கத்தாரிலிருந்து அப்துல் ரஷீத் அழைத்திருந்தார்.  “அண்ணே. மதுரை புத்தகக் கண்காட்சியிலிருந்து உங்கள் லைவ் தினமும் பார்த்தோம். அருமையாக இருந்தது.’’ இதுபோன்று தினமும் நிறைய தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்தன.

புத்தககக் கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு எந்த இடமும் மரியாதையும் இல்லை என்ற குரல் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. 50 புத்தகம் எழுதிய எழுத்தாளனுக்குக் கூட அவன் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பக ஸ்டால் அங்கு இல்லையென்றால் அமர ஒரு நாற்காலிகூட கிடைக்காது. அவன் அங்கிருக்கிறான் என்பதை அவனது வாசகன் ஒருவனால் அங்கே கண்டறிய முடியாது. அதன் மேடைகள் பெரும்பாலும் வெற்று அரட்டை அரங்குகள். இதை உடைக்க பல ஆண்டுகளாக நானும் முயற்சித்திருக்கிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் நவீன படைப்பாளிகளுக்கான சிற்றரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறேன். தொலைக்காட்சிகளில் எனக்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் தொடர முடியாதபடி ஒரு கலாச்சார மொண்ணைத்தனம் நிறைந்த சூழல் பெரும் மனச்சோர்வையே ஏற்படுத்தியது. ஆனால் ‘சும்மா’ இருக்க இந்த மனம் விடுவதில்லை.

இந்த ஆண்டு மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கிலிருந்து எழுத்தாளர்களுடனான உரையாடலின் நேரலை நிகழ்ச்சி ஒன்று செய்யலாம் என நண்பர் ஆத்மார்த்தி சொன்னார் கண்காட்சிக்கு இரண்டு நாட்கள்முன்பு இந்த எண்ணம் ஒரு நாள் காலை பூதமென வந்து பிடித்துக்கொண்டது. ஒரு மணி நேரத்தில் அனைவரிடமும் பேசி நிகழ்ச்சி நிரலையும் தயாரித்து வெளியிட்டுவிட்டு மதுரை கிளம்பிவிட்டேன். ஸ்ருதி டி.வி-.யும் எங்களது இந்த முயற்சியில் இணைந்து கொண்டது.

மதுரை வெய்யில், கண்ணகி அந்த ஊரை எரித்தபோது எப்படி இருந்ததோ அதைவிட உக்கிரமாக இருந்தது. எல்லா ஊர்களையும்போல புத்தகக் கண்காட்சி சோர்ந்துகிடந்தது. கூட்டம் குறைவு. உயிர்மை அரங்கிற்கு அருகில் ஜெனரேட்டர் அலறல் வேறு. எல்லா எதிர்மறை அம்சங்களோடும் நிகழ்வைத் தொடங்கினோம். செப்டம்பர் 1ஆம் தேதி ஸ்ருதி டிவி வரவில்லை என்பதால் ஃபேஸ்புக் நேரலையாக அ.முத்துக்கிருஷ்ணனுடன் உரையாடலைத் தொடங்கினோம். தடங்கலின்றி சிறப்பாகச் சென்றது. அடுத்த நாளிலிருந்து யூ-டியூப் லைவ் கொடுக்க ஆரம்பித்தோம். உலகின் பல முனைகளிலிருந்தும் வரவேற்றுக் குரல்கள் கேட்டன. 2ஆம் தேதி தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழல் குறித்து ந.முருகேச பாண்டியன், 3ஆம் தேதி சினிமாவின் அழகியல் குறித்து ஷாஜி, 4ஆம் தேதி புனைகதை மொழி குறித்து சுரேஷ்குமார இந்திரஜித். 5ஆம் தேதி தமிழகத்தில் இடம்பெயரும் தொழிலாளிகள் குறித்து சுப்ரபாரதி மணியன், அதே நாளன்று தமிழ்க்கவிதை நிலம் குறித்து ஆத்மார்த்தியுடன் அதீதன் சுரேன், பெரு விஷ்ணுகுமார், ச.துரை, வே.நி.சூர்யா பங்கேற்ற உரையாடல், 6ஆம் தேதி புலம் பெயர் இலக்கியம் குறித்து வ.ஐ.ச ஜெயபாலன், அதே தினத்தன்று கதைமொழி குறித்து எஸ்.செந்தில்குமார், 7ஆம் தேதி கலாப்ரியா-, லிபி ஆரண்யா நிகழ்த்திய நவீன கவிதை குறித்த உரையாடல் 8ஆம் தேதி தமிழின் விமர்சனப் போக்குகள் குறித்து அ.ராமசாமி, அதே தினத்தன்று வெறுப்பின் உளவியல் மற்றும் அரசியல் குறித்து டாகடர் சிவபாலன் இளங்கோவன் என தொடர் இலக்கிய விழாவாகவே இது நிகழ்ந்தது.

இந்த உரையாடல்களில் பங்கேற்றுச் சிறப்பித்த சிறப்பித்த பழனிக்குமார், பேராசிரியர் பிரபாகர், ஸ்ரீ ஷங்கர், யவனிகா ஸ்ரீ ராம், மதுரை சரவணன், ரமேஷ் இளமதி, பேராசிரியர் சுபத்ரா, மே.அருணாச்சாலம், தீபா நாகராணி, கவிதா, பேராசிரியர் முரளி, அமர்நாத் பிச்சை மணி, சுருளி, அதீதன் சுரேன், பசும்பொன், சமயவேல், இந்திரகுமார், சந்தோஷ் கொளஞ்சி உள்ளிட்ட நண்பர்களுக்கும் பெயர் தெரியாத வாசகர்கள் பலருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னோடு கவிஞர் ஆத்மார்த்தி இணைந்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

சிந்திப்பவனுக்கு மேடை தேவை இல்லை. ஒரு புத்தகக் கடைவாசல் போதும். கேட்பவனுக்கு இருக்கை தேவை இல்லை. காதுகளும் இதயமும் போதும். இதைத்தான் இந்த நாட்களில் உயிர்மை நடத்திய இந் நிகழ்வுகள் நிரூபித்தன. உயிர்மை பில் டேபில் அருகே அமர்ந்து தாங்கள் நேசிக்கும் எழுத்தாளன் அங்கு பேசுவதை சூழ நின்று வாசகர்கள் கேட்டார்கள். யூ-டியூப் லைவ் வழியாகப் பார்த்தார்கள். தொலைவிலிருப்பவர்களுக்கு புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற அனுபவம். வாசகர்கள் சுற்றிலும் நடந்து கொண்டிருக்க எழுத்தாளர்கள் தங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டது இந்தப் புத்தகக் கண்காட்சியை ஒரு அசலான அறிவுச்சூழலாக மாற்றியது. ஸ்ருதி டிவி கபிலன் மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் இந்த தொடர் நேரலை நிகழ்வைச் செய்தார். உயிர்மை டிவியிலும் ஸ்ருதி டிவியிலும் மாற்றி மாற்றி இந்த நேரலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. இரண்டு யூ-டியூப் சேனல்கள் எவ்வாறு மனப்பூர்வமாக இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. தினமும் ஒவ்வொரு எழுத்தாளருடன் ஒரு மணி நேரத்திற்குமேல் நேரலை விவாதம் நடைபெற்றது.

மதுரை புத்தகக் கண்காட்சியில் பெரிய விற்பனை இல்லை. ஆனால் சிரமங்கள், பொருட்செலவு பாராமல் இந்தத் தொடர் நிகழ்வை வெற்றிகரமாகச் செய்து முடித்தோம்.

வரும் காலத்தில் புத்தகக்கண்காட்சிகளிலிருந்து புதிய புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள், கவிதை வாசிப்பு, கதை சொல்லல் என ஏராளமானவற்றை செய்யப்போகிறோம். ஒரு அரங்கில் 50 பேர் ஒரு பேச்சைக் கேட்பார்கள். ஆனால் இந்த முயற்சியின்மூலமாக ஆயிரக்கணக்கானோரை கேட்க வைப்போம். தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் எங்களால் இயன்றவரை பயன்படுத்துவோம். இணைந்திருங்கள். எழுத்தாளனுக்கான இடம் மறுக்கப்பட்டால் எழுத்தாளன் எங்கு நிற்கிறானோ அதுவே அவனுக்கான இடமாக மாறும்.

10 Sep 2019, 15:47