ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள்! ஒரு மோசடியை மறைக்க ஒன்பது மோசடிகள்! காஷ்மீர் மக்கள் தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா பகுதி என்ற தாய்ப் பொய்யை மறைக்க வரிசையாகப் பல குட்டிப் பொய்கள். காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்தியா ஏவி வரும் ஆய்தங்களில் ஆகக் கொடியவை இந்த வரலாற்றுப் பொய்களே. இந்தியாவின்மீது காஷ்மீர் மக்கள் அறவே நம்பிக்கை இழக்க இதுவே காரணம்.

இந்தியா, பாகிஸ்தான், ஐநா என்று எல்லாத் தரப்பினரும் வரலாற்று உண்மைகளை அறிந்தேற்று, காஷ்மீர மக்களின் குடியாட்சிய உரிமைகளை மதித்து நடந்தால்போதும், காஷ்மீர்ச் சிக்கல் கதிரொளி கண்ட பனித்துளிபோல் மறைந்துவிடும். எனவேதான் உண்மைகளை – புறஞ்சார் உண்மைகளை – விருப்புவெறுப்பின்றி வலியுறுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது. உண்மை பேசுவது தேசவிரோதச் செயல் என்ற அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் உண்மை பேசத்தான் வேண்டும். பொய்மையைப் பொசுக்கும் உண்மைகள் சிலவற்றைக் காண்போம்.

காஷ்மீர் தேசத்தை 1586ஆம் ஆண்டு, முகலாய மன்னர் அக்பர் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தார். அடுத்தடுத்து முகலாயர்களும் ஆப்கானியர்களும் சீக்கியர்களும் காஷ்மீரத்தின்மீது ஆட்சிபுரிந்தார்கள். சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கிடமிருந்து டோக்ரா அரச வமிசத்தைச் சேர்ந்த குலாப் சிங் ஜம்முவைத் தன் விசுவாசத்தின் பரிசாகப் பெற்று ஆண்டு வந்தார். அப்போது ஆங்கிலேயருக்கும் சீக்கியருக்கும் நடந்த போரில் குலாப் சிங் சீக்கிய மன்னருக்கு இரண்டகம் செய்து ஆங்கிலேயருக்கு உதவினார். இந்த இரண்டகத்துக்குப் பரிசாக 1846ஆம் ஆண்டு அமிர்தசரஸ் உடன்படிக்கையின் வழியாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் 75 இலட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு காஷ்மீரை குலாப்சிங்குக்குக் கொடுத்தார்கள். இந்தத் தொகையோடு ஓராண்டு குத்தகையாக இருபது பாஸ்மினா ஆடுகளும், மூன்று காஷ்மீர் சால்வைகளும், ஒரு குதிரையும் பிரித்தானியருக்குத் தரப்பட்டன. குலாப்சிங் முதல் அரிசிங் வரை டோக்ரா மன்னர்கள் காஷ்மீரில் கொடுங்கோலாட்சி செலுத்தினார்கள். கடைசி டோக்ரா மன்னன் இட்ட கையொப்பத்தைக் காட்டித்தான் காஷ்மீர் எமதே என்று இந்தியா உரிமை கொண்டாடி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் (1947) பிரிவினையின்போது ஜம்மு-காஷ்மீர் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் பங்கு 87 விழுக்காடு. பள்ளத்தாக்கில் 93 விழுக்காடு. ஆட்சி அதிகாரம் டோக்ரா வம்சத்திடம் இருந்தது. அதிகாரப் பதவிகள் பார்ப்பனர்களான பண்டிதர்கள் வசம் இருந்தன. முஸ்லிம்கள் எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். 1933 ஜூலை 13ஆம் நாள் அரசப் படையினர் சிறிநகர் மையச் சிறைக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 722 காஷ்மீரிகள் கொல்லப்பட்டனர். அது காஷ்மீரின் ஜாலியன் வாலாபாக் என்றார் ஷேக் அப்துல்லா!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 1930களின் இறுதியில் வேதியல் பட்ட மேற்படிப்பு முடித்து, சிறிநகர் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லா, 1939 ஏப்ரல் 27ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியை நிறுவினார், கட்சியின் முதல் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜம்மு பகுதியைச் சேர்ந்த பூட்டா சிங் என்ற சீக்கியர். முஸ்லிம் லீக் கட்சியை ஷேக் அப்துல்லா ‘நவாபுகளின் கட்சி’ என்று கண்டித்தார். மதச்சார்பின்மையின் அடிப்படையில் காங்கிரசுடனும் நேருவுடனும் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தார்.

1947-48 பிரிவினைக் கலவரத்தின்போது ஜம்முவில் முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். ஏராளமான முஸ்லிம்கள் உயிர்பிழைக்க பாகிஸ்தான் சென்றனர். ஆனால் அதே நேரத்தில் பள்ளத்தாக்கில் பண்டிதர்களும் சீக்கியர்களும் பாதுகாப்பாக இருந்தனர். அந்நேரம் காந்தியாரே இதனைப் பாராட்டினார்.

காஷ்மீருக்குள் பாகிஸ்தான் உதவியோடு படையெடுத்து நுழைந்த பூஞ்ச் பழங்குடியினரை விரட்டவும் மன்னரைப் பதுகாக்கவும் படையுதவி செய்வதற்கு விலையாக இணைப்பு ஒப்பந்தத்தில் மன்னரின் கையொப்பம் பெறப்பட்டது. இணைப்பு ஒப்பந்தத்தின் இரு கூறுகளாவன: 1) பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே இந்தியாவுக்கு. இந்த அடிப்படையில்தான் இந்திய அரசமைப்பில் உறுப்பு 370 சேர்க்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் தன்னாட்சி மாநிலம் உருவாக்கப்பட்டது. 2) ஊடுருவல்காரர்களை விரட்டியடித்து இயல்புநிலை மீண்டபின் பொதுவாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் விருப்பமறிந்து அந்த விருப்பத்தை மதித்து நடப்போம் என்று இந்தியா உறுதியளித்தது. இந்த உறுதியைக் காப்பாற்றவில்லை இந்தியா. காப்பாற்றச் சொல்லிப் போராடுகின்றனர் காஷ்மீரிகள். இதுதான் சிக்கலின் மையப் புள்ளி..

1947 திசம்பர் 31ஆம் நாள் இந்தியா, தானாகவே இச்சிக்கலை ஐநாவுக்குக் கொண்டுசென்றது. பொதுவாக்கெடுப்பு நடத்த அங்கேயும் ஒப்புக்கொண்டது. வாக்கெடுப்பு ஆணையமும் அமைக்கப்பட்டது. காஷ்மீரிகளை ஏமாற்றியதுபோல் பன்னாட்டுலகையும் ஏமாற்றியது இந்தியா.

காஷ்மீர் மக்களில் பெரும்பாலானவர்களுக்குப் பாகிஸ்தானுடன் இணைவதில் ஆர்வமில்லை – அன்றும் இன்றும்! அவர்களுக்கு வேண்டியது விடுதலை! அல்லது அதற்கு நிகரான தேசியத் தன்னாட்சி! இது உறுதி செய்யப்படுமானால் இந்தியாவுடன் இணைவதில் அவர்களுக்கு மறுப்பில்லை. இந்தியாவோ, அரசமைப்பின் உறுப்பு 370 வாயிலாகத் தரப்பட்ட வாக்குறுதிகளையும் காப்பற்றவில்லை. இப்போது அந்த 370ஐயும் இல்லாமற் செய்துவிட்டது.

தலைமையமைச்சராகப் பொறுப்பேற்ற ஷேக் அப்துல்லா, 1952 நவம்பர் 11ஆம் நாள் டோக்ரா அரசர்களின் பரம்பரை ஆட்சி உரிமையை நீக்கம் செய்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடுகள், ஜாகீர்தாரி முறை ஒழிப்பு, நிலவுடைமைச் சீர்திருத்தம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது இந்துத்துவ ஆற்றல்களுக்கு எரிச்சலூட்டியது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பால்ராஜ் மதோக், 1947ஆம் ஆண்டே ஜம்மு பிரஜா பரிசத் என்ற அமைப்பை நிறுவியிருந்தார். நேரு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்து விலகிப்போய் ஜன சங்கத்தை நிறுவிய சியாம்பிரசாத் முகர்ஜியும் பால்ராஜ் மதோக்கும் 370ஆம் உறுப்பை நீக்கிவிட்டு ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இரண்டறக் கலக்கவேண்டும் என்றனர். இவ்வாறு காஷ்மீர் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தினர். இந்தப் பிளவை அமித் ஷாவின் அண்மைய அறிவிப்புகள் மேலும் அகலப்படுத்தியுள்ளன.

உண்மையில், தேசிய இனச் சிக்கலாகிய காஷ்மீர் சிக்கலை மதச் சிக்கலாக மாற்ற முயல்வது இந்துத்துவ ஆற்றல்களே. ஆனால் மொத்தத்தில் காஷ்மீர் மக்கள் இந்துத்துவ ஆத்திரமூட்டலுக்கு இரையாகாமல் மதச்சார்பின்மையில் உறுதிகாத்து வருகின்றார்கள். அவர்களின் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்துவதே நேருவின் சூழ்ச்சி. 1952 ஜூலை 24ஆம் நாள் நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே தில்லியில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. காஷ்மீரை இந்தியாவோடு நெருங்கிவரச் செய்வதற்காக நேருவும், காஷ்மீரின் தன்னாட்சியை வலியுறுத்துவத.ற்காக ஷேக் அப்துல்லாவும் இந்த ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதுதான் தில்லி ஒப்பந்தம் என்பது.

இந்த தில்லி ஒப்பந்தம், ஒப்பமிடப்பட்ட சிறிது காலத்துக்கெல்லாம், ஆகஸ்டு 25ஆம் நாள் நேரு ஷேக் அப்துல்லாவுக்கு அனுப்பிய கமுக்கக் குறிப்பில் பொதுவாக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை என 1948ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டதாக எழுதியிருந்தார். அப்படியானால் நேரு அத்துணைக் காலமும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிவந்துள்ளார். அவர் சொன்னதெல்லாம் பொய்யே! ஒரு கட்டத்தில் காஷ்மீர் சிக்கலுக்கு மதச்சாயம் பூசிக் கொச்சைப்படுத்தும் அளவுக்குச் சென்றார் நேருபிரான். எல்லாம் காஷ்மீரத்தைக் கபளீகரம் செய்யும் இந்திய வெறி!

1953 ஆகஸ்டு 9ஆம் நாள் காஷ்மீர் தலைமையமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு முதலில் வீட்டுக்காவலிலும் பிறகு சிறையிலும் அடைக்கப்பட்டார் ஷேக் அப்துல்லா. இந்த அதிரடி நடவடிக்கையோடு காஷ்மீரிகள் இந்தியாவிடமிருந்து அடியோடு அயன்மைப்பட்டு விட்டார்கள். இப்போது அமித் ஷா எடுத்துவரும் அதிரடிகளுக்கு அன்றே வழிகாட்டியவர் நேருதான். ஷேக் அப்துல்லா இடையில் சிலமாத காலம் தவிர பதினோராண்டு காலம் சிறையில் கழித்தார். பெரும்பாலும் கொடைக்கானலிலேதான் அவர் சிறைப்பட்டுக் கிடந்தார். 1959 ஜனவரி 8ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டு ஏப்ரல் 30ஆம் நாள் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். 1964 ஜனவரி 2ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். 1971ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அப்துல்லாவுக்கு நெருக்கமான மிராஜ் அப்சல் பெய்க்கும் சற்றொப்ப இதே அளவுக்குச் சிறைப்பட்டிருந்தார். இவர்கள் எவ்வித விசாரணையும் இல்லாமலே இவ்வளவு நீண்டகாலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தனர்.

ஷேக் அப்துல்லாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபின் இந்தியாவின் கைப்பாவையாக முதல்வர் பதவியிலமர்ந்த பக்சி குலாம் முகமது இந்தியாவுடன் காஷ்மீரை முழுமையாக இணைப்பதற்கு ஆதரவாகக் கட்சி நடத்தினார். அவருக்கு எதிராக மிராஜ் அப்சல் பெய்க் வாக்கெடுப்பு முன்னணி என்ற அமைப்பை நிறுவினார். இந்திய அரசு, தன் கைப்பாவைகளின் துணையோடு 1956 நவம்பர் 27ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இவ்வாறு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டது. சிறையிலிருந்தபடி இந்த முடிவுக்கு ஷேக் அப்துல்லா எதிர்ப்புத் தெரிவித்தார். அவரது குரலே காஷ்மீரிகளின் ஒருமித்த குரல் என்பதில் ஐயமில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதற்கு இந்த முடிவையும் ஒரு சான்றாகக் காட்டுகின்றார்கள். ஆனால் ஐநா அமைப்பே இந்தச் சான்றை ஏற்க மறுத்துவிட்டது. இந்தியாவின் இணைப்பு அறிவிப்பு ‘எந்தவிதத்திலும் ஜம்மு காஷ்மீரின் சட்டப்படியான தகுநிலையாகக் கருதப்படாது’ என்று 1957 ஜனவரி 27ஆம் நாள் அறிவித்தது. ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் இன்றளவும் ஜம்மு காஷ்மீர் சட்டப்படி இந்தியாவில் இணைந்துவிட்டது என்று அடம்பிடித்து வருகின்றார்கள்.

அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில், இணைப்புக்கு ஆதரவான பக்சியின் கட்சி வெற்றி பெற்றதைக் காட்டியும் இணைப்புக்கு காஷ்மீர் மக்கள் ஒப்புதல் அளித்துவிட்டார்கள் என்று வாதிடப்படுகிறது. ஆனால் காஷ்மீரில் நடந்த ஒவ்வொரு தேர்தலும் மோசடித் தேர்தலே என்று லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறியுள்ளார். 1962 தேர்தலில் பக்சியின் கட்சி 75இல் 72 இடங்களில் வெற்றி பெற்றபோது “ஏதேனும் இரண்டு தொகுதிகளிலேனும் நீங்கள் தோற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று நேருவே பக்சியைக் கடிந்துகொண்டாராம். இந்த நேருவைத்தான் ஜனநாயகக் காவலர் என்று போற்றுகின்றார்கள்!

‘பன்னாட்டு அரங்கில் காஷ்மீரை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்திவருகிறோம்.’ அது வரை ஜனநாயகம், நேர்மை எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்க வேண்டியதுதான்” என்று நேரு தன்னிடம் சொன்னதாக பால்ராஜ் பூரி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் எதையும் அது வரை அனுமதிக்க முடியாது என்றாராம் நேரு. (எதிர்க்கட்சி என்ன, எந்தக் கட்சியையுமே அனுமதிக்க முடியாது என்று இப்போது அமித் ஷா சொல்கிறார்.)

இடைக்காலத்தில் உறுப்பு 370ஐ பொருளற்றதாக்கும் விதத்தில் அரசியல் சட்டத்திருத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு காஷ்மீரை முழுமையான இந்திய மாநிலமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1956க்குள் 45 அரசமைப்புச் சட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆளுநரை காஷ்மீர் சட்டப்பேரவை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நடைமுறை நீக்கப்பட்டு தில்லியே அமர்த்தும் நடமுறை நுழைக்கப்பட்டது. இது, காஷ்மீர்மீது இந்திய வல்லாட்சியத்தை நிறுவப் பெரிதும் பயன்பட்டது. இந்த ஆளுநர்கள் தில்லிப் பேரரசின் வைஸ்ராய்களாகவே நடந்து கொண்டார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஜக்மோகன். 1989ஆம் ஆண்டு பாஜக அழுத்தத்துக்குப் பணிந்து விபி சிங் ஆட்சி ஜக்மோகனை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக்கியது. அவர் பதவியேற்ற அடுத்த நாளே மக்கள் கூட்டத்தின்மீது அரசுப் படையினர் சுட்டதில் நூறு பேர் கொல்லப்பட்டனர்.

ஜக்மோகன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக்கப்பட்டது இது முதல்முறையன்று. 1984ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவரை காஷ்மீருக்குள் ஆளுநராக அனுப்பிவைத்தார். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் மோசடிகளை அரங்கேற்றுவதிலும் ஆட்சிகளைக் கவிழ்ப்பதிலும் கலைப்பதிலும் கைப்பாவைகளைப் பதவியிலமர்த்துவதிலும் 1950கள் தொடங்கி நேரு முதல் இந்திரா வழியாக மோதி வரை யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்த தில்லிப் பேரரசர்களின் கைக்கருவிகளே ஜக்மோகன் வகையறாக்கள்.

ஷேக் அப்துல்லா, 1965 பிப்ரவரியில் புனித ஹஜ் பயணம் முடித்துத் திரும்பும் வழியில் பல நாட்டுத் தலைவர்களை சந்தித்தார். சீனப் பிரதமர் சூ என் லாயைச் சந்தித்தபோது இந்திய அரசு அவரை உடனே நாடு திரும்பச் சொன்னது. திரும்பிய கையோடு அவரைத் தளைப்படுத்தி கடவுச் சீட்டையும் நீக்கம் செய்தனர்.

1967 தேர்தலில் 118 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 38 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1971இல் நாடாளுமன்றத்துக்கும் 1972இல் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தபோது ஷேக் அப்துல்லா தலைமையிலான வாக்கெடுப்பு முன்னணி போட்டியிட விடாமல் தடுக்கப்பட்டது. தேர்தலில் பங்கேற்பதற்காக 1971 ஜனவரி 8ஆம் நாள் தில்லியிலிருந்து சிறிநகர் செல்லப் புறப்பட்டபோது குண்டுவெடிப்பு மிரட்டல் வந்திருப்பதாகச் சொல்லி வனூர்தியை நிறுத்தியது இந்திய அரசு. மறுநாள் அப்துல்லாவும் பெய்க்கும் காஷ்மீருக்குள் நுழையத் தடை விதித்தது. பக்சியுடனிருந்த மிர் காசிமைப் பிடித்துத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 57 இடங்களைக் கைப்பற்றியது.

இதற்கிடையில் 1965, 1972 இந்தியா-பாகிஸ்தான் போர்களின்போது இந்திராவுடன் ஷேக் அப்துல்லாவை இணக்கப்படுத்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள் முயன்றார்கள். இந்தியாவுடன் காஷ்மீர் இணைப்பை ஷேக் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திரா நிபந்தனை விதித்தார். அதுவரை, அவர் தேர்தலில் நிற்கக்கூட அனுமதிக்கமாட்டோம் என்றார். இந்த நிபந்தனையை ஏற்பதாக இருந்தால் ஷேக் இத்தனை ஆண்டுகள் சிறையில் கழிக்கவே நேரிட்டிருக்காது

இந்தியப் பிரதமர் இந்திராவும் பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோவும் 1972 சிம்லா உடன்பாட்டில் ஒப்பமிட்டனர். காஷ்மீர் சிக்கலை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் உடன்பாடு. அதாவது, காஷ்மீரை இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பாகக் கூட சேர்த்துக்கொள்ளக்கூடாதாம்! இந்த உடன்படிக்கையை ஷேக் அப்துல்லா கடுமையாகக் குறைகூறினார்.

தான் சிறையிலிருந்த ஆண்டுகளில் காஷ்மீரின் உரிமைகள் மறுக்கப்பட்டதையும் பறிக்கப்பட்டதையும் அரிக்கப்பட்டதையும் எதிர்த்து வந்தவர், ஒரு கட்டத்துக்குப்பின் இந்திராவின் நிபந்தனையை ஏற்று, அதனால் தன் மதிப்பை இழந்தார். 1975 பிப்ரவரி 25ஆம் நாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை தலைவராகத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கினர். ஜூலையில் தேசிய மாநாட்டுக் கட்சியைப் புதுப்பித்து 1977 தேர்தலில் போட்டியிட்டுப் பெருவெற்றி பெற்றார். அதுவரையிலான காஷ்மீர் வரலாற்றில் நேர்மையாக நடைபெற்ற முதல் தேர்தல் அதுவே.

1982 செப்டெம்பர் 8ஆம் நாள் காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா இறந்துபோனபின் அவர் மகன் பரூக் அப்துல்லா முதலமைச்சரானார். 1983 தேர்தலிலும் அவரே வென்றார். அவரை வீழ்த்த (ஜம்முவில் வகுப்புவாதம் உட்பட) இந்திரா செய்த சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. பரூக் பாகிஸ்தானுக்கும் பிரிவினைக்கும் ஆதரவாக இருப்பதாகச் சொல்லி அவர் கட்சியிலிருந்து 13 உறுப்பினர்களைக் கவர்ந்து காங்கிரஸ் ஆதரவோடு பரூக்கின் மைத்துனர் குலாம் முகமது ஷாவை ஆட்சியிலமர்த்த முயன்றார். ஆளுநர் பி,கே. நேரு இதை ஏற்க மறுத்தபோது அவரை நீக்கிவிட்டு இந்துத்துவ வெறியர் ஜக்மோகனை ஆளுநர் பதவியில் அமர்த்தினார். ஜக்மோகன் வந்தவுடனே பரூக்கை நீக்கிவிட்டு குலாம் முகமது ஷாவை முதல்வராக்கினார்.

பரூக்கின் ஆட்சியைக் கவிழ்த்து குலாம் முகமதை பதவிலமர்த்திய இந்திரா அடுத்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் அதே ஜக்மோகனைப் பயன்படுத்தி அதே குலாம் முகமதையும் கவிழ்த்தார். காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்த பின் ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. ஜக்மோகன் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமில்லை. ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வந்த முஸ்லிம்களை வெளியேற்றினார். இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த இடங்களை பாதியாகக் குறைத்தார். கிருஷண பரமாத்மா அவதரித்த நாளில் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆடுவெட்ட தடைவிதித்தார். ஜக்மோகன் ஆட்சியில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 249ஆம் உறுப்பு காஷ்மீருக்கும் பொருந்தும்படி நீட்டப்பட்டது. இப்போதைய அதிரடிகளுக்கு அமித்.ஷா இந்த 249ஐத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளார்.

எட்டு மாத ஆளுநர் ஆட்சிக்குப்பின் பரூக் அப்துல்லா பதவிக்காகக் காங்கிரசின் காலடியில் விழுந்தார். பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இழிவானதோர் உடன்பாடு செய்துகொண்டார். தில்லியுடன் சமரசம் செய்துகொள்ளாமல் ஆட்சியில் நீடிக்கஇயலாது என்று தெரிந்து கொண்டதாகப் பிற்காலத்தில் சொன்னார். அவர் பெற்றது முதலமைச்சர் பதவி, இழந்தது காஷ்மீரிகளின் நன்மதிப்பு. இப்போது பரூக், அநீதியான ஒரு சட்டத்தின் படி அநியாயமாகச் சிறை வைக்கப்பட்டுள்ளார். பதவிக்காகத் தன் மக்களுக்கு இரண்டகம் செய்த பாவத்தின் சம்பளம் இது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இந்தியத் தேர்தல் குடியாட்சியத்தின்மீது படிந்த அழியாக் கறை 1987 மார்ச்சு 23இல் காஷ்மீரில் நடந்த தேர்தல். காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கூட்டணிக்கு எதிராக ‘முஸ்லிம் ஐக்கிய முன்னணி” போட்டியிட்டது. 1930 தொடங்கி காஷ்மீர் மக்களிடம் ஆதரவு பெற முடியாத முஸ்லிம் மதவாத ஆற்றல்கள் இந்திய அரசின் மோசமான அணுகுமுறையால் இப்போது வலுவான நிலையை எட்டியிருந்தன.

காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணி வெற்றிபெற்றதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தத்தில் கூடுதலான அளவாக 30 விழுக்காட்டு வாக்குகள் பெற்ற முஸ்லிம் கூட்டணி 4 இடங்களில் மட்டும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. கூடுதல் வாக்குகள் பெற்ற முஸ்லிம் முன்னணி வேட்பாளர்கள் தோற்றதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்த கொடுமையை என்னவென்பது! இப்படி மோசடியால் வீழ்த்தப்பட்ட பலரும் பிற்காலத்தில் ஆயுதப் போராட்டக் குழுக்கள் தோன்றுவதற்கும் வளர்வதற்கும் காரணமாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிநகர் அம்ரிக்தால் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பெற்று வென்ற போதிலும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரிடம் தோற்றதாக அறிவிக்கப்பட்ட ஷேக் ஜலாலுதீன் என்பவரே பிற்காலத்தில் ‘ஹிஸ்புல் முஜாகிதீன்’ என்ற ஆயுதக் குழுவைத் தோற்றுவித்தார்.

காஷ்மீர் வரலாற்றில் 1987 மோசடித் தேர்தல் ஒரு திருப்புமுனை எனலாம். நீதி, நேர்மை, ஜனநாயகம் எதற்கும் மதிப்பளிக்காத பகைவனை எதிர்த்து ஆயுதம் ஏந்துவது தவிர வேறு வழியில்லை என்ற சிந்தனைக்குப் பல காஷ்மீர் இளைஞர்கள் தள்ளப்பட்டனர் அப்போதுதான். 1980களில் தோற்றம் பெற்ற ஆயுதக் குழுக்கள் 1989இல்தான் முழுவீச்சுப் பெற்றன. எல்லைகடந்த பயங்கரவாதம் என்பதெல்லாம் அதற்குமுன் இல்லை.

ஐயோ தீவிரவாதம்! ஐயோ திகிலியம் (பயங்கரவாதம்)! ஆபத்து, ஆபத்து என்று அலறுகிறதே இந்திய அரசு, இந்த பூதங்கள் வளர்ந்ததே இந்தியா செய்த அடுக்கடுக்கான மோசடிகளால்தான். அறப் போராட்டத்துக்கான கதவுகள் அனைத்தையும் இறுக மூடி வைத்தபின் மறப் போராட்டம் பீறிட்டுக் கிளம்புவது இயல்புதானே?