இந்திய அளவில் சினிமாவில் எதையாவது, யாரோ ஒருவர் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். மிகச் சிலது வெற்றியடைகிறது. பலது காணாமல் போய்விடுகிறது. சில விஷயங்களை பிரபலங்கள் தொடும்போது அது மக்கள் கண்களில் பட்டு பெயரெடுக்கிறது. தொடர்ந்து மலையாளப் படங்கள் கொடுக்கும் வித்தியாசமான கதைக்களன், திரைக்கதைபோல இந்திய அளவில் சிறப்பாய் யாரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களா? என்றால் கொஞ்சமே கொஞ்சம் தமிழ் சினிமாக்கள் அந்த லிஸ்ட்டில் சேரும். அதில் முக்கியமான படம் ‘ஒத்த செருப்பு’.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’ என்று ஒரு சில படைப்புகளைப் பற்றி பேசும்போது அது சம்பந்தப்பட்ட அமைப்பு மற்றும் சாதிய படமாய்தான் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், அந்த அமைப்பினர் எதிர் ஜாதி, அமைப்பினர் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமைக்காக படமெடுத்தால் அதைக் கொண்டாட மாட்டார்கள். ஏன், பேசக்கூட மாட்டார்கள். இப்படியான அவலம் இங்கே நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதை நான் குற்றச்சாட்டாகவே முன்வைக்கிறேன். உதாரணம், சமீபத்தில் வெளியான ‘மனுஷங்கடா’ எனும் படம். படம் பேசியது ஒடுக்கப்பட்ட இறந்த மனிதரின் சடலத்தை பொதுவழியில் கொண்டுபோக முடியாத அவலத்தை. இயக்கியவர் ஜாதி பார்க்கிறவர் அல்ல. ஆனால் ஒடுக்கப்பட்ட குரூப்பில் இல்லாதவர். அதனால் படத்தைப் பற்றி எந்த ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த தயாரிப்பாளரோ, இயக்குனரோ அல்லாத படத்தை இவர்கள் கொண்டாட மாட்டார்கள், அது எத்தனை நிஜமாய் இருந்தாலும். அத்தனை துவேஷம்.

எல்லாம் சரி, ஒத்த செருப்புக்கும் இந்தப் புலம்பலுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டீர்களானால் நிச்சயம் இருக்கிறது. சிறந்ததை யார் அளித்தாலும் கொண்டாட பழகவில்லை நாம். இதை, இவர்கள் செய்தால்தான் கொண்டாட வேண்டும் என்று முன் முடிவோடுதான் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இணையத்தில் குரூப்பிசம் அதிகம். அந்தவகையில், பார்த்திபனின் ஒத்த செருப்பை கொண்டாடுவதற்கும் ஏதோ ஒரு மனத்தடை சில குரூப்புகளுக்கு இருக்கத்தான் செய்கிறது.

சரி, படத்துக்கு வருவோம். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த ஒத்த செருப்பில்? கதை, திரைக்கதை, வசனமெழுதி, இயக்கியவரே இதில் நடித்துமிருக்கிறார். அவர் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது ஓர் ஸ்பெஷல். ரெண்டு மணி நேரமெல்லாம் ஒரே ஆளை பார்க்க முடியுமா? பார்த்திபனின் அதிபுத்திசாலித்தனமான பேச்சை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? இதெல்லாம் அவார்டு படமாய்த்தான் இருக்கும். என்கிற முன்முடிவோடு படம் பார்க்க உட்கார்ந்தால்.. உங்கள் முன்முடிவை மொத்தமாய் மாற்றிவிடும் இந்த ஒத்த செருப்பு.

ஒரு கொலை கேஸில் சந்தேகத்துக்குரிய நபராய் மாசிலாமணி ஸ்டேசனுக்கு கொண்டுவரப் படுகிறார். அதற்கான விசாரணை மெல்ல மெல்ல, மேலும் ரெண்டு கொலைகளை அவர்தான் செய்திருக்கிறார் என்பதுபோல போய், இல்லை செய்தேன், செய்யலை என்று விசாரணைக்குண்டான அத்தனை குழப்பங்களுடன் முதல் பாதி போகிறது. இரண்டாம் பாதி முடிச்சவிழ்க்கும்போதுதான் உங்களில் பலபேர் முன்முடிவை மாற்றி நிமிர்ந்து உட்கார ஆரம்பிப்பீர்கள். இக்கதை இன்றைய சமுதாயத்தைப் பேசுகிறது. அரசியல் பேசுகிறது. காதலை, காமத்தை, துரோகத்தை, வன்மத்தை, அன்பை என எல்லாவற்றையும் பேசுகிறது. என்ன இல்லை இந்த ஒத்த செருப்பில். அத்தனை கமர்ஷியல் விஷயங்கள் இருக்கிறது இந்த ஒத்த செருப்பில்.

இப்படம் ஒரு மோனோ ஆக்டிங் படம் என்பீர்களானால் ஆம். ஒரு சிறந்த ஒலிச்சித்திரம் என்பீர்களானால் ஆம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எனக்கு பார்த்திபன் மட்டும் தெரியவில்லை – உடனிருக்கும் ஏசி, சைக்காலஜிட், சாமி போன்ற கேரக்டர்களும் உங்க மனக்கண்ணுக்குத் தெரிந்தார்கள் என்றால் ஆம் அதுவும் நிஜம். அதுவே கதை சொன்னவர், எழுதியவர், நடித்தவரின் வெற்றி

ஓரிரு இடங்களில் வசனங்களில் விமர்சனமாய் வைக்கப்படும் வழக்கமான பார்த்திபனின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. ஆனால் பல இடங்களில் ஓர் தேர்ந்த எழுத்தாளனின் கைவண்ணமாய் வசனங்கள். குறிப்பாக வாழைப்பூ வடை சுடும் காட்சியும், அதன் பின்னணியில் உள்ள ரொமான்ஸும். வாவ்.. படம் நெடுக, சர்காசமாய் பல வசனங்கள். பல இடங்களில் வரும் சின்னச்சின்ன நகைச்சுவை. கதையை அடுத்தடுத்த காட்சிகளுக்கான தளத்தை வசனங்கள்மூலமாகவே நம்மை கொண்டுபோய் நிறுத்தும் எழுத்து. ஓர் சிறந்த எழுத்தாளனின் நம்பிக்கையை ஒத்த செருப்பு நிருபிக்கிறது.

சிறப்பான ஒலியமைப்பு டிசைனின் மூலமாய் மற்ற கேரக்டர்களை நம் மனக்கண்ணில் ஓட வைத்த ஜாலத்தை செய்த ரசூல் பூக்குட்டிக்கு வாழ்த்துகள்.

நான் இங்க நின்னேன். அங்கே போனேன். இப்படி கொலை செய்தேன் என்று மாசிலாமணி நடித்துக் காட்டும்போது அதற்கான எடிட்டிங் செய்திருக்கும் சுதர்சனுக்கும், வாழ்த்துகள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரியபலம். ஓர் சின்ன அறை, அதற்கே உரிய லைட்டிங், ஒரே ஒரு நடிகன். எங்கே படம் பார்க்கும் பார்வையாளனை சலிப்பு ஏற்படுத்தவில்லை. அதுவே ஓர் பெரிய வெற்றி. கேமரா நகர்கிறது. பார்வையாளனாய், எதிரே நிற்கும் கேரக்டராய். மாசிலாமணியை தொடர்பவராய் ஹாட்ஸ் ஆப் ராம்ஜி.

இது உலகப் படமா? இதுபோல ஒரு படம் வந்திருக்கே? சாதாரண கிரைம் கதையை ஒலிச்சித்திரமாக கேட்டதுபோல இருக்கு? இதெல்லாம் கமல் மாதிரியான நடிகன் செய்யவேண்டியது பார்த்திபனுக்கு எதுக்கு? படம் ஓடுமா? இதுபோன்ற பல விமர்சனங்களும், முன்முடிவுகளோடு படம் பார்க்காமல் கருத்து சொல்கிறவர்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். ஒத்த செருப்பு, ஓர் மிகச்சிறந்த சினிமா அனுபவம். பார்த்துவிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க… மிகச்சிறந்த அனுபவத்தை அளித்திருக்கும் கலைஞனை கொண்டாடுங்கள். அதுவே அக்கலைக்கும், கலைஞனுக்கும் நாம் செய்யும் மரியாதை.