ஒரு மனிதர் தாடி வளர்ப்பதெல்லாம் அவருடைய தனிமனித சுதந்திரம். அதில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை.

ஆனால் –

அந்தத்தாடி குறித்துக் கருத்துச் சொல்லும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டுதானே?

ஒவ்வொரு தாடிக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு காதல் தோல்விக் கதை இருக்கலாம். ஏதோ ஒரு சபதம் இருக்கலாம். இல்லையேல் சவரம் செய்ய அவருக்கு சோம்பேறித்தனமாகக் கூட இருக்கலாம்.

சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பான மார்ச் மாதம். கொரோனாவுக்காக ஒரு நாள் ஊரடங்கு குறித்துத் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார் மோடி. அப்போது அவரது தாடி, வழக்கமாக ஒரு சிகையலங்காரக் கலைஞரால் திருத்தப்பட்ட சிறப்பான தாடியாகவே இருந்தது.

அதன் பின்னர் தன்னுடைய கொரோனா சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக நெஞ்சு வரை தாடி வளர்த்தார். பின்னர் ராமர் கோயிலுக்காக ரிஷிகள் பாணியில் வித்தியாசமான தாடியை வளர்த்தார்.

இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காகக் கொஞ்சம் தாடியைக் குறைத்திருக்கிறார். எதிர்காலத்தில் அவரது இடுப்புக்கும் கீழே வரை தாடி வளர்ந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மோடியைப் பொறுத்தவரை தாடி, அவரது முகமூடி.

ஒரு மனிதனின் மகிழ்ச்சி, கோபம், சோகம் அத்தனையுமே அவனது முகத்தில் தெரிந்துவிடும். முந்தைய சில சந்தர்ப்பங்களில் மோடியின் முகத்தில் அவரது உணர்வுகளை எதிரிகள் கண்டு கொண்டார்கள். எனவே, தாடியை வளர்த்துத் தன்னை மறைத்துக் கொள்கிறார் மோடி.

என்னவோ வரலாற்றில் முதன்முறையாகத் தாடி வளர்த்தவர் மோடிதான் என்பதைப் போல சங்கிகள் அதையும் ஒரு பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள்.

கொரோனா பெருந்தொற்றை அறிவியல்பூர்வமாக இந்திய அரசு அணுகவில்லை, அதனால்தான் புனித கங்கையில் பிணங்கள் மிதந்தன என்று சர்வதேச ஊடகங்கள் இடித்துரைத்துக் கொண்டிருந்த காலத்தில் மோடிக்கு வளர்ந்த தாடிதான் சங்பரிவார்கள் சொல்லிக்கொள்ளும் பாழாய்ப்போன பத்தாண்டுக்கால மோடி ஆட்சியின் சாதனையாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

வரலாற்றுப் பூர்வமாகப் பார்த்தோமானால் இரண்டு காரணங்களுக்காகத் தாடி வளர்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட காரணத்துக்காகத் தாடி வளர்க்கும் பழக்கம், பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. மகிழ்ச்சிக்கு அடையாளமாகவும், சோகத்தின் குறியீடாகவும் இரு நேரிடைத் தன்மை தாடி வளர்த்தலுக்கு இருக்கிறது. அதாவது நினைத்தது நடக்க எதிர்பார்ப்போடு வேண்டுதலுக்காகவும் தாடி வளர்க்கலாம். காதல் தோல்வி உள்ளிட்ட சோகச் சம்பவங்களுக்காகவும் தாடி வளர்க்கலாம். மோடிக்கு நிச்சயமாக இந்த வயதில்காதல் தோல்வி இல்லை.

பண்டைய கிரேக்கச் சிந்தனையாளர்கள் சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் தாடி வைத்திருந்ததாகத்தான் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. ஆனால், அரிஸ்டாட்டிலின் மாணவரான மாவீரன் அலெக்சாண்டர், எப்போதும் முகத்தை முழுக்க மழித்து வைத்திருந்திருக்கிறார். மேலும், தன்னுடைய படைவீரர்களும் எப்போதும் பக்காவாகச் சவரம் செய்திருக்க வேண்டுமெனவும் ஆணையிட்டிருக்கிறார். போருக்குச் செல்பவர்கள் தாடி வைத்திருக்கக் கூடாது என்பதற்கு அலெக்சாண்டர் கருதிய காரணம் சற்றே கொடூரமானது. அதாவது எதிரிகள் தாடியைப் பிடித்து இழுத்து தலையை துண்டாக்குவதற்கு வசதியாகப் போய்விடுமாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை மொகலாய அரசை நிறுவிய பாபர், தாடியோடுதான் இருந்திருக்கிறார். மொகலாய அரசர்களிலேயே உச்ச நட்சத்திரமாக விளங்கிய அக்பர், தாடி வைத்திருந்ததாகச் சரித்திரக்கால ஓவியங்களில் சான்று ஏதுமில்லை. அவர் மீசை மட்டும் நன்றாக வளர்த்து முகத்தின் மற்ற பகுதிகளை மழுங்கச் சிரைத்திருக்கிறார். பிற்காலத்தில் மொகலாயர் சம்மந்தப்பட்ட வரலாறு, சினிமாக்களாக எடுக்கப்பட்டபோதும் அக்பராக நடித்த எவரும் தாடி வைத்திருந்ததில்லை.

இந்தியச் சரித்திரத்தில் புகழ்பெற்ற தாடிக்காரர் என்று மராத்திய மன்னர் சிவாஜியைக் குறிப்பிடலாம். மொகலாய சாம்ராஜ்யம் விரிவடைந்த நிலையில், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி, வெற்றிகரமான இந்து சாம்ராஜ்யத்தை நிறுவியவர் வீரசிவாஜி. சங்பரிவார்களின் கனவான இந்து ராஷ்டிரத்தின் நம்பிக்கையாகப் பார்க்கப்படும் மோடியின் தாடிக்குப் பின்னால் ஒருவேளை சிவாஜியின் தாக்கம்கூட இருக்கலாம்.

பொதுவாகவே தாடி என்பது அறிவுஜீவிகளின் தோற்றம் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் மட்டுமின்றி வரலாறு முழுக்கவே சிந்தனையாளர்கள் பெரும்பாலானோரின் ஒற்றுமை தாடி.

கம்யூனிஸச் சிந்தனைகளின் தோற்றுவாயான காரல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் தாடி வைத்திருந்திருக்கிறார்கள். தென்னகத்தின் சாக்ரடிஸ் என்று போற்றப்படும் நம் தந்தை பெரியார் அவர்களும், அவரது தாடியாலும்கூடப் பலரின் நினைவுகளில் வாழ்கிறார். நோபல் பரிசு பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இலக்கிய மேதை வங்கத்து ரவீந்திரநாத் தாகூரின் அடையாளமும் தாடிதான். திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்பதற்குரிய சான்றுகள் நம் வரலாற்றிலோ, இலக்கியத்திலோ இல்லை. இருப்பினும் அவருக்கு ஒரு தோற்றம் தரும்போது தாடியோடு இருப்பதைப் போலத்தான் ஓவியர்கள் சிந்தித்தார்கள்.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தாடியோடுதான் இருந்தார். பெரும்பாலான சீக்கியர்கள் இன்றும் தாடியலங்காரத்தோடுதான் காணப்படுகிறார்கள்.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் என்று பழமையான மதங்களின் குருமார்களுக்கும் தாடி, பொதுவான அடையாளமாக அமைந்திருக்கிறது.

இவ்வகையில் மதத்தைச் சார்ந்தோரும் சரி, மதத்தைக் கேள்விக்குள்ளாக்கிய சிந்தனையாளர்களும் சரி. இரு தரப்புமே ஒற்றுமை பேணிய ஒரு விஷயம் தாடி.

மோடியைப் பொறுத்தவரை தன்னை இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவராகக் காட்டிக்கொள்ள இந்தத்தாடி பயன்படலாம். வடக்கில் குருநானக், மேற்கில் சிவாஜி, கிழக்கில் தாகூர், தெற்கில் வள்ளுவர் (அல்லது பெரியார்) என்று புகழ்பெற்ற மனிதர்களின் வரிசையில் தன்னையும் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவேளை அவர் நினைத்திருக்கலாம்.

2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது மேற்கு வங்காளத்துக்குப் பிரச்சாரத்துக்குச் சென்ற மோடி, அப்படியே தாகூரின் தோற்றத்தோடு தன்னை அலங்காரம் செய்து கொண்டார். அங்கு மட்டுமல்ல. அவர் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அப்பகுதியை அடையாளப்படுத்தும் தோற்றத்தோடுதான் செல்வார். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் வேட்டி, சட்டை அணிந்து தப்பும் தவறுமாகத் திருக்குறள் சொல்வதெல்லாம் நாம் அறிந்ததுதான்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயோத்தியில் ராமர் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தன்னை ஒரு தீவிர ராம பக்தராகவும், இந்தியாவில் ராமராஜ்யம் அமைக்கும் முன்னோடியாகவும் கருதிக் கொள்ளும் மோடி, அந்த பூமி பூஜையின் போதுதான் நீளமான தாடிக்காக முதன்முறையாக வித்தியாசமாகப் பார்க்கப் பட்டார். ஓர் இந்து சாதுவின் தோற்றத்தோடு அன்று விழாவில் கலந்துகொண்டார். பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோயில் இயக்கத்துக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் எவருக்குமே அவ்விழாவில் அழைப்பு இல்லை. ராமர் கோயிலைப் பொறுத்தவரை அது தன்னால்தான் உருவானது என்கிற எண்ணத்தை எதிர்காலத்தில் மக்களிடம் விதைக்க, அந்தச் சாதுத் தோற்றம் பயன்படலாம் என்று மோடி நினைத்திருக்கலாம். ஒரு வேளை ராமர் கோயிலுக்காகவே தாடிவளர்த்து, அந்தச் சாதுத் தோற்றத்தை நிரந்தரமாக்கிக் கொண்டாரோ என்றும் கருத வாய்ப்பிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோயில் திறப்பு விழாவின் போதும்கூட கிட்டத்தட்ட அதே மாதிரி தோற்றத்தில்தான் இருந்தார் மோடி. இனி என்ன மாதிரி தாடியை அவர் முயற்சிக்கப் போகிறாரோ என்று சூதாட்ட புரோக்கர்கள் பெட்டிங் கூட கட்டி விளையாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி.

இந்தியாவுக்குத் தாடி வைத்த பிரதமர்கள் புதிதல்ல. சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், மன்மோகன்சிங் என்று ஏற்கனவே மூன்று தாடிப் பிரதமர்கள் இருந்ததுண்டு. எனினும், அவர்களில் எவருமே அவர்களது தாடியை அரசியல்ரீதியாகவோ, கொள்கைரீதியாகவோ மோடியை போல முக்கியத்துவப்படுத்தியதில்லை.

மோடியின் சாதுத் தோற்றம் அவரை எளிமையான இந்தியர்களில் ஒருவராகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று சில சங்கிகள் அரைகுறை அறிவோடு ஆரவாரம் செய்கிறார்கள்.

ஆனால் –

எந்தவோர் எளிய இந்தியருமே மோடியைப் போல விலையுயர்ந்த துணிமணிகள், சொகுசான குளிர்கண்ணாடிகள், கார்கள், விமானங்கள் என்று பயன்படுத்துவதில்லை.

தன்னுடைய ஆடம்பரத் தோற்றத்துக்கு நடிகர் அக்சய்குமாருடனான நேர்காணலில் ஒரு காரணத்தை மோடி சொன்னார்.

“பிறந்ததிலிருந்தே ஏழ்மையைச் சந்தித்த காரணத்தால் எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. அந்த மனப்பான்மையைப் போக்கிக் கொள்ளவே நான் எப்போதும் நல்ல ஆடைகளை அணிகிறேன். என்னுடைய பளிச்சென்ற தோற்றத்தை ஒரு பழக்கமாக்கிக் கொண்டேன்”

இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது அவர் 2019ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது. அதன் பின்னர் அவரது திறமையற்ற நிர்வாகத்தால் நாடு நாசமாகிக் கொண்டிருக்கும் சூழலிலோ, “நான்ஒர் ஏழை. டீக்கடைக்காரன். என் தோற்றத்தைப் பாருங்கள்” என்று இப்போது மூன்றாவது முறை வெற்றிக்காக, மக்களிடம் பரிதாபம் தேடிக்கொள்ளத் தாடியைப் பயன்படுத்துகிறார்.

மோடியின் தாடி குறித்துப் பாகிஸ்தானில் ஒரு பிரபலமான டிவியில் விவாதமே நடந்தது. அதில், பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷிதான் மோடியைத் தாடி வளர்க்கச் சொல்லி ஆலோசனை சொன்னார் என்கிற தகவல் சொல்லப்பட்டது. இயற்பியல் பேராசிரியராக இருந்த போதிலும் ஜோதிடக் கலையிலும் வல்லவரான ஜோஷி, தாடி திருஷ்டியைக் கழிக்கும் என்று மோடிக்குச் சொன்னதாக ஒரு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமே மோடிதான் என்று நம்பும் தீவிர சங்கிகள் சிலர், ‘அகண்ட பாரதம்’ அமையும்வரை மோடி, தாடியை எடுக்கமாட்டார் என்று உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடியின் தாடிக்குப் பின்னால் வேறு ஏதோ காரணம் இருக்கலாம். அல்லது இல்லாமலும்கூடப் போகலாம்.

ஆனால் –

மோடியே பலமுறை சொன்னபடி அவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்குப் பிடித்த பாடம் ‘நாடகம்’. ஒரு நாடக நடிகர், ஒவ்வொரு நாடகத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுவதற்குத்தான் விரும்புவார். இப்போது மோடி, நீண்ட தாடியோடு நடித்துக்கொண்டிருக்கும் நாடகத்தின் பெயர் ‘அகண்ட பாரதம்’.