திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கைகள் ஒரு வரலாற்று ஆவணங்கள். இந்தியக் கட்சிகளில் பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமே தங்களது அறிக்கைகளில், திமுகவோடு ஒப்பிடும் வகையிலான, ஒரு ஆழமான புரிதல் மற்றும் தொலைநோக்கோடு இந்தப் பணியில் ஈடுபடக் கூடும். அதிலும் அவர்கள் பொருளாதாரக் காரணிகளுக்கு முன்னுரிமையை வழங்கி, இதர ஆட்சிக்கூறுகள் பற்றியவற்றில் கவனம் செலுத்துவதில்லை. ஏதோ தற்புகழ்ச்சி பேசுவதாக கருதுபவர்கள், அக்கறை இருந்தால், தொகுக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கைகளை (திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கைகள்: 1952 முதல் 2006 வரை: பதிப்பாசிரியர் பொ.தங்கபாண்டியன், நாளந்தா பதிப்பகம்) ஒருமுறை முயன்று படியுங்கள், புரியும்.

திமுகவின் திராவிடநாடு கோரிக்கை. இந்தியத் துணைக் கண்டத்தின் பகுதிகளிலேயே, தனிநாடு கோரிக்கையை இருதரப்பு ஒப்புதலோடு, சமாதான வழியில் பெற்றுவிட முடியுமென்பதை பெரியாரும், அண்ணாவும் உளப்பூர்வமாக நம்பினர். இந்தியா, பாகிஸ்தான் என திராவிட நாடு கோரிக்கைக்குப் பின் உருவான, மதரீதியான பிளவு முன்னுரிமை பெற்று, துணைக்கண்டத்தையே ரத்தச் சகதியாக்கி புதிய தேசங்கள் பிறந்தபோது, அசலாகவே திராவிடநாடு கோரிக்கை இந்திய அளவில் உதவுவார்களென எதிர்பார்க்கப்பட்டவர்களின் ஆதரவற்று தனித்து விடப்பட்டது.. சுதந்திர இந்தியா என்ற ஒற்றைவாத அரசிற்கு முன் கையறுநிலையில் நின்றது திராவிடம். நாடு அசலான, இயற்கையான இருப்பாக விளங்கும்போது, அதற்கு முகங்கொடுக்காமல், சமூக,கலாச்சார தளப்பணிகள் நிறைவானதாகாது என்பதனால், அண்ணா எனும் மாபெரும் அரசியல் சிந்தனையாளரின் சிந்தையில் உதித்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம். சுதந்திர இந்தியாவிலும் திராவிட நாடு கோரிக்கைக் குரல் வலுவாகவே ஒலித்தது. ஆனாலும் தேர்தல் வழியான பாராளுமன்ற அரசியல் பங்கேற்பு என நகர்ந்த போது திராவிட நாடு குறித்த சில மேல் விளக்கங்களுக்கு தேவை ஏற்பட்டது. திராவிட நாடு என்பது ஒரு கூட்டாட்சி அமைப்பு. அந்தக் கூட்டாட்சி ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லும் உரிமை ஒவ்வொரு மொழிவாரி மாநிலங்களுக்கும் உண்டு என்றார் அண்ணா. இன்னும் கூடுதலாக திராவிட நாடு இந்திய காமன்வெல்த் அமைப்பின் பகுதியாக இருப்பதில் ஆட்சேபமில்லை எனவும் விளக்கினார். அதற்கும் ஆபத்து, பிரிவினைவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் வந்து குதித்தபோது, இவை அனைத்தையும் கைவிட வேண்டியதானது. அப்போது மலர்ந்ததுதான் மாநில சுயாட்சி எனும் கருத்தாக்கம்.

அடிப்படை அரசியல் சித்தாந்தம் அறிந்தவர்க்கும், ஆட்சியியல் வடிவம் பற்றிய அறிதல் உள்ளவர்க்கும் ஒன்று தெட்டென தெளிவாகத் தெரியும். அண்ணாவின் ஆட்சிவடிவ மாற்றங்களில் இடைவிடாமல் தொடரும் மையக்கூறு சுயநிர்ணய உரிமை எனப்படும் தன்னாட்சி வடிவம். ஒவ்வொரு அரசியல் தள நெருக்கடியிலும், அவரது குறி ஒருபோதும் அதன் இலக்கைவிட்டு அகலவில்லை. அண்ணா, மாநில சுயாட்சி கருத்தாக்கத்தின் மைய இழைகளைத் தீற்றிவிட்டு நம்மை விட்டகன்றார். அவரது பணியை செவ்வனே நிறைவு செய்தவர் கலைஞர் அவர்களே. கலைஞர் முன் முயற்சி எடுத்து, குழு அமைத்து, அதன் அறிக்கை பெற்று ஒன்றிய அரசிடம் கொண்டு சேர்த்த ராஜமன்னார் குழு அறிக்கை ஒரு அரிய ஆவணம். இந்திய ஒன்றியத்திலேயே ஒன்றிய / மாநில உறவைத் தீர்க்கமாக அவதானித்து, அறிஞர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட மாநிலங்களின் உரிமைக்கான சாசனம் அது. இந்திய ஒன்றியத்தில் நிகழ்ந்த முதல் முயற்சியும்கூட.

எதற்காக இவ்வளவு நீண்ட முன் வரலாறு. காரணமில்லாமலில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் என ஒவ்வொரு தகை சான்ற மனிதர்களின் “சிந்தனைத் தெறிப்புகளும்” இந்திய ஒன்றியத்தின் இதர அரசியல் தலைமைகளுக்கு அச்சமூட்டுவதாகவே இருந்திருக்கிறது. இந்து இந்தியா, இந்தி இந்தியா எனும் குறுமதிகளால், தங்கள் “கண் கட்டிலிருந்து” வெளிவந்து பார்க்க இயலவில்லை. எனவே ஒவ்வொரு புதிய முன்வைப்புகளும் அவர்களைப் பதற்றமுறச் செய்யத் தவறவில்லை. ஒற்றை மத,மொழி இந்தியாவால், தன்னாட்சி உரிமை வழி உருவாகும் வளமான, வலுவான மாநிலம் என்பதன் விசாலத்தை உணர இயலவில்லை. எனவே முட்டுக்கட்டைகளே நமக்கான எதிர்வினையானது. இந்த நிலையில்தான் ஒன்றியம் கூட்டமைப்பின் வடிவைப் பெறும் அரிய வாய்ப்பு உருவானது. மாநில சுயாட்சி நாயகன் கலைஞர் அந்த அரிய வாய்ப்பை, தானே ஒருங்கிணைத்துப் பிணைத்தார். 1989ஆம் ஆண்டில் அந்த அற்புதம் சாத்தியமானது. கூட்டாட்சி என்பதன் மாற்று வடிவை ஒன்றைக் கூட்டணி ஆட்சி வழியாகச் சாத்தியப்படுத்த முடியுமென்பதை தான் பெற்ற பெரியார், அண்ணா அரசியலின் துணையோடு உணர்ந்தார். ஒரு மாபெரும் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பை சென்னையில் கூட்டி அதற்கான அஸ்திவாரம் அமைத்தார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் தலைமையில் இந்தியாவின் முதல் வெகுமக்கள் கூட்டாட்சியின் சாயலிலான அரசு அமைந்து, மண்டல் கமிஷன் ஏற்பு போன்ற அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியது.

அன்றாவது ஒரு குழப்பநிலை. தேசியக்கட்சிகள் திசைகெட்டு அலைக்கழிந்தன. இன்றோ இந்திய வரலாற்றின் கரும்பக்கங்களைக் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பாசிச சக்தி மோடி எனும் மூர்க்கத்தின் வடிவில் ஆட்சிக் கட்டிலில். காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளை மட்டுமல்லாமல், அனைத்து மாநிலக் கட்சிகளையும் பூண்டோடு அழித்துவிட்டு, இந்திய ஜனநாயகத்தை, அதன் வழிமுறையான தேர்தலை முற்றிலுமாக அழித்துவிடத் துடித்து நிற்கிறது இந்துத்துவா வெறி. ஏற்கனவே ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற தன்னாட்சி அரசு அமைப்புகள் அனைத்தையும் நிர்மூலமாக்கி தரையில் மிதித்து விட்டது இந்த பாசிசம். இந்தத் தேர்தல் இந்துத்துவ ஒற்றை இந்தியா எனும் ஒருமைவாதத்திற்கும், மொழி, இன, கலாச்சார இந்தியா எனும் பன்மைத்துவ இந்தியாவிற்குமான இறுதிப் போர். இந்தப் போரில் ஏற்கனவே தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், ராகுல் அவர்களை இந்தியப் பிரதமர் வேட்பாளரென அறிவித்து விட்டு களமிறங்கியுள்ளது. அந்தக் களத்தில் திமுகவிற்கான கருத்தியல் ஆயுதமாகி நிற்கிறது, 2019 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கை.

இந்தத் தேர்தல் அறிக்கையை ஆழமாக வாசிப்பவர்களுக்கு, அதன் வரிகளுக்கிடையே அந்த இயக்கத்தின் ஆசான்களான பெரியார், அண்ணா, கலைஞரென அனைவரது குரல்களும் ஒலிக்கும். ஆனால் அதோடு கூடவே இன்னொரு நுட்பமான குரலும் தெளிவாக ஒலித்தபடி இருக்கும். அது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் தனது ஆதிக்குரலின் சாயலில், ஆனால் அனைத்து இந்தியத்திற்குமான குரலாக ஒலிப்பது தெரியும். இந்தத் தேர்தல் அறிக்கை, ஒருபோதும் தங்களை ஒரு தேசியக்கட்சி என அறிவித்துக் கொள்ள கொள்கையளவிலேயே விரும்பாத கட்சி ஒன்றின் தேர்தல் அறிக்கை என்பதைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் சில தெளிவுகள் பிறக்கும். தேசிய அளவிலான விரிவாக்க ஆசையோ, நோக்கமோ அற்றவர்கள் தங்களது ஆலோசனையை “இந்தியத்திற்கு” உரக்கச் சொல்கிறார்கள். மாநிலக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை மாநிலங்களின் தேவையை மட்டும் பேசும். ஆனால் இந்த அறிக்கை, ஒன்றியத்தின் இதர குடிமக்களின், பிரதேசங்களின் நலன் கருதி தாங்கள் அனுபவங்கள் வழி அடைந்தவற்றை அவர்களுக்கான மாதிரியாக காட்டுகிறது. ஆம், “தமிழ்நாடு மாதிரி” இன்று இந்தியத்தின்முன் விரிக்கப்பட்டுள்ளது. கொள்பவர் கொள்ளட்டும்.இது பங்கேற்பு கூட்டாட்சி வடிவினைப் பரீட்சார்த்தம் செய்ய முன் வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை.

இனி அறிக்கையின் பகுதிகளைப் பார்ப்போம். இந்தத் தேர்தல் அறிக்கை புதிதாகப் பயணிப்பதாக அவதானிக்கப்படும் பகுதிகளைப் பார்ப்பதற்குமுன் ஒரு தீர்க்கமான ஆய்வினைச் செய்து பார்த்துக் கொள்ளலாம். புதிய வழித்தடங்களுக்காக, தனது அடிப்படைகளிலெதையாவது கைவிட்டிருக்கிறதாவெனப் பார்க்கலாம். முதல் பகுதியே கூட்டாட்சி. கூட்டாட்சி எனும் கோட்பாட்டின் அடிப்படைகளை அறிந்து வினையாற்றும் ஒரே அரசியல் இயக்கம் திமுக மட்டுமே என உறுதியாகச் சொல்ல முடியும்.இந்த அவதானிப்பு ஏதோ, பிறரெல்லாம் அரசியல் தத்துவ அறிவற்றவர்கள், கழகம் மட்டுமே, அதை அறிந்து கையாளுகிறது என்ற வீண் பேச்சு அல்ல. இந்தியா என்பது ஒரு தொலைநோக்கோடோ, நவீன அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் உருவானதில்லை. பிரிட்டிஷ் இந்தியா என்ற ஒரு ‘காலனி’ ஒரு அரசு எனும் ஆட்சிமுறையின்கீழ் இயங்கியது என்பதே அடிப்படை. அதன் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம், தேசம் என்ற கருத்தாக்கமானது. அந்த ஆட்சியின் ஒருங்கிணைந்த நிலப்பகுதியாகவும், பன்னெடுங்காலமாகவும் இந்துக்களும், இஸ்லாமியரும் இணைந்து வாழ்ந்த நிலப்பகுதிகள், இந்து இந்தியா என்ற மதவாத முன்னெடுப்பினாலும், இந்துத்துவ அரசியல் தலைமையாலும் அச்சுறுத்தலுக்குள்ளாகி ‘புதிய இஸ்லாமிய தேசமாகும்’ விபரீதம் நடந்தது. அதிலும் இரு தொடர்பற்ற துண்டுகளாக. ஒரு தேசம் உருப்பெற்றது என்பதே விபரீதம். இத்தனையும் 1940இல் துவங்கி 1947க்குள் நடந்தேறியது என்பதே தொலைநோக்கின்மைக்கான சாட்சி. இந்த தேசங்களின் வித்துக்களில் மதவாத உள்ளடக்கம் பொதியப்பட்டதே இந்த அவமானத்திற்கும், இன்று துணைக்கண்டம் எதிர்கொண்டு வரும் மீள இயலாத சிக்கல்களுக்கும் காரணம். இது ஏன் நடந்தது?

ஒரு நவீன மக்களாட்சி அரசை உருவாக்கும் தலைமைக்கு இருந்திருக்க வேண்டிய அடிப்படை புரிதலை, அன்றைய தலைமை ஏற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. விளைவு, ஐந்தாயிரம் ஆண்டுகள் துவங்கி ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரை வெகு நீண்ட கற்பித/புனைவு வரலாறு கொண்ட “ஹிந்து வர்ஸம்” என்ற ஆதிக்க அரசியலின் தளத்திலிருந்து துவங்கியது தேச நிர்மாணம். “ஹிந்து வர்ஸம்” என்ற பொய்மை தேச நிர்மானப் பணியை சிதைத்து வீழ்த்தியபோது, காலங்காலமாக தனித்து இயங்கிய ஆட்சிமுறை அலகான தென் திராவிடநாடு எனும் நாடும், அதன் இயல்புத் தன்மையும் அதற்குள் ‘இல்லாத இந்து’ எனும் அடையாளம் கருதி நசுக்குண்டு போனது. அதனால்தான் அதன் தலைமை ஏற்ற திராவிட சிந்தனை, தனிநாடு துவங்கி கூட்டாட்சி வரையான ஆட்சிவடிவங்களின் வழி தனக்கான விடியலைத் தேடுவதானது. இந்தத் தேடலின் வழி இவர்கள் பயணித்த எந்தத் தளத்தையும் ‘இந்து இந்தியா’ எனும் ஒற்றை அடையாளத்தை ஏற்றவர்களுக்கு தேவையாக இல்லை.

நம்பிக்கைவாத இந்து இந்தியா, இன்று அடிப்படைவாத ‘இந்துத்துவ இந்தியா’வாக மாறி ஒரு இன அழிப்பிற்கான மும்முரத்தில் இருக்கும் போது, கூட்டாட்சி எனும் ஒரே சாத்தியமான வடிவத்தை வலியுறுத்தாமல் இருக்க முடியுமா? இன்னும் சொல்வதானால் திமுக தேர்தல் அறிக்கையில் ‘இந்தியாவிற்கான’ செய்தி இந்தப் பகுதியிலேயே துவங்கிவிடுகிறது. அது எப்படி வழக்கமாக காணப்படும் கருத்தியல் நிலைப்பாடுகள் ‘புதிய செய்தியாக’ மாறும். இந்தப் புள்ளியில், நரேந்திர தாமோதர் மோடி என்ற அடிப்படையான மக்களாட்சியின் மீதான அதீத வெறுப்பும், அதைத் துடைத்தெறிந்துவிட வேண்டுமென்ற வெறியோடு, தன் எதிர்ப்படும் அனைத்துவித, மக்களாட்சியின் மாண்பு காக்கும் நிறுவனங்களனைத்தையும் மிதித்துத் துவைத்து வரும் மனிதன் தலைமையில் நடைபெறும் அராஜக ஆட்சி இது என்பதைக் கவனத்தில் இருத்துதல் வேண்டும். மோடி தலைமையிலான சங்பரிவார் / முதலீட்டிய கூட்டணி ஆட்சி இந்திய ஆட்சிமுறையின் ஆணிவேர் வரை அசைத்துவிட்டது. இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் அதனை அடியோடு சாய்த்து விட துடித்து நிற்கிறது. கூட்டாட்சி / மாநில சுயாட்சியைக் கூரைமீது நின்று பிரகடனம் செய்ய இதைவிட அதி அவசரக் காலம் எது? அரசுமுறையின் தன்னாட்சி நிறுவனங்கள் அனைத்தும், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்,தலைமை கணக்கு தணிக்கையாளர், சி.பி.ஐ., ரிசர்வ் பேங்க் என அனைத்தும் வீழ்ந்து கிடக்கிறது. அது ஏன், புள்ளிவிவரத் துறை காலியாகி நிற்கிறது. பொய்யான வளர்ச்சி வீதத்தை காட்டும் புள்ளி விவரங்களை அளிக்க நிர்பந்திக்கப்பட்டு அதிகாரிகள் பதவி துறக்கிறார்கள். இதைவிடப் பேரவலமான நிலை மக்களாட்சியில் நிகழக் கூடுமா?
எனவேதான் தேர்தல் அறிக்கையின் முகப்பில் தெளிவான கூட்டாட்சிக்கான முழக்கம்.இந்தப் பகுதியில் நான்கு முன்மொழிவுகள். 1) மாநில சுயாட்சி 2) கவர்னர் மாநில அரசின் ஆலோசனையின் பேரில் 3) ஒன்றிய அரசின் மாநில அரசு ஆட்சிக் கலைப்பு அதிகாரம் கொண்ட சட்டப் பிரிவு 356 ஐ முற்றிலுமாக நீக்குவது. 4) மாநிலங்களின் வட்டாரக் குழு (ஸிமீரீவீஷீஸீணீறீ சிஷீuஸீநீவீறீ ஷீயீ ஷிtணீtமீs ) . அதென்ன மாநில சுயாட்சி முழக்கம் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நிமிடம், இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொண்டு முன் நகர்வோம். நாம் கூட்டாட்சி எனும் குரலை, கலைஞர் தலைமையில் மாநில சுயாட்சித் தீர்மானமாக 1974 ஆம் ஆண்டிலேயே தமிழக சட்டப் பேரவை தீர்மானமாக ஒன்றிய அரசிற்கு அறிவித்து விட்டோம். ஆனால், நம் ஆய்வாக வழங்கிய ஆவணங்கள் ஒன்றிய ஆட்சியாளர்களால் எப்படிக் கையாளப்பட்டது தெரியுமா? தூக்கி வீசப்பட்டு விடவில்லை. அது கவனமாக வாசிக்கப்பட்டது. ஒருநாள் பிரிவினைவாதிகள், ஆட்சிவடிவில் கோரும் மாற்றமல்லவா? அதன் ஒவ்வொரு இழையாகப் பிரித்து வாசித்து, அந்தக் கோரிக்கையின் அடிப்படைகளை வேரோடு சாய்ப்பது மட்டுமே ‘மையத்தில்’ அதிகாரத்தைக் குவிப்பதற்கான எளிய உபாயம் என்பதை மட்டுமே அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதாவது மாநில சுயாட்சி அறிக்கையின் ஒவ்வொரு கூறையும் முறியடிப்பதே “வலுவான மைய அதிகாரத்தை” சாத்தியமாக்குமென தெளிவாகப் புரிந்து கொண்டனர். விளைவு, திமுகவை பிளப்பது துவங்கி பல்வேறு நாடக அரங்கேற்றத்திற்கிடையே, அவசரகால அலங்கோலத்தில் மிச்ச மீதியான அதிகாரங்களை மாநிலங்களிடமிருந்து பறிப்பதானது. அப்படி நகர்ந்த கல்வி மற்றும் வேளாண்மை சார்ந்த அதிகாரங்களின் விளைவே இன்றைய ‘அனிதா கொலைகள்’ துவங்கி விவசாயிகளின் தற்கொலை வரையான நிகழ்வுகள்.
அதிகாரத்தின் மிக மோசமான அம்சம் அதன் சுவை கண்ட அமைப்பு / உயிரி / மனிதன் அதனை ஒருபோதும் இழந்துவிடச் சம்மதிப்பதில்லை. இந்த ரீதியில் தொடர்ந்த பலவிடயங்களை பட்டியலிடுவது வெகுவாக நீண்டுவிடும், ஆனால் அதன் மீதான “இறுதி ஆணியை அறைந்தது” மோடி ஆட்சியில் அவசரகதியில் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமே. முற்றிலுமாக மாநிலங்களின் பொருளாதார தனித்துவத்தை அழித்துச் சிதைத்து விட்டது. இனி மாநில அரசுகள் ஒன்றிய அரசின் சேவை மையங்கள், அவ்வளவுதான். இதற்காக மோடி அரசு செய்திருக்கும் விரிவான ஏற்பாடுகள் பாரதூரமானவை.. இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் குழுமம், நிதிக் குழு போன்றவை கலைக்கப்பட்டு, அதன் இடத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற பொருட்களுக்கான வரி விகிதத்தை ஏற்ற/ இறக்க பேரம் பேசும் ஒரு கவைக்குதவாத அமைப்பு.

ஆனால் ஒன்று, இப்போதுதான் இந்திய ஒன்றியத்தின் இதர மாநிலங்கள் தெற்கே இருந்து காலங்காலமாக ஒலித்துக் கொண்டிருந்த குரலின் எச்சரிக்கையை உணரத் துவங்கியுள்ளன. எனவேதான் எழுபதாண்டு கால அரசியல் கள அனுபவம் சார்ந்த சிந்தனைகளையும், ஐம்பதாண்டு ஆட்சிவழி அனுபவங்களையும் தொகுத்து ‘ இந்தியாவிற்கான ‘ திட்டமாக/ இந்திய ஆட்சிமுறைக்கான ஆலோசனைகளாக வழங்கியிருக்கிறது திமுக.

1) மாநிலத்திற்கு அதிகார மாற்றம்: கல்வி
மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி ‘நீட்’ உள்ளிட்ட தேவையற்ற தேர்வு அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. ஒன்றிய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்/ மேற்பார்வையில் நடத்தப்படும் தேர்வுகள் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. ஒன்றுகூட ஒன்றிய மேலாண்மை என்பதை நிறுவுவதைத் தவிர்த்து எந்த நல்ல காரணங்களும் கொண்டவை அல்ல.

2) சமூக நீதி
– இந்தியாவெங்கும் அம்பேத்கர் இலவச கல்வித் திட்டம்.
– இந்தியாவெங்கும் பெரியார்-, ஜோதிராவ் பூலே சமத்துவபுரங்கள்
– தனியார் துறையில் இட ஒதுக்கீடு. அரசுத்துறை வேலைவாய்ப்பு அறுகிப் போன நாளில் (அதில் 10% முற்பட்டோரில் 8 லட்சம் ஆண்டு வருமானமுள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு) தனியார் துறைதான் வாய்ப்பு.. அதனை ஊக்கப்படுத்த கார்ப்பரேட் வரியில் சலுகை.
– உச்சநீதிமன்றம் துவங்கி கீழமை நீதிமன்றம் வரை நீதிபதிகள் தேர்வில் இட ஒதுக்கீடு. வழங்கப்படும் நீதி ‘மநு சட்டத்தின் அடிப்படையிலான நீதியாக’ இல்லாமலாக்க வழி இதுதான்.
– சாதிவாரி கணக்கெடுப்பு. சமூகநீதி ஏற்பாடுகளின் குளறுபடிகளை, அதன் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் பொய்களை உடைத்தெறிய சாதிவாரி கணக்கெடுப்பு.

3) நலத்திட்டங்கள்
– தமிழகத்தில் இருப்பது போல் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதிற்குமான பொது விநியோகத் திட்டம்.
– மொத்த உற்பத்தியில் (நிஞிறி) 3% பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு. மோடியின் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளைத் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு ஆப்பு.
– கலைஞர் காப்பீட்டுத் திட்ட மாதிரியில் இந்தியாவெங்கும் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ வசதியளிக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
– தமிழகத்தைப் போலவே இந்தியாவெங்கும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்.
– மீனவர்க்கென கேபினட் தகுதியுடனான தனி அமைச்சரவை, கடலோரங்களில் மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்க நெருக்கடி மேலாண்மை மையங்கள்.
– பெண்கள், முதியோர், திருநங்கையர் நல ஆணையங்கள்.
– இந்தியாவெங்கும் தமிழக பாணியில் ஒரு கோடி சாலைப் பணியாளர்கள், ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள்.

4) நிதிப் பங்கீடு மற்றும் பொருளாதாரம்
அ) திட்டக்குழு மீள அமைக்கப்பட வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்திருக்கும் அடிப்படை மாற்றங்கள் இரண்டு தளத்தில் அரங்கேறியுள்ளது. முதலாவது, திட்டக்குழு ஒழிப்பு, இரண்டாவது, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம். ஓரளவில் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பது கவனத்திற்குரியது.. கடந்த சங்பரிவார் ஆட்சியில் செய்யப்பட்ட பாரதூரமான மாற்றங்களில் பிரதானமானது ‘திட்டக்குழு’ மூடப்பட்டது. இந்திய சுதந்திரம் துவங்கி ஒன்றிய அரசின் திசைவழிகாட்டியாக கருதப்பட்ட அமைப்பு, ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்பட்டது. திட்டக்குழு ஐந்தாண்டு திட்டங்களையும், அவ்வப்போதைக்கான அவசர தேவை திட்டங்களையும் தொடர்ந்து திட்டமிடும் பொருளாதார வல்லுநர் அமைப்பாக விளங்கியது. அது முழுநேர அரசமைப்பு, அதன் உறுப்பினர்களில் வல்லுநர்கள் அவ்வப்போது, காலமுறையில் பணிநியமனம் செய்யப்பட்டு அந்த ஆட்சிக்காலம் முழுதும் அரசிற்கு திட்டங்களை, திட்ட மதிப்பீடுகளை, அவற்றின் நடைமுறையாக்க முறைமையைத் தொடர்ந்து கண்காணித்தபடி இருப்பார்கள். இந்த அரசின், அதாவது விரல்விட்டு எண்ணக்கூடிய குஜராத் பனியா முதலாளிகளின் அரசின் முதல் நடவடிக்கையே ‘திட்டத்தை’ தனியார் மயமாக்கியதுதான். இந்த ஐந்து ஆண்டுகளின் ‘பொருளாதார மாபாதகங்களை’ (ணிசிளிழிளிவிமிசி விகிஷிஷிகிசிஸிணிஷி) நிகழ்த்தியது புதிதாக உருவாக்கப்பட்ட நிதி அயோக் எனும் அமைப்புதான். இது பெயரளவிலான மாற்றமில்லை. அடிப்படைகளைப் புரட்டிய அயோக்கியத்தனம். இதன் முதலும் கடைசியுமான பலி இந்திய மைய வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கி. பணமதிப்பிழப்பில் துவங்கி, அதன் ‘கையிருப்பை’ கரைப்பதில் முடிந்தது இந்த நடவடிக்கை. எனவே இந்த தனியார் பயன்பாட்டு நிறுவனம் ஒழிக்கப்பட்டு திட்டக்குழு மீள வேண்டுமென்கிறது திமுக தேர்தல் அறிக்கை.

ஆ) ஏற்கனவே கண்டதுபோல, சரக்கு மற்றும் சேவை வரி மாநில உரிமைகளில், குறிப்பாக பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் உரிமைகளில் கடுமையான தாக்குதலை நடத்தி முடித்து விட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையால், மாநிலத்தின் உற்பத்தி மற்றும் விற்பனைத் திறனை, அரசுமுறை இடையீட்டால் மேம்படுத்தும் வாய்ப்பு அரிதாகிவிட்டது. எனவே மாநிலங்கள் இனி பொருளாதார வளம் பெறுவது என்பது தன்னிச்சையான நடவடிக்கையாக செய்திட முடியாது. அப்படியானால், இனி பங்கீட்டு வடிவில் தலையீடு செய்வதில் மட்டுமே குறைந்தபட்ச உரிமைகளைப் பெற இயலும். இந்தத் தளத்தில் தேர்தல் அறிக்கை இரண்டு மிக முக்கியமான கோட்பாடுகளை முன்மொழிந்துள்ளது. 1) சரக்கு மற்றும் சேவை வரி பங்கீட்டை 60:40 என்ற விகிதத்தில் மாநிலங்களும், ஒன்றியமும் செய்து கொள்தல் 2) வருமான வரியைப் பிரிப்பது மாநிலங்களின் வருவாய்த் திறன் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். இதோடு கூடுதலாக ‘தீர்வை’களை (சிணிஷிஷி) ஒன்றிய அரசு தனதாக மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதனையும் பிரித்துக் கொள்ளும் வரியாக கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவும் உண்டு.

இந்த முன்மொழிவுகள் உடனடியாக எந்த வகை ஒன்றிய ஆட்சியாளர்களாலும் ஏற்கப்பட போவதில்லை. ஆனால் இந்தத் திசைவழிதான் மாநிலங்களின் பொருளாதார உரிமைகள் தளத்தில் வெகுதூரம் பயணிக்கப் போகும் கருத்தாக்கம். ஒரு தேசம் ஒரு வரி என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அம்பலப்படுத்தும் களமிது. சரக்கு மற்றும் சேவை வரி என்பதே ஒற்றை ‘மறைமுக வரி’ (அதுவே இப்போது பொய், ஏனெனில் அனைத்து வரிகளும் நேர்முகமாகவே வந்து நிற்கிறது என்பதே உண்மை) என்ற வாதத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு விட்டு, அதற்குப் பின் பல்வேறு ‘தீர்வைகளை’ (சிணிஷிஷி) களை அடுக்கியது ஒன்றிய அரசு. அதுவே மாநிலங்களின் மீதான ஏமாற்று நடவடிக்கை. மோசடி நடவடிக்கை. ஏனெனில் தீர்வைகளை ஒன்றிய அரசு மட்டுமே வைத்துக் கொள்ளும். இந்தவிதமான பல்வேறு தீர்வைகளை ஒழிக்கிறேனென புறப்பட்ட ‘ஒற்றை வரி’ ஒரு மாதகாலத்திற்குள்ளாகப் பல்வேறு தீர்வைகளை இறக்கிவிட்டது. இந்த ஏமாற்று வேலையை முறியடிக்கவே 60% பங்கு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக வருமான வரி. இந்த ‘ஒற்றை வரி’ வருமான வரி எனும், இந்திய வரி வருவாயின் ஏறத்தாழ 40% வருவாயை உள்ளடக்கியது இல்லையென்பது கவனத்திற்குரியது. இந்தப் புள்ளியில் ஒன்றைக் கவனிப்போம். சரக்கு மற்றும் சேவை வரி 50:50 என பிரிக்கப்படும்போது, அந்தந்த மாநிலங்களிலிருந்து பெறப்படும் வருமான வரியை பிரிக்கும் முறை என்ன ? இங்குதான் மீண்டும் ‘நிதிக்குழு’வின் தேவை வருகிறது. இந்த வருமான வரியைப் பிரிக்கும் முறைமை ஒன்றிய அரசின் மனம் போன போக்கில் என்பது ஏற்க இயலாதது. மாநிலங்களின் வருமான வரி பங்களிப்பிற்கு ஏற்ப அது பிரிக்கப்பட வேண்டும். அதாவது மாநிலங்களின் வருமான வரி வருவாய் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டுமென மொழிகிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. இந்த வருமான வரி பிரிப்பு குறித்த முன்மொழிதல் இன்னும் வெகுவான விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு கொண்டது. விவாத சாத்தியம், வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சி வீதத்தை தக்க வைக்க வேண்டிய நிதி ஆதார ஒதுக்கீடு வேண்டுமென்பதன் அடிப்படையில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதர மாநிலங்களின் நிலைப்பாடுகள் இதையொட்டியதாக அமைந்தால் ஒன்றியப் பொருளாதாரக் களத்தில் மாநிலங்களின் பங்கு ஓரளவில் நீதியானதாக அமைய வாய்ப்புள்ளது.

இதோடு முடிந்துவிடவில்லை பொருளாதாரத்தள கோரிக்கைகள். கோட்பாடுகள் களமாடி வெல்லும் நாள் வரை பசித்த வயிறுகள் பொறுக்க இயலாதுதானே, எனவேதான் உடனடியான மக்கள் தேவையான 1) மீண்டும் மானியவிலையில் கேஸ் சிலிண்டர்கள், 2) பெட்ரோல், டீசல் விலைகள் மறுபடியும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே விற்கப்பட வேண்டும், 3) தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் குளறுபடியால் உயர்ந்துவிட்ட கேபிள் கட்டணம் வரன்முறைப்படுத்தப்பட வேண்டுமென்பது போன்ற அன்றாடம் சார்ந்த கோரிக்கைகளும், 4) வங்கிகளில் சேவைக் கட்டணம் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும் 5) வங்கிசாரா நிதிநிறுவனங்களை வரன்முறைப்படுத்துதல் 6) வருமான வரிச் சலுகை எட்டு லட்சம்வரை நீட்டிக்கப்பட வேண்டுமென்பது போன்ற தேர்தல் அறிக்கை மொழிவுகள்.
பங்கேற்புக் கூட்டாட்சியின் மாதிரியில். முன்னர் தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டம் என்கிற அடிப்படையில் இயங்கிய கூட்டணி ஆட்சிகள், இனி ஒவ்வொரு பங்காளரின் அறிவிக்கப்பட்ட கருத்தியல் நிலைப்பாடுகளின் / கோட்பாடுகளின் அடிப்படைகளைக் கொண்டே ஆட்சி வடிவம் செயல்பட வேண்டுமென்ற மறைமுக முன் நிபந்தனை வடிவம் இது. திமுகவின் மொழிக்கொள்கை, நீட் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட தேர்விற்கெதிரான அறுதியான நிலைப்பாடு குறித்தவற்றை ஏற்காதவர்களோடு இணைவதோ, தொடர்வதோ அதனை ஒட்டி வெகுமக்களிடம் உறுதியேற்பு செய்துவிட்ட திமுக போன்ற அமைப்பால் இனி இயலாது. இந்தத் தேர்தல் அறிக்கைதான் திமுகவின் குறைந்தபட்ச செயல்திட்டம். இதுவே அதன் அறிக்கை.