வரலாற்றை வாசித்தல்

இரு விள்ளல்கள்

  1. தீமைகளைக் கையாள்வது தீமையுடன் நடிப்பது தீமையுடன் விளையாடுவது பைசாசத்துடன் தர்க்கிப்பது என்பது மனித மனதின் சாத்தியப்பாடுகளைச் சோதிப்பதுதான். பயங்கரம் பற்றிய அச்சமும் அதன்மீதான தவிர்க்க முடியாத மோகமும் நம்மை இயக்கிச் செல்கின்றன. ஒருவகையில் கலையென்பதே பயங்கரங்களை வசியம் செய்தும் வசப்படுத்தியும் தியானமாக மாற்றுவதன் உத்திதானோ எனத் தோன்றுகிறது.

ப்ரேம் ரமேஷ் உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு தொகுத்த நேர்காணல்கள் நூலில்.

  1. உங்கள் எழுத்தில் நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன? உங்களுக்கென்று நீங்கள் வைத்துக் கொண்டுள்ள சமூகப் பார்வை என்ன?

எழுத்தாளன் என்பவன் இதுவே இறுதி என்பது போன்ற எண்ணங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது என்றே கருதுகிறேன். இரு நபர்கள் இடையே பிளவு ஏற்படாமல் இருக்கச் செய்யவே என் எழுத்து பயன்படவேண்டும் என்று கருதுவதாகச் சொல்லலாம். யாரையும் வித்யாசப்படுத்தி பெரியவர் சிறியவர் என்று கருதாமல் பார்க்கும் நிலையை எழுத்து செய்ய வேண்டும். அதுதான் வாழ்க்கையின் மிக உயரிய நிலை.

அசோகமித்திரன், கலைஞர் முதல் கலாப்ரியா வரை சுபமங்களா நேர்காணல்கள் நூலில் இருந்து…

கவிதை என்பது இறந்த மற்றும் சலனமற்ற எவற்றின் தொகுப்பாகவும் இருப்பது அர்த்தமற்றது. அப்படியான கவிதைகள் மிகுந்த போலித்தனத்தோடு மொழியினூடாக வெற்று ஆரவாரங்களாக நீர்த்துவிடுபவை. ஒரு நல்ல கவிதை தன்னை அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொள்ளக் கூடியது. அப்படியான கவிதை காலத்திற்கு அப்பால் எடையறு சுழற்சியைத் தனதே கொண்டபடி அலைகிறது. எப்போதெல்லாம் வாசிக்கப்படுகிறதோ அப்போதெல்லாமான பொழுதுகளின் தொகுப்பாக அதனதன் காலம் அமைகிறது.மௌனமென்பது கவிதையைப் பராமரிக்கிற காலத்தின் பேழையாகிறது.

ஷாஅ எழுதிய வானிலே ஒரு பள்ளத்தாக்கு 1996ஆம் ஆண்டில் மையம் பதிப்பக வெளியீடாக வந்த கவிதைத் தொகுப்பு. அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய ‘உயிர்ப்புனல்’ எனும் கவிதை முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது.

எட்டாத தொலைவில் முடிந்துபோன இரவில்

மடிந்து போனது ஒரு கரு

கருவின் அழிவால்

சீரான சுழற்சியில் சிறு இழை விலகி

சூம்பிப் போனது சூரியக் கோளம்.

மேற்காணும் கவிதையில் ‘கரு’ எனும் பதத்தின் அதிகரித்து நெருங்கும் உருமாறல் நமக்குள் நிகழ்த்தும் அயர்ச்சி அபாரமானது. இந்தக் கவிதையின் கவித்துவம் இதன் காணவியலா அசாத்தியத்திலிருந்து தன் தொடக்கப்புள்ளியைப் பற்றி நகர்வதுதான். அப்படிச் சூம்பிப் போன சூரியக் கோளத்தின் கட்டுப்படுத்தப்பட்ட சுருக்கச் சித்திரமாகவே அறிதலின் விளிம்புகளுக்குள் வந்து சேர்கிறது இதன் அனுபவம். மூடிய கண்களுக்குள் இருக்கும் வெளியைப் புதிய திசையாக விரித்தால் அதன் அளவுகள் எங்கனம் முடிவிலியாய் விரியத்தக்கதோ அவ்வாறான அளவிலி அனுபவமே மேற்காணும் கவிதையில் நிகழ்வதுவும்.

கவிதை ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதமாகிறது. அதனை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அது ஒருமுறை நிகழ்கிறது. இதன் முரண்தான் கவிதையின் கூரான தன்மை. கவிதை மொழியின் மேனியில் சித்திரப்பதன் போலத் தன்னைப் பொருத்திக் கொள்கிற அதே நேரம் ஒரு முதிர்ந்த இலை தன்னை அதுகாறும் வாழ்ந்து நிறைந்த கிளையிலிருந்து முறித்துக் கொள்வது போலத் தன்னை விடுவித்தும் கொள்கிறது. இந்த இரட்டைத் தன்மை கவிதையின் இயல்புகளில் ஒன்று. கவிதை மொழிக்குள் இருப்பது போலத் தோற்றமளிக்கிறது மெய்யாகவே கவிதை மொழிக்குள் தனிமொழி ஒன்றை விடுவிப்பதாகிறது. குறைந்தபட்சமாகக் கவிதையென்பது சொற்களை அவற்றின் அர்த்தவழமைகளினின்றும் விலக்கிக் காட்டுகிற அர்த்தப்பெருக்கியாகவே திகழ்கிறது.

அறிந்த உலகம் இது என்போம். எல்லாமே அறிந்தோமா என்றால் இல்லை எனும் பதில் வரும். அறிதலும் அறியாமையுமாய்க் கலந்து வாய்க்கிற அனுபவத்தை எடுத்துப் பேசுவதற்குக் கவிதை முயலுகிறது. போதாமைக்கும் புதியதைத் தேடுவதற்குமான இடைச்சங்கிலி உறுத்தலற்ற நியாயமும் கொண்டதே.சக்கரத்தை வெளிவிசையிட்டு முடுக்கித் தருகிற கரம்போலவே கவிதை அனுபவத்தைச் சுழற்றுகிறது.சற்றைக்கெல்லாம் அனுபவம் தானாய் நேர்கிறாற்போலவே கரம் விலக்கிக் கொள்ளப்பட்ட சக்கரத்தின் சுழற்சித் தோன்றல் அமைகிறது.ஆனால் நிசத்தில் சுழன்று முடிக்கும் வரையிலான அத்தனை சுற்றுக்களும் விலக்கிக் கொள்ளப்பட்ட கரவிசையின் விளைதலாக நிகழ்ந்தவை மட்டுமே.அந்த வகையில் கவிதையின் நிகழூக்கியாகத் தரப்படுகிற எத்தனம் மறைபொருளாகையில் கவிதை அனுபவத்தை அறியத் தருகிறது.

எந்தக் கவிதையும் எழுதப்படுவது அதனதன் இரண்டாம் முறையில் மட்டுமே. அதனதன் முதன்முறை அதனதன் உள்ளுறையும் சிசுகால இருள். கவிஞன் ஊடகமாகையில் அவனை ஊடாடிப் பிறக்கிறது கவிதை. இதன்படி விரிக்கையில் கலை என்பது யாதொன்றின் மீவுரு நிகழ்வே கலையின் சாத்தியம். கலைமீதான மானுடப் பிடிமானம் ஒரு மாபெரும் பாசாங்கு.

பெர்டோல்ட் ப்ரக்ட் பிறப்பால் ஜெர்மானியர். காவிய நாடகங்கள் அவருடைய கூற்றின்படி சொல்வழக்குப் பூர்வ நாடகங்கள் எழுதி இயக்கியவர். மேலாக அவரொரு கவிஞர். காலங்கடந்து மிளிர்கிற ஜெர்மானியக் கவிதையின் முதன்மை முகம் பெர்டோல்ட் ப்ரக்ட். 10 பிப்ரவரி 1898 அன்று பிறந்த ப்ரக்ட் தனது 58 ஆவது வயதில் ஆகஸ்ட் 14 1956 ஆம் நாள் கிழக்கு பெர்லின் நகரில் மரணித்தார். தைரியமான தாய் மற்றும் அவளது குழந்தைகள் கலிலியோவின் வாழ்க்கை செஷ்வானின் உத்தம மனிதன் காகசீயன் காளவாசல் திருவாளர் பண்டிலா மற்றும் மட்டி எனும் அவரது மனிதன் மூன்றுபென்னி ஓபரா போன்ற குறிப்பிடத்தகுந்த படைப்புகளைத் தந்தார். ப்ரக்ட் தனக்கு முன்பு நிலவிய நாடகப் போக்குகளை முற்றிலுமாக மாற்ற விழைந்தார். 20 ஆம் நூற்றாண்டிம் மத்தியில் செல்வாக்குப் பெற்ற எபிஸஸ் தியேட்டர் முறையின் அடிப்படையில் அவருடைய எழுத்தும் ஈடுபாடும் முற்றிலும் புதிய செல்திசைகளைக் கொண்டிருந்தன.நாடகத்தை வெற்றுப் பொழுகுபோக்குப் பண்டமாகப் பார்த்துக் கொண்டவர்களின் மத்தியில் அரசியல் சீர்த்திருத்தங்களை முன்வைத்து முயன்று பார்த்தவர்களில் ஒருவராவார்.

தர்க்கரீதியிலான வினவுதல்களையும் மெலிதான அதே சமயத்தில் உறுதியான எதிர்த்தல்களை முன்வைக்கிற படைப்புகளை அவர் உருவாக்கினார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜி ஜெர்மனியை விட்டு நீங்கினார் ப்ரக்ட்.தனது அழகியல் கோட்பாடு மற்றும் நாடக நடைமுறை இரண்டிலும் கார்ல் கோர்ஷிடம் பயின்ற மார்க்சிஸத்தின் தாக்கத்தைக் கொண்டிருந்தார் ப்ரக்ட், அவர் கம்யூனிச இயக்கத்தில் ஒரு உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றாலும் ப்ரக்ட் தன்னளவில் பெருத்த கம்யூனிச செல்வாக்கைக் கொண்ட ஒருவர் என்றால் தகும். எளிய அதே நேரத்தில் பதிலைக் கண்டறிவதற்கான உந்துதலை சதா நிகழ்த்திக் கொண்டே இருக்கிற வினவுதல்களின் அடுக்காகத் தன் கவிதைகளை முயன்றவர் ப்ரக்ட்.அவரது கவிதைகள் அந்தந்தக் காலத்தின் அரசியலை வினவியதோடு முற்றுப் பெற்றுவிடுவதில்லை. அந்தக் கேள்விகளைத் தற்காலத்திற்கானதாக மறுவுரு செய்து பார்ப்பதற்கு வாசகனின் சமூக வாழ்க்கை அவனுக்கு முதல்முறை ஏற்படுத்தி விடுகிற வேறோரு புதிய அரசியல் பூர்வ நெருக்கடி போதுமானதாக இருப்பதும் வாய்ப்பதும் கவிதையை வசீகரமான வாசிப்பு அனுபவமாக மாற்றித் தருகிறது. ப்ரக்ட் இதற்கு நேர்மாறான மொழியை நாடகங்களை எழுதும்போது முயன்றதும் கூறத்தக்கது. வெவ்வேறு வசீகரங்களைத் தன் மொழித் தேர்வுகள் வழி முயன்று பார்த்த வகையிலும் ப்ரக்டின் படைப்புகள் கவனம் கோருபவை.

பெர்டோல்ட் ப்ரக்டின்  இரு கவிதைகள்…

(ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் தென்றல் சிவக்குமார்)

1 சாத்தானின் முகமூடி

ஒரு ஜப்பானிய வேலைப்பாட்டுச் செதுக்கல் எனதறைச் சுவரில் தொங்குகிறது.

அதுவொரு கொடிய சாத்தானின் பொன் வேயப்பட்ட முகமூடி

அதைப் பரிவன்புடன் கவனிக்கிறேன்

சாத்தானாயிருப்பதன் பெருஞ்சிரமத்தை

அதன் நெற்றியின் புடைத்த நரம்புகள் உணர்த்துகின்றன.

2 வரலாற்றை வாசிக்கும் உழைப்பாளியின் கேள்விகள்.

ஏழு கதவுகளின் நகரமான தீப்ஸை உருவாக்கியவர் யார்?

புத்தகங்களில் உங்களுக்கு மன்னர்களின் பெயர்கள் மட்டுமே தென்படும்.

மன்னர்கள்தான் கனத்த பாறைகளை மேலிழுத்து வந்தார்களா?

பலமுறை சிதைந்த பாபிலோன் நகரைப்

பலமுறை மறுநிர்மாணம் செய்தவர் யார்?

பொன்னொளி வீசும் லிமாவின் எந்த வீடுகளில் கட்டிடப் பணியாளர்கள் வாழ்ந்தார்கள்?

சீனப் பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்ட அந்த மாலையில்

கொத்தர்கள் எங்கே சென்றார்கள்?

மகத்தான ரோமாபுரி வெற்றியின் அலங்கார வளைவுகளால் நிறைந்துள்ளது.

அவற்றை யார் நிர்மாணித்தார்கள்?

சீஸர்கள் யாரை வெற்றி கொண்டார்கள்?

பாடல் பெற்ற பைஸாந்தியத் தலம் தன்னில் வசிப்பவர்களுக்கு

மாளிகைகளை மட்டுமே கொடுத்ததா என்ன?

புகழ்பெற்ற அட்லாண்டிஸ்ஸிலும் கூட, பெருங்கடல் அதனை விழுங்கிய இரவில்

மூழ்குபவர்கள் தங்கள் அடிமைகளைக் கத்தி அழைத்துக் கொண்டுதான் இருந்தனர்.

இளவயதில் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றான்

அவர் தனியாகவா இருந்தார்?

சீஸர் கோல்களைத் தோற்கடித்தான்.

அவனுடன் ஒரு சமையல் பணியாளர் கூடவா இருக்கவில்லை?

ஸ்பெயினின் ஃபிலிப் தன் போர்க்கப்பல்களின் வீழ்ச்சி கண்டு அழுதான்.

அவன் மட்டுமா அழுதான்?

இரண்டாம் ஃப்ரெட்ரிக் ஏழாண்டுப் போரை வென்றான்.

இன்னும் யார் யார் அதை வென்றார்கள்?

ஒவ்வொரு தாளும் ஒரு வெற்றி.

இந்த வெற்றிவிருந்துகளைச் சமைத்தவர்கள் யார்?

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு மகத்தான மனிதன்.

அதற்கான விலையைச் செலுத்தியவர் யார்?

எத்தனை எத்தனை தகவல்கள்

எத்தனை எத்தனை கேள்விகள்.

ப்ரக்டின் மேற்காணும் இரண்டு கவிதைகளுமே லேசான பகடியை முன்வைத்தபடி செல்வதை உணரலாம். மேலும் அவருடைய மொழியின் திறப்பும் கவிதையின்  விரைதலும் வாசகனை மீண்டும் மீண்டும் தனக்குள் வரவழைத்து விடுபவையாக விளைகின்றன. ப்ரக்ட் கவிதைகள் பெருங்காலம் ஆர்ப்பரிக்கும் நில்லாநதியின் தொடர்பற்ற ஆலவட்டங்கள். ப்ரக்ட் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழி முக்கியமானது மட்டுமல்ல, இன்றைய கவி விரும்பிகளுக்கும் பயன்படக் கூடிய புத்தம் தன்மை பெருகி வழிவது. எந்தச் சொல்லையும் பழைய பிடிமானங்களிலிருந்து நெகிழ்த்திப் புதிய அர்த்தங்களைப் பொருத்தச் செய்வது கவிதையின் இயல்பான எழுச்சியெனவே நிகழ்கிறது. காலம் கைகட்டிச் சற்றுத் தள்ளி நின்று கொள்கிறது. கவிதையின் குரல் மறுமுறை முதல்முறையாகவே ஒலிக்கும் மாயம் அதனையொற்றி நிகழ்கிறது. மொழியை முன்வைத்து பலமான இருவேறு ஆட்டங்களெனவே ப்ரக்ட் முயன்றார் என்பதற்கான சாட்சியங்களாகவே அவரது கவிதையில் மெலிதாகத் தொனித்துச் செல்லும் அங்கதமும் ஆர்ந்தால் மட்டுமே ஆழத்தின் இருளை நகர்த்திப் பூக்கிற மின்மினித் தன்மையிலான மெய்ப்பாடும் அபூர்வமானது.