முதன்முறையாக 2021இல் ஷார்ஜா சர்வதேசப் புத்தகக்காட்சிக்குச் சென்று திரும்பிய அனுபவம் பதிப்புலகு குறித்த என் பார்வையைப் பெரிய அளவில் விசாலமாக்க உதவியது.  கிட்டத்தட்ட அதற்கு இணையான பாரம்பரியம் உள்ள சென்னைப் புத்தகக்காட்சியும் ஒரு சர்வதேசப் புத்தகக்காட்சியாக அவதாரமெடுக்க வேண்டும் என்ற என் மன உந்துதலை அதற்கான  ஆதங்கத்தை உயிர்மையில் இடம்பெற்ற என் கட்டுயில் பதிவு செய்தேன். கலைஞர் தொலைக்காட்சி நேரலையிலும் இதுபற்றிப் பேசினேன். எனது அந்தக் கனவு மெய்ப்படும் விதமாக 2023 ஜனவரியில் நடந்துமுடிந்த சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியின் முதல் பதிப்பிற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுப் பணியாற்றியதோடு இரண்டாம் பதிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிலும் எனக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. சர்வதேசப் புத்தகக் காட்சிகளில் பங்கேற்பதற்குத் தேவையான பயண ஏற்பாடுகள், புத்தகங்களை வான்வழியும் கடல்மார்க்கமாகவும் கொண்டுசெல்வதிலும் திரும்பக் கொண்டுவருவதிலுமுள்ள சவால்கள்,  நம் அரங்கை சர்வதேசத் தரத்தில் கட்டமைப்பது, விற்பனையை அதிகரிப்பதற்கான  உத்திகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறுவது, இவற்றுடன் நம் படைப்புகளை மற்ற மொழிகளுக்குக் கொண்டுசெல்வது, அயல் மொழியிலுள்ள அறிவுச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவருவது மற்றும் மொழிபெயர்ப்புக்கான சந்தை குறித்த நுணுக்கங்கள்  என இந்தமுறையும் ஷார்ஜாவில் கற்றுக்கொள்ள நிறைய இருந்தன.

இந்த வருடம் குழந்தைகளை அதிக அளவில் பாதித்த விஷக்காய்ச்சல்,  வளைகுடா நாடுகளில் நடக்கும் போர், தீப ஒளித் திருநாளுக்கான தயாரிப்பு ஆகியவை காரணமாக மக்கள் வருகை குறைவாகவே இருந்தாலும் கேரளாவின் ஒரு மாநிலம்தான் ஷார்ஜாவோ என்று நினைக்கும் அளவிற்குப் புத்தகக் காட்சியில் காட்சிக் கூட எண் 7 மலையாளப் பதிப்பகங்களால் நிரம்பி வழிந்தது. அதில் முதன் முறையாகத் தமிழ்ப் புத்தகங்களுக்கான 7 அரங்குகள். 7 என்ற சங்கேத எண்ணின்மேல் உள்ள ஈர்ப்பினாலோ என்னவோ அரபு ஊடகங்களின் கவனம் முதல் முறையாகத் தமிழ் பக்கம் திரும்பியிருந்தது.  சென்னை சர்வதேசப் புத்தகக்காட்சி உலகளவில் கவனத்தை ஈர்த்திருப்பதும்,  பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதும் மற்ற அரங்குகளிலிருந்தவர்கள் நமது அரங்குகளைப் பார்வையிட வந்ததற்கு ஒரு முக்கியக் காரணம். இந்த நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நாம் தெளிவாகத் திட்டமிடவும் அயராது உழைக்கவும் வேண்டும்.

என்னதான் கடல் கடந்துபோய் கடைவிரித்தாலும் இறுதிப்போட்டி என்று வரும்போது ஆடுவதில் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி அமீரகத்தில் மலையாளப் புத்தகங்கள் விற்பனை விகிதத்திற்கும் தமிழ்ப் புத்தக விற்பனைச் சாத்தியங்களுக்கும் உள்ளது. அதற்குப் பல காரணங்கள். கேரளாவில் இலக்கிய நிகழ்வுகள் அதிகம். ஆனால், சென்னைப் புத்தகக்காட்சியளவுக்கு விற்பனைக்கான சாத்தியமுள்ள ஒரு பெரிய புத்தகத் திருவிழா அங்கு நடப்பதில்லை. அதனால் வருடம் முழுவதும் அவர்கள் ஷார்ஜா புத்தகக்காட்சி விற்பனையை மனத்தில்கொண்டு திட்டமிடுகிறார்கள். பல மாதங்களுக்கு முன்னரே வரவிருக்கிற புதிய புத்தகங்கள் பற்றிய அறிவுப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள், புத்தகக்காட்சியின் அத்தனை நாள்களிலும், பெரிய அளவில் அரசியல் நிலைப்பாடு, பதிப்பக சார்பு போன்றவற்றைத் தாண்டிய பெரும் ஆளுமைகளை அங்கு வரவழைக்கிறார்கள். விற்பனைக்கான களமாக மட்டும் பார்க்காமல், பெரிய கலாச்சார நிகழ்வாக அதை மாற்றுகிறார்கள்.

எதிர்கொண்ட சவால்களனைத்தையும் 7 தமிழ்ப் பதிப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான் ஓரளவுக்காவது சமாளிக்க முடிந்தது. தமிழக அரசும், பதிப்புத் தொழில் சார்ந்த அமைப்புகளும் நமக்குத் துணை நின்றால் ஒரு தமிழ் வீதி கூடம் எண் 7இல் அடுத்த ஆண்டேகூட சாத்தியம்தான்.

 

கட்டுமானம் மற்றும் மக்கள் வருகை  குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டிய தளங்கள்

சென்னைப் புத்தகக்காட்சியின் வடிவத்தைச் சிற்சில சின்னஞ்சிறு  மாற்றங்கள் செய்வதன் மூலம்  வாசகர்களுக்கு வசதியானதாக  மாற்றலாம்

1) ஒரே கூரையின்கீழ் அனைத்துப் புத்தகங்களும் கிடைப்பது நல்ல விசயம்தான். ஆனால், தமிழ்ப் புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், மல்டிமீடியா என்று முடிந்த அளவிற்கு அரங்குகளை வகை பிரித்து, தனித் தனிப் பகுதிகளாகவோ வரிசைகளாகவோ அமைக்கவேண்டும். வாசகர்கள் தம் தேவைக்கு ஏற்ப முன்னரே திட்டமிட்டு நேர விரையமோ வீண் அலைச்சலோ இல்லாமல் புத்தகங்களை வாங்கிச் செல்வதற்கு இது உதவும்.

2) இந்த வருடம் “We speak Books” என்ற வாசகத்தோடு தட்டச்சு எந்திரம்(Typewriter)ஐ இலச்சினையாகக் கொண்டு அங்கு விளம்பரங்கள் செய்திருந்தார்கள். கீழடி அருங்காட்சியகம் அமைத்ததுபோல் புதிய புதிய உத்திகளை ஒவ்வொரு புத்தகக்காட்சியிலும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

3) தமிழ்க் குடியிருப்புகள் அதிகமிருக்கும் நாடுகளிலுள்ள புத்தகக்காட்சி அமைப்புகளை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளச் செய்வதோடு பிற இந்திய மொழி அரங்குகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

4) டெல்லியில் பிரகதி மைதானத்தைப்போல் நிரந்தர வளாகம் என்று இருந்தால்தான் குளிரூட்டப்பட்ட அரங்குகள் அமைக்க முடியும் என்பதில்லை. ஒவ்வொரு முறையும் இந்திய அரங்குகள் இடம்பெறும் ஷார்ஜா புத்தகக்காட்சியின் கூடம் எண் 7 குளிர்சாதன வசதிகளோடு தற்காலிகமானதாகத்தான் நிர்மாணிக்கப்படுகிறது. (என்ன! நிரந்தர தளவாடத்தைப் போல் அதன் குளிரைத் தணிக்கும் சக்தி குறைவு. அதனால் ஸ்வெட்டர்கள் அணியவேண்டும் புதிதாகப் பங்கேற்பவர்கள்.)

போக்குவரத்து மற்றும் வர்த்தகம் : வருடம்தோறும் 6 சர்வதேசப் புத்தகக்காட்சிகளுக்கான திட்டமிடல்

ஷார்ஜா புத்தகக்காட்சிக்காக மட்டும் புத்தகங்களைக் கப்பலிலும், விமானத்திலும் எடுத்துச் சென்று திரும்பவும் கொண்டுவருவதென்பது பெரும் பொருட்செலவு. புத்தகக்காட்சிகளைத் தாண்டிப் புத்தகக் கடைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்களை அடையச் செய்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் பல படிநிலைகள், சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அது நடக்கும்பொழுதுதான் புத்தகக்காட்சியில் பங்கேற்ற பலனை வருடம் முழுவதும் அடைய முடியும். நட்டத்தைக் குறைக்க முடியும். அரங்கு வாடகை, நாம் போய்வரும் செலவு, தங்குமிடம், சாப்பாடு என்று அனைத்தும் விற்பனை விலையில்தான் பிரதிபலிக்கும். மத்திய அரசு  நிறுவனமான CAPEXIL சந்தாதாரர் சலுகைகள் ஓரளவிற்கு உதவினாலும் மாநில அரசின் பங்கு இல்லாமல் தனிப்பட்ட பதிப்பாளர்களால் தொடர்ந்து சமாளிக்க முடியாது.

1) தமிழ் வளர்ச்சித் துறையோ அல்லது பாட நூல் கழகமோ ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் நூல்களைத் தொகுத்து ஒரு குறைந்தபட்ச பரிந்துரைப் பட்டியலை வெளியிட வேண்டும். அவற்றிற்கான விற்பனை உரிமத்தை மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை, அமீரகம், அமெரிக்கா, ஐரோப்பா என்று தமிழர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் எல்லாம் முகவர்களுக்கு எளிதாகக் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அப்போதுதான் அங்கு அரங்கு எடுத்துப் பதிப்பாளர்கள் பங்கேற்கும்பொழுது நேரடிக் கொள்முதல்கள் மூலம் பெரிய சுமையை அவர்களால் குறைக்க முடியும்.

2) ஒரு வருடத்தில் தமிழகத்தில் மட்டும் நாம் கிட்டத்தட்ட 40 புத்தகக்காட்சிகளில் பங்குபெறுகிறோம். இதேபோல் 6 சர்வதேசப் புத்தகக்காட்சிகளில் பங்குபெற முடிந்தால் சராசரியாக 2மாதத்திற்கு ஒரு முறை ஒரு சர்வதேசப் புத்தக்காட்சி – ஒரு மாதம் கப்பலில் புத்தகங்களை அனுப்ப, ஒரு வாரம் புத்தகங்களைப் பெற்று அரங்குக்குக் கொண்டுவர, 2 வாரம் புத்தகக்காட்சிக்கு, ஒரு வாரம் மீதமுள்ள புத்தகங்களை அடுத்த இடத்திற்கு அனுப்ப என்று புத்தகத்தைத் திருப்பி அனுப்பாமல் சமாளிக்கலாம். தேவைக்கு ஏற்ப அவ்வப்போது விமானத்தில் புத்தகங்களை வரவைத்துக்கொள்ளலாம்.

3) அமீரகத் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் சேர்ந்து தமிழ்ப் பதிப்பாளர்களைக் கௌரவிக்கும்விதமாக ஏற்பாடுசெய்யப்பட்ட விழாவில் அடுத்தமுறை வாசகர் வருகையை அதிகரிக்க இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. புத்தகங்களை அங்கேயே வைக்க வழி செய்வது, விற்பனைக்குத் தன்னார்வலர்கள் உதவி, விளம்பரங்கள் போன்ற அவற்றின் சாதக பாதகங்களைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்ப் பதிப்பாளர்கள் டிஜிட்டல் நோக்கி நகர வேண்டும் என்று நிறையப்பேர் குறைபட்டுக்கொண்டார்கள். அதற்கு அங்கு விரிவாக எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க முடியவில்லை. அதை இங்கே பதிய விரும்புகிறேன்.

பதிப்புத் தொழிலும், திரைத்துறையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இயங்குகின்றன. லாப நட்ட விகிதத்தில்தான் வேறுபாடே தவிர ஆபத்துகளும், சாத்தியங்களும் ஒன்றுபோலத்தான். அதை உதாரணமாக வைத்துச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு படத்தை இன்று தயாரிப்பு நிறுவனம் திரைப்பட விழாக்களுக்கு மட்டும் அனுப்பிவிட்டு ஓடிடியில் வெளியிடலாம். அதனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் பலன். அதன் வர்த்தகத்தால் ஒட்டுமொத்தமாகத் திரை உலகில் மேல்தட்டு வேலைகளில் இருப்பவர்கள் மட்டும்தான் ஈடுபட முடியும். ஆனால், திரையரங்கில் ஒரு படம் வெளியாகி வெற்றியடையும்போது அதனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பிற மொழி உரிமை என்று தொடங்கி பார்க்கிங் டோக்கன் போடுபவர், பாப்கார்ன் விற்பவர்வரை பல குடும்பங்களை அதன் பலன் சென்றடைகிறது. அதேபோலத்தான் ஒரு புத்தகம் ஒளி/ஒலி/மின் புத்தகமாக விற்கும்பொழுது அதனால் வர்த்தகம் பெரிதாக விரிவடையாது. புத்தகக்காட்சிக்குச் சென்று நேரடியாக விற்கும்பொழுதுதான் பதிப்பாளர்/எழுத்தாளரைத் தாண்டி அச்சகர், வியாபாரி, புத்தக மூட்டைகளைத் தூக்கிச்செல்லும் தொழிலாளிவரை அந்தப் பலன்போய்ச் சேரும்.

மொழிபெயர்ப்புக்கான சாத்தியம் : அரபு இலக்கியத்தை உலகமொழிகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி நல்கைகளைப் பெரிய அளவில் அமீரகம் அளிக்கிறது. பன்னாட்டு முகவர்கள் அவற்றைப் பெறவும், அவர்கள் நாட்டில் வழங்கப்படும் நல்கைகளைப் பற்றித் தெரியப்படுத்தவும் புத்தகக்காட்சிக்கு முன் முதல் மூன்று நாள்கள் ஒரு கலந்தாய்வை நடத்துகிறார்கள். ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் நாம் சந்தைப்படுத்த நினைக்கும் புத்தகம், ஆசிரியர் பற்றிய குறிப்பு இருந்தால் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அங்கேயே கையெழுத்திடலாம். இந்த வருடம் போர்தான் விவாதப் பொருளாக இருந்தது. ஃப்ராங்ஃபர்ட் போல் முழுக்க முழுக்க உரிமம் சார்ந்த சந்தையில் பங்கெடுக்க முடியாதவர்கள் ஷார்ஜாவில் புத்தகக் காட்சியில் பங்குபெறும்போது இதற்கும் சேர்த்துத் திட்டமிடலாம்.

சமகாலத் தமிழ் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதில் (அரசியல் நிலைப்பாடு, பதிப்பகச் சார்பு நிலை கடந்து) நாம் கூடுதல் கவனம் செலுத்தினால் வருங்காலத்தில் சென்னை சர்வதேசப் புத்தகக்காட்சியும் இதற்கான முக்கியமான கேந்திரமாக மாற வாய்ப்பு இருக்கிறது.