(ஸ்டாலின் சரவணனின் ரொட்டிகளை விளைவிப்பவன் கவிதை நூலினை முன்வைத்து)

சொற்கள் பல சொற்கூட்டங்களாக மாறித் தம்மையொரு படைப்பாக முன்னிறுத்திச் சமூக மாற்றத்திற்கு இழுத்துச் செல்கின்றன.

அப்படைப்புக் கவிதையாக, கட்டுரையாக, புதினமாக, சிறுகதையாக, ஏற்புச் செய்தியாக, மறுப்புச் செய்தியாகவோ எதுவாக இருந்தாலும் ஆளப்படும் சொற்களும், அமிழப்படும் கருத்துக்களும் மட்டுமே படைப்பைப் படைப்பாக்கி நிமிரச் செய்கின்றன. அவ்வகையில் சமூகத்தின் பல மிஞ்சிய தடுமாற்றங்களை அனுபவங்களைப் பார்க்கப்படும் பார்வைக்கேற்ப, காத்திரமாக எடுத்துச் சொல்லும்போது எந்தப் படைப்பும் பேசப்படுகின்றது. இதுவே, உண்மை. எண்ணிக்கையற்ற சொற்களாய்க் கடந்து கொண்டேயிருக்கும் நாட்பொழுதுகளின் தனிமையும், நினைவும், அவலமும், அன்பும், அரசியலும், அகமும், தேடலும், வேட்கையும், நெய்யப்பட்டு அழகானதொரு கவின்மிகு ஆடை எப்பொழுதும் நம்மேல் போர்த்தப்படுகின்றது. அது துணியால் நெய்யப்பட்டதன்று. சொல்லால் நெய்யப்பட்ட ஸ்டாலின் சரவணனின் ரொட்டிகளை விளைவித்தவன் என்ற சொல்லாடை இந்த மனிதர்களையும், நிலத்தையும், வாழ்வியலையும், புரிந்துகொள்ளலையும் தன் சொற்களின்வழி நெய்து தந்துள்ளார். அது பித்தேறிய சொற்களாய் நாட்பொழுதுகளின் பாடுகளைப் பிட்டுப்பிட்டு வைத்துப் பேசுகின்றது.

ஒரு தொடர் வாசிப்பே உருமாற்றம் செய்துகொள்ள உதவும். அவ்வகையில் கவிஞனின் அனுபவங்கள் நம்மை நீந்தச் செய்கின்றன. நீந்துதற்கு அனுபவம் தேவை அது நீர்நதியாகயிருந்தாலும், வாழ்க்கை நதியாகயிருந்தாலும் வாழ்வியல் அனுபவங்களே மனிதர்களைத் தொட்டுச் செல்லும். அது எதார்த்தமாக, கவித்துவமாக, இடம் சார்ந்ததொரு தூண்டலாக, கற்பனையாக, மொழியைக் கையாண்டு கவிதையினை ஒட்டுமொத்த உணர்வுக் கலவையாக விரிகின்றது. விரிக்கச் செய்கின்றது. வாசிக்கும் நாமும் விரிந்துதான் போகின்றோம்.

நிலப்பகுதிகள் முழுதும் தங்கி நிலைத்து வாழத் தலைப்பட்ட இம்மனித சமுதாயம் இயற்கைச் சூழலுக்கேற்பத் தத்தம் நிலத்திற்கேற்ப வாழ்வியல் நிலைகளை வகுத்துக் கொண்டது. இந்நிலம் சார்ந்த புரிதலும், பார்வையும் ஸ்டாலின் சரவணனின் கவிதைகளில் பொதிந்துள்ளன. மனிதர்கள் வாழும் நிலம் அமைதியாக இருந்தால் அரசுக்குக் கொண்டாட்டம்தான். எதிர்க் கேள்விக்கணை தொடுக்க வாய்ப்பில்லையெனில் ஆள்பவரின் நிலை அட்டகாசம்தான். இங்கு அமைதியே பிரதானம், நிலத்தைக் கையகப்படுத்திச் செடியிலிருந்து பூக்களைப் பறிப்பதுபோல் குடியிருப்புகளைப் பறித்து வீசும் பொக்லைன், நிலத்தின் எதிரியாய், அரசின் கைப்பாவையாய், சொன்னதைச் செய்யும் மின்னியந்திரமாய் நம்முள் காட்டப்படுகின்றது. அரசின் ஏகாதிபத்தியம் கண்டு முதற் பெண்ணொருத்தியின் அழும் குரல் ‘செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி’ வருவது வீடிழந்தவர்களின், நிலமிழந்தவர்களின் மனம் படும் துயரம் அவலக் காட்சியாய்க் கண்முன் விரிகின்றது.

வாழ்வின் ஈரம் காய்ந்த

வயதான பெண்ணொருத்தி

ஓட்டுக் குடிலுக்குள்

பெருங்குரலெடுத்து அழுகிறாள்

பொக்லைன் முகத்தில்

அமைதியோ அமைதி

இவ்வடிகளில் அதிகாரத்திலிருப்பவர்களின் மூர்க்கமான வேட்டை, உடைந்து போன கண்ணாடியின் சில்லுகள் உடம்பில் குத்தி வெளியேறும் வலிக்கேற்பச் சொல்லப்பட்டுள்ளது. அது, குருதி கொப்புளித்து பீறிடும் வலியாகவே உணரப்படுகிறது.

நிலமில்லாத இடத்து ஒரு மனிதன் எவ்வாறு வாழ முடியும்? முடியாது. நிலமே மக்கள் வாழ்வதற்குரிய தேவைகளைத் தந்து சமகாலப் பிரச்சினைகளை நீக்குகிறது. இது ஒரு கால மாற்றம். சுழற்சி அடிப்படையே இதன் சாத்தியக்கூறு. நிலம் நம்மின் உயிரோட்டமான நெருக்கம். ஒவ்வொருவரின் எண்ணிக்கையற்ற பொழுதுகளின் தனிமை, நினைவு, ஏக்கம், இன்பம், துன்பம் போன்ற எல்லாமும் நிலம்தான். இதை இழந்த ஒருவனின் நிலை ரொட்டிகளை விளைவிப்பவனாக காட்சி உருமாற்றிக் கொள்கிறது. தனக்குத் தெரிந்த நிலம் சார்ந்த வேலைகள் பட்டியலிடப்பட அதுவே ரொட்டித் தயாரிப்பதற்குரியதோடு லாவகமாகப் பொருத்தப்பட்ட கவிதையானாலும் விளைச்சலில்லாத வறண்ட நிலத்தில் விளைவிக்க முடியாதவன் ரொட்டிகளை விளைவித்த மனிதனாகிறான். அங்கு, ‘விவசாயி’ பெயர் மறைந்து ‘பரோட்டா மாஸ்டர்’ உருவாகிறார். இது காலக்கொடுமை தான். வாழ்வாதாரம் எதை நோக்கிச் செல்கிறது? நீரின்றித் தவித்தலைந்து தம் வறண்ட நாக்கை தணித்துக்கொள்ள நிலம் தவிக்கின்றது. வயிற்றுக் கொடும்பசியில் காங்கையாய்த் தகிப்பதுபோல நிலம் வெடித்துப் பாளமாய் கிடக்கிறது. காங்கை ஒவ்வொரு ‘பரோட்டா மாஸ்டர்களை’ உருவாக்கி அழகு பார்க்கிறது.

இங்கு சர்வாதிகாரம், விவேகமாய் மனிதர்களை முடிச்சுப்போட்டு இறுக்குகிறது. இக்கவிதை உடைந்துபோன சமூகத்தின் சாட்டையடி, வலியுணர்ந்தவர்களுக்கே அடியின் தாக்கம் உணரமுடியும்.

மேல் மண்ணைக் கீழாக

கீழ் மண்ணை மேலாக

உருட்டும் மண்புழுவாய்

சில புரட்டல்களுக்குப் பின்

பெரு நகரத்துக்குக் கிடைத்திருப்பது

இன்னொரு பரோட்டா மாஸ்டர்

துயர் மிகுந்த சோக வலியினை உள்ளிழுத்துக் கொண்டே நடக்கும் அடிகள் இவை. வாழ்வின் நிழல் புறத்தோற்றங்களை உண்மையாக எடுத்தாளும் கடும் பாதிப்பை வெளிப்படுத்தும் மனித வாழ்வைத் தரைமட்டமாக்கும் நிலையே இதில் தெரிகின்றது.

மனிதகுல வரலாற்றில் மாந்தரினம் எதிர்கொள்ளும் சிக்கல்களும், முரண்களும் காலத்தின் உராய்வில் அழுந்துப் போகுமாறு இல்லாமல் முழுமையாகவே இருக்கின்றன. இங்கு யாரும் யாருக்கான பாதையை உருவாக்கித் தரவில்லை. அவரவர் பாதையை அவரவரே தீர்மானிக்க வேண்டும். அதுவே இலக்கு. அதுவே தடை களைதல். அதுவே வெற்றிக்கானவழி. இதில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. அனுபவம் மட்டுமே முக்கியம். எந்தவொரு அனுபவமும் நமக்கு மறுநிர்மாணத்தைக் கையில் வழங்கும். அதை நாம் பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் இதெல்லாம் சாத்தியமா? இதற்கு ஸ்டாலினின் ‘செம்மறிகளுக்கென்று ஒரு பாடல்’ பதில் சொல்கிறது. முதலாளித்துவ உலகமிது. உலகமயமாக்கல், நிகழ்கால கருத்துருவாக்கங்கள் என்ற முரண்பாட்டில் சிக்குண்டுள்ள இச்சமூகம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் சமூகமாக மாறியுள்ளது. இந்த உலகம் இனிது. அதை ஏற்படுத்திய தேவனுடன் தன் பங்களிப்பை மக்களுக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறார். அது ஒரு இசையாகப் பரவி மக்களை ஊடுருவுகிறது. மகிழ்ந்து திளைந்திருந்த மக்களை, இசையிலிருந்து பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைக்கிறான் எவனோ ஒருவன். அங்கு தேவனிசைத்த நல்ல இசையில்லை. சுதந்திரமான விருப்பமில்லை. அடிமைத்தனமும், கட்டுப்பாடும், ஒப்பந்தமும், விதிக்கப்பட்ட கூலியும், சுரண்டப்பட்ட உழைப்பும் கை விரிக்கின்றது. இதையறியாத மக்கள் கூட்டம் தலையாட்டும் செம்மறிக் கூட்டமாய் அதில் போய் விழுகின்றனர். இதைக்கண்டு தேவன் மரித்துப் போகிறார். இசையும் நிற்கின்றது.

இந்தச் செம்மறிகளுக்காக

மேலும் இசைக்க விரும்பாத தேவனோ

யாரும் எதிர்பாராமல்

மலையிலிருந்து குதித்து மரித்தார்

அந்நேரம்

ஒப்பந்தக் காரனொருவன்

வேலைக்கு ஆளெடுக்க வர

கூட்டம் அங்கே முண்டியடித்து முன்னேறியது

என்ற அடிகளில் மக்களின் உழைப்பு, காத்திருத்தல், முயற்சி, வேலை எல்லாம் சுரண்டுப்பட்டு தன்னிச்சையான பணியில்லாது இயந்திர உலக ஆதிக்கத்தில் இயந்திரமாக மாறும்நிலை காட்டப்படுகிறது. இயற்கை அழிக்கப்பட்டு செயற்கை வர்ணம் பூசிக்கொள்கிறது. ஆதித் தமிழனின் அடையாளம் மிக நுட்பமாய் மறைக்கப்படுகிறது. இது கவனம் கொள்ளவேண்டிய தருணமாக இக்கவிதையில் ஊடாடி நிற்கிறது.

மழை நம் மீட்சி. உயிர் வாழ்வதற்கான எத்தனிப்பு. மழைமேகம் கசியும் வெறுமொரு நிகழவில்லை. அது நம்மின் பிரதேசம். அசாத்திய மனதினிசைவு. மழையில்லையென்றால் ஒவ்வொரு மனித மனமும் தனித்தலையும், அலைக்கழிக்கப்படும், வலியுணரும், நிம்மதியிழக்கச் செய்யும். நிலத்தின் பூரணமென்பது மழைதான். மழையில்லாததொரு கோடைக்காலம் “கோடையை விழுங்குதலாய்” கொதிநிலையில் பரந்துபட்ட வாழ்க்கையின் கொடூரத்தை உள்ளாக்கி நிற்கின்றது. மழையில்லாத வாழ்வின் அவலம், வேதனைப் பொழுது, கொடும் வியர்வையில் நனைதல், நீரில்லாத சூழலின் தன்மை ஆராயப்படுதல், கொடும் வெப்பம் தாளாத முதியவன், நீரிற்காக அனைவரும் காலத்தோடு போரிடும் நியதி இதெல்லாம் கடும் கோடையையும், நீரின்றித் தவித்தலையும் மக்களையும், நீர்த்துளிகளை ஒன்றாக்கிச் சேர்க்காத அரசியலையும் சாடுவதாய் உள்ளது. அடிப்படைத் தேவையின்றி அர்ப்பணம் செய்து கொண்டு வாழும் மக்களின் நிலை, அவர்களின் தள்ளாட்டம், இவையெல்லாம்,

இருளில் நடக்கும் சிறுமியாக

மிகக் கவனமாய் அடியெடுத்து

நகரக் கூடிய காலம்

வேனல் தாங்காமல்

நீர்தேடி நொண்டுகிறது

என்பதில் ஆழப் பொதிந்துள்ளது. இப்படி மனிதர்களுக்குள் உள்நுழைந்து, காலந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் எல்லா நிலைகளையும் அசலாகக் கடந்து செல்லும் பேருண்மைகள் ஸ்டாலினின் கவிதைகள். இங்குப் பயணிப்பவர்கள் அனைவருக்கும் காணும் காட்சியே பிரதானம். அந்தக் காட்சியே மனிதர்களின் வாழ்வியலை முன்னிறுத்துகிறது. ஆண், பெண்ணிற்கான புரிதல், ஊடாடிநிற்கும் காமம், மிகைப்படுத்தா அன்பு போன்ற அகக் கூறுகளும் அழகாய்க் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கவிதை நூல் அரசியல், சமூகம், காமம் என்ற மூன்று நிலைகளில் செறிவாய் ஊஞ்சலாடுகிறது. சில இடங்களில் மிக வேகமாய், சில இடங்களில் மிதமான வேகமாய், சில இடங்களில் மயக்கம் தரும் வேகமாய் என்ற சாராம்சத்தோடு நூல் முழுவதும் ஊடாடுகிறது சொல்லாட்சி. குறிப்பாகச் சொல்லப்போனால், அரசின் ஆதிக்கக் கைப்பிடியில் எச்சமாக வாழும் மனிதக்கூட்டம், அவர்களின் பாதிப்புகள், வாழ்க்கை முறை, குற்றத்திற்கான வழித்தடம், மனிதர்களின் அறியாமை, சமூகப் புறக்கணிப்பு, சமூகத்திலிருந்து அன்னியமாய்ப் பிரிக்கப்படுதல் போன்றவை ஆற்றாமையாய் நின்றொழுகுகின்றன. நிலத்தில் முழு வாழ்வையும் செருகி அதனின்றி ஒன்றுமில்லையெனச் சொல்வது வசீகரம். அகமின்றி மனிதரேது? என்ற பார்வையும் நியாயம்தான். வாழ்வின் சிக்கல்களை ஆழ்ந்த அக்கறையுடன் கவிதையின்வழி தீர்க்கமாக, தெறித்து விழுதலைப் போலத் துக்கம், இன்பம், ஏக்கம், வெறுமை, ஏமாற்றம் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளக்கிடக்கிலிருந்துக் கொட்டித் தீர்த்துள்ளார். அது வெறும் தோற்ற மயக்கமன்று.

உண்மையின்பாற் கண்டடைந்த சமூக செயல் மயக்கம்தான். அது தெரிந்துகொள்ளும் வகையில் காத்திரமான மனித மனங்களை எளிமையாகப் பற்றிக் கொள்ளும் விவரணைகளாக நம்முன் நிற்கின்றது கவிதைகளாய். அதுவே ரொட்டிகளை விளைவிப்பவனின் தனிச்சிறப்பு.