எச்சங்களின் அரசன்

வட இந்தியாவுக்கென இருக்கும் பிரத்யேக வரலாறு விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றித் தீட்டி வைத்த சித்திரத்திற்கும், நமக்கு அவரைப்பற்றிச்  சொல்லப்பட்டிருக்கும் உண்மையான வரலாற்றுக்குமிடையே வேறுபாடு உண்டு !

சாவர்க்கரின்  அக / புற அரசியல் பற்றி முழுமையானத் தரவுகளுடன் நமக்கு அவருடைய வரலாறு சொல்லப்பட்டுள்ளது.  ஆனால், சாவர்க்கர் தம்மைப் பற்றித் தாமே எழுதிக்கொண்ட சரிதையை மட்டுமே சாவர்க்கர் வரலாறென வட இந்தியர்கள் நம்புகிறார்கள்.  குறிப்பாக மராட்டியர்கள்.  அதனால்தான் சாவர்க்கரின் புற அரசியல் எந்த வகையைச் சார்ந்தது என்று இராகுல் காந்தி விமர்சித்தபோது, அவருக்கு அவருடைய கூட்டணிக்குள்ளிருந்தே கண்டனக் குரல்கள் எழுந்தன !

எனவே இங்குதான், குறிப்பாக நம் தமிழ்நாட்டில்தான் சாவர்க்கர் எதற்குப் பெயர் போனவர் என்று அப்பட்டமாகப் பேச முடிகிறது, எழுத வாய்க்கிறது !

ஒருபோதும் நாட்டு விடுதலைக்கென நேரடியாகக் களம் புகாத அவர், அறப்போராட்டங்களை அறவே விரும்பாத அவர், சதி, கொலைக்குடந்தை, கொலையாயுதங்களை வைத்திருத்தல், அவற்றைக் கொலையாளிகளுக்கு வழங்கிய வழக்குகளுக்காகக் கைதுசெய்யப்பட்டு அந்தமான் கொடுஞ்சிறைக்கு அனுப்பப்பட்ட போது தடுமாறினார்.   அந்த வதைக்களம் தனக்கானது அல்ல என்பதை உணர்ந்தார்.  அறப்போராட்டம் அல்லது ஆயுதப்போராட்டம் இரண்டில் எதையுமே இனி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் புரிவதில்லை என்றும், மாறாக தங்களுக்கு ஆதாயமாகத் தன் வாழ்நாள் வரைக்கும் இருப்பேன் என்றும் ஆங்கிலேய அரசுக்குப் பல மன்னிப்புக் கடிதங்களை அனுப்பியவண்ணமிருந்தார் !

அந்தக் கொடுஞ்சிறையில் எவருக்குமே பரிவு காட்டாத ஆங்கிலேய அரசு சாவர்க்கர் மீது மட்டும் ஏனோ பரிவுகொண்டது.  அந்தளவு ஆங்கிலப் புலமையுடன் நீண்டிருந்தன அக்கடிதங்கள்.  மன்னிப்பு என்றால் ஏனோதானோ மன்னிப்பல்ல.  நிபந்தனையற்ற சரணாகதி மன்னிப்பு.  நெடுஞ்சாண்கிடையாக அவர்களுடைய காலணிகள் நோக்கி வீழ்ந்து கேட்கும் மன்னிப்பு !

சிறையிலிருந்து வீடு வந்தவுடன் இந்திய விடுதலைக்காக ஒரு சிறு போராட்டத்தைக் கூட சாவர்க்கர்  முன்னெடுக்கவில்லை.  முழுக்க முழுக்க ஆங்கிலேயே அரசின் இரகசிய இந்தியக் கங்காணியைப் போலவே செயல்பட்டார்.  காந்தியடிகளார் படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் அவர் இருக்கிறார் என்று தெரிய வந்த வேளையில்தான் மீண்டும் மக்களுக்கு அவரிருப்பே தெரிந்தது !

சாவர்க்கரின் எச்சம் ஏகப்பட்டவை இன்னும் மிச்சமுள்ளன என்பதில் நமக்கேதும் ஐயமில்லை.  அந்த எச்சத்தில் ஒன்று சமீபகாலமாக, சமூக வலைத்தளங்களில்தான் அள்ளிவிட்ட பொய்களின் மூலம் பிரபலமானது !

அந்தப் பிரபலத்தன்மையைக் கொண்டு, புது வீடு, புது சொகுசு கார், புது வணிகம், அதற்கெனப் புது அலுவலகம் எனச் சமீப காலங்களில் பணப்புழக்கம் அதனிடம் காட்டுவெள்ளமெனப் பாய்ந்தது !

இந்தக் குபீர் பாய்ச்சல் பலருக்கும் சந்தேகத்தை உண்டாக்கியது.  கொஞ்சம் உள்ளே போய் அந்த சாவர்க்கரின் எச்சத்தைக் கிளறினால் … உவ்வேக் !

பொய், புனைச்சுருட்டு, அவதூறு, மிரட்டல், காட்டிக் கொடுத்தல், பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவு செய்தல் என அத்தனை அட்டூழியத்தையும் செய்து வந்தது அது !

சாவர்க்கர் சங்கர்

சவுக்கு சங்கர் என்றழைக்கப்பட்ட அவரை சாவர்க்கர் சங்கர் எனச் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அழைக்கலானார்கள். ஏனென்று அதை ஒரு சிறுகதையாக எழுதலாம்.  ஆனால், அது தொடர்கதையாக நீளும் என்பதால், சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்நபர், நவம்பர் 6, 2023 அன்று, ஜி ஸ்கொயர் என்கிற மனைவணிக நிறுவனத்திற்கு ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதி, அதில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.  அதனுடைய நகலை நீதிமன்றத்திலும் ஒப்படைக்கிறார்.  அந்தப் பிரமாணப் பத்திரத்தில் என்ன இருந்தது ?

ஜி ஸ்கொயர் நிறுவனத்தைப் பற்றி நான் தொடர்ந்து கூறிவந்த பொய்களுக்காகவும், அவதூறுகளுக்காகவும், அதுசார்ந்து சமீபத்தில் பதிந்த வலைத்தளப் பதிவுகளுக்காகவும் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்.  நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து இப்படி நான் பொய் சொல்லியது தவறானது என்பதை ஏற்கிறேன்.  இனி ஒருபோதும் இந்த நிறுவனத்திற்கெதிராக எதுவும் எழுத மாட்டேன். அவர்களுக்கெதிராக எழுதிய அனைத்தையும் நீக்கிவிட்டேன்.   கருணையுடன் என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, நிறுவனத்திடமும், மாண்புமிகு நீதிமன்றத்திடமும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என நீள்கிறது அந்த வாக்குமூலம்.

என்ன நடந்தது ?

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்த மனைவணிக நிறுவனம், தன்னுடைய சிறந்த நிர்வாகச் செயல்பாடுகளால் மெல்ல வளர்கிறது.  தமிழ்நாடு மட்டுமல்லாது அதன் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலும் தன் கிளைகளைப் பரப்பி வணிகத்தைச் சிறப்பாகப் பெருக்கியது !

கோவிட் பெரும்பரவல் காலத்தில், மனைவணிகத்தில் தன்னிகரில்லாத வளர்ச்சியை அது அடைந்தது.  இவை யாவற்றையும் அதனுடைய வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளின் மூலம் எவரும் அறிந்துகொள்ளக்கூடிய நிலைதான் இன்றுள்ளது.

ஆனால், 07/05/2021 திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததுமே சாவர்க்கர் சங்கர், தொடர்ந்து திமுகவின் முக்கியப் பிரமுகர்களின் பினாமி நிறுவனம்தான் இந்த ஜி ஸ்கொயர் என்று எழுத ஆரம்பித்தார்.

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடைய மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் போன்றோர்தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்று கைக்கு வந்ததையெல்லாம் எழுதித் தள்ளினார் !

அதைவிடவும் மிக மோசமாக, இந்த நிறுவனத்திற்காகப் பல எளியமக்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, மிரட்டி வாங்கப்படுகின்றன, ஆக்கிரமிக்கப்படுகின்றன என்றும் கூசாமல் எழுதினார்.  அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு நிலங்களை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சகாய விலையில் வழங்கியது.  குறிப்பாக மேற்கு தமிழகத்தில் பல இடங்களில் அமையவிருந்த  அரசுப் பேருந்து நிலையத்திற்கருகில் இருந்த அரசு நிலங்கள் இப்படி முன்கூட்டியே அந்த நிறுவனத்திற்காக விற்கப்பட்டன.  பேருந்து நிலையம் அமையும் என்றவுடன் அந்த மனைகளைப் பல மடங்கு இலாபத்துடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் அதைப் பிறருக்கு விற்றது என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.  பல இணையத்தளச் செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியுமளித்தார் !

நிறுவனத்தின் பெயரையும், பிரபல ஆளுங்கட்சிப் பிரமுகர்களையும் வெளிப்படையாக அவர்களுடைய பெயரைச் சொல்லியே இவ்வளவு துணிவாகப் பேசுகிறாரே என அத்தகைய வீடியோக்கள் வைரலாகின.  அவருடைய பதிவுகளைப் பல்லாயிரம் பேர் பகிர்ந்தனர் !

அவதூறுகளால் வீழ்ந்த நல்லரசு !

2006 – 2011. கலைஞர் ஐந்தாம் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்று சீரும் சிறப்புமாக நடந்த ஆட்சி அது.  திமுக ஆள்களே கூட இந்த வாக்கியத்தைக் கடந்த வேளையில் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்திருப்பார்கள்.  அந்தளவு மிகப் பரவலான வன்ம அவதூறுகள் அவ்வேளையில் பரவியிருந்தன என்பதால் அவர்களை நொந்து என்னாகப் போகிறது ?

2009 – 2011 காலகட்டம்தான் சமூகவலைத்தளங்களின் பாய்ச்சல் நிகழ்ந்த பொழுது.  அதுவரை குறிப்பிட்ட ஒரு சில இனங்கள் அல்லது கம்பெனி ஆர்கெஸ்ட்ராக்களைப் போல வெகு சிலருக்கு மட்டுமே வாய்த்திருந்த எழுத்து, எழுதத் தெரிந்த அனைவருக்கும் வாய்த்தது.  இதனால் ஏகப்பட்ட நன்மைகள் விளைந்தன.  ஆனால், பாற்கடலில் கடவுள் தலைமையேற்றுக் கடைந்த அமிர்தத்திற்கிடையேயும் நஞ்சு திரண்டு வந்தததல்லவா ?

மணம் வீசும் மலர்களுக்கிடையே கொடும் முட்களும் மறைந்திருக்கும் அல்லவா ? அதுபோல பல அவதூறுகளையும் பல்லாயிரம் பேர் எழுதித்தள்ளினர் !

திமுக எனும் மக்கள் கட்சிக்கு, அதன் எதிரிகள் துரோகிகளைக் காட்டிலும் நடுநிலைகள் எனத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பும் நபர்களால்தான் பேராபத்துகள் விளையும்.  அவர்களால் குத்தப்பட்டு, குத்தப்பட்டு தன் முதுகில் ஏகப்பட்ட விழுப்புண்களைப் பெற்றிருந்தபோதும், கருத்துரிமை அவர்களின் பிறப்புரிமை என்றுகூறி அவர்களிடம் கலைஞர் ஒருபோதும் சீற்றத்தைக் காட்டியதில்லை !

அதன் பின்விளைவு பத்து வருடங்கள் தமிழ்நாட்டைப் படுகுழிக்குள் தள்ளியது.  அவ்வளவு பொய்களை எழுதித் தள்ளியதில் சொந்தக் கட்சிக்காரர்களே அதை நம்பித் தொலைத்தனர்.  குறிப்பாக 2 ஜி வழக்கு.  சி.பி.ஐ நீதிமன்றம் அந்த வழக்கின் தன்மை பற்றித் துல்லியமாகத் தீர்ப்பு எழுதியதும் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி.  இப்போது மக்களவை உறுப்பினர்களாக இருக்கும் ஆ.ராசா, கனிமொழி மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை,  திரிக்கப்பட்டவை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர்.  அதன்பின்னரே இனி அவதூறுகளை வேறுமாதிரி அணுகவேண்டுமென சமூகவலைத்தளத் திமுகவினர் உறுதி பூண்டனர் !

ஆனாலும், சாவர்க்கர் சங்கர் போன்றவர்கள் பரப்பும் பொய்களை அவ்வளவு எளிதாகத் தடுத்துவிட முடியவில்லை. ஏன் ?

நச்சு ஊடகங்கள்

செய்தி ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூண் என்பர்.  எனில், மக்களாட்சி தழைக்க அவர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமான ஒன்று.  ஆனால், பணத்தொற்று பீடித்து அவற்றுள் பல நஞ்சாகிவிட்டன.  அவை அழுகிப்போனதைத் தெரியாமல் நுகர்ந்த சூதுவாதறியாத பொதுமக்களில் பெரும்பாலோர் அவர்கள் தரும் சேதிகள் அத்தனையும் உண்மை என நம்புகின்றனர்.  குறிப்பாக ஆதன் டிவி, ரெட்பிக்ஸ் போன்ற இணையச் செய்தி சேனல்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை !

இந்த இரண்டு செய்தி நிறுவனங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர் சாவர்க்கர் சங்கர்.  இவர்கள் நடத்தும் கேள்வி – பதில் நிகழ்ச்சியாகட்டும், பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஆகட்டும், அத்தனையும் நாடகங்கள்.  எதிலும் உண்மைத்தன்மை இருக்காது.  என்ன கேள்வியைக் கேட்க வேண்டும், அதற்கு என்ன பதிலளிக்கவிருக்கிறேன் என்பதை சாவர்க்கர் சங்கரே திட்டமிடுவார்.  ஆதன் சேனலில் டின்பியர் மாதேஷ் என்பவர் பெரும்பாலோருக்குப் பரிச்சயமானவர்.  குறிப்பாக இந்த டின்பியர் என்கிற அடைமொழியினால்தான் அவர் அத்துணை பிரபலம்.  அவர், இவருடன் எடுக்கும் அத்தனை பேட்டிகளும் நாடகீயமாகவே இருக்கும்.  இருப்பினும் டின்பியரை சாவர்க்கர் பேசவிடவே மாட்டார்.  கேள்வி கேட்டவரையே குற்றவாளி போல பாவித்துப் பேசுவது சாவர்க்கரின் வழக்கம்.  பார்க்கும் நமக்குத் திகைப்பாக இருக்கும்.  அந்த நாடகம் பகிரங்கமாகப் புலனாகும்.  ஆனால், சாமானியர்களுக்கு, குறிப்பாகத் திமுகவை ஐயத்துடன் பார்க்கும் கண்களுக்கு, இவர் உருட்டும் பொய்களெல்லாம் சிலிர்ப்பைத் தரும்.  இவருடைய பேட்டிகளை ஈர்க்கும் தலைப்பிட்டு, அந்த வீடியோக்களை வைரலாக்கினால் பணம் கொட்டும்.  அந்தப் பணத்திற்காக எந்த அவதூறுகளையும் பேசத் துணிந்தன இந்தச் சிறு கூட்டங்கள் !

பொய்களின் தோரணங்கள்

இந்தச் சாவர்க்கர் சங்கர் வெறுமனே திமுகவிற்கெதிராக மட்டுமே அவதூறு பரப்பினார் என நினைத்துவிடக் கூடாது.  பொதுமக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கெதிராக, காவல்துறைக்கு ஆதரவாகவும் செயல்படும் முகவர்.  தூத்துகுடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு படுகொலையின் போது காவல்துறைக்கு ஆதரவாக எழுதினார்.  தொடர்ந்து பேசினார்.  பொதுமக்கள்தாம் கலவரத்தில் ஈடுபட்டனர், அதனால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் காவலர்கள் வானத்தை நோக்கியும், கலவரக்காரர்களின் கால்களை நோக்கியும் சுட்டார்களெனப் பச்சைப் பொய்யைச் சொன்னார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி சம்பவத்திலும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மீதும், அந்தப் பெண்ணின் தாயார் மீதும் அவதூறுகளைச் சொன்னார்.  அந்தப் பள்ளித் தாளாளர் ஏழை.  பெருங்கடனில் இருக்கிறார்.  அவருடைய பள்ளியைக் காலவரையற்று மூடினால் அவர் சாப்பாட்டிற்கு எங்கே போவார் என்று முதலைக் கண்ணீர் வடித்தார் !

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, அது ஒரு நாள் நீதியரசர் சுவாமிநாதனையே கடித்தது.

நீதியரசரைப் பற்றி இழிவான அவதூறு ஒன்றைச் சொல்ல, அந்த நீதியரசரே தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு போட்டார்.  நீதிபதியை அவதூறு சொல்லியதற்காக ஆறுமாதச் சிறைத்தண்டனை பெற்றார்.

மேலே சொன்னவை சான்றுக்காகச் சொன்னவை.  ஆனால், தினம் சில அவதூறுச் செய்திகளுக்குப் பொறுப்பேற்பவர் சாவர்க்கர் சங்கர் !

இவரிடம் பேட்டியெடுக்கும் சேனல்கள் ஒருபோதும் அவருடைய அத்தகைய அவதூறுகளைச் சரிபார்ப்பதில்லை, பொறுப்பேற்பதுமில்லை.  அதுதான் மக்களாட்சிக்கான, கருத்துரிமைக்கான சாபம் !

Political Pimp

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதியைத் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தார் சாவர்க்கர் சங்கர்.  அமைச்சராவதற்கு முன் தன்னுடைய ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை அவர் நிர்வகித்து வந்ததால், அந்த நிறுவனத்தைக் குறிவைத்து அவதூறுகளைப் பரப்பினார் சங்கர்.  திரைப்படங்களைத் தங்கள் நிறுவனத்திற்கே தரவேண்டுமென மிரட்டி வாங்குவதாகவும், தியேட்டர்களை ஆக்கிரமித்துப் பிற படங்கள் வெளிவருவதைத் தடுக்கிறார் என்றும் உதயநிதி மீது பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

சமூகவலைத்தளமான எக்ஸ் தளத்தில், உதயநிதியை நேரடியாக Tag செய்தே அவர் இத்தகையை பொய்களை அடுக்கியதால் பலரும் குழம்பினர்.  திரைத்துறையினரே முன்வந்து இது அவதூறு, ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் எங்களுக்கு உதவும் ஒரே நிறுவனம்.  தயாரிப்பாளர்களுக்கு உரிய இலாபத்தை உடனடியாகத் திரையரங்குகளிலிருந்து பெற்று அளிக்கும் ஒரே நிறுவனம் ரெட் ஜெயண்ட்தான்.  எனவே எங்களுடைய படங்களை அந்நிறுவனம் வாங்குவதுதான் எங்களுக்குப் பேருதவி.  சங்கர் தூற்றுவது அத்தனையும் பொய் என்றனர் !

உடனடியாக உதயநிதியிடமும் சென்று, இவனுக்கெதிராக நீங்கள் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்.  அமைதியாகக் கடந்துபோனால், அவன் சொல்வதெல்லாம் உண்மையாகிப் போகும் எனக் கவலை கொண்டனர்.

உதயநிதி சிம்பிளாகப் பதிலளித்தார்.

Political Pimp களுக்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.  அவன் எனக்குச் சமமான எதிரியுமில்லை.  அந்த அரசியல் விபச்சாரி தனக்குத் தெரிந்ததைச் செய்கிறான்.  எனக்குத் தெரிந்ததை நான் செய்கிறேன்.  யார் செய்வது சரி எனக் காலம் உணர்த்தும் என்று அத்துடன் அவனை மறந்தார் !

காலம் உணர்த்தியது

சாவர்க்கர் சங்கர் தொடர்ந்து அவதூறுச் செய்திகளைப் பரப்பியதன் மூலம், எங்களிடம் நிலங்களை வாங்கிய பலர், பயந்து அந்த நிலங்களை வாங்காமல் நிராகரித்துவிட்டனர்.  இதனால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த வீண் இழப்புக்கு ஒரே காரணம் சாவர்க்கர் சங்கர்தான்.  எனவே இனி எங்கள் நிறுவனத்தைப் பற்றி அவர் எதுவும் எழுதக்கூடாது.  எங்களுக்கு ஏற்பட்ட இழப்பையும், இழப்பீடாக அவரிடமிருந்து பெற்றுத்தர வேண்டுமென ஜி ஸ்கொயர் நிறுவனம் நீதிமன்றத்தில் சாவர்க்கருக்கெதிராக வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றத்தின் மூலம் வழக்கு விவரங்களைத் தெரிந்துகொண்ட சாவர்க்கர் சங்கர், திருடனுக்குத் தேள்கொட்டிய நிலைக்குப் போனார் !

ஃபைல் திருடன்

தந்தை அரசுப்பணியிலிருந்த போதே இறந்த காரணத்தினால் காவல்துறையில் சங்கருக்கு வேலை கிடைத்தது.  உளவுத்துறையின் முக்கியமான கோப்புகளை எடுத்து வருவது, பாதுகாப்பாக வைப்பது போன்ற எடுபிடி வேலைகளைச் செய்து வந்த சங்கருக்கு, உளவுத்துறையின் முக்கியத் தகவல்களைக் கசியச் செய்வதன் மூலம் பணம் கொட்ட ஆரம்பித்தது.  புலனாய்வுப் பத்திரிக்கைகள், பிரபல கிரிமினல்களின் தொடர்பு பெருகியது.  இவருடைய இந்தப் பணக் கொள்கையால் ஈர்க்கப்பட்டுக் காவல்துறையின் பெரிய அதிகாரிகள் கூட இவரிடம் இரகசியத் தகவல்களைப் பரிமாறினார்கள். இவரும் உளவுத்துறையின் இரகசியக் கோப்புகளை வாசித்து சார்ந்தோருக்கு முன்னெச்சரிக்கை, அதனால் கிட்டும் பரிசில் என்று அனைத்து மட்டங்களிலும் நெருக்கமானார் !

பலநாள் கோப்புத்திருடனை ஜெயலலிதா அரசு அவன் வாகாக அகப்பட்டபோது அமுக்கியது.  புழலுக்கு நெடு நாள் அனுப்பியது.  தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல, தகவல்களை இன்றளவும் தன் சோர்ஸ்களின் மூலம் திருடி, எளிய நபர்கள் என்றால் அவர்களைக் கடுமையாக அச்சுறுத்தி, மிரட்டி, இன்றளவும் பணம் பார்த்துக்கொண்டிருப்பவர் இவர்.  ஆனால், அந்தப் பாச்சா, ஜி ஸ்கொயரிடம் பலிக்கவில்லை !

ஊடகங்களின் முன் அத்துணை வீறாப்பு காட்டும் இவர், ஜி ஸ்கொயரின் இந்த எதிர்வினையை நேர்கொண்ட விதம் நமக்கு ஏதும் அதிர்ச்சியை அளிக்கவில்லை.  ஆனால், அதுவரை அவர் சொல்வதெல்லாம் வேதமென நம்பிவந்த அரைவேக்காடுகளுக்குக் கடும் அதிர்ச்சியைத் தந்துவிட்டது !

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என இந்த நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டபின்பு அவர் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ்க்கு ஒரு பேட்டியளித்தார்.  அதைக்கண்டு நேற்றுவரை அவருடைய ஆதரவாளர்களாக இருந்தவர்களே காறி உமிழ்கின்றனர்.  இவ்வளவு கேடு கெட்டவனா நீ என்று அவர்கள் தூற்றியதைப் பற்றி அவருக்குக் கவலைகளேதும் இருக்கப்போவதில்லை.  காரணம், சுரணையற்ற இத்தகைய கனத் தோல்களைக் கொண்டுதான் அவருடைய வாயும், விரல்களும் நெய்யப்பட்டுள்ளன.  பணத்துக்காக அது இன்னமும் அவதூறுகளைத்தான் பொழியும் !

இதும் போம்

திமுக எனும் பேராறு, அது துவக்கப்படும் முன்பிருந்தே பல சில்லட்டைகளின் குடைச்சல்களைச் சந்தித்தது.  ஆனால், காலச்சுழலில் அவையெல்லாம் அடித்துக்கொண்டு ஆழம் போய்விட, இத்தகைய நரகல்கள் மட்டுமே அவ்வப்போது மிதந்து வந்து நம்மை அருவருப்பூட்டுகின்றன.  நம்மால் பயனுறுபவர்களையும் இவை முகம் சுளிக்க வைக்கின்றன.  அது ஆற்றின் தவறில்லை.

இவற்றால் நிகழ்ந்த ஓர் அற்புதத்தையும் கண்டேன்.  சாட்டை சேனலும் மிகக் கேவலமாகத் திமுக தலைவர்களை விமர்சித்தது. அதனால் அதன் நிறுவனர் சிறைக்குப் போனார்.  பல வழக்குகள் உள்ளன.  ஆனால், அவரைப் போன்ற ஆள்கள் கூட, சாவர்க்கர் சங்கரின் இச்செயலைப் பார்த்து வெகுண்டிருப்பது நற்சமிக்ஞை.  எனவே இதுவும் கடந்து போகும்.  காலப்போக்கில் இவரெல்லாம் யாவரென்பது நம் நினைவடுக்குகளில் எங்குத் தேடியும் கிடைக்கப்போவதில்லை.  ஆனால், திமுக மக்கள் பணிக்காக நம் காலம் கடந்தும் பயணிக்கும் !!!

நன்றி.