எமக்குத் தொழில் – 24

அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? என்று வசனம் பேசி உலகைச் சுற்றுவதற்கு பதிலாக அம்மா, அப்பாவைச் சுற்றி வந்த கதையை அறிந்தவனான எனக்கு விண்வெளியில் தங்கி146 நாட்களுக்கு  உலகை தினமும்  16 முறை சுற்றி வந்தவரான  கிரிஸ் ஹாட்ஃபீல்டின் அனுபவங்களைப் படித்த போது மனித சக்தியின், முயற்சியின், அறிவியலின், கற்பனைக்கு அப்பாற்பட்ட   வளர்ச்சியை அறிந்து வியப்பும், பெருமையுமாக இருந்தது. An Astronauts Guide To Life On Earth  என்ற Chris Harfieldன் அனுபவங்கள் உலகில் 244 சாதனையாளர்களுக்கு மட்டுமே கிடைத்தவை.

விண்வெளி வீரர் என்பவர் ஏதோ சாகசக்காரர் அல்ல. வீரதீரச் செயல் செய்வதற்காகப் பிறந்தவர் அல்ல. இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிலிருந்து ஏராளமான தேர்வுகளின் மூலம் சல்லடை போட்டு சலித்துச் சலித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோடிக்கணக்கான டாலர் செலவில், மிக மிகக் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு. அந்த பயிற்சியின் பலனாக கடுமையான சூழல்களில், மிக நுட்பமான, கடினமான ஆய்வுகளை அறிவியலின் பல்வேறு துறைகளிலும் செய்து, தரவுகளை, முடிவுகளை அறிவியல் உலகிற்கு அளிக்கக் கூடிய ஒரு அரசு ஊழியர்.  அரசு ஊழியர் என்பதை மிக அழுத்தமாகவே சொல்ல வேண்டும். சொகுசுப் பேர்வழிகள், ஓசிச் சம்பளம் என்ற பல்வேறு அவதூறுகளை ஒட்டு மொத்தமாகச் சுமக்க நேரிடும் ஊழியர்களின் கடின உழைப்பை, அறிவை, விடாமுயற்சியை விண்வெளியிலிருந்து உலகிற்குப் பறைசாற்றும் ஒரு அரசு ஊழியர்.

விண்வெளி வீரராக உருவாக முதலில் ஒருவர் போர் விமானியாக, ஒலியின் வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் செல்லும் போர் விமானத்தை இயக்குபவராக இருக்க வேண்டும். அசாத்திய உடல் வலிமை இருக்க வேண்டும்.  போர் விமானம் ஓட்டும் விமானி கிட்டத்தட்ட ஒரு அறிவியல் முனைவர் அளவிற்கு, ஆய்வாளர் அளவிற்கு அறிவியல் படித்தவராக இருக்க வேண்டும்.   ஹார்ஃபீல்ட் விமான அமைப்பியல் பற்றி உயர்கல்வி கற்றவர்.  32 வகை போர் விமானங்களை ஓட்ட அறிந்தவர்.   இப்படிப்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஆய கலைகள் அறுபத்தி நான்கும் கற்றுத் தரப்படும். எங்கள் அலுவலகத்தில் தீப்பிடித்து விட்டால், தீ.. தீ.. என்று கத்தியபடி, வெளியே ஓட வேண்டும் என்று ஆங்காங்கே பெரிய பெரிய போஸ்டர் ஒட்டி வைத்திருப்பார்கள். விண்கலத்தில் தீப்பிடித்தால் வெளியே எங்கே ஓட முடியும்? ஒரு தீயணைப்பு வீரருக்குத் தரப்படும் அத்தனை பயிற்சியும் தருவார்கள். பல்வலி, நெஞ்சுவலி, கை, கால் எலும்பு முறிவு என்றால் விண்வெளியில் ஏது மருத்துவர்? ஒரு மருத்துவருக்கான அத்தனை பயிற்சியும் தருவார்கள். மாக்கட்டு போட, பல் பிடுங்க கற்றுத் தருவார்கள்.  நம் அலுவலகங்களில் கணினியில் சின்ன கோளாறு என்றாலும். ஒரு முறை அணைத்து விட்டுப் போடுவோம். அப்படியும் வரவில்லை என்றால்,  ஒர்க் பண்ணல்ல என்று அடுத்தவரை உதவிக்கு அழைப்போம். இரண்டு பேர், மூன்று  பேர் மட்டுமே போகும் விண்வெளிப் பயணத்தில் கம்ப்யூட்டர் ரிப்போ், எலக்ட்ரிகல் வேலை, பிளம்பிங் எல்லாம் சொந்தமாகத்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் பயிற்சி. எல்லாவற்றிற்கும் ஹோம் ஒர்க். பள்ளி, கல்லூரியில் படித்து வந்த ஹாட்ஃபீல்டின் மூன்று குழந்தைகளும். “என்ன அப்பா, எங்கள விட உங்களுக்கு                 ஹோம் ஒர்க் ஜாஸதியா இருக்கு?“ என்று கேலி செய்வார்கள்.  கணினி அறிவியல். நிலவியல், ரோபோடிக்ஸ்,  ஆர்பிட்டல் மெக்கானிக்ஸ், வானிலையியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று பாடங்கள் ஒரு புறம் நடக்க, மறுபுறம் மிக விலை உயர்ந்த , துல்லியமான கேமரா மூலம் படம் எடுக்கக் கற்றுத் தர உலகக் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் வேறு பாடம் நடத்துவார்களாம். விண்வெளியில் யானை, குதிரை எல்லாம் கிடையாது என்பதால் யானையேற்றம், குதிரையேற்றம் மட்டும் சிலபஸில் கிடையாது. மற்றபடி, உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் கற்றுத் தந்து அனுப்புவார்கள்.  என் போன்றோர் மதுரையிலிருந்து சென்னை செல்லவே அத்தனை முன்னேற்பாடுடன் செல்லும் போது, 62 மில்லியன் மைல் பயணம் என்றால் சும்மாவா?

புவியீர்ப்பை மீறிச் செல்ல வேண்டும் என்பதால் முதல்நாளிலிருந்தே சாப்பாடு கட். போதாதற்கு எனிமா வேறு கொடுத்து விடுவார்கள்.  பேம்பர்ஸ் மாட்டிவிடுவார்கள். உடலில் சத்தே இல்லாமல், 62 மில்லியன் மைல் பயணத்தில் கண் முன் இருக்கும் ஆயிரக்கணக்கான கருவிகளை கவனமாகக் கண்காணித்தபடி பயணிக்க வேண்டும். சிறு தவறு என்றாலும் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.  ஓரிரு வினாடிகள் தாமதம் என்றாலும். லட்சக்கணக்கான மைல் தூரம் பாதை விலகிவிடும். போக வேண்டிய இடத்திற்கு பதிலாக நெப்ட்யூனில் போய் இறங்க வேண்டியதுதான் ! எனவே அசாத்திய உடல் பலத்திற்குத் தயாராக வேண்டும். அசாத்திய மூளை பலத்திற்கும்.  கிடைக்கும் நேரம் எல்லாம் பயிற்சி, பயிற்சி, பயிற்சி. இத்தனை பயிற்சிகளின் காரணமாக விண்வெளிப் பயணத்தில் பிரச்சனைகளே வராமல் போய்விடாது என்கிறார் ஹாட்ஃபீல்ட்.  வரும் பிரச்சனைகளைக் கண்டு, பதட்டப்படாது, உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து, சட்டென்று  செய்வதற்கான தயார் நிலையை இந்த பயிற்சிகள் அளிக்கும், அவ்வளவுதான் என்கிறார் அவர்.

புவியீர்ப்பு இல்லாத இடத்தில் நாம் அன்றாடம் மிக எளிதாகச் செய்யும் வேலைகளும் கடினமானவைகளாக இருக்குமாம்.  ஒரு போல்ட்டை குரங்கு ஸ்பானர் வைத்து கழற்றுவது பனித்தரையில், பனிச்சறுக்கு காலணிகள் அணிந்து, எலக்ட்ரீசியன் போட்டுக் கொள்ளும் பெரிய கையுறை அணிந்து கொண்டு, டிராக்டர் ஒன்றுக்கு டயர் மாற்றுவது எவ்வளவு கடினமோ, அந்த அளவிற்குக் கடினமாக இருக்குமாம். மற்றொரு புறம், ஒரு ஆளுயர பிரிட்ஜை, சுண்டுவிரலால் எளிதாக நகர்த்தி விடவும் முடியும். எந்த வேலை கடினம், எது எளிது என்பதைப் புரிந்து கொள்வதே பெரிய பிரச்சனை.

ஹாட்ஃபீல்டும், அவரது சகாக்கள் இருவரும் 146 நாட்கள் வான்வெளியில் International Space Station  எனப்படும் வான்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கூடத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்து திரும்பியிருக்கிறார்கள். கோடிக்கணக்கான மில்லியன் டாலர் செலவில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற சில நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அறிவியல் அற்புதம் அது. எந்த நாடு எவ்வளவு முதலீடு செய்துள்ளதோ. அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் அந்த நாட்டின் விண்வெளி வீரர்கள் அங்கு சென்று தங்கி ஆராய்ச்சி செய்து திரும்புவார்கள். ஹாட்ஃபீல்ட் கனடா நாட்டுக்காரர். அவர்களது நாட்டின் முதலீடு குறைவு. எனவே கனடா நாட்டினர் அதிகம் அங்கு போக முடியாது.  அது கிட்டத்தட்ட ஒரு கால்பந்த மைதானத்தின் அளவு இருக்கும். ஐந்து பிஹெச் கே வீடு போன்றது.  சுவர் முழுக்க வெல்க்ரோ வைத்திருப்பார்கள். மிதந்து செல்லும் பொருட்கள் அதில் ஒட்டிக் கொள்ளும். பல் தேய்த்தால் வாய் கொப்பளிக்கக் கூடாது. நாம் துப்புவது மிதந்து சென்று சக வி.வீரர் முகத்தில் போய் அப்பும். என் பேரன் போல் அப்படியே முழுங்கி விட வேண்டியதுதான். மூச்சா, ஆய் போவதற்கெல்லாம் தனி வகுப்பு நடத்தி சொல்லித் தந்திருப்பார்கள்.  அது எப்படி என்பதை பக்க அளவு கருதி நான் விவரிக்கவில்லை. மூல நூலில் படித்துக் கொள்ளுங்கள் ! அந்த விண்வெளி வீட்டில் எப்போதுமே  மெத்து மெத்து என்று மிதந்து கொண்டே தான் இருப்போம் என்பதால் படுக்க மெத்தை, தலையணை தேவையில்லையாம்.  படுத்தால் ஏதோ வெண்பஞ்சு மேகத்தில் படுத்திருப்பது போல் இருக்குமாம்.  புரண்டு புரண்டு படுத்து, ஒரு வசதியான பொசிஷனை தேர்வு செய்ய வேண்டிய வேலை கிடையாது.  புவியீர்ப்பு இல்லாததால் நடப்பதே சிரமம். எனவே அங்கு நடப்பதற்கு தெம்பு வேண்டும் என்பதற்காக, எலும்பு, தசைகளை வலுவாக்க, தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். பூமிக்கு வந்த பிறகு பல நாட்களுக்கு இரண்டு காலில் சாதாரணமாக எழுந்து நின்றாலே கால் வலி பின்னி எடுத்துவிடுமாம்.  பூமிக்கத் திரும்பி  வந்த பிறகு,  எழுந்து நின்று நடக்கவே பல நாட்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

இத்தனை சிரமப்பட்டு விண்வெளி சென்று அங்கு செய்த ஆய்வுகள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார் ஹாட்ஃபீல்ட்.  அவை எல்லாம் தேர்ந்த அறிவியலாளர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய உயர் அறிவியல் என்பதால், இங்கு அவை பற்றி விவரிக்கவில்லை. வாசக சுவாரஸ்யம் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே பகிர்ந்துள்ளேன்.

சமீபத்தில், சந்திரயான் அறிவியலாளர்கள் திருப்பதி கோவில் சென்று வழிபடுவது பற்றியெல்லாம் பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன. அறிவியல் உலகில் இது போன்ற நம்பிக்கைகளுக்கு குறைவே இல்லை.  இதை கவனிக்காமல் விட்டுவிட்டதால், பிரச்சனை வந்துவிட்டது, பல ஆண்டுகள் பல பில்லியன் டாலர் செலவு செய்து உழைத்தது வீணாகி விட்டது என்று ஆகிவிடக் கூடாது என்ற அறிவியல், ஆன்மீகம், நம்பிக்கை என்று எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் செய்து விடுபவர்களாகத் தான் அவர்கள் இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு இன்று வரை விண்வெளி வீரர்கள் ரஷ்யாவிலிருந்து தான் ராக்கெட்டில் கிளம்புகிறார்கள். அது தான் பக்கம் போலும் ! கிளம்பும் போது கவனிக்க வேண்டிய அறிவியல் அம்சங்களோடு  இது போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயங்களையும் விட்டுவிடாது இன்றளவும் கடைப்பிடிக்கிறாா்கள்.   கிளம்புவதற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விண்வெளி வீரர்களை தனிமைப்படுத்தி அறையில் அடைத்துவிடுவார்கள். ராக்கெட் ஏறும் சமயம்தான் வெளியே வரவேண்டும். வரும்போது, அந்த அறையின் கதவில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஒரு சடங்கு.  அந்த தங்கும் இடத்திலிருந்து ஹாட்ஃபீல்டும், மற்ற இருவரும் ஒரு வேனில் ஏறி, ராக்கெட் லாஞ்ச் மையத்திற்குச் செல்கிறார்கள். பதினைந்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு டிரைவர் வண்டியை ஓரம் கட்டி நிறுத்துகிறார்.  எல்லோரும் இறங்கி வேனின் பின்பக்க வலது டயரில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறார். ஹார்பீஃல்ட் எதற்கு? என்கிறார். யூரி காகாரின் முதன்முறையாக விண்வெளி சென்ற போது, வேனில் கிளம்பிய பதினைந்தாவது நிமிடத்தில், இப்படி வண்டியை நிறுத்தி, பின்பக்க வலது டயர் மேல் மூச்சா அடித்தார். நல்லபடியாக திரும்பி வந்தார். அதிலிருந்து இந்த சம்பிரதாயம் தொடர்கிறது என்கிறார் டிரைவர் பணிவாக. பெண் விண்வெளி வீராங்கனைகள் என்ன செய்வார்கள்? என்று ஹாட்ஃபீல்ட் கேட்க,  “வரும்போது பாட்டில்ல பிடிச்சுட்டு வரச் சொல்லிடுவோம். இங்க வண்டிய நிப்பாட்டி, டயர்ல ஊத்திடுவோம்.“ என்கிறார் டிரைவர் சீரியஸாக.  சோவியத் யூனியன் என்ன, ஸ்ரீஹரிகோட்டா என்ன, எல்லாம் நல்லபடியா நடக்கணுமே என்ற கவலை ஆதார மனித குணம் தானே !

ஹாட்ஃபீல்ட் இது மாதிரி மூன்று முறை விண்வெளி சென்று தங்கியிருக்கிறார்.  அதிகபட்சமாக 146 நாட்கள்  தங்கல். அந்த முறைமட்டும் அவர் பூமியை 2336 முறை வலம் வந்திருக்கிறார். விண்வெளி பற்றி ஏராளமான தரவுகளைத் திரட்டித் தந்திருக்கிறார். அவற்றிற்கெல்லாம் உடனடிப் பயன் என்ன என்று எனது சிற்றறிவிற்குத் தெரியவில்லை. ஆனால் அறிவே ஆயுதம் என்ற பொதுவான புரிதலில் ஹாட்ஃபீல்டின்  கிடைத்தற்கரிய அனுபவம் பற்றிய இந்த புத்தகம் எனக்கு மிகப் புதிய வெளிச்சத்தைத் தந்தது.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்குவதை ஒன்பது வயதுச் சிறுவனாக கறுப்பு வெள்ளை டிவியில் கலங்கலாகப் பார்த்து, நாமும் விண்வெளி வீரராக ஆகவேண்டும் என்று நினைத்ததாக அவர் குறிப்பிடுகிறார். இந்த புத்தகம் எழுதும் போது படிப்பவர்களக்கு தன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வரவேண்டும் என்பதற்காக இப்படி அள்ளி விட்டதாகத் தெரியவில்லை. மெய்யாகவே நினைத்திருக்கிறார். அதற்காகப் பாடுபட்டிருக்கிறார்.  15வது வயதில் கிளைடர் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். 16வது வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி. பின்னர் கனடா விமானப் படையில் பணி. எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.  பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் அப்பா, அம்மாவுடன் வயக்காட்டு வேலை பார்த்தவர். ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி முன்னேறியவர்.  விண்வெளியிலிருந்து இந்த பூமியை 146 நாட்களுக்கு தினமும் பார்த்தது,  மிகப் பெரிய அறிவாளிகளான , பலசாலிகளான சக வீரர்கள் இருவரோடு ஒத்துழைத்து, அநத 146 நாட்களும் ஒவ்வொரு நாளிலும் ஏற்பட்ட சோதனைகளைச் சமாளித்து, எடுத்த காரியத்தை நல்லபடியாக முடித்து, பூமிக்குத் திரும்பியது அவரை ஒரு புது மனிதனாக எவ்விதம் மாற்றியது என்பதையும் புத்தகம் முழுக்கச் சொல்லிச் செல்கிறார்.   இந்த உலக வாழ்க்கைக்கான ஒரு விண்வெளி வீரனின்  கையேடு என்றுதான் தனது அனுபவங்களுக்குத் தலைப்பிட்டிருக்கிறார்.

பார்க்கப் போனால், இந்தத் தொடரில் நான் குறிப்பிட்ட  ஒவ்வொரு புத்தகமுமே இந்த உலக வாழ்க்கைக்கான ஒரு கையேடு என்றுதான் தோன்றுகிறது !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – AN ASTRONAUTS GUIDE TO LIFE ON EARTH BY CHRIS HADFIELD

தொடர் நிறைவு பெறுகிறது.