் சொல்லச் சொன்னா? சும்மா கேட்டுக்க வேண்டியதுதானே? அதுகூட முடியாதா?” என்று அவள் சொன்னது அடிக்கடி நினைவில் வந்தது அவனுக்கு.

அன்றிரவு பணத்தை வங்கியில் இருந்து எடுத்துப் போய் அவளது கைப்பையில் சொருகிய போது, “பதட்டமாயிடுச்சு. வா வந்து என்னைக் கட்டிக்கோ” என்றாள் கட்டிலில் இருந்தபடியே. வேண்டா வெறுப்போடுதான் கட்டிலில் போய் விழுந்தான். ஆனால் அதற்கடுத்து நடந்தது எல்லாம் அவனது விருப்பத்தின் பேரில்தான். இறுதியில் அவள், “உனக்கு ட்ரெஸ் எடுக்கப் போகலாமா? அங்க வந்து ஊருக்கே கேட்குறாப்பில சத்தம் போடக் கூடாது. சண்டை போடக் கூடாது. சத்தியம் பண்ணிக் குடு” என்றாள்.

அவனுக்கு அந்தச் சமயத்தில் எரிச்சல் வந்து விட்டது. “இங்க பாரு. எடுத்த சட்டைகளையே இன்னமும் போடாம வச்சிருக்கேன். இப்ப எதுக்கு போயி தேவையில்லாம வாங்கிக் குமிக்க நினைக்கிற. உனக்கு ஷாப்பிங் போகணும்னா வா கூப்டு போறேன். உனக்கு பண்ணிக்கோ. என்னை எதுக்கு எல்லாத்துலயும் தூக்கி முன்ன போடற? எனக்குப் பிடிக்கலை. ஆனாலும் பண்ணனும். வேண்டாம்னா உன் மூடை கெடுத்திட்டேன்ப” என்றான் படுத்த வாக்கிலேயே. “வேண்டாம்டா சாமி. ஷாப்பிங்கே வேணாம். உன் திருவாயை மூடு. தரித்திரியம் பிடிச்ச மாதிரி இருக்கு வாழ்க்கையே” எனச் சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

என்ன தவறாகச் சொல்லிவிட்டேன்? அவளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொள்ள அழைத்துப் போகிறேன் என்றுதானே சொன்னேன்? கையில் பணத்தைப் பார்த்ததும் செலவழித்தே ஆகவேண்டுமா என்ன? அவளுக்குச் செலவு செய்தாலும் பரவாயில்லை. எதற்காக அங்கேயும் கொண்டு போய் என்ன நுழைக்க வேண்டும்? என்றெல்லாம் குழப்பங்கள் கூடின அவனுக்குள். கடையில் போய் நின்று கொண்டு பதினைந்து சட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து போட்டு பார்க்கச் சொல்வாள். “ஒரு சட்டைதானே எடுக்க வந்திருக்கோம்? எதுக்கு இத்தனைய போட்டு பார்க்கணும்?” என்பான். “சும்மா போட்டுப் பாரு. உனக்கு என்ன பிரச்சினை? என்னைக்காச்சும் ஒருநாள் இந்த காசை நான் திருப்பித் தந்திடறேன்” என்பாள். இங்கே காசு எங்கே வந்தது? எதற்காக அதையும் இதையும் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறாள்? என்று தோன்றும் அவனுக்கு.

வேறு வழியில்லாமல் ஒவ்வொன்றையும் கழற்றி மறுபடி போட்டு, உடைமாற்றும் அறையில் இருந்து வெளியேறி ஒவ்வொரு முறையும் காட்ட வேண்டும். வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய கைகளில் மேலும் பத்து சட்டைகள் இருக்கும். அந்த நேரத்தில் அவனுக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வரும். உள்ளே இருந்த கண்ணாடியில் அவனது முகத்தைப் பார்த்தே த்தூ எனத் துப்பி இருக்கிறான் ஒருதடவை. கடைசியில் அதிலும் இருப்பதிலேயே அவனுக்குப் பிடிக்காத சட்டை என ஒன்று இருக்குமே? அதைத்தான் மிகச் சரியாகத் தேர்ந்தெடுப்பாள் விமலா. அதை அவன் வலுக்கட்டாயமாகப் போட்டுக் கொண்டு அலைய வேண்டும்.

இதை ஒரு புகாராகவே முன்வைத்த போது, “உனக்கு என்னை குத்தம் சொல்லணும். அதான? பிடிக்காட்டி அன்னைக்கே சொல்லி இருக்கலாம்ல?” என்றாள். பிறகு அவளாகவே தனியாகப் போய்ச் சட்டைகளை எடுக்கத் துவங்கினாள். இறுக்கமாக இருந்தது இல்லாவிட்டால் தொளதொளவென. ஒவ்வொரு முறையும் கடையேறிப் போய் அதை மாற்றக் கொள்ளவென ஏகப்பட்ட அலைச்சல். “தயவு செஞ்சு விட்டிரு. எனக்கு வேணும்னா நானே உண்ட்ட கேட்கறேன்” என்றான். “இனி ஜென்மத்துக்கும் உனக்குச் சட்டை எடுக்கவே மாட்டேன்” என்றாள் அழுதபடி.

என்ன சாப்பிடப் போகிறாய்? அதை எப்படிச் சாப்பிடப் போகிறாய்? எங்கே போகிறாய்? எங்கே இருக்கிறாய்? என்ன செய்கிறாய்? எனத் தினமுமே கேள்விக் கணைகளால் துளைத்தபடியே இருந்தாள். எண்ணெய்யில் பொறித்ததைச் சாப்பிடவே கூடாது என்றாள். அவள் மட்டும் அதை அடிக்கடி வாங்கித் தின்றாள். கேட்டதற்கு, “நான் சாப்பிடுவேன். நீ சாப்பிட்டிராத. உடம்புக்கு கெட்டது” என்றாள். இதென்ன நியாயம்? என்றுதான் தோன்றியது அவனுக்கு.

ஒருதடவை அவளிடம் கொஞ்சம் கோபமாகவே, “ஒரு கட்டம் வரைக்கும்தான் கணவன் மனைவி எல்லாம். அடிப்படையில பார்த்தா எல்லா உயிருமே தனித்தனிதான். நீ கொஞ்சம் தனியாவும் வாழ ட்ரை பண்ணு. எல்லாத்திலயும் என்னைப் போட்டுக் குழப்பாத. எங்க வாழ்க்கையை எங்களை வாழவிடு. காலையில எந்திச்சதும் என் வாழ்க்கையையும் தூக்கி உன் பொறுப்பில வச்சுக்காத” என்றான். “இதென்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு. எனக்கு நடக்கறது எல்லாத்துக்கும் நீதான் பொறுப்பு. உன்னை நம்பித்தான நான் என் வீட்டை விட்டு வெளியே வந்தேன். எவ்வளவு பணக்கார வீட்டுல இருந்தெல்லாம் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. அதையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு நீதான் வேணும்னு வந்தேன் பாரு. என் புத்தியை செருப்ப கழட்டி அடிக்கணும். என் வாழ்க்கையையே நாசம் பண்ணி வச்சுட்டு இப்ப வந்து உக்காந்துகிட்டு தத்துவம் பேசற” என்றாள் பதிலுக்கு.

வேறு எப்படித்தான் அவளுக்குப் புரிய வைப்பது என்கிற குழப்பத்தில் ஆழ்ந்தான் பிரகாஷ். மேலும் மேலும் அவளது பிடி அவன்மீது இறுகிக் கொண்டே இருந்தது. அவனை நம்பி வந்தாள்தான். அதில் மாற்றுக் கருத்தேயில்லை. ஆனால் அப்படி வந்த ஒரு காரணத்திற்காகவே அவள் செய்வது எல்லாவற்றிற்கும் தான் எப்படிப் பொறுப்பாளி ஆவது என்பது உண்மையிலேயே அவனுக்கு விளங்கவில்லை. அவளுக்குள் இருக்கிற வெறுமையை இட்டு நிரப்பிக் கொள்ள அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள் என்றுகூடத் தோன்றியது அவனுக்கு.

அவளைச் சமாதானப்படுத்தி அமர வைத்தபிறகு, “யார் தயவுமில்லாம நீயா ஒரு விஷயத்தை ஸ்டார்ட் பண்ணு. ஆனா நான் கூட இருப்பேன்” என்றான் தயக்கமான குரலில். “நான் எதுக்கு ஸ்டார்ட் பண்ணனும்? அதான் நீ இருக்கீல்ல?” என்றாள். “நான் இல்லாட்டி என்ன பண்ணுவ? நாளைக்கே திடீர்னு ஹார்ட் அட்டாக்ல செத்துட்டா என்ன பண்ணுவ?” எனச் சுருக்கெனக் கேட்டான். “பார்த்தியா எவ்ளோ செல்பிஷ்ஷா இருக்க. அதெப்படி உன்னை நம்பி வந்தவளை விட்டுட்டு போயிடுவேன்னு சொல்ற? உனக்கு ரெஸ்பான்ஸிபிலிட்டியே இல்லை. உன்னையும் நம்பி வந்தேன் பாரு” என்றாள். தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் பிரகாஷ். “காபி போடவா? டீ போடவா?” என்றாள் விமலா.

வேலையில் ஒருநாள் மும்முரமாக இருந்த போது அழைத்து, “எனக்கு ஒரு வேலையும் செய்ய முடியலை. தலை சுக்கு நூறா வெடிச்சிரும் போல இருக்கு. அவ்ளோ பாரமா இருக்கு. பைத்தியமே ஆயிடுவேன். எதுக்கு வந்து இதுக்குள்ள மாட்டிக்கிட்டேன்னே எனக்கு தெரியலை. எல்லாம் உன்னாலதான்” என்று முடித்த போது வெடித்து விட்டான். “ஆமா இன்னைக்கு காலையில உனக்கு ஒண்ணுக்கும் பீயும் வராம போனதுக்குக் கூட நாந்தான் காரணம்” என்றான் கோபமாக. “சீ எப்டீ அசிங்கமா பேசற? நல்ல குடும்பத்தில இருந்து வந்தா இப்படி பேசுவாங்களா?” என்று சொல்லி விட்டுத் தொலைபேசியைத் துண்டித்து விட்டாள்.

ஒருநாள் அவன் சம்பந்தப்படாத, அவளது குடும்பம் சார்ந்த தவறு ஒன்றைச் செய்து அதனால் கிடைத்த பின் விளைவுகளை ஏற்று அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அதுபற்றி அரற்றியவாறும் இருந்தாள். அப்போது போய் நின்று, “எதுக்கு இவ்வளவு போட்டு அலட்டிக்கிற? எல்லாத்துக்கும் காரணம் நாந்தான்னு தலையில தூக்கி போட்டுக்கிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதானே? அதான் எல்லாத்துக்கும் ஒரு எளிமையான முடிவு உண்ட்ட இருக்குதுல்ல” என்றான். நிமிர்ந்து பார்த்த அவள் கண்களைத் துடைத்து விட்டு எழுந்து அவளுடைய அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள்.

அவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சு முற்றிலும் குறையத் துவங்கியது. அதை இருவரும் அறிந்தே இருந்தார்கள். ஆனால் இருவராலும் இருவரையுமே முற்றிலும் கைவிடவும் முடியவில்லை. மேற்பூச்சில் இதுமாதிரியான நெருடல்கள் இருந்தாலும், முட்களுக்கு இடையில் பதுங்கியிருக்கும் இலந்தைப் பழம் போலக் கொஞ்சம் இனிப்பும் அவர்கள் மனவடுக்குகளில் கலந்தே இருந்தது. இருவருமே திரும்பி அவரவர் வீட்டிற்குச் செல்ல முடியாது என்பதையும் அறிந்தே இருந்தனர்.

பெரும்பாலும் பிரகாஷ்தான் எப்போதும் முகத்தைத் தூக்கியபடி அமர்ந்து இருப்பான். ஏதாவது சொல்லப் போய் ஏதாவது நடந்து, எதற்கு வம்பு என அமைதியாக இருந்து கொள்வான். அப்படி காரில் ஒருநாள் போய்க் கொண்டு இருந்த போது, “சிரி பார்ப்போம். சிரி பார்ப்போம். மூஞ்சை இஞ்சி தின்ற குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு ஓவ் ஓவ்னு கத்திக்கிட்டே இருக்கறான். கத்திக்கிட்டே இருக்கறான்” என அவள் பேசும் சத்தம் கேட்டது. தலையைத் திருப்பிப் பார்த்த போது அவள் கண்ணாடி வழியாக வெளியே பார்த்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

வண்டியை நிறுத்தி, “ஏய் யார்ட்ட நீ லூஸூ மாதிரி பேசிக்கிட்டு வர்ற?” என்றான். “ஏன் உண்ட்டதான். மூஞ்சிக்கு நேரா பேசினா முறைப்ப. அதுக்காகத்தான் திரும்பிக்கிட்டு பேசறேன்” என்று குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். கூர்ந்து அவளது கண்களையே பார்த்து விட்டு உதட்டில் முத்தமிட்டுச் சிரித்து, “போதுமா சிரிச்சது. இல்லை இன்னும் வேணுமா” என்றான். அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள் விமலா.

இரவு முழுவதுமே பிரகாஷிற்கு யோசனையாகவும் வேதனையாகவும் இருந்தது. அவள் தனியே பேசியதை அவன் பார்த்தான். ஆனால் அதை அவள் படக்கென மாற்றிச் சொன்னது ஏன்? என்பது குறித்தும் யோசித்தான். அவளுக்கு என்னதான் வேண்டும்? உண்மையிலேயே அவனுக்குத் தன்னுடைய குலசாமி சத்தியமாய்ப் புரியவில்லை. ஏற்கனவே ஒருதடவை அவள் வேண்டாம் என்று சொன்னபிறகும் அவளை நெருங்கிப் போய்க் கட்டிப் பிடிக்க முயன்ற போது, வெறிபிடித்த நாயைப் போல உருமிப் பலத்தைத் திரட்டித் தள்ளியும் விட்டிருக்கிறாள். சினிமாக்களில் வருவதைப் போலப் பின்மண்டைச் சுவற்றில் மோதி செத்துப் போய்விட்டால் என்னாவது? என்கிற பயம் அப்போதிலிருந்து அவனுக்கு இருக்கவும் செய்கிறது.

அவள் வீட்டில் யாரையாவது அழைத்துச் சொல்லி விடலாமா? என உள்ளம் அந்தநாளில் பரபரத்தது. நகைக் கடைக்குச் சென்ற போதும் அப்படி நடந்தது. கணக்கு வழக்குகளை முடித்து அவளை நோக்கிச் சென்ற போது, “இப்ப போயி என்ன பண்ண? பேசாம எங்க போகலாம்? அங்க போகலாமா?” எனத் தனக்குள் தலையாட்டியபடி பேசிக் கொண்டு நின்றிருந்தாள். “இதென்ன கெட்ட பழக்கம். இப்பல்லாம் பொது இடத்தில வச்சுக்கூட தனியா பேச ஆரம்பிச்சிட்ட” எனப் பல்லைக் கடித்தான்.

“ஏன் என்கூட பேசிக்கிட்டு இருக்கேன். பேசினா என்ன? உண்ட்ட பேசுனாலும் நீ பேச மாட்ட” என்றாள். அப்போது களையிழந்து, கண்களில் தூக்கக் கலக்கம் மிகுந்து கண்ணைச் சுற்றிக் கருவளையம் தாங்கி அவள் நின்ற காட்சி அவனைக் கலங்கடித்தது. எப்படி வந்தாள் அவனிடம்? கல்லூரியில் அவனது கைக்குள் கிடந்த பறவையா அவள்? என அக்கணத்தில் அக்கேள்வி எழுந்தது பிரகாஷிற்குள். அவளை எத்தனை எத்தனையோ கோணங்களில் பார்த்து இருக்கிறான். ஆனால் அந்தக் கோணத்தில் அவள் நின்ற காட்சி அவன் உள்ளத்தைத் தைத்தது. வாழ்வில் ஒருகாட்சி மட்டும்கூட, நெஞ்சில் ஓங்கி உதைத்துவிடும் போல.

அவன் கண்களில் நீர் திரண்டது. “ஒருவேளை அவள் சொல்வதுபோல என்னாலதானோ?” என அந்தக் கேள்வி முதன்முறையாக அவனுக்குள் வந்தது. “ஏய் லூஸூ. ஏன் அழற? நான் அப்டீ பேசுனது தப்புத்தான். என்னமோ தெரியலை. இப்பல்லாம் திடீர்னு இப்படி பேசிக்கிறேன். வா போகலாம்” என்று சொல்லிவிட்டு அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். “நடந்து போகலாமா” என்றாள். அவனுக்கு அப்படித் தெருவிற்குள் புகுந்து நடப்பதே பிடிக்காது என்பதை அவள் மறந்தே போயிருந்தாள்.

நெரிசல் மிகுந்த அந்தத் தெருவில் நடப்பதற்கு முன்பு அந்த யோசனை வந்தது. இந்த ஒருநாள் மாலை மட்டும் அவள் போக்கில் போய்ப் பார்த்தால்தான் என்ன? அப்புறம் இன்னொரு விஷயமும் தோன்றியது. மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ஏதோ தவம் போல எல்லாம் அதைச் செய்யக் கூடாது. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் முன் முடிவுகளும் இல்லாமல் அவளது நடையோடு ஒழுகிப் போய்விட வேண்டும் என்கிற முடிவையும் எடுத்தான்.

சிறிது நேரத்திற்கு அந்தச் சிக்கல் இருந்தது அவனுக்குள். அவனுக்குப் பிடிக்காத செயல் ஒன்றைச் செய்து அவள் குதுகலித்த போது, அதைச் சுட்டிக் காட்ட உள்ளமும் நாக்கும் பரபரத்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தான். இரண்டொரு தடவை அப்படி நடந்து, பின் அந்த எண்ணமும் இல்லாமல் போனது. ஏன் அதைத் தின்றால் செத்தா போய்விடுவோம்? என்கிற எண்ணம் வந்த போது அவன் அதுவரை உண்ண மறுத்து வந்த பானிபூரியை வாங்கி உண்டான். ஏனோ முன்பிலிருந்தே அது பிடிக்காமல் இருந்தது அவனுக்கு. அந்த முறை நன்றாக அது இருப்பதைப் போலத்தான் அவனுக்குப் பட்டது. அதை மொறுமொறுவென கடித்து முடித்து அந்த நீர் கலந்த பிறகு பிரத்தியேகமான சுவை வருவதைப் போலவும் தெரிந்தது.

அதை மறுபடியும் உணர, இன்னொன்று தாருங்கள் எனக் கேட்ட போது, “பாத்தியா பாத்தியா நான் சொன்னதை கேட்காம போயிட்டல்ல” என்று குழந்தையைப் போலக் குதித்தபடி, கடைப்பையன் கொடுத்த ஒன்றை அவள் வாங்கி பிரகாஷிற்கு ஊட்டி விட்டாள். அப்போது அவளது கையிடுக்கில் இருந்து வந்த மணம் அவன் நாசியில் படர்ந்தது. அவளது முடி மென்காற்றிலாடி அவனது முகத்தில் விழுந்தது. ஒரு கையால் அதை விலக்கி விட்டாள். அதை வாயில் வாங்குகையில் அனிச்சையாகக் கண்களை மூடிக் கொண்டான் பிரகாஷ்.

ஏனோ அவளை அணைத்துக் கொள்ள வேண்டுமெனத் தோன்றியது அவனுக்கு. அதைச் செய்ய ஏன் அவ்வளவு யோசனை? என்கிற கேள்வி எழவும், வலதுகையால் இடுப்பிற்கும் முதுகிற்கும் நடுவில் மெல்ல அணைத்துக் கொண்டான். உடனடியாகவே திரும்பி அவனுடைய முகத்தைப் பார்த்தாள் விமலா. “நம்மூரா இருக்கறதால இதைச் செய்றேன். இதுவே பாரினா இருந்தா லிப் கிஸ் குடுத்திருப்பேன். இப்ப இருக்கற மனநிலைக்கு” என்றான்.

ஒன்றும் பேசாமல், அந்தக் கையை விடுவித்து அதில் அவளது கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டு புதுவிதமான கோணத்தில் நடந்து வந்தாள். வேட்டியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே வரும் குழந்தையைப் போல. இடையில், “எப்பவும் இப்படியே நல்லவனாவே இரு” என்றாள். மென்மையாகச் சிரித்துக் கொண்டான் பிரகாஷ். அவள் எதையாவது வாங்கப் போகிறாளா? என்பதைக் கூர்ந்து கவனித்தான். அவளுக்கு உண்மையில் எதையுமே வாங்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லை. அவனது கையைப் பிடித்துக் கொண்டு உலகின் அந்தக் கடைசி வரை நடக்கச் சொன்னால்கூட நடப்பேன் என்கிற உணர்வு மட்டுமே அவளிடம் இருந்தது என்பதையும் உணர்ந்தான்.

அதைக் கண்களால் பலமுறை காட்டியும் அவன் புரியத் தவறி விட்டான். அந்தமுறைகூட அடிக்கடி நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தபடியேதான் வந்தாள். அதை வெறுமனே காதல் என்று மட்டுமே எடுக்கப் பழகியிருந்தான் அதுவரை. ஆனால் அதனையும் தாண்டி உலகத்தின் அந்த முனைவரை என்கிற எல்லையை கண்கள் மினுங்கச் சொல்வதன் ஆழத்தை அவன் உணர்ந்தானா? அவள் மேலும் இறுக்கமாகக் கைகளைப் பிணைந்து கொண்டு நடக்கையில், “ஸாரிப்பா. என்னை மன்னிச்சிடு” என்றாள்.

”எதுக்கு ஸாரி?” என்றான் உடனடியாக. “தெரியலை. தோணுச்சு. ஸாரிப்பா” என்றாள் மறுபடியும். விட்டால் அழுதுவிடுவாள் என்கிற தோற்றத்தில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அவனுமே உணர்ச்சித் ததும்பலின் உச்சியில் நின்றான். நடுச்சாலை என்றுகூடப் பாராமல் அவளைக் கட்டிக் கொள்ளலாமா எனக் கூடத் தோன்றியது அவனுக்கு. அப்போது திடீரென அவள் அவனுக்குப் பின்புறம் பார்த்து, “ஹை பஞ்சு மிட்டாய்” என ஒரு துள்ளு துள்ளினாள். திரும்பிப் பார்த்த போது, முட்டை வடிவிலான பெரிய கண்ணாடிப் பேழைக்குள் வைத்து விற்கப்படும் சோன்பப்டி அது.

அவள் அதைப் பார்த்துவிட்டுத் தவ்விக் குதித்தாள். அதை வாங்கி நடந்த போது, “இது சோன்பப்டி” என்றான். “இல்லை பஞ்சு மிட்டாய்னு சொல்லு. பஞ்சு மிட்டாய்னு சொல்லு. அப்படிச் சொன்னாத்தான் சாப்பிடுவேன். பஞ்சு மிட்டாய்னு சொல்லு” என்று அடம்பிடித்தாள். அவனுக்குள் ஒருவிநோதம் வந்தடங்கிய பின் அவனையுமறியாமல், “ஆமாம் பஞ்சு மிட்டாய்தான். அதான் பஞ்சு பஞ்சா இருக்குல்ல” என இயல்பாகச் சொன்னான். “அய்யோ” எனச் சொல்லி விட்டு அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.

அன்றிரவு படுக்கையில் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு கைகளையும் கன்னத்தில் பதித்து, தலையணையில் முட்டுக் கொடுத்து கால்களை முன்னோக்கிக் குறுக்கித் தூங்கிக் கொண்டிருந்தாள். முகம் பன் ரொட்டி மாதிரி உப்பியிருந்தது. அதைப் பிடித்துக் கிள்ளலாமா என யோசித்தான்

அப்போது கண்விழித்து தன் பெரிய விழிகளை அகட்டிக் காட்டி அவள், “ஏய் பொம்மை எதுக்கு என்னையே பார்த்துக்கிட்டு இருக்க. வா வந்து கட்டிக்கோ” என்றாள்.

மறுநாள் கண்ணாடியில் பார்த்த போது, குலசாமி சத்தியமாக அவனது மூக்கு புடைத்திருந்தது, ஒரு பொம்மையைப் போலவே!