இந்தியாவின் ஒரே தலைவராகச் சித்தரிக்கப்படும் இந்திய தலைமையமைச்சர்  நரேந்திர தாமோதர் மோடி அவர்களைப் பற்றி பிரபல ஊடகவியலாளர் ஹரிஷ் கரே அவர்கள் ‘ வயர் ‘ மின்னிதழில் ஒரு கட்டுரை ( நவம்பர் 20, 2023) எழுதியிருந்தார். குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாடின. அதுவரையான ஒன்பது போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியே காணாமல் வென்ற இந்திய அணி, அந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றது. ஒரு விளையாட்டின் வெற்றி  என்பதை ஒரு நாட்டின்/தேசத்தின் “ வெற்றி “ என்பதாகவும், அதையே மோடி என்ற ‘நிகரில்லாத் தலைவரின் “ வெற்றி “ என உருவகப்படுத்தும் பணியை இந்திய ஊடகங்கள் செய்திருந்தன. வழக்கமாக இந்தியா – பாகிஸ்தான் அணி விளையாடுவதை ‘ போராகச் ’ சித்தரிப்பது வாடிக்கைதான். ஆனால் இந்த முறை அதனை இன்னும் கூடுதலாக, ஒரு உச்சப்பட்ச நாடகீயத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டு விட்டிருந்தது. தோல்வியே காணாத அணி , தோல்வியே இல்லாத தலைவர் எனும் இருமை மோசமான உச்சத்திற்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த நிகரற்ற தலைவரின் பெயர் பொறிக்கப்பட்ட ( சர்தார் வல்லபாய் படேல் பெயர் நீக்கப்பட்டு ) குஜராத் அகமதாபாத் அரங்கில் நிகழ்ந்த விளையாட்டு பற்பல பரிமாணங்கள் கொண்டதாக மாற்றப்பட்டிருந்தது.

உறுதியாக இந்தியா வென்று விடும் என்ற அதீத நம்பிக்கையை ”குறைந்தபட்ச ஊடக அறமற்ற ” ஊடகங்கள் கூவி ஏற்றியிருந்தன. ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் நீல நிற இந்திய அணி பனியன் அணிந்து அமர்ந்திருந்தனர். அந்த இறுதிப் போட்டி , ஒரு விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி “ மோடி “ என்ற தலைவரின் வெற்றியின் அடையாளமாக்கப்பட்டிருந்தது. மோடியும் , இந்திய அணியின் கேப்டன் ராகுல் ஷர்மாவுடன் கோப்பையை ஏந்தி, அடுத்து வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதானமாகக் காட்சிப்படப் போகும் ‘ படம் எடுக்கப்படுவதை நடித்து விடும்’  தீர்மானத்தில் வந்திருந்தார். உடன் அமீத் ஷா தவிர வேறு எந்த அரசியல் பிரபலங்களும் இல்லை. வழக்கமாக ஆஜர் ஆகும் ‘ பாரத் முதலாளிகள்’  அம்பானி மற்றும் அதானி கூட இல்லை. இதற்கு முன் உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் கபில்தேவ் மற்றும் தோனிக்கு அழைப்பில்லை. அந்தப் போட்டியின் “வெற்றி “ வெளிச்சம் இந்தியாவின் “ஒரே தலவர்” நரேந்திர தாமோதர மோடி மீது மட்டும் விழ வேண்டுமென்பது மிக மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் ஒரே தலைவர் மோடி மட்டுமே என்பதைத் தொடர்ந்து கட்டமைத்து, இன்று அநேகமாக அதை நூறு சதவீதமாக்கியாயிற்று. எதிர்க்கட்சித் தலைவர்கள், பாலிவுட், கோலிவுட், டோலிவுட்  நடிகர்கள் கூட ஒரு நிலை வரைதான். விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், அவ்வளவு ஏன் தொழிலதிபர்கள் கூட ஊடக வெளிச்சத்தில் இல்லை. அதாவது தலைமை என்பதன் ஒற்றை அடையாளம் மோடி மட்டும் என்பதாக ஆக்கப்பட்டு விட்டது என்கிறார் ஹரிஷ் கரே.

   மோடியின் தலைமை வேட்கை

தலைமை குறித்த அவஸ்த்தையில் மோடி செய்யும் கூத்துகளில், ஹரிஷ் கரே அவர்கள் பதிவு செய்துள்ள இன்னொரு நிகழ்வு கவனத்திற்குரியது. வழக்கமான சுற்றில் இந்தியாவிற்கு வந்த ஜி – 20 தலைமைப் பொறுப்பை, மோடி அன் கோ கையாண்ட விதம் இணையற்றது. அந்த ஜி 20 நாடுகளின் தலைமையை இதுவரை வேறு எந்த நாடும் பெற்றிறாதது போலவும், மோடி எனும் மாமனிதரின் நிருபிக்கப்பட்ட திறன் கருதி அவருக்கு வழங்கப்பட்ட விருதாக மோடியின் ”முதலாளிகளின்” இந்திய ஊடகங்கள் நடத்திய கூத்து மகாப் பரிதாபம். இவர்கள் நடத்திய கூத்தினை சகிக்க முடியாமல் அல்லது அந்த பலூனை பஞ்சராக்க சீனாவும், ரஷ்யாவும் அந்த நிகழ்வையே புறக்கணித்தன.

இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டிய மோடிதான் , நாடாளுமன்றப் பங்கேற்பில் கடைசி இடத்தில் இருப்பவர். இதுதான் மாபெரும் சிக்கல். மோடி என்ற மனிதருக்கு தேர்தலும், மக்களாட்சியும் அறவே பிடிக்காதவை. அதிலும் நாடாளுமன்றம் என்ற அமைப்பையே ஒழித்துவிட நினைப்பவர். அவர் உருவாக்கியுள்ள புதிய நாடாளுமன்றம் ஒரு அருங்காட்சியகத்தின் தன்மை கொண்டதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது மக்களாட்சி நிலவியதன் நினைவுச் சின்னம். ஆனால் அதில் மக்களாட்சியை அறவே விரும்பாத இந்துத்துவ சிந்தாந்தவாதத்தின் எச்சங்கள். நாடாளுமன்றத்தை ஆக்கிரமிப்புச் செய்தபடி சாணக்யன் உருவம். அந்த ஒற்றைச் சின்னம் ( ICON ) /  அடையாளம் மோடி அரசின் எதிர்காலத் திட்டத்தைத் திட்டவட்டமாகச் சொல்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை, நாடாளுமன்றத்தை, மொத்தத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை என்ற மக்களாட்சி வடிவத்தை ஒழித்துவிட நினைக்கும் மோடி எனும் மனிதரே இந்தியாவின் ஒரே தலைவர் என்பது எவ்வளவு பேராபத்து. ஏன் மோடி தேர்தல் அரசியலின் பலதளங்களைத் தவிர்த்து , குஜராத் முதல்வராக தேர்தல் களத்தில் இறங்கினார் என்பது இப்போது ஓரளவு விளங்கலாம். ஆம், சட்டமன்ற உறுப்பினராகும் தேர்தலைக் கூட, முதல்வராக இருப்பதற்கான அடிப்படைத் தேவை என்பது கருதியே ஏற்றார். ஏனெனில் அவரோ அல்லது அவர் சார்ந்த ஆர் எஸ் எஸ் இயக்கமோ ஒருபோதும் இந்திய அரசியல் சாசனத்தை இப்போதைய வடிவில் ஏற்பது இல்லை.

    மோடி தனது ‘ இந்தியாவின் ஒரே தலைவர்’ பிம்பத்திற்கு நீதி செய்தாரா?

அன்றைய கிரிக்கெட் தோல்வியை மோடி எதிர்கொண்ட முறை கடுமையான விமர்சனங்குள்ளானது. ஒரே தலைவர் என்பதற்கான எந்தவிதமான தகுதியுமற்ற மனிதனாக அம்பலப்பட்டு நின்றார். உலகமே பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வில், ஒரு தெரு விளையாட்டில் தோற்ற சிறுவனைப் போல , கேவலமாக நடந்து கொண்டார் மோடி. ஒரு தலைவரின் அடிப்படை நாகரிகமற்ற செயல்பாடு அது. கோப்பையை வென்ற அணித் தலைவர் , கோப்பையைப் பிடித்தபடி நிற்க, அந்த உலகக் கோப்பைப் போட்டியை நடத்திய நாட்டின் தலைமையமைச்சர் தோல்வியைத் தாங்கவியலாத முகபாவத்தோடு அந்த மேடையை விட்டு வேகமாக வெளியேறினார். இந்தவிதமான நடவடிக்கை அவர் ஏற்க விரும்பும் “ ஒரே தலைவர் “ பிம்பத்திற்கு எந்தவகையிலாவது உதவக்கூடுமா? அவரை விட்டுத் தள்ளி விட்டாலும் உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட மக்களாட்சிக்கு மாண்பு சேர்க்கும் செயலா? மோடி என்பவர் அசலாகவே ஒரு தலைவருக்கான அடிப்படைப் பண்புகள் கொண்ட மனிதர்தானா? இல்லை எந்தவித அரசியல் நுட்பமோ அல்லது ஆட்சித் திறனோ இல்லாத, ஒரு நடிகரா? அதாவது குஜராத் பனியா மாஃபியா மற்றும் ஆர் எஸ் எஸ் ஆசிர்வாதம் பெற்ற தில்லி பார்ப்பன அதிகார மையங்களின் கைப்பாவையா? மோடியை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விட முடியாது. அதாவது தன் முனைப்பு  அற்ற கைப்பாவை என்பது முற்றிலும் பிழைபட்டது. அதானி போன்ற மாபெரும் குழுமத்தை உருவாக்கியுள்ள நபரை அந்தவகையில் சேர்ப்பது மாபெரும் குற்றம். அதேவேளையில் அந்த மனிதரை உளவியல் ரீதியாக அணுகுவதும் , அரசியல் பார்வைக்கு உதவாது. அவரை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிடுவது கூட பொருத்தமற்றது என்றே தோன்றுகிறது. ஹிட்லர் தனது முடிவுகளுக்கு, அதாவது வெற்றி தோல்விகளுக்கு பொறுப்பேற்றவன். தனது நாஜி சிந்தனையை உலகமறிய பலமுறை உச்சரித்தான் ஹிட்லர். மோடியால் அவரது வாழ்நாளில் ஒருமுறை கூட, முறையாக முன்னேற்பாடுகள் செய்யப்படாத, அதாவது வளைக்கப்பட்ட  ஊடகங்களைத் தவிர்த்து யாரையும் சந்திக்க முடியவில்லை. அவர் விரும்பும் ஒப்பற்ற தலைமைத்துவத்திற்கான குறைந்தபட்ச தகுதியாவது அவருக்கு உண்டென்று ஒருமுறை கூட அவர் நிறுவியதில்லை.

  மோடியின் தலைமை உருவாக்கப்பட்ட வழிமுறை

இந்தியாவின் மாபெரும் பிரச்னை அதன் தற்போதைய தலைமை என்றால் அதில் ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லையென்றே எண்ணுகிறேன். ஒரு நாட்டின் வாழ்வும், வளமும் ஒற்றை மனிதனை இட்டு நிகழ்வதாகக் கருதுவதை பிழை என நினைக்கத் தோன்றலாம். ஆனால் தலைமைத்துவம் குறித்த சிந்தனைகளில், ஒரு பிழையான தலைமையின் விளைவுகள் பாரதூரமானதாக இருக்க முடியும் என்பதே கோட்பாடு. அப்படியானால், மோடி எந்தவிதமான தலைமைத்துவப் பண்புமற்றவர் என நிறுவ முனைகிறதா இந்தக் கட்டுரை என்பதற்கு ‘ இல்லை ‘ என்பதே உடனடியான பதில். 2001 ஆம் ஆண்டு வாக்கில் நேரடியாக குஜராத் முதல்வராக அரசியல் அரங்கில் பிரவேசித்தவர் மோடி. அதற்கு முன்னர் அவர் குஜராத் பாரதிய ஜனதா கட்சி அரசியலில் வார்டு கவுன்சிலர் துவங்கி எம் எல் ஏ வரையான எந்தப் பதவியையும் அவர் வகித்தவரில்லை. அதாவது எந்தவிதமான ஆட்சி தொடர்பான அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்றவரில்லை. ஆனால் அதன் பொருள் அரசியலிலேயே இல்லை என்பதல்ல. ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் பல நிலைகளில் கட்சிப்பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டவர். ஆனால் நேரடியான தேர்தல் அரசியல் களத்தில் போட்டியிட்டவரில்லை என்பதுதான். அவர் முதல்வராவதற்கு முன்பு பாஜக தேசியச் செயலாளராகவும், அதன் பின் 1998 ல் குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

    மோடி என்பவர் யார்?

அவரது முகம் பொதுவெளி அறிமுகம் கண்டது இரண்டு வகையில். முதலாவதாக, அப்போதைய பாஜக தலைமையைக் கைப்பற்றும் போட்டியில் இருந்த லால் கிருஷ்ண அத்வானியின் உதவியாளராக, 1990 ஆம் ஆண்டின் அந்தப் பிரபல ரதயாத்திரையில் நிழலாகப் பின் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் ‘ முகம் ‘ காட்டியவராக. இரண்டாவதாக அவரது உடனடி அரசியல் குரு எனக் கருதப்படும் கேஷூபாய் படேல் – ஷங்கர்சிங் வகேலா மோதலில் , கேஷூபடேலுக்கு ஆதரவாகக் களமிறங்கி, ஷங்கர்சிங் வகேலாவை கட்சியை விட்டு விரட்டி கேஷூபாய் படேலை 1998 ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக்கியவர் மோடியே. ஆனால் மிகச் சரியான காய்நகர்த்தலில் 2001 ஆம் ஆண்டில் கேஷூபாய் படேலை முதல்வர் பதவியிலிருந்து, நகர்த்தி, அத்வானி , ஆசீர்வாதத்துடன் நேரடியாக முதல்வர் பதவியைப் பிடித்தார். அதன் பிறகே முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆனார். அதுவரை ஏன் ஒருமுறை கூட ஏன் எந்தவிதமான தேர்தல்களிலும் போட்டியிடவில்லை, எந்தவிதமான ஆட்சிப் பொறுப்புகளையும் கோரவுமில்லை, பெறவுமில்லை என்பதற்கு தெளிவான பதில்கள் இதுவரை இல்லை. ஆனால் அதற்குப் பின்னால் இடைவிடாமல் தொடர்ந்து 2014 வரை தேர்தலில் வென்று குஜராத் முதல்வராகவும், 2014 துவங்கி இன்றுவரை இந்தியாவின் தலைமையமைச்சராகவும் இருந்து வருகிறார். 2002 ஆம் ஆண்டின் குஜராத் இஸ்லாமியர் படுகொலைகளுக்கும், பயங்கர கலவரங்களிற்கும் முறையாக பொறுப்பாளியாக்கப்பட்டு அரசியல் விலக்கம் செய்யப்பட்டிருக்கப்பட வேண்டியவர் இன்றும் தொடர்கிறார்.

இந்த தொடரும் நாயகத்துவம் அசலானதா?  மோடியே கவனமாக கட்டமைத்துக் கொண்ட ஒன்றா ? அல்லது அவருக்காக தொடர்ந்து பின்னிருந்து இயக்கும் சக்திகளின் சாமர்த்தியமா ? புரியவில்லை. எப்படியானாலும் மோடியும் அவரது தலைமைத்துவமும் புரியாத புதிர்தான். 2001 வாக்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட மனிதர் அவர். அமெரிக்காவில்  நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட குஜராத் முதல்வர், 2019 ஆம் ஆண்டில், அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் வெற்றிகரமாக, ஆடம்பரமாக இந்திய அமெரிக்கர்கள் பிரமாண்டமாக ஒழுங்கு செய்த “ ஹாவ்டி மோடி “ நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் கைகோர்த்து வந்தது எப்படிச் சாத்தியமானது.?

குஜராத் பனியா சமூகத்தின் உலகலாவிய இருப்பு பலருக்கு செய்தியாக இருக்கலாம். ஆனால் அவர்களின் இந்த விரிந்து பரந்த இருப்பு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளாகத் தொடரும் வரலாறு. பழம் இந்தியத் துணைக்கண்டத்திற்குள், ஆங்கில, போர்த்துகீசிய, டச்சு வியாபாரிகள் வந்த போதே குஜராத் பனியா, மார்வாரிகள் எதிர்திசையில் நைல் நதித் தீரத்தின் கரையின் மொத்த நீளத்திலும் வியாபாரம் செய்யத் துவங்கி பரந்து விரிந்து பரவியிருந்தனர். அங்கிருந்து ஆப்பிக்கா, ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்க எனப் பெயர்ந்து செழித்துப் பெருகினர். இந்தியாவில் அன்றைய தேதியில் ஒற்றைப் பேரரசு இல்லவும் இல்லை, அவர்கள் அதன் சார்பாக இயங்கவும் இல்லை. ஏன் அரசியல் இந்தியாவே ( Political India ) பிரித்தானிய அரசின் உருவாக்கம்தானே. எனவே பனியாக்களும் மார்வாரிகளும் நாடு பிடிக்கும் நடவடிக்கை என்பதை முயற்சிகூடச் செய்யவில்லை. ஆனால் அவர்களது கவனம் எப்போதும் இந்தியா எனும் நாடு உருவாக்கம் குறித்த அக்கறை கொண்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. காந்தியாரே தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்து காங்கிரஸ் கட்சியையும், இந்து சுயராஜிய கனவையும் பேசிய வைஷ்ணவ பனியா( சதுர் பனியா என்கிறார் அமீத் ஷா) என்பதை நினைவில் கொள்வது உதவும்.

1990 களின் உலகமயமாக்கம், பொருளாதாரத்திற்கான தேச எல்லையை அழித்தொழித்த பிறகு, இந்தியாவில் சாத்தியமான மலிவான உழைப்பு சக்தியும், பெரிதும் சுரண்டப்படாத இயற்கையான தாது வளங்களும்,  நிலங்களும் அவர்களது தொழில் முனைவோர் மூளைகளைக் கவர்ந்தது. இந்தியாவை வேட்டைக் காடாக்க குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட பனியா முதலைகள் திட்டமிட்டன. ஏற்கனவே இந்திய அரசியலின் தலைமைக்கான போட்டியில் எப்போதும் இருந்த குஜராத்திகள் உண்டு. வல்லபாய் படேல் துவங்கி மொரார்ஜி தேசாய் வரை இது தொடரவே செய்தது. இந்த நிலையில்தான் , குஜராத்திற்கான அதிகாரத்தை காங்கிரசிடமிருந்து மீட்க, இந்துத்துவத் தீவிரவாதமே உதவுமெனக் கண்டறியப்பட்டது. அந்த வகையில் பரிசீலிக்கப்பட்டவர்களில் , ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் செய்து விட்டு எந்தவிதக் குற்றவுணர்ச்சியுமற்று இருந்த நரேந்திர தாமோதர மோடி தேர்வானார்.

    தேர்தல் அரசியல் வகுக்கப்பட்ட பாதை

2001 வரை நேரடியான தேர்தல் அரசியல் காணாதவர் என்றாலும், குஜராத் தேர்தல்களில் நுட்பமான / அதிரடியான நகர்வுகளைச் செய்து கட்சியை வெல்லச் செய்திருக்கிறார் என்கிறது தகவல். அதன் பிறகு முதல்வராக இவர் கண்டடைந்த வைரம்தான் அமீத் ஷா. முதல்வர் மோடியின் உள்துறை அமைச்சராக பல பயங்கரங்களை நிகழ்த்தியவர் அமீத் ஷா. குஜராத் கலவரங்களிலும், அதற்குப் பின் நடந்த கொடூரமான என்கௌண்டர் கொலைகளிற்காகவும் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டு, மோடியின் ஒன்றியப் பொறுப்பேற்பிற்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியொருவர் கருணையால் விடுதலையானார். ஆனால் குஜராத் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளால் குஜராத்திலிருந்து துரத்தப்பட்டு, உத்தரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளராகி , மோடியின் தலைமையமைச்சராகும் வாய்ப்பிற்கு வழிவகுத்ததும் அமீத் ஷாதான் என்பதை மறுப்பதற்கில்லை. மோடி – அமீத் ஷா இரட்டையர்கள் பாரதிய ஜனதா கட்சியை முழுமையாக, ஆர் எஸ் எஸ் அமைப்போடு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைப்பற்றியது இந்திய வரலாற்றில் அதுவரை ஒரு மாநிலக் கட்சியில் கூட நடந்திராத நிகழ்வு. இந்தக் ‘ கைப்பற்றுதல் ‘ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் மேலாண்மையை இன்னொரு குழுமம் கைப்பற்றுவது போன்றே நிகழ்ந்தது. ஆனால் இந்த மாற்றத்தை இந்திய ஊடகங்கள் பெரும் வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வாக ஆக்கியதே தலைமைத்துவ மாயை உருவாக்கத்தின் துவக்கம்,

குஜராத் படுகொலைகளுக்கு காரணகர்த்தா என்ற ‘ கறையை ‘ முற்றாக நீக்கி, ஒரு புதிய வளமான இந்தியாவை உருவாக்க வந்த நவயுக சிற்பி மோடி என்ற பிம்பம் சித்தரிக்கப்பட்டது. ஒருவகையில் அவரது அந்தக் கோர முகம் இந்துத்துவ மேலாதிக்கவாதம் என்ற புத்தொளியில் ஒரு ‘ புனிதரின் ‘ முகமாக அரங்கேறியது. அவரது குஜராத் மாடல் ஆட்சித் திறனை இந்தியா முழுமைக்கும் விரிவாக்கம் செய்ய வல்ல மாபெரும் ரட்சகர் என்ற பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் ஹிந்தி பேசும் மாநிலங்களின் இஸ்லாமிய ஒவ்வாமை, குறிப்பாக உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் ஒவ்வாமை குறி வைத்து வளர்த்தெடுக்கப்பட்டது. தயக்கமின்றி இஸ்லாமிய / சிறுபான்மையினர் விரோதம் பாஜக தலைவர்களாலேயே பேசப்பட்டது. அதற்கு மோடியும் விலக்கல்ல. மோடியும் அமீத் ஷாவும் பாஜக வை தேர்தல் இயந்திரமாக மாற்றி விட்டார்கள் என்பதே உண்மை. இன்னும் சொல்வதானால் மோடி அரசின் ஒற்றை நடவடிக்கை தேர்தல்களை வெல்வது அல்லது வென்ற அரசுகளை வீழ்த்த ஆளும் எதிர்க்கட்சிகளைப் பிளந்து புதிய பாஜக ஆட்சியமைப்பது என்பது மட்டுமே என்றாகிவிட்டது. இந்தப் போக்கில் இந்த இரட்டையர்கள் கட்சியில் தங்களை வளர உதவிய அதானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோரை அடையாளமின்றி ஒழிப்பதும் முதன்மை நடவடிக்கையுமானது.

   அப்படியானால் ஆட்சியை நடத்துவது யார்?

இதற்கான பதில் பெரும் ரகசியமில்லை என்றாலும், அதனை முறையாக விளக்குவதே சரியெனக் கருதுகிறேன். இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அலகுகளில் முதன்மையானவை உள்துறை, நிதித்துறை, வெளியுறவுத் துறை ஆகியவை. உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஏதாவது திட்டங்களை அறிவித்ததையோ, துவங்கி வைத்ததையோ யாரவது கண்டதுண்டா? அவரது முதன்மை பொறுப்பான உள்நாட்டுச் சிக்கல்களை காஷ்மீரிலும், மணிப்பூரிலும்  கையாண்ட/ கையாளும் முறை போதும் அதற்கு சாட்சி சொல்ல. பாஜக வைப் பொருத்தவரை எதாவது ஒரு காரணம் கொண்டு நாட்டின் பகுதிகளில் அமைதியின்மை தொடர்வதே நல்லது. அவர்களது அரசுச் சொத்து கபளீகரங்கள் மீது தொடர்ந்த கவனம் குவியக்கூடாது. அதற்கான நகர்வுகளை திட்டமிட்டு செயல்படுத்துவதே அமீத் ஷாவின் அசலான வேலை. அதற்கடுத்தபடி , அடுத்து வரப் போகும் தேர்தல்களை எதிர்கொள்ள/ வெல்ல வழிவகை செய்வது மட்டுமே. அவரது முழு நேரப் பணி, இந்த வழிவகைக்கு தடையாக இருக்க வாய்ப்புள்ள ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை முடக்குவதும் அவற்றை தங்களது ஏவல் துறையாக மாற்றுவதும்தான். இப்போதைய நிலையில் இந்த ஆட்சியாளர்களின் வெறியாட்டத்தில் பலியாகிப் போனவற்றின் பட்டியல் தேவையில்லை. ஏனெனில் தேர்தல் ஆணையம் துவங்கி உச்சநீதிமன்றம் வரை அனைத்தும் நாசமாக்கப்பட்டு விட்டன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என் ஐ ஏ ( N I A ) துவங்கி அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என அனைத்தும் குறைந்தபட்ச மக்கள் நம்பிக்கைக்குரிய அமைப்புகளாக இல்லாமல் மாற்றப்பட்டு விட்டன. அடுத்து நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதித்துறையை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.  அவரது கணவர் பொருளாதார அறிஞர் பர்காலா பிரபாகர் சொல்கிறார், ‘ இந்த ஆட்சியின் பொருளாதாரக் கொள்கை வீழ்ச்சியிலிருந்து மீள , இந்த ஆட்சி நீங்கி பதினைந்து ஆண்டுகளாவது ஆகும் ‘ என்று. அப்படியானால் யார் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையைத் திட்டமிடுவதும், செயல்படுத்துவதும் குஜராத் பனியா தொழிலதிபர்கள் என்பது வெளிப்படை. அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் இந்திய நிதித்துறை, வருவாய் துறை மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. அதற்கொரு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாத பொம்மைத் தலைமை நிர்மலா. வெளியுறவுத் துறை முற்றிலுமாக ஜெய்ஷங்கர் பொறுப்பில். அவர் முழுமையாகத் துறை பற்றித் தெரிந்த முன்னாள் வெளியுறவுச் செயலாளர். அதாவது வெளியுறவுத் துறையில் சர்வதேச அரசியல் அனுபவம் பெற்ற ஆனால் எந்தவிதமான உள்ளூர் அரசியல் தொடர்புமற்றவர் அமைச்சர் பொறுப்பில். அவரது ஆலோசனைகளைக் கேட்பதும், அவருக்கு ஆலோசனை சொல்வதும் குஜராத் முதலாளிகளே. இந்திய வெளியுறவுக் கொள்கைகளை வழிநடத்துவது தேசப் பாதுகாப்போ, இந்திய பொருளாதார வளமோ இல்லை, முதலாளிகளின் லாபம் மட்டுமே குறிக்கோள். அது ரஷ்யப் பெட்ரோலியமாக இருக்கலாம் அல்லது சீன இறக்குமதியாக இருக்கலாம். ஆனால் வெளியுறவுக் கொள்கையில் மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு சனாதனத்தின் வழிகாட்டலில். அதாவது எல்லா நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்பு. ஆனாலும் முதலாளிகள் எச்சரித்தால் மோடியின் குரல் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பேசும். இப்போது இந்தியாவின் ஆட்சியை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது தெளிவு..ரகசியமான ஆட்சித் தலைமையும், அம்பலத்தில் பொம்மலாட்டம் நடத்தும் அரசியல் தலைமையும்..அதாவது பனியா – பார்ப்பனக் கூட்டணி.

    மோடி தொடர்வது சாத்தியமா?

அனைத்துவிதமான சித்துவேலைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. ஏற்கனவே பார்த்தது போல அனைத்து விதமான அரசியலமைப்புச் சட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளும் மோடி ஆட்சியால் நசுக்கப்பட்டு விட்டன. இனி கேள்வி கேட்க யாருமில்லை என்ற நிலை இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் எல்லையற்றுத் தொடர முடியாது. ஏற்கனவே மோடியின் பத்தாண்டு கால ஆட்சி அனைத்து மக்களின் ஏகோபித்த அங்கீகாரம் பெற்றது அல்ல. ஆனால் ‘வெல்ல முடியாத மோடி’ என்ற கதையாடலை முனைந்து கட்டமைக்கிறது மோடியின் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஊடகம். ஊடக அறம் ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது அல்லது அறவே ஒழிந்து விட்டது என்பதே கசப்பான உண்மை. ‘ தி ஹிந்து ‘ ஆங்கில நாளிதழின் வாசகர்களின் ஆசிரியராகப் பணியாற்றிய ஏ எஸ் பன்னீர்செல்வன் சொல்கிறார், “ தனியார் முதலாளிகளின் ஊடகங்களிற்கு இருந்த ஊடக அறம் குறித்த குறைந்தபட்ச அக்கறை கூட இப்போதைய கார்ப்பரேட் ஊடகங்களுக்குக் கிடையாது’ என்று. மேலும், தனியார் முதலாளிகள் தங்களது அரசியல் சார்புகளோடு சேர்ந்தே குறைந்தபட்ச நேர்மைத் தனமை குறித்த அக்கறை காட்டினர். ஏனெனில் அதுவும் அவர்களது மூலதனத்தின் பகுதி. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. கார்ப்பரேட்டுகள் அஜெண்டாவை செயல்படுத்துபவை மட்டுமே என்கிறார் பன்னீர்செல்வன்.

தற்போதைய நிலையில் இறுதி நம்பிக்கையாகக் கருதப்படும் நீதிமன்றங்களும் தங்களது வீழ்ச்சியை, அதிகார வரம்பு மீறள் வழியாக அடையாளப்படுத்தியபடி இருக்கிறார்கள். நீதிமன்றங்கள் தங்களை நீதிமுறைமையின் தளம் என்ற நிலையிலிருந்து அரசு சார்ந்த கொள்கை அங்கீகாரம் வழங்கும் மையங்களாக மாறி வருகின்றன. முடக்கப்பட்ட நாடாளுமன்றங்களின் பணியை நீதிமன்றங்கள் மேற்கொள்வது , உடனடியான பலன் விளைவிப்பவையாக இருந்தாலும், மக்களாட்சியின் மாண்பிற்கு எதிரானதாகவே முடியும். ஆம், நீதிமன்றங்கள் மக்களவைக்கு மாற்றாக ஒரு போதும் இருக்க முடியாது. கூடாது.

மோடி எனும் புதிரான தலைமைத்துவம் இந்தியாவை மிக மோசமான அரசியல் சூழலுக்கு தள்ளிவிட்டிருக்கிறது. அவரது தொடரும் தலைமை எல்லாவகையிலும் மிக மிக ஆபத்தானது. யாருமற்ற பெருவெளியில் தனியாக ஒரு தலைமை உருவாக்கப்படும் விதம் குறித்த பல காணொளிகள் காணக் கிடைக்கின்றன. ஒரு பெரும் மக்கள் திரள் நடுவே கையசைத்தபடி செல்லும் மோடி அவர்களின் பிம்பம் ஒரு மனிதனும் இல்லாத, ஒரு காலியான பாலத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. மேடையில் அவர் இங்குமங்கும் நடந்து ஆவேசமாகக் கைவீசும் காட்சியில் எப்போதும் எதிரே இருக்கும் மக்கள் திரளின் அளவு கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் திறப்பு நிகழ்ச்சியில் கூடத் தன்னந்தனியே, படை அணிவரிசைக்கான இசைப் பின்னணியில், பீடு நடை போட்டு வருகிறார் தலைமையமைச்சர் மோடி. அவரது தலைமைப் பிம்பத்தை, அவரது உடை வழியாகக் கட்டமைத்து வெகுகாலமாகி விட்டது. அவர் பிரவேசிக்கும் சூழலுக்கேற்றபடியான பாவத்தை வலிந்து உருவாக்கி அதனை ஊடக வெளியில் பரப்பச் செய்கிறார். ஒரிசா ரயில் விபத்தின் போது, அத்தனை உடைந்து போன மனிதராக, அந்த ரயில் நிலையத் தூணொன்றை பிடித்தபடி யாருடனோ கைபேசியில் உரையாடும் பிம்பம் எரிச்சலூட்டும் நாடகீயத்தன்மை கொண்டது. அநேகமாக மோடி கைபேசியில் பேசியபடி காட்சியளிக்கும் ஒரே பிம்பம் அதுதான். சமீபத்தில் ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில் மோடி ஒரு சில அதிகாரிகளை அல்லது தொழிலதிபர்களை கடந்து செல்வதான காட்சிக்கான ஒத்திகை. ஒத்திகையில் வரிசையில் நிற்கும் முதலாமவர் ஆர்வக் கோளாறாக மோடியின் அருகில் வந்து விடுகிறார். உடனே மோடி அவரை அவர் நின்ற இடத்திற்கு திரும்பச் சென்று நிற்க வைத்து விட்டு, தனது நடையைத் தொடர்கிறார், அந்த மனிதர் அசையாமல் இருந்த நிலையிலேயே வணங்குகிறார். இதுதான் நடப்பது. மோடியின் பொதுவெளி அசைவு ஒவ்வொன்றும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. அதில் கவனமாக வேறு எந்தப் பிரபலமும் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

நரேந்திர தாமோதர் மோடி தலைமைப் பண்பு அறவே இல்லாத ஒரு உள்ளீடற்ற ( HOLLOW ) மனிதர். அவரது கழிவிரக்கமின்மை (REMORSELESSNESS) என்ற குணாம்சமே அவருக்கான ஒரே தகுதி. இந்த ஈவிரக்கமற்ற மனிதர், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டின் தலைமையில் தொடர்வது பேராபத்து. இப்போதைய நிலையில், அமெரிக்க கார்னெல் பல்கலைக் கழக பொருளாதாரப் பேராசிரியர் கௌசிக் பாசு அவர்கள் கருதுவது போல, “ வேறு மாற்றுகள் இல்லை” ( There is No Alternative )  என்ற நிலையிலிருந்து இந்திய அரசியல் “ அனைத்து ( மோடி தவிர்த்த ) மாற்றுகளும் மேலானவை “ ( All Alternatives Are Better ) என்ற நிலைக்கு வந்து விட்டது என்பதே உண்மை. ஆம் மோடி / பாஜக தவிர்த்த எந்த மாற்றும் வரவேற்பிற்குரியதே.

2024 ல் மோடி தோற்றால் அவர் அரசியலில் தொடர்வாரா ? இல்லவே இல்லை. ஒரு சதவீதம் கூட அதற்கான வாய்ப்பில்லை. நேரடியாக தலைமைக்கு வந்த ஊதிப் பெருக்கப்பட்ட பலூன் தலைமை, காற்று வெளியேறிய பலூனாக காலாவதியாவதே வழி. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து அரசியல் பேசும் மக்கள் நலன் கருதிய அக்கறையோ, கருத்துநிலையோ, திறனோ அந்தப் ”பிம்பத்திடம்” அறவே இல்லை. மோடி எங்கே என்ற புதிரான கேள்வியையே அவர் விட்டுச் செல்வார்.