தமிழகத்திலிருந்து சிலநூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இலங்கையில் மிக கொடூரமான தாக்குதல் நடந்திருக்கிறது. அதையொட்டிய விவாதமோ, கரிசனமோ எதுவும் இல்லாமல் இங்கு நிலவும் கனத்த அமைதி பயங்கரவாத தாக்குதல் போலவே மிகுந்த அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. சிவில் சமூகத்தின்மீது தொடங்கப்படும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் ஏற்படுத்தும் தற்காலிக உணர்வெழுச்சிகூட இங்கு எழாதது ஏன் என தெரியவில்லை. “நமக்கு எதுவும் நடக்காது” என்ற உணர்வும், நம்பிக்கையும் அதற்குக் காரணமாக இருக்கலாம், ஆனால் இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள்கூட இறப்பதற்குச் சற்றுநேரம் முன்புவரை அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.

இலங்கையில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் “இந்தத் தாக்குதலில் மனித வெடிகுண்டுகளாக, கொடிய வெடிமருந்துகளைத் தங்கள் உடல்களில் சுமந்துகொண்டு அதை வெடிக்க செய்தவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள். ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் தங்களது உயர்கல்வியை கற்றவர்கள், பொருளாதாரரீதியாகவும் நல்ல உயர்ந்த நிலையில் இருந்த இளைஞர்கள் அவர்கள். இதுதான் இந்தத் தாக்குதலை பொறுத்தவரையில் கவலையூட்டக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது” என்றார். தீவிரவாதிகள் அனைவரும் கல்வி அறிவற்றவர்கள், பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்களாகதான் இருப்பார்கள் என்ற நம்பப்பட்டு வந்த பொதுபுத்திக்கு எதிரானது இது. பாதுகாப்புத்துறை அமைச்சர் சொன்னதுபோல பதின்ம வயதுடைய படித்த இளைஞர்கள் இந்தக் கொடூர தாக்குதலை நிகழ்த்தியது இன்னும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக ‘ஷர்மிளா செய்யது’ என்ற இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஒரு பதிவொன்றை எழுதியிருக்கிறார். “2002 வாக்கில் திடீரென உருவெடுத்த ஒரு இஸ்லாமிய அமைப்பொன்று இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளை அங்கிருக்கும் பெருவாரியான மக்களிடம் திணித்து வந்தது. ஏராளமான இளைஞர்கள் மூளைசலவை செய்யப்பட்டனர். மதரீதியான நிறைய கட்டுபாடுகள் வலிந்து திணிக்கப்பட்டன, பாடசாலைகளில் மதரீதியான சிந்தனைகள் முன்னிறுத்தப்பட்டன, இதன் விளைவாக மாற்று மதத்தினரின்மீதான சகிப்புத்தன்மை இளைஞர்களிடம் குறைய தொடங்கின. இது ஒரு ஆபத்தான போக்கு என்பதை உணர்ந்து அதை எதிர்த்த ஜனநாயகவாதிகள் மேலைத்தேய கைக்கூலிகள் என விமர்சிக்கப்பட்டனர். அவர்களது குரலும், எழுத்தும் நெரிக்கப்பட்டன. இத்தகைய திடீர் சிந்தனை மாற்றத்தின் விளைவாகவே இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் நிகழ்கின்றன” என்கிறார்.

சமீப காலங்களாக இளைஞர்களின் மனதில் எழுந்த இந்த சிந்தனை மாற்றங்கள் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே நிகழ்கின்றன. முந்தைய காலத்தை போல இல்லாமல் இன்றைய கால இளைஞர்கள் அறிவார்ந்த, ஆழமான சிந்தனைகள் எதுவும் இல்லாமலும், மேலோட்டமான சிந்தனைகளும், எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்களாகவும் இருப்பதால் அவர்கள் மிக சுலபமாக மூளை சலவை செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில் தேர்தலையொட்டி பொன்பரப்பியில் தலித் மக்களின் மீதும், அவர்களின் குடியிருப்புகளின் மீதும் தாக்குதல்கள் நடந்தன. தலித் மக்களைப் பற்றி மிக மோசமான வசைசொற்களுடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேரும் இளைஞர்கள். சாதி ரீதியான ஏராளமான ஒடுக்குமுறைகளுடன் தங்களது வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கும் தலித் மக்களின் மீது தொடர்ச்சியாக இவை போன்ற தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. தங்களது குறைந்தபட்ச உரிமைகளை உறுதிசெய்து கொள்ளவே அவர்கள் இத்தனை தூரம் இது போன்ற தாக்குதல்களை தங்கள் வாழ்நாள் முழுதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதிய அடக்குமுறைகள் குறைந்து கொண்டிருப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அது இன்னும் தீவிரமாக இன்றைய இளைஞர்களின் மனதில் படர்ந்திருப்பதை பொன்பரப்பி நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான அலைபேசி உரையாடல் சமூகவலைதளங்களில் பரவியது. அந்த சம்பவம் ஒரு பகடியாகவும், நகைச்சுவையாகவும் பார்க்கப்பட்டதே தவிர அதில் உள்ள ஒரு வருத்தப்படக்கூடிய விஷயத்தை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். “தங்கள் மொழி, தங்கள் இனம்” என்று வார்த்தைக்கு வார்த்தை பெருமிதங்களைப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியை சார்ந்த இரண்டு இளைஞர்கள் எப்படி இத்தனை மோசமான சொல்லாடல்களை இவ்வளவு இயல்பாக பயன்படுத்துகிறார்கள்? இவ்வளவு காலமும் ‘தங்களது இனமே சிறந்தது, தங்கள் மொழியே சிறந்தது, தங்களது பண்பாடே சிறந்தது’ என சொல்லி சொல்லி இளைஞர்களின் இன உணர்வை தூண்டி தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு கட்சிக்குள் எப்படி சாதியப் பிரிவினைகள் இத்தனை தீவிரமாக அந்த இளைஞர்களிடம் இருக்கிறது? அவர்களது உரையாடலில் நிதானம், பக்குவம், முதிர்ச்சி என்று ஏதாவது தெரிகிறதா? தனது கட்சியை சார்ந்தோரை பக்குவப்படுத்துவதும், அவர்களின் உணர்ச்சிகளை முறைப்படுத்துவதற்குமான பொறுப்பு அந்தக் கட்சிக்கு இருக்க வேண்டும்தானே! மொழி, பண்பாடு, இனம் என அவர்களை உணர்ச்சிகளைத் தூண்டி அது போல ஏராளமான உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்களின் மனதில் மாற்று மொழியினரின் மீது வெறுப்பை விதைத்து அதன் வழியே தனது அரசியல் பலனை அடைந்து விடலாம் என நினைக்கும் ஒரு தலைவனின் பின்னால் எப்படி ஏராளமான படித்த இளைஞர்கள் திரள்கிறார்கள்? ஒற்றைமைய சிந்தனைகளை ஒருவர் சுவீகரித்துக் கொள்ளும்போது அதை முன்னிலைப்படுத்தும் உணர்ச்சிகளே அவர்களை இயக்கவும் செய்கிறது. அந்த இடத்தில் அவர் பெற்ற அறிவு என்பது அவர்களுக்கு தேவையற்றதாக மாறிவிடுகிறது. எந்த ஒரு சிந்தனை மாற்றமும் அறிவின் வழியாகவே நிகழ வேண்டும். மாற்று அரசியல், மாற்று தத்துவம் என்ற புதிய கோட்பாடுகளும், சிந்தனைகளும் எல்லோருக்கும் வரலாம். ஆனால் அப்படிப்பட்ட சிந்தனை மாற்றங்கள் அறிவின் வழியாக வர வேண்டுமே தவிர உணர்வுகளைத் தூண்டும் வெறுப்பு பேச்சுகளின் அடிப்படையில் வரக்கூடாது. முழுக்க முழுக்க வெறுப்பையும், உணர்வெழுச்சியையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பில் இருக்கும் அனைவரும் இப்படித்தான் மேலோட்ட சிந்தனைகளுடன், உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

1960களில் சாதி ஒழிப்பு மையமாகக் கொண்டு எழுந்த திராவிட இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டு காத்திரமாகப் போராடினார்கள். தெளிவான நோக்கத்தோடும், உறுதியான கொள்கைகளோடும் அப்போது இருந்த இளைஞர் கூட்டம் அதுவரை சமூகத்தில் இறுகிப் போயிருந்த சாதிய பண்பாடுகளின் இறுக்கத்தை தளர்த்த முற்பட்டன. நிறைய வாசிப்போடும், உயர்ந்த சிந்தனைகளோடும் மேலெழுந்து வந்த அந்த இளைஞர் கூட்டம் சாதிய ஒழிப்பை ஒரு அறிவியக்கமாக முன்னெடுத்தது. வெற்று உணர்வெழுச்சிகளோ, வெறுப்பு பேச்சோ இல்லாமல் அறிவுப்பூர்வமாக நிகழ்ந்த சிந்தனை மாற்றங்கள் சாதிய இறுக்கத்தை ஓரளவேனும் அப்போது குறைத்தது. அந்தக் காலகட்டத்தில் இதை முன்னெடுத்த தலைவர்கள் இளைஞர்களிடம் ஏற்பட்ட இந்த சிந்தனை மாற்றங்களை பெரும் ஜாக்கிரதையோடு கவனமாகக் கையாண்டார்கள். அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, வெறுப்புகளை விதைக்காமல் அறிவு தளத்தில் உரையாடும் அளவிற்கு அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டிய பொறுப்பை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் அந்த முதிர்ச்சியும், பக்குவமும் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?, சாதி ஒழிப்புக்கு எதிரான சிந்தனை மாற்றங்களுடன் எழுந்த இளைஞர் கூட்டம், எப்படி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களில் இத்தனை காத்திரமான சாதிய மனப்பான்மைக்கு வந்தடைந்தார்கள்? அவர்களின் சிந்தனை மாற்றங்கள் அறிவு தளத்தில் இருந்து நிகழாமல் வெற்று உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டும், வெறுப்பை உள்வாங்கிக்கொண்டும் நிகழ்வதுவே காரணம்.

பிறப்பின் அடிப்படையிலான அடையாளங்கள் பெருமித இப்போது மிகையாக பெருமிதப்படுத் தப்படுத்துகின்றன தன் இனம், தன் மொழி, தன் மதம் மட்டுமே உயர்ந்தது போன்ற கற்பிதங்கள் இன்றைய இளைஞர்களின் மனதில் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன. அதன் விளைவாக அவர்களின் சகிப்புத்தன்மை வேறெப்போதையும் விட இப்போது குறையத்தொடங்குகிறது. அதன் விளைவாகவே அடிப்படைவாதங்களின் மீதான ஈர்ப்பு அவர்களுக்குள் உருவாகிறது. சாதி ரீதியான ஒடுக்குமுறைகளையும், அவலங்களையும் அவர்களே முன்னின்று செய்து கொண்டிருக்கும் நிலைக்கு அவர்கள் இன்று வந்து சேர்ந்திருக்கிறார்கள். மனிதர்களின் மீது அறத்தோடு, வேறு வேறு அடையாளங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும், சாதி ஒழிப்பையும் முன்னிறுத்திய இளைஞர்களின் கூட்டம் இப்போதும் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? சாதி ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டு எழுந்த திராவிட இயக்கங்களுக்கு மாற்று என இடைநிலை சாதி நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சாதியக் கட்சிகளும், சாதிய பெருமிதங்களைத் தூக்கிப்பிடிக்கும் கட்சிகளும் திட்டமிட்டு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தங்களது அரசியல் லாபத்திற்காக சாதியையும், சாதி இருப்பையும், சாதிய மனப்பான்மையையும் இந்தக் கட்சிகள் இளைஞர்களின் மனதில் திட்டமிட்டு விதைக்கின்றனர். சாதிய மனப்பான்மையை ஒருவரின் மனதில் தக்கவைப்பதற்காக எளிய வழி என்பது இன்னொரு சாதியினரின் மீது வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதே!. வெறுப்பையும், வெற்று உணர்ச்சிகளையும் தூண்டுவதன் மூலமாக அவர்களை தங்களின் அரசியல் நலன்களுக்கு இத்தகைய கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இத்தகைய அரசியல் சூழ்ச்சிக்கு படித்த இளைஞர்கள் எப்படி பலியாகின்றனர் என்பதுதான் ஆச்சர்யமானது. சக மனிதர்களின் சாதியை அடிப்படையாக வைத்து தூண்டப்படும் வெறுப்பிற்கும் வன்மத்திற்கும் இளைஞர்கள் பலியாவது தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. தங்களது ஆற்றலையும் நேரத்தையும் இத்தகைய வெறுப்பிற்கும் வன்மத்திற்குமே செலவிட்டால் அவர்களின் தனிப்பட்ட கல்வி, பொருளாதார வளர்ச்சி எப்படி நிகழும்? அதைப் பற்றி அந்த அரசியல் கட்சிகளுக்குக் கவலை இல்லாமல் போனது ஆச்சரியம் இல்லை ஆனால் அந்தக் கவலை அந்த இளைஞர்களுக்கே இல்லாமல் போனதுதான் ஆச்சர்யம். தங்களது தனிப்பட்ட வளர்ச்சியை விட இன்னொரு சாதியினரின் மீது கொண்ட வெறுப்பும், வன்மமும், பொறாமையும் அத்தனை முதன்மையானதாக இருக்கிறதென்றால் அது அவர்களுக்குக் கொடுக்கும் உளவியல் பலன்கள் அத்தனை பெரிதாகதான் இருக்க வேண்டும்.

இனம், மொழி, மதம் போன்ற அடிப்படைவாத அடையாளங்கள் இன்றைய இளைஞர்களுக்கு மிக அவசியமானவைகளாக இருப்பதற்குக் காரணம் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பிறப்பின் வழி மிக சுலபமாக வந்த இந்த அடையாளங்கள் உதவுகின்றன. இந்த தகவல் தொழில்நுட்ப உலகத்தில் ஏற்படும் புதிய நெருக்கடிகளும், அவை ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்களும் இன்றைய பதின்ம வயதுடைய இளைஞர்களுக்குள் நிறைய போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் போட்டி மனப்பான்மை என்பது சிறுவயதில் இருந்தே அவர்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப்படுகிறது. இயல்பான மனித உரையாடல்கள் என்பதே இல்லாமல் சக மனிதர்களையே ஒரு போட்டியாளராகப் பார்க்கக்கூடிய மனப்பான்மையை இந்த சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக ஒரு தனிநபர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முனைப்பிலேயே எப்போதும் இருக்கிறார். அவர் சார்ந்த ஏதோ ஒன்று மற்றவர்களைவிட அவர்களை உயர்வானவர்களாக காட்டிக்கொள்ளத் தேவைப்படுகிறது. அதற்கு இந்த பிறப்பின் வழி வந்த அடையாளங்கள் உதவுகிறது. அதனால் இந்த அடிப்படைவாத அடையாளங்களைக் கொண்டாடும் போக்கு இளைஞர்களிடம் இன்று அதிகரித்திருக்கிறது. அடிப்படைவாத அடையாளங்களை ஒருவர் தரித்துக் கொள்ளும்போது இயல்பாகவே மற்ற மனிதர்களின் மீது வெறுப்பும், வன்மமும் வந்துவிடுகிறது. இந்த அடிப்படைவாத அடையாளங்களை ஊக்குவிக்கும் அமைப்பாக மதம், மொழி, தேசியம், சாதி போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்புகள் எப்போதும் எங்கும் இருக்கிறது.

ஒரு மதத்தின் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவர் அந்த மதத்தில் பிற்போக்கான அம்சங்களையும், பழைமைவாத கருத்துகளையும், மறு மதிப்பீடு செய்ய முன்வர மாட்டார். மதமும் இத்தகைய அதி தீவிரமான நம்பிக்கைகளையே கோருகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மதம் அதன் கொள்கைகளை, கருத்துகளை, மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ளாமல் இறுகிய நிலையில் இருப்பது ஆபத்தானது. பதின்ம வயது உடைய இளைஞர்களிடம் மதம் அறத்தையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டுமே தவிர வெறுப்பையும், வன்மத்தையும் வளர்க்கக்கூடாது. சமீப காலங்களில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைய வெறுப்பு பேச்சுகளையும், குற்றங்களையும் நாம் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். இந்த வெறுப்பு பேச்சுகளையும், குற்றங்களையும் செய்பவர்கள் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் மதத்தின் வழியாக எழும் இந்த வெறுப்பையும், வன்மத்தையும் இன்னும் தூண்டி விடும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அதன் வழியாக அவர்கள் தங்களுக்கான ஆதரவை ஒருங்கிணைக்க முயல்கிறார்கள். ஒரு வெறுப்பின் வழியாக ஒருங்கிணைப்பு நிகழும்போது அது ஒரு உணர்வு பூர்வமானதாக ஆகிறது. அத்தகைய உணர்வு பூர்வமான ஒருங்கிணைப்பை மதத்தின் பெயரால் இயங்கும் அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
இன்றைய இளைஞர்களின் மனதில் திட்டமிட்டு ஏற்படுத்துகின்ற இந்த சிந்தனை மாற்றங்கள் சமீப காலங்களில் ஒரு அறிவு தளத்தில் ஏற்படாமலே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்து ஏற்படுகிறது. வெறுப்பின் காரணமாகவும், வன்மத்தின் காரணமாகவும் எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இன்றைய இளைஞர்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது. அதுவே பல குற்றங்களுக்குக் காரணமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். சமீபத்தில் மனநலத் துறையில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. “நாம் ஏன் வெறுக்கிறோம்” என்ற தலைப்பில் அந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் இருக்கும் ஒரு கருத்து மிகவும் முக்கியமானது. “நமது சமூகத்தில் காலம் காலமாகப் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கெட்டிப்பட்டுப் போன சிந்தனைகளும், பழைமைவாத கருத்துக்களும், அடிப்படைவாதங்களை நிலைநிறுத்தும் பண்பாடுகளும் மிகவும் இறுக்கமாக நெகிழ்வுத்தன்மை அற்று இருப்பதன் காரணமாக வெறுப்பு என்ற உணர்வு அத்தனை தீவிரமானதாகவும் இளைய தலைமுறையினரிடம் இருக்கிறது. ஒரு மதத்தின்மீதும் அதன் சிந்தனைகளின் மீதும் தீவிரமானவராக மாறும் ஒருவரை இதுபோன்ற பயங்கரவாத செயல்களை நோக்கி ஒரு மதம் திருப்புமானால் நாம் அந்த மதத்தின் சிந்தனைகளையும், இறுக்கத்தையும் மறுபரிசீலனை செய்வது அவசியமானதாகிறது.”

மதத்தின் காரணமாகவும், சாதியின் காரணமாகவும், மொழியின் காரணமாகவும் அல்லது வேறு எந்த அடையாளத்தின் காரணமாகவும் சக மனிதர்களின்மீதான அன்பை மறுத்து, அறத்தை மறுத்து வெறுப்பையும், வன்மத்தையும் மட்டுமே கொண்டு மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் நிகழும்போதெல்லாம் நாம் செய்வதற்கு ஒன்றிருக்கிறது. நம்மை சுய விமர்சனம் செய்து கொள்வதுதான் அது. இந்த அடையாளங்களின் மீதான நமது எண்ணம் என்னவாக இருக்கிறது? இந்த அடையாளங்கள் எந்த வகையில் இவை போன்ற வெறுப்பிற்கும், வன்மத்திற்கும் காரணமாக இருக்கின்றன என்பதைத் திறந்த மனதுடன், அறிவு தளத்தில் நாம் முன்னெடுக்கும் உரையாடல்களின் வழியாகவே இதற்கான தீர்வை நோக்கி செல்லலாம். நாம் கொண்ட இந்த அடையாளங்களின் மீது சுயவிமர்சனங்களும், மறு மதிப்பீடுகளும் செய்து அதை ஆக்கப்பூர்வமானதாகவும், அறம் நிறைந்தததாகவும், சமத்துவமிக்கதாகவும் மாற்றுவதின் வழியாகவே நாம் கொண்ட இந்த அடையாளங்களை நல்லிணக்கம் கொண்டதாக மாற்றிக்கொள்ளலாம். நமது இளைஞர்களை இப்படி நல்லிணக்கம் கொண்டவர்களாகவும், சக மனிதர்களை அவர்களின் அடையாளங்களைக் கடந்து நேசிப்பவர்களாகவும் மாற்ற வேண்டிய பொறுப்பு இந்த சமூக அமைப்பிற்கும், நமக்கும் இருக்கிறது. நம்மை விமர்சனம் செய்து கொள்வதில் இருந்துதான் நாம் அதைத் தொடங்க முடியும்.