னக்குக் கிடைத்த தகவலை வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தேன். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இந்தச் சமயத்தில்தான் பந்தயம் கட்ட முடியும். அதற்காகச் சூதாட்டத் தரகரை அணுக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கோடிகளில் பணம் புரளும் கிரிக்கெட் விளையாட்டு ஒரு தொழிற்சாலை போல. அது ஒரு தொழில்வாய்ப்பும்கூட. உற்பத்திப் பொருள் கடைக்கோடி பயனாளிகளுக்குப் போய்ச் சேரும் வரை இடையில் உள்ள அனைவரும் சம்பாதிக்கும் கண்ணி இணைப்பு கிரிக்கெட் விளையாட்டிலும் உண்டு. களத்தில் ஆடும் வீரர்கள் மட்டுமல்லர், அணியின் உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், உபகரண உற்பத்தி-விற்பனை, ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள தொலைக்காட்சி, அந்தத் தொலைக்காட்சி ஊழியர்கள்… இப்படி பயனடைபவர்களின் சங்கிலி நீளமானது.

களத்தில் மோதிக் கொள்ளும் இரு அணி வீரர்கள் அணியும் சீருடையைப் போன்ற தோற்றம் கொண்ட சீருடைகளை மைதான வாசலில் விற்கும் தெருவோர வியாபாரிகள், கொடிகளை விற்கும் ஆதரவற்ற சிறுவர்கள், முகத்தில் வண்ணம் தீட்டிப் பிழைக்கும் அன்றாடங்காய்ச்சிகள் என கிரிக்கெட் ஆட்டம்தான் எத்தனையெத்தனை பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.

சங்கிலியின் கடைசிக் கண்ணி ரசிகர்கள். அவர்களை நுகர்வோர் என்றும் சொல்ல முடியாது. லாபம் பார்க்கும் வியாபாரி என்றும் சொல்ல முடியாது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி, நீண்ட வரிசையில் காத்திருந்து வியர்வையில் கசகசத்து கேலரியில் அமர்ந்து வெயிலையும் பனியையும் எரிச்சலோடு சகிக்கிறான் ரசிகன். இருந்தாலும் மனங்கவர்ந்த வீரர் பந்தைப் பறக்கவிடும் அந்தக் கணத்தில் எழும் மனக் கிளர்ச்சியும் சக ரசிகர்களின் கூக்குரல்களால் புலன்களுக்குள் பீறிட்டெழும் உச்சக்கட்ட உணர்வெழுச்சியும் ரசிக மனத்தில் தேக்கி வைக்கும் ப்என்றென்றைக்குமான நினைவுப் புதையல். மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை பார்ப்பதால் கிடைக்கும் இந்தப் புதையல் லாபம் தராத முதலீடாகும். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பே இல்லை.

விரும்பிய அணி வெற்றி பெற வேண்டும், எதிரணி தோற்க வேண்டும் என பிரார்த்திக்கும் முகங்களால் கிரிக்கெட் மைதானம், வழிபாட்டுத்தலமாக மாறி ஆன்மிக ஊற்று வழிந்தோடும். பிரார்த்தனை பலிக்கவில்லை என்றாலும் பாதகமில்லை. இறைநம்பிக்கை குறைந்து விடாது. அடுத்த ஆட்டத்தை மைதானத்திலே காண ரசிக மனம் ஏங்கும்.

எல்லாத் தொழிலிலும் நேரடி வர்த்தகம் இருப்பதைப் போல கள்ளச்சந்தையும் உண்டுதானே… கிரிக்கெட்டின் கள்ளச் சந்தை சூதாட்டம். ஸ்டிக்கர் ஒட்டி கல்லா கட்டும் கள்ளச் சந்தை அல்ல இது. நிழழுலக தாதாக்களுக்கு கிரிக்கெட் சூதாட்டம் பொழுதுபோக்கு, தெருமுனை ரவுடிகளுக்கு அது அதிகார போதை. பத்திரிகையாளனாக நானும் கள்ளச்சந்தைக்குள் நுழைந்தேன். கிரிக்கெட் சூதாட்டத்தில் என்னுடைய லாபம் பணம் அல்ல.

“இந்த உலகக் கோப்பைத் தொடர் முடியும் போது, நம்ம நாட்டோட கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதிக்க வாய்ப்பிருக்கு சார்…”

இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் செய்தித் தொகுப்புகளை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் இது. நிர்வாக ஆசிரியர் சிவாஜி கணேசன் இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் என அவர் கணித்ததை வெள்ளைச் சுவர்ப் பலகையில் வரிசையாக எழுதிக் கொண்டிருந்தார். ஓவல் வடிவ நீண்ட மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள், நிர்வாக ஆசிரியர் எழுதிக் கொண்டிருப்பதைத் தீவிரத்தோடு பார்ப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தனர். சனி, ஞாயிறு தவிர நாள்தோறும் நண்பகல் 12 மணிக்கு நிர்வாக ஆசிரியர் தலைமையில், பொறுப்பாசிரியர்கள், இணையாசிரியர்கள் கூடி விவாதிப்பது கட்டாயச் சடங்கு. மொபைலில் இன்ஸ்டாகிராமை இடது கைப் பெருவிரலால் வருடிக் கொண்டிருந்த நான், அனைவரின் கவனத்தையும் என் பக்கம் திருப்பினேன்.

“கிரிக்கெட் டீமுக்குத் தடை… நல்ல டிப்… பெரிசா போகும் போலயே… கன்ஃபர்ம்ட்தானே…” எழுதி முடித்து விட்டு திரும்பி நின்று என்னைப் பார்த்துக் கேட்டார் நிர்வாக ஆசிரியர்.

பசிக்கத் தொடங்கி கும்பி கரையும் நேரத்தில் டிஆர்பி ரேட்டிங் பற்றிக் காரசாரமாக விவாதிக்கும் இந்தக் கூட்டத்தில், எந்தச் சுரத்துமின்றி அமர்ந்திருப்பதுதான் என் வழக்கம். இன்று சைவமா அசைவமா, எதற்கு அதிக புள்ளிகளைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றித்தான் என் மனம் விவாதித்துக்கொண்டிருக்கும். பிரேக்கி செய்தி பற்றி ஒன்லைன் ஸ்டோரியைச் சொல்லிவிட்டு, இன்றும் அதேபோல், சாப்பாட்டு நினைப்பிலேயே லயித்திருந்ததால் சிவாஜி சார் கேட்டது காதில் விழவில்லை.

“நம்பி… உங்களைத்தான்… சோர்ஸ் நம்பிக்கையான ஆள்தானே… இன்னிக்கு பிரைம் டைம்ல பிரேக் பண்ணிடலாம்ல…” கண்ணாடியை நெற்றியில் ஏற்றிக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்துக் கேட்டார் நிர்வாக ஆசிரியர்.

நான் சொன்ன தகவலால் பொறுப்பாசிரியர்களும் இணையாசிரியர்களும், அது எப்படிச் சாத்தியம் என்பது போலக் குழம்பிப் போய் அதிர்ந்திருந்தனர். ஆனால், வியப்பையோ ஆச்சரியத்தையோ வெளிப்படுத்தாத சிவாஜி சாரின் உடல் மொழி சந்தேகத்தைக் கிளப்பியது. எனக்குக் கிடைத்த தகவல், அவருக்கும் கிடைத்திருக்குமோ? எனக்குத் தகவல் சொன்ன சோர்ஸ், சேனலின் ஹெட் என்பதால் அவருக்கும் சொல்லியிருப்பாரோ?

ஆங்கிலச் செய்தி சேனலில் ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட்டராக பத்திரிகை உலகில் கால் பதித்தவர் சிவாஜி சார். முப்பது ஆண்டு கால அனுபவம், நிர்வாக ஆசிரியர் என்ற பொறுப்பை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. விளையாட்டு என்பது அரசியல்தான், அரசியலும் ஒரு விளையாட்டே என அவர் அடிக்கடி சொல்வார். விளையாட்டு உலகத்தில் எனக்கும் நல்ல சோர்ஸ் உண்டு. இது அவருக்கும் தெரியும் என்பதால், பிரேக்கிங் நியூஸின் நம்பகத்தன்மையை மட்டுமே அவர் அறிய விரும்பினார். ஆனால், மற்றவர்கள் அது எப்படி சாத்தியம் என்பது போல என் முகத்தைப் பார்த்தனர்.

“சோர்ஸ் நம்பிக்கையான ஆள்தான்… பிரைம் டைம் புல்லட்டின்ல பிரேக்கிங் கொடுத்திடுறேன் சார்…”

மீண்டும் மொபைலைத் தடவினேன். மற்ற செய்தித் தொகுப்புகளை இறுதி செய்யும் உரையாடல் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்ளாமல், அருகிலிருந்த பொறுப்பாசிரியர் ஜெமினி கணேசன், “அதெப்படி நம்பி அப்டியெல்லாம் பண்ண முடியும்? நம்ம பிரதமர் அவ்வளவு ஈஸியா இதை விட்டுருவாரா?” திகைப்போடு கேட்டார். நான் தோள்களை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினேன்.

“நோ… நோ… சான்ஸே இல்ல… இந்த பிரேக்கிங் நியூஸ் தேவையா? நேஷனல் சேனல்ல இதப் பத்தி வந்த பின்னாடி நாம போட்டுக்கலாம் சார்…” நிர்வாக ஆசிரியரின் கவனத்தை மீண்டும் கிரிக்கெட் பிரேக்கிங் பக்கம் திருப்பினார் ஜெமினி சார்.

பொதுவாக, உடனுக்குடன் உறுதி செய்ய முடியாத செய்திகளை இன்னொரு சேனல் ஒளிபரப்பினால், அதைப் பார்த்து பிரேக்கிங் அடிப்பது ஊடகங்களின் வழக்கம். அதுவும் நேஷனல் சேனல் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம் என்பது ஊடக உலகில் நிலவும் ஒருவகை மோஸ்தர்.

ஜெமினி கணேசன் ஒர் அரசியல் கட்சி சார்பானவர், அதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவும் தயங்காதவர். அரசியல் கட்சி பிரமுகர்கள் நடத்தும் சேனலில் பணிபுரியும் பத்திரிகையாளர்களிடம் அரசியல் சார்பு இருக்கும். இப்போதெல்லாம் நடுநிலைச் சேனல் எனச் சொல்லிக் கொள்ளும் சேனல்களில் வேலை பார்ப்பவர்கள்கூட, தங்கள் அரசியல் முகத்தை வெளிக்காட்டத் தயங்குவதில்லை. நாட்டின் அரசியல் போக்கு அப்படி முன்னேறி விட்டது. பத்திரிகையாளர்களுக்கு அரசியல் சார்பு இருக்கக் கூடாதா என்ன?

கிரிக்கெட் பற்றிய பிரேக்கிங்கைத்தான் ஜெமினி சார் சொல்ல வருவதாக புரிந்து கொண்ட நிர்வாக ஆசிரியர், “அதென்ன நேஷனல் சானல்…? நாம பிரேக் பண்ற நியூஸ் நேஷனல் லெவல்ல பேசப்படட்டுமே… ஏற்கனவே அந்த மாதிரி நடந்திருக்குல்ல…”

பிரதமரைத் தொடர்புபடுத்தும் இந்த பிரேக்கிங் நியூஸ் குறித்த சீனியர்களின் ஆலோசனைகளை சிவாஜி சார் செவிமடுக்காதது மட்டுமல்ல, அவரின் வார்த்தையில் வெளிப்பட்ட உறுதி, என்னுடைய ஐயத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

“பந்தயம் கட்டலாமா? இது பிரேக்கிங் நியூஸே கிடையாது. இன்னும் சொல்லப் போனால் நியூஸே கிடையாது… அடிச்சி விடாதே நம்பி…?” ஒரு பக்கம் பிரைம் டைம் ஆலோசனை போய்க்கொண்டிருக்க, ஜெமினி சார் என்னிடம் வம்பு வளர்த்தார்.

“சார்… உண்மைதான். நம்புங்க… வேணும்னா பந்தயம் கட்டிக்கலாம்… இன்னும் ரெண்டு நாளைக்கு இதுதான் ஹாட் நியூஸ்…”

“எவ்வளவு பந்தயம் கட்டலாம்… இப்படியெல்லாம் எந்த்த் திட்டமும் இல்லன்னு, நாளைக்கே விளையாட்டுத்துறை மத்திய அமைச்சர் அறிக்கை விடுவார் பாரு…”

“ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம்…” அவர் சொல்லி முடிப்பதற்குள், அவருடைய சட்டைப் பையில் துருத்திக் கொண்டிருந்த ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நான்கு தாள்களை உருவினேன்.

“பந்தயத்தில ஜெயிச்சுட்டு வாங்கிக்கப்பா…”

“அதெல்லாம் ஜெயிச்ச மாதிரிதான் ஜெமினி சார்…” சொல்லிக் கொண்டே கிளம்பினேன். கூட்டமும் முடிந்துவிட்டிருந்தது. இன்று அசைவ ஹோட்டலுக்குப் போக அமவுண்ட்டைத் தேத்திவிட்டிருந்தேன்.

இரவு 8 மணி. நான் எழுதிக் கொடுத்த செய்தி தயார் நிலையில் இருந்தது. கூடுதல் அழகுக்காக ஒப்பனை செய்துகொண்டு, கொஞ்சம் பொலிவை ஏற்றிக் கொண்டேன். செய்தி அறையில் என் முகத்தில் போதுமான அளவுக்கு ஒளியை வாங்கி, மைக்கைக் கையில் ஏந்தி, நியூஸ் ரூம் ஓபி கொடுக்க, கேமராமேன் சொன்ன இடத்தில் வாகாக நின்று கொண்டேன். ஓபி என்றால் அவுட்சைட் பிராட்காஸ்டிங், அதாவது வெளிப்புறப் படப்பிடிப்பு. நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து செய்தியாளர்கள் நேரலை வழங்குவதைப் பார்த்திருப்பீர்களே அதுதான். நான் வழங்கப் போகும் பிரேக்கிங் நியூஸ் ‘எதிர்வுகூறல்’ என்பதால் செய்தி அறையிலிருந்தே நேரலை வழங்கத் தயாரானேன்.

நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டு அறை மற்றும் செய்தி வாசிப்பாளரோடு இணைக்கப்பட்டேன். பிரைம் டைம் நியூஸ் புல்லட்டினுக்கான சிக்னேச்சர் மியூசிக் ஒளிபரப்பானவுடன் தலைப்புச் செய்திகளை வாசித்தார் நியூஸ் ஆங்கர் பத்மினி. அடுத்ததாக பிரேக்கிங் செய்திக்கான மியூசிக் துணுக்கு ஒளிபரப்பானது.

கேமராமேனிடம் பேசிக்கொண்டிருந்த போது, “அடுத்து நீங்கதான்…” என நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து என் காதுக்குத் தகவல் தந்து எச்சரிக்கை செய்தனர். நான் நேரலையில் இணைக்கப்பட்டு விட்டதால், பதில் கூறினால் அது ஒளிபரப்பாகி விடும். அதனால், கேமரா முன்பு கட்டை விரலை உயர்த்தி தயார் என சமிக்ஞை செய்தேன்.

கிரிக்கெட் ஆட்டத்தில் சமநிலையைக் கொண்டு வர புதிய விதிகளை அமல்படுத்த பிரதமர் விருப்பம்

கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வர சிறப்புக் குழு அமைக்க பிரதமர் முடிவு

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட குழு விரைவில் அமைக்கவுள்ளதாகத் தகவல்

எனத் தொலைக்காட்சித் திரையில் ஒளிர்ந்த வாசகங்களை நியூஸ் ஆங்கர் வாசித்தார். இரண்டு முறை இதையே திரும்பத் திரும்ப வாசித்த பின், “இது பற்றிய கூடுதல் தகவல்களை இணைப்பில் உள்ள தலைமைச் செய்தியாளர் நம்பியாரிடம் கேட்கலாம். “நம்பி… என்ன மாதிரியான மாற்றங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது…” என்றார்.

அவர் சொல்வதை ஆமோதிப்பது போலத் தலையை அசைத்துக் கொண்டிருந்த நான், “பத்மினி… நமக்கு கிடைத்திருக்கிற பிரத்யேகத் தகவல்படி, தற்போதைய கிரிக்கெட் ஆட்டத்தில் சமநிலை இல்லாமல் இருப்பதாக பிரதமர் கருதுவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இது பற்றி மூத்த கிரிக்கெட் வீரர்களிடம் பிரதமர், கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும், மூத்த வீரர்களும் பிரதமரின் கருத்தை ஆமோதித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான், தற்போதைய கிரிக்கெட் ஆட்ட விதிகளைப் பற்றி முழுமையாக ஆராயவும், புதிய விதிமுறகளைப் பரிந்துரை செய்யவும், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட குழு அமைக்க வாய்ப்புள்ளதாக நமக்குத் தகவல் கிடைத்துள்ளது பத்மினி…”

அவர் ‘நம்பி’ என்று தொடங்குவதும், நான் ‘பத்மினி’ என்று முடிப்பதிலும் ஏதோ ஒரு மோகம் தெரிகிறதே எனக் கவர்ச்சி முடிச்சி போட்டு கற்பனை செய்து கொள்ள வேண்டும். போலீஸ்காரர்கள் வாக்கி-டாக்கியில் பேசத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ‘ஓவர்… ஓவர்…’ என்று சொல்வது போலத்தான் இதுவும். ஆங்கர் பெயரைச் சொல்லி விட்டால், ‘நான் முடித்து விட்டேன், அடுத்து கேள்வி இருந்தால் நீங்கள் கேட்கலாம்’ என்ற கோட் வேர்ட்தான் இது.

“கிரிக்கெட் ஆட்டத்தில் சமநிலை இல்லை என்பதை எந்த வகையில் பிரதமர் உணர்வதாக ஏதாவது தகவல் இருக்கிறதா நம்பி…?”

“பத்மினி… நமக்கு கிடைத்திருக்கிற தகவல்படி, கிரிக்கெட் ஆட்டத்தில் சமூகநீதி கடைப்பிடிக்கப்படுவதில்லை என பிரதமர் உணர்வதாகத் தெரிகிறது. பெரும்பாலும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகத் தற்போதைய கிரிக்கெட் வடிவம் இருப்பதாகப் பரவலான கருத்து இருப்பதையே பிரதமரின் சிந்தனையும் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது பத்மினி…”

“கிரிக்கெட்டில் சமூகநீதி இல்லையா? விரிவாக தகவல்களை பதிவு செய்ய முடியுமா நம்பி?”

“பத்மினி… நான்கு விதிகள் கிரிக்கெட் ஆட்டத்தின் சமநிலைத் தன்மையை சீர்குலைப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுவதாகத் தெரிகிறது. அதைத்தான் பிரதமரின் எண்ணமும் பிரதிபலிப்பதாக அறிய முடிகிறது.

முதலாவதாக, பவுலர்களின் ஆதிக்கம் கிரிக்கெட் போட்டியின் சுவாரஸ்யத்தை குறைப்பதாக்க் கருதப்படுகிறது. அதாவது, பேட்டர் அவுட்டாகிவிட்டால் அந்த ஆட்டத்தில் அவரால் மீண்டும் களமிறங்க முடியாது. அதேசமயம் பவுலர் மோசமாகப் பந்துவீசினாலும் அதே ஆட்டத்தில் அவருக்கு மீண்டும் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது நியாயமான போக்கு அன்று எனக் கூறப்படுகிறது.

இரண்டாவதாக, ஒரு பவுலரின் பந்துவீச்சில், பேட்ஸ்மேன் அடிக்கும்போது பந்தை கேட்ச் பிடித்தால், அந்த விக்கெட் பவுலரின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இது கேட்ச் பிடித்த வீரருக்குக் கிடைக்க வேண்டிய பெருமையை வழங்க மறுப்பதாக்க் கருதப்படுகிறது.

மூன்றாவதாக, ஒரு பேட்டர் பந்தை அடிக்கும் போது, இரண்டு அல்லது மூன்று ரன்கள் ஓடும் போது எதிர் முனையில் இருக்கும் பேட்டரும் ஓட வேண்டியுள்ளது. ஆனால், பந்தை அடித்தவர் கணக்கில்தான் இந்த ரன்கள் சேர்க்கப்படுகின்றன. எதிர் முனையில் ஓடியவருக்கு ரன் வழங்கப்படுவதில்லை. இதுவும் அநீதி எனக் கருதப்ப்டுகிறது.

நான்காவதாக, பேட்ஸ்மேன் பந்தை அடித்தால் ஓடி ரன் சேர்ப்பதற்குப் பதிலாக ஃபோர், சிக்ஸ் வழங்குவது போல, ஒன்று, இரண்டு, மூன்று ரன்களையும் நடுவரே வழங்க வேண்டும். இதனால் பேட்ஸ்மென்கள் ஓடி ஓடிக் களைப்பாகாமல் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஓவர் இப்படி முடிந்த பின்பு, அடுத்த ஓவர் எதிர் முனையில் உள்ள பேட்ஸ்மேனுக்கு வீச வேண்டுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது பத்மினி…”

“நம்பி… அப்படியென்றால், ஒன்றிரண்டு பந்துகளில் பேட்ஸ்மேன் அவுட்டாகி விட்டால் என்ன செய்வது? அந்த ஓவரை எப்படி முழுமைப்படுத்துவது? அடுத்த ஓவருக்குத்தான் புதுபேட்ஸ்மேனைக் களமிறக்க வேண்டுமென்றால், அந்த ஓவரின் மீதிப் பந்துகளை யார் எதிர்கொள்வது? ஒருவேளை அம்பயரை வைத்து அந்த ஓவரை நிறைவு செய்ய வேண்டுமா நம்பி…?”

“இதுபோன்ற சிக்கல்களுக்கு விடை காண்பதற்காகத்தான் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு குழு அமைக்க பிரதமர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது பத்மினி…”

“உங்களுடைய விரிவான தகவல்களுக்கு நன்றி நம்பியார்… ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மற்ற செய்திகளைப் பார்க்கலாம்…”

கடைசிக் கேள்விக்குப் பதிலளிப்பது, மீன் எப்போது குளிக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது போல.  “கிரிக்கெட் விளையாட்டில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வர பிரதமர் விருப்பம்.” இந்த ஒருவரிதான் எனக்கு கிடைத்த பிரத்யேகத் தகவல். இதனால் குதர்க்கமான கேள்விகளை தவிர்த்து, நேரலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சுருக்கமாக பதில் சொன்னேன்.

நான் எப்போது நேரலையை முடிப்பேன் எனக் காத்திருந்தவர் போல இருக்கையில் இருந்து பாய்ந்து வந்த ஜெமினி சார், “யப்பா… ஏதோ அணியைத் தடை பண்ணப் போறாங்கன்னு சொன்ன… அதுக்குத்தான பந்தயம் கட்டுனேன்… இப்ப என்னடான்னா வேற பிரேக்கிங் நியூஸ் போகுது… பணத்த எடு எடு…” எனச் சொல்லவும் நான் மறுத்தேன். மீண்டும் அவர் என்னிடம் வம்பு வளர்க்க மற்ற பணியாளர்களும் எங்களைச் சூழ்ந்து கொண்டு என்ன பந்தயம் என விசாரித்தனர். தகவலைச் சொன்னதும், இன்னும் ஐந்து பேர் இதேபோலப் பந்தயம் கட்டினர். எங்களைக் கவ்விய சூது மோகம் நிர்வாக ஆசிரியருக்கும் தெரிந்துவிட்டது.

நேரலைக்காக சைலண்ட் மோடில் வைத்திருந்த போனை எடுத்துப் பார்த்து மலைத்தேன். மற்ற சேனல் ரிப்போர்ட்டர்கள் மட்டுமல்ல, சேனலின் ஆசிரியர்களும் என்னை அழைத்திருந்தனர். நான் நேரலை கொடுத்த பிரேக்கிங் நியூஸ் பற்றி விசாரிக்க அழைத்திருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பதில் சொல்லும் வகையில் செய்தியாளர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குரூப்பில் வாய்ஸ் மெஸேஜைத் தட்டி விட்டேன். எனக்குத் தகவலை உறுதிப்படுத்திய சோர்ஸ் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை.

கிரிக்கெட் தொடர்பான பெரிய பிரேக்கிங் நியூஸெல்லாம் பொதுவாக நேஷனல் சேனல்களில் வருவதுதான் வழக்கம். தகவலை உறுதிப்படுத்தாததால், கிரிக்கெட் விதிகள் பற்றிய பிரேக்கிங் நியூஸை மற்ற சேனல்கள் ஒளிபரப்பவில்லை. எப்படியாவது இந்தச் செய்தியை உறுதி செய்யச் சொல்லி சேனல் எடிட்டர்கள், ரிப்போர்ட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

விளையாட்டு உலகமே பரபரப்பானது. சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்தச் செய்தியை எப்படி உறுதி செய்வது என மற்ற தொலைக்காட்சி நிருபர்கள் திணறினர். தகவல் உண்மை. ஆனால், எனக்கு யார் சொன்னார் என்பதை மட்டும் வெளியில் சொல்ல மாட்டேன் என சக ரிப்போர்ட்டர்களிடம் உறுதியாகத் தெரிவித்துவிட்டேன்.

கிரிக்கெட் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் என்னைத் தொடர்பு கொண்டு, இந்தத் தகவலை உங்களுக்குச் சொன்னது யார் என நிதானமாகக் கேட்டார். மற்ற சேனல் ரிப்போர்ட்டர்கள் அவருக்கு போன் செய்து தொந்தரவு செய்திருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டேன்.

“இந்தத் தகவலில் உண்மையில்லை நம்பி… தகவல் எப்படிக் கிடைத்தது? அத நீங்க சொல்லலேன்னா, நீங்க ஒளிபரப்புன செய்தி பொய்யுன்னு நான் மறுப்புச் செய்தி கொடுக்க வேண்டி வரும்…” மறுப்புச் செய்தி வெளியிட்டால் என் வேலைக்கே பிரச்சினையாகும் என்பதால், ஒரு கட்டத்துக்கு மேல் என்னை மிரட்டிப் பணிய வைக்கலாம் என கிரிக்கெட் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் நினைத்து விட்டார் போல…

“சார்… பிரதமர் பேர யூஸ் பண்ணி பிரேக்கிங் நியூஸ் கொடுக்குறேன். உறுதியான தகவல் இல்லாமலா இந்த நியூஸ கொடுத்திருப்பேன்…? சொல்லுங்க…” பத்திரிகையாளரின் திமிரை வெளிக் கொண்டு வரும் வகையில் அவர் பேசியதால், வேறு வழியின்றி நானும் நக்கலாக எதிர்க் கேள்வி கேட்டேன்.

“அதத்தான் நானும் கேக்குறேன்… நான்தான் கிரிக்கெட் கவுன்சிலோட மீடியா மேனேஜர்… நான் செய்தி கொடுக்காம நீங்க எப்படி ஒரு தகவல பிரேக்கிங் நியூஸா கொடுக்கலாம்?”

“அதத்தான் நானும் சொல்றேன். நீங்க மீடியா மானேஜர்தான்… உங்களுக்கும் ஒருத்தர் தகவல் கொடுப்பாருல்ல… அவர் எனக்குத் தகவல் கொடுத்திருக்கலாமுல்ல… பிரதமர் பெயரை யூஸ் பண்ணி நியூஸ் கொடுக்குறேன்னா கொஞ்சம் யோசிங்க சார், எனக்கு யார் தகவல் கொடுத்திருப்பாங்கன்னு…” நன்றி என ஒப்புக்குச் சொல்லி விட்டுக் கோபமாக அவர் இணைப்பைத் துண்டித்தார்.

அவர் பேசி முடித்த சில வினாடிகளில் மற்ற சேனல்களிலும் பிரேக்கிங் செய்தி ஒளிபரப்பானது. அந்தச் செய்தித் தொடர்பாளர் பச்சைக் கொடி காட்டியிருக்க வேண்டும். நான் போட்ட போடு அப்படி. நேஷனல் மீடியாக்களும் பிரேக்கிங் அடித்தன.

அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் இதுதான் பேனர் செய்தி. சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் நடந்தன. ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர்களாக இருக்கும் மூத்த வீரர்களும் பிரதமரின் சிந்தனையை வழிமொழிந்தனர். அண்மையில் நாட்டின் பெயர் தொடர்பான பிரதமரின் கருத்தை ஆதரித்து விளையாட்டு வீரர்களும் சினிமா பிரபலங்களும் ட்விட்டரில் கருத்து தெரிவித்ததைப் போல, இந்த கிரிக்கெட் விதிகள் விவகாரத்திலும் கருத்து தெரிவித்தனர்.

அன்று இரவு அனைத்து சேனல்களும் இந்தத் தலைப்பிலேயே விவாத நிகழ்ச்சியை நடத்தின. சர்வதேச கவனத்தையும் இந்தச் செய்தி பெற்றது. நேஷனல் மீடியாக்கள் இந்த விவகாரம் தொடர்பாகப் புதிதாக ஏதாவது பிரேக்கிங் செய்தி கிடைக்காதா என ஆங்காங்கே மூக்கை நுழைத்துக்கொண்டிருந்தன. இரவு ஒன்பது மணிக்கு, சர்ச்சைகளுக்குப் பிரபலமான அந்த ஆங்கில சேனல் – அதை ஆங்கில சேனல் என்றும் சொல்ல முடியாது, இந்தி சேனல் என்றும் சொல்ல முடியாது – இன்னொரு பிரேக்கிங் நியூஸை ஒளிபரப்ப, அலுவலகத்தில் இருந்த நாங்கள் அனைவரும், “ஜெமினி சார்… பந்தயம் புட்டிக்கிச்சா…” என அந்தத் தொலைக்காட்சியைக் காட்டி கோரஸாக்க் கத்தினோம்.

விளையாட்டு விவகாரங்களில் அரசியல் தலையீடு

அரசியல் தலையீட்டால் கிரிக்கெட் அணிக்குத் தடை விதிக்க வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவில் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்

கிரிக்கெட் விளையாட்டு விதிகள் தொடர்பாக பிரதமர் குழு அமைக்க இருப்பதாக செய்தி வந்த நிலையில் பரபரப்பு

இப்படி அந்தத் தொலைக்காட்சியில் பிரேக்கிங் நியூஸ் ஒளிபரப்பானது. “ரெண்டாயிரம் ஓவா போச்சா…” எனத் தலையைச் சொறிந்தார் ஜெமினி சார். பந்தயம் கட்டிய மற்றவர்களும் தொகையைப் பரிமாறிக் கொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தால் நியூஸ் ரூமே கலகலப்பானது.

தனது அறையிலிருந்து வெளியே வந்த நிர்வாக ஆசிரியர், “என்ன ஜெமினி… சீனியர் நீங்க… கட்சிக்காரரு… ஆனாலும் பொடியன்ட்ட பந்தயத்துல தோத்துட்டீங்களே…” எனச் சொல்லிச் சீண்டினார்.

“ஆமா சார்… கட்சில ஒரு பயலுக்கும் இதப் பத்தி சரியா தெரியல… ஒருத்தனுக்கும் கிரிக்கெட்டும் தெரியல, அரசியலும் தெரியல… பிரதமர் சரியாத்தானே சொல்லியிருக்காருன்னுதான் எல்லோரும் சொன்னானுவ…”

கிரிக்கெட் அணிக்குத் தடை விதிக்க வாய்ப்பிருக்கக் கூடிய செய்தியை கம்ப்யூட்டரில் அடித்துக் கொண்டே நிர்வாக ஆசிரியருக்கு அலுப்போடு பதில் சொன்னார்.

இடது தொடை அதிர போனை எடுத்துப் பார்த்தேன். சோர்ஸ் அழைத்தார். சத்தமில்லாமல் வெளியே நகர்ந்தேன். நிர்வாக ஆசிரியர் என்னைப் பார்த்து, கட்டை விரலை உயர்த்தித் தலையை ஆட்டினார். நான் யாரிடம் பேசப் போகிறேன் என்பது தெரிந்தது போல இருந்தது அவருடைய சைகை.

“சொல்லுங்க சார்…”

“தேங்ஸ் நம்பி… எல்லாமே கரெக்ட்டா போச்சி…” அந்த சோர்ஸ் இந்தி உச்சரிப்போடு ஆங்கிலத்தில் பேசினார்.

“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க… பிரதமர் தொடர்பான செய்திங்கிறதால கவனமா ஹேண்டில் பண்ண வேண்டியிருந்தது… ஆமா, பிரதமர் எதுவும் ரீஆக்ட் பண்ணலையா?”

“நான்தான் கிரிக்கெட் போர்ட் தலைவர்… நான்தான் அவருக்கு இந்த ஐடியாவ கொடுத்தேன்… இப்படி பிரேக்கிங் நியூஸ் வரும்னு அவர்ட்ட சொல்லிட்டேன். கிரிக்கெட் மீது மக்கள் அளவுகடந்த அபிமானம் வைத்திருப்பதால் இது ஒர்க்அவுட்டாகும்னு நான்தான் அவர கன்வின்ஸ் பண்ணினேன்…”

“ஆனா… இப்ப பேக்ஃபயர் ஆயிருச்சே சார்…” பதற்றத்தோடு குறுக்கிட்டேன்.

“ஆகத்தான் செய்யும்… தெரிந்துதானே இதச் செஞ்சேன். அப்பாதான் செய்யச் சொன்னாரு…”

“பிஎம் இப்ப அறிக்கை எதுவும் விடுவாரா?”

“அறிக்கையா? பிரதமரா? எப்போ அறிக்கை விட்டிருக்கிறாரு அவரு? அவர் என்ன ஸ்டேட் லீடரா? நீங்க கொடுத்த பிரேக்கிங் நியூஸ் பத்தியோ, அதைத் தொட்டு இப்ப வந்திருக்கிற டீம தடை பண்ற நியூஸ் பத்தியோ ஆதரிச்சோ, எதிர்த்தோ எதுவும் வாய் திறக்க மாட்டார்…” சோர்ஸ் பேச்சில் தெளிவு இருந்தது. அந்தத் தெளிவுக்குப் பின் ஒரு திட்டம் இருந்தது.

“உங்களுக்கு ஒரு பழமொழி சொல்றேன்… அதுக்கு என்ன அர்த்தம்னு கூகுள்ள தேடிப் பாருங்கோ…” ஸ்கெட்ச் போட்டது சரியாக வேலை செய்ததால், ஜாலியான மனநிலையில் இருப்பதை வெளிப்படுத்தியது சோர்ஸின் குரல்.

“கூகுள் கெடக்கட்டும் நீங்களே அர்த்தத்தை சொல்லிடுங்க சார்…” கெஞ்சுவது போல குலைந்தேன்.

“நோ… நோ… ப்ளீஸ் சர்ச் இன் கூகிள்… அப்னே பேர் பர் குல்ஹாட்டி மார்னா”

இந்தப் பழமொழிக்கு அர்த்தம் பார்த்த பின்புதான், சோர்ஸ் ஆடிய சூதாட்டம் வேற லெவலில் இருந்தது புரிந்தது.

writerqutub@gmail.com