ஒரு 
பொம்மலாட்டம் நடக்குது
ரொம்பப் புதுமையாக
இருக்குது.
நாலு பேரு 
நடுவுலே
நூலு ஒருத்தன் 
கையிலே !

புகழ்பெற்ற இந்தப் பாடல், அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், பாரதீய ஜனதாவின் சூத்திரதாரிகளுக்காகவுமே சிந்தித்து எழுதப்பட்டதைப் போன்று இருக்கிறது !

அந்த நாலு பொம்மைகளில் என்றுமே மூன்று பொம்மைகள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களாகவே இருப்பார்கள்.  இதில் இருவருக்கு நிரந்தர வேடங்கள் உண்டு.  ஒருவர் மீன்வளத்துறையின் முன்னாள் அமைச்சர் திரு. ஜெயக்குமார்.  இன்னொருவர் சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் திரு. சி.வி. சண்முகம்.  மூன்றாவது பொம்மை மட்டும் அடிக்கடி மாறும்.  அதில் செல்லூர் ராஜூ நடிக்கலாம் அல்லது விஜயபாஸ்கர் நடிக்கலாம், சமயங்களில் உதயகுமாருக்கும் வாய்ப்பு கிட்டும்.  இம்முறை நாம் மேடையில் கண்டது செல்லூர் ராஜூ அவர்கள், முன்னாள் தெர்மோகோல் அமைச்சர்.  மன்னிக்க வேண்டும், அப்படி ஒரு துறையே இல்லையாம் !

இதில் நாலாவது பொம்மை யார் ?  அது தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் யாரோ அவர்தான்.  அந்தப் பாத்திரத்தை தமிழிசை, எல்.முருகன் போன்றோர் முன்பு செய்தனர்.  தற்பொழுது திரு.அண்ணாமலை அவர்கள் அதைச் செய்துக் கொண்டுள்ளார், அவ்வளவுதான்.  ஜெயக்குமார், சண்முகத்தைப் போன்று, நிரந்தரமாக ஒருவரே அந்த வேடத்தைப் பூண முடியாது !

நூல் ஒருத்தன் கையிலே என்றால் யார் அந்த நூல் ஆபரேட்டர் ?

அது அமீத்ஷாவாக இருக்கலாம்.  நரேந்திர மோடியாக இருக்கலாம், ஜே.பி. நட்டாவாக இருக்கலாம், அல்லது மோகன் பகாவத்தாகவும் இருக்கலாம், இப்படி நான் சொல்லக் கூடாது, இதில் அமலாக்கத்துறையின் இயக்குநரின் பங்கும் இருக்கலாம் என்பது கசக்கும் எதார்த்தம் !

கலைஞர் பெயரில் ஒரு புரட்சித் திட்டம் !

செப்டம் 15 2023 வெள்ளிக்கிழமை.  இதற்கு முந்தைய நாளான  வியாழக்கிழமை மாலையிலிருந்தே சமூகவலைத்தளங்களில் பல குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன.

அது தமிழகத்தின் குடும்பத் தலைவிகளின் கைபேசிகளுக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளின் பட நகல்கள்.  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, தங்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்கிறச் செய்தியை அவை தாங்கியிருந்தன !

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்றுதான், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவே இருந்தது.  ஆனால் அதற்கு ஒருநாள் முன்னதாகவே இத்தகைய தொகை பொதுமக்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது.  இவ்வளவு துல்லியமான ஓர் ஆட்சியை இதற்கு முன் கண்டிராத குடும்பத் தலைவிகள், தாங்கமாட்டா மகிழ்ச்சிக்கு ஆளாகினர்.  சுடச்சுட பேட்டியளித்த பல குடும்பத்தலைவிகளின் கண்களில் சாட்சியாக வழிந்தது ஆனந்தக் கண்ணீர்.  சோதனைக்காக பலருக்கும் ஒரு ரூபாய் அல்லது பத்து காசுகள், ஓரிரு நாட்களுக்கு முன்பே வரவு வைக்கப்பட்டன என்றாலும், கொடுத்த வாக்குக்கேற்ப வந்த அந்த  1000 ரூபாயைக் கண்டதும் குதூகலமானது தமிழ்நாடு.  பொறுக்குமோ எடப்பாடிகளின் உள்ளம் ?

இந்தக் கொண்டாட்டங்களை உடனடியாக கலைக்க வேண்டும் அல்லது திசைதிருப்ப வேண்டும்.  1000 ரூபாய் விண்ணப்பித்த அனைவருக்குமெல்லாம் வரவில்லை எனக் குறைகூறலாம் என நினைத்தால், வராதவர்களுக்கு உரிய காரணங்களுடன் குறுஞ்செய்தி வரும், அதை விண்ணப்பித்தவர்கள் ஏற்காத பட்சத்தில் மேல்முறையீடு செய்யலாம், சில நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அரசு கூறிவிடவே முதலில் ஏமாந்தவர்கள் அந்த ரத்தத்தின் ரத்தங்களும், சங்கிகளும்தான் !

இப்படி திமுக ஆட்சியை அவுட்டாக்க எண்ணி அவர்கள் வீசிய அனைத்துவித முரட்டு பந்துகளையும், ஸ்டாலின் அரசு சிக்ஸர்களாக அடித்துக் கொண்டே இருந்தால் பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள் ?

மேலிடத்திலிருந்து அண்ணாமலை அவர்களுக்கு ஓர் உத்தரவு.  அதிமுகவைச் சீண்ட வேண்டும்.  என்ன பண்ணலாம் ?

ஜி, போனமுறை ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றேன்.  அடிமட்டத்தொண்டன் வரை கொதித்தெழுந்து காறி காறி உமிழ்ந்தனர்.  அதேபோல அவர்களிஷ்ட தலைவர்கள் எவரையாது இழித்துப் பேசிவிடவா ?

செய்.  செய்யாததைச் செய். அதை இன்றே செய் என உத்தரவு வந்தது.

உள்ஒதுக்கீடு என்கிற உள்குத்து !

எடப்பாடி பழனிச்சாமிக்கு கொங்கு மண்டலத்தில் அவருடையச் சாதி ஆட்களால் வலுமிக்கவராக தம்மைக் காட்டிக்கொள்ள நிறைய வாய்ப்புகள் அமைந்தன.  அவரும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு காய்களை நகர்த்த, தாமாகவே ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்ற பலவீனமான காய்கள் வீழ்ந்தன !

இங்கு இரண்டு முக்கியமான தரவுகளை நாம் உற்று நோக்க வேண்டும்.

2021 -ன் சட்டமன்றத் தேர்தலை அறிவிக்கும் சில மணி நேரங்களுக்கு முன் அவசர அவசரமாக ஒரு சட்டமசோதாவை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில், 10.5 விழுக்காடு வன்னியர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் மசோதா அது !

அன்று அது எடப்பாடியின் மாபெரும் சாணக்கியத்தனமாக வர்ணிக்கப்பட்டது.  ஆனால் அதை, தேர்தல் நேர ஸ்டண்ட் என்று அரசியல் நோக்கர்கள் சொன்னாலும் ஊடகங்கள் அதிமுக அரசு மனிதநேயமிக்க சமூகநீதி காத்த அரசு என்று எழுதின.  நடுநிலையாளர்கள் உங்களைக் கண்டு பெரியார் பூரிப்படைவார் என்று எடப்பாடிக்கு ஒத்தூதினார்கள் !

ஆனால் இப்படி மொட்டையாக இயற்றப்படும் எந்தச் சட்டமும் நீதிமன்றங்களில் நிற்காது என்று சட்ட வல்லுநர்கள் விளக்கியதையெல்லாம் அன்று யாரும் பெரியதாக கண்டுகொள்ளவில்லை !

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இந்தச் சட்டத்தால் பலனடைபவர்கள் பெரிதும் உற்சாகத்தில் திளைக்க, இன்னொரு புறம் அதே பிரிவிலிருந்த வேறு பலர் மிகவும் வருந்தினர்.  அதிமுக அரசின் இச்செயலை அவர்கள் சிறிதும் ஏற்கவில்லை.  உள் ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்தப்படும் முன், அதற்குரிய சரியானத் தரவுகளுக்கான ஆய்வுகளை, அரசு மேற்கொண்டிருக்க வேண்டும், தங்களுடையக் கருத்துக்களையும் கேட்டறிந்திருக்க வேண்டுமெனெ வருந்தினர் !

அது தேர்தல் பரப்புரையில் வெளிப்பட்டது.

வடக்கு, மேற்கு தமிழகத்தில் அதிமுகவினருக்கு கிட்டிய பெரிய வரவேற்பு, அப்படியே தலைகீழாக தென்பகுதிகளில் கிட்டியது.  போகுமிடமெல்லாம் எதிர்ப்பலை.  குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்த முக்குலத்தோரின் சில இனங்கள் கடுமையாக இதை ஆட்சேபித்தனர்.  அவர்களிடையே பேசிய அன்றைய அமைச்சர் உதயகுமார் வெளிப்படையாக, இது தற்காலிகச் சட்டம், ஆறுமாதம் கூட செல்லுபடியாகாது, எனவே நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள் என்று அந்தப் பொய் நாடகத்தை பொதுவில் உடைத்தார் !

முக்குலத்தோரின் பெரிய தலைவர்களாக கருதப்பட்ட சசிகலா, தினகரனை முற்றிலுமாக அதிமுக ஓரங்கட்டியிருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் அன்று அவர்களுடன் இருந்ததால், இந்த வாக்குகளையெல்லாம் ஈர்த்துவிடுவார் என்றே எடப்பாடி அணியும், பாரதீய ஜனதா கட்சியும் நம்பின.  ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்தது!

எடப்பாடி பழனிச்சாமியும், பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து சாதித்து வென்ற தொகுதிகளோடு ஒப்பிடுகையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடைய பகுதிகளில் பெரு வீழ்ச்சி.  இதுவே எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை ஓங்கச் செய்தது என்றால் அது மிகையில்லை !

ஆக அதிமுகவில், முக்குலத்தோருக்கு ஒரே பேராதரவாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் மட்டம் தட்டப்பட்டு விலக்கி வைக்கப்பட்டு விட்டதால், இனி அதிமுகவால் அவர்களுடைய வாக்குகளை தக்க வைக்கவே முடியாது என்கிற கள ஆய்வுகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டன !

இதற்கிடையே, விவாதங்கள் கூட பெரிதாக நிகழாமல், எடுத்த எடுப்பில் அந்த 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம்.  உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரியானது, அதில் தலையிட மாட்டோம் என்றுவிட்டது.  அன்று உதயகுமார் சொன்னதைப் போலவே எடப்பாடி பழனிச்சாமி & கோ தங்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டதாய், வடக்கு, மேற்கு மாவட்டங்கள் கொதிப்பில் மூழ்கின.  அதெல்லாமே உள்ளாட்சி தேர்தலின் போது எதிரொலித்தன !

டெல்லி மேலிடம் பெரிதும் கவலையில் ஆழ்ந்தது.

நாம் எடப்பாடியாரின் தோள்களில் தொற்றியுள்ளோமா ? அல்லது அவர் நம் தோள்களில் அமர்ந்து சவாரி செய்துக் கொண்டிருக்கிறாரா ? எனக் குழம்ப ஆரம்பித்துவிட்டது !

இந்தக் குழப்பத்தின் போதுதான் தமிழகத்தில் மாபெரும் அதிரடித்திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப் போகிறது என்கிறச் சேதியும் வர, பேரறிஞர் அண்ணாவை மிகவும் இழிவுசெய்து ஓர் அவதூறைச் சொன்னார் அண்ணாமலை !

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

செப்டம்பர் 11.  சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதி.  தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம்.  அந்த மேடையில், பேரறிஞர் அண்ணாவைக் கோழையாகச் சித்தரித்தும், பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனாரை முரடராகச் சித்தரித்தும், மதுரை மீனாட்சியம்மனுக்கு இரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படும் என்று அவர் சொல்லாத ஒன்றைச் சொல்லி, அவர் மற்றும் அவருடையக் கூட்டத்தினர் எல்லாம் இரத்தவெறி கொண்டவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, ஆனால் அதையும் அவர்கள் ரசிக்கவே செய்வார்கள் எனத் தப்புக்கணக்கும் போட்டு அண்ணாமலை சொற்களை உமிழ்ந்துவிட்டுப் போக, அவர் நினைத்ததற்கு மாறாக பல சம்பவங்கள் நடந்தேறின !

முதலில் அவர்கள் எதிர்பார்த்த சம்பவங்களை பார்த்துவிடுவோம்.

முன்கூட்டியே தான் இப்படி பேசவிருப்பதாகவும், நீங்கள் அதற்கு முதலாளாய் முந்திக்கொண்டு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று எடப்பாடியாரிடம் பேசி வைத்துக் கொண்டே பேசியதால், முதல் ஆளாய் ஜெயக்குமாரும், இரண்டாவதாய் சி.வி. சண்முகமும், மூன்றாவதாய் செல்லூர் ராஜூவும் மிகவும் கடுமையான சொற்களால் ஏசி, அண்ணாமலைக்கு எதிர்வினை ஆற்றினார்கள் !

அண்ணாவை அப்படி இழிவாகப் பேசிய உன் நாக்கு அழுகிப்போகும் என்றார் செல்லூர் ராஜூ.

ஏன்டா எங்க தோள் மேல தொத்திக்கிட்டு வர்றீங்க, அத்துட்டுப் போங்கடா என்றார் சி.வி.சண்முகம்.

பாஜகவுடனான எங்கள் கூட்டணி முறிந்தது என்றார் ஜெயக்குமார் !

இதெல்லாம் நூலை இயக்கும் இயக்குனர் சொல்படி நிகழ்ந்தவைகள்தான்.  ஓரிரு நாட்களுக்கு நாளிதழ்கள், செய்தி சேனல்கள், சமூக வலைத்தளங்களில் அல்லோகலப்பட்டன.  திட்டமிட்டபடி தான் கூறிய எந்தக் கருத்துக்களையும் திரும்பப் பெறப்போவதில்லை என அறிவித்தார் அண்ணாமலை.  அடுத்து அவர் வீசிய ஏவுகணைகள்தான் பூமராங் ஆகி அவர் மீதே விழுந்தன.  அவைகள் என்ன ?

நான் பொய் சொல்லவில்லை.  அண்ணா பேசியதும் உண்மை.  அதை பசும்பொன் முத்துராமலிங்கம் அதே மேடையில் வைத்து கடுமையாக எதிர்த்ததும் உண்மை.  பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் மதுரையிலிருந்து கிளம்ப முடியாது, உங்களுடைய ரத்தத்தால் மீனாட்சிக்கு அபிஷேகம் செய்யப்படும் என்று அண்ணாவை, பெருமகனார் எச்சரித்ததும் உண்மை.  அண்ணாவும், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பி.டி.ராஜனும்  பயந்து, பணிந்து மன்னிப்பு கேட்டு, மதுரையை விட்டு தெறித்தோடியது யாவும் வரலாறு.  இது அன்றைய இந்து நாளேட்டிலும் வந்துள்ளது.  என் பேச்சு அதன் அடிப்படையில்தான் வந்தது என்பதால் என் மீது எந்தப் பிழையுமில்லை.  நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.  அண்ணா பற்றி நான் பேசியதை திரும்பப் பெறவும் மாட்டேன் என ஆணித்தரமாகச் சொன்னார் அண்ணாமலை !

உண்மையில், அவர் பேசி அந்த வீடியோ ஒளிபரப்பான அடுத்த அரைமணி நேரத்திலேயே சுப.வீரபாண்டியன் அவர்கள், மிகத் துல்லியமாக ஒரு மறுப்பறிக்கையை வெளியிட்டார்.  அன்றும், அதன்பின்னும் என்ன நடந்தது என்று பார்வையாளராக இருந்த என் தந்தை சொன்னது இது என்று அவர் சொன்னது, அப்படிக்கு அப்படியே வரி பிறழாமல், மறுநாள் இந்து நாளிதழிலும் தாங்கள் அன்று எழுதிய செய்திகளென வெளியிட்டிருந்தனர்.

  1. மதுரைத் தமிழ் சங்கத்தின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம். அன்றைய மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.பி.டி.ராஜன் அவர்களுடைய தலைமையில், அது பல நாட்கள் விழாவாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது !

நான்காவது நாள் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் பேரறிஞர் அண்ணா.  அவர் பேசுவதற்கு முன் ஒரு குழந்தை தமிழ்ச்சங்க பாடல்களை அழகாக, தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் பாடியது.  அந்தத் தமிழில் மயங்கிய அண்ணா, இதே குழந்தை பழைய காலத்தில் இப்படி பாடியிருந்தால் உமையாளின் பாலைக் குடித்ததால்தான் இப்படி ஞானம் கிட்டியது என்றிருப்பார்கள்.  இன்று அப்படி சொல்ல முடியாது.  இது பகுத்தறிவு காலம்.  இது அண்ணா அவர்களின் பிரதானப் பேச்சுரை அல்ல.  அது தனி.  இது அந்தக் குழந்தையின் பாடலுக்கான ஒரு பாராட்டுரை.  அவ்வளவுதான் !

இந்தப் பாராட்டுரையை பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் ரசிக்கவில்லை என்பது உண்மை.  அதாவது அவர் கோபப்பட்டார்.  ஏன் ?

ஆறாவது நாளன்று பசும்பொன்னாரின் உரை நிகழவிருந்த வேளையில், ஐந்தாம் நாளே மேடையேறினார் முத்துராமலிங்கம்.  இதை பி.டி.ராஜன் விரும்பவில்லை.  ஆனால் முத்துராமலிங்கம் தான் பேசியே ஆக வேண்டும் எனக் கூறிவிட்டு ;

இது கடவுள் வழிபாட்டாளர்கள் வந்து போகும் இடம்.  இங்கு நாத்திகம் பேச அனுமதி இல்லை.  அப்படி உங்களுக்கு நாத்திகம் பேச வேண்டுமானால் தமுக்கம் மைதானத்தில் மேடை போட்டு பேசிக் கொள்ளுங்கள்.  இங்கு பேச அனுமதிக்க முடியாது என்றுவிட்டு இறங்கிப் போய்விட்டார்.  அவ்வளவுதான்.  முத்துராமலிங்கம் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை.  அண்ணாவை மிரட்டவில்லை. அண்ணா மன்னிப்பும் கேட்கவில்லை.  ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படும் என்று முரட்டுத்தனம் காட்டவில்லை !

மாறாக, மறுநாள் இதற்கான மேடை தமுக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது !

அண்ணாவின் அபிமானிகள் அடுத்தவாரமே அண்ணாவை மதுரைக்கு அழைத்துவந்து மிகப் பிரம்மாண்டமான கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஆக, மன்னிப்பு கேட்காமல்  இங்கிருந்து வெளியேற முடியாது என்றும் அவர் சொல்லவில்லை.  அய்யய்யோ அங்கு முத்துராமலிங்கம் இருக்கிறார் நான் வரமாட்டேன் என்றஞ்சி அண்ணா அடுத்த மதுரைக் கூட்டத்தையும் புறக்கணிக்கவில்லை என்று, இந்து நாளேடும், சுபவீ அய்யாவும் தெளிவாக எடுத்துரைத்தனர் !

இங்கே முக்கியமான ஒரு கூற்றையும் கவனிக்க வேண்டும்.

எதிரியின் எதிரி நண்பன் என்கிற வகையில், காமராஜரின் அரசியல் எதிரியாக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தை பேரறிஞர் அண்ணா ஒருபோதும் எதிரியாகவோ, இழிவாகவோ எண்ணியதே இல்லை.  மாறாக, பின்னாட்களில் இமானுவேல்சேகரன் படுகொலைக்காக முத்துராமலிங்கம் கைது செய்யபட்டப்போது, அந்தக் கைதை கடுமையாக எதிர்த்தது அண்ணா தலைமையிலான திமுகதான்.  இமானுவேல் சேகரன் படுகொலையை ஒட்டி நிகழ்ந்த பெருங்கலவரங்களுக்காக, காமராஜர் ஆட்சிக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பொதுவுடமைக் கட்சியினர் கொண்டு வந்தபோது, அதை ஆதரித்துப் பேசியதோடல்லாமல், தன்னுடைய எதிரியை நேருக்கு நேர் சந்திக்க துணிவில்லாமல் இப்படி கைது, ஒடுக்குதல் நடவடிக்கை மூலம் காமராஜர் பின்வாசல் வழியாக எதிரிகளை வீழ்த்த எண்ணுகிறார் என்கிற கடுமையான குற்றச்சாட்டையும் சட்டப்பேரவையில் வைத்தவர் அண்ணா !

சரி.  அது என்ன ஒரு கல், இரண்டு மாங்காய்கள் ?

அண்ணாவை இழிவு படுத்தி கல்லெறிந்ததின் மூலம்,  அதிமுகவினரை ட்ரிகர் செய்துவிட்டதாய் ஒரு மாங்காய்.

முத்துராமலிங்கம் முக்குலத்தோரின் ஆதர்சம்.  அவரை வீராவேச இந்துப் பாதுகாவலர் என்று காட்டி, அந்த முக்குலத்தோரை முழுமையாக தங்கள் பக்கம் ஈர்த்துவிட முடியாதா என்கிற நப்பாசை அந்த இரண்டாம் மாங்காய் !

அன்று அப்படி முத்துராமலிங்கமும் பேசவில்லை, அண்ணாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்று இந்து நாளிதழ்  விளக்கம் கொடுத்ததோடுமன்றி,  ஊடகவியலாளர் தராசு ஷ்யாம், சுபவீ, ஆர். எஸ். பாரதி போன்றோர் ஆவணப்பூர்வமாக மறுத்ததோடுமன்றி, முக்குலத்தோர் பேரவை சார்பாக அண்ணாமலைக்கு ஒரு கண்டன அறிக்கையும் கொடுத்தனர் என்பதுதான் யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் !

முத்துராமலிங்கப் பெருமகனாரை இப்படி முரடராக காட்டும் வேலையை இனி ஒருபோதும் செய்ய வேண்டாம், மீறிச் செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திப்பாய் என்று அவர்கள் எச்சரித்திருந்ததுதான் அண்ணாமலை மெஹா பொய்யர் என மீண்டும் நிறுவ உதவியது !

அண்ணாமலையின் இந்த அவதூறுச் சொற்களுக்கு உடனடியாகவெல்லாம் திமுக எதிர்வினை ஆற்றவில்லை.  ஏனெனில் எதற்காக இப்போது இதை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தது திமுக.  எனவே அவர்கள் ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்தனர். செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை 2023 அன்று, அண்ணா பிறந்த ஊரான காஞ்சியில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பெருவிழா நடைபெற்றது.  அன்றே, ஒரு கோடியே ஆறு இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு முதல் மாத உரிமைத் தொகையான ரூ.1000 த்தை விடுவித்தது தமிழக அரசு !

வங்கிகளில் ஆதார் அட்டையை இணைக்காத, சரியாக பராமரிக்காத கணக்குகளில் எல்லாம் இந்தப் பணம் போய்ச் சேரவில்லை எனத் தெரிந்ததும், Speed Money என்கிற மணியார்டர் வகை சேவையின் மூலம் ரொக்கமாக வீடுகளுக்கே போய் விநியோகம் செய்யப்பட்டன !

ரூபாய்க்கு மூன்றுபடி இலட்சியம் ஒரு படி நிச்சயம் என்று அரிசி வழங்கிய நாளை விட ;

சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்கின்படி, பதவியேற்றதும் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட்ட நாளை விட ;

சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்பூரவமாக இனி செல்லும் என அறிவித்த நாளை விட ;

தன் பிறந்தநாளில் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை கொடுத்த நாளைத்தான் பேரறிஞரின் ஆன்மா மிகவும் ரசித்திருக்கும், மகிழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை !

ஏன் இந்த நாடகம் ?

சங்கிகள் நாடகக்கலையில் வல்லவர்கள்.  மேடை நாடகங்களில் அல்ல.  ஊடகங்களின் உதவியுடன் அரசியல் மேடையில் அவர்கள் அரங்கேற்றம் செய்யும் நாடகங்கள்.

அதிமுகவின் பொம்மைகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த பொம்மலாட்ட நாடகம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்திருக்கிறது.

இனி பாஜகவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்றவுடன் வீதிகளில் நீள நீளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.  லட்டுகள் விநியோகிக்கப்பட்டன.  பேச்சே இல்லை இனி எங்கண்ணாகிட்ட வீச்சுதான் என்கிற ஓசி டயலாக்குடன் அண்ணாமலை படம் போட்ட போஸ்டர்கள் மதுரையெங்கும் ஒட்டப்பட்டன.  இவ்வளவுக்கும் அண்ணாமலைதான் காரணம், அவரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் போதும், அதுவரை உங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூறவேண்டாமென அதிமுகவின் தலைமை, தன் கட்சியினரிடம் வேண்டுகோள் வைத்தது.  உடனே பேட்டிகள் கொடுக்கும் அதிமுகவின் சில தலைகள் பொந்துகளுக்குள் பதுங்கின. ரகசியப்பயணம் என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு, செய்தியைக் கசியவிட்டபடி கொச்சி வழியாக டெல்லிக்குச் சென்றது ஒரு ர ரக்களின் குழு !

அதில் அண்ணாமலையை எள்ளலாகப் பேசிய அனைத்து தலைவர்களுமே இருந்தனர்.  அதாவது சண்டை எங்களுக்கும் அண்ணாமலைக்கும்தான், உங்களுடன் இல்லை என்பது அவர்கள் நமக்குச் சொன்ன வெளிப்படையான நிலைப்பாடு !

நாக்பூரில் வரையப்பட்டிருந்த ஸ்க்ரிப்ட் படி, அங்கு ஆபத்பாந்தவன் அமித்ஷாவின் அப்பாயின்மெண்ட் அவர்களுக்கு கிடைக்கவில்லை.  சிக்கியவர். நட்டா மட்டுமே.  அவரோ முகத்திலறைந்தார்ப் போல், அண்ணாமலையை ஒருக்காலும் நீக்கமுடியாது என்று சொல்லிவிட, ஏமாற்றத்துடன் அந்தக் குழு, மீண்டும் கொச்சி வழியே சென்னை திரும்பியது !

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக செப்டம்பர் 25 திங்கட்கிழமை, அதிமுகவின் செயற்குழுத் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடி ஆலோசனை செய்வது போல பத்து நிமிட short play செய்துவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்கிறோம்.  பாஜகவுடன் கூட்டணி இன்றுமில்லை, என்றுமில்லை என கே.பி. முனுசாமி அறிவித்ததுடன் இந்த பொம்மலாட்டத்துக்கு இடைவேளை விட்டிருக்கிறார்கள் !

நாளுக்கு நாள் I N D I A என்கிற இந்தியா கூட்டணி வலுவடைந்துக் கொண்டே போக, ஏற்கனவே தீய்ஞ்சது, வேகாதது, உடைஞ்சது, ஒட்டு போட்டது போன்றக் கட்சிகளை தன் கூட்டணிக் கட்சியாக வைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியான NDA, எப்படி தன்னிடமிருக்கும் ஒரு பெரிய கட்சியை இழக்கத் துணியும் ?

பெரியார் மண்ணைப் பொறுத்தவரை மதவெறி கட்சியுடன் தொடர்பு வைக்கும் எவரையும் முரட்டடி கொடுத்து விரட்டிவிட தமிழர்கள் தயங்கியதே இல்லை.  இதைப் பலத்த அடிகளை வாங்கிய பின் உணர்ந்துக் கொண்ட டெல்லி & நாக்பூர், தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மிக இறுக்கமாக, பலமாக இருக்கும் இந்தியா கூட்டணியை, இந்த நாடகத்தின் மூலம் சிதைக்க முடியுமா என ஒத்திகை பார்த்திருக்கிறது !

அல்லது 2016 -ல், ஜெயாவும், நடராஜனும் சேர்ந்து திட்டம் தீட்டி, மக்கள் நலக் கூட்டணி என்கிற போர்வையில் மூன்றாம் அணி ஒன்றை உருவாக்கியதன் மூலம் வாக்குகளைச் சிதறச் செய்து வென்றதைப் போல, 2024 லிலும் ஏதேனும் அதிசயம் நடந்து விடாதா எனத் தொன்னாந்திருக்கிறார்கள் !

ஆனால் இன்றைய சமூகவலைத்தளப் பரவலினால் மக்கள் மிக எளிதாக இவர்களுடைய சூழ்ச்சிகளை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

என்னய்யா ராசா சண்டையா ?  சரி, என்னமோ ஏழரை இலட்சம் கோடி ஊழல் பண்ணியிருக்கானுகளாமே, அதுக்கு எதுனா எதுத்து நீ அறிக்கை விடுவ ?

நீட் மேற்படிப்புக்கு சீரோ பெர்சண்டைலாமே, அப்ப என்னத்துக்கு அந்த எழவு நீட்டுன்னு கேட்டு மேடைல பேசுவ ? என்று பழனிச்சாமியிடமும் ;

தம்பி தம்பி ஸ்வீட் கொடுக்கறதும் இனி வீச்சுதான்ன்னு சொல்றதெல்லாம் சரிப்பா.  ஆளுநர்கிட்ட இவனுக மேல அவ்வளவு கேஸ் போட அனுமதி கேட்டு காத்து நிக்கறாங்களே ?  புசுக் புசுக்குன்னு ஆளுநரைப் போய் பாத்துட்டு வருவியே ?  இதுக்கு அனுமதி வாங்கி தருவியா தம்பி என்று அண்ணாமலையிடமும் மிகச் சாமானியர் ஒருவரால் இன்று கேட்க முடியும் !

அவ்வளவு ஆவேச உதார்களை அள்ளிவீசிய அண்ணாமலையிடம் இந்த விலகல் பற்றியக் கேள்வியை கேட்டபோது, இதற்கு மேலிடம்தான் பதில் சொல்லும் என்று டெல்லிக்கு அந்த கேள்வியைத் தள்ளிவிட்டார்.  அவர்களுடைய உண்மையான வீரமே இவ்வளவுதான் !

இது அசல் பொம்மலாட்ட நாடகம்தான் என்பதை நமக்கு காலம் உணர்த்தும் !

rashraja1969@gmail.com