ஓய்வு பெற்ற தமிழ்ப்  பேராசிரியர் குமராசுவும் அவர் மனைவி மங்காயி அம்மையாரும் நகரப் பேருந்தில் இருந்து இறங்கியதும் கடும்வெயில் தலை தீய்த்தது. சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்களை எல்லாம் வெட்டிய பிறகு அனலடிக்கும் தாரின் வெம்மையிலிருந்து தப்பிக்க வழி ஏதுமில்லை. கனத்த கட்டைப்பையைத் தூக்கிக் கொண்டு ‘வேகமா வா. அந்தக் கடைக்குப் போயரலாம்’ என்று முன்னால் நடந்தார். அடி வரை தவழ்ந்த வேட்டி தடுக்கி விழுந்து விடுவாரோ என்றிருந்தது.

‘பேண்ட் போட்டுக்கிட்டு வந்தா என்ன? ஊருக்குப் போறதுன்னா ஒடனே வேட்டிதான். வேட்டி கட்டலீனா இந்த சனஞ்செத்த ஊருக்குள்ள உட மாட்டாங்களா? சொல் பேச்சு கேட்டாத்தான? எல்லாந் தனக்குத்தான் தெரியும்னு நெனப்பு. எத்தன கஷ்டப்பட்டாலும் புத்தி மட்டும் வராது’ என்று கொஞ்சம் வாய்க்குள்ளும் கொஞ்சம் அவருக்குக் கேட்கும்படியும் முனகிக்கொண்டு பின்னால் நடந்தார் மங்காயி.

சொந்தக் கிராமத்திற்கு எப்போதும் காரில் வருவதே வழக்கம். அவர் நன்றாகவே ஓட்டுவார். ஓய்வு பெற்றுப் பன்னிரண்டு ஆண்டு கடந்து இப்போது பதின்மூன்று தொடங்கி இருபத்தேழு நாள்கள் ஆகிவிட்டன.  விரல்களில் ஓர் இறுக்கம் வந்திருந்தது. மடியவும் விரியவும் வெகுநேரம் எடுத்துக்கொள்கின்றன.  மூளையின் வேகத்திற்கு ஏற்பப் படிய மறுத்து எதையும் மெதுவாகத்தான் செய்கின்றன. அதையும் மீறிக் கார் ஓட்ட விரும்பினாலும் மங்காயி விடுவதில்லை. எங்காவது செல்லும் போது ஓட்டுநர் ஒருவரை அமர்த்திக் கொள்வது வசதி. ஒருவரை நம்பாமல் மூன்று நான்கு ஓட்டுநர்களின் எண்களை வைத்திருந்த போதும் அன்று திருமண முகூர்த்த தினம் என்பதால் ஒருவரும் அமையவில்லை.

வாடகைக் கார் அமர்த்திக் கொள்ளலாம் என்று மங்காயி சொன்னார். அவர் இசையவில்லை. அதில் சில அசௌகரியங்கள் இருந்தன. ஓட்டுநரைக் காக்க வைக்க வேண்டும். அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டும். திரும்பும் நேரம் கொஞ்சம் கூடினால் ஓட்டுநரின் முணுமுணுப்பு வாயசைவில் தெரியும். எல்லாம் ஓட்டுநரை முன்னிறுத்தியே செய்ய நேரும். ‘பதற்றம் ஏற்படுத்துபவை எவையோ அவற்றிலிருந்தெல்லாம் விலகிக் கொள்வதே நல்லது’ என்பது அவர் கண்டறிந்த வாழ்வியல் உண்மைகளில் ஒன்று.

அவர் மட்டும் ஊருக்கு வருவதாக இருந்தால் பிரச்சினையில்லை. அவர்கள் குடியிருந்த மாவட்டத் தலைநகரிலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டால் போதும். ஒன்றரை மணி நேரத்தில் வட்டத் தலைநகருக்கு வந்துவிடலாம். அங்கிருந்து நகரப் பேருந்தேறி அரைமணி நேரம் பயணம் செய்தால் கிராமத்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். ஊருக்கு வரும் நகரப் பேருந்துகளின் நேரம் மனப்பாடம். அதற்கேற்ற வகையில் திட்டமிட்டுக் கொள்வார். அன்றைக்குத் திட்டமெல்லாம் பிசகிவிட்டது. ஏதேதோ சிறுசிறு காரணங்கள். மனைவியுடன் கிளம்பும் போதெல்லாம் இப்படித்தான் ஆகிறது என்று நினைத்தாலும் வாய் திறந்து சொல்லவில்லை.

தம் வீட்டிலிருந்து ஆட்டோ பிடித்துப் பேருந்து நிலையம் வந்து சேரும் போதே வழக்கமாக ஏறும் இரு பேருந்துகளும் போயிருந்தன. கிராமத்துக்குச் செல்லும் நகரப் பேருந்தைப் பிடிக்க முடியாது என்பது தெரிந்தது. அதே போல நகரப் பேருந்துக்கு வெகுநேரம் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. பேருந்து நிலையத்தில் வெக்கை அதிகம். பையில் வைத்திருந்த தண்ணீர் உதவியது. பேருந்து நிலையக் கழிப்பறைக்குள் செல்ல நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மிடறு மிடறாகவே குடித்தார்கள். சிறுவயதில் வெயிலைக் குடித்து வளர்ந்த உடம்புதான் என்றாலும் இப்போது அந்தச் சுவடுகள்கூட இல்லை.

சாலையிலிருந்து ஊருக்குப் பிரிந்து செல்லும் பாதையில் நூறடித் தொலைவு நடந்ததும் தேநீர்க் கடை இருந்தது. வாசலில் பெரிய வேம்பு. பனையோலை வேய்ந்து அதன் மேல் கம்மந்தட்டை இருஅடுக்கு வரிந்திருந்தார்கள். அந்தக் குளுமையை மனத்தில் உணர்ந்து முடிந்தவரைக்கும் வேகமாக அடி வைத்து நடந்தார். மங்காயி அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

‘மெதுவாப் போய்த் தொலையேன். வயசுப் பையனாட்டம் துள்ளிக்கிட்டு ஓடறதப் பாரு. சொந்த ஊருன்னா சுடுமண்ணக் கூட அள்ளி வப்புவப்புன்னு வாயில போட்டுக்குவ.’

மங்காயி பேசுவது பெரும்பாலும் அவருக்கு மட்டுமே கேட்கும். சொல்லவும் வேண்டும், பிறருக்குக் கேட்கவும் கூடாது என்று நினைத்துத்தான் பேசுவார். கடைக்கு முன்னிருந்த வேம்படி பெஞ்சில் குமராசு உட்கார்ந்து மூச்சின் வேகம் தணிந்த பிறகே மங்காயி வந்து சேர்ந்தார். ஊரே சொந்தம் என்னும் போது கடைக்காரர் மட்டும் விலக்கா? தலையைச் சுற்றி வந்து மூக்கைத் தொடுவது போல மருமகன் முறையாகும் சொந்தம். குமராசு அரசு வேலையில் இருந்தவர் என்பதால் ஊரில் எப்போதும் மரியாதைக்குக் குறைவிருக்காது. அவர் மூச்சுச் சத்தம் கேட்டதோ ‘பாலய்யா’ என்று கூப்பிட்டது கேட்டதோ தெரியவில்லை. கடைக்காரப் பாலு வேம்படி பெஞ்சுக்கு வந்து குமராசுவிடம் பேசத் தொடங்கினார்.

‘என்னங்க மாமா… இன்னைக்கு நேரமாயிருச்சா? பதனொரு மணிக்கே வெயிலு காச்சி எடுக்குது. சனமே வெதைக்கலாம்னு அண்ணாந்து பாத்துக்கிட்டு இருக்குது. இந்தப் பாழாப் போன மானம் ரண்டு எச்சச் சொட்டுக்கூடப் போட மாட்டீங்குது. என்னதான் பண்றதோ தெரீல. அட, இன்னைக்கு அத்தையும் வந்திருக்கறாங்களா? அப்படியாச்சும் மழ வரட்டும். டீயே போடட்டுங்களா, வேறெதாச்சும் சில்லுனு குடிக்கறீங்களா?’ என்று பல கேள்விகளை அடுக்கினார்.

‘ஆமாம் பாலு. ஒரு பஸ்ஸ உட்டுட்டா இப்படி நேரமாயிருது’ என்று சொல்லிக்கொண்டே தம் மனைவியைப் பார்த்தார் குமராசு.

‘மோருகீரு இருந்தாப் பாருப்பா. இந்தக் கானல்ல டீயக் குடிச்சாக் கொடலு வெந்து போயிரும்’ என்றார் மங்காயி. ‘இந்தூருக்கு மழ பெய்யோணுமின்னா நான் வரோணுமா? ஊருல ஒரு நல்ல நாயும் இல்லையா?’ என்பதைத் தம் வழக்கம் போல வாய்க்குள் சொல்லிக் கொண்டார்.

பானையில் வைத்திருந்த சில்லிட்ட மோரை இரு தம்ளர்களில் கொண்டு வந்து பாலு கொடுத்தார். எதிர்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு ‘பானமோரு. சில்லுன்னு இருந்தாலும் தொண்டைய ஒன்னும் பண்ணாது. வெயில ஆத்தீரும், குடிங்க’ என்று சொன்ன பாலு தன் முக்கியமான விசாரணையைத் தொடங்கினார்.

‘ஏங்க மாமா, உங்க நாய் செத்துப் போச்சாமா? நல்லாத்தான இருந்துச்சு? போனதடவ வந்தப்பக்கூட எந்த அவசரமும் இல்லாத இப்ப மனுசங்களப் பாத்துப் பாத்துப் படிக்குதுன்னு அதப் பத்தி அப்பிடிப் பேசிக்கிட்டு இருந்தீங்களே.’

குமராசு பெருமூச்சு விட்டபடியே மோரைக் குடித்தார். ஐஸ் கட்டியை வைத்த மாதிரி பற்களில் பட்டுக் கூசிற்று. இரண்டு மிடறுக்குப் பிறகு இடைவெளி விட்டார். நாயைப் பற்றிப் பாலுவிடம் என்ன சொன்னோம் என்பது அவருக்கு நினைவில்லை. என்றாலும் ஊருக்குள் நுழைந்ததும் கண்ட முதல் ஆளே விசாரித்தது இதமாக இருந்தது.

‘பாலு… அப்படியே சின்னவனுக்குப் போன் போட்டு நாங்க வந்திட்டமுன்னு சொல்லு. என்னோட போன்ல நெம்பரு எடுக்கக் கஷ்டம். இத்தன வெளிச்சத்துல அதப் பாக்க முடியாது’ என்றார். குமராசுவின் தம்பி மகனை அழைத்து விஷயத்தைச் சொன்னார் பாலு. பேருந்தில் இருந்து இறங்கிப் பாலு கடையில் ஒரு தேநீரைப் போட்டுவிட்டுத்தான் சின்னவனைக் கூப்பிட்டு வரச் சொல்வார். ‘வயதான நமக்கு வேலையில்லை. கொஞ்ச நேரம் காத்திருக்கலாம். ஏதாவது வேலையாக இருப்பவர்களை முன்கூட்டியே வரவைத்துக் காத்திருக்கச் செய்யக்கூடாது’ என்பது அவர் கடைப்பிடிக்கும் இன்னொரு வாழ்வியல் கொள்கை.

மோரை மேலும் இரண்டு மிடறு உறிஞ்சிவிட்டுச் சொன்னார்.

‘வேல்! நல்லாத்தான் இருந்தான். வயசாயிருச்சு, போயிட்டான். வேறென்னத்தச் சொல்ல. வயசானா எல்லாரும் போக வேண்டியதுதான். மனசனுக்குத் தொண்ணூறு நூறுன்னு விதிச்சிருக்கறான். நாய்க்குப் பத்துப் பாஞ்சு வருசந்தான் விதி.’

‘நாய உட்டுட்டு ஒருநாள்கூட இருக்க மாட்டீங்களே. இப்ப ரொம்பக் கஷ்டமால்ல இருக்கும்’ என்றார் பாலு.

’அதயேப்பா கேக்கற… ரண்டு நாளு மனுசன் சோறே திங்கல. இந்த வயசுல இப்பிடிக் கெடந்தா எப்பிடி? போன நாயி எந்திரிச்சா வந்திரப் போவுதுன்னு சொன்னாலும் கேக்கல. பைத்தியம் புடிச்சாப்பல நாய்க்கூண்டையே பாத்துக்கிட்டு இருக்கறாரு. அப்பறம் பிள்ளைவ வீடியோ கால்ல பேசித்தான் கொஞ்சம் சமாதானம் ஆனாரு’ என்று சொன்ன மங்காயி ‘மனசன் மேல அக்கற கெடையாது, மசுரு நாய் மேலதான் அக்கற’ என்பதை வாய்க்குள் சொல்லிக் கொண்டார்.

பாலு மேலும் ஏதேதோ கேட்க மங்காயி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். வேல்! நினைவு மேலெழக் குமராசு பெருமூச்சு விட்டார். அவர் ஓய்வு பெறும் முன்னரே இருமகள்களுக்கும் திருமணம் செய்துவிட்டார். சொந்த ஊருக்கு அருகில் இருந்த அந்த மாநகரத்து அரசுக் கல்லூரியிலேயே கடைசிப் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். நல்லது கெட்டதுக்குச் சொந்த ஊருக்குப் போய் வருவார். அவசியம் என்றால் மட்டும் மனைவி உடன் வருவார்.

அவருக்கும் தம்பிக்கும் பொதுவில் கொஞ்சம் நிலம் இருந்தது. அவர் வேலைக்குப் போனதால் நிலம் முழுதையும் தம்பியே பார்த்துக்கொண்டிருந்தார்.  தம்பிக்கு ஒருமகளும் மகனும். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் தம்பியைப் போலவே தம்பி மகனும் படிக்கவில்லை. நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பரம்பரை வீட்டைப் பராமரித்துக் குடியிருந்தார்கள். அதில் சகல வசதிகளும் கொண்ட ஓர் அறையைக் குமராசுக்கென்று ஒதுக்கியிருந்தார்கள். அவர் எப்போது வந்தாலும் தொந்தரவு இல்லாமல் தங்கிக் கொள்வார். மனைவியோடு வந்தாலும் அந்த அறையே போதும். இருவரும் மகள்கள் என்பதாலும், நல்ல வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதாலும் சொத்தில் பங்கு கேட்க மாட்டார், தம்பி மகனுக்கே எழுதி வைத்துவிடுவார் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். தம்பி வீட்டாருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. என்றாலும் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொண்டதில்லை.

ஓய்வு பெறுவதற்கு முன் அவர் வந்தால் இரண்டு மூன்று நாட்கள்கூடத் தங்கியிருப்பார். ஓய்வு பெற்ற பிறகு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஓய்வு பெறும் நாளை விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்ட மகள்கள் சித்தப்பா வீட்டில் சொல்லி ஊரையே அழைத்துவிட்டார்கள். கல்லூரியில் அன்று மதியம் கறிச்சோற்று விருந்து. உடன் பணியாற்றிய ஆசிரியர்கள், அவர் துறை சார்ந்த மாணவர்கள், ஊர்ச் சொந்தங்கள் எல்லாம் வந்து குழுமினார்கள். விருந்துக்குப் பிறகு அவரை விதந்தோதிப் பலரும் பேசினார்கள்.

விழா முடிவில் பெரிய பெட்டி ஒன்றைக் கொண்டு வந்து மருமகன்கள் இருவரும் அவருக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். வீட்டில் இல்லாத பொருள் என்று எதுவுமில்லை. இருக்கும் பொருள்களையே பயன்படுத்த வழி தெரியவில்லை. இப்போது ஏதோ ஒரு பொருளைப் பெருஞ்செலவு செய்து வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்களே என்னும் வருத்தத்தோடுதான் பெட்டியை வாங்கிக் கொண்டு புகைப்படத்திற்கு முகம் காட்டினார். என்ன பொருளாக இருக்கும், இதை வீட்டில் எங்கே வைப்பது என்னும் யோசனை மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

பெட்டியை மேடையிலேயே பிரிக்கும்படி மருமகன்கள் சொன்னார்கள். எல்லோரும் ஒருசேர வற்புறுத்த வேறு வழியில்லாமல் அவரும் மனைவியும் சேர்ந்து பிரித்தார்கள். பெட்டிக்குள்ளிருந்து நாய்க்குட்டி ஒன்று முறைத்துப் பார்த்தது. அச்சத்தில் பெட்டியின் மூலைக்குள் பதுங்கியது. அதை அரவணைத்துப் பிடித்த இளைய மருமகன் தன் நெஞ்சோடு சார்த்தியபடி எடுத்து மேடைக்குக் கீழிருந்த எல்லோருக்கும் தெரியும்படி தலைக்கு மேல் தூக்கிக் காட்டி மாமனார் கையில் ஒப்படைத்தான். அப்படி ஓர் உயிர்ப்பரிசை அவர் எதிர்பார்க்கவில்லை. நாய்க்குட்டிப் பரிசு அன்று கல்லூரி முழுக்கவும் பேசுபொருளானது.  வீட்டுக்கு வந்த பிறகு மருமகன்கள் இருவரும் மாற்றி மாற்றி நாயைப் பற்றிச் சொன்னார்கள். அதைப் பராமரிப்பது எப்படி என்பதை விளக்கிய நீளத்தாளை இளைய மருமகன் நான்கைந்து பிரதிகள் எடுத்துக் கொடுத்தான். மின்னஞ்சலிலும் அனுப்பி வைத்தான். ஏதாவது சந்தேகம் என்றாலும் கேட்டுக்கொள்ளச் சொன்னான். அவனுக்கு நாய்கள் மேல் இத்தனை அறிவும் அன்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

முப்பது ஆண்டுக்கு மேல் பணியாற்றிய அவரது ஓய்வுக் காலத் தனிமையைப் போக்க அவர்கள் கண்டுபிடித்த வழிதான் இந்த நாய்க்குட்டிப் பரிசு என்பதை உணர்ந்தார். மகள்கள் யாரும் உடன் வந்து இருக்க முடியாது. அவர்கள் வசிக்கும் பெருநகர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குமராசுவும் மங்காயியும் போயிருக்க வாய்ப்பேயில்லை. ஒருகாலத்தில் புறநகராக இருந்த பகுதியில் மனை வாங்கி வீடு கட்டினார். இப்போது அது மையப்பகுதியாக மாறிவிட்டது. பழகிய அவ்வூரை விட்டு அவரால் அசைய இயலாது. வீடு, சொந்த ஊர் இரண்டு இடத்தைத் தவிர வேறெங்கும் அவருக்குத் தூக்கம் வருவதில்லை.

ஓய்வுக்கு முன் மகள்கள் குடும்பத்தோடு வந்திருந்த போது ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார் என்னும் பேச்சு வந்தது. பல யோசனைகள் வந்தன. காலை மாலை இருவேளையும் நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டைச் சுற்றியிருக்கும் சிறுதோட்டத்தை நன்றாகப் பராமரிக்கலாம். மகள்களின் வீடுகளுக்குச் சென்று மாதத்தில் சில நாள்கள் தங்கி வரலாம்.  நூலகத்திற்குச் சென்று வரலாம். இப்படியான பலவற்றை அவர் ஏற்கனவே செய்து கொண்டுதானிருந்தார். சில விஷயங்கள் அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

நூலக விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதைப் பற்றி அவர் யோசனை வேறு மாதிரி இருந்தது. முழுவாழ்வும் படிப்பில்தான் கழிந்தது. புத்தகத்தைத் தொடாத நாளில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பு; முடிந்ததும் கல்லூரி வேலை. வகுப்பறைகளில் புத்தகம்தான். வீட்டிற்கு வந்தால் பாடத் தயாரிப்புக்காகப் புத்தகங்கள். எப்போது புத்தகத்தைத் தூக்கி வீசுவோம் என்னும் மனநிலைதான் இருந்தது. என்றாலும் அதையெல்லாம் பொதுவில் சொல்லவில்லை. ஒவ்வொருவர் சொன்னதையும் சரி தவறு என்று ஏதும் சொல்லாமல் ஆமோதித்துக் கொண்டார். எதையும் சரி என்று சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்ட மகள்களும் மருமகன்களும் யோசித்து இந்த நாய்க்குட்டிப் பரிசை முடிவு செய்தார்கள். நாய் வளர்ப்பில் அவர் ஈடுபட்டால் அவருக்கும் நல்லது; தங்களுக்கும் நல்லது. அவர்கள் உத்தி நன்றாகவே பலித்தது.

தந்தைக்கு நேரம் போக்கியாக நாய்க்குட்டி இருக்கும் என்று அவர்கள் கருதியதைக் குமராசு சிலாகித்துக்கொண்டார். கிராமத்தில்  இருந்த சிறுவயதில் வீட்டில் நாய்கள் இருந்தன. அவற்றின் மீது ஈர்ப்பும் இருந்தது.  மங்காயிக்கு நாயைச் சிறிதும் பிடிக்காது. அதனால்தான் நாய் வளர்ப்பதைப் பற்றிப் பின்னர் யோசிக்கவே இல்லை. பரிசாக வந்த நாய்க்குட்டியை என்ன செய்வது என்று தீர்மானிக்கவில்லை. பார்க்கலாம் என்றுதான் நினைத்தார். வீட்டுக்குள் நாய் வரக் கூடாது என்பதில் மங்காயி கண்டிப்பாக இருந்தார். மகள்கள் இருந்த இரண்டு நாளில் வீட்டுக்கு வெளியே நாய்க்கென்று மரத்தில் அடித்த கூண்டு ஒன்று தயாரானது. அது உண்ணவும் அருந்தவும் பாத்திரங்கள். அடிப்படை வசதிகளை எல்லாம் மகள்களே செய்து கொடுத்துவிட்டுப் போனார்கள். அந்த நாயுடன் அவர் கழித்த ஆண்டுகள் பன்னிரண்டு.

அவர்களை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பி மகன் சின்னவன் முதலில் கேட்டதும் நாயைப் பற்றித்தான். அவனுக்குப் பெருமூச்சு ஒன்றை மட்டும் பதிலாகக் கொடுத்தார். மங்காயியை வண்டியில் உட்கார வைத்து அவன் கிளம்பினான். அடுத்த நடைக்கு அவன் வரும் வரைக்கும் காத்திருந்த போது கடைக்கு வந்த நான்கைந்து பேரும் நாயைப் பற்றியே அவரிடம் விசாரித்தார்கள். கிராமத்தில் நாய்கள் அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருக்கும். ஆட்டுப்பட்டிக் காவலுக்கு ஒன்று, வீட்டுக் காவலுக்கு ஒன்று என இரண்டு நாய்களை வைத்திருப்போரும் உண்டு. அவர்களுக்கு நாய் அருமை தெரியும். உடனுறைந்த நாய் போனால் படும் மனக்கஷ்டமும் புரியும். வீட்டுக்குப் போனபின் அவர் வந்திருப்பதை அறிந்து நாயைப் பற்றி விசாரிக்க யாராவது வந்து கொண்டேயிருந்தார்கள். மதிய உணவுக்குப் பிறகு சற்றே தலைசாய்ப்பது அவர் வழக்கம். அன்றைக்கு அதுவும் முடியவில்லை. நாயைப் பற்றி ஏதாவது நிகழ்ச்சி நினைவுக்கு வரப் பேசிக் கொண்டேயிருந்தார்.

ஓய்வுக்குப் பிறகான முதல் சில நாள்கள் இறுகி உறைந்து போய்விட்ட மாதிரி இருந்தது. பருவ விடுமுறை நாட்களைப் போல எண்ணிக் கொண்டால் எளிதாக இருக்கும் என்று நினைத்தார். விடுமுறை நாள்கள் என்றாலும் விடைத்தாள் மதிப்பீட்டு வேலை இருக்கும். அது தொடர்பாக ஏதாவது தகவல் பரிமாற்றம் நடக்கும். கடைசிச் சில ஆண்டுகள் துறைத்தலைவர் ஆனதால் ஏதேனும் தகவல் கேட்டபடியே இருப்பார்கள். கல்லூரிக்குச் சென்று வர வேண்டியிருக்கும். அடுத்த பருவப் பாடத்திட்டம், கால அட்டவணை பற்றியெல்லாம் யோசனை ஓடும். இப்போது எதுவுமில்லை. விடுமுறை நாள்கள் என்பதை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இரவு உணவை மொட்டை மாடியில் உண்டார். நாற்காலியில் அமர்ந்து வானத்தையே வெகுநேரம் பார்த்தபடியிருந்தார். வெற்றுத்தரையில் படுத்தார்.

‘எத்தன தடவதான் மொட்டமாடி ஏறி எறங்குறது? நானெல்லாம் காலம் முழுக்க ஊட்டுலதான் கெடந்து சீரழியறன். எனக்குப் பொழுது போவுலியா? கைவேலய எடுத்துச் செஞ்சா காலம் போறது தெரியுமா? மோட்டப் பாத்துக்கிட்டே கெடந்தாக் கஷ்டந்தான்’ என்றபடி மங்காயி அவ்வப்போது முனகிக் கொண்டிருந்தார். அவருக்குக் காதில் விழுந்தும் விழாதது மாதிரியே இருந்தது. நாய் வளர்ப்பில் ஈடுபாடில்லை என்றாலும் மங்காயிதான் அதற்குப் பால் கொடுக்கவும் சோறுண்ணப் பழக்கவும் செய்து கொண்டிருந்தார். நாய்க்குட்டி கண்ணில் படும் போது ‘டேய்’ என்று விளித்துச் சிறுகொஞ்சல் தருவதுதான் அவர் வேலை.

முதலில் நாய்க்குப் பெயர் சூட்டுவதைப் பற்றி அவர் யோசிக்கவில்லை. வாயில் நுழையாத ஏதேதோ பெயர்களை மகள்கள் சொன்னார்கள். பெயர்ப் பட்டியல் ஒன்றை மின்னஞ்சலில் இளைய மருமகன் அனுப்பினான். எந்தப் பெயரும் பொருந்தவில்லை. தவழ்வது போலத் தோன்றிய நாய்க்குட்டி பத்துப் பதினைந்து நாட்களிலேயே சட்டென எழுந்து நின்று கொண்ட மாதிரி தெரிந்தது. நடைப்பயிற்சி முடித்துவிட்டு இரும்புக் கதவைத் திறந்துகொண்டு நுழைந்த ஓர் அதிகாலையில் நாய்க்குட்டி அம்பு போலப் பாய்ந்து வந்து தன் முன்னங்கால்களைத் தூக்கி அவர் தொடை மீது லேசாகப் பதித்துத் தலையை உயர்த்தி முகம் பார்த்து முருகியது. அந்த முருகலில் கொட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனார். உடல் செம்மி நிறத்தில் பொலிந்த அதன் முகம் கருவளையம் கட்டி மின்னியது.

குனிந்து அதைப் பார்த்த அவருக்கு நாய்த்தலை வேலின் நுனியிலை போலவும் உடல் தண்டுப் பகுதியாகவும் தோன்றியது. தனக்கு முன் ஒரு வேல் நிற்கும் பரவசத்தைத் தாங்க முடியாமல் ‘வேல்! வேல்!’ என்றார். ‘வேல்!’தான் நாய்க்குப் பொருத்தமான பெயர். பெயர் சூட்டிய பிறகு நாயோடு ஒன்றினார்.  கழுத்துப்பட்டை போட்டுச் சங்கிலி மாட்டித் தன்னோடு  கூட்டிப் போனார். நடைப்பயிற்சி நண்பர்கள் எல்லோரும் புதிய நாயைப் பார்த்து விசாரித்தார்கள்.

‘பேர் என்ன?’ என்று கேட்டதும் ‘வேல்!’ என்று கம்பீரமாகச் சொன்னார்.

‘வேலுவா? டேய்… வேலு… வேலு’ என்று நண்பர் ஒருவர் கூப்பிட்டு நாயிடம் பேச முயன்றார்.

குமராசு சொன்னார், ‘வேலு இல்ல… வேல்!’

மேலும் சொன்னார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல சொல்லுவாங்கல்ல வேல்! வேல்!, வெற்றிவேல்!, வீரவேல்! அப்படீன்னு. அதுமாதிரி சொல்லணும்.’

‘வேல்னு எப்பிடிய்யா சொல்ல முடியும். வேலுன்னுதான் வாயில வருது’ என்றார் நண்பர்.

‘வேல்னு சொல்லும்போது ஒரு ஆச்சரியக்குறி போட்டுக்கணும். இது வீரமான நாயி. இதப் போயி வேலுன்னு கூப்பிட்டா சொங்கி மாதிரி இருக்கும். நாக்கு நுனி மேல்பல்லத் தொடணும். அதுக்கு மேல மடிக்கக் கூடாது’ என்று குமராசு விளக்கினார்.

‘செரீப்பா. முடிஞ்சா வேல்! அப்படீன்னு கூப்பிடறன். இல்லீனா நாய்னு சொல்லீட்டுப் போறன் உடு’ என்று நண்பர் பின்வாங்கினார்.

நாய் வளர வளர  ‘வேல்!’ அவனுக்கு அத்தனை பொருத்தமான பெயராகத் தோன்றியது. உடல் நெடிக்கமும் கூர்மூஞ்சியும் கால்களின் நீளமும் வேல்தான். அதன் கூர்நுனி போல அவன் காட்டும் பற்கள் தெரிந்தன. எதையும் குத்திக் கிழித்துவிட வேண்டித் தீட்டி நட்டிருக்கிறார் கடவுள் என்று ஆச்சரியப்பட்டார். அவரிடம் கொஞ்சலோடு  ‘வேல்!’ தாவும் போது எச்சரிக்கையோடு இருப்பார். வேட்டையாடிக் கொல்லும் வாய்தான் அன்பைக் காட்டவும் உதவுகிறது. கொஞ்சும்போது பல்லை அவன் பயன்படுத்தவில்லை என்றாலும் லேசாகப் பட்டாலே வலித்தது. காயமானால் அதற்கு மருந்து தேட வேண்டும்.

’வேலைப்’ பார்த்துக் கொள்ளும் வேலை அவருக்குச் சரியாக இருந்தது. கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைப் பட்டியலிட்ட அட்டை ஒன்றைக் கொடுத்தார்கள். அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிகளில் தவறாமல் அழைத்துப் போனார். அவர் வீட்டிலிருந்து இரண்டு கல் தொலைவில் மருத்துவமனை இருந்தது. நடந்தே கூட்டிப் போனார். யாராவது ‘நடந்தே வந்துட்டீங்களா?’ என்று கேட்டால் ‘கால்நடை மருத்துவமனைக்குக் கால்நடையாகத்தானே வரணும்’ என்று சிலேடை சொல்லிச் சிரித்தார். கேட்டவர்களும் சிரித்து வைத்தனர்.

ஒருநாள் விட்டு ஒருநாள் அவனைக் குளிக்க வைத்தார். இருவேளை உணவைப் பார்த்து பார்த்துக் கொடுத்தார். அவர் வழக்கமாக வாங்கும் கறிக்கடையில் எலும்புக்குச் சொல்லி வைத்தார். கறி எளிதாகக் கிடைத்தது; எலும்புக்குத்தான் கிராக்கி. அவரைப் போல நாய் வைத்திருக்கும் பலர் இருப்பதை அப்போதுதான் அறிந்தார். நாய்க்கு எலும்பு வாங்க நாய் போலக் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தார். இதெல்லாம் தொடக்கத்தில்தான். போகப் போக அவரை வேல்! ஆக்கிரமித்துக்கொண்டான்.  அவனை யாரும் ‘நாய்’ என்று குறிப்பிட்டுச் சொன்னால் முகம் சுண்டிப் போகும்.  ‘வேல்!’ என்பார். அவர் சொல்வதைப் பல பேர் புரிந்து கொள்ள மாட்டார்கள். வேல்!க்கு இருக்கும் அறிவு அவர்களுக்கு இல்லை, என்ன செய்வது?

அவரது அன்றாடத்தில் வேல்!க்கு நிரந்தர இடம் கிடைத்துவிட்டது. விடிகாலை எழுந்ததும் அவன் முகத்தில் விழிக்க வேண்டும் என்று கதவைத் திறந்து வெளியே வருவார். அவரது அரவம் கேட்டதும் வாசலில் வந்து வேல்! நிற்பான். வாலை மேலேற்றி வட்டம் போலாக்கிக் கொண்டு அவரையே பார்ப்பான். காதுகள் நேராகக் குத்தீட்டியாய்த் தெரியும். முற்றத்து நாற்காலியில் உட்கார்ந்ததும் ஓடி வந்து கால்களுக்கிடையில் முகத்தை நீட்டுவான். தலையைத் தடவிக் கொடுத்தபடி சில வார்த்தைகள் பேசுவார்.

‘நல்லாத் தூங்குனியா?’, ‘வீட்ட எத்தன முற சுத்துன?’ என்பதாகக் கேள்விகள் இருக்கும். ‘உனக்கென்னப்பா, காத்தக் குடிச்சுக்கிட்டு ராத்திரியெல்லாம் போதையேறிக் கெடக்கற’ என்றோ ‘இன்னக்கி நெலாவப் பாத்தயா? நட்சத்திரத்த எண்ணுனயா?’ என்றோ மனத்தில் தோன்றுவதைக் கேட்பார். தன்னை விசாரிக்கும் அவர் சொற்களில் படிந்திருக்கும் ஈரம் வேல்!க்கும் புரியும். முனகலாக அவருக்கு நன்றி சொல்வான். அவரை விசாரிப்பதாகவும் எடுத்துக் கொள்வார். பதிலும் சொல்வார். ‘செரி, இரு வர்றன்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்க் கடன்களை முடிப்பார்.

தேநீர் தயாரித்துக் கொண்டு நான்கு சப்பைப் பிஸ்கட்டுகளோடு வெளியே வருவார். அவற்றை இரண்டிரண்டாக உடைத்து வேல்!க்குப் போட்டுக்கொண்டே தேநீரை ரசித்துக் குடிப்பார். மங்காயி அம்மையார் எழ நேரமாகும். ‘நேரமே எந்திரிச்சு என்ன செய்யப் போறன்? ரண்டு கெழடுகளுக்குச் சமையல் பண்ண வெடிகாலத்துல எந்திரிக்கோணுமா?’ என்பார்.  ‘தெனமும் நாலு மணிக்கு எந்திரிச்சிச் செஞ்சு குடுத்துப் பிள்ளைவளப் படிக்க அனுப்புனன். இந்த மனசனுக்கு முப்பது வருசமா வடிச்சுக் கொட்டிக் காலேஜ்க்கு அனுப்புனன். இப்பவாச்சும் ஆள உட்டாங்களே’ என்று தனக்குள் முனகுவார்.

கதவை வெளியே பூட்டி வேல்! வசிப்பிடத்திற்குள் சாவியை வைத்துவிட்டுச் சங்கிலியை எடுப்பார். அவர் முன்னால் வந்து தலையைத் தயாராக நீட்டி வைத்திருப்பான் வேல்!. கையில் சங்கிலியைப் பற்றிக் கொண்டு நடை விடுவார். ஏதாவது நாயைப் பார்த்தால் நகராமல் சங்கிலியை இழுத்தபடி நிற்பான். அவரும் நின்று நல்லவிதமாக நான்கு வார்த்தை சொல்லி அழைத்துக் கொண்டு போவார். அவன் ஆய் போவதற்கென்று சில இடங்கள் இருந்தன. அங்கே கொஞ்ச நேரம் கழியும். இடையிடையே நண்பர்கள் சந்திப்பு, உரையாடல் எல்லாம் நடக்கும். கொஞ்சம் நேரம் நீண்டால் பொறுக்காமல் சங்கிலியை இழுத்து உணர்த்துவான். அவர் சிரித்துக் கொண்டே ‘இரு இரு, போலாம்’ என்று சமாதான வார்த்தைகள் சொல்வார்.

திரும்பி வந்ததும் அவன் வசிப்பிடத்தில் சங்கிலியைக் கட்டுவார். குளியலை எல்லாம் முடித்துக் கொண்டு திரும்ப வந்து அவனுக்கான உணவைத் தயாரித்து வைப்பார். எப்போதுமே சூடான உணவுதான். அவன் உண்டு முடிக்கும் வரை அருகிலேயே நிற்பார். ருசி அவனுக்குப் பிடிக்கிறதா என்பதை உண்ணும் வேகத்திலேயே கண்டு கொள்வார். பிறகுதான் அவரது காலை உணவு. உண்டுவிட்டுச் செய்தித்தாள்கள் வாசிப்பார்; தொலைக்காட்சிச் செய்திகள் பார்ப்பார்.

ஒருநாள் விட்டு ஒருநாள் அவனைக் குளிக்க வைப்பார். அது ஒருமணி நேரத்திற்கு மேல் நடக்கும். சோப்பு நுரை கமழ்வதை நுகர்வார். துவட்டி விட்ட பிறகு வெயிலில் கொஞ்ச நேரம் அவனை நடத்துவதற்காகக் கூட்டிப் போவார். பிறகு மதிய உணவு. சிறுதூக்கம். மாலையில் மீண்டும் அவனோடு நடை. அவனுக்கு உணவு. பிறகு அவர் உணவு. வாசிப்பு, திரைப்படம், மகள்களோடு பேசுதல், தூக்கம். இவ்வளவுதான் அவரது அன்றாடம். வேல்!தான் அதில் முக்கியமாக இருந்தான். அவ்வவ்போது அசையும் பிம்பம் போல மங்காயி நடமாட்டமும் உண்டு.

‘வேல்!’இன் பால்யப் பருவம் ஓர் இரண்டாண்டுகள்; இளமைப் பருவம் நான்கு ஆண்டுகள். நடுத்தர வயது நான்கு ஆண்டுகள். முதுமை இரண்டு ஆண்டுகள். அவனை வளர்த்த அனுபவத்தில் இப்படித்தான் பிரித்துப் பார்த்தார்.  அவனது பால்யச் சேட்டைகள் மனத்தை விட்டு நீங்காதவை. வீட்டைச் சுற்றியிருக்கும் தோட்டத்தில் அவன் பறித்து வைத்த குழிகளுக்காக மங்காயியிடம் அவரும் சேர்ந்து திட்டு வாங்கினார். செடிகளுக்குள் மறைந்திருந்து சட்டெனப் பாய்ந்து வந்து காலைக் கவ்வுவான். பொய்க்கடி கடிப்பான். அது கண்ணாமூச்சி விளையாட்டு. காலுக்கு அருகில் ஓடி வந்து உடலைத் தவழ்வது போலாக்கிக் கொண்டு உடனே ஓடுவான். அவரை வந்து தன்னைப் பிடிக்கச் சொல்லும் தொடும் விளையாட்டு.  அவனுக்கு ஈடு கொடுத்து விளையாட ஆகவில்லை. இருந்த இடத்திலேயே இருந்தபடி அஞ்சுவது போல கைகளை நெஞ்சில் வைத்து அபிநயம் காட்டுவார். அவனைப் பிடிக்க வருவது போல ‘டூய்’ என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டுவார். அந்தப் பாவனைகளே அவனுக்குப் போதுமானதாயிருந்தன.

பால்யப் பருவத்தில் அவனுக்குச் செய்த அறுவை சிகிச்சைதான் மனத்தைப் பிசைந்த நினைவு. கால்நடை மருத்துவர் அறுவை செய்துவிடலாம் என்று சொன்னதும் சரி என்றாரே தவிர நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். ‘இனிமே உங்க பிடியில நிக்க மாட்டான். உங்க வேல்! இனி வேல நீட்டிருவான்’ என்று குமராசுவின் பாணியில் மருத்துவர் சொல்லிவிட்டுச் சிரித்தார். நடைப்பயிற்சியின் போது பிற நாய்களைக் கண்டால் அவன் இழுப்பு அதிகமாயிற்று. இருகைகளையும் கொண்டு சங்கிலியைக் குனிஞ்சி இழுத்தாலும் அவரால் முடியவில்லை. அவன் குரலும் வேறு வடிவம் கொண்டது.

அவரது கட்டளையைக் காற்றில் பறக்க விட்டு வேறு மாதிரி பேசத் தொடங்கினான். ஒருமுறை அவர் மீதே பாய்வது போல வந்துவிட்டான். அதன் பிறகு இனி வழியில்லை என்று அறுவைக்குச் சம்மதித்தார். அறுவை செய்த பிறகு மயங்கிக் கிடந்தான். அரைநாள் எழவில்லை. வாயில் நுரை கக்கினான். பயந்துபோய் மருத்துவரைச் செல்பேசியில் அழைத்துக்கொண்டேயிருந்தார். அவரும் பொறுமையாகப் பதில் சொன்னார். மயக்கம் தெளிந்து மாலையில் இயல்பான பிறகு அவனுக்குச் சாப்பாடு வைத்துவிட்டு அவர் சாப்பிட்டார். பின் சில நாள்களில் அவன் பால்யக் குறும்புகள் திரும்பிவிட்டன. என்றாலும் அவன் உடலில் முன்னிருந்த தினவு இல்லை என்பதை உணர்ந்தார்.

அவன் இளமைக் காலத்தில் உடல் தோற்றப் பொலிவு கொண்டது. அவரையறியாமல் அடிக்கடி கட்டிப் பிடித்தார். செல்லமாகச் சிறுசிறு அடிகள் கொடுத்தார். அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி முத்தமும் வைத்தார். தான் செய்பவற்றை எண்ணி ஒருசமயம் வெட்கம் கொண்டார். விட்டால் நாய் ஜென்மமாகப் பிறந்திருப்போமோ என்று தனக்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டார். அந்த இளமைத் துள்ளல் பார்த்து பார்த்து அனுபவிக்கத் தக்கதாக இருந்தது. வீட்டுக்கு வெளியே பூனை ஒன்று போவதைக் கண்டு உள்ளிருந்து ஒரே தாவலில் சுற்றுச்சுவரைத் தாண்டிவிட்டான். அதன் பிறகுதான் சுவரை ஏற்றிக் கட்ட வேண்டியானது.

அப்போது ஒருநொடி நேரம் அவனால் சும்மா இருக்க முடியாது. உலாவலுக்கு இடத்தையே மாற்றினார். சுற்றிலும் பெருமதில் கொண்ட தனியார் பள்ளி மைதானத்தில் சிலருக்கு மட்டும் நடைப்பயிற்சி அனுமதியிருந்தது. கல்லூரிப் பேராசிரியர் என்னும் தகுதியில் பள்ளித் தாளாளரைப் பார்த்துப் பேசித் தனக்கும் நாய்க்கும் அனுமதி வாங்கினார். பள்ளி நுழைவாயில் அருகே காவலர் உண்டு. எப்போதும் சாத்தித்தான் இருக்கும். அதனால் அவனைச் சுதந்திரமாக விட்டார். பள்ளி முழுவதும் மைதானம் பூராவும் சுற்றியடித்துக் கொண்டு அவரிடமே வருவான். மைதானத்திற்குள் புகுந்து புகுந்து ஓடுவான். வேறொரு மிருகத்தைத் துரத்திச் செல்லும் பாவனையில் அவன் ஓடுவதைப் பார்க்கப் பாவமாக இருக்கும். இளமை வலுவை வேட்டையாடித் தணித்துக் கொள்ள வேண்டிய பிறவி இப்படி வெற்றுவெளியில் ஓடி வீணாக்குகிறது என்று இரங்குவார்.

அவனுக்கு நடுத்தர வயது வந்தபோது இருவருக்கும் இணக்கம் கூடி வந்தது. அவர் சொல்வதைக் கேட்டு நடக்கும் பொறுமையைக் கடைபிடித்தான். அவர் உட்காரும்போது பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டான். நடைக்கேற்ற விதத்தில் அவனும் நடந்தான். நிதானமாக அவனிடம் பேச முடிந்தது. கிட்டத்தட்ட அவர் வாழ்க்கைக் கதை முழுவதையும் அந்தப் பருவத்தில் சிறுக சிறுகச் சொல்லி முடித்தார். அவர் பேசும்போது முகத்தையே பார்த்தபடி உன்னிப்பாகக் கேட்பான். குரல் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற வகையில் சத்தம் கொடுப்பான். தான் பேசுவது முழுக்க அவனுக்குப் புரிகிறது என்பதில் சந்தேகமே வரவில்லை. மனத்தில் அழுந்திக் கிடந்த ரகசியங்களை எல்லாமும் அவனிடம் பகிர்ந்தார். யாரிடமும் அவன் சொல்ல மாட்டான். சொன்னாலும் யாருக்கும் புரியப் போவதில்லை. மங்காயி அவருடன் இருந்து வாழ்ந்ததில் பலவற்றை ஊகித்துத் தெரிந்து கொண்டிருந்தார். அவரை விடவும் வேல்!தான் தன்னைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டவன் என்று நம்பினார்.

அவன் நடுவயது இன்னும் சில வருசங்கள் நீடித்திருக்கலாம். விரல் நொடித்துத் திரும்புவதற்குள் முதுமை வந்துவிட்ட மாதிரி இருந்தது. இப்போதுதானே கையில் குட்டியாக வந்து சேர்ந்தான், அதற்குள்ளா, அதற்குள்ளா என்று மனம் தவித்துப் போனது. கடைசி வரை அவரோடு நடைப்பயிற்சிக்கு வந்து கொண்டுதான் இருந்தான். அவனுக்காகத் தூரத்தைச் சுருக்கினார். நடுநடுவே உட்கார்ந்துகொண்டார்கள். அவனோடு நிறையப் பேசினார்.  ‘முதுமையில் பேச்சைப் போல ஆதரவு தரக் கூடியது வேறெதுவும் இல்லை’ என்பது அப்போது அவர் உணர்ந்த வாழ்வியல் உண்மை.

முதுமை வந்தாலும் நன்றாகக் கவனித்துக் கொள்வதால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் அவனிருப்பான் என்றுதான் நினைத்தார். மரணத் தேதியை யாரால் முடிவு செய்ய இயலும்? ஒருநாள் சோறுண்ணாமல் இருந்தான். வயிற்றுப் பிரச்சினை இருந்தால் சோற்றை மோந்துகூடப் பார்க்க மாட்டான். அப்படித்தான் என்று நினைத்தார். நள்ளிரவில் விழிப்பின் போது உள்ளுணர்வுத் தூண்டலுக்கு ஆட்பட்டு வெளியே வந்து ‘வேல்!’ என்று அழைத்தார். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் வாசலில் வந்து நிற்கும் அவன், அழைத்தும் வரவில்லை. அவன் அறைக்குப் போய்ப் பார்த்தார். உடல் வேல் போல நீண்டு கிடந்தது. அசைவில்லை.

அருகில் உட்கார்ந்து அவன் தலைமேல் கை வைத்தவாறு வெகுநேரம் இருந்தார். பிறகுதான் மனைவியிடம் போய்ச் சொன்னார். மங்காயிக்கு அழுகையை அடக்க முடியவில்லை.  ‘நெசமா நெசமா’ என்றவர் வெளியே ஓடிப் போய்ப் பார்த்துக் கதறிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர். திட்டினாலும் அவன் மேல் மங்காயிக்குப் பாசம் கூடுதல்தான் என்று தோன்றியது. நகராட்சி ஊழியர்களை அழைத்து உடலைத் தூக்கிப் போய்ப் புதைக்கச் சொல்லலாம் என்றெல்லாம் ஆலோசனை சொன்னார்கள்.

எல்லோரும் போன பிறகு வீட்டுத் தோட்டத்திலேயே பொறுமையாகக் குழி தோண்டினார். நெருங்கிய நண்பர்கள் சிலருக்குத் தகவல் சொன்னார். கடைக்குப் போய்ச் சிறுமாலையும் உதிரிப் பூக்களும் வாங்கி வந்தார். நண்பர்களும் அண்டை வீட்டார் சிலரும் சூழப் பூ மணத்தோடு அவனைக் கொண்டு போய்ப் புதைத்தார். உடல் விறைத்திருந்தாலும் கண்கள் மூடித் தூங்குவது போலவே தோன்றியது. குழிக்குள் உடலைக் கிடத்தி ஒருகை மண்ணள்ளிப் போட்டதும் அவரால் தாங்க முடியவில்லை. அழுகையைக் கட்டுப்படுத்த இயலாமால் முகத்தை மூடிக்கொண்டு கதறினார். யார்யாரோ அவர் கைகளைப் பற்றியும் முதுகைத் தட்டியும் ஆறுதல் படுத்தினார்கள்.

அதிலிருந்து மீளத்தான் சொந்த ஊர்ப் பயணம். ஊரில் ஒருவர் பாக்கியில்லாமல் வந்து விசாரித்து விட்டார்கள் என்று நினைத்துச் சற்றே கண்ணயர்ந்தார். விழித்து வெளியே வந்ததும் இன்னும் சிலர் அவருக்காகத் திண்ணையில் காத்திருந்தார்கள். வறக்காப்பியைக் குடித்துக்கொண்டே அவர்களுடன் பேசினார்.

‘கொழந்த மாதிரி வெச்சிருந்தீங்க. என்ன பண்றது? மனசனா இருந்தாலும் நாயா இருந்தாலும் நேரம் வந்தாப் போய்ச் சேந்துதான ஆவோணும்’ என்று ஒருவர் சொன்னார்.

‘உடுங்க. இதே மாதிரி இன்னொன்னு வளத்தீட்டாப் போச்சு’ என்றார் இன்னொருவர்.

அவர் மகள்களும் மருமகன்களும் அதே ஆறுதலைப் பலமுறை சொல்லியிருந்தார்கள். விரைவில் ஊருக்கு வருவதாகவும் அப்போது அதே மாதிரி இன்னொரு குட்டியை வாங்கி வருவதாகவும் இளைய மருமகன் சொன்னான். கட்டாயம் குட்டியோடுதான் வருவார்கள். என்றாலும் வேல்! போல வருமா என்று அவருக்குத் தோன்றத்தான் செய்தது. வேல்! எத்தனையோ நினைவுகளை விட்டுவிட்டுப் போயிருக்கிறான். அவனில்லாத உலகம் இது என்பதை அவரால் நம்ப முடியவில்லை. சில வார்த்தைகளும் மௌனமுமாய் அவர் திண்ணையில் உட்கார்ந்திருந்த போது நண்பர் முத்தரசு வந்தார். இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள்.

‘டேய் குமாரு… வா… அப்படியே கொஞ்ச நேரம் காலாறீட்டு வரலாம்’ என்று அழைத்தார்.

சட்டையை மாட்டிக் கொண்டு குமராசுவும் கிளம்பினார்.

‘சீக்கிரம் வந்திருங்க. அப்பத்தான் வெளிச்சமிருக்க ஊடு போயிச் சேரலாம்’ என்று மங்காயி நினைவுபடுத்தினார்.

தலையசைத்துக்கொண்டே தெருவில் இறங்கினார். ஊரைத் தாண்டி ஏரிக்கரையை நோக்கி நடந்தபோது இந்த வருசம் மழை இப்படிப் பொய்த்துவிட்டதே என்று நண்பர் புலம்பினார்.

‘ஆனாப் பாரு, மழ இல்லீனா பனையில தெளுவுத்துளி கொட்டும். இந்த வருசம் தேர்தல் வருதில்ல, அதான் அரசாங்கம் கண்டுக்காத உட்டுட்டாங்க. ஊரு முழுக்கக் கள்ளுத்தெளுவு கர பொரண்டு ஓடுது. ஒன்னு போச்சுன்னா இன்னொன்னு கெடைக்குது பாரேன்.’

குமராசு கேட்டும் கேட்காமலும் நடந்தார். அவர் கைகள் முன்னும் பின்னுமாய் அசைவதைச் சட்டென உணர்ந்தார். ஏதோ பாறாங்கல்லைச் சுமந்திருந்த கைகள் இப்போது இறகு போலாகி விட்டதாகத் தோன்றியது. உடனே இன்னும் கொஞ்சம் வேகமாய் வீசிப் பார்த்தார். ஊஞ்சல் போலக் கைகள் முன்னும் பின்னும் போய் வந்தன. அப்படியே வீசிக்கொண்டே வேகமாக நடந்தார். உடன் வந்த முத்தரசு ஈடு கொடுக்க முடியாமல் பின்னாலேயே பேசியபடி ஓடி வந்தார்.

‘எதுக்குடா இப்பிடி ஓடற? கல்லுகில்லுத் தடுக்கி உட்றப் போவுது. செரி, இன்னக்கி இங்கயே தங்கீறேண்டா. ஒருகோட்ட கள்ளு குடிக்கலாம். நாம சேந்து குடிச்சு எத்தன காலமாச்சு.’

குமராசுவின் கை வீச்சு குறையவில்லை. முன்பக்கம் தலைக்கு மேலேறி பின்பக்கம் இரண்டடி போய் வந்தது. கையில் கட்டியிருந்த பெரும்பாரம் இறங்கி எல்லாம் லேசாகி விட்ட மாதிரி இருந்தது. கைகளை இப்படி வீசிச் சுதந்திரமாக நடந்து எத்தனை காலமாயிற்று என்று தோன்றியது. வீச்சைச் சிறிதும் குறைக்காமல் ஏரிக்கரை மீது அப்படியே நடந்தார். முத்தரசு ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார்.

ஏரி மதகு வரைக்கும் நடந்த குமராசு அப்படியே திரும்பினார். மீண்டும் அதே வேகம். கை வீச்சு. நண்பர் உட்கார்ந்திருந்த இடம் வரைக்கும் வந்து மீண்டும் திரும்பி நடந்தார். வேகம் குறையவில்லை. வீசலில் கை மேலேறி மேலேறிப் போயிற்று. என்ன வீச்சு! என்ன வீச்சு! இருமுறை அப்படியே நடந்து திரும்பியவர் நண்பருக்கு அருகில் உட்கார்ந்தார். மூச்சு வாங்கியது. எங்கோ பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் இளைப்பாறினார். குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. தன் கால்களின் வேகமும் கைகளின் வீச்சையும் நினைக்க அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் விடுபட்டுப் போன மாதிரி உணர்வு. அப்போது மெல்லிய காற்று வந்து படர்ந்து அவரைத் தழுவிற்று. கண்களை மூடி லயித்தார்.

‘குமாரு’ என்று நான்கைந்து முறை முத்தரசு கூப்பிட்ட பிறகே விழித்தார்.

‘சாயந்திரம் கள்ளு எறக்குவாங்களா?’ என்று நண்பரைக் கேட்டார்.

முத்தரசு ஆனந்தமாய் ‘அப்ப இன்னைக்கி இருக்கறயா, இருக்கறயா?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டார். தன் செல்பேசியை எடுத்து யாரிடமோ பேசுவதற்காக முத்தரசு கொஞ்சம் முன்னால் போனார். குமராசுவும் தன் செல்பேசியை எடுத்து இரண்டு விஷயங்களைச் செய்தார். மங்காயியை அழைத்து இன்றைக்கு இங்கேயே தங்கலாம் என்று சொன்னார். இளைய மருமகனுக்கு ‘நாய்க்குட்டி வாங்க வேண்டாம்’ என்று புலனச் செய்தி அனுப்பினார். வெயில் வெள்ளையும் மஞ்சளுமாய் நிறம் மாறிற்று. அவர் எழுந்து முன்பு போலவே கைகளை வீசி நடந்தார். காற்றும் அவர் நடைக்கு ஏற்றாற் போல வீசியடித்தது.

—–