நவீன தமிழ் இலக்கிய வெளியின் முக்கிய அடையாளங்களில் ஒருவரான தோப்பில் மீரானின் மரணம் அதில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்ச்சூழலில் இஸ்லாமிய மத இருப்பு சார்ந்த கடும் விமர்சனங்களை முதன் முதலாக நாவலில் முன்வைத்தவர் தோப்பில் மீரான். தோப்பிலின் நாவல்கள் தமிழ் இஸ்லாமிய வெளியிலும், இலக்கிய வெளியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

தோப்பில் மீரான் 1944ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி குமரி மாவட்ட கடலோரக் கிராமமான தேங்காப்பட்டணத்தில் அப்துல்காதர் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தோப்பில் என்பது அவரது ஊரில் அவர் வசிக்கும் பகுதியைக் குறிக்கும். இளமைக் காலத்தில் பள்ளிப்படிப்பைச் சொந்த ஊரில் படித்த அவர் கல்லூரிப் படிப்பை நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில் நிறைவு செய்தார். கல்லூரி காலத்திலேயே மீரானுக்குத் தமிழ் இலக்கியத்தின்மீதான ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் தொடக்கத்தில் எல்லோரையும்போல் கவிதைகளில் தன் படைப்பு செயல்பாட்டைத் தொடங்கிய மீரான் பின்னர், நாவல்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அதே நேரத்தில் மீரான் புனைவு எழுத்தாளராக மாறியது அவரின் நடுத்தர வயதில். சொந்த ஊரில் அவர் வாழ்ந்த பகுதி ஒதுக்கப்பட்ட பகுதியாக இருந்தது. அவரின் வீட்டிற்குப் பின்னால் சுடுகாடு ஒன்று இருந்தது. அதற்குத் தோப்பு என்று பெயர். மிகவும் பின்தங்கிய பகுதி. அதனால்தான் தன் பெயருக்குப் பின்னால் தோப்பில் என்பதை சேர்த்துக் கொண்டார். கல்லூரி காலத்திற்குப் பிறகு தீவிரமாக எழுத ஆரம்பித்த மீரான் பின்னர் தொழில் நிமித்தமாகச் சொந்த ஊரில் இருந்து புலம்பெயர்ந்து நெல்லைப் பேட்டையில் குடியேறினார். அது காயிதேமில்லத்தின் பூர்வீக வீட்டின் அருகில் இருந்தது. நெல்லைக்குப் புலம்பெயர்ந்தபின் மீரான் அங்கும் தொடர்ந்து எழுதினார். இந்நிலையில் ‘கடலோர கிராமத்தின் கதை’ நாவல் 1988இல் மீரானிடமிருந்து வெளிவந்தது. வெளிவந்த காலத்தில் நாவல் அதிகம் விற்பனையாகவில்லை. அறிமுகமும் ஆகவில்லை. பின்னர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருதிற்குப் பிறகுதான் அந்நாவல் வெளி உலகிற்கு அறியப்பட்டது. அதில் தன் சொந்த ஊரில் ஆதிகாலத்தில் நிலவிய நம்பிக்கைச் சார்ந்த சடங்குகளைக் கேள்விக்குள்ளாக்கி இருப்பார். மேலும் அந்த ஊரில் முன்பொரு காலத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ நடைமுறைகளையும், உழைக்கும் வர்க்கம் அடிமையாக நடத்தப்பட்டதையும் விமர்சித்திருப்பார். குறிப்பாக, ஹாஜியார் கதாபாத்திரங்கள் அவர் நாவல்களில் அதிகம் இடம்பெறும் ஒன்றாகும். மேலும் முதலாளிகளும் வந்துவிட்டுச் செல்வார்கள். இங்கு பல தருணங்களில் ஹாஜியாரே முதலாளியாக இருப்பார். ஹாஜியார் என்பவர் மெக்கா புனிதப்பயணம் மேற்கொண்டவர். நாவலின் கருவான அவரின் சொந்த ஊர் ஆரம்ப காலத்தில் அடிப்படைவாதம் காரணமாக நவீன கல்விமுறையை ஏற்கவில்லை. மேலும் பண்பாட்டில் எந்த நவீனங்களையும் அது ஏற்றுக்கொள்ள மறுத்தது. விளைவு, பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஆண்களில் பலர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாதவர்களாக இருந்தார்கள். மேலும் அங்குள்ள இஸ்லாமியர்களின் பேச்சு மொழியே மிகவும் கொச்சையானதாக, மலையாள வாடை மிகுந்ததாக இருக்கும். மேலும் பேச்சு மொழியில் “அடதள்ளே” என்பது இன்றளவும் பிரபலம். இது தாயை முன்னிறுத்திக் கொச்சையாக ஒருவரைக் குறிப்பிடும் சொல்லாகும். மேலும் அங்குள்ள கலப்பின முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தங்களை அரேபிய வழித்தோன்றல் என்று அழைத்துக்கொண்டனர். மேலும் தங்ஙள் என்ற மரபினர் தங்களை முகமது நபியின் பரம்பரையினர் என்று அழைத்துக்கொண்டர். கேரளாவில் அதிகம் வாழும் இவர்கள், தமிழ்நாட்டில் குடியேறிய ஒரே இடம் தேங்காப்பட்டணம். இவர்களை மற்ற முஸ்லிம்கள் மிகுந்த மரியாதையுடன் அணுகினர். மேலும் அன்றைய காலத்தில் இந்த ஊரில் பழமையைக் கடக்க முயற்சித்தவர்கள் அனைவருமே கேலிக்கு ஆளானார்கள். பல தருணங்களில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டார்கள். முல்லாக்கள் சார்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தக் கிராமத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது. அதுதான் இப்படியான பழைமை நிலைநிற்றலுக்குக் காரணம். இதன் தொடர்ச்சியில் கடலோர கிராமத்தின் கதை நாவல் எதார்த்தவாத பாணியில் இந்தக் கதைகளத்தை நகர்த்திச் சென்றது. மேலும் அதன் புனைவாக்கம் ஒரு கிராமம் பற்றிய எளிய சித்திரத்தை வாசகனுக்கு அளித்தது. கடலோர கிராமத்தின் கதையானது வாசிப்பவர்களைப் பலமுறை வாசிக்க வைக்கும் நாவல். இந்நாவலின் கதையை மீரான் தன் தந்தையிடமிருந்து கேட்டறிந்ததாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். மேலும் இந்நாவல் மீரானின் சொந்த ஊரான தேங்காப்பட்டணத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவர் ஊருக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணம் தெரு போன்ற நாவல்கள் தொடர்ந்து வெளிவந்தன. இதில் துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி ஆகிய மூன்றுமே ஒருவகையில் கடலோர கிராமத்தின் தொடர்ச்சி. ஒவ்வொன்றும் தேங்காப்பட்டணத்தின் ஒவ்வொரு மூலையையும் கதைவெளியாக முன்வைத்தன. இதில் நிலப்பிரபுக்கள் கதாபாத்திர வடிவில் அதிகம் விமர்சிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்டைய அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சாய்வுநாற்காலி என்பது நிலப் பிரபுக்களின் சிம்மாசனம். அங்கிருந்து கொண்டுதான் தன் பணியாளர்களுக்கு நிலப் பிரபுக்கள் உத்தரவிடுவார்கள். சாய்வு நாற்காலி  ஒரு  குறியீடாக அந்தப் பிரதேசத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவத்தைக் கேள்விக்குட்படுத்தியது. தென்பத்தன் கிராமத்தின் அரபிக்காற்றும், திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் அரசியல் ஆளுமைகளும் இந்நாவல்களில் நம்மைக் கிறுகிறுக்க வைக்கின்றன. கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்பிற்கு அது எந்தக் குந்தகத்தையும் விளைவிக்கவில்லை. முஸ்தபாகண் கதாபாத்திரத்தின் மன ஓட்டத்தோடு இணைந்து நாமும் அந்தக் கேரளக்கரைகளில் மிக எளிதாகப் பயணம் செய்து மீளமுடிகிறது.

இதன் தொடர்ச்சியில் 1997இல் சாய்வுநாற்காலி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மேலும் 2008இல் அவர் வெளியிட்ட அஞ்சுவண்ணம் தெரு நாவல் குமரி மாவட்டம் தக்கலை இஸ்லாமியர்களை மையப்படுத்தியது. குறிப்பாக தர்கா சார்ந்த வாழ்க்கை பண்பாட்டு முறையியலைப் புனைவாக வெளிப்படுத்துவது. அதாவது தர்கா மினராவின் உயரத்தைவிட தன் வீட்டை உயரமாக ஒருவர் கட்டினால் அவர் வாழ்வில் கெடுதல் நிகழும், அவர் முன்னேற மாட்டார் என்றொரு நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது. ஆகவே ஒருவர் தர்கா கோபுர உயரத்தைவிட உயரம் குறைவாகவே தன் வீட்டை அமைக்க வேண்டும். இது கோவிலின் கோபுரத்திற்கும் பொருந்தும். மேலும் ஆதிகாலத்திற்குத் திரும்பும் தொன்மங்கள் நிறைய இந்நாவலில் உள்ளன. ஜின்கள் என்ற பூதங்கள் பற்றிய கதைகளும் நாவல்களின் ஓரமாக வலம் வருகின்றன. மீரானின் கலைப்படைப்பில் அஞ்சுவண்ணம் தெரு ஒரு முக்கிய வரவு.

நாவல்களைத் தொடர்ந்து மீரான் சிறுகதைகளையும் அதிக அளவில் எழுதினார். அனந்த சயனம் காலனி, அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, ஒரு குட்டித் தீவின் வரிப்படம், வேர்களின் பேச்சு-, தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் போன்ற கதைகள் அவரிடமிருந்து வெளிவந்தன. இது குமரி மாவட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கை பண்பாட்டுப் பதிவுகளை உள்ளடக்கி இருக்கிறது. மேலும் மீரானைப் பொறுத்தவரை நாவல்களின் இடத்தை அவரின் சிறுகதைகள் அடைய முடியவில்லை. சில தொகுப்புகளில் வடிவ சிக்கல்கள் இருந்தன. இருந்தும் இஸ்லாமிய வாழ்க்கைப் பதிவை அதற்குள் கதைவெளியாக மீரான் கொண்டுவந்தார். மேலும் அவரின் சிறுகதைகள் மேல்தட்டு மனிதர்கள் தங்களை மேலும் உயர்த்திக்கொள்ள, நிராதரவான மனிதர்கள் தங்களைத் தனிமையாக உணர்ந்துகொள்ளும், ஏக்கத்துடன் தவிக்கும் மன உணர்வைப் பிரதிபலித்தன. இதன்மூலம் அவரது சிறுகதைகள் கிராமத்து எளிய மனிதர்களை, அவர்களின் துயரங்களைக் கதைமாந்தர்களாக முன்வைத்தன. 1980இல் அவர் எழுதிய இறக்கை இழந்த பறவைகள் அதற்கான சிறந்த உதாரணம்.

மீரானுக்கு மலையாள மொழி அறிவு உண்டு. அதை அவர் சரியான முறையில் பிழைப்புவாதம் என்பதைக் கடந்த ஒன்றாகப் பயன்படுத்தினார். இதனடிப்படையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றிய வரலாற்று அறிவு அவருக்குண்டு. மேலும் மலையாள எழுத்தாளர்கள் பலருடன் அவருக்கு நட்புண்டு. இதன் தொடர்ச்சியில் எம்.என்.காரசேரி எழுதிய வைக்கம் பஷீரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். தெய்வத்தின் கண்ணே என்ற மலையாள நூலையும் தமிழில் மொழிபெயர்த்தார். மேலும் அரபுத்தமிழ் சார்ந்த பல அரிய ஆவணங்கள் காயிதேமில்லத் குடும்பத்தினரிடமிருந்து இவருக்குக் கிடைத்தன. பின்னர் அதை அரபு மொழி தெரிந்த ஒருவரின் துணைகொண்டு மொழிபெயர்க்க எண்ணினார் மீரான். ஆனால் அதை சில காரணங்களால் அவரால் தொடர முடியவில்லை. அதைப்பற்றிய வருத்தம் அவருக்குக் கடைசிவரை இருந்தது.

தோப்பில் மீரானைப் பொறுத்தவரை மலையாளத்தின் வைக்கம் பஷீருக்கு இணையாக வராவிட்டாலும் அதற்கு அடுத்தநிலையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர். ஆனால் அவருக்குத் தமிழ் இலக்கிய உலகம் போதிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பதே உண்மை. அதிலும் மத அடையாளத்தைத்தான் முதன்மையாக முன்வைத்தது. இந்நிலையில் மலையாள உலகம் அவரை அதிகம் கண்டுகொண்டது அவருக்கான ஒருவகை அங்கீகாரமே. இவ்வாறாக, தமிழின் மிக முக்கிய ஆளுமையான தோப்பில் மீரான் தன் படைப்புகளால் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

mohammed.peer1@gmail.com