கற்றது கைம்மண்ணளவு – 10

1902ஆம் ஆண்டு பிறந்த எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் 1944ஆம் ஆண்டு இறந்து போனார். முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மறைந்ததைப் போல நாற்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர் கு.ப.ரா.. அவர் எழுதிய கால கட்டம் 1934 முதல் 1944 வரை பத்தாண்டுகள் மட்டுமே. அவர் எழுதி  23-03-1934இல் வெளியான முதல் கதை ‘விசாலாட்சி.’ 1944 ஏப்ரல் 27இல் இறக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார்.

தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான அவர், கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பல வகைமைகளில் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சனத்திலும் அவரது செயல்பாடு குறிப்பிடத்தக்கது. பாரதியியலுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பே அதற்கு முக்கியமான சான்றாகும். பாரதி மீது பெரும் ஈடுபாடு கொண்டவர் கு.ப.ரா.. அதற்குச் சில சான்றுகளைக் காணலாம்.

‘…ஒவ்வொரு சமயமும் அவருடைய பாடல்கள் புத்தகத்தைப் புரட்டும் பொழுது அந்தக் காவிய நடையிலுள்ள கருத்துகளின் உயர்வும் சொல்லின் தெளிவும் தேன்சுவையும் திகட்டுவதே இல்லை’ (கண்ணன் என் கவி, ப.74) என்று கூறுமளவு பாரதியார் கவிதைகளில் தோய்ந்தவர் கு.ப.ரா.. அவரது இருகதைகள் பாரதியார் கவிதைத் தொடர்களைத் தலைப்புகளாகக் கொண்டுள்ளன.

ஆசை முகம்மறந்து போச்சே – இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

நினைவு முகம்மறக்க லாமோ? 

எனக்  ‘கண்ணன் என் காதலன்’ பாடல் ஒன்றின் தொடரிலிருந்து எடுத்து ‘நினைவுமுகம் மறக்கலாமோ?’ என்று ஒரு கதைக்குத் தலைப்பு வைத்துள்ளார். பிரிவின் போது கண்ணனிடம் தோழியைத் தூதுவிடும் தலைவி கூற்றாக அமைவது பாரதியார் பாடல். நீண்ட காலப் பிரிவின் காரணமாக ‘ஆசை முகம் மறந்து போச்சு’ என்கிறாள். நெருங்கியவர்களின் முகமே சில சமயங்களில் மறந்து போவதும் பதற்றத்தோடு அதை மனதில் கொண்டு வருவதற்கு நினைவில் தேடுவதும் எல்லோருக்கும் நடக்கும் விஷயம்தான்.

அக்கணத்தை இப்பாடலுக்குப் பொருளாகக் கொண்டுள்ளார் பாரதியார். காதல் மாறாமல் இருக்கும்போது நினைவில் மட்டும் முகம் மறந்து போவது எப்படி என்னும் கேள்வியைக் கேட்கிறாள். இது வெட்கப்படுவதற்குரிய விஷயம். காதலனின் முகம் மறந்து போய்விட்டது என்பதை யாரிடமாவது சொல்ல முடியுமா? தோழியிடம் மட்டும் ரகசியமாகச் சொல்கிறாள். கண்ணில் ஒரு முகத்தோற்றம் தோன்றுகிறது. அதில் அவன் அழகின் முழுமை இல்லை. அவனது தனித்தன்மையான மலர்ச்சிரிப்பு இல்லாத முகம் ஒன்று தோன்றுகிறது. அதை எப்படி ஏற்பது? இப்படியெல்லாம் சொல்லிக் ‘கண்ணன் முகம் மறந்து போனால் – இந்தக் கண்கள் இருந்து பயனுண்டோ?’ என்று தலைவி கேட்பதாகப் பாடல் அமைகிறது.

கு.ப.ரா.வின் கதை பால்ய காலத்தில் மலர்ந்த காதல் ஒன்றைப் பற்றி விவரித்துப் பின்னர் பல்லாண்டுகள் கழித்து மருத்துவமனை ஒன்றில் அக்காதலியைக் காணும் காதலனின் நினைவுகளாக விரிகிறது. அவள் குரல் முதலில் அவனுக்குக் கேட்கிறது. வாழ்வை வெறுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவன் பரபரப்பாகிறான். அவளை அவன் அடையாளம் கண்டு கொள்கிறான். அவள் வெறுமனே பார்க்கிறாள். அவன் முகம் நினைவுக்கு வந்ததா இல்லையா என்பதை அறிய முடியவில்லை. அதற்குள் மயக்கமாகிறான். தெளிந்து எழும்போது அவள் கணவன் இறந்த செய்தியும் உடலை வாங்கிக் கொண்டு அவள் போய்விட்ட தகவலும் தெரிய வருகிறது. அவள் முகம் அவனுக்கு வாழும் ஆசையைத் தருகிறது. அதேசமயம் அவளுக்கு நேர்ந்த துயரம் மனத்தில் தோன்றி வருத்துகிறது. அதன்பின் அவளை அவன் சந்திக்கச் சென்றிருப்பானா? சந்தித்திருக்கக் கூடும் என்றே கதை முடிவு தெரிவிக்கிறது. கதை இப்படி முடிகிறது:

‘நினைவு – என்னுடன் அப்படிப் பழகிய ஞானத்தின் நினைவு – முகம் மறக்கலாமோ? மறந்தால் பிறகு வாழ்க்கையில் எனக்கு ஒன்றும் இல்லை’ (கு.ப.ரா.சிறுகதைகள், ப.294).

கு.ப.ரா.வின் இன்னொரு கதைத் தலைப்பு ‘மனம் வெளுக்க.’ இத்தலைப்பைப் பாரதியார் கவிதையில் இருந்து எடுத்ததைக் குறிப்பாகக் காட்டும் வகையில் ஒற்றை மேற்கோள் குறியிட்டே கொடுத்துள்ளார். பாரதியாரின் ‘முத்துமாரி’ பாடலில் இத்தொடர் வருகிறது. பாடல் அடிகள்:

துணிவெளுக்க மண்ணுண்டு – எங்கள் முத்து 

    மாரியம்மா  எங்கள் முத்துமாரீ

  தோல்வெளுக்கச் சாம்பருண்டு – எங்கள் முத்து

      மாரியம்மா எங்கள் முத்துமாரீ

மணிவெளுக்கச் சாணையுண்டு – எங்கள் முத்து

     மாரியம்மா எங்கள் முத்துமாரீ

  மனம்வெளுக்க வழியில்லை – எங்கள் முத்து

     மாரியம்மா எங்கள் முத்துமாரீ                       (ப.72) 

பலவற்றை வரிசைப்படுத்திச் சொல்லி அவற்றிலிருந்து முரணாக ஒன்றைக் கூறி முடிக்கும் கவி உத்தியை இதில் பாரதியார் பயன்படுத்தியுள்ளார். துணி, தோல், மணி ஆகியவை பருப்பொருட்கள். அவற்றில் உள்ள அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வழிகள் உள்ளன. அவை அனைவரும் அறிந்தவையே. ஆனால் கவிஞருக்கு மனத்தில் உள்ள அழுக்கை நீக்க வழி வேண்டும். மனம் நுண்பொருள். அதையும் காண முடியாது; அதில் படிந்துள்ள அழுக்காகிய குணங்களையும் காண முடியாது. பருப்பொருட்களின் இயல்பை மனம் என்னும் நுண்பொருளுக்கும் ஏற்றிக் கூறி ‘மனம் வெளுக்க வழியில்லை’ என்கிறார். என்ன செய்வது? முத்துமாரியை அடைக்கலமாய்ப் புகுவதே வழி. வழியில்லை என்று சொல்லிவிட்டு ‘முத்துமாரியை அடைக்கலமாய்ப் புகுவதே வழி’ என்கிறார். அதாவது வழியில்லை என்றால் ‘முத்துமாரியை அடைக்கலமாய்ப் புகுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று இறுதிப் பொருள் கொள்ள வேண்டும்.

கு.ப.ரா.வின் கதையின் இறுதி ‘மனம் வெளுக்க வழியுண்டு’ என்றே சொல்கிறது. அவர் சொல்லும் வழி என்ன? ‘மரணம் என்ற மகத்தான சொல் ஒன்று இருக்கிறது’ (ப.510) என்கிறார். மரணம் அணுகும்போது மன அழுக்கு நீங்கி விடுகிறது. அகிலாண்டமையரும் ராஜாராமையரும் மைத்துனர்கள். ராஜாராமையரின் தங்கை கல்யாணி அகிலாண்டமையரின் மனைவி. கடன் பிரச்சினை காரணமாக இருவருக்கும் மனவருத்தம் மேலோங்கிப் பிரிவு உண்டாகிறது. தமையன் மீதான பாசம் நீங்காமலும் கணவனைப் பிரிய இயலாமலும் நோய்வாய்ப் படுகிறாள் கல்யாணி. ஒருசமயத்தில் அவள் மூர்ச்சையடைவதைக் கண்டு இறந்து போய்விட்டதாக அகிலாண்டமையர் எண்ணிக் கதறுகிறார். செய்தி தமையனுக்குப் போகிறது. எல்லா மன வேறுபாடுகளையும் மறந்து ராஜாராமையர் ஓடி வருகிறார். மருத்துவர் வந்து பார்க்கிறார். கல்யாணி பிழைத்துக் கொள்கிறாள். தமையனின் கையை எடுத்துக் கணவனின் கையில் வைக்கிறாள்.  ‘தேய்த்த பாத்திரங்களில் கழுவுமுன் இருக்கும் அழுக்கு, தண்ணீர் பட்டதும் விலகுவது போல மூன்று உள்ளங்களிலும் இருந்த மாசு அப்பொழுது விலகிற்று’ என்று (ப.510) கு.ப.ரா. எழுதுகிறார். மரணம் என்ற சொல் மன அழுக்கைக் கழுவும் வழியாகிறது.

இவை அல்லாமல் இன்னொரு கதைக்குக்  ‘காதலே சாதல்’ என்று தலைப்பிட்டுள்ளார். ‘காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்’ என்னும் குயில் பாட்டு அடிகளின் தாக்கமே இத்தலைப்பாக உருக்கொண்டுள்ளது எனக் கருதலாம். இதிலும் சிறுவயதுக் காதல் ஒன்றின் பிரிவுதான். சொந்த அத்தை மகனாகிய மாதுவுக்கும் ருக்குவுக்கும் உள்ள காதல். அதை ஏற்காமல் அவளை வேறொருவனுக்குத் திருமணம் செய்கின்றனர். அவள் திருமணம் முடிந்ததும் வீட்டைவிட்டு வெளியேறிய மாது பத்து வருசம் பரதேசியாகத் திரிகிறான். பின்னொரு நாள் ருக்குவின் வீடிருக்கும் வீதியில் செல்கிறான். அவனை அடையாளம் கண்டு ருக்கு அழைக்கிறாள்.

தன்னால் பரதேசியாகத் திரியும் மாதுவுக்கு என்ன செய்வதென்று தெரியாமலும் அந்தக் கால வழக்கப்படி கணவனைத் தவிரப் பிற ஆடவனோடு பேசக் கூடாது என்பதாலும் தவிக்கும் ருக்குவின் மனநிலையை அவள் தம் தோழிக்கு எழுதும் கடிதங்கள் மூலமாகக் கு.ப.ரா. காட்டுகிறார். அவள் வீட்டுக்கு வந்து மாது பேசிக் கொண்டிருக்கும்போது அவள் கணவனும் வந்துவிடுகிறான். நேரும் கைகலப்பில் அவள் கணவன் இறக்கிறான். மாதுவுக்கு ஆயுள் தண்டனை. ருக்குவுக்குச் சித்தப்பிரமை பிடிக்கிறது. காதல் எப்படிச் சாதலுக்குக் காரணமாகிறது என்பது கதை. இந்தக் கதையில் காதலர்கள் சாவதில்லை. கணவன் சாகிறான். காதல் ஏதோ ஒரு வகையில் சாதலில் முடிகிறது. ஆகவே ‘காதலே சாதல்’ என்று தலைப்பு. இக்கதையில் அன்றைய பெண்கள் நிலையைச் சிற்சில சொற்களில் கு.ப.ரா. சொல்லிச் செல்கிறார்.

கவிதையைப் பெண்ணாக உருவகித்துக் ‘கவிதைத் தலைவி’ என்றும் ‘கவிதா தேவி’ என்றும் எழுதியவர் பாரதியார்.  ‘வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி’ என்றும் ‘வாராய், கவிதையாம் மணிப்பெயர்க் காதலி’ என்றும் பாரதியார் விளிக்கிறார். கு.ப.ரா. எழுதிய  ‘கவிதைக்கு’, ‘கவிதைப் பெண்ணுக்கு’ ஆகிய கவிதைகளில் பெண்ணாக உருவகிப்பதோடு பாரதியார் போலவே விளித்துப் பேசுவதையும் காணலாம். ‘உன்  வனப்பின் வாசற்படியில் நின்றுகொண்டு என்னை ஏன் ஏறிட்டுப் பார்த்தாய்?’ என்றும் ‘கவிதையே உன் கட்டிள அழகின் கன்னிச் சிம்மாதனத்தில் இருந்தாய், உன் காலடித் தனிமையின் காவலனாய் பணியியற்றும் பேறு வேண்டினேன்’ என்றும் பேசுகிறார். கு.ப.ரா. குறைவான கவிதைகளே எழுதியிருந்த போதும் பாரதியாரின் தாக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.

பாரதியார் இறந்து  பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1933இல் அவர் மகாகவியா இல்லையா என்னும் விவாதத்தின் தொடக்கப் புள்ளி இலக்கிய உலகத்தில் உருவாயிற்று. 1933இல் தொடங்கிய இவ்விவாதம் வலுப்பெற்று உச்சம் அடைந்து. 1944 வாக்கில் அவர் மகாகவிதான் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ என்னும் நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய ஆய்வுக்கும் பாரதியியலுக்கும் முக்கியமான பங்களிப்பு இந்நூல். மகாகவி விவாதம் நடைபெற்றதும் கு.ப.ரா. எழுத்துலகில் இயங்கியதும் ஒரே காலகட்டம்தான். பாரதியார் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கு.ப.ரா. இவ்விவாதத்தில் முக்கியமான இரு பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

‘பாரதியார் நல்ல கவி; மகாகவி அல்ல’ என்று சொன்னவர்களோடு நேரடியாக விவாதிக்காமல் இலக்கிய விமர்சனம் மூலமாக அவரை மகாகவி என்று நிறுவ முயன்றார் கு.ப.ரா.. 1936இல் வ.ரா. குழு, கல்கி குழு என இரண்டாகப் பிரிந்து நடந்த விவாதத்தை ஒட்டித் தினமணியில் பாரதியார் கவிதைகள் குறித்துக் கு.ப.ரா. தொடர் கட்டுரை எழுதினார். அவர் கட்டுரைகளும் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) கட்டுரைகளும் சேர்ந்து ‘கண்ணன் என் கவி’ என்னும் நூலாக 1937ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதுதான் பாரதியார் கவிதைகள் குறித்து வெளியான முதல் விமர்சன நூல்.

அந்நூலின் தொடக்கத்தில் கு.ப.ரா. இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘சில மாதங்களுக்கு முன் தமிழ்ப் பத்திரிகைகளில் அவருடைய கவிதையைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது. அவர் ஒரு மகாகவி என்றார்கள் சிலர்; அல்ல, சாதாரண நல்ல கவிதான் என்றார்கள் சிலர்.

‘அவ்விவாதத்தின் தொடர்ச்சியாக, அதன் ஓர் உற்பத்தியாக, பின்வரும் கட்டுரைகள் எழுதப்பட்டன. பாரதி மகாகவி என்பதை ஸ்தாபிக்க இவைகளில் ஒரு சிறுமுயற்சி செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய காவிய எழுத்துகள் யாவும், கூடிய வரையில் பட்சபாதமற்ற, ஒரு சிறு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

‘கட்சி, தோல்வியோ வெற்றியோ பெறுவது வேறு விஷயம். இம்முயற்சியின் மூலமாகப் பாரதிக்கு என் பங்கு கப்பத்தைச் செலுத்துவதே என் நோக்கம். தமிழ்நாட்டு இலக்கிய மறுமலர்ச்சியின் மூல மூர்த்திக்கு அச்சோலையில் நுழைய ஏங்கும் ஒரு மாணாக்கனின் காணிக்கை இது’  (ப.18).

பாரதியின் மாணாக்கனாகத் தம்மைச் சுட்டிக் கொள்கிறார். பாரதியை மகாகவி என நிறுவச் செய்த சிறுமுயற்சி தம்முடையது எனவும் குறிப்பிடுகிறார். முன்னுரை, மகாகவி லக்‌ஷணம், சக்திக் கொள்கை, ஷெல்லியும் தாகூரும், கவிமூலம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதமும் பெண்மைப் பாட்டுகளும் (பெண் சக்தி), தேசிய கீதங்கள் (பாரத சக்தி), சக்திப் பாட்டுகள் முதலியன (பராசக்தி), கவிதை, பின்னுரை என்னும் பதினொரு தலைப்புகளில் இக்கட்டுரைகள் நூலில் உள்ளன. இந்நூலுக்குக் ‘கண்ணன் என் கவி’ எனப் பெயர் சூட்டியதும் கு.ப.ரா.தான். ‘கண்ணனே பாரதி’ என்ற கவிஞனாக வந்தது போன்ற கற்பனை, கவிதை உள்ளம் கொண்ட கு.ப.ரா.வுக்குத் தோன்றியது’ என்கிறார் சிட்டி (ப.9, 10).

‘பாரதியின் கவிதை’ என்பது கு.ப.ரா. எழுதிய கட்டுரைத் தொடருக்குத் தலைப்பு. அதில் மகாகவிக்கான இலக்கணம் பற்றி விவரித்து அதற்குப் பாரதியார் எவ்வாறு பொருந்துகிறார் என ஆராய்வதுதான் கட்டுரைகளின் மையம். மகாகவி எனப்படுவோர் வாழ்க்கை பற்றிய தம் ஒரே ஒரு தரிசனத்தை மையமாகக் கொண்டே தம் கவிதைகளைப் படைத்திருப்பர் என்பது கு.ப.ரா.வின் கருத்து. அவ்வகையில் தாகூர், ஷெல்லி ஆகியோரின் தரிசனத்தை எடுத்துக் காட்டுகிறார். பாரதியாரின் தரிசனம் ‘சக்திக் கொள்கை’ என்று கு.ப.ரா. விவரிக்கிறார். அதை வேதாந்தக் கருத்தோடு இயைத்துக் காண்கிறார்.

‘தூய்மையான சிவ சொரூபமானது (பிரம்மம்) சக்தி (ப்ரகிருதி)யில் தாக்குவதால் சிதறுண்டு மாயை எனப்படும் பல்வேறு அமைப்புகளை அடைகிறது, இரவின் மேல் தாக்கிய பகல் ஒளி நடசத்திரத் தூள்களாகச் சிதறி விடுகிறது போல். இந்த அதிசயத் தத்துவத்தை, அதன் பல தோற்றங்களில் கண்டு, அவைகளின் சம்பந்தத்தை உணர்ந்து, அந்த ஒற்றுமையை விவரித்ததே பாரதியின் பெருமை’ (ப.24) என்பது கு.ப.ரா.வின் கருத்து.

சக்தி என்னும் அந்தத் தரிசனத்தை பராசக்தி, பாரத சக்தி, பெண் சக்தி எனப் பாரதியார் காட்டும் விதத்தைச் செறிவான சொற்களில் கு.ப.ரா. எடுத்துக் காட்டுகிறார். அதுவே மகாகவியின் லட்சணம் என்று சொல்லிக் ‘கம்பனுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் பாரதிதான் மகாகவி’ என்று அழுத்தமாகக் காட்டுகிறார். இக்கட்டுரைகளை எழுதிய பிறகு ஆங்கிலத்தில் ‘ஆபர் கிராம்பி’ என்னும் விமர்சகர் எழுதிய ‘மகாகாவியக் கொள்கை’ நூலைப் படிக்க நேர்ந்ததும் அதனால் தம் கருத்துகள் வலிமைப்பட்டது என்றும் தெரிவிக்கிறார்.

இவ்வாறு மகாகவி விவாதத்தில் யாரையும் மறுப்பது, எதிர்ப்பது என்றில்லாமல் இலக்கியக் கோட்பாடு அடிப்படையில் பாரதியை மகாகவி என்று கு.ப.ரா. நிறுவுவதற்கு முற்பட்டதாலோ என்னவோ  ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ நூலில் கூட அவரது பங்களிப்பைப் பெரிதாகக் குறிப்பிட்டுப் பேசவில்லை. ‘கு.ப.ரா.வின் கட்டுரைகள் தினமணியில் தொடர்ந்து வெளிவந்தன’ (ப.110) என்பதோடு நிறுத்திக் கொண்டனர்.

பாரதியை மகாகவி என நிலைநாட்ட முயன்றவர்கள் அவரது அரசியல் கவிதைகளைப் புறக்கணித்தனர் என்றும் பாரதி ஆக்கங்களின் சமூகப் பயன்பாடு பற்றி அக்கறை காட்டாதவர்கள் என்றும் முடிவு கட்டிக்கொண்டே கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ் ஆகியோர் அணுகுகின்றனர். அவ்வகையில் ‘தேசிய கீதங்களைப் பாடின பாவந்தான் பாரதியை தேசபக்த கவியாகி விட்டது போலும்’ என்னும் கு.ப.ரா.வின் கருத்தை மேற்கோளாக்கியும் காட்டியுள்ளனர். தேசிய கீதங்களை மட்டும் கொண்டு அவரைத் தேசியக்கவியாக மட்டும் காண்பது கூடாது, மகாகவியாகக் காண வேண்டும் என்பதுதான் கு.ப.ரா.வின் கருத்து. பாரதியின் சக்திக் கொள்கை தேசப் பக்திப் பாடல்களிலும் எவ்வாறு காணப்படுகின்றது என்று ஒருபகுதி முழுக்கவும் கு.ப.ரா. எடுத்து விளக்குகிறார்.

‘தாய்நாட்டினுடைய சீர்குலைந்த நிலை, பாரதியை உருக்கி இருக்கிறவாறு காவியத்தில் , வேறு எந்த நாட்டிலும் எவரையும் உருக்கவில்லை. பாரதியின் தேசிய கீதங்களுக்கிணையான ஆவேசங் கொண்ட தேச பக்திப் பாடல்கள் உலக இலக்கியத்திலேயே கிடையாதென்று கூடச் சொல்லலாம்’ (கண்ணன் என் கவி, ப.57) என்பது கு.ப.ரா.வின் கருத்து.

பாரதியின் தேசியப் பாடல்களைப் பழைய பெருமை பேசுபவை, தற்கால வீழ்ச்சியைப் பாடுபவை, பிற நாடுகளின் சுதந்திரப் போராட்டம் பற்றியவை என மூன்றாக வகைப்படுத்திக் காணும் கு.ப.ரா. அப்பாடல்களைப் பற்றி மேலும் சொல்கிறார்:

‘இப்பாட்டுகள் யாவும் இந்திய தேசீயப் போர்க்களத்தில் கிளம்பிய சங்கநாதங்களாயினும் சுதந்திரத்திற்கு வேட்கை கொண்ட எந்த நாட்டினுடைய நிலைமைக்கும் பொருந்துமென்கிற வகையில் அழியாப் பெருமை பெறுகின்றன’ (ப.61).

கு.ப.ரா.வின் இந்தக் கருத்துகள் தம் கருதுகோளுக்கு ஒத்துவராத காரணத்தால் ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ நூலாசிரியர்கள் கு.ப.ரா.வை விரிவாக எடுத்துப் பேசாமல் தவிர்த்தனர் போலும்.

பாரதியின் கவிதைகளைப் பற்றிக் கு.ப.ரா. எழுதியுள்ள சில கட்டுரைகளை இன்னொரு பங்களிப்பாகக் காணலாம். தம் கட்டுரைகளில் பாரதியார் கவிதைகளைப் பரவலாக மேற்கோள் காட்டியிருக்கிறார். பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பாரதியார் கவிதைகள் நூலைப் பற்றி மணிக்கொடியில் எழுதிய புதுமைப்பித்தன் பாட வேறுபாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலாகக் கு.ப.ரா. சிறுகட்டுரை ஒன்றை எழுதினார்.  ‘அபிப்ராய பேதம்: சந்தேகத் தெளிவு’ என்னும் சில குறிப்புகளைத் தொகுத்துள்ள கட்டுரை அது. அதன் ஒருபகுதியில் புதுமைப்பித்தனைக் கருத்தை மறுத்துரைக்கிறார்.

அத்துடன் கவியின் காதல், காட்சிகள், பாரதி தரிசனம் ஆகிய தனிக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.  ‘கவியின் காதல்’ என்னும் கட்டுரை பாரதியின் ‘மூன்று காதல்’ கவிதையின் சிறப்புகளை விவரிக்கிறது.  ‘காட்சிகள்’ என்னும் கட்டுரை பாரதியின் வசன கவிதைகளின் நயங்களை எடுத்துக் காட்டுகிறது. அவற்றிலும் சக்தித் தத்துவம் பொதிந்திருப்பதைக் கூறுவதோடு ‘காட்சிகள் ஒரே ஒரு மகத்தான பொருளின் தூண்டுதலில் பிறந்தவை. ஆதி கவிகள் நமது வேத வேதாந்தங்களில் கண்டுரைத்த பொருள்தான் அது’ என்கிறார்.  ‘பாரதி தரிசனம்’ கட்டுரை சக்தி தத்துவத்தைக் ‘கர்மயோகம்’ என்று இன்னொரு மொழியில் சொல்கிறது. ‘அது கீதையில் கண்ணன் வகுத்த திட்டம்தான்’ என்கிறார். மகாகவி என்று நிறுவுவதற்கு ஆங்கில இலக்கியக் கோட்பாடுகளைக் கு.ப.ரா. கைக்கொள்கிறார். அத்துடன் சமஸ்கிருதம் பயின்ற பாரதியின் கவிதைகளைச் சமஸ்கிருதம் பயின்றவரான கு.ப.ரா. அம்மொழியில் உள்ள வேதம், வேதாந்தம் உள்ளிட்ட நூல்களோடு இயைத்துக் காணும் பார்வை கொண்டிருக்கிறார் என்று சொல்வது பொருந்தும்.

—–

பயன்பட்ட நூல்கள்:

பெருமாள்முருகன் (ப.ஆ.), கு.ப.ரா. சிறுகதைகள், 2021, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், ஐந்தாம் பதிப்பு.

பெருமாள்முருகன் (ப.ஆ.), கருவளையும் கையும் : கு.ப.ரா. கவிதைகள், 2022, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

பழ.அதியமான் (ப.ஆ.), பாரதி கவிதைகள், 2014, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

கார்த்திகேசு சிவத்தம்பி, அ.மார்க்ஸ், பாரதி மறைவு முதல் மகாகவி வரை, 1984, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), கண்ணன் என் கவி, 1981, பூங்கொடி பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு.

அ.சதீஷ் (ப.ஆ.), கு.ப.ரா. கட்டுரைகள், 2011, அடையாளம், புத்தாநத்தம்.

—–