“அத்தனை அபாயகரமானதா…?” என்று ஓம் கேட்டான்.

அந்த விண்கலம் உயர்செறிவுக் கரிமத்தால் ஆன கண்ணாடியால் செய்யப்பட்டது. அந்தக் குமிழிக்கு வெளியே பாறையடுக்குகளும் நீரோடைகளும் நீர்க்குட்டைகளும் மரங்களும் செடிகளும் பறவைகளும் நிறைந்த இயற்கை திகழ்ந்தது. நுரைக்குமிழிக்குள் சிக்கிக்கொண்ட இரு எறும்புகளாக அவர்கள் தங்களை உணர்ந்தார்கள். அக்குமிழி மெல்லப் பறந்து அந்த இயற்கைமேல் அலைந்தது.

அவன் அக்குமிழியின் கதவின் திறப்புத்தாழ் மேல் தன் கையை வைத்திருந்தான். அதன் எண்ணிமத் திரை அவன் கைரேகையைப் படித்து “நீங்கள் விரும்புவதென்ன?” என்று கேட்டிருந்தது

“முதலில் கையை எடுங்கள்” என்றார் விஷ்ணு. “பல தருணங்களில் நாம் ஒன்றை ஏன் செய்கிறோம் என்பதற்குக் காரணங்களே இருப்பதில்லை….”

“அத்தனை அபாயமானதா வெளியே உள்ள இந்தக் கோளம்?” என்றான் ஓம்.

விஷ்ணு புன்னகைத்து “அபாயம் என்றால் நீங்கள் கொடுக்கும் அர்த்தம் என்ன என்பதுதான் முதல் கேள்வி” என்றான். “அங்கே பூமியில் உங்கள் உயிரைப் பறிக்கும் ஒன்றை அபாயகரமானது என்கிறீர்கள், அல்லது கிட்டத்தட்ட அதற்கு நிகரான ஒன்றை உங்களுக்கு அது நிகழ்த்தவேண்டும். உடலுறுப்புகள் சிதைதல். குறைந்தது தீவிரமான அச்சத்தையாவது உருவாக்குதல். இங்கு அப்படி எதுவும் இல்லை.”

ஓம் சற்று நேரம் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர் முகத்திலிருந்த அந்த மெல்லிய சீண்டும் புன்னகைக்கு என்ன பொருள் என்று அவனால் கணிக்க முடியவில்லை.

“ஆனால் வேறொரு வகையில் இது அபாயமானது. மிகமிக அபாயமானது” என்று விஷ்ணு சொன்னார். அவருடைய புன்னகை பெரிதாயிற்று. அதில் அச்சுறுத்தல் இல்லை. ஒருவகையான சங்கடம் தெரிவதுபோன்றிருந்தது

ஓம் சொல்லுங்கள் என்பதுபோலப் பார்த்தான்.

“இங்குச் சாவு இல்லை என்று அறிந்திருப்பீர்கள்.”

ஓம் முதலில் அவர் தன்னைக் கேலி செய்கிறார் என்றுதான் நினைத்தான். அவனும் புன்னகைத்தான்.

“நீங்கள் நம்பவில்லை. நான் எதையோ கேலி செய்கிறேன் என்று எண்ணுகிறீர்கள். இல்லையா? மெய்யாகவே இங்குச் சாவு இல்லை.”

ஓம் மீண்டும் புன்னகைத்து “சாவு இல்லையென்றால்…” என்றான்.

“நான் ஏதோ குறியீட்டுப்பொருளுடன் சொல்கிறேன் என்று எண்ணுகிறீர்கள். இல்லை இங்குச் சாவு இல்லை. அதாவது இங்குள்ள எந்தப்பொருளும் அழிவதில்லை. எந்த உயிரும் மறைவதில்லை.”

“அதெப்படி?” என்று ஓம் கேட்டான். “அதற்கு வாய்ப்பே இல்லை. பொருளுலகில் அழிவு என்பது இருந்தாகவேண்டும். அது இயற்பியலின் அடிப்படை நெறி. ஆக்கம் இருக்குமென்றால் அழிவு தவிர்க்கமுடியாதது. பொருள்களின் சுழற்சி என்பது அது. சுழற்சிதான் செயல்பாடு. செயல்பாடு என்பது எந்நிலையிலும் சுழற்சியின் ஒரு பகுதிதான்…”

அவனைக் கையமர்த்தித் தடுத்த விஷ்ணு “உங்கள் உள்ளத்திலிருக்கும் எல்லாக் கொள்கைகளும் நம்பிக்கைகளும் பூமியைச் சார்ந்தவை. ஆனால் ஒன்று முற்றிலும் இன்னொன்றாக இருக்கும் அளவுக்கு இப்பிரபஞ்சம் பிரம்மாண்டமானது என்பதை மறக்க வேண்டியதில்லை” என்றார்.

தீவிரமான பார்வையுடன் விஷ்ணு தொடர்ந்தார் “நாம் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்த பிழை என்பது பிரபஞ்சத்தைப் பூமியைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றதுதான். ஒரு மணல் துகளைக்கொண்டு கடலை வகுத்துக்கொள்ள முயல்வது போல.”

ஓம் சிந்தனையற்ற விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

விஷ்ணு சொன்னார். “பூமியில் சென்ற நூறாண்டுகளுக்கு முன்பு வரை உருவான எல்லாக்கொள்கைகளும் அபத்தமானவை என்று இப்போது தெரிந்துகொண்டிருக்கிறோம். அது ஏனெனில் நாம் பிரபஞ்சம் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் கூட நம்முள் இருந்தது பூமி மட்டும் தான். பூமியின் நெறிகளின் பல்லாயிரம் மடங்கு விரிவாக்கமாகவே பிரபஞ்சத்தின் நெறிகளைப் புரிந்துகொண்டோம். பூமியில் இல்லாத ஒன்று பிரபஞ்சத்தில் இருக்கக் கூடுமென்று நம்மால் கற்பனை செய்யவே முடியவில்லை. வேறு கோள்களின் வாழ்க்கை, அங்குள்ள இயற்கை, அங்குள்ள உயிர்கள் அனைத்தையுமே பூமியின் மாற்று வடிவங்களாகவே எண்ணிக்கொண்டோம். அப்படி ஏராளமான புனைவுகளை உருவாக்கிக்கொண்டோம். ஆனால் பூமி ஒரு சாத்தியக்கூறு மட்டும்தான். சிறிதோ பெரிதோ. அதுபோலப் பல்லாயிரம் கோடி சாத்தியக்கூறுகள் தங்கள் போக்கில் நிகழ்ந்து உருவானது இந்தப்பிரபஞ்சம். இங்குள்ள எந்த நெறியும் பூமியில் உள்ளதல்ல. இங்குள்ள நெறி எதுவுமே இல்லாத இன்னும் பல்லாயிரம் கோடிக் கோள்கள்  இப்பிரபஞ்சத்தில் இருக்கக்கூடும்.”

“நாம் நம்மையன்றி எதையும் அறிந்ததில்லை” என்று விஷ்ணு தொடர்ந்தார் “நம் எல்லை அது….. பல்லாயிரமாண்டுகளாக அந்த எல்லைக்குள் சிக்கி நின்றிருந்தோம். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேறி வாழத்தொடங்கவில்லை….வெளியேறி வாழத்தொடங்கிய இந்த நானூறாண்டுகளில் நம்முடைய எல்லைகள் உடையத் தொடங்கின…. நம் உடல் இயற்பியல் ரீதியாகவே புதிய அனுபவங்களை அடைந்தது. விளைவாக நம் பிரக்ஞை தன் எல்லைகளை மீறியே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் உருவாகியது. இன்று நாம் நம் அறிதல்களைப் பிரபஞ்சம் நோக்கி விரித்துக்கொண்டே செல்கிறோம்”

“…நாமறிந்த எல்லா உண்மைகளும் பொய்யாகின்றன. எல்லாப் பொய்களும் உண்மையாகின்றன” என்றார் விஷ்ணு. “நாம் நம் இருப்பைக் கொண்டே நம் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக்கொண்டிருந்தோம். நம் இருப்பு நம் உடல்சார்ந்ததாகவே இருந்தது. ஐம்புலன்கள் சார்ந்து, நம் உடலின் இருத்தல் சார்ந்து…. இன்று நாம் நம்மைச் சார்ந்து உருவாக்கிக்கொண்ட அறிதல்கள் எதற்கும் எந்தப்பொருளும் இல்லை”

ஓம் அந்தச் சொற்களிலிருந்த தீவிரத்தால் உளம் நிலைக்கப்பெற்றான். விஷ்ணுவின் கண்களில் அவனை அடிமைப்படுத்தும் கூர்மை இருந்தது. “மெய்யாகவே சாவு இல்லையென்றால்…” என்றபின் ”எண்ணவே மலைப்பாக இருக்கிறது.”  என்றான்.

சட்டென்று சிரித்து “என் உள்ளத்தில் எழுந்த முதல் எண்ணம் என்ன தெரியுமா? சாவு இல்லையெனில் இந்தக்கோள் உயிரற்ற நிகழ்வற்ற மாறாத ஒரு வெற்று இருப்பு என்றுதான்.” பின்அவனே அதை எண்ணி வாய்விட்டுச் சிரித்து “சாவில்லையேல் வாழ்வுமில்லை என்ற எண்ணம்” என்றான்

விஷ்ணு வாய்விட்டு நகைத்து “பூமியைப் பொறுத்தவரை அது உண்மைதான் இங்கு அதில் இன்னொரு சாத்தியக்கூறு உள்ளது. சாவுக்கு நிகராக இங்கு இருப்பது நிரந்தரத்தன்மை” என்றான்.

ஓம் அதைப் புரிந்துகொள்ளாமல் பார்த்தான்.

“ஒவ்வொன்றும் அழிவை நோக்கிச் சென்று அழிந்து மீண்டும் பிறந்து மீண்டும் அழிவை நோக்கிச் செல்லும் சுழற்சியைப் பூமியில் காண்கிறோம். அவை அழிவை நோக்கித்தான் செல்லவேண்டும் என என்ன நெறி உள்ளது. அவை அழிவின்மை நோக்கிச் செல்லலாம் அல்லவா?” என்றார் விஷ்ணு

“அழிவின்மை நோக்கி எனில்…” என்று ஓம் கேட்டான்.

“ஆம், மரணமின்மை அம்ருது. அதை நோக்கிச் செல்லலாம் அல்லவா?”

ஓம் அச்சொல்லைச் சென்று தொடச் சற்றுத் தாமதமாயிற்று.

விஷ்ணு கைகளை வீசி “மீண்டும் பூமியின் ஒரு கொள்கையைத்தான் நானும் கொண்டு இங்கே போடுகிறேன். ஆனால் நான் பூமியைச் சார்ந்தவன், மனிதன். வேறொரு வழியில் என் மூளை செயல்படவே முடியாது.” என்றார்.

”இங்கு என்ன நிகழ்கிறது அதை மட்டும் சொல்ல முயலுங்கள்” என்று ஓம் கேட்டான்.

“இங்கு நம் கண் முன் இருக்கும் ஒவ்வொன்றும் இங்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஓர் ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றது. அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தம் எந்த வகையிலும் குறைவதுமில்லை கூடுவதும் இல்லை. அதன் தோற்றத்தில் உருவாகும் மாறுதல்களே இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.”

வெளியே எட்டிப்பார்த்த ஓம் மரங்களும் பாறைகளும் பறவைகளும் அவ்வப்போது புதரிலிருந்து துள்ளிச்செல்லும் சிறிய விலங்குகளுமாக அந்தக் கோளின் இயற்கையைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். “பூமியைப்போலவே…” என்றான்.

“ஆம், பூமியைச் சார்ந்த ஒருவனை ஆழ்துயிலில் இங்கு அழைத்து வந்து இந்த சாளரத்தருகே அமரவைத்தால் பூமியில் ஓரிடத்தில் இருப்பதாகவே எண்ணுவான். எந்த வேறுபாடும் இல்லை, ஒரே ஒரு வேறுபாட்டைத்தவிர. இந்த மரங்கள், செடிகள், பறவைகள், உயிர்கள் அனைத்துமே அழிவற்றவை.”

ஓம் “அவற்றின் உயிர் உடலை விட்டு அகல்வதில்லையா?” என்றான்

“இல்லை” என்றார் விஷ்ணு. “எந்நிலையிலும் அந்தப் பிரிவு நிகழ்வதில்லை”

“அவற்றின் பருவுடல்கள் எவ்வகையிலும் குறைவதோ உருமாறுவதோ இல்லையா?  அவற்றில் வளர்சிதை மாற்றமே இல்லையா?”

“இல்லை” என்றார் விஷ்ணு.

“அதாவது காலத்தொடக்கத்தில் இவை இப்படியே தோன்றி இவ்வண்ணமே இருந்துகொண்டிருக்கின்றன, இல்லையா”

“அதை நாம் அறிய முடியாது. அவற்றில் நாமறிய எந்த மாற்றமும் நிகழ்வதே இல்லை. நிகழ்ந்தமைக்கான தடயமும் இல்லை” என்றார் விஷ்ணு. “நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கே தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள். முதலில் இந்த அழிவின்மையை மனிதர்களால் உள்வாங்கவே முடியவில்லை. இங்குள்ளவை அழிவின்மை கொண்டவை என முதலில் சொன்னவர் ஆல் என்னும் அறிவியலாளர். அவர் பைத்தியக்காரர் என்றே சாகும்வரை பிறரால் கருதப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக  அக்கருத்து நிரூபிக்கப்பட்டது”

ஓம் அந்த இயற்கைக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது தன் நெஞ்சில் ஓர் உதைவிடப்பட்டதைப்போல் ஒரு திடுக்கிடலை உணர்ந்தான். இதயம் படபடக்க உடலெங்கும் குருதி கொப்பளித்து வெம்மை கூடியது. அக்காட்சி ஓர் எண்ணம் கலந்ததும் அச்சுறுத்தும் பிரம்மாண்டம் கொண்டதாக மாறியது. அழிவின்மை!

அச்சொல்லில் சென்று அறைந்து சித்தம் நிலைத்தது. அச்சொல்லை மொழியறிந்த நாளிலேயே கேட்டுவிட்டான். அக்கணம்வரை அதன் பொருளை உணர்ந்ததே இல்லை. அது இதுவரை வெறுமொரு ஓசையாகத்தான் இருந்தது. அழிவின்மை. அழிவின்மை. அழிவின்மை. ஆம் அழிவின்மை. மெய்யாகவே அழிவின்மை, முடிவின்மையின் இன்னொரு முகம். முடிவின்மையும் அழிவின்மையும் ஒன்றுதான். அதை எப்படி இதுவரை உணராமலிருந்தோம். மிக அண்மையில் இருந்தது. தொடுவதனைத்திலும், உணர்வதனைத்திலும் இருந்தது. ஆனால் கண்கட்டி அலையவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டுமிருந்தது.

இதோ இந்த உலகம் அழிவின்மையில் திகழ்கிறது.  முற்றிலும் மரணமின்மையில் நிலை கொண்டிருப்பது இது கண்களால் தொட்டுத் தொட்டு ஒவ்வொன்றையும் பார்த்தான். பூமியைப்போலவே இருந்தது. அவன் அறிந்தது போலவே திகழ்ந்தது ஆனால் அழிவற்றது. எத்தனை பெரிய வேறுபாடு! முற்றிலும் வேறொன்று. பூமியில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் உருமாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருந்தன. இங்கு அவை அவ்வண்ணமே அமைந்திருக்கின்றன. மெய்யாகவே அப்படி இருக்க முடியுமா? அந்த ஐயம் எழுந்ததும் அவை அக்கணமே சாதாரணமாக ஆயின. அவை சூடிக்கொண்ட எல்லாப் பொருள்விரிவையும் இழந்தன. வெறுமை கொண்டு கண்முன் நின்றிருந்தன.

அவன் திரும்பி “ஒருவேளை இவை மிக மெல்ல, பல்லாயிரம் கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நிதானமாக வளர்சிதை மாற்றத்தை அடையலாம் அல்லவா?” என்றான்.

விஷ்ணு “இருக்கலாம்….பற்பல கோடி ஆண்டுகளில் ஒரு சிறு மாற்றம் நிகழ்ந்தால் நம்மால் அதை அறிய முடியாது. நம் உடலின் இருப்பே நம்முடைய காலம். நம் உடலின் ஆயுள் நூறாண்டு. ஆகவே நம் பிரக்ஞை  நூறுநூறாகக் காலத்தை அளப்பது. நாம் அழிவின்மை என்று சொல்வது நமது உடல்வழியாக நாம் அறியும் காலத்தில் இவை அழிவின்மை கொண்டிருக்கின்றன என்று மட்டுமே…அதற்கப்பால் நம் பிரக்ஞை இன்று செல்லமுடியாது”

“எத்தனை அச்சுறுத்துவது எவ்வளவு கொடூரமானது” என்று ஓம் சொன்னான்.

“ஆம் மெய்யாகவே. இங்கு வரும் ஒவ்வொருவரும் இதை உணர்ந்ததுமே அகம் நடுங்கிவிடுவார்கள். அந்த நடுக்கம் அகன்ற பிறகுதான் அவர்களால் இதைப் பார்க்கவோ ஆராயவோ முடியும். பாதிப்பேர் அந்த நடுக்கம் அகலாமலேயே இங்கிருக்க முடியாமல் திரும்பிவிடுவதும் உண்டு”

“ஏன்?” என்றான் ஓம்

“உனக்கே உள்ளூர இப்போது தெரிந்திருக்கும். நாம் காலத்தை ஒவ்வொரு கணமும் உணர்ந்துகொண்டிருக்கிறோம். ஏனென்றால் நம் உடல் காலத்தில் உள்ளது. உடல் நம்மைச்சூழ்ந்த பருவெளியில் உள்ளது. காலத்தின் மீதே நம் எண்ணங்கள் நிகழ்கின்றன. காலத்தையே நாம் உலகமாக உணர்ந்துகொண்டுமிருக்கிறோம். அழிவின்மை எனில் காலமின்மை. அதை உணர்ந்த கணமே நம் அகம் செயலற்றுவிடுகிறது. அத்தனை அகநிகழ்வுகளும் பொருளிழந்துவிடுகின்றன” என்று விஷ்ணு சொன்னார்

“ஆம்” என்றான் ஓம்

“நாம் காலத்தை உடலாக உணர்ந்துகொண்டே இருப்பதனால் உள்ளத்தைக் காலத்தைக் கடந்து வீசி வீசி முன்னால் சென்றுகொண்டே இருக்கிறோம். அதன் வழியாகச் சாவு என வரும் காலத்தை வெல்வதாக எண்ணிக்கொள்கிறோம். உனக்குத் தெரியும், பூமியில் பல ஆயிரமாண்டுகளுக்கு முன் உருவான எல்லா மதங்களும் காலத்தை வெல்வதைப் பற்றியே பேசுகின்றன. இந்திய மதங்கள் மூன்றும் காலத்தையும் சாவையும் காலன் என்னும் ஒற்றைத் தெய்வமாக உருவகம் செய்துள்ளன. சிவன் எனும் அவர்களின் தெய்வத்தைக் காலகாலன் என்கின்றனர். காலனுக்கே காலன். அழிவின்மையில் நிலைகொண்டவன். தெய்வங்கள் அழிவின்மையால்தான் தெய்வமாகின்றன. அமிர்தம் எனில் சாவின்மை, அழிவின்மை….அதை உண்டவை தெய்வங்கள். மனிதன் தெய்வத்தை உருவகித்தது அந்த அமுதத்தில் ஒரு துளி தனக்கும் கிடைக்கும் என்பதனால்தான். மதநூல்கள், பக்திநூல்கள் எல்லாமே அமுதம் அமுதம் எனத் தவிக்கின்றன. மிருத்யோர்மா அமிர்தம் கமய என்ற வரியைக் கேள்விப்பட்டிருப்பாய்” என்றார் விஷ்ணு.

“ஆனால் இங்கே வந்து இந்த இயற்கையைப் பார்த்ததும் நாம் நம்மில் திகழும் காலத்தின் இரக்கமற்ற ஆற்றலை உணர ஆரம்பிக்கிறோம்” என்றார் விஷ்ணு தொடர்ந்து “நீ வரும் முன் இங்கிருந்த ரூக் ஒருநாள் தன் ஆடைகளை அவிழ்த்து வீசித் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கூவினான். ’என் செல்கள் ஒவ்வொன்றாகச் செத்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. என் செல்கள் அழிகின்றன. என் உடலெங்கும் சாவு நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் சாவு திரண்ட ஒரு பொட்டலம். நான் சாவின் ஒரு கூடாரம்.’ அவன் உள்ளம் கலங்கிவிட்டது. அவனைத் திரும்ப பூமிக்கு அனுப்பினோம். ஆனால் திரும்பும் வழியிலேயே அவன் விண்கலத்திலிருந்து கதவைத் திறந்து  வெளியேறி இருண்ட கடுவெளியில் மறைந்துபோனான்.”

ஓம் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டு விரல்களைக் கோர்த்துத் தலைகுனிந்து கண்களை மூடினான். விரல்கள் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

விஷ்ணு “அமுதம்…அழிவின்மை. அதை உணர்வதென்பது ஒரு கொடிய அனுபவம். ஆனால் எல்லாப் பேரனுபவங்களும் கொடியவை. எல்லா மெய்யான அறிதல்களும் அச்சுறுத்துபவை. இது ஒருவகைப் பேருருத்தோற்றம். நஞ்சுதான் முதலில் எழுந்துவரும். ஆனாலும் இது அறிதல். நாம் மண்ணில் மனிதர்களாகத் தோன்றிய காலம் முதல் நம்மை இயக்கியிருப்பது அறிவுக்கான துடிப்பு. கற்களைத் தட்டிப்பார்த்து நாம் அறிந்த முதலறிவு நெருப்பு. அங்கிருந்து ஒளிவேகத்தில் பாயும் விண்கலங்கள் வரை நம்மைக்கொண்டு வந்து சேர்த்தது அறிவுக்கான விழைவே. இந்த அச்சுறுத்தும் பேருருவத்தின் முன் அந்த நா நிறுத்த வேண்டியது அறிவுக்கான விழைவை மட்டுமே. அவ்வாறு நிறுத்தும் ஒன்று இது முடிவின்றி அள்ள வேண்டிய அறிவின் பெருங்குவை என்று நமக்குத் தெரியும். நமக்கு நம்மைப் பற்றி இருக்கும் பதற்றம் மறையும். ஏனென்றால் மானுடருக்கான அமுதம் என்பது அறிவு மட்டுமே… மானுடர் அழிவார்கள், அறிவு என்றுமிருக்கும்”

“அப்படி நாம் நம்மை ஆறுதல்படுத்திக்கொள்ள வேண்டுமா என்ன?”

“நான் அவ்வறுதான் எண்ணிக்கொள்கிறேன். நாம் அறிய முடிகிறதல்லவா? இதுவரை மானுட குலம் அறியாத ஒன்று இதோ நம்முன் நிற்கிறது. இதை இன்னும் இன்னும் நாம் அறிந்துகொண்டே இருக்கலாம் அல்லவா? அந்த எண்ணம்தான் என்னை இங்கே இருத்தி வைத்திருக்கிறது.”

ஓம் கண்களைத் திறந்து விஷ்ணுவிடம் ”விஷ்ணு என்றாவது நாம் அழிவின்மை கொள்ள முடியுமா?” என்றான்.

“நம்முடைய செல்களின் அமைப்பு பிறந்திறக்கும் தன்மை கொண்டது. நாம் அழிவின்மை என்பதை ஒருபோதும் அடைய முடியாது. இறக்கும் செல்களுக்கு நிகராகப் புதிய செல்களை நம் உடல் உருவாக்கிக்கொள்ள முடியும் என்றால் நாம் சாவை ஒத்திப்போடலாம். ஆனால் அது அழிவின்மை அல்ல. ஒத்திவைக்கப்பட்ட சாவு என்பதும் சாவுதான். நம்முள் புதிய செல்கள் உருவாகிக்கொண்டே இருக்குமெனினும்கூடப் பழையன கழிந்து புதியன உருவாகும் என்னும் அந்தச் சுழற்சி முடிவில்லாது நிகழும் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. அச்சுழற்சியால் உருவாகும் உடன்விளைவுகள் என்ன என்பதும் நமக்குத்தெரியாது. இன்று நாம் மானுட ஆயுளைச் சில நூற்றாண்டுகள் நீள்வதாக மாற்றிவிட்டோம். நம் முன்னோர் அறுபது ஆண்டுகளில் முதுமை அடைந்திருந்தார்கள். இன்று முந்நூறு ஆண்டுகளை எளிதாக எட்டிவிடுகிறோம். எனினும் நாம் சாவில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள்தான். அழிவின்மை என்பது முற்றிலும் வேறு.”

ஓம் பெருமூச்சுடன் அந்த வெளியுலகையே பார்த்துக்கொண்டிருந்தான். பறவைகள் வானில் சுழன்றெழுந்தன. தங்களைத் தாங்களே விசிறிக்கொண்டன. இலைகள் கூரிய முனைகள் பளபளக்கக் காற்றில் கொப்பளித்துக் குலைந்து அலைபாய கிளைகள் எழுந்தமைந்தன. அணில்கள் புல்மலர்க்கொத்துபோன்ற வால்களைத் தூக்கியபடி கிளைகளில் இருந்து கிளைநோக்கிப் பாய்ந்தன. அப்படியே பூமி. அவன் உள்ளம் ஒருகணம் பொங்கியது, மறுகணமே அச்சத்துடன் பின்வாங்கியது

சட்டென்று அவன் அவரைப் பார்த்துவிட்டான். ஒரு மனிதர்,  அவர் ஒரு பாறையில் அமர்ந்து அவர் முன் இருந்த சிறு நீர்நிலையின் ஒளிரும் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். வெள்ளிமீன்கள் அவ்வப்போது துள்ளி விழுந்து அந்தக் குட்டை வளையங்களை உருவாக்கி அணிந்துகொண்டிருந்தது.

“அவர்…அவர்…” என அவன் சுட்டிக்காட்டினான்

“அவர் இங்கு ஆய்வாளராக வந்தவர், அவரைப்பற்றிய தகவல்கள் ஆவணப்பதிவுகளில் உள்ளன”

“அவர் எப்படி அங்குச் சென்றார்?”

“மிக எளிது, இந்தக் கதவை திறந்தால் போதும்”

ஓம் கையில் ஒரு நடுக்கத்தை உணர்ந்தான்

“தொடக்ககாலத்தில் இங்கு வந்த ஆய்வாளர்கள் பலர் தெரியாமல் சென்று சிக்கிக்கொண்டனர். என்ன நிகழ்கிறதென்று தெரிந்தபின்னரும் பலர் அப்படி ஆனதுண்டு. நிறையபேர் விபத்துகளில் சிக்கி அங்கே சென்றிருக்கிறார்கள். மிகச்சிலர், வேண்டுமென்றே கதவைத்திறந்து வெளியேறி அங்குச் சென்றுவிட்டவர்கள்”

“கதவைத் திறந்தால் என்ன ஆகும்?”

“அங்கிருக்கும் பொருள்களில் ஏதேனும் ஒன்று உங்கள் உடலைத் தொட்டால் போதும்” என்று விஷ்ணு சொன்னார். “அது அழிவின்மையில் உள்ளது. அதன் தொடுகை அழிவின்மையின் தூண்டில். அக்கணமே நீங்களும் அந்த அழிவின்மையின் ஒரு துளியாக ஆகிவிடுவீர்கள்”

“என்ன ஆவேன்?”

“நான் சாம் என்ற ஆய்வாளர் அவ்வாறு சென்றதைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. அவருடைய உடலில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவருக்கு உள்ளம் இல்லாமலாகிவிட்டது…”

“உள்ளம் என்றால்..”

“அதாவது நான் அப்படி ஊகிக்கிறேன். நமக்குத்தெரிவது அவருக்கு நினைவு முழுமையாக அழிந்துவிடுகிறது என்பதே. அவருடைய தன்னிலை முற்றிலும் இல்லாமலாகிறது. அவர் வெறுமொரு உடலாக ஆகிவிட்டார் என நமக்குத் தெரியும்….”

“ஆழ்மயக்கநிலை…”

“அல்ல, அதில்கூட எங்கோ தன்னைத்தானே உணரும் ஒரு துளி பிரக்ஞை மிச்சமிருக்கும். இது முழுமையான தன்னழிவு. சாம் என்பது என்ன? அவருடைய சிந்தனைகள், நினைவுகள், கனவுகள், அனைத்துக்கும் அடியிலிருக்கும் தன்னுணர்வு, அந்நான்கும் முழுமையாக அழிந்துவிடுகின்றன…”

“விஷ்ணு, அவருக்குள் என்ன இருக்கும்?”

“நமக்குத் தெரியாது…. நாம் அறியவே முடியாது. இங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் உள்ளே தனிப்பிரக்ஞை என ஏதுமில்லை. இங்குள்ளது ஒற்றைப்பெரும் பிரக்ஞை. அதுதான் எல்லா உயிர்த்துளிக்குள்ளும் உள்ளது. “

“அதை எப்படி எவர் உணர்வது?”

“அதை அவர்கள் உணரமுடியாது. அந்தத் தொடுகை நிகழ்ந்ததுமே அவர்கள்  என அவர்கள் உணரும் தன்னிலை முற்றிலும் இல்லாமலாகிவிடுகிறது. அறிவதற்கு அவர்கள் இல்லை. ஆகவே அறிதல் இல்லை. ஆகவே அறிபடுபொருளும் இல்லை. அங்கே என்ன நிகழ்கிறது என இங்கிருந்து நாம் உருவகிப்பதே நான் சொல்வது… “

“பயங்கரம்!” என்றான் ஓம்

“ஆம் ஒருவகை சாவு…. சாவைவிடப் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமான சாவு. சாவையாவது பலவகையில் விளங்கிக்கொள்ளலாம். நம் உடல் மிஞ்சுகிறது. அது மட்கி ரசாயனங்களாக ஆகிறது. மறுபிறப்பு, சொர்க்கம், மோட்சம்… இது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இதுதான் உண்மையில் முழுமையான  அழிவு…. இருத்தல் என நாம் நினைக்கும் அனைத்தும் முழுமையாக அழிகின்றன…”

“அவர்கள் அப்படியே இருந்துகொண்டிருக்கிறார்களா?”

“ஆம், பலநூற்றாண்டுகளாக… மாற்றமே இல்லாமல்…”

“விஷ்ணு, அங்கே மகிழ்ச்சி உண்டா?”

“அவர்களின் முகம் மகிழ்ச்சியைக் காட்டுகிறது. அங்குள்ள பறவைகள் விலங்குகள் போல…”

“ஆனால் அவர்கள் அதை உணர்கிறார்களா?”

“எப்படிச் சொல்ல முடியும்?”

“மகிழ்ச்சி உணரப்படவில்லை என்றால் அது மகிழ்ச்சியா என்ன?”

“விடுதலை, நிறைவு எல்லாமே அப்படித்தானே? அவை உணரப்படாவிடில் அவை இல்லை.” என்றார் விஷ்ணு. “அங்கிருப்பது நம் பார்வையில் ஒரு மாபெரும் வெறுமை. இன்மை. திகைப்பூட்டும் முடிவின்மைகொண்ட வெறுமை…வேறொன்றுமில்லை”

ஓம் தலையை உதறிக்கொண்டான்

“அதைப் பற்றிய அச்சத்தை இங்கு வரும் ஒவ்வொருவரிடமும் ஊட்டுகிறோம். உங்களை அதற்காகவே அழைத்து வந்தேன்“ என்றார் விஷ்ணு

“ஆனால்…” என்று ஓம் சொன்னான். “ஆனால் அதன்மேல் பெரும் விருப்பமும் எனக்கு உருவாகிறது”

“ஆம், அதுவும் சேர்ந்தே இருக்கும். அந்த வெறுமையின் அழைப்பு அவ்வளவு உக்கிரமானது. இரண்டு வகை விசைகள் நம்மை உந்துகின்றன. நமது மானுடவாழ்க்கையின் துயரங்களும் சலிப்புகளும் அங்கே நம்மைச் செலுத்துகின்றன. அறிவதற்கான ஆர்வம் மேலும் விசையுடன் நம்மைச் செலுத்துகிறது”

“ஆம், மிகப்பெரிய ஈர்ப்பு என் ஒவ்வொரு தசையையும் தெறிக்கச் செய்கிறது. இந்தக் கதவைத் திறந்தே ஆகவேண்டும் என என் அகம் விம்முகிறது”

“ஒவ்வொரு கணமும் அந்நினைப்பு நம்மில் இருக்கும். அதிலிருந்து விடுபடவே நம்மால் முடியாது. ஏனென்றால் கணம்தோறும் சாவு நிகழும் நம் வாழ்க்கையிலேயே நாம் அழிவின்மையை எப்படியோ கொஞ்சம் அறிந்திருப்போம். அழிவற்றவை சில நம்முடன் உள்ளன….அறிவு உதாரணமாக. நாம் அழிவின் வழியாக அழிவின்மையை உணர்பவர்கள். அழிவை ஒவ்வொரு கணமும் உணர்ந்து, பல்லாயிரம் கணங்களில் ஒன்றில் அழிவின்மையையும் உணர்ந்து ஊசலாடிக்கொண்டிருப்பவர்கள்…ஆகவே நம் அகத்தே அழிவின்மை மீது பெரும் தாகம் உள்ளது. அதை அறியும் விருப்பத்தில் இருந்து எவரும் தப்பமுடியாது. மானுடரின் மதம், தத்துவம், ஆன்மிகம், அறிவியல் எல்லாமே அழிவின்மையை அறிவதற்கான விடாயில் உருவானவைதான்”

“ஆனால்…” என்றான் ஓம்

“அந்த ஆனால்தான் பிரச்சினையே…அறிவிற்கான தாகம். ஆனால் அறியும்நிலையை முழுமையாக உதறினாலொழிய அந்த முழுமையறிவை அறிய முடியாது….  அறிவை உதறி அறியும் ஒன்று….அபத்தமான ஒரு முரண்”

பேசிப்பேசி அவர்கள் ஓர் எல்லையை அடைந்துவிட்டிருந்தனர். அதன்பின் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஓம் வெளியே பார்த்துக்கொண்டு வந்தான். மேலும் மேலும் மனிதர்களை அவனால் பார்க்கமுடிந்தது. அவர்கள் அந்த இயற்கையின் பகுதியாக இயல்பாக அங்கிருந்தனர். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டிருப்பதை அவன் உணர்ந்ததும் துடைத்துக்கொண்டு விஷ்ணுவைப் பார்த்தான். அவர் அவனைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஓம் தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு உடல் மடிந்து தொடைகள்மேல் தலைவைத்துக்கொண்டு நடுங்கினான். அவன் தோள்களை அதிரச்செய்தபடி விம்மல்கள் எழுந்தன.

“இது இங்கு வரும் அனைவருக்கும் நாங்கள் செய்யும் சோதனையும் பயிற்சியும்…. அந்த அழைப்பை உள்ளிருக்கும் அச்சத்தால் அல்லது ஆணவத்தால் எதிர்கொள்ளவேண்டும். இரண்டுக்கும் நடுவே இருக்கும் மிச்சமே உன் தன்னிலை. அதைப் பேணிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் இருந்தால்தான் இங்கே வாழமுடியும்…” என்றார் விஷ்ணு

சட்டென்று வெறியுடன் எழுந்து ஓர் உடைந்த உறுமலோசையுடன் அந்த விசைமேல் கையை வைத்தான் ஓம். ஆனால் அவன் கை செயலற்றிருந்தது. இரும்பாலான கையை இழுத்து எடுப்பதுபோல விலக்கிக்கொண்டு மீண்டும் தன் இருக்கையில் எடையுடன் விழுந்தான்

“மிகக் கடினம்…ஒவ்வொரு கணமும் போராடவேண்டும்…  இங்குள்ள ஒவ்வொருவரும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படிப் போராடுவது என இன்னொருவர் சொல்லிக் கற்பிக்க முடியாது. உன்னுள் இருப்பது அச்சமா ஆணவமா என நீதான் அறியவேண்டும். உனக்கான பாதுகாப்பு மனநிலையை அதில் இருந்து நீ உருவாக்கிக் கொள்ளவேண்டும்…அதற்காகவே இங்கு வந்திருக்கிறாய்”

“எனக்கு அச்சமாக இருக்கிறது….தாளமுடியாத அச்சம்”

“அப்படித் தோன்றும், ஆனால் அது ஆணவமாகவும் இருக்கலாம்” என்று விஷ்ணு புன்னகைத்தார். “அச்சமே முதலில் எழும். ஏனென்றால் இது பிரம்மாண்டமான பசி கொண்ட ஒரு வாய். மயக்கும் வசீகரமும் கொண்டது. இதன் ஈர்ப்புக்கு முன் நம் அகம் ஒரு துளியினும் துளி…அணுவினும் அணு”

“ஆம்” என்று ஓம் சொன்னான்

“என்னை இயக்குவது ஆணவம்….நான் அறிபவன். அறிவினூடாக எனக்கான பிரபஞ்சத்தை உருவாக்குபவன். அது வேறெங்கும் இல்லாது, எனக்கு மட்டுமே உரியது. நான் இல்லாமலானால் அதுவும் இல்லாமலாகும். அதை என்னால் இழக்க முடியாது….” என்று விஷ்ணு சொன்னார். “இப்படி நான் சொல்லும்போது உன்னுள் ஆம் உண்மை என ஒரு குரல் உருவாகிறதா?”

“ஆம்”

“அப்படியென்றால் உன்னுள் ஆணவமும் உள்ளது”

“தெரியவில்லை…எது என்று தெரியவில்லை”

பெருமூச்சுடன் அவன் நிமிர்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். “என்ன ஒரு சித்திரவதை… கொடூரமான விளையாட்டு…மிகக்குரூரமாக நம்முடன் விளையாடுகிறது இந்த உலகம்… இந்தப் பிரபஞ்சம்…”

“அனைவரும் அதில்தான் உள்ளனர்”

“அந்த விளையாட்டில் இருந்து வெளியேற ஒரே வழிதான்” என்று கூறிய ஓம் பாய்ந்து எழுந்து கதவைத்திறக்கும் பொறியில் கையை வைத்தான்.

“வேண்டாம்… யோசி…ஒரு கணம்தான்…யோசி” என்று விஷ்ணு கூவினார்

“இல்லை….இந்த வதையை என்னால் தாள முடியவில்லை…”

கதவு திறந்துகொண்டிருக்க ஓம் சட்டென்று வலிப்பு கொண்டான். தள்ளாடிப் பின்னால் விழுந்தான். “என்னால் முடியவில்லை…என்னால் முடியவில்லை….” அவன் கதவை மூடும் பொறியை அழுத்த அது மெல்லிய ஒலியுடன் மூடலாயிற்று.

விஷ்ணு எழுந்து “இதற்குமேல் தாளமுடியாது” என்று கூவியபடி பாய்ந்து மூடிக்கொண்டிருந்த  கதவைப் பிடித்து வெளியே செல்ல முயல ஓம் அவரைப் பிடித்துக்கொண்டான். “வேண்டாம்…வேண்டாம்” என்று அவன் பதறியபடி அவரைப் பின்னுக்கு இழுத்தான்

கதவு மீண்டும் மூடிக்கொண்டது. அதைத் திறப்பதற்கான பொறி மெல்லிய ஒலியுடன் காத்து நின்றது. அதைப் பார்த்தபடி இருவரும் ஓர் உச்சநிலையில் அமர்ந்திருந்தார்கள்