தீபாவளி அல்லாத ஏதோ ஒரு நாளில் பட்டாசுகள் வெடித்தால் எத்தனை என்று எண்ணிவிடலாம். தீபாவளி நாளில் பட்டாசுகளை எண்ண முடியாது. தீபாவளி என்றால் அப்படித்தானே இருக்கும் என்று நாமும் லேசாகக் கடந்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். கேலிக்கூத்துகளும், ஜனநாயக விதிமீறல்களும் மற்ற ஆட்சிக்காலங்களில் தீபாவளி அல்லாத நாள்களில் வெடிக்கப்படும் பட்டாசுகள் போல இருந்தன என்றால், பாஜக ஆட்சிக்காலத்தில் தீபாவளி நாள் போல இருக்கிறது. நம்மைச் சுற்றியும் 24மணி நேரமும் நடக்கிறது. நாமும் சர்வசாதாரணமாகக் கடந்துபோய்விடுகிறோம்.

மோடியின் மிகப்பெரிய சாதனை என்பது ஜனநாயக மீறல்கள், விதிமுறை உடைப்புகள், மரபு மீறல்கள் என அத்தனையையும் மக்களின் மனதில் ‘நார்மலைஸ்’ செய்ததுதான். இந்த உளவியலில் இருந்து மீள்வதே மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கப் போகிறது. 2ஜி எனும் பொய்யான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது நண்பர் ஒருவர் இப்படி வருந்தினார், “திமுக இதில் இருந்து மீண்டுவிடும். ஆனால் மக்களின் மனதில் 1,76,000 கோடி ஊழல் என்ற வார்த்தையைப் பதிய வைத்துவிட்டார்கள். இனி இதைவிடக் குறைவான தொகையுடன் ஒர் ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அது உண்மையாகவே இருந்தால்கூட மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது,” என்றார். அவர் சொன்னதுதான் நடந்தது. அதேபோலத்தான் பாஜகவின் ஜனநாயகப் படுகொலைகளும். 

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், சாலையில் ’மாட்டுக்கறி’ கொண்டு சென்ற ஒருவரை ஒரு கும்பல் தாக்கி அடித்தே கொன்றது என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். நமக்கு மிக அந்நியமாக அந்தச் செய்தி இருந்திருக்கும். இன்று அப்படி ஒரு செய்தி வந்தால் அது வானிலை அறிக்கை போல அன்றாடச் செய்தி.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சாலையில் நடந்து செல்லும் ஒரு இஸ்லாமியரை ஒரு கும்பல் தாக்கி ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடித்தார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்படவே இல்லை. இன்று அது சாதாரணம். ஜெய் ஸ்ரீராம் என்பது கடவுளைத் தொழுவதற்கான கோஷம் என்பதில் இருந்து கொலைக்கான அறைகூவல் என்பதாக மாறி இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சாலையில் தலித் மக்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக, அடித்தபடியே கூட்டிச் செல்லும் செய்தியை நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அப்படியே தலித் மக்களுக்கு எதிரான ஒரு செயல் எங்கோ நடந்தால் அது ஊடகங்களிலும் மிகப்பெரிய கண்டனத்திற்கு உள்ளாகி பிரதமர் வரை ‘ரியாக்ட்’ செய்யும் அளவிற்குப் பேசுபொருளாகும். இன்று தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், சாடிச வன்முறைகளும் சாதாரணம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 200, 300 ஆண்களால் ஒரு பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு அவள் உடல் உறுப்புகளில் அத்துமீறி அதை வீடியோவும் எடுத்த கொடூரம் நடந்திருந்தால் அது உலகச் செய்தி. நாட்டையே உலுக்கும் செய்தி. டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணுக்கு ஒரு பேருந்துக்குள் நடந்த ஒரு கொடூரம் இன்று அங்கங்கே பெண்களுக்குத் தெருக்களில் நடக்கிறது. ஆசிஃபா போன்ற குழந்தைகளுக்குக் கோவில்களில் வைத்து நடக்கிறது. எதிர்வினைகளோ பூஜ்ஜியம். மணிப்பூர் பாஜக முதல்வரோ இன்னும் ஒருபடி மேலே போய் ”இதெல்லாம் சாதாரணம்” என்றார். எங்கோ ரஷ்யாவில், இஸ்ரேலில் நடக்கும் தாக்குதலுக்கெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கும் ’தலைமைக் கொடூரனின்’ கண்கள் உள்நாட்டுக் கொலைகளுக்கு முதலைக் கண்ணீர்கூட வடிப்பதில்லை. ஏனென்றால் இதெல்லாம் சாதாரணம். மோடியின் புதிய இந்தியாவில் இதெல்லாம் நார்மல்!

கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமில்லாமல் இன்று தமிழிசை வாக்குக் கேட்டு வீதி உலா வருகிறார். எவ்வளவு பெரிய ஜனநாயக மரபு மீறல் இது. கவர்னராக இருந்த ஒருவர் எந்த வெட்கமும் இன்றிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நிற்கிறார். மேற்கு வங்கத்தில் பொறுப்பில் இருக்கும் ஒரு நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்விட்டு பாஜகவில் சேர்ந்தார். அதுகூடப் பரவாயில்லை, தான் பொறுப்பில் இருந்தபோதே பாஜகவினரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக வேறு பேட்டி கொடுத்தார். அப்படி என்றால் அந்த ஆளின் தீர்ப்புகள் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும்! மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான உரசல்கள் உச்சத்தில் இருக்கும் சூழலில் இப்படி ’ஒரு சார்பான’ ஆள் நீதிபதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அதை ஓப்பனாக ஒத்தும் கொள்கிறார்! தமிழ்நாட்டிலும் இப்படி ஆள்கள் உண்டு. வரும் தீர்ப்புகளில் அதைத் தினமும் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் இந்த மேற்கு வங்க நீதிபதியைவிடக் கொஞ்சம் புத்திசாலிகள் என்பதால் காவியை கறுப்பு அங்கிக்குள் மறைத்துக்கொண்டு உலாவுகிறார்கள். ஆனால் தமிழிசை போன்றவர்களுக்கு அந்த அறிவோ மனசாட்சியோ இல்லை.

கவர்னர் பதவி என்பது அரசியல் பதவி அல்ல. அது அரசியலைப்புப் பொறுப்பு. அதனால்தான் ஒருவர் கவர்னராகப் பதவி ஏற்கும் முன் ஏதாவது கட்சியில் உறுப்பினராக இருந்தால் அதைத் துறந்துவிட்டுதான் பதவி ஏற்க முடியும். தமிழிசைகூட அப்படித்தான் செய்தார். ஆனால் கவர்னர் பதவியில், நடுநிலையாக இருக்க வேண்டிய ஒரு பதவியில் இருந்துவிட்டு இன்று மீண்டும் பாஜகவின் வேட்பாளராகக் களம் இறங்கி இருப்பது கவர்னர் பதவியை மட்டுமல்ல, ஜனநாயகத்தை, மக்களை, இந்தியாவை ஒருங்கே கேவலப்படுத்தும், ஏமாற்றும் செயல் அல்லவா? கவர்னராக இருந்தபோது தமிழிசையின் செயல்கள் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? ஒன்றியத்தின் வெளிப்படையான கங்காணியாக இருந்தார் என்பதுதானே அர்த்தம். ஆனால் பாருங்கள், இவ்வளவு அருவருப்பான ஒரு செயல் நம்மிடையே நடந்தும் எவ்வளவு எளிதாக இந்த ஊடகங்கள் கடந்து செல்கின்றன! ஏனென்றால், நீதிபதிகளுக்கு, அதுவும் பாஜகவுக்கு ஆதரவாகத் தீர்ப்புகளை அள்ளித்தந்த நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பிறகு பெரிய பதவிகள் கிடைக்கும் மோடி ஆட்சியில் இதெல்லாம் நார்மல்!

இதோ இங்கே ரவி என்று ஒரு நபர் இருக்கிறார். நம் முதல்வர் சொன்னதைப் போல, வெட்கம் மானம் சூடு சொரணை என்பது இருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்திருப்பார். ஏனென்றால் சட்டரீதியாக அசிங்கப்படுகிறவர்கள் ராஜினாமா செய்வது என்பது மரபு. ராஜினாமா செய்வதை எல்லாம் ஏன் சட்டமாக ஆக்காமல் மரபாக விட்டுவைத்திருக்கிறார்கள் என்றால், கொஞ்சமாவது மான ரோசம் உள்ளவர்கள்தான் இப்படியான உயர்பதவிக்கு வருவார்கள், அவர்கள் தவறுசெய்யும்போது அவர்களே வெட்கி விலகிவிடுவார்கள் என்ற எண்ணம் சட்டத்தை இயற்றியவர்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால் பொய்யிலே பிறந்த ரவி போன்றவர்கள் எல்லாம் பொறுப்புக்கு வருவார்கள் என அவர்கள் கனவா கண்டார்கள்! நீதிமன்றத்தில் அதிகமான குட்டு வாங்கிய கவர்னர் என்ற சாதனையைப் படைத்த ரவி கொஞ்சமாவது அசருகிறாரா பாருங்கள். ஏனென்றால் அவருக்கு பாஜக பணித்த பணியை இங்கே கண்ணும் கருத்துமாகச் செய்கிறார். அது திமுக அரசுக்குத் தொல்லை கொடுப்பது. வேறு எதைப்பற்றி அவருக்கு என்ன கவலை! ஜெயலலிதாவுக்குத் தவறாகப் பதவிப்பிரமாணம் செய்த பிரச்சினையில் கண்டனம் வாங்கிய அப்போதைய கவர்னர் பாத்தீமா பீவி தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் ரவியைப் பாருங்கள். குட்டு, அடி, குத்து என நீதிமன்றத்தில் எல்லாம் வாங்கியபின்னும் கூட, “அட போங்க தம்பி,” என வடிவேலு பாணியில் அலைகிறார். இதுதான் பாஜகயிசம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜனநாயகப் படுகொலை மட்டுமே வேலை என அலையும் வெட்க மானமற்ற தன்மை. இதுவும் இப்போது ரொம்ப நார்மல்.

ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது. பத்திரியாளர் சந்திப்பில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராகுல் கன்வால் கேள்வி கேட்கிறார். “நீங்கள் ஆட்சிக்கு வர யாரையும் விலைக்கு வாங்கவில்லையா? எந்தப் பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை என உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? எனத் தைரியமாகக் கேட்கிறார். அதற்கு மன்மோகன், அதாவது யாரை இந்த ஊடகங்கள் மவுனப் பிரதமர், பலவீனமான பிரதமர் என்றெல்லாம் கேலி பேசியதோ, அந்தப் பிரதமர் பதில் சொல்கிறார். “எனக்குத் தெரிந்து அந்த மாதிரியான எந்த விஷயங்களும் நடக்கவே இல்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,” என்று. இன்று இந்த ராகுல் கன்வால் என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? அம்பானி வீட்டில் யானைகளுக்கு அவர்கள் செய்யும் உணவை “நான் இதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்க்கவா?” எனக் கேட்டு ருசிபார்த்துக் கொண்டிருக்கிறார். மன்மோகன் சிங்கிடம் எழுந்து துணிச்சலாகக் கேள்வி கேட்க முடிந்ததே, இன்று மோடியிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் உள்ளனவே, ஒரே ஒரு கேள்வியையாவது யாராவது கேட்டார்களா? அவர்களிடம் நேரடியாகக் கேட்க வேண்டாம், ஒருதலைக் கேள்வி போல மீடியாவிலாவது கேட்கலாம் அல்லவா? அட, “டீமானிடைசேஷன் தோல்வி என்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றீர்களே, இன்று 2000 ரூபாயை ஒழித்துத் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளீர்களே?” எனக் கேட்கலாம் அல்லவா? உடனே யோசித்தால் கூட இதுபோல் ஆயிரம் கேள்விகள் தோன்றுகின்றன. ஆனால் மீடியா எப்படி இருக்கிறது பாருங்கள். அதேபோலப் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு ஒரே ஒருமுறை கூட வராத ஒரே பிரதமர் என்ற சாதனையையும் மோடி படைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவ்வளவு பயம். கேள்வி என்றாலே வாயிலும் வயித்திலும் போகும் அளவுக்குப் பயம். ஆனால் இவர்தான் பலமான பிரதமராம், விஸ்வகுருவாம்! மக்களை எவ்வளவு முட்டாள் ஆக்குகிறார்கள். ஆனால் பாருங்கள் மோடி ஆட்சியில் இதுவும் நார்மல்!

நான் பேசும் பொதுக்கூட்டங்களில் மறக்காமல் சொல்லும் ஒரு வரி “நாடு நாசமாப் போச்சு” என்பதுதான். இதைவிடவும் இந்தியாவின் இப்போதைய நிலையை வர்ணிக்க வேறு வார்த்தைகளே இல்லை. ஏனெனில் பாஜகவின் ‘பஸ்’ பரவாத துறையே இல்லை எனும் அளவுக்கு இன்று நாடு அழுகிப்போயிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி நடக்கும். அதுபோல நிறுவனங்களிடம், வருமானவரித்துறையையும் அமலாக்கத்துறையையும் அனுப்பி வழிப்பறி செய்து சம்பாதித்துள்ளது பாஜக. அதனால்தான் பல தசாப்தங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸைவிட அதிகமான பணத்தையும், எண்ணிலடங்கா ஆடம்பர அலுவலகங்களையும் வைத்திருக்கிறது பாஜக. மோடி ஒரு வழிப்பறிக் கொள்ளையன் என்பதை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது தேர்தல் பத்திர ஊழல்!

இதோ காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை உள்ளே அடைத்திருக்கிறார்கள். கேட்க நாதி இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகி இருக்கிறது. 400க்கும் மேலான சீட்டுகளில் ஜெயிப்போம் என்று சீன் போட்ட 56 இன்ச் புழுவிற்குப் பயம் முத்திப்போய் இருக்கிறது. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கான கடைசி வாய்ப்புத்தான் இந்தத் தேர்தல் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அவர்கள் இந்தியாவைச் சுடுகாடாக மாற்ற வேண்டுமென்றால் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்புதான் இந்தத்தேர்தல். அதனால்தான் ஒட்டுமொத்த ஜனநாயக மீறல்களையும் இந்தத் தேர்தலில் கொட்டுகிறார்கள்.

ஆனால் ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். 10 ஆண்டுகளாக எல்லாச் சட்ட, ஜனநாயக, மரபு மீறல்களும் நார்மலைஸ் செய்யப்பட்டாலும் இந்த நாடு கொஞ்சமாவது நாடாக இருக்கக் காரணம் எஞ்சி இருக்கும் ஜனநாயக ஆதரவுச் சட்டங்கள்தாம், விலைபோகாமல் இருக்கும் சொற்ப அளவிலான நீதிபதிகள்தாம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாஜகவுக்குத் கடைசித் தடையாக இருக்கும் இவற்றின் மீதுதான் அவர்கள் முதலில் கை வைப்பார்கள். சட்டங்களை மாற்றுவார்கள். விதிகளைத் திருத்துவார்கள். சட்டப்பூர்வமாகக் கொலைபாதகங்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் செய்யும் வகையில் அரசியலமைப்பையே திருத்துவார்கள். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு அல்ல, இந்தியா என்ற நாட்டுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு இது. நான் கூட்டங்களில் பேசுவதை இங்கும் சொல்கிறேன், ”பாஜகவுக்கு வாக்களிப்பதும் அல்லது தனியாக நிற்கிறோம் என ஏமாற்றும் பாஜகவின் பினாமிகளான அதிமுகவுக்கோ நாதக போன்றவர்களுக்கு வாக்களிப்பதும், நம் வீட்டைக் கொளுத்த வருகின்றவர்களுக்கு நாமே மண்ணெண்ணய்க் கேனை எடுத்துக் கொடுப்பதைப் போலதான்.”

இந்தியா கடைசிக் கொம்பைப் பற்றிக்கொண்டு அதலபாதாளத்தில் கிடக்கிறது. அதை ‘இந்தியா’ கூட்டணியால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்.