மொத்த இந்தியாவையும் காவி மயமாக்கி வரும் மோடி நாட்டின் தலைநகரான டெல்லியின் அடையாளங்களையும் மாற்றி வருகிறார். டெல்லி மக்களவை வளாகத்தில் ஒரு காந்தி சிலை இருக்கிறது. நியாயமாக இந்தப் பத்தாண்டுகளில் மோடி அந்தச் சிலையைக் கடாசி விட்டு அதில் சாவர்க்கர் சிலையை வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆச்சரியமாக அதைச் செய்யவில்லை. காந்தி சிலையை விட்டு வைத்திருந்தார்.

ஏன் தெரியுமா?

பிரதமர் மோடியின் இந்தப் பத்தாண்டுகளில் நாட்டின் மொத்த எதிர்க்கட்சிகளும் இந்த காந்தி சிலையின் கீழ்தான் போராடிக் கொண்டிருந்தனர்.  எங்கே இந்த காந்தி சிலையை அகற்றி விட்டால் இவர்கள் மக்களிடம் சென்று போராடத் தொடங்கி விடுவார்கள் என்று மோடி அதை அகற்றாமல் விட்டார். இது வேடிக்கையாக நான் முன்பே எழுதியதுதான் என்றாலும் இன்றைய இந்தியா சந்திக்கும் பிரச்சனைகளுக்குப் பிரதான காரணம் இதுவே.

மோடி வீழ்த்தவே முடியாத தலைவர், பாஜக வெல்லவே முடியாத கட்சி என்ற கதையை வளர விட்டதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு. மிக எளிதாக வீழ்த்த முடிகிற ஒருவரை வளர விட்டு அது இன்று  குடியரசு விழுமியங்களுக்கே உலை வைக்கும் அளவுக்கு வளர்ந்து அனைத்தையும் அழிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. இதற்கிடையில் தேர்தல் போன்ற பாவனையில் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

”தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப்பாதை” இது  தேர்தல் அமைப்பை நிராகரிக்கக் கூடிய மாவோயிஸக் குழுக்களின் தேர்தல் பற்றிய பார்வையாக இருந்தது. மொத்தமாக இந்தத் தேர்தல் அமைப்பில் பங்கேற்கும் அனைவரையுமே திருடர்கள் எனச் சுட்டிய தீவிர கம்யூனிஸ்டுகளே இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

காரணம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவில் ஜனநாயகமும் இந்திய அரசியலைமைப்பும் இருக்குமா என்ற அச்சம்தான். முதலாளித்துவத் தேர்தல் அமைப்பில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கவேனும் நாம் இருக்க வேண்டுமே என்ற பதற்றம்தான் காரணம். அந்த அளவுக்கு அச்சம் நிறைந்த தேர்தலாக இந்தத் தேர்தல் மாறியிருக்கிறது.

இந்தியத் தேர்தல் கமிஷன் தரவுகள்படி இந்தியாவில் ஆறு தேசியக் கட்சிகளும் 57 மாநிலக் கட்சிகளும் 2 ஆயிரத்து 597 அங்கீகரிக்கப்படாத சிறு சிறு கட்சிகளும் களத்தில் உள்ளன. ஏதோ ஒருவகையில் கோடிக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சிகளின் அடையாளம் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இருக்குமா என்பதே கேள்விக்குறிதான்.

இந்தியாவில் உள்ளூராட்சித்  தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை எல்லாத் தேர்தல்களுமே திருவிழாதான். மதப்பண்டிகை போலவே மக்களும் வாக்களிப்பதை ஒரு தெய்விகக் கடமையாகவே கருதிச் செய்கிறார்கள். ஆனால் ஒரு வாக்குச் சீட்டை இயந்திரத்தின் வழியே செலுத்துவதோடு அவர்களின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதங்கள் அதை மிக மோசமான மோசடியான தேர்தல் என்பதையே உணர்த்துகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தேசியக் கட்சியாகக் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. இன்னொரு தேசியக் கட்சியாக இருந்த இடதுசாரிகள் கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஜனதாக் கட்சி உட்பட வேறு சில கட்சிகள் தேசிய அளவில் இருந்தாலும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சவால் கொடுக்கும் சக்திகளாக இல்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. சொல்லப் போனால் ஒரு தேசியக் கட்சிக்கு முதன் முதலாக விடை கொடுத்தது தமிழ்நாடுதான். கேரளத்தில் இடதுசாரிகளின் வெற்றி இரண்டு தேசியக் கட்சிகளின் ஆதிக்கங்களுக்கு வழி வகுத்தது. தமிழ்நாட்டில் முழுமையாக தேசியக் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு மாநிலக் கட்சிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன.

மோடி ஒரு பிராண்டாக மாறியது எப்படி?

2014-ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு வளர்ச்சி என்பதை முன் வைத்து குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்தவர் மோடி. ஆர்.எஸ்.எஸ் அவரைப் பிரதமர் வேட்பாளராக டெல்லிக்கு அனுப்பி அதற்குரிய வேலைகளையும் செய்தது. இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளுக்குமே  ஒரே ஒரு முகம்தான். ஆனால் பாஜகவுக்கும் ஒரு முகம்தான். அது மோடியாக முன் வைக்கப்பட்டது, ஆனால் அது ஆர்.எஸ்.எஸ் என்ற வலதுசாரி இந்துத்துவ அமைப்பின் ஒரு வெகுசனத் தேர்தல் அமைப்பு என்பதை  ஏனோ யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்றிருந்த அதிருப்திகளை மோடி பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாவது முறையும் வென்று பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்தப் பத்தாண்டுகளில்  கீழ் மட்டம் முதல் ஆர்.எஸ். எஸ் என்ற சிந்தாந்த அமைப்பையும், பாஜக என்ற அரசியல் கட்சியையும் இந்திய அரசு என்ற நிறுவனத்துடன் ஆழமாகப் பிணைத்து விட்டார்.

இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கட்டமைப்பாக மக்களவை, நீதித்துறை, தேர்தல் ஜனநாயகம்,  ஊடகங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிடுகிறோம் அல்லது நம்பிக்கொண்டிருக்கிறோம். மோடி முதன் முதலாகக் கையில் எடுத்தது இந்த அமைப்புகளை அல்ல. அவர் முதன் முதலில் ராணுவத்தை ஒற்றைத் தலைமையின் கீழ்க் கொண்டு வந்தார். மோடியின் விசுவாசிகளே ராணுவத் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. பின்னர் தேர்தல் அமைப்பின் மாற்றம், நீதித்துறையில் மாற்றம் என ஒவ்வொன்றாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். விசாரணை அமைப்புகள் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளையும் பலவீனமானவை எனக் காட்டின. 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது பாஜகவுக்கென இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டமைப்பு இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களிலும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் பாஜக இல்லை அவர்கள் குஜராத்திலும், உத்தரபிரதேசத்திலும் மட்டுமே இருந்தனர்.

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றத் துவங்கி விஸ்தரித்துக்கொண்டனர். இப்போது பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சி செய்கிறது. இந்திய வாக்காளர்களில் வெறும் 30 சத வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் பாஜக எப்படி இத்தனை மாநிலங்களில் ஆட்சி செய்கிறது?

நமக்கு மரபார்ந்த சில நம்பிக்கைகள் இருக்கின்றன. அதிலொன்று இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள் என்பதுதான். என்னதான் இருந்தாலும் பாஜக இப்படி எல்லாம் செய்யாது என நம்பினோம். இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம் ஆனால் பாஜக எதை எல்லாம் செய்ய மாட்டார்கள் என நினைத்தோமோ அதை எல்லாம் செய்து முடித்து விட்டார்கள். ராமர்கோவில், காஷ்மீர் 370 சிறப்புச் சட்டம் ரத்து, இன்னும் எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டும்தான். அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில் இந்தத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மிக முக்கியமானது.

அதை எல்லாம் மனத்தில் வைத்துத்தான் 400 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். உண்மையில் 400 தொகுதிகளில் வென்றால் அவர்கள் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிய மதச்சார்பற்ற அரசியல் அமைப்பை மாற்றுவார்கள். மற்றவை எல்லாம் மிக எளிதாகச் செய்யக் கூடிய வேலைகள்.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான சட்டத்திருத்தங்களை பாஜக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. சீர்படுத்தும் அமைப்புகளையும் விசாரணை அமைப்புகளாக மாற்றியது. அமலாக்கத்துறை, ஐ.டி. தேர்தல் பத்திர நன்கொடை எனச் சத்தமில்லாமல் நடந்த சட்டத்திருத்தங்களின் விளைவை இன்று இந்தியா அனுபவிக்கிறது.

தேர்தல் பத்திரங்களின் மூலம் பத்தாயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது பாஜக, தேர்தல் கமிஷனரை நியமிக்கும் உரிமையை பாஜக தனக்கேயான தனியுரிமையாக்கியுள்ளது. குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லாவிட்டாலும் கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்கத்துறையும், போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறையும் கொண்டுள்ளது. குற்றப்பத்திரிகையை 90 நாள்களுக்குள் செய்யாவிட்டாலும் ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறை வைக்கும் அளவுக்குக் கொடூரமான அமைப்புகளாக இவை மாற்றப்பட்டு விட்டன. அதிகாரம் பொருந்திய உச்சநீதிமன்றத்தையே பலவீனமாக்கி இந்த அமைப்புகளை பாஜகவின் காவல்நிலையங்களாக மாற்றி விட்டார் மோடி.

ஒரே மாத இடைவெளிக்குள் இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாடு முழுக்க எழுத்தாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், சமுகச் செயற்பாட்டாளர்களும் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. “இந்திய மக்களில் 20 சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் எங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 2 ரூபாயைக் கூட எங்களால் எடுக்க முடியவில்லை. தேர்தல் விளம்பரங்களுக்குள், மாநிலத் தலைவர்களுக்கு பிளைட் டிக்கெட் போடக்கூடக் காசில்லாமல் இருக்கிறோம். இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய்” எனக் கொதித்துப் போய் காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள்.  அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட ஒரு கட்சியின் நிலையே மோடியின் இந்தியாவில் இதுதான்.உண்மையில் மோடியை மிக எளிதாக வீழ்த்தியிருக்க முடியும் எதிர்க்கட்சிகளின் போராட்டமின்மை, பத்தாண்டுகளில் இந்தச் சட்டத்திருத்தங்களின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்ளாமை. ஒருங்கிணைப்பின்மை, நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்காமை என வாய்ப்பை நழுவ விட்டு விட்டு இப்போது வாசல் வரை வந்து விட்ட டாங்கிகளுக்கு நடுவில் அன்பின் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மிசாவைவிட மோசமான காலம் இது.

மோடி ஆட்சியின் கீழ் இன்றைய இந்தியாவைப் பலரும் மிசாக் காலத்துடன் ஒப்பிடுகிறார்கள். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மிசா (MISA) சட்டத்தை எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்தார். 1976-ஆம் ஆண்டு நாடு முழுக்க அதை அமல்படுத்தினார். அப்போதைய எதிர்க்கட்சியினர் லாலு, கலைஞர் கருணாநிதி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்குள் மிசாவின் கொடுமைகளை இந்திய மக்கள் குறிப்பாக வட இந்திய மக்கள் உணர்ந்து இந்திராகாந்தியை வீட்டுக்கு அனுப்பினார்கள். 1978-ஆம் ஆண்டு 9-ஆவது அட்டவணையில் இருந்து இச்சட்டமே நீக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அதிகாரக் குவிப்பு நோக்கங்களுக்கு அப்பால் மிசாவுக்கு வேறு நோக்கங்கள் இல்லை,மேலும் மிசா மதத்தோடு இணைக்கப்படவில்லை. அதனால் மிசாக் காலக் கொடுமைகளைக் கடந்து வரவும் முடிந்தது, இந்திரா காந்தியை மிசாவுக்காகத் தண்டிக்கவும் முடிந்தது. அன்று ஒரே ஒரு மிசா சட்டம் இருந்தது. இன்று ஏராளமான மிசா சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இந்து மதத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் ஒவ்வோர் அமைப்பும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் அமைப்பாக உருவாகி நிற்கிறது. இந்தப் பத்தே ஆண்டுகளில் பல தேசியக் கட்சிகள் பாஜகவில் கரைந்துவிட்டன. அல்லது பாஜகவின் நிழலில் வாழும் கட்சிகளாக மாறிவிட்டன. அன்று மிசாவுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது இன்று நீதித்துறையின் அணுகுமுறை நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்து விட்டது. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதி முக்கியமான வழக்குகளில்கூட நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஆதரவான போக்கையே கொண்டிருந்தது. தேர்தல் கமிஷனரை நியமிக்கும் அதிகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விலக்கி வைக்கும் நடைமுறையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் அதன் பாதகத்தை அனுபவிப்பது அரசியல் கட்சிகள். இதை எல்லாம் பேசுவதற்கான ஒரே ஓர் அமைப்போ தீர்ப்பாயங்களோ இன்றைய இந்தியாவில் இல்லை.

தேர்தல் களம்

மிகவும் நெருக்கடியோடும் சிக்கல்களோடும் அதிகார நெருக்கடிகளோடும் நடைபெறும் இந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு அல்லது பாஜகவின் சாதனை என்ற வார்த்தையே களத்தில் இல்லை. மோடி அரசு என்றுதான் ஒன்றிய அரசு நிறுவனங்களே விளம்பரங்கள் கொடுக்கின்றன. புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றுதான் அவர்கள் புதிய கோஷத்தை வைக்கிறார்கள். 400 தொகுதிகளை இலக்கு வைத்துள்ள பாஜகவின் எண்ணங்களுக்கு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் மூலம் வடிவம் கொடுத்தன.

இந்தியா கூட்டணியைப் பலவீனமாக்கிக் காட்டும் ஊடகங்களின் சித்திரங்களுக்கு அப்பால் இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக  உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின், ஆம் ஆத்மி,காங்கிரஸ், சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ் என இந்தியாவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் முதன் முதலாக இணைந்து எதிர்கொள்ளும் தேர்தலாக இது  உள்ளது.

துவக்கத்தில் புதிய நாடாமன்றக் கட்டடத் திறப்பும்,  ராமர்கோவில் திறப்பும் தமக்கு 400 தொகுதிகளை வென்று கொடுக்கும் என நினைத்த மோடி பாஜகவுக்குக் கூட்டணி தேவை இல்லை என்றே கருதினார். நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை  ஒரு புதிய குடியரசின் உருவாக்கம் போல மோடி காட்ட முயன்றார். மோடியின் எல்லா நிகழ்வுகளும் சடங்குகளும் இந்திய மக்களை நம்பவைக்கும் முயற்சி அல்ல, அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. கடந்த பத்தாண்டுகளில் அவர்  தரித்த  பேரரசன் வேடம், முனிவர் வேடம், தலைமை பீடாதிபதி வேடம், ராமரை அர்ப்பணிக்கும் அர்ச்சகர் வேடம்  என அனைத்தும் இந்துக்களை நம்பவைக்கும் முயற்சி. இந்து தேசியவாதத்தின் அடையாளப் பிம்பம். ஆனால் துரதிருஷ்டமாக இதை அனைத்து இந்துக்களும் பெரும்பான்மை இந்துக்களும் நம்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. மோடியின் அரசியல் நாடகங்களில் இதுவும் ஒன்று என்பதாகவே வட இந்திய மக்களே போதுமான ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. அதன் பின்னர்தான் பாஜக வெற்றி பெற வலிமையான கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்தது. ஆனால் அதற்கு மேற்குவங்கத்தை தவிர ஏனைய எல்லா மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தனது  கூட்டணியை இறுதி செய்து விட்டது.

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பாஜகவால் இன்றுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. அதைவிட முக்கியமானது மோடியின் என்.டி.ஏ கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மோடியின் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் சிபி ஐயும் பெரிய கட்சிகளை உடைத்து மோடியிடம் ஒப்படைத்த கட்சிகள். தலைமைக்குத் துரோகம் இழைத்துத் தன்னோடு வந்தவர்களுக்குரிய நியாயத்தைக்கூட பாஜக செய்யவில்லை. மகாராஷ்டிராவில் ஷிண்டேவையும், அஜித் பவாரையும், பிகாரில் பராஸ் பாஸ்வானையும், நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தவர்களையும் நட்டாற்றில் விட்டிருக்கிறது பாஜக. இந்தியா முழுக்க பிராந்திய வாரியாகச் செல்வாக்குப் பெற்ற இந்தக் கட்சிகளின் வாக்குவங்கியைத் தன்னுடையதாக மாற்றி வெல்வதே பாஜகவின் வெற்றிச் சூத்திரம்,

எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மையை இழந்தது ஏன்?

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்தான் கடந்த 55 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றன. 1967-ஆம் ஆண்டு தேசியக் கட்சிகளுக்கு விடை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிலிருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவை உருவாக்கினார். அதிமுகவுக்கென்று சிந்தாந்தப் பின்புலங்கள் எதுவும் இல்லை.  பிம்ப அரசியல் வழியே நகர்ந்து வந்த அதிமுக 80 –களில் சில சாதியினரின் நலன்களுக்காகவும், 2000 மில்லேனியம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு நலன் என்ற அடிப்படையிலும் செயல்பட்டது. ஆனால்  அதிமுகவின் இருப்பே திமுக எதிர்ப்பு, கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் உருவானதுதான். அதன் பிம்ப அரசியல் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டதாகவே தெரிகிறது.

அதிமுக என்ற கட்டமைப்பின் 90 சதம் எடப்பாடி பழனிசாமியின் கைகளில் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டமைப்பு எத்தகையது என்பதும்  முந்தைய தலைவர்களுக்கு இருந்த கவர்ச்சிகரமான அம்சங்கள் எதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாமல் இருப்பதும் அவரது பலவீனம். ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னை ஒருவர் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் துரதிருஷ்டமாகத் துரோகத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியை இன்று   தமிழ்நாட்டு மக்களோ அதிமுக தொண்டர்களோகூட நம்பவில்லை.

ஜெயலலிதாவிடம் இருந்து இரவோடு இரவாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த சசிகலாவைத் தடுத்து பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். பின்னர் பன்னீர் சசிகலாவுக்குத் துரோகம் செய்தார். அவரைச் சிறைக்கு அனுப்பும் உத்தரவு  வந்தபோது நம்பிக்கைக்குரிய  விசுவாசி என நம்பிப்  பழனிசாமியிடம் ஆட்சியை  ஒப்படைத்துவிட்டு  ஊழல் வழக்கில் சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்குத் துரோகம்  செய்தார். ஆனால் இது அனைத்தின் பின்னாலும் பாஜக இருந்தது. இதை முடித்துக் கொடுத்தவர் அப்போதைய பாஜக தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆளுநர் வித்யாசாகர் ராவும்.

எடப்பாடி பழனிசாமி மோடியின் தயவில் ஆட்சியில் இருந்து பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் பாஜக கூட்டணியைத் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் அண்ணாமலையின் நடவடிக்கைகளில் அதிருப்தியாகி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிமுக சொல்கிறது.

ஆனால், அரசியல் தளத்தில் அதிமுகவோ எடப்பாடி பழனிசாமியோ பாஜகவை எதிர்ப்பதில்லை. பாஜக கொண்டு வந்த காஷ்மீர் 370 ரத்து, குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் சட்டங்கள் என எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொடுத்த அதிமுக தனிநபர்களை எதிர்ப்பதை பாஜக எதிர்ப்பாகக் காட்ட முயல்கிறது.ஒன்றிய  பாஜக அரசு திமுகவுக்கு எதிராகக் கட்டமைக்கும் கதைகளையே அதிமுகவும் பேசுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் பேசும் எது ஒன்று குறித்தும் அதிமுக பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இரண்டாம் இடம் யாருக்கு என்பதற்காகவே பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக  டம்மி வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது. வென்றே ஆகவேண்டும் என்ற வேட்கை அதிமுகவுக்கு இருந்திருந்தால் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் ஆனால் பாஜக இரண்டாம் இடம் வரட்டும் என்பதற்காகப் பலவீனமான வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது.

திமுக கூட்டணி முன்பே உருவான கூட்டணி இந்துத்துவ எதிர்ப்பையும் பாஜக எதிர்ப்பையும் திவீரமாக அரசியல் களத்தில் வைக்கும் கட்சிகள் எனவே திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் பேசவே இல்லை,. அவர்களுக்கிருந்த இரண்டு வாய்ப்பு ஒன்று பாஜக அல்லது அதிமுக இதில் பாமகவைக்கூடத் தன் பக்கம் தக்கவைத்துக்கொள்வதில் அதிமுக ஆர்வம் காட்டவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலை முக்கியமான ஒன்றாகவே அதிமுக கருதவில்லை. காரணம்  டெல்லி செல்லும் எம்.பிக்கள் அவர்கள் வாக்களிக்கும் முறைகளால் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்து கொள்வதும், கட்டமைப்பில் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்ளவும், அதனால் பாஜகவுக்கு மறைமுகமாக உதவி புரிவதுமே அதிமுக எடப்பாடி பழனிசாமியின் நோக்கம்.

இதனால்தான் பாஜகவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கிறார் என்பதை எவரும் நம்பவில்லை. அந்த நம்பிக்கை உருவாகும் விதமான அரசியலும் இனி அதிமுகவில் சாத்தியமில்லை.

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயகம் ஜீவித்திருக்குமா என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும் மோடியும் பாஜகவும் மிகப்பெரிய அளவு அச்சம் அடைந்திருக்கிறார்கள்.அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தொலைக்காட்சிகள் மட்டுமே கருத்துக்கணிப்புகள் மூலம் சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கின்றன.  நிச்சயம் மோடியால் பெரும்பான்மையைப் பெற முடியுமா என்பது கேள்விக்குறி. இந்தியா கூட்டணிக் கட்சிகள் புயல் போல இந்தி மண்டலங்களில் தேர்தலை ஒரு போர் போல நடத்தினால் மோடி எளிதில் வீழ்த்தப்படுவார். கைதுகள், வங்கிக்கணக்குகள் முடக்கம் இதை எல்லாம் கடந்து மக்களை நம்பி வீதிக்கு வந்தால் வெற்றி நிச்சயம். இதுவே வரலாறு உணர்த்தும் உண்மை. ஏனெனில் எப்போதும் இந்தியாவில் ஜனநாயகத்தை நாம் வீதிகளில் பார்க்க முடியும் அதிகார பீடங்களில்  அல்ல.