அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றக் கூட்டத்தொடர் பலவிதங்களில் முக்கியமானது. தனது அறிவார்ந்த ஆவேசமான பேச்சுக்களால் நாடு முழுவதன் கவனத்தையும் கவர்ந்த திருணமூல் காங்கிரஸ் எம்.பி. மொஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

டிசம்பர் 9 ஆம் தேதி பராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு நாடாளுமன்ற பா.ஜ.க. உறுப்பினர்  வினோத் குமார் சோன்கர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் எம்.பி. மொஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்தது. மொய்த்ரா, பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதற்காக தர்ஷன் ஹிராநந்தனி என்ற வணிகரிடமிருந்து பணமும் பரிசுகளும் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மொய்த்ரா தனது லாக் இன் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளிநபரிடம் பகிர்ந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

1.மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்று பி.ஜே.பி. எம்பி நிஷிகாந்த் டுபெ குற்றம் சாட்டினார்.

2.எதிக்ஸ் கமிட்டி விசாரணைநடத்தியது.

3.ஜெய் ஆனந்த் தேஷாத்ரி என்ற உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் ஆதாரம் அளித்ததாக நிஷிகாத் கூறினார்.

மொய்த்ரா இதை மறுத்தார். அவர் ஹிராநந்தனையும், அவரிடமிருந்து தான் பணம் பெற்றதற்கு சாட்சி என்று சொல்லப்படும் ஜெய் ஆனந்த் தெஹாத்ரி என்ற உச்ச நீதிமன்ற வழக்குரைஞரையும் குறுக்கு விசாரனை செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், அது மறுக்கப்பட்டது.

மொய்த்ராவை பதவிநீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது, மத்திய அரசானது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீவிரமான விசாரணை நடத்தி இதில் மேலும் ஏதாவது பண மோசடி இருந்தால் கண்டுபிடித்து தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டது. இப்படிச் செய்யப்பட்டால் மொய்த்ரா மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

மொய்த்ரா சங்கிகளின் தொண்டையில் சிக்கிய முள்ளாக இருந்தார். அவர் மீது பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்  இந்துத்துவவாதிகள் கடும் கோபத்துடன் இருந்தனர். இந்தக் கோபத்துக்கும் மொய்த்ரா மீதான குற்றாச்சாட்டுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா, சதி ஏதாவது உள்ளதா என்பது முழுமையான வெளிப்படையான விசாரணை நடந்தால்தானே முடிவு செய்ய முடியும்? சாட்சிகள் குறுக்கு விசாரணையே செய்யப்படவில்லை எனில் அது எப்படி முழுமையான விசாரணையாக இருக்க முடியும்? சில லட்சம் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்தலில் வென்று பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு எம்பியை இவ்வளவு எளிதாக பதவி நீக்கம் செய்யலாம் என்றால் மக்கள் விருப்பத்துக்கு என்ன மரியாதை? விஷயம் இத்துடன் நின்றுவிடவில்லை.

டிசம்பர் 13 ஆம் தேதி இரண்டு இளைஞர்கள் பாராளுமன்றத்தில் சேதம் ஏற்படுத்தாத மஞ்சள் புகை வெளியிடும் குண்டு வீசினர். அவர்கள் தேசத்தின் கவனத்தை சர்வாதிகாரம், பணவீக்கம், மணிப்பூர் கொடுமைகள், அரசின் பாராமுகம், வேலையின்மை ஆகியவற்றை நோக்கி ஈர்க்க விரும்பினர். பாரத் மாதா கீ ஜெய் என்றே அந்த இளைஞர்கள் முழக்கமிட்டனர். பகத் சிங்கால் உணர்வூட்டப்பட்டவர்கள் அவர்கள் என்று கூறப்பட்டது. இந்த இளைஞர்களும் இவர்களுக்குப் பின்னணியாக இருந்தவர்களும் மிக எளிதாக எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைதாகினர். மக்களின் கவனத்தை இந்த விஷயங்களை நோக்கி ஈர்ப்பதே அவர்களது நோக்கம் என்று தெரிவித்தனர்.

இந்த இளைஞர்கள் தேர்ந்தெடுத்த முறை தவறு என்றாலும் அவர்கள் வலியுறுத்த விரும்பிய விஷயங்கள் சரியானவை. அவற்றின் மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதும் சரியானதே. எதிர்க்கட்சிகள் பெரும்பாலானவற்றின் கருத்தும் இதுதான்.

ஆனால் வேடிக்கை என்னவெனில் பயன்படுத்திய முறை தவறாக இருந்தாலும் அந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை எதிர்க்கட்சிகள் பேசவில்லை. இந்த இளைஞர்களில் யாராவது ஒருவர் இஸ்லாமியராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கணக்கில் கொள்ளவில்லை. இது போன்ற கோரிக்கைகளை எழுப்ப முடியாத சூழல் நாட்டில் நிலவுகிறது என்பதையும் கண்டுகொள்ளாமல் பாராளுமன்றத்தில் பாதுகாப்புக் குறைபாடு பற்றியே எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசினர்.

லிபரல் ஏடுகளும் அந்த இளைஞர்களை விளம்பர பிரியர்கள் என்று முத்திரை குத்தின. உண்மையில் அவர்கள் வெடிகுண்டு கொண்டு வந்து வீசியிருந்தால் மக்கள் பிரதிநிதிகளின் கதி என்னவாகியிருக்கும் என்று ஓயாமல் முழங்கினர்.

பாதுகாப்பு குறைபாடு பற்றி எதிர்கட்சி எம்பிக்கள் அரங்கின் மையத்துக்கு கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன் வந்து கோரினர். இவ்வாறு போராட்டம் நடத்திய பல எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் பிரிவில்லேஜ் கமிட்டிகளுக்கு பரிந்துரைத்தார்.  எதிர்கட்சிகள் தொடர்ந்து போராடியதால் 147 பேர் மொத்தமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இரண்டு சபைகளிலும் சேர்த்து எதிர்கட்சிகளின் 139 எம்பிக்களில் 99 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் 97 எதிர்க்கட்சி எம்பிக்களும் ராஜ்யசபாவில் 46 பேரும் இவ்வாறு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

புகைக் குண்டு வீசிய அந்த இளைஞர்களுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கலாம். அதை அறிந்தே தன்னலமற்ற நோக்கத்துடன் அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கிடைக்கும் புகழால் அவர்களுக்கு எந்த லாபமும் இருக்காது. சொல்லப்போனால் வாழ்க்கையில் வேறு எந்தப் பணியும் செய்ய முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிகள் அபத்தமாக பா.ஜ.க.க்கு ஏற்ற பாதுகாப்புக் குறைபாடு பற்றிப் பேசியதில் இந்த இளைஞர்கள் எழுப்ப முயன்ற முக்கிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. நாடு சர்வாதிகாரமாக மாறிவிட்டது என்பது அவர்கள் சொன்ன முக்கியமான குற்றச்சாட்டு. அதை விட்டு விட்டு எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு பற்றிப் பேசியதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக பதவிநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளால் இதற்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதனால் அந்த இளைஞர்களின் செயலும் மறக்கப்பட்டு, பாதுகாப்பு குறைபாடும் அலட்சியப்படுத்தப்பட்டு முழுவதும் பா.ஜ.க. அரசுக்குச் சாதகமான சூழ்நிலை தோன்றியது.

தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் பாராளுமன்றம் தொடர்ந்து இயங்கி 74 சதவீத பணிகளைச் செய்தது. 18 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் பாரதீய நியாய சன்ஹிதா 2023 (இந்திய தண்டனைச் சட்டம்), பாரதிய நாக்ரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (குற்றவியல் நடைமுறைச் சட்டம்) பாரதிய சக்‌ஷ்ய  சன்ஹிதா (இந்திய சாட்சிச் சட்டம்) ஆகியவை முக்கியமானவை. இந்தப் புதிய சட்டங்களில் பயங்கரவாதம், அடித்துக் கொல்லுதல், தேசப் பாதுகாப்பு போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இது மாறிவரும் சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதாகும், இந்தப் புதிய சட்டங்கள் காலனிய கால பாரம்பரியத்தை மாற்றும் என்றார் மோடி.

இந்தப் புதிய கிரிமினல் சட்டங்கள் மூன்றே நாட்களில் 146 எம்பிக்கள் இல்லாமல் நிறைவேறின. 1860லிருந்து இருந்து நடைமுறையில் இருந்துவரும் இந்த சட்டங்கள் விவாதம் இல்லாமல் மூன்றே நாட்களில் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் நீண்ட நாட்களாகவே இவ்வாறு சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்பது பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்தன. எதிர்கட்சிகள் இதை விவாதமாக்கவே இல்லை. இவை குறித்து திட்டவட்டமான பார்வையை முன்வைக்கவில்லை. எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் இவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோதும் பெரிதாக எதிர் நடவடிக்கை எதுவும் இல்லை. ஒருவேளை இந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்திருந்தாலும் பூகம்பம் எதுவும் நடந்து இருக்காது என்பதே உண்மை.

இவை முதலில் ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்குப் பலகாலம் முன்பிருந்தே இவை பற்றிய விவாதங்கள் கோவிட் முழு அடைப்பின்  வெளியே தெரியாமல் நடத்தப்பட்டன. 140 கோடி மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக் கூடியவை இந்தச் சட்டங்கள். இப்படியொரு மாற்றத்துக்கான காரணம் குறித்து மிக விரிந்த அளவில் தேசம் முழுவதும் விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். சட்ட  நிபுணர்கள்கூடக் கலந்தாலோசிக்கப்படவில்லை. கலந்து கொண்ட 19 நிபுணர்களில் 6 பேர் அரசு பதவிகள் வகிப்பவர்கள் என்றே கூறப்படுகிறது.

இந்தப் புதிய சட்டங்களில் பயங்கரவாதம், லஞ்சம், ஊழல், மாபியா போன்றவற்றை இணைக்கப்பட்டு அவற்றுக்கான தண்டனை, விசாரணை முறைகள், தேவையான சாட்சியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இப்போது இவற்றுக்கு தனி சட்டங்கள் உள்ளன. சராசரி குடிமக்களுக்கான குற்றவியல் சட்டங்களில் பல பாதுகாப்புகள் உள்ளன. இவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் கஸ்டடி 15 நாளில் இருந்து 90 நாளாக உயர்த்தப்பட்டுளது. 124 ஏ பிரிவு உச்ச நீதிமன்றத்தால் மனித உரிமைகளுக்கு விரோதமானது என்று கூறப்பட்டு நீக்கப்பட்டது. இச்சட்டத்தின் படி அரசுக்கு எதிராக சாதாரன அதிருப்தி காட்டினால்கூட கைது செய்து ஆயுள் தண்டனைவரை தண்டணை அளிக்கலாம். இச்சட்டத்தின் மூலம் பல்லாயிரம் அப்பாவிகள் வருடக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோரின் பல்லாண்டு காலக் கோரிக்கையாகும். இவ்வாறு நீக்கப்பட்ட  ராஜ்துரோஜ் என்ற 124 ஏ பிரிவானது தேசத் துரோகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் இந்தப் புதிய சட்டங்களின் மூலம் பிரிட்டிஷ் காலனி ஆட்சிகால பாரம்பரியம் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். ஆனால் ஏற்கெனவே நீக்கப்பட்ட காலனி ஆட்சிகால 124 ஏ சட்டமானது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

377 பிரிவுகள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளன. தன்பாலின விழைவு, மாற்றுப் புணர்ச்சி முறைகள் ஆகியவை முன்பு இந்தப் பிரிவின் கீழ் சட்டவிரோதமாகவிருந்தன. முன்பு உச்ச நீதிமன்றம் இவற்றை சம்மதம் பெற்ற உறவுகள் என்று அளவில் நீக்கியிருந்தது. ஆனால் இந்தப் புதிய சட்டங்களில் இந்தப் பிரிவுகள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளன. தன்பாலினத்தின் மீது வன்முறை, குழந்தைகளின் மீது வன்முறை ஆகியவை நடக்கும் போது  அந்த அளவில் இந்தப் பிரிவுகள் தேவைப்படும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

124 ஏ திரும்பக் கொண்டுவரப்படுகிறது. 377 மொத்தமாக நீக்கப்படுகிறது. அரசின் போக்கு வேடிக்கையாக இருக்கிறது.

போலீசுக்கு அதிக உரிமைகள் உள்ளன. விசாரணை, குற்றம் சுமத்துதல் ஆகிய இரண்டு உரிமைகளும் இப்போது போலீசிடம்  இருந்து மாற்றப்படவில்லை. பழைய காலனிய வழக்கமே தொடர்கிறது. இதெல்லாம் இல்லாமல் எப்படி இவை புதிய சமூகத்துக்கு ஏற்ற சட்டங்கள் என்று சொல்ல முடியும்? அப்படி இவை புதிதாக என்ன சேவை செய்துவிட முடியும்?

இந்திய சிறைகளில் 6 லட்சம் பேர் உள்ளனர். பலர் விசாரணைக் கைதிகள். 18-30  வயது உள்ளவர்கள். காவலை 15 நாட்களில் இருந்து 90 நாட்களாக மாற்றுவது சிறைகளில் வதைபடுபவர்களின் எண்ணிகையை மேலும் அதிகரிக்கும். சிறையில் இருப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் ஏழைகள், ஜாமீன் பெற வழியில்லாதவர்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது இச்சட்டங்கள் மோசமான விளைவையே ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

நவீனமான அறிவியல் முன்னேற்றங்கள் Facial recognition  போன்றவை சாட்சிச் சட்டங்களில் கண்டுகொள்ளப்படவில்லை போன்ற தொழில்நுட்ப ரீதியிலான குறைகளும் இச்சட்டங்கள் குறித்து சொல்லப்படுகின்றன.  வழக்குரைஞர் காலின் கன்சல்வாஸ் இவை காலனிய காலத்தைவிட மோசமானவை என்கிறார்.

பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் நடந்திருந்தால் ஓரளவாவது இது பற்றி மக்களுக்குத் தெரிந்து இருக்கும். அது நடக்காமல் எம்பிக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். பாராளுமன்றத்துக்கு வெளியே இச்சட்டங்களில் உள்ள குறைகள், ஆபத்து பற்றி மக்களுக்கு சொல்ல எதிர்க்கட்சிகளிடம் ஒரு திட்டமும் இல்லை. அரசு விரும்பியது நடக்கிறது.

குற்றவியல் சட்டங்கள் தவிர வேறு சட்டங்களிலும் பிரச்சினைகள் உள்ளன.

நெருக்கடி நேரங்களில் அரசு எந்தத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறும் டெலிகம்யுனிகெஷன் பில் இந்தத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது முற்றிலும் சர்வாதிகாரத்துக்கு வித்திடுவது ஆகும். அரசு எந்தத் தொலைக்காட்சி சேனலை வேண்டுமானாலும், எந்த செல்போன் நெட்வொர்க்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றால் அது எங்கே கொண்டு போய் விடும்? இப்படியொரு சட்டம் நிறைவேறியிருக்கிறது. இது குறித்து நாட்டில் பேச்சே இல்லை.

இந்தச் சட்டங்கள் அரசுக்கு எல்லையற்ற அதிகாரத்தை அளிக்கின்றன. மக்கள் மீதும் ஊடகங்கள் மீதும் கட்டுப்பாட்டை அளிக்கின்றன. மாற்று கருத்துள்ளோரை கடுமையாக தண்டிக்க வழிவகை செய்கின்றன. இவையெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டுக்கு தேவையே இல்லை. ஆனால் குறிப்பிட்ட முதலாளித்துவ சக்திகள், மதவாத சக்திகள் ஆகியோரின் ஆட்சியாக இருக்கும் இந்த அரசானது தனக்கு அதீத அதிகாரங்கள் வேண்டும் அதைக் கொண்டுதான் நாட்டின் மற்ற பிரிவினர்மீது ஆதிக்கத்தினை நிலைநாட்ட முடியும் என்று கருதுகிறது.

புதிய பாராளுமன்றமானது மோடி விரும்பும் அடக்கியொடுக்கப்பட்ட நாட்டின் உருவகமாக உள்ளது- பிரண்ட்லைன். மார்ச் 3,2023

மோடி அரசு நாட்டில் தான்விரும்பும் தன்னை ஆதரிக்கும் முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவு அளித்து அவை பெரும் வலிமை பெற உதவி வருவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இது தாராளமயப் பொருளாதாரம் அன்னிய உறவுகள், குரோனி கேபிடலிடம், ஊடகங்கள் மீதான ஆதிக்கம், சட்டம் சார்ந்த துறைகள் மீதான செல்வாக்கு ஆகியவை இணைந்த கூட்டு ஆகும். இதன் அடுத்த கட்டமே இந்த எம்பிக்கள் தகுதி நீக்க நடவடிக்கையும், புதிய சட்டங்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது ஆகும்.

இந்த முதலாளித்துவ சக்திகள், மதவாத சக்திகளின் கூட்டானது தங்கள் அதிகாரத்தை நாட்டின் அனைத்து மட்டங்களிலும் நிலைநாட்டி வருகின்றன. அனைத்து செல்வ வளங்களையும் கைப்பற்றி வருகின்றன.

மோடி அரசானது இந்திய அடர் காடுகளுக்குள் 450 மில்லியன் டன் நிலக்கரியைக் கொண்டுள்ளப் பகுதியில் சுரங்கம் தோண்ட அதானி எண்டர்பிரைஸஸ் நிறுவனத்துக்கு அனுமதியளித்தது. இது சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அதானிக்கு ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்று விளக்கப்படவில்லை.

2018 ஆம் ஆண்டு இந்திய அரசு ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்கியபோது அதானி அனைத்தையும் கைப்பற்றினார். அதற்காக முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்துக்கான ஏலத்தில் கலந்து கொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டன. அதானி இந்தியாவில் பல துறைமுகங்களை நிர்வகித்து வருகிறார்.

மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் குஜராத்தில் இருந்து டெல்லிக்கு அதானியின் ஜெட்டில்தான் பயணம் செய்தார்.

How a reliance funded firm boosts BJPs campaign on Facebook Ajazeera- Kumar sambhav and Nayantara 14.3.2022

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடந்தபோது மலேகன் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாகூர் என்ற இந்து துறவியை தேர்தலில் பா.ஜ.க. நிறுத்தியது. அப்போது முகநூலில் ஒரு விளம்பரம் தொடர்ந்து வெளிவந்தது. பிரக்யா தாகூர் விடுதலை செய்யப்பட்டார் என்று அந்த விளம்பரத்தில் தவறாகக் கூறப்பட்டிருந்தது. ஒருநாளைக்கு 300000 பேர் இதைப் பார்த்தனர்.

ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் 1990 களின் இறுதியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது மசூர் அசார் என்ற தீவிரவாதியை விடுதலை செய்தது என்று கூறினார். இது NEWJ என்ற செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் ராகுல் காந்தி மசூத் அசாரை ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் என்ற மீம் வெளியிட்டது. இதை 650000 பேர் பார்த்தனர்.

இவை முகநூலில் செய்திகளாக இல்லாமல் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தன. NEWJ என்ற முகநூல் பக்கம் இந்த இரு விளம்பரங்களுக்கும் பணம் கொடுத்திருந்தது. இதன் முழுப்பெயர் New Emerging World of Journalism Limited  . இந்த நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் துணைநிறுவனமாகும். இது அம்பானிக்கு சொந்தமானது என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

இந்த நிறுவனம் பல கோடி ரூபாயை செலவழித்து இது போன்ற விளம்பரம் கொடுத்து மோடியின் செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இது வேறு நபர் கொடுப்பது என்பதால் தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாது. முகநூல் நிர்வாகமும் நெளிவு சுழிவாக நடந்து கொள்கிறது. பா.ஜ.க. எதிர்ப்பு விளம்பரங்கள், பதிவுகளை அழிக்கும் நிறுவனம் இது போன்ற அம்பானி நிறுவனங்களை தடையின்றி இயங்க விடுகிறது. தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் என்ற அமைப்பானது முகநூல் நிர்வாகம் பா.ஜ.க.க்கு ஆதரவாக செயல்படுகிறது என்றது.

நியூஜெ நிறுவனமானது விளம்பரங்களை செய்தி என்று சொல்லி முகநூலில் பதிவிடுகிறது.  அந்த நிறுவனம் முகநூலிலும் இஸ்டகிராமிலும் விளம்பரத்துக்கான இடத்தை பணம் கொடுத்து வாங்குகிறது. இந்த விளம்பரங்கள் பா.ஜ.க. ஆதரவு, இஸ்லாம் எதிர்ப்பு, எதிர்க்கட்சி அவதூறு தன்மை கொண்டவை.

முகநூல் பக்கங்கள் நண்பர்களுக்கும் பின்பற்றுவோருக்கும் காட்டப்படும். ஆனால் விளம்பரங்கள் எல்லோருக்கும் காட்டப்படும். குறிப்பிட்ட ஆட்களை டார்கெட் செய்ய அனுமதிக்கப்படும். அந்த விதத்தில் விளம்பரங்கள் சாதகம் கொண்டவை.

2019 தேர்தலின் போது நியூஸ் ஜெ 170 அரசியல் விளம்பரங்கள் கொடுத்தது.

நியூஸ் ஜே வி நிறுவனர் சலப் உபாத்யாயா ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு வகித்த உமேஷ் உபாத்யாயாவின் மகனாவார். அவரது மாமா சதீஷ் உபாத்யாயா டெல்லியின் முன்னாள் கட்சித் தலைவராவார்.

பிஜெபி இந்த நியூஸ் ஜெ நிறுவனத்துக்குப் பணம் ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த விளம்பரங்களால் நியூஸ்ஜெ நிறுவனமும் எந்த வருமானமும் ஈட்டியதாகத் தெரியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனமானது விளம்பரத்துக்கு ஒதுக்கிய பணத்திலேயே நியூஸ் ஜெ இயங்கியது.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் அதிரடி நடவடிக்கைக்கும், இந்த முதலாளித்துவ சக்திகளுக்கும் தொடர்பு உண்டு. உதாரணமாக பழங்குடி மக்களின் உரிமைக்குப் போராடும் செயல்பாட்டாளரக்ளை 90 நாள் கஸ்டடியில் வைக்கலாம். காட்டில் நிலக்கரி எடுக்கும் நிறுவனம் இதனால் பலனடையும் அல்லவா? பா.ஜ.க. ஓயாமல் கத்தி வரும் அர்பன் நக்சல் என்ற கற்பனையான பிரிவானது சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், செயல்பாட்டாளரக்ள், அறிவு ஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் எல்லோரையும் உள்ளடக்கியது. இவர்களால் பாதிக்கப்படுவது நாட்டை சூறையாடி வரும் பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டுமே. எனவே இச்சட்டங்கள் அவர்களுக்குத் தேவை.

இது போன்ற நடவடிக்கைகளுக்காகவே இந்த நிறுவனங்கள் பெரும் செலவு செய்து பா.ஜ.க.யை ஆட்சியில் அமர்த்தியுள்ளன. எனவே இந்தப் புதிய சட்டங்கள், பதவி நீக்கங்கள் ஆச்சரியமளிக்கவில்லை. இன்னும்கூட அதிர்ச்சிகள் வரக் கூடும். அவர்களிடம் அதற்கானத் திட்டங்கள் உள்ளன.