இயற்றியது – 1858
முதல் பிரசுரம் – 1896
1)
இன்று உங்களிடம் கையளிபதற்கு
இது மட்டுமே உள்ளது—
இதுவும் ,கூடவே என் இதயமும்—
இதுவும், என் இதயமும், இந்தப் பரந்து
விரிந்த காடும் புல்வெளிகளும்—
சரிபார்த்துக் கொள்ளுங்கள்—
நான் எதையாவது மறந்துவிடப் போகிறேன்.
இதுவும், என் இதயமும் , க்ளோவர் பூ பூத்த
வெளிகளில் குடியிருக்கும் அனைத்துத் தேனீக்களும்.
2)
இயற்றியது – 1858
முதல் பிரசுரம் – 1896
வாளேந்திய சொல்லொன்று உண்டு
சகல ஆயுதங்கள் தரித்தவனைக் கூட
துளைத்துச் செல்லக் கூடியது —
முட்கம்பி போர்த்திய அசைகளை
அது வீசி எறியும்
பின் ஊமையாகும்—
ஆனால் அது எங்கே வீழ்ந்ததென்று
தப்பிப் பிழைத்தவன் சொல்வான்.
நாட்டுப்பற்று நிறைந்த நாளொன்றில்
வீர தீர செயல்களுக்காக
விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட
சகோதரன் ஒருவன் பலியாகியிருப்பான்.
எங்கெல்லாம் கதிரவன் மூச்சிரைக்க ஓடுகிறதோ—
எங்கெல்லாம் இந்தப் பகல் அலைந்து திரிகிறதோ—
அங்கெல்லாம் அது மௌனமாய் ஜனிக்கும்—
அங்கெல்லாம் அதன் வெற்றி தொனிக்கும்
இச்சொல்லைப் போல குறி தவறாத வீரன்
வேறெவனும் உண்டோ!
இதை மிஞ்சிய சாதனை வேறு எதுவும் உண்டோ!
காலத்தின் மேன்மைமிகு இலக்கு
“மறந்து கைவிடப்பட்ட” ஆன்மா ஒன்று
3)
இயற்றியது – 1859
முதலில் பிரசுரமானது – 1878
தோல்வியை மட்டுமே கண்டவனுக்குத் தான்
வெற்றியின் களிப்பு மிக உவப்பானதாயிருக்கும்
அமிர்தத்தை முற்றிலும் ருசிக்க
பெரும் பசி தேவையாயிருக்கிறது.
வெற்றியின் வாகை சூடிய
ஒருவனால் கூட ,அதைத்
தெளிவாக வரையறுக்க
இயலாது.
தோற்று —இறந்து கொண்டிருப்பவனது —
தடைப்பட்ட காதுகளுக்கே
வாதை மிகும் தூரத்து எக்காளம்
மிகத்துல்லியமாகக் கேட்கும்!
4)
இயற்றியது 1859
முதலில் பிரசுரமானது. 1890
ஒரு பூவை என்னிடம் வாங்க நினைக்கிறீர்கள் போலும்
ஆனால் என்னால் அதை ஒருபோதும் விற்க இயலாது—
கடனாக வேண்டுமென்றாலும் கூட
டாஃபடெல் மலர் தன் மஞ்சள் தொப்பியை
வீட்டுக் கதவின் அடியில் அவிழ்க்கும் வரை
க்ளோவர் பூக்களில் அமர்ந்து , தேனீக்கள்
வீரியம் மிக்க ,பழைய கள்ளை உறிஞ்சும் வரை
மட்டுமே என்னால் அதை உங்களிடம் விட்டுத் தர இயலும்
அதைத் தாண்டி ஒரு மணி நேரம் கூட முடியாது .
5)
இயற்றியது – 1859
முதலில் பிரசுரமானது – 1890
பூக்கள் வெட்கி மலரும்
சிட்டுகள் ஒளிந்து நீர் அருந்தும்
வளைந்து வளைந்து அதிரும் நிழல்கள் கொண்ட
சிறு ஓடையை உன்னுள் சுமந்து கொண்டிருக்கிறாயா?
யாரும் அறியாது
அவ்வளவு மௌனமாக அது ஓடுகிறது
எனினும் உன் உயிர் மூச்சுக்கான
சிறு காற்றை, அங்கிருந்து
தான் நித்தம் பருகிக்கொள்கிறாய்—
மலையின் பனி வேகமாக உருண்டோடி வந்து
நதியின் கரை கடந்து
பாலங்களை அடித்துச் செல்லும் —
மார்ச் மாதத்தில் அச்சிறு ஓடையைக் காணலாம்.
பிறகு ,புல்வெளிகள் காய்ந்து தாகத்தில் தவிக்கும்
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கவனமாக இரு
இல்லையெனில் தகிக்கும் மதியம் ஒன்றில்
வாழ்வின் இச்சிறு ஓடை வற்றிவிடப் போகிறது!
6)
இயற்றியது – 1860
முதலில் பிரசுரமானது – 1890
அன்று ஓர் உலகத்தைத் தொலைத்துவிட்டேன்!
யாரேனும் கண்டீர்களா?
தலையில் கட்டியிருக்கும் நட்சத்திர வரிசையை வைத்து
அதனை அடையாளம் காணலாம்!
ஒரு செல்வந்தன் — அதனைக் கவனிக்க மாட்டான்
ஆனால் — என் சிக்கனக் கண்களுக்கு அது
பொன் நாணயங்களை விட கீர்த்தி மிக்கது
ஐயா — எனக்காக அதைக் கண்டுபிடித்துத்
தாருங்களேன்!
7)
இயற்றியது – 1860
முதலில் பிரசுரமானது – 1890
ராபின் பறவை வலசையிலிருந்து
திரும்பும் வேளையில்
நான் உயிரோடில்லையென்றால்,
சிவப்பு கழுத்துப் பட்டி அணிந்த
ஒன்றிற்கு, சிறு ரொட்டித் துண்டொன்றை
என் நினைவாகத் தருக.
உறங்கிக் கொண்டிருப்பதனால்
என்னால் உங்களிடம் நன்றி
சொல்ல முடியவில்லையென்றால்,
பாறாங்கல்லாய் உறைந்த உதடுகளினால்
ஆன மட்டும் முயன்றேன் என்று அறிக!
8)
இயற்றியது — 1860
முதலில் பிரிசுரமானது — 1890
சொர்க்கத்தில் மட்டுமே இனம்காணப்படுபவள்;
தேவதைகளை மட்டுமே துணையாகக் கொண்டவள்;
காடெங்கும் சுற்றியலையும் தேனீக்களால் மட்டுமே,
தான் வேலையற்று விரிந்த பூ அல்ல என்றறிபவள்;
வீசும் காற்று மட்டும் இல்லையென்றால்
வீட்டை விட்டு வெளியேறாது அவளது மணம்;
பரந்த புல்வெளியின் ஒற்றைப் பனித்துளி போல
வண்ணத்துப்பூச்சிகளைத் தவிர வேறு யாராலும் ,
பார்க்கப்படாதவள்.
புல்வெளியின் மீச்சிறு இல்லத்தரசி,
ஆனால் அவளில்லையென்றால்
யாரோ ஒருவருக்கு
தம் இருத்தலை வீடாக்கும்
முகமொன்று காணாமல் போயிருக்கும்!
9)
இயற்றியது – 1861
முதலில் பிரசுரமானது – 1891
சாதாரண நாளொன்றில்—
சாதாரண காற்று வீசிக் கொண்டிருக்கையில்—
அணிகலன் ஒன்றை என் கைகளில் ஏந்தியவாறு
உறங்கச் சென்றேன்.
“அது இருக்கும் , அங்கேயே”
என்று சொல்லிக்கொண்டேன்—
கண்விழித்துப் பார்த்தால்—
அதைக் காணவில்லை—
என் நேர்மையான விரல்களைக்
கடிந்து கொண்டேன்,
ஒரு செவ்வந்தி நினைவு மட்டுமே
இப்போது என்னிடம் உள்ளது—
10)
இயற்றியது – 1861
முதலில் பிரசுரமானது – 1890
ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக
கொள்ளையர்களுக்குப் பிடித்த மாதிரியான
சில வீடுகளை நான் அறிவேன் —
மரப்பட்டைகளால் மூடிய
‘வாவென அழைக்கும் வண்ணம்
தாழ்வான ஜன்னல்கள் பதிந்த
இருவர் பதுங்கி வரக்கூடிய
அளவில் முகப்புடன்:
ஒருவர் கருவிகளை எடுத்துக் கொடுக்க,
அனைவரும் தூங்கிவிட்டனரா என்று
திடுக்கிடாத பழகிய கண்களைக் கொண்டு
மற்றவர் சாவித்துவாரம் வழி பார்க்க !
இரவின் சமையலறை எத்தனை ஒழுங்குடன் காட்சிதரும்
கடிகாரத்தின் மெல்லரவம் மட்டுமே
அதையும் அமைதிப்படுத்தி விடுவார்கள்;
எலிகள் குரைக்காது
அதனால் சுவர்கள் புறம் பேசாது
யாருக்கும் தெரியாது
விரித்து வைக்கப்பட்டிருக்கும் கண் கண்ணாடி
லேசாக அதிர்ந்ததா?
நாட்காட்டி முழித்திருக்கிறதோ?
கால்மிதி கண்கொட்டியதா?
இல்லை விண்மீன்கள் பதட்டப்படுகின்றனவா?
ஒரு வேளை நிலா மாடிப்படியில் வழுக்கி வந்து
யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்கிறதா?
கொள்ளை போகிறது —- எங்கே?
மதுக்குவளையா? கரண்டியா?
காதணியா இல்லை கைக்கடிகாரமா?
பிரக்ஞையற்றுத் தூங்கிக் கொண்டிருக்கும்
கிழவியின் சாயலில் உள்ள
தொன்மையான நகையா?
இந்தப் பகலும் தான் சத்தம் போடுகிறது,
திருட்டு மெல்ல நகர்ந்து வருகிறது.
மூன்றாவது காடத்தி மரம் வரை
சூரியன் விழுந்து விட்டது.
யாரங்கே? என்று அலறுகிறதொரு கோழி.
ரங்கே….ங்கே….கே…. என்று எதிரொலிக்கிறது,
வயதான இணையர் கண்விழிக்க எத்தனிக்கையில்
விடியல் ,வாசற்கதவைத் திறந்து போட்டுவிட்டுச் சென்றதா என்ன?
11)
இயற்றியது – 1861
முதலில் பிரசுரமானது – 1891
என்னால் துக்கத்தைக் கடக்க முடியும்—
துன்பக் கடலில் நீந்திக் கரை சேர்வது
எனக்கு வாடிக்கையானது —
ஆனால் இடையில் கிடைக்கும்
சிறு மகிழ்வு தான் என் பாதத்தை
உடைத்து விடுகிறது .
போதை தலைக்கேறியவனைப் போல—
சிறு கல் கூட பரிகசிக்கும் படி
தடுமாறி விழுகிறேன்.
இது பழக்கமில்லா புதுக் கள்—
அவ்வளவுதான்!
வலிமை என்பது —
ஒழுங்கின் துணை கொண்டு
வலியைத் தக்கவைத்து தாங்கிக்கொள்வதுவே.
அசாத்திய மனிதர்களால்
எந்த பாரத்தையும் சுமக்க முடியும்
அவர்களின் வலிக்கு சிறு களிம்பு கிடைத்தவுடன்
இமயமலையையும் தூக்கும் திறமை பெற்றவர்கள்,
சாதாரண மனிதர்களாகத் துவண்டு விடுவார்கள்.
12)
இயற்றியது – 1861
முதலில் பிரசுரமானது – 1891
நம்பிக்கை என்பது இறகுகளைக் கொண்டது —
பறந்து வந்து ஆன்மாவின் மேல் அமர்ந்து—
வார்த்தைகளற்ற ஒரு பாட்டை இடைவிடாது
பாடக்கூடியது—
புயலில், மேலும் இனிமையுடன் ஒலிக்கும் இப்பாட்டு—
பலருக்கும் இதமளிக்கும் இச்சின்னஞ்சிறிய சிட்டின்
இசையை— வெட்கங்கெட்ட கடும் சூறாவளி ஒன்று —
நிறுத்தி விடக் கூடும்—
பனி நிறைந்த கூதிர் நிலங்களிலும்
பெயரறியா நடுக்கடலிலும்—
இப்பாட்டைக் கேட்டிருக்கிறேன்
ஆனால் எந்நாளிலும், எந்நிலையிலும்
என்னுடைய சிறு துகளைக் கூட அது
பதிலுக்குக் கோரியதில்லை.
13)
இயற்றியது – 1862
முதலில் பிரசுரமானது – 1891
அது இறப்பல்ல
ஏனெனில் என்னால் எழுந்து நிற்க முடிந்தது.
இறந்தவர்கள் எல்லாம் கீழே அல்லவா கிடப்பார்கள்—
அது இரவல்ல
ஏனெனில் ஆலயமணியின் நாக்குகள் அனைத்தும்
மதியத்தின் வருகையைக் கட்டியம் கூறக் காத்திருந்தன.
அது உறைப்பனியல்ல
ஏனெனில் என் தசைகளில் வன்காற்று—
ஊறுவதை— உணர முடிந்தது
அது தீயல்ல—
ஏனெனில் என் பளிங்குப் பாதங்கள், திருச்சபையின்
பீடத்தைக் குளிர்வித்தன—
ஆனால்,இதுவெல்லாமும் போல அது ருசித்தது,
நல்லடக்கத்திற்காக சீரான வரிசையில்
காத்திருக்கும் பிணங்களைப் பார்த்தால்
என்னுடையது, நினைவிற்கு வந்தது—
வாழ்வை மழித்து , சட்டகத்திற்குள்
பொருத்தியது போல,
சாவி ஒன்றில்லாமல் என் மூச்சு நின்றுவிடும் போல
ஒரு நள்ளிரவைப் போல —-
டிக் டிக்கென்று ஓடிக்கொண்டிருந்த அனைத்தும்,
நொடியில் நின்றுவிட்டதைப் போல—
எல்லா திக்கிலிருந்தும் இந்த வெளி
என்னைக் கண்கொட்டாமல் முறைத்துப் பார்க்கும் நேரம்—
எலும்புருக்கும் உறைபனியும், இலையுதிர்கால
தொடக்கத்தின் காலைகளும்
நிலத்தின் துடிப்பை நிறுத்திவிடும் நேரம்—
ஆனால் பெருங்குழப்பத்தைப் போல — முடிவற்று ,
அலட்சியமாக — வாய்ப்பேயளிக்காமல்—
நடுக்கடலில் பாய்மரக் கூம்பு கூடத் தெரியாமல்
நிலம் எங்கிருக்கிறது என்றறியாத
இந்த விரக்தியை என்னவென்று சொல்வது?
14)
இயற்றியது – 1862
முதலில் பிரசுரமானது – 1890
மதிப்புமிக்கவரே! —என்னிடம் இரண்டு சொத்துக்களை—
விட்டுச் சென்றுள்ளீர்கள்.
ஒன்று காதலின் சொத்து,
பரலோகத்தின் பிதாவிற்குத் தகுதியான
மகோன்னதக் காதல்.
மற்றது,
சமுத்திரத்தைப் போல அகண்ட வலியின் வரம்புகளை
விட்டுச் சென்றுள்ளீர்
காலத்திற்கும் ,என்றென்றைக்குமான நித்தியத்திற்கும்,
நடுவில் —உமது பிரக்ஞையும்— நானும் .
15)
இயற்றியது – 1862
முதலில் பிரசுரமானது – 1890
வெறுமையின் ஒரு கூறு வலியில் உள்ளது—
அது எப்போது தொடங்கியது , அது இல்லாத
காலம் என்று ஒன்று உள்ளதா—
என்பதையெல்லாம் அவ்வலியால் நினைவு கூர முடியாது.
அதற்கு தன்னைத்தவிர வேறு எதிர்காலங்கள்
இல்லை —- அதன் முடிவிலியில்,
புதிய காலங்களை உணரும்—
ஞானம் பெற்ற கடந்த காலங்கள்
பொதிந்துள்ளன.
16)
இயற்றியது – 1863
முதலில் பிரசுரமானது – 1891
எண்ணம் ஒன்று என் மனதில் முகிழ்ந்தது—
முன்பே ஒரு முறை முகிழத் தொடங்கி
பாதியிலே நின்று போன ஒன்றுதான்—
எந்த வருடம் என்று சரியாக நினைவில் இல்லை—
எங்கே சென்றதென்று தெரியவில்லை—
மறுபடி ஏன் வந்ததென்றும் தெரியவில்லை—
அது என்னவென்று அறுதியிட்டுச் சொல்லும்
கலையும் எனக்குக் கைவரவில்லை—
எங்கோ ஆன்மாவினுள் —அதை முன்பே
சந்தித்திருக்கிறேன் என்று தெரியும்—
அந்தக் கூடுகையை நினைவுபடுத்தியது —
அவ்வளவுதான் வேறொன்றுமில்லை—-
அதன்பின் ஒரு முறை கூட அது வரவேயில்லை.—
17)
இயற்றியது – 1864
முதலில் பிரசுரமானது – 1890
மலை ,
அதன் மாறாத் தொல் இருக்கையில் இவ்வெளியில் அமர்ந்து
ஆட்சி புரிகிறது .
சகலத்தையும் கவனித்தபடி,
சகலத்தையும் விசாரித்தபடி.
தந்தையின் காலடியில் இயங்கும் பிள்ளைகளைப் போல,
மலையின் காலடியில் காலங்கள் மண்டியிட்டுப்
பிரார்திக்கின்றன.
மலை காலத்தின் பாட்டன்,
விடியலின் முப்பாட்டன்.
18)
இயற்றியது – 1864
முதலில் பிரசுரமானது – 1890
என்னால் ஒரு மனதை சிதையாமல் மீட்க முடியுமானால்,
என் வாழ்வு வீணில்லை
ஓருயிரின் வலியைப் போக்கமுடியுமானால்,
ஒரு காயத்தை ஆற்றமுடியுமானால்
மயங்கி விழுந்த ஒரு ராபின் பறவையை
அதன் கூட்டில் சேர்ப்பிக்க முடியுமானால்
என் வாழ்வு வீணில்லை.