வண்டியை மரநிழலில் நிறுத்தி விட்டு, கண்ணாடியில் முகம் பார்த்தாள். அவள் இடது இமை துடித்தது.

‘எதற்கு இவரைப் பார்க்க வந்திருக்கிறோம்?’ இருட்டில் வினாடிகளை எண்ணிக்கொண்டு நிற்கையில், எங்கோ தொலைவிலிருந்து நெருங்கும் வெளிச்சத்தை எதிர்பார்த்துக் கிடப்பது போல் உணர்ந்தாள். ஆனால், இந்த வெளிச்சம் நிச்சயம் புதிதாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். புதிய வெளிச்சங்களை அணுக நடுங்கி, இருட்டுள் உறையவே விரும்பும் அடிப்படைக் குணம் அவளுள் துடித்து எழுவதை அடக்க அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. நடுக்கம் ஓடும் நெஞ்சுக்கூட்டையும் மீறி, அந்தப் புதிய வெளிச்சத்தைத் தேட, அடைய அவளுக்கு வார்த்தைகளில் அடக்க முடியாத பெரும் ஆசை, தேவை இருந்தது. வண்டியை விட்டு இறங்கி தள்ளி இருந்த அந்த வீட்டை நோக்கினாள். சரியத் தொடங்கியிருக்கும் வெயில் நேரம், தெருவிலே பெரிதாக அரவம் இல்லை. ‘அர்த்தமற்ற காரியம் இது!’ என்று அவள் அறிவு அவளுள் சலிக்க, இரு துருவ எண்ணங்கள் அலைமோதுவதாலேயே தீர்வும், வெளிச்சமும் அருகிலிருப்பதாய் அவள் எண்ணினாள். வீட்டை ஒட்டி சின்னக் கடை, மதிய நேர இடைவெளியில் மூடப்பட்டிருந்தது. அது இளமாறனின் கடை. ஆறு மாதத்திற்கு முன்பு அங்கு அவள் குடியிருந்தபோது அவர் நல்ல பழக்கம். இப்போது யோசித்தாலும், சட்டென்று மனதில் எழுவது பரிவாய் ‘என்ன, சாமீ!’ என்று கேட்கும் அவர் குரல்தான். கிட்டத்தட்ட 50 வயதைக் கடந்த, அன்பானவர். இவளைக் குழந்தையாய்ப் பாவிப்பார். சிலரின் வார்த்தைகள் அவை ஒலித்த நேரத்தில் மட்டுமல்லாது, நினைக்கும் போதெல்லாம் ஒத்தடம் இடும். அவரின் வார்த்தைகளும், பிரியமும் அப்படியானது. ஒருமுறை பால் பாக்கெட்டை வாங்கக் கை நீட்டியபோது, அவள் கைகளைப் பார்த்துவிட்டு ‘என்ன சாமீ! பச்சையா நரம்பெல்லாம் தெரியுது, ஒழுங்கா சாப்பிடு சாமீ!’ என்றார். அந்தத் தெருவில் குடிபுகுந்து சில நாட்கள்தான் அப்போது ஆகியிருந்தன. ஆயினும், அவர் குரலில் ஒலித்த அந்தக் கரிசனை அவளை வெகுவாய்த் தொட்டது. ஆனால், அதைச் சொல்லும் போதுகூட அவர் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்துப் பேசவில்லை. தலை குனிந்துகொண்டே, ஏதோ வேலை செய்கின்ற பாவனையில் பேசினார். எப்போதும் நடக்கும் வழக்கம்தான் அது. அவர் பெரும்பாலும், அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேசுவதில்லை, எப்போதாவது பார்த்தாலும் அவர் விழிகள் அவள் முகத்திலேயே தங்கத் தடுமாறும். முகத்தில் சில வினாடிகளே தங்கினாலும் அந்த சில மணித்துளிகளுக்குள் அவர் நடத்தும் போராட்டம் விழிகளில் தெரியும், வினாடிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, அவர் விழிகள் கீழே இறங்கும். அதுவும் சில நொடிகள்தான், பின்பு அவசரமாய் எழும், ஒரு நொடி அவள் விழிகளைப் பார்த்து அவலமாய்க் கெஞ்சி, மன்னிப்பு கேட்கும். பின்பு, முன்பை விட நன்றாய் தலையைக் குனிந்துகொண்டு பேசி, கேட்பதைக் கொடுத்து வழியனுப்பி வைப்பார். நிமிர்ந்து பார்க்க அவரைத் தடுக்கும், வருத்தும் அச்சத்தை அவள் உணர்ந்திருந்தாள். அவளுக்கு அவஸ்தையாய் இருக்கும், இவர் இப்படித் தடுமாறுகிறாரே என்று. அவளுக்கு எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ஆனால், அந்தக் கண நேர அவஸ்தை அடுத்த நொடியே அவர் காட்டும் அன்பில் கரைய ஆரம்பிக்கும். அதனாலேயே, குனிந்துகொண்டே பேசும் அவரின் பழக்கத்துக்கு அவள் பழக ஆரம்பித்திருந்தாள். அந்தத் தெருவில் இருந்த வரை அவர் அன்பு அவளுக்கு மிகப் பெரிய ஆதரவாய் இருந்தது. ‘சாமீ’ என்று அழைப்பதும், சமயங்களில் ‘என்ன, தாயீ!’ என்று விளையாடுவதும் அவளை வெகுவாய் மகிழ்வித்தது. ஆதலால், அவரைக் கேள்வி கேட்க அவள் என்றும் நினைத்ததே இல்லை. குடும்பம் என்ற ஒன்று இல்லாமல், தனிமையில் தன் வாழ்க்கையைக் கழித்த அவரிடம் அவளுக்குப் பெரிய மதிப்பிருந்தது. தனிமையில் கழியும் அவர் வாழ்க்கையைப் பற்றியும், அதன் காரணமாகவே எழுதப்படாத அவர் வாழ்வின் பக்கங்களைப் பற்றியும் அவள் நினைத்துப் பார்த்ததே கிடையாது. அவளுக்கு இளைப்பாறுதலாய் இருந்த அவர் அன்பினைத் தாண்டி, அவரை நிறுத்திப் பார்க்க அவளுக்கு நேரமும் இருந்ததில்லை, எண்ணமும் வந்ததில்லை. ஆனால், இன்று இவரிடம் தான் வெளிச்சம் இருக்கிறது என்று அவள் வண்டியைக் கொண்டு வந்து, அவளின் பழைய தெருவில் நிப்பாட்டியிருக்கிறாள். இருளில் நிற்கும்போது இன்னமும் தோன்றியேயிராத வெளிச்சத்தின் திக்கை நோக்கி சரியாய்த் திரும்புவது போல, நேற்றைய தூக்கமற்ற இரவில், இவள் அவரைக் குறித்து எண்ணினாள். ‘என்ன சொல்ல வேண்டும், என்ன கேட்க வேண்டும்?’ என்று எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. ‘வீட்டினுள் நுழைந்து எதற்கு வந்தோம் என்று சொல்வது’ என்று யோசித்து யோசித்து அவள் சோர்ந்துவிட்டாள். மரநிழலில் அப்படியே சிறிது நேரம் நின்றிருந்தாள், அவள் பையை கை அழுத்திப் பிடித்திருந்தது. அவளுக்குக் கலக்கமாய், படபடப்பாய் இருந்தது. ‘எதற்கு இங்கே வந்திருக்கிறோம்?’ என்ற கேள்விக்குப் பதில் தேட அவளுக்குப் பயம். ஆனால், ‘நேற்றைய இரவின் அர்த்தமற்ற பயங்களும், பெரிதாய் வருத்தும் அருவருப்புணர்வும் எனக்கு வேண்டாம்’ என உறுதியாய் நினைத்தாள்.

நேற்று இரவு முதல் முறையாக ஒரு ஆணின் நிர்வாண உடலை அவள் பார்த்திருந்தாள். 19 வயதில் இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்று அவள் நினைத்துக்கூடப் பார்த்தது கிடையாது. தற்செயலாக அந்தக் காட்சியைக் கடக்கப் போன அவள் சட்டென்று உறைந்துவிட்டாள். பார்த்தது தெளிவான ஞாபகமாய் இல்லை. ஆனால், அந்த அதிர்வு அவளுள்ளேயே தங்கி விட்டது. அகன்று, அதிர்ச்சியில் உறைந்திருந்த அவள் விழிகளும், நெஞ்சு படபடப்பும் சமநிலை அடைய சற்று நேரம் ஆனது. ‘ஒரு ஆணின் உடலை ஏன் நான் இது வரை கற்பனை செய்து பார்த்ததில்லை?’ இயலாமையுடனான ஏக்கப் பெருமூச்சுகளில் அவள் கண்கள் கலங்கின. சின்ன வயது பயங்களும் நடுக்கங்களும் நினைவு அடுக்கிலிருந்து வெளிவந்து அவளிடம் தங்களது மாறாத உயிர்ப்பினைக் காட்டின. அந்த பயங்கள் மனதைப் பிசைந்த வேளையில், அந்த உடலின் மேலும், சிறு சிறு மயிர்களுக்குள் சுருண்டு, உருண்டு கிடக்கும் ஆண்குறி மீதும் கடும் வெறுப்பு வந்தது. யோசிக்க யோசிக்க அந்த வெறுப்பு மனமெங்கும் அருவருப்பாய்ப் படர்ந்தது, வாயிலெடுக்க வேண்டும் போல் இருந்தது. அவள் தன் படுக்கையில் சுருண்டு படுத்தாள். சிறுவயது ஞாபகங்கள் காட்சிகளாகப் பிசகாமல் அவளுள் கிளர்ந்து எழுந்தன. நன்கு கால்களை சுருட்டிக் கொண்டாள். நடப்பில் கவனத்தைத் திருப்ப முயன்று பார்த்தாள்.‘ஏன் இப்படி இருக்க வேண்டும்? எனக்கு இது பிடிக்கவில்லை!’ என்று திருப்பித் திருப்பிச் சொன்னாள். அந்த இரவு அவளுக்குப் பெரும் பாரமாய் இருந்தது. அவள் பிரியத்திற்குரிய ஆண்களுக்கு இப்படி ஒரு உடல்தான் இருக்கும் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த உடலையும் ஆண்குறியையும் கடுமையாய் வெறுத்தாள். அவளின் உலகை நிரப்பும் ஆண்கள் மனதில் வந்து போனபோது அந்த வெறுப்பும் அவளை வெகுவாய்க் காயப்படுத்தியது.

படுக்கையில் திரும்பி மல்லாந்து படுத்தாள், மேலே ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தவள் எழுந்து கண்ணாடி எதிரில் போய் நின்றாள். தன் உடலின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையை ஓட்டி எடுத்தாள். அவளுக்கு சட்டென்று இளமாறன் ஞாபகம் வந்தது. நிமிர்ந்து பார்க்க அஞ்சும் அந்தக் கண்களை நினைத்துப் பார்த்தாள். ‘அந்த விழிகளில் தெரிவது அச்சம் மட்டும்தானா?’ ஒரு முறை கூட அந்த விழிகளைத் தான் கூர்ந்து பார்த்ததில்லை என்பதை நினைவு கூர்ந்தாள். ‘அந்த அச்சத்திற்கும் என் அச்சத்திற்கும் இடையில் எவ்வளவு தூரம்?’ மறுபடி நிமிர்ந்து, கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டே சற்று நேரம் நின்றிருந்தாள். திரும்பி வந்து அவள் படுக்கையில் படுத்தபோது, அவளால் கால் நீட்டி அவள் எப்போதும் தூங்கும் வழக்கமான நிலையில் கண் மூடி உறக்கத்தை எதிர்பார்க்க முடிந்தது.

பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவர் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ‘எதற்கு? எதற்கு?’ என்ற கேள்வி அரித்துக்கொண்டே இருக்க, நிதானமாய் அடி எடுத்து வைத்தாள். அடைக்கப்பட்டிருந்த கடையின் ஓரமாகப் பவளமல்லி தழைத்திருந்தது. வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு, ‘யாரு?’ என்று அவர் உள்ளிருந்து குரல் கொடுத்தார். அந்தக் குரல் பழைய ஞாபகங்களை எல்லாம் இவளுக்குத் திரட்டிக்கொடுத்தது. இவள் மகிழ்வாய் ‘அங்கிள்!’ என்று குரல் கொடுத்தாள்.

“சாமீ! நீயா?”

அவர் குரல் சந்தோஷமாய் ஒலித்தது. கதவைத் திறந்துகொண்டு அவள் பரவசமாய்ப் படியேறி வீட்டினுள் நுழைந்தாள்.

“மெலிஞ்சுட்ட சாமீ இன்னும், நல்லா சாப்பிட வேணாமா, இந்த வயசுல?”

கண்கள் கவலையாய் சுருங்கின. இவள் சிரித்துக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தாள். வசதியாய் அமர்ந்துகொண்டு ஆர்வமாய் சுற்றிலும் பார்த்தாள். பெரிதாய் அந்த வீடு மாறவே இல்லை. அந்த மூங்கில் சோஃபா செட்டும், ஓரத்தில் கிடந்த மேஜையும், அதன் மேலிருந்த வரவு செலவு கணக்கெழுதும் டைரியும், பழைய செய்தித்தாள்களும், அருகிலிருந்த கொடியில் தொங்கிய துண்டும், வேட்டியும் எதுவும் மாறாமல் அப்படியே இருந்தன. மேஜையை ஒட்டியிருந்த சிறு அறையின் கதவு முக்கால்வாசி திறந்திருந்தது. அதன் வழி ஒற்றை ஆள் படுக்கக் கூடிய சிறுகட்டிலின் இரண்டு கால்களும், ஒரு அலமாரியும் தெரிந்தன.

“என்ன சாமீ பாக்குற? அதே வீடுதான், வேறென்ன புதுசா இருக்கப்போவுது!”

அவர் குரல் விரக்தியில் தோய்ந்திருந்தது. அவளை நிமிர்ந்து ஒரு முறை பார்த்துவிட்டு தாழ்ந்த விழிகள் பலவருடத் தனிமையின் ஏக்கம் சுமந்திருந்தன. தண்டனை வாங்கி, வேதனைப்படும் ஒரு குழந்தையைப் போல அவர் சோஃபாவில் ஒதுங்கிக்கொண்டு, தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவள் அவரைப் புதிதாய்ப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘அவரின் எழுதப்படாத பக்கங்களுள் என்னென்ன ஏக்கங்கள் இருக்கக்கூடும்?’ அவளுக்கு அவள் உடலெங்கும் துடிப்பது போலிருந்தது.

அந்த சிறு மௌன இடைவெளி அவரைக் கிழித்துக்கொண்டிருந்தது, அவர் போராடிக்கொண்டிருந்தார். அமர்ந்திருந்ததால், தனக்குக் கீழிருந்த சிறு பகுதி ஆடையையும் விழுங்கி, வடிவாய் மிளிர்ந்த அவளின் மார்பகங்கள் அவரின் ஏதுமற்ற வாழ்க்கையையும், எதையும் கற்பனை செய்துகூடப் பார்க்கத் துணியாத அவரின் உயர்ந்த நேர்மையையும் எடுத்துக்காட்டி கேள்விக்குட்படுத்தின. அந்தக் கேள்விகளை அறைந்து சாத்தும்படியான பதில்கள் இல்லாமல், அவர் இளமையின் கசப்பும், அவர் எதற்கென்றே தெரியாமல், புரியாமல் போற்றி வளர்த்த தனிமையும் அவரைத் துன்புறுத்தின. அவர் உணராத பெண்ணுடலின் மார்பகம் அவருக்கு எப்போதுமே ஓர் ஆச்சரியம், அவரின் வீணாய்ப் போன இளமையின் வலி. அவருக்குள் பரவும் வலியை இவள் தயவாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள், ‘தாயீ!’ என்று அன்பு பாராட்டும் அவர் குரல் இவள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ‘அவர் ஏக்கங்களின் முடிச்சுகளை அவிழ்த்து விட என்னால் முடியும்!’ அவள் சிறு உடம்பு சிலிர்த்தது.

“சாமீ! ஏதாச்சு உனக்கு சாப்பிடக் கொண்டாறேன்!” அழுத்தங்களின் மேல் அவளுக்கான தன் பாசத்தை இட்டு நிரப்பி அவர் எழுந்தார். அந்தக் குரல் அவளை நெகிழ வைத்தது. அவள் எதுவும் பேசாமல் அவர் வலியின் ஒவ்வொரு அடுக்கையும் பிரித்துப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன சாமீ வேணும் உனக்கு?”

சமையலறையிலிருந்து அவர் கேட்டார். இவள் பதில் சொல்லாமல் எழுந்து அவரை நோக்கி நடந்தாள். இவள் உடலின் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் கடந்தகாலத்தின் வலியிலிருந்து அவரைப் பிரிக்க கைகள் எழுந்துகொண்டிருந்தன.

சமையலறையில் அவரின் பின்புறம்தான் இவளுக்குத் தெரிந்தது. அவர் ஏதோ பாத்திரங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

“எனக்கு எதுவும் வேணாம் அங்கிள்!”

அவள் குரல் உறுதியாய் ஒலித்தது. அவர் திரும்பிப் பார்த்தார். அவர் விழிகளில் கலவரம் தெரிந்தது. கலக்கமாய், மருகிக்கொண்டே அவர் விழிகள் அவளை ஏறிட்டன.

“அங்கிள்!” ஆதரவாய்க் கூப்பிட்டாள்.

“எனக்கு எதுவும் வேணாம். ஆனா…”

சற்று இடைவெளி விட்டாள். படபடப்பில் அவள் மார்பு ஏறி இறங்கியது.

“உங்களுக்கு என்ன வேணும் அங்கிள்?” அன்பாய்க் கேட்டாள். அவர் நடுங்கும் கையை மெல்லப் பிடித்துத் தன் மார்பில் வைத்தாள். அவர் கைகளின் குளிர்ச்சி உடை தாண்டி உள்ளே தொட்டது. அவர் விழிகள் அகல விரிய வாயைத் திறந்து வேகமாய் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். இவள் மற்றொரு கையால் குளிர்ந்து நடுங்குகின்ற அவர் கையை மெதுவாய்த் தடவினாள். ‘ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல!’ என்று நடுங்கும் குழந்தையை அணைத்துக் காப்பது போலிருந்தது அவள் செய்கை.

இப்போது அவர் கண்கள் சற்று அமைதியாகின, ஆச்சரியமாய் அவளைப் பார்த்தன. அவள் ‘ஆமாம்’ என்பது போல் மெலிதாய் தலையசைத்தாள், திடமாய்ப் புன்னகைத்தாள். வலியும் ஏக்கமும் சுமந்தே பழகிய அவர் விழிகள் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு குழந்தையுடையதைப் போல ஆவலில் நிறைந்தன. ஆர்வமாய் அவளின் மார்பைப் பார்த்தார். அழகாய் வடிவம் பெற்றிருந்த அவள் மார்பகங்களை அதிசயமாய் ரசித்தார். அவள் உறுதியாய்த் தன் கைகளைப் பின்னே எடுத்துச் சென்றாள். உடையைத் தளர்த்தி, இடுப்புக்கு இறக்கினாள். இப்போது அவர் கையின் குளிர்ச்சி இன்னும் அதிகமாய்த் தெரிந்தது. அவர் விழிகள் வியப்பில் உறைந்திருந்தன, கண்களின் அடியில் இருந்த தோலின் சுருக்கங்கள் பிரிந்து, கோடுகளாகின. அவள் அவரின் மற்றொரு கையை எடுத்து இந்தப் பக்க மார்பில் வைத்தாள். இம்முறை அவ்வளவு குளிர்ச்சியாக அவர் கை இல்லை. அவரின் வலது கை மட்டும் அசைந்தது. மெதுவாய் அவர் விரல்களால் அவள் மார்பை வருடிப் பார்த்தார். அவள் கண் கொட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். விரல்கள் மெல்ல மெல்ல அசைந்தன. அவள் அவர் கையை ஆதரவாய்ப் பிடித்து அவளின் மார்பை சுற்றித் தடவ வைத்தாள். அதனின் வடிவத்தை உணர்த்தினாள்.

அவள் கை அவரின் கையை விட்டபோது அவர் அவளை நிமிர்ந்து பார்த்தார், முகம் மலர்ந்திருந்தது. விழிகளின் ஓரம் மட்டும் சிறிய குற்றவுணர்வு தேங்கி நின்றது. அவள் அவர் கையைப் பிடித்து “ஒண்ணுமில்ல அங்கிள்!” என்று மென்மையாய் உரைத்தாள். அவர் விழிகள் ஒரு முறை மூடித் திறந்தன, பின்பு நிறைவாய் அவளைப் பார்த்து சிரித்தன. அவள் உடையை நேர்படுத்திக்கொண்டு அவரிடம் விடைபெற்றாள். இரு வேறு உடல்களின் பாலத்தைக் கண்டுபிடித்த நிறைவு அவள் மனதை நிறைத்திருந்தது. அவள் சந்தோஷமாய்ப் படிகளில் தாவி இறங்கினாள்.