நோ சொல்லத் தெரியாத

அந்த ஆட்டுக்குட்டிக்கு

மேய்ப்பர் கிடையாது

தன்னைத்தானே மேய்த்துக்கொள்ளும்

 

விரும்பி மந்தையிலிருந்து பிரிந்து செல்லும்

பின் மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும்

ஆயர்களோடு ஒட்டுமில்லை உறவும் இல்லை

இடையர்களோடு பேச்சே இல்லை.

 

நோ சொல்லத் தெரியாத அந்த அபூர்வ ஆட்டுக்குட்டிக்கு

சக ஆடுகளோடு

அவ்வப்போது குதூகலத்துக்கும் எஸ் தான்

அழுகைக்கும்

பகிர்வுக்கும்

துயருக்கும்

நோய்மைக்கும்

எஸ் தான்.

 

செத்துப்போக அழைத்தாலும்

நோ சொல்லத் தெரியாது

விரும்பி பலிபீடத்தில் ஏறிப் படுத்துக்கொள்ளும்

வாள்வீச்சுக்குக் காத்திருக்கும்

 

அதன் கழுத்தில் இறங்கும் அந்த

அரையடி ஆழத்திடம்கூட

நோ சொல்லத் தெரியாது

 

வெட்டுப்பட்டுக் கிடக்கும் அதன் தலையில்

கருந்திராட்சைகளென வெறிக்கும் விழிகள்

முதன்முறையாக நோ சொல்லும்

இவ்வுலகுக்கு

 

(தக்கை. வே.பாபுவுக்கு)