கீழடி என்ற பெயர், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாக மட்டுமின்றி தமிழர் உணர்விலும் பெரிய அதிர்வை உண்டாக்கியுள்ளது. பொதுவாக, இம்மாதிரி கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது புத்திஜீவிகள் வட்டாரத்தில் சற்று பரபரப்பாக பேசப்பட்டு அது தணிந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை, கீழடியில் அகழ்வாய்வு கண்டுபிடிப்புகள் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது. தமிழகத்தின் மொத்த வரலாற்றினையும் கீழடி அகழ்வாராய்ச்சி மாற்றப் போகிறது என்று ரொமிலா தாப்பர் கூறுகின்றார்.

ஆற்றங்கரை நாகரிகம் என்ற நிலையிலிருந்து, தமிழ் நாகரிகம் என்று பேசும் அளவிற்கு நகர்த்தப்பட்டு உள்ளது, கீழடி அகழ்வாராய்ச்சி.

கிணறு தோண்ட பூதம் கிளம்பியது என்பார்கள். இங்கே 1974இல்  கிணறு தோண்டியபோது வெளிப்பட்ட வரலாற்று பூதம்தான் இது. பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய மாணவர்கள் தங்கள் பகுதியில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக கூறிய தடயங்களைக் கண்டு வியந்து மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

டாக்டர் கே.வி.ராமன் என்னும் தொல்லியல் அறிஞர், 1950இல் ஒரு தொல்லியல் நிலஅளவையை மதுரை, திருமங்கலம், மேலூர், பெரியகுளம் ஆகிய தாலுகாக்களில் தமிழகத்தில் மேற்கொண்டார். களஆய்வில், இப்பகுதிகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் நடத்த இடங்களும், தடயங்களும் அதிகமாக உள்ளன என்றார்.

பிறகு 2006இல் பேராசிரியர் ராமன் அவர்கள், தங்கள் மாணவர்களுடன் வைகை நதிக்கரையோரம் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டார்.

பின்னர் 293 இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கல்வெட்டுகள், ஈமத்தாழிகள், பானை ஓடுகள், புதைக்கப்பட்டவர்களின் எலும்புகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்பின்னர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் மத்திய தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014 முதல் தொடங்கிய இந்த ஆய்வு, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மத்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்டு பிறகு கைவிடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் எழுப்பப்பட்ட பலத்த எதிர்ப்பின் விளைவாக தமிழக அரசே மாநில தொல்லியல் துறை மூலமாக கீழடியில் அகழ்வாய்வைத் தொடரத் தொடங்கியது.

2017 முதல் இன்று வரை இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் ஐந்தாம் கட்ட ஆய்வு நிறைவுபெறுகிறது. 110 ஏக்கர் பரப்பளவுள்ள கீழடி மணலூர் போன்ற கிராமங்களில், இதுவரை சுமார் 4 ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாய்வில், மக்கள் வளமாக வாழ்ந்து சென்றதற்கான சில புதிய தரவுகள் கிட்டியுள்ளன. இவை தமிழர்களுக்குத் தமிழ் வரலாற்றை அறிவதில் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. பெரும்பாலும் சங்க இலக்கியக் குறிப்புகளை மட்டுமே வைத்து தமிழர் வரலாற்றுச் சிறப்பை பேசிவந்த நிலை மாறி, தற்போது வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்து பேசக்கூடிய அளவிற்கு தமிழ்ப் பண்பாட்டின் பலம் கூடியிருக்கின்றது. இதுவரை, சுடுகாடு மற்றும் இடுகாடுகள்தான் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் இம்முறை, மக்கள் வாழ்விடம் கண்டெடுக்கப்பட்டுள்ளதே கீழடியின் சிறப்பாகும்.

இலக்கியத் தரவுகள், பல அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போவதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

கீழடியில், முதல்முறையாக சங்ககால மக்கள் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் ஆதாரங்கள் கிட்டியுள்ளன. கட்டட அமைப்புகள், வீட்டுச் சுவர்கள், தரைத்தளம், வடிகால்கள், தொட்டிகள், கிணறுகள் என்று பலவகையான கட்டிட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200 செ.மீ தோண்டியபோது பொருட்களின் காலகட்டம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. 353 செ.மீ அடிக்குமேல் தோண்டிய பொருட்களின் காலகட்டம் கி.பி.ஆறாம் நூற்றாண்டு என்று அறியவருகிறது. தோண்டத்தோண்ட வரலாறு மேலெழும்புகின்றது. புதிய கேள்விகளை அது உருவாக்குகின்றது. நம்முடைய அரசியல் கருத்தியல்களை கேள்விக்குள்ளாக்கும் சக்தி அவற்றிற்கு இருப்பதாகக் கருதுகிறேன்

என்ன காரணத்தினாலோ, தமிழகத்தில் அதிக அளவு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பற்றிய அறிக்கையும் முழுமை பெறவில்லை. அவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரியளவில் ஏற்படவில்லை. ஆனால் கீழடியில் அகழ்வாய்வு தமிழகத்தைப் பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது. அவ்வூரில் பெரும் கட்டடங்கள் கட்டப்படாத நிலை உள்ளதால், ஆய்வு மேற்கொள்ள முடிந்திருக்கிறது. அதுவும் பனைமரத்  தோப்புகள் அதிகம் உள்ளதால் அந்தப் புவிப்பரப்பு பாதிப்படையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது சிறப்பான அம்சம்.

1001 பானை ஓடு எழுத்துகள் கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு வண்ணங்களில், மற்றும் கலை வடிவங்களுடன் கிட்டியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பானையில் எழுத்துகளைப் பதிக்கவேண்டுமென்றால், பானை சுடுவதற்குமுன் எழுத்துகளை களிமண்ணில் எழுதி பின்னர் சுடவேண்டும். அப்போதுதான் பெயர் அப்படியே பொறிக்கப்படும். அப்படியானால் அதை பானை செய்தவர்களே செய்திருக்கவேண்டும். அப்படியாயின், குயவர்கள் எழுத்து அறிவு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இதில் 17 பானை மாதிரிகள் இத்தாலியைச் சேர்ந்த பைசா நகர் பல்கலைக்கழகத்திற்கு கரிம சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. கருஞ்சிவப்பு பானைகள் உருவாக்க 1100 டிகிரி செல்சியஸ்  சூடு செய்யப்படவேண்டும். அப்போதுதான் கருப்பு-சிவப்பு பானை உருவாகும். அதைச் செய்யும் அளவிற்கு அவர்கள் திறனாளியாக இருந்திருக்கிறார்கள்.

கீழடியில் கால்தடம் பதிக்கும் இடமெல்லாம் பழங்கால பானை ஓடுகளைப் பார்க்க முடிகிறது. மக்கள் புழங்கிய இடம் என்று புரிகிறது. பதினைந்தாயிரம் பேர் இங்கு வாழ்ந்திருக்கக் கூடும் என்று அமர்நாத் கூறுகின்றார். ஹரப்பா நாகரிகத்தில் 30 ஆயிரம் பேர் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பேர் வாழ்ந்திருந்தால், அது ஒரு நகர நாகரிகம்தான். வெளிநாட்டுப் பானைகளும் இங்கே காணப்படுவதாகத் தெரிகிறது.. இதிலிருந்து வேறுநாட்டுடன் வணிகம்சார்ந்த தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் யூகிக்கலாம். எழுபது வகை விலங்குகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண் சிற்பங்களில் மனித முகம் முதல் விலங்குகள் வரை காணப்படுகின்றன. தங்கம் இரும்பு, செம்பு என்று உலோகப் பொருட்களும் காணப்படுகின்றன. தங்க நகைகளும் தென்படுகின்றன. இவையெல்லாம் ஒரு வளமான நகர நாகரிகத்தின் எச்சங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தற்போது கீழடியில் அகழ்வாய்வு நடைபெறும் இடத்திற்குச் சொந்தக்காரர் தமிழ்ப் பேராசிரியர் கரூர் முருகேசன் அவர்கள். முதல் கட்டத்தில், கிராமத்தில் இணைந்த மக்கள் பலர் இந்த அகழ்வாய்வு குறித்து அச்சப்பட்டார்கள். முருகேசன், தன் நிலத்தை தொல்லியல் துறைக்கு தானமாக வழங்கத் தயாராக உள்ளதாக, தெரிவித்தப் பிறகு, படிப்படியாக மக்கள் இந்த அகழ்வாய்வுத் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காது என்று புரிந்துகொள்ளத் தொடங்கி ஒத்துழைப்பும் தந்துவருகிறார்கள்.

ஏதென்ஸும் கீழடியும்

சென்ற ஆண்டு நான் ஏதென்ஸ் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கு இம்மாதிரி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு அற்புதமான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

கீழடி போன்றே நீர் வாய்க்கால்களும், பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், சிலைகளும் இன்னும் பல அம்சங்களைக் கொண்ட இடம் அது..

கீழடி போன்று பல தடயங்களைக் கொண்டுள்ள அந்த நிலப்பரப்பில்மேல் கண்ணாடி கூரை வேய்ந்து அதன்மீது நின்று பார்வையாளர்கள் கீழேயுள்ள தொல்லியல் எச்சங்களை காணக்கூடிய வாய்ப்பை அந் நாடு ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வாய்க்கால்களும், அடுக்கு கிணறுகளும் தனித்தனியாக பெயர்த்து கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வாய்ப்பு இருப்பின், அதேமாதிரி ஏதாவது ஒரு மியூசியத்தில் அருங்காட்சியகத்தின் மூலையில் அடுக்கப்படும். இல்லையெனில், இருட்டு குடோனில் மூட்டைகட்டி வைக்கப்பட வாய்ப்பு உண்டு.

தமிழர் பண்பாட்டின் அபூர்வத் தரவுகளைப் பாதுகாத்து, வரும் தலைமுறையினர் தொடர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட உள்ளன.

கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டட அமைப்புகள், மூட்டை கட்டப்பட்டு மூலையில் அடுக்கப்பட்டால், அதுவொரு வரலாற்றுத் துரோகமாகும். கீழடியைப் பொருத்தவரை மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அதுபற்றிய உரையாடல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை கண்டிப்பாக தொல்லியல் துறைக்கும், இதர அதிகார அமைப்புகளுக்கும் பெரும் நெருக்கடியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் மறதி என்னும் நோய், திசை திருப்புதல் என்னும் செயல் மக்களின் வேகத்தைக் குறைக்கும் வேலையைச் செய்யும்.

இது ஒருபுறமிருக்கையில், சில முக்கிய விவாதங்களை கீழடி அகழ்வாய்வு ஏற்படுத்தியிருக்கிறது. பல பதில் சொல்ல இயலாத பல கேள்விகள் உண்டாகி வருகின்றன.

ஆரியமா, திரவிடமா, தமிழியமா?

கீழடி நாகரிகம் என்று சொல்லும்போது நாகரிகம் என்ற சொல் ஒரு பிரமாண்ட உணர்வை உண்டாக்குகிறது. தமிழர் நாகரிகம் என்று சொல்லும்போது மேலும் இனப் பெருமை உணர்வு அதிகரிக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்தப் பெருமை, இதுகாறும் பேசப்பட்டு வந்த திராவிடப் பெருமையை எதிர்ப்பதாக, திராவிடப் பெருமைக்கு சவால்விடுவதாக அமையும்போது இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிக்கல் திராவிடப் பாரம்பரியத்தை ஆதரித்துவந்த தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, ஆரிய நாகரிகத்தின் நீட்சியா இது என்று கேட்டால், மேலும் சிக்கல் அதிகரிக்கிறது.

ஆரியமா, திராவிடமா, தமிழியமா என்ற கேள்விகள் பண்பாட்டு அரசியல் தளத்தில் இன்று மேலோங்கி நிற்கின்றன. அரசியல் அமைப்புகள் அவரவர் கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்துக்கொண்டு அதைப் போற்றுவதும் மற்ற இரண்டை நிராகரிப்பதுமான வேலையைச் செய்துவருவதையும் நாம் காணமுடிகிறது.

இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதுபற்றி என்னுடைய கம்யூனிச தோழர் மதிவாணன் அவர்களிடம் உரையாடியபோது, அவர் சொன்ன பதில் யோசிக்கத் தக்கதாக இருந்தது. இந்தக் கால அளவுகளையும் கோட்பாடுகளையும் வைத்து புராதன கால, பண்டைக்கால வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது தவறானதாகும் என்பதே அது. மேலும் ஆரியம், திராவிடம் என்ற சொற்கள் அல்லது பாகுபாடுகள் எவையும் இல்லாத காலகட்டத்தை தற்பொழுது இந்த வேறுபாடுகள் கொண்டு வகைபாடு செய்வது நியாயம்தானா என்ற கேள்வியும் அர்த்தமுள்ள கேள்விதான்.

மனித குலம் தோன்றிய வரலாறு என்பதோடுதான் எந்த ஒரு பண்பாட்டு அகழ்வாய்வையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றார், அவர்.

அதற்கான முயற்சிகள் கீழடியில் முதல் அடியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலமாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு மையத்துடன் இணைந்து மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. வழக்கமான தொல்லியல் ஆய்வுகள் மட்டுமே கீழடி பண்பாட்டை நாகரிகத்தை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்காது. மேலும் பல அறிவியல் ஆய்வுகள் தேவைப்படும். அப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது அதன் முடிவுகள் கீழடியை மனிதகுல வரலாற்றின் மற்றுமொரு முக்கியப் புள்ளியாக உறுதிப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட ஆதிமனிதன், இனக்குழுக்களாக ஆங்காங்கே நாடோடியாகத் திரிந்து வாழ்ந்தான் என்பதும் மானிடவியல் அம்சமாகும். அந்த வகையில், மரபணு ஆய்வு என்பது நம்முடைய வரலாற்றுப் பார்வையை மேலும் விசாலமாக்கும் ஆகும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், எனக்கு ஆச்சரியமளித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அங்கு காணப்பட்ட ஒரு பெயர்தான். உதிரன், மடைச்சி குவிரன், அயனன்,  சாதன், சந்தனவதி, வேந்தன் போன்ற பெயர்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளபோதிலும், ‘ஆதன்’ என்ற பெயர் என்னை மிகவும் ஈர்க்கிறது. கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரம் ஆதன் நகரமாகத்தான் தமிழர்களால் பேசப்படுகிறது. கிரேக்கத்தில் ஆதன் என்ற சொல் சூரியன் என்று பொருள்படும். இங்கும் அப்படியே. இன்னும் பல மொழிக் குறியீடுகள் நமக்கு உலகளாவிய தொல்லியல் கண்டுபிடிப்பு குறியீடுகளை ஒத்திருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றன.

தமிழர்கள், கடல்கடந்து வாணிகம் மேற்கொண்டதால் இம்மாதிரியான பொதுமைப் பண்புகளை இங்கு காணமுடிகிறது என்று அதற்கு ஒரு பதில் கூறப்படுகிறது என்றாலும் இன்னும் அறியப்படவேண்டிய வரலாற்று ரகசியங்கள் ஏராளமாக இருக்கக்கூடும். அவை தெரிய வரும்பொழுது இந்த நாகரிகங்கள் ஆரியமும் அல்ல திராவிடமும் அல்ல தமிழியமும் அல்ல, மானுடம் என்று உணரும்நிலையும் வரக்கூடும்.

மக்கள் தொல்லியல்

தமிழினத்தின் தொன்மையை பறைசாற்றும் இந்த அகழ்வாய்வு, அரசியல் காரணங்களால் வீரியம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் அபாயமும் உள்ளது.

பேராசிரியர் ரத்தினகுமார் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல, தொல்லியல் தற்போது மக்கள் தொல்லியலாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில், கீழடி அகழ்வாய்வு நிறுத்தப்படும் நிலை உண்டானபோது பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின என்பதும், மக்கள் விழிப்போடு போராடினார்கள் என்பதும், தனி ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தார் என்பதும் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் இருந்தும் கீழடி அகழ்வாய்வை காண லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகிறார்கள் என்பதும் இது மக்கள்மயப்பட்ட தொல்லியல் ஆகிவிட்டது என்பதை புரியவைக்கிறது.

பானையோடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஏன், பிராமி என்று அழைக்கிறீர்கள். அது தமிழிதான் என்று தமிழ்தேசியவாதிகள் மட்டுமல்ல; பலரும் இன்று பேசுவது மொழி வரலாற்றில் மற்றும் ஒரு திருப்புமுனையாகும்.

தமிழகத்தில், தமிழுக்கே உண்டான சொல் கலைச்சொற்களை எழுத்து வடிவத்தில் வைத்திருப்பதற்குப் பெயர் தமிழியாகத்தான் இருக்கவேண்டும் என்று இனிவரும் தொல்லியல் அறிஞர்களுக்கு, இயக்கவாதிகள் வழிகாட்டி வருகிறார்கள். பொதுவாக தொல்லியல் அறிஞர்கள், அறிவியல் கோட்பாட்டை மட்டுமே நம்பி, தங்கள் ஆய்வை வெளிக்கொண்டு வருவது வழக்கம். ஆனாலும், அந்த ஆய்வு முறைகளில் பண்பாட்டுக் கூர்மை, நுணுக்கங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்ற முக்கிய அம்சமும் தொல்லியல் ஆய்வு முறைகளில் சேர்க்கப்படும் நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சாதிகள் இருந்தனவா, வழிபாடுகள் இருந்தனவா என்ற கேள்விகளுக்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான் பதில் சொல்லமுடியுமே தவிர, இப்போது கிடைத்தவை போதாது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கீழடி ஆய்வு இடத்தை அரசு பாதுகாத்து அதை ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாக அமைக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் வேறுபடுகளின்றி குரல் எழுப்புவது அவசியம்.