இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் விதிமுறைகளின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடக்க வேண்டியதற்கான நடைமுறைகள் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. இந்தியத் தேர்தல் கால அட்டவணையின்படி, வரலாறு காணாத வகையில், ஏறத்தாழ இரண்டு மாத காலவரையறையில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் தலைமையமைச்சர் மோடி போல அரசியல் சாசன விதிகளையும், அதன் நோக்கங்களையும் அச்சரம் பிசகாமல் செயல்படுத்தும் அரசியல் தலைவர் ஒருவரை இதுவரை இந்தியத் திருநாடு கண்டதில்லை என்பதே அவரது தரப்பு முன் வைக்கும் செய்தி. அந்தப் ‘புனிதர்‘ விதிகள் மீறப்பட்டுவிட்டதான பார்வை எழுந்துவிடக்கூடாது என்பதற்காகத் தேர்தல் தேதி அறிவிப்பையே பத்து நாள்களுக்கு மேலாக ஒத்தி வைத்தார் என்பதே அதற்கான சாட்சியம்.

   மோடியின் தேர்தல் ஆணையம்

சரி, எதற்காக இந்தப் பத்துநாள் தள்ளி வைப்பு ? முதல் காரணம் தேர்தல் அறிவிப்பிற்குச் சில நாள்களுக்குமுன்னால் திடீரெனத் தேர்தல் ஆணையர் ஒருவர், தானாக முன்வந்து, பதவியைத் துறந்துவிட்டார். 2029 வரை தேர்தல் ஆணையராக இருக்கும் வாய்ப்புக் கொண்ட நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், எந்தவித அரசியல் அழுத்தமுமின்றித், தானாகப் பதவி விலகினார். இதை நம்ப மறுத்தால் நீங்கள் அசலான இந்தியராக இருக்க முடியாது. எனவே தலைமைத் தேர்தல் ஆணையரை மட்டும் கொண்டிருந்த இந்தியத் தேர்தல் ஆணையத்தை ”வலுப்படுத்த” வேண்டிய தலையாய பணி மோடி அவர்களின் மீது சுமையாக இறங்கியது. ஏற்கனவே தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுச் சட்டத்தைத் திருத்தி., இந்திய உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதிக்கு ‘கல்தா’ கொடுத்துவிட்டிருந்தார் புனிதர். அதன்படி மோடியும், அவரது அமைச்சரவை சகாவும், பாஜக கட்சியின் கட்சியின் உரிமையாளர்கள் இருவரில் மற்றொருவருமான அமீத் ஷாவும், தீர்மானிப்பவர்களே தேர்தல் ஆணையர்கள் ஆக முடியும். மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழுவின் மற்றொருவரான எதிர்க்கட்சித் தலைவர் வெறும் செல்லாக் காசு. எனவே ஒரு தனித்துவமான, எந்தவித அரசியல் அழுத்தங்களிற்கும் இடமளிக்காத தேர்தல் ஆணையத்தைக் கட்டமைத்துவிட்டே தேர்தல் தேதிகளை அறிவித்தார் மோடி. மன்னிக்கவும். தேர்தல் தேதியை ஊடகங்களுக்கு, மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படி, அறிவித்தது தேர்தல் ஆணையர்களே.

 செயல்படுத்திய திட்டங்களா? வாய்ப்பந்தல் அறிவிப்புகளா?

இந்திய அரசியல் வரலாற்றின் நிகரற்ற தலைவரான மோடி அவர்களின் செயல்களை , எதிர்க்கட்சிகள் எதிர்கொள்வதென்பது எப்போதுமே மாபெரும் சவால்தான். ஏனெனில் அந்த நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பால் இயங்கும் அற்புதங்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதே தனது குஜராத் ’பெருநாடகத்தை’ அரங்கேற்றிவிட்டு, பல திட்டங்களை, வாக்குறுதிகளை “அறிவிப்புகளாக“ வெளியிட்டுவிட்டுதான்  தேர்தல் தேதிகளை வெளியிட்டார். பெரும்பாலும் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர், அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தாங்கள் அறிவித்துச்,செயல்படுத்திய திட்டங்களை ஊடக வெளிச்சம் படும்படி திறந்து வைப்பது என்பது வாடிக்கையானதுதான். ஆனால் மோடி, இந்தியாவைத் தனியார்மயமாக்குவதையே கொள்கையாகக் கொண்ட மஹான், எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார் திறந்து வைக்க. மூடுவிழா நடத்தி, தனது நிழலான நண்பர் அதானிக்குத்தாரை வார்த்த ஒன்றிய அரசு நிறுவனங்களின் பட்டியலையா வெளியிட முடியும். எனவே வழக்கம் போல 2047இல் எட்டப் போகும் உயரங்களைப் பட்டியலிட்டு, புதிய வாக்குறுதிகளை ( மக்கள் நலத்திட்டங்கள் இல்லை ) அள்ளி வீசினார். உலகின் நம்பர் ஒன் பொருளாதார நாடாக இந்தியாவை ஆக்க தன்னை அதுவரை ஆட்சியில் தொடர அனுமதிக்க வேண்டினார்.

   மோடியின் ஆட்சியும் மக்களாட்சியின் மரண ஆபத்தும்.

இந்தியாவில் மக்களாட்சி மரணப் படுக்கையில் என்பதே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முதல் முழக்கம். அந்த உணர்வு மக்களாட்சி குறித்த அக்கறையும், புரிதலும் கொண்ட யாருக்கும் ஏற்படக் கூடிய ஒன்றுதான். மக்களாட்சியின் மரண அபாயம் பற்றிய எச்சரிக்கையைத் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேசிபடி இருப்பதன் அடிப்படையான சாட்சி இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களின் துர்மரணம்தான். செய்தித் தாள்கள் ஓரளவில் பரவாயில்லை. ஏனெனில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமம் தவிர்த்தவை இன்னும் முற்றாக அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. ஆனாலும் அவற்றில் எழுதும் அரசியல் விமர்சகர்கள் பலர் விலைபோய்விட்டது தெரிகிறது. இந்திய கார்ப்பரேட் ஊடகங்களில் 70% அதானி, அம்பானி கட்டுப்பாட்டில். ஓரளவில் அரசியல் கள நிகழ்வுகளை விவாதப் பொருளாக்கிய பிரனாய் ராய் அவர்களின் என் டி டி வி நிறுவனம் ஊரறிய அதானி குழுமத்தால் கைப்பற்றப்பட்டது. குஜராத் பனியா மாஃபியாவிற்கு செய்தித் தாள்களைவிட தொலைக்காட்சிகளே ஆபத்தானவை எனத் தெரியும். இன்றும், கவனமாக, கல்வி, வாசிப்பறிவு மறுக்கப்பட்டவர்களான பெரும்பான்மை வடமாநிலத்தவர்கள், தொலைக்காட்சிப் பேச்சுகளை, செய்தி அறிவிப்புகளை ’கேட்க’ அனுமதிப்பது ஆபத்து என்பதை அவர்கள் அறிவார்கள். எனவேதான் தொலைக்காட்சி ஊடகம் குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொலையுண்டு மாண்டு போனது. வேடிக்கை, செய்தித் தொலைக்காட்சிகள் மோடியின் வெற்றியை முன்னறிவித்து விட்டு, அவரது புகழ்பாடி வாக்குக் கேட்கிறார்கள். இதில் துர்நாற்றத்தின் உச்சம், மோடியை வீழ்த்துவதை 2034 தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் யோசிக்கலாமென்ற சேகர் குப்தா ( PRINT online channel ) என்ற மூத்த ஊடகவியலாளரின் ஆருடம்தான். ஒருநாளில் இவரைப் போன்றவர்கள் கவனிக்க வேண்டிய கருத்தைப் பேசுபவர்களாக இருந்தார்கள் என்பதே வேதனை.

  மோடியைத் தோற்கடிக்க முடியாதா?

ஆங்கிலத்தில் Perception Battle என்ற சொல் இதனை விளக்க உதவும். இந்த Perception என்ற ஆங்கிலச் சொல்லிற்கு நேரடியான பொருள் ‘உணர்தல்’ என்பதாகும். அதாவது ஒர் உணர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட ஒன்றின் அடிப்படையில் தொடுக்கப்படும் போர். ஆனால் மோடி விவகாரத்தில் அவரது ‘ வெல்ல முடியாதவர் ‘ என்பதான உணர்வுள்ளது என்பதே பெரும் பொருட்செலவில் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று.   தோராயமாக ‘ கட்டமைக்கப்பட்ட (போலியாக) பிம்ப அடிப்படையில் ‘ நடத்தப்படும் தாக்குதல் என இதனைப் புரிந்து கொள்ளவதே சரி. இந்தப்பிம்பக் கட்டமைப்பினை நிகழ்த்தப் பல்லாயிரம் கோடிகளை முதலாளிகள் செலவிட்டிருக்கிறார்கள். அல்லது மோடி அந்தப் பிம்பத்திற்கு முதலீடு செய்ய நிர்பந்தப்படுத்தியிருக்கிறார். ஆனால் பிரதிபலனாக மோடி இந்த நாட்டின் அரசு சார் மக்கள் சொத்துகளை அவர்கள் வசம் ஒப்படைத்திருக்கிறார்.

மோடியிடம் வெல்ல முடியாதவர் என்பதற்கான எந்தத் தகுதியாவது வெளிப்பட்டிருக்கிறதா? இல்லவே இல்லை என்பதுதான் பதில். ஒரே ஒரு செய்தியாளர் சந்திப்பைக்கூட எதிர்கொள்ள இயலாத மனிதரை எந்தச் செய்தியாளரும் இடைமறித்து ஒரு கேள்வியைக் கேட்க முடிந்ததில்லை என்பது இயல்பான நிகழ்வல்ல. பயமுறுத்தலின் விளைவு. பத்து ஆண்டுகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய நாள்களில் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வந்தவர். ஆம், அவர் வெல்ல முடியாதவர் எனும் பிம்பம் அவரது கட்டற்ற அகங்காரத்திற்காக அமைக்கப்பட்ட ராஜபாட்டை.

கூடுதலாக, தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் சொல்லும் செய்தி என்ன? உ பி , ம பி,ராஜஸ்தான், குஜராத் தவிர்த்த மாநிலங்களில் பாஜக வின் வெற்றி வீதம் என்ன ? சென்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்றது 37 % வாக்குகள் மட்டுமே. அதுவும் மேற்படி மாநிலங்கள் தவிர மஹராஷ்ட்ரா, பிகார், கர்நாடகாவில் பெற்ற எம் பி கள் மட்டுமே மோடியின் வெற்றியைத் தீர்மானித்தவை. அதன் பின்னர் பாஜக எனும் முழுநேர தேர்தல் இயந்திரக் கட்சி, செய்ததெல்லாம் எம் எல் ஏ க்களை மிரட்டி / விலைக்கு வாங்கி நடத்திய ஆட்சி மாற்றங்களே. பாஜக ஒரு ‘வாஷிங் கட்சி’ எனவும் பெயர் பெற்றது கவனத்திற்குரியது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ‘ ரெய்டுகள்’ குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கட்சி மாறித் தன்னிடம் வரச் செய்து புனிதர் பட்டம் வழங்கியதை நாடறியும்.

இப்படிக் கேவலமாக அம்பலமான மனிதர் எப்படி வெல்ல முடியாதவர் ஆவார். அசலாக மோடி தோல்வி பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. வடக்கே ஏற்கனவே இருக்கும் இந்தி பேசும் மாநிலங்களிலேயே தொகுதிகளைத் தக்க வைக்க முடியாது என்ற அச்சம் அவருக்குத் தெரிகிறது. எனவேதான் புதிய திசையில், குறிப்பாகத் தென் மாநிலங்களில் ஏதாவது தேருமா என அலைகிறார். அதிலும் தேர்தல் பத்திர ஊழல் அம்பலமானதில் மனிதர் அரண்டு போய் இருக்கிறார். பெரும் கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் வாயைப் பொத்திக்கொண்டிருக்கலாம். லட்சக்கணக்கான யூ ட்யூப் கள் மோடியை நாரடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

தேர்தல் பத்திரங்களும் ; மோடி எனும் ஊழலே அறியாத புனிதரும்

தேர்தல் பத்திர விவகாரம் படுபயங்கரமானது. அது அறிவிக்கப்பட்ட போதே எதிர்க்கட்சிகள் தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் புனிதர் மோடி அவர்களின் முழக்கம் தேர்தல் அரசியல் களத்தில் புழங்கும் கருப்புப் பணத்தை ஒழித்து, வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆம், வழக்கம் போல எந்த விதமான விவாதமுமின்றி அரங்கேறியது. இந்தத் தேர்தல் பத்திர விவகாரத்தின் ‘ வெளிப்படைத்தன்மை’ மோடி போலவே அவ்வளவு போலியானது. உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு ‘சட்ட விரோதமான தேர்தல் நிதி வழங்கல் முறை‘ ஒருபோதும் உருவாக்கப்பட்டதில்லை. இந்தச் சட்டத்தின்படி எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை யாரும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்க்கூட அறிந்துகொள்ள முடியாது. கொடுத்தவர்களுக்கும் வாங்கியவர்களுக்கும் வங்கிக்கும்(அதிலும் எஸ் பி ஐ வங்கியின் சில கிளைகளில் மட்டும்) மட்டுமே தெரியும். அருமை, எவ்வளவு வெளிப்படையானது. பணம் வங்கியில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பது மட்டும் அதைப் புனிதமாக்கிவிட்டது.

2018இல் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான தீர்ப்பை அத்தனை ‘ தடுப்பு வேலைகளையும்’ மீறி 2024 இல் வழங்கியது உச்சநீதி மன்றம். அப்படியும் அந்த ‘ ரகசியம்’ வெளிப்பட்டு விடாமல் காக்க, எஸ் பி ஐ வங்கி மூலம் முயன்றனர் மோடியும் அமீத் ஷாவும். ஆனால் தலைமை நீதியரசர் சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட அமர்வு, மோடியின் தடுப்பணைகளைத் தகர்த்து உண்மைகளை அம்பலமாக்கிவிட்டது. 2 ஜி வழக்கின் போது 24/7 மணி நேரமும் அதைப்பற்றி மட்டுமே ஆவேசமாகப் பேசிய ஊடகவாதிகள் மூச்சடக்கிப் பிணமாகிப் போனார்கள். இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் நிரந்தரமாகச் செத்து விட்டன. மோடியின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தப் ‘பிணங்கள்’ அழுகி நாறிப் போகலாம்.

எஸ் பி ஐ வங்கி வெளியிட்டு தேர்தல் ஆணைய இணைய தளத்தில் கிடைக்கும் தகவல்கள்  செய்தித் தாள்களில் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. நேரடியாகத் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களுக்கு , குறிப்பாக மருத்துக் கம்பெனிகளுக்கு ‘கொரானா’ தடுப்பூசி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. அதானி, அம்பானி, டாடா ஆகியோருக்குப் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதைவிடக் கேவலமாக, மோடி, அமீத் ஷா இரட்டையர்கள் அமார்க் மிரட்டல் பணப்பறிப்பு வேலை செய்தது கேவலமாக அம்பலமாகியிருக்கிறது. தேர்தல் பத்திரம் பிறருக்குத்தானே ரகசியம், கொள்ளையர்கள் அறியக் கூடிய ஒன்றுதானே. எனவே பிற கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்கியவர்கள் மீது, அமலாக்கத்துறையை ஏவல் படையாக்கி நேரடியான கொள்ளையில் ஈடுபட்டது வெளிப்பட்டு ஊர் சிரிக்கிறது. இப்போது உங்களது ஊழலற்றவர் என்ற பிம்பம் நாறிப் போனதே என்ன செய்யப் போகிறீர்கள் மோடி அவர்களே.

திமுகவை ஒழிக்க சூளுரைத்த மோடி.

இந்தமுறை அவரது சூறாவளி தெற்கு நோக்கி நகர்ந்தது. குறிப்பாகத் தமிழ்நாடும் திராவிட முன்னேற்றக் கழகமும், ’திராவிட மாடல்’ ஆட்சியும் குவி மையமானது. ஒரு நாட்டின் தலைமையமைச்சர் பொறுப்பில் இருப்பவர் அரசு விழாவில் ‘ திமுக’ வை ஒழிப்பேன் எனப் பேசுகிறார். தெருமுனைப் பேச்சாளர் கூடப் பேசத் தயங்கும் மொழியில் சூளுரைக்கிறார் மோடி. ஒருவேளை நான் நாலந்தரப் பேச்சாளர்தான் என்ற தன்னிலை விளக்கமோ? போகட்டும்.  மக்கள் பேரிடர் காலத்தில் வராத, நிதி ஒதுக்கி உதவாதவர் இந்த ‘ ஒழிப்பு’ அறிவிப்பை வழங்க வந்திருக்கிறார். தலைவர் முதல்வர் தளபதியார் கண்ணியமாகக் கேட்டதை நினைவில் கொள்ளவேண்டும். ’மோடி அவர்களே நீங்கள் மக்களுக்குச் செய்ததைச் சொல்லுங்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்திய திட்டங்களைச் சொல்லுங்கள். திமுக வை அழிப்பதைப் பிறகு பார்க்கலாம்’ என்றாரே , அதுதான் அரசியல் நாகரிகம். கூடுதலாக தலைவருக்கும் தொண்டர்களுக்கும் தெரியும், திமுக வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்த வரலாறு.

திமுக, திராவிட, திராவிட மாடல் ஆட்சி ஒழிப்பில் ஏன் இத்தனை அக்கறை இந்த மனிதருக்கு? இந்தியாவின் தேர்தல் அரசியல் கட்சிகளில், சமூகநீதி, பகுத்தறிவு, சமத்துவம், சுயமரியாதை எனும் கொள்கைகளில் இம்மியும் விலகாமல், ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக இயங்கும் இயக்கம் திமுக. கொள்கை மட்டுமல்லாமல் இந்தியாவின் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் தோற்றம் கண்ட நாள் முதல் மாறாமல் ‘ உதயசூரியன் ‘ சின்னத்தைக் கொண்டிருக்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட கொள்கைவாதக் கட்சிகள் இந்த வகையில் ஒப்பானவை அல்ல. இந்தியாவில் முதன் முதலாக மாநிலக் கட்சியின் ஆட்சியை நிறுவியதும் அண்ணா தலைமையிலான அரசுதான். இதைவிடக் கூடுதலாக தொடர்ந்து ஒன்றியத்தில் அதிகாரம் குவிக்கும் தேசியவாதத்தின் எதிர்நிலையில் மாநில உரிமைகள், மாநில சுயாட்சிக் குரலை இடைவிடாமல் தொடர்வதும் இந்த மக்கள் இயக்கமே. மாநிலத்தில் சுயாட்சி ஒன்றியத்தில் கூட்டாட்சி என்ற முழக்கம் மோடியை அச்சமுறச் செய்திருக்கிறது. தேசியவாதக் கட்சிகளே ஏற்கத் தயங்கிய கோட்பாட்டை, ஹிந்துத்துவப் பெரும்பான்மை  மதவாத பாசிச அரசின் தலைமையேற்றிருக்கும் சர்வாதிகாரப் போக்கு கொண்ட மனிதரால் எப்படிச் சகிக்க முடியும்.

உண்மையாகவே பாசிச பாஜக வின் ஹிந்துத்துவப் பெரும்பான்மைவாத அரசியலாளர்களுக்குத், திமுக ஒரு பெரும் தடைக்கல் என்றால் வியப்படையத் தேவையில்லை. இந்தக் கருதுகோளை சற்றுக் கவனமாகப் பார்ப்போம். ஹிந்துத்துவப் பெரும்பான்மை வாதம் எப்படிக் களமாடுகிறது. அவர்களது பாசிசக் கோட்பாட்டு ஆசான் வீர் சாவர்க்கர் வகுத்தளித்த சட்டகம் எளிமையானது. இந்தியாவில் பிறந்த அனைவரும் ஹிந்துக்களே. ஒருவர் இஸ்லாமியராகவோ, கிறிஸ்த்தவராகவோ ‘ மாறினாலும் ‘, ’ஹிந்துதான்’. இது சாவர்க்கர் கொள்கையின் ஆரம்பம், ஆனால் பின்னர் மூளை வீங்கி விவகாரம் முற்றி முதிர்ந்து, சமஸ்கிருதத்தை பித்ரு(தந்தை) பாஷையாகக் கொள்ளாதவர்கள் மற்றும் அகண்ட பாரதம் அல்லாத நிலப்பரப்பில் தங்களது ‘ புனிதத் தலங்களைக் ‘கொண்டவர்கள் இந்தியர்களே இல்லை எனப் பினாத்தல் தொடர்கிறது. இந்த வழிபாட்டுத் தள அரசியல் அனைத்து மதங்களிலும் உண்டு. இந்த வகையில்தான் எந்தவிதத்தொடர்புமற்ற மத நம்பிக்கைகளை வலிந்து ‘ ஹிந்து’ வில் திணித்தனர் பார்ப்பன மேலாதிக்கவாதிகள். திணிப்பில் ’சமம்’ என்ற உரிமை மறுப்பு கறாராக நிறுவப்பட்டது. ஆனால் இந்தத் திணிப்பிற்கு எதிரான போக்கு பல நூற்றாண்டுகளாக இன்றைய இந்தியாவின் தொல் நிலப்பகுதிகளிலும் இருக்கவே செய்திருக்கின்றது. பௌத்தமும், சமணமும் தழைத்தோங்கிய மண்ணில், சைவமும், வைணவமும் வன்முறை வடிவிலும், அதற்கிணையான ‘ ஒதுக்கல்’ நடவடிக்கை மூலமும் தங்களை நிறுவிக் கொண்டன. ஆனாலும் ஆங்காங்கே நிறுவனமாகிய மதங்களின் போக்கை எதிர்த்த குரல்களும் ஏராளம். உடனடியான மாதிரி நமது சித்தர் மரபு. அது தவிர்த்த மாற்றுக் குரல்களும் தமிழ் மண்ணில் தொடர்ந்தபடி இருந்தன. இந்த மாற்றுகளின் அடிப்படைகள் மொழி மற்றும் இனம் என்பனவாய் இருந்தன என்பது கவனத்திற்குரியது.

இந்தியத் துணைக் கண்டத்தில் சமஸ்கிருத வேத ஹிந்து மதத்திற்கான எதிர்ப்பு பிறபகுதிகளைவிடக் கூடுதலாகத் தென்பகுதியில் நிலவியதன் ஒரு மிக முக்கியமான காரணம் தமிழின் தொன்மை என்பது மறுக்க முடியாத உண்மை. வேத ஹிந்து மத மேலாண்மைக்கெதிரான பல்வேறு போக்குகள் மராட்டியம், கன்னடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியற்றுப் போனது. நல் வாய்ப்பாக இந்த மாற்றுக் குரல்களை அரசியல் மயமாக்கியது பார்ப்பனரல்லாதார் இயக்கம். இங்கே பார்ப்பனரல்லாதார் இயக்கம் தன்னைத் தகவமைத்துக் கொண்ட விதம் கவனத்திற்குரியது. பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் அறிக்கை ( Non Brahmin Manifesto ) மிகக் கவனமாக, தெள்ளத் தெளிவாக ’ பார்ப்பனரல்லாதார் ‘ தொகுப்பை ஹிந்து மதத்தவர் எனச் சுருக்கிக் கொள்ளாமல், இஸ்லாமியர், கிறித்தவர், பௌத்தர்கள், ஜைனர்கள் எனும் பெருந்தொகுப்பாகக் கட்டியெழுப்பியது. இந்த ஆதி வேர் மிக முக்கியமான அரசியல் தொடர்ச்சிகளுக்கு வித்திட்டது. செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டுத் தலைமையை இஸ்லாமியர் ஏற்றனர். அந்த மாநாட்டில் அவரவர் மதங்களின் மூட நம்பிக்கைகளை, சடங்குகளை அனைத்துத் தரப்பினரும் விமர்சித்துப் பேசினர். பகுத்தறிவுப் பேராசன் பெரியாரின் முன்னெடுப்பு , பிற நிலப் பகுதிகளில் தொடர்ச்சியற்றுப் போன மாற்றுக் குரல்களுக்கு ஒரு தொடர்ச்சியை , அதிலும் நவீன அரசியல் தொடர்ச்சியை உருவாக்கியது. மாற்றுக் குரலிற்குச் சமூகநீதியை ஆயுதமாக்கினார் பெரியார். இந்தப் பகுத்தறிவும், சமூகநீதியும் மத அடையாளங்களுக்கு அப்பால் , ஏன் ஒரு கட்டத்தில் ’கடவுள் கொள்கை’ மறுப்பையே ஆயுதமாக்கிக் கொண்டது. சமூகநீதிக் கொள்கையின் வீச்சு மதமறுப்பை மௌனமாக அங்கீகரிக்கவும் செய்தது என்பதுதான் மாற்றத்திற்கான கலகக் குரலின் நேர்மையின் வெளிப்பாடு.

நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், சுயமரியாதைச் சமத்துவக் கட்சி, மீண்டும் நீதிக் கட்சி, திராவிடர் கழகம் என்ற போக்கின் வழியாக இறுதியாக முகிழ்ந்தது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தேர்தல் அரசியல் பங்கேற்பு இயக்கம். பார்ப்பனரல்லாதார் எனும் தொகுப்பின் மதச்சார்பற்ற, மத அடையாளத்தில் தன்னை இழக்க மறுக்கும் கட்சி எனும் அபூர்வம் திமுக. இந்தியாவின் பொதுவுடைமைக் கட்சிகளும் கடவுள் கொள்கையை ஏற்காத இயக்கங்கள்தாம். ஆனால் இந்தியாவின் ஒரே நாத்திகக் கட்சியாக, ஹிந்து விரோதக் கட்சியாக அடையாளங் காட்டப்படுவது திமுக. இது ஏன் எப்படி நிகழ்ந்தது. தேர்தல் அரசியல் கட்சியான போதே அண்ணா கடவுள் கொள்கையில் திரூமூலரின் துணையோடு ‘ ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ என்ற நிலைப்பாட்டை எடுத்தார். அதேவேளையில் பகுத்தறிவு, சமூகநீதி, தமிழ் மொழியின் தொன்மை என்ற விழுமியங்களை ‘ திராவிட அரசியலின் ‘ அடிப்படைகளாக்கி வெகுமக்கள் வாக்கரசியல் களம் கண்டார். தனது அரசியல் குவிமையம் ‘ சாமனியர்களின் அரசியல் ‘ என்றதன் மூலம் எளிய மக்களின் நலங்காக்க எளியவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இயக்கமாக்கினார் அண்ணா. சாமானியர் அரசியல் சமூகநீதிக்கான களமாடலின் பகுதியாகக் கடவுள்/ சாதி முன்னுரிமையைக் கைவிட்டது. தொடர்ந்த அரசியல் களமாடலில் பெருந்தொகுப்பானவர்கள் பங்கேற்பு பலநிலைகளில் விரிந்தபடி இருந்தது. கொள்கையாளர்கள், செயல்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், வாக்காளர்கள் எனும் விரிவின் தளம் பலதரப்பட்டவர்களின் தொகுப்பாவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆனால் தலைமையின் உறுதியான கொள்கை நிலைப்பாடு இந்தப் பெருந்தொகுப்பிற்கான அதிகாரப்பூர்வமான குரலாகப் பெரியாரிய சமூகநீதிக் கொள்கைகளை, அண்ணாவின் அரசியல் கொள்கைகளை, கலைஞரின் திராவிட மாடல் ஆட்சி வடிவைத் தங்கள் வழிகாட்டியாக முன்மொழிந்தபடி இருக்கும்போது, அதுவே அந்தப் பெருந்தொகுப்பின் குரலாகவும் மாறுவதைக் காண முடியும். ஒன்றை மறுப்பதற்கில்லை, ஆம் இயக்கத்தின்  பெரும்பான்மையினர் மதநம்பிக்கை கொண்டவர்களே எனினும், மதச் சார்பின்மை என்ற கொள்கையை ஏற்பவர்களே. கூடுதலாக ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்தில் அடைபட மறுப்பவர்கள்,   மதமறுப்பாளர்கள்  என்ற அடைக்கு அஞ்சுபர்வகள் இல்லை என்பதே கருத வேண்டியது.

இந்திய அரசியலில் எளிதாக ஹிந்து பெரும்பான்மைவாத நோய்த் தொற்றால் பிணிப்படுத்த முடிந்த சங்பரிவார் ஹிந்துத்துவர்களால் இங்கே , இந்தப் ‘ பெரியார் மண்ணில் ‘ அந்த நோய்த்தொற்று பரவ மறுப்பதைப் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ இயலவில்லை. எனவேதான் மோடியின் இயலாமை வெளிப்பாடான ‘அழிப்பேன்‘ எனும் அசட்டு ஆணவக் குரல். அவர்களால் இந்த மண்ணின் வேர்களில் விஷம் பாய்ச்ச இயலவில்லை. நாக்பூர் சங்பரிவாரின் ஹிந்துத்துவ மேலாதிக்கவாதம் ஆரிய வேதப் பார்ப்பனர்களுக்கானது என்பதை இங்கே தெளிவுபடுத்தி ஒரு நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது. சனாதன ஹிந்துத்துவப் பெரும்பான்மைவாத அரசியல் எந்தச் சிறுபான்மையினரை எதிரிகளாகக் கட்டமைக்க முனைகிறதோ அவர்கள் ஏற்கனவே இங்கே எங்கள் உடன்பிறப்புகளாகி வெகுகாலம் ஆகிவிட்டது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அது புனைவாகக் கட்டி எழுப்பப்பட்டதன்று. மொழி, பண்பாட்டு மூலங்களினின்று கிளைத்தது. உங்கள் பிளவுவாதப் பொய்களை அம்பலமாக்கியாயிற்று. மதச்சார்பின்மை இங்கே எப்போதும் கொள்கையாகவோ. கோட்பாட்டுச் சட்டகமோ வகுத்தளித்தது அன்று. அது திராவிடத்தமிழர் வாழ்வுமுறை. அது உங்களுக்கு ஒரு போதும் புரியாது மோடி அவர்களே. ஏனெனில் இது பெரியார் மண்.

தேர்தல் விதிமுறைகளும் மோடி அரசின் அடாவடியும்

வழக்கமாகத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் ஒன்றிய/ மாநில ஆட்சிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். எந்த நடவடிக்கை எடுப்பதானாலும் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால் நடப்பது என்ன? மோடி/ அமீத் ஷா ஏவல் படைகளான அமலாக்கத்துறையும், சிபிஐயும் தங்கள் அதிரடியைத் தொடர்ந்தபடி இருக்கின்றன. தில்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலைக் கைது செய்து சிறையிலடைத்து முடக்கிவிட முயல்கிறது. இந்தியா கூட்டணியின் இன்னொரு முதல்வர் ஜார்கண்ட் மாநில ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.  தேர்தல் காலத்தில் மாநில முதல்வர்களும், இதர கட்சிகளின் அமைச்சர்களும் சிறையில். தில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஓராண்டாகச் சிறையில். தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளையாவது வென்று விடவேண்டுமென்று என்ற வெறியில் செந்தில் பாலாஜியை ஒரு சில்லறை வழக்கில் அடைத்து நாடகமாடுகிறது மோடியின் ஆட்சி. பாஜக விற்கு எந்த தேர்தல் நடைமுறை விதிகளும் இல்லை. மோடிதான் தலைமைத் தேர்தல் ஆணையர் என்பது போல நடக்கின்றன செயல்கள்.

இப்போது இறுதியான கேள்வியைக் கேட்டுக்கொண்டு தொடர்வோம். மோடியின் செயல்கள் ‘ வெல்ல முடியாத ‘ அரசியல் தலைவரின் நடவடிக்கைகளா? இல்லை தோல்வியைக் கண்டு மிரண்டுபோன மனிதரின் நடுக்கமா? மீண்டும் மோடி வந்தால் நாடு என்னவாகும் என்பது வெளிப்படை. ஏற்கனவே காஷ்மீரமும், வடகிழக்கும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கால் வைக்க முடியாத இடங்களாகி விட்டன. இந்திய ஒருமைப்பாட்டை பாஜக வின் மதவாத அரசு வலிமைப்படுத்தியிருக்கிறதா? இல்லவே இல்லை. சட்ட மீறலைத் தினசரி நடவடிக்கையின் பகுதியாக்கித் தாண்டவமாடுகிறது சங்பரிவார் கூட்டம். நேர்மையாக இந்தியாவின் நலனை, ஒருமைப்பாட்டை, வளர்ச்சியை விரும்புவோர் மோடி தொடர்வதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.

சனாதனத்தின் பெயரால் நடத்தப்படும் நாடகங்கள், அவமானகரமான செயல்கள் நாட்டை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கின்றன. சனாதனத்தின் இயங்குதளமான அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு மக்களாட்சியின் முதல் குடிநபர் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்கள் அழைக்கப்படவில்லை. காரணம் ஒப்பற்ற , உன்னத சனாதனத்தீட்டு. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பிற்கும் அவர் அழைக்கப்படவில்லை என்பதை என்னவாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறது இந்தச் சனாதன அரசு. சனாதன விதிகளின்படி இந்தியாவின் 90% மக்கள் விலக்கப்பட்டவர்கள் எனில், யாருக்கானது இந்திய மக்களாட்சி. இந்த லட்சணத்தில் தேர்தலுக்கு முன்னர் அவசரமாக மக்கள் குடியுரிமைச் சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்றன. நாட்டின் மக்கள் தொகுப்பைப் பிளந்து, நிலப்பகுதிகளைக் கத்தரித்துவிட்டு நடக்கிறது இந்த மக்கள் விரோத ஆட்சி.

இதுதான் இறுதி வாய்ப்பு. மக்கள் விரோதிகளை, பிளவுவாத அரசியலை ஒழிக்க இதுதான் இறுதி வாய்ப்பு. மோடியை வீழ்த்துவது என்பது ஒரு தனிநபரை தோற்கடிப்பது அல்ல. இந்திய மக்களாட்சியை மீட்டெடுக்கும் அரிதிலும் அரிதான கடைசி வாய்ப்பு.