கீழடித் தொல்லியல் களத்தின் ஆய்வு முடிவுகள் அறியக் கிடைத்தவுடன் தமிழ்க் குமுகாயத்திற்குப் புத்துயிர் பெற்றதுபோல் ஆகிவிட்டது. வரலாற்றினை வைத்துப் பேசும்போது, நமது பழைய இலக்கியங்களிலிருந்தே பெரும்பான்மையான எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தோம். அவற்றை முறையாய் நிறுவும் பருப்பொருள் சான்றுக்கு நம்மிடம் பற்றாக்குறைதான். எண்ணற்ற தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையைக் குறித்துப் பேசமுற்பட்டபோதெல்லாம் ‘அறிவியல் மட்டத்திலான ஆய்வுகளைக் கொண்டுவாருங்கள், களங்களைக் காட்டுங்கள்’ எளிமையாய் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். நூற்றாண்டுகட்கும் மேலாக நம் தமிழறிஞர்கள் தத்தம் முடிவுகளைத் தமக்குள்ளேயே அறிவித்துக்கொண்டு அடங்கினர் என்பதுதான் உண்மை.

திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள். ‘திருவள்ளுவர் எப்போது பிறந்தார், திருக்குறள் எப்போது இயற்றப்பட்டது ?’ என்பது பேசுபொருளாக இருந்தது. திருக்குறள் கிபி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இயற்றப்பட்டது என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறிவந்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள், சங்கம் மருவிய காலத்தில் தோன்றியது என்ற மட்டத்தில்தான் ஏற்றுக்கொண்டனர். அதனிலும் பல இடையூறுகள் இருந்தன. திருக்குறள் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க முடியாது என்றும் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு நூல்தான் அஃது என்றும் கூறினர். ‘திருக்குறளில் பல வடசொற்கள் கலந்திருக்கின்றன, அதனாலேயே அதன் காலக்கணக்கினைப் பின்தள்ளியே எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் தமிழின் மாண்பினைக் கெடுக்கும் மணிப்பிரவாள நடைக்கு எதிரான இயக்கம் தோன்றியது. மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்தது. ‘கிறித்து பிறப்பதற்கு முப்பத்தோராண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர்’ என்று மறைமலையடிகள், தெ.பொ.மீ., திரு.வி.க. ஆகியோர் கூடிய அவையில் முடிவு செய்யப்பட்டது. அதன்வழியே திருவள்ளுவர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நம்முடைய தொன்மை அடையாளங்கள் எவ்வாறு அழிந்துபோயின என்பதைக் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரோடு உரையாடினேன். ‘அக்காலத்தில் இயற்கையைவிடவும் போர்களே பேரழிவுகளை நிகழ்த்தின’ என்றார். பகைமுதிர்ச்சி பெற்ற மன்னர்களில் ஒருவன் போரில் வெற்றி பெற்றவுடன் எதிரி நாட்டு நகரங்களைத் தரைமட்டமாக்கி ஏர்பூட்டி உழுது எள் விதைத்து எருக்கம்பால் தெளித்துவிட்டே அகன்றானாம். நம் அறநூல்கள் அதைத்தானே சொல்கின்றன? நெருப்பிலும் பகையிலும் சிறிதும் மீதம் வையாதே என்கின்றன. ஒவ்வொரு தலைநகரமும் இப்படித்தான் வீழ்த்தப்பட்டது. ஒவ்வோர் அரசும் இப்படித்தான் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது. இவ்வழி மட்டுமின்றி வெளியார் படையெடுப்புகள், கொள்ளையிடல்கள், சூறையாடல்கள் என எங்கெங்கும் அழிவுச் செயல்கள். இவற்றோடு இயற்கையும் தன் பங்குக்கு வேண்டிய பேரழிவினைச் செய்தது. குணகடலின் (வங்காள விரிகுடா) கரையில் அமைந்திருந்த துறைமுகத் தலைநகரங்கள் கடல்கோள்களால் மூழ்கடிக்கப்பட்டன. கடல்கோள் என்றால் என்னவென்றே தெரியாதிருந்த நமக்கு, அண்மையில் நேர்ந்த ஆழிப்பேரலைப் பேரிடர்தான் உண்மையையே உணர்த்தியது. இன்றைக்கு நமக்கு மாமல்லையும், பூம்புகாரும், நாகையும், கபாடபுரமும் எப்படியெல்லாம் கடலலைகளால் விழுங்கப்பட்டிருக்கும் என்று கற்பனையில் காணத் தெரியும்.

சங்கம் வளர்த்த தமிழின் காலக் கணக்குகள் மயங்கி விழ வைக்கின்றன. தலைச்சங்கத்தின் காலம் ஏறத்தாழ, நான்காயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள். இடைச்சங்கம் நிலவிய காலம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள். இடைச்சங்க காலத்தின் முடிவில்தான் கடல்கோளால் கபாடபுரம் நீரில் மூழ்கியது. கடலோரத்தில் தலைநகரம் இருப்பதால் ஏற்படும் அழிவை எண்ணி இன்றுள்ள மதுரைக்குப் பாண்டிய மன்னன் இடம்பெயர்ந்தான். இன்றைய மதுரையில் பாண்டியன் முடத்திருமாறனால் நிறுவப்பட்டதே கடைச்சங்கம் எனப்படுவது. அதன் காலம் ஏறத்தாழ, ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது ஆண்டுகள். தமிழின் முச்சங்கங்கள் நிலவிய காலக்கணக்கு பத்தாயிரம் ஆண்டுகளைத் தொடுகிறது. கடல்கோள் ஏற்பட்ட பகுதிகளில் அகழாய்வுகள் செய்வதற்கு நாட்டின் செல்வ வளமும் அறிவியற் கருவிகளின் மேம்பாடுகளும் தேவைப்படும். அது நடக்கும் காலமும் வரும். ஆனால், கடைச்சங்கம் கூடிய இன்றைய மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயன்றவரை அகழாய்வு செய்வதற்குத் தடையேதுமில்லை.

முச்சங்கங்களின் காலக் கணக்குகள் இவ்வாறு இருக்கையில், அவற்றை நாம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வழியாகத்தான் தொடர்ந்து பற்றி வந்தோம். நம்மிடம் மீந்திருக்கும் தொன்மை நூல்கள் பலவும் வரலாற்றுக் காலத்தோடு தொடர்புடைய பேராக்கங்கள். வரலாற்றினை முந்திக்கொண்டு ஓரடி எடுத்துவைப்பதற்கு நமக்கு ஒரு பற்றுக்கோலும் கிடைக்கவில்லை. கீழடி அகழாய்வு முடிவுகளால் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழரசுகள் குறித்த அனைத்துக் கருதுகோள்களும் ஒரே பாய்ச்சலில் வரலாற்றின் முடியேறி நிற்கின்றன.

இந்திய வரலாற்றினை எடுத்தியம்பும் நூல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தோன்றியிருக்கின்றன. அவற்றினை முனைந்து ஆக்குவதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டு இன்றைய காலகட்டம்வரை பல்வேறு அறிஞர் பெருமக்களும் பேருழைப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். வரலாறு என்ற தகுதியைக் கொடுத்து ஏற்றுக்கொள்வனவற்றுக்கு தொன்மைச் சான்றுகள் பலவும் துணை நிற்க வேண்டும் என்கிறார்கள். மொழிப் படைப்புகள் அவற்றின் பழைமை கருதியே பொருட்படுத்தத்தக்கன என்றாலும் அவையே போதுமானவையல்ல. அவர்களுக்குத் திடமான சான்றுகள், ஆதாரங்கள், அகழ்விடங்கள், எச்சங்கள் வேண்டும். உலக வரலாறு தோன்றியது முதற்றே தோன்றி இயங்கும் நகரங்கள் பலவும் தமிழ்நாட்டில் உள்ளன என்றாலும் அங்கே எஞ்சியிருப்பவை முற்காலச் சான்றுகள்தாம். மதுரையிலும் காஞ்சியிலும் இல்லாத வரலாறா? ஆனால், அங்கே எஞ்சியிருப்பவை வரலாற்றுக் காலத்தின் எச்சங்கள். அதற்கும் முன்தள்ளி ஒருநாள் எண்ணை இடுவதற்கு நாம் எதனையும் பெற்றிருக்கவில்லை. நிலைமை இவ்வாறிருக்கையில், கீழடியில் கிடைத்தவை யாவும் பல நூற்றாண்டுகட்குப் பின்னே போ என்று வழிகாட்டிவிட்டன.

பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற வரலாற்று நூல்களை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்திய வரலாற்றின் காலம் மொகஞ்சதாரோ, அரப்பா என்றுதான் தொடங்கும். சிந்து ஆற்றங்கரையில் கண்டறியப்பட்ட ஒரு நாகரிகம் அதுநாள்வரை நாம் கருதியிருந்த வரலாற்றுக் காலத்திற்கு முன்னே கூட்டிச் செல்கிறது. அதன் நகர அமைப்புகள், கழிவுநீர் வடிகால் முறைகள், வீட்டுக் கட்டுமானங்கள், சித்திரச் செதுக்கல்கள், அறிதற்கரிய எழுத்து வடிவங்கள் ஆகியன அங்கே ஒரு வளவாழ்வு நிகழ்ந்த சுவடுகளை எடுத்துக் காட்டின. அவர்கள் அந்நிலத்தில் தோன்றி நிலைத்த குடிகளா, இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களா என்று அறிவதில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. உலகெங்கிலும் நதிக்கரைகளில் செய்யப்பட்ட அகழாய்வுகள் மனித வரலாற்றுக் காலத்தை மூவாயிரம் ஆண்டுகளேனும் பின்னகர்த்தி அறிவிக்கின்றன.

மொகஞ்சதாரோ, அரப்பா என்று தொடங்கும் இந்திய வரலாறு அடுத்து கௌதம புத்தர், மகாவீரர் என்னும் சமயப் பெரியார்களிடம் வந்து நிற்கும். பௌத்தத்தோடும் சமணத்தோடும் தொடர்புடைய நூல்கள் பேரளவு காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன. இந்திய வரலாற்றில் இடம்பெறும் முதற்பேரரசர் மௌரியரான அசோகர் ஆவர். அசோகருக்கு முந்தி இந்நிலத்தில் மன்னர்கள் ஆண்டார்கள்தாம். ஆனால், அவர்களைப் பற்றிய தொன்மைச் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. நந்தர்கள், மகதர்கள் மரபினில் பல அரசர்களை வரலாறு சுட்டிக்காட்டினாலும் அசோகரின் ஆட்சிக் காலத்துத் தொன்மைச் சான்றுகளால் அவரைப் பற்றிய செய்திகளை நிலைக்கச் செய்துவிட்டார். குப்தர்கள், அலெக்சாண்டர் படையெடுப்பு என அடுத்தடுத்து இந்திய வரலாறு தெளிவுபெற்று நடக்கிறது. காலவெள்ளத்தில் கரையாமல் இன்றுவரை எஞ்சியுள்ள கல்வெட்டுகளும் கட்டுமானங்களும் அம்மன்னர்களின் இருப்பினை வரலாற்றில் பதிய வைத்துவிட்டன. ஆனால், பத்தாயிரம் ஆண்டுத் தமிழ்ச்சங்க வரலாற்றினை உடைய தமிழினத்திற்கும் தமிழ் மன்னர்கட்கும் வரலாற்றின் முதற்பக்கங்களில் சிறு குறிப்பளவிலேனும் இடம் தரப்படவில்லை. கீழடியில் கிடைத்த சுவடுகள் அந்தத் தடையை உடைத்து நொறுக்குகிறது. புத்தர் பிறந்தது கி.மு. 563ஆம் ஆண்டு. கீழடியின் பழைமை கி.மு. ஆறாம் நூற்றாண்டைத் தொட்டு நிற்பதால் கீழடி தமிழினத்தின் வரலாற்றினை புத்தருக்கு முன்னதாக எழுதியாக வேண்டும். இந்திய வரலாற்றின் பாட வரிசை மொகஞ்சதாரோ, அரப்பா, கீழடியாம் மதுரை, புத்தர், மகாவீரர் என்று மாற்றியாகவேண்டும்.

அஜந்தா குகைகட்குச் சென்றிருந்தபோது அதன் பழைமையைக் கண்டு வாயடைத்துப் போனேன். ஒரு மலைவளைவைப் பயன்படுத்தி அதன் பக்கவாட்டுச் சுவரை முகப்பாகக் கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட குகைகள் குடையப்பட்டிருக்கின்றன. அதன் பழைமையான குகையினை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கின்றனர். அதிலிருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஒவ்வோர் அரசரும் தம் பங்களிப்பாக ஒரு குகையைக் குடைந்து வழங்கியிருக்கிறார். பௌத்த மதத் துறவிகள் அதில் வசித்திருக்கின்றனர். குகை என்றால், குனிந்து நுழைகின்ற சிறுவழி என்று நினைத்துக்கொள்ளாதீர். ஒவ்வொரு குகையும் இன்றைய திருமண மண்டபத்தளவுக்கு இருக்கும். உள்ளே பதின்கணக்கில் தனியறைகளும் கூடமும் தலைமையறையுமாக அவற்றைக் காண்பதற்கே மூச்சடைக்கும். தரையைத் தவிர்த்து மேல்கீழ் இடம்வலம் என எங்கெங்கும் சிறு இடைவெளியில்லாமல் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். காலப்போக்கில், வட இந்தியாவில் பௌத்தத்தின் செல்வாக்கு குன்றியதும் அக்குகைகள் கைவிடப்பட்டு பல நூற்றாண்டுகளாகக் கேட்பாரற்றுக் கிடந்தன. புலி வேட்டைக்கு வந்த ஆங்கிலேயர் ஒருவர் அக்குகைகளைக் கண்டறிந்தார்.

தமிழர் வரலாற்றில் அப்படி ஏதேனும் ஒரு குகையோ, குடைவரையோ, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டறியப்பட்டால் நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலைச் சிற்றூரான மறையூரிலுள்ள கல்திட்டைகள் அத்தகைய தொல்லிடம்தான். சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு எடுப்பித்த ‘கண்ணகி கோட்டம்’ இன்றைக்கும் குமுளி மலைச் சிகரத்தில் கல்சரிந்து கிடக்கிறது. இவ்விரண்டைத் தவிர, அம்மலைத்தொடர்களில் தொன்மையானவை என்று கூறுவதற்கு எதுவும் என் நினைவுக்கு வரவில்லை. பேரியாற்றங்கரையில் சேரனின் முசிறித் துறைமுகம் வரைக்கும் பலப்பல அகழ்வுச் சான்றுகள் இருக்கலாம்தான். ஆனால், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கும் அணைப்பரவல்களும் அச்சான்றுகளைப் பெயர்த்திருக்கக்கூடும். என் விருப்பத்திற்குக் கிடைத்த விடையாக அமைந்துவிட்டவைதாம் கீழடியின் வைகை ஆற்று வாழ்வுத் தடயங்கள்.

மேலே சொன்ன பேராசிரியர் கூறிய கூற்றொன்று இன்றும் நினைவிருக்கிறது. ‘தமிழ் மன்னர்களாம் சேர சோழ பாண்டியர்களைக் கற்பனை என்று நிறுவவும் வரலாற்றுப் புலத்தில் சில முணுமுணுப்புகள் எழுந்தன. அதனைத் தகர்த்தது ஒடியாவின் புவனேசுவரத்திற்கு அருகிலுள்ள உதயகிரிக் குன்றுகளில் கிடைத்த காரவேலனின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான்’ என்றார், அவர். இந்திய வரலாற்றில் ஒரு கட்டுரை அளவுக்குக் கிடைத்த பெரிய கல்வெட்டு உதயகிரிக் குன்றத்தின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு அது. உதயகிரிக் குன்றுகளிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் அசோகரின் தௌலிக் கல்வெட்டும் உள்ளது. காடு சூழ்ந்த இயற்கை நிலமான ஒடியாவில் ஹாத்தி கும்பாக் கல்வெட்டானது, யாரும் தொடமுடியாத உயரத்தில் ஒரு பாறையின் நெற்றிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. நேரில் சென்று அதனைக் கண்டபோது நானடைந்த பேருணர்ச்சிக்கு அளவே இல்லை. அவ்வெழுத்துகளைச் செதுக்குவதற்கு இராட்டிரகூடத்திலிருந்து எழுத்தறிஞர் ஒருவர் யானைமீது அமரவைத்து அழைத்து வரப்பட்டாராம். அதன் பொருள், அன்றைய ஒடியத்தில் எழுதத் தெரிந்தவர் பக்கத்து நாட்டில்தான் இருந்திருக்கிறார் என்பதே. கல்வெட்டு முழுக்க அந்நிலத்தின் அரசன் காரவேலனின் அருமை பெருமைகளாக இருக்கின்றன. காரவேலன் என்ற பெயரே தமிழ்த்தன்மையோடுதான் இருக்கிறது. காரவேலன், அவரை வென்றான் இவரை வென்றான் என்று செல்லும் அந்தக் கல்வெட்டின் ஒரு பகுதியாக வரும் சொற்றொடர்தான் ‘தமிர தேக சங்காத்தம்’ என்பது. ‘பதின்மூன்று நூற்றாண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத வலிமையோடு திகழ்ந்த தமிழ்மன்னர்களின் கூட்டணி’ என்று அதற்குப் பொருளுரைக்கிறார்கள். அந்தக் கல்வெட்டினால் தமிழ் நிலத்தில் மூவேந்தர்கள் ஆண்டதும் அவர்கள் ஆயிரத்து முந்நூறாண்டுகள் ஒற்றுமையாய் விளங்கியதும் நிறுவப்பட்டது. அந்தப் பதின்மூன்று நூற்றாண்டினை வெறும் பதின்மூன்றாண்டுகள் என்று எடுத்துக்கொள்வோரும் இருந்தனராம். கீழடியில் கிடைத்த சான்றுகள் தமிழ் மன்னர்களின் அமைதியான ஆட்சிக் காலத்தைப் பதின்மூன்று நூற்றாண்டுகட்குத் தங்குதடையின்றி நிறுவுகிறது.

கீழடியில் கண்டறியப்பட்ட தமிழி எழுத்துகள்தாம் அனைத்திலும் உயர்வு. எழுதுவதற்கு வேறொரு நாட்டிலிருந்து எழுத்தறிஞர் அழைத்துவரப்பட்ட ஒடியப் பேரரசனுக்கு நானூறு ஆண்டுகள் முன்னமே கீழடித் தமிழர் ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெற்றிருந்தனர். அங்கே பானைகளில் கீறப்பட்டுள்ள பெயர்கள் ஒருவரே செய்ததுபோல் இல்லை என்பது ஆய்வு முடிவு. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கையெழுத்து முறை இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்கள். அந்தப் பானைக்கு உரியவர் எவரோ, அவரே தம் பெயரை எழுதியுள்ளார். பானை செய்யப்பட்டபோது பச்சை மண்ணில் எழுதப்பட்டிருந்தால் செய்வினைஞரே அதனைச் செய்தார் என்று கொள்ளலாகும். அப்படியில்லாமல், சுட்ட பானையின்மீது கீறப்பட்ட எழுத்துகள் அவை. இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகட்கு முன்னம் ஒரு பானையை உடைமையாகக் கொண்டவர் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்திருக்கிறார். இதனோடு தொடர்புபடுத்திப் பார்த்தால், தலைச்சங்கத்தில் 4449 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் இடைச்சங்கத்தில் 3700 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் எவ்வளவு நெருக்கமான உண்மை! புலவர்க்கு ஒரு நூல் என்று கணக்கிட்டாலும் எட்டாயிரம் நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டுமே. அழிந்துபோன நூல்கள், கடல்கொண்ட நூல்கள் என்று நாம் கொள்ளவேண்டியவை அவற்றைத்தாம்.

தொடர்ந்து இலக்கண நூல்களில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் அடிப்படையில் சொல்கிறேன். இலக்கண நூல்களுக்கு நிகரானவை அவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். தமிழ் மரபில் முதல்நூல், வழிநூல், உரைநூல் என நூல் இயற்றுவதில் உரைநூல்களுக்கும் மதிப்பான இடம் தந்திருக்கிறோம். இலக்கணத்தின் திறவுகோல்கள்தாம் அவற்றுக்கு எழுதப்பட்ட உரைநூல்கள். நம் உரைநூல்களில் இலக்கணத்தை விளக்கும் பொருட்டு அடிக்கடி எடுத்துக் காட்டப்படும் பெயர்கள் ஆதன், சாத்தன், கொற்றன் போன்றவை. இந்த ஆதன் என்ற பெயர்க்கு உயிர் என்று பொருள். உயிரானவன். தமிழர்கள் தமக்குச் சூடிக்கொண்ட பெயர்களில் ஆதன் என்பதற்குத் தலையாய இடமுண்டு. சேரர்களும் தம் பெயர்களோடு ஆதன் என்று சேர்த்துக்கொள்வர். சேரலாதன் என்று சேர மன்னர்கள் பலரும் பெயர்கொண்டிருக்கின்றனர். சாத்தன் என்பதற்கு உண்மையானவர் என்ற பொருளைக் கற்பிப்பேன். சீத்தலைச் சாத்தனாரை அறிவோம். கீழடியில் காணப்பட்ட பானை உடைவுகளில் தமிழி எழுத்துகளில் ஆதன், குவிரன் முதலான பெயர்ச்சொற்களைக் காண்கிறோம். குவிரம் என்றால் காடு. காட்டுக்குரியவன் என்ற பொருள் தருவது குவிரன் என்ற சொல். அந்தப் பானையை வைத்திருந்தவன் ஆதன் என்பானும் குவிரன் என்பானும். ஆதன் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பெயர் மரபோடு அவ்வளவு நெருக்கமான தொடர்புண்டு. எம் தந்தை எந்தை என்று ஆகும். நும் தந்தை நுந்தை என்று ஆகும். ஆதன் தந்தை ஆந்தை என்றும் சாத்தன் தந்தை சாத்தந்தை என்றும் சேரும். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆதனின் தந்தைதான் பிசிர் ஆந்தை எனப்பட்டவர். பிசிராந்தையார் என்ற புலவர் எழுதிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் பிசிர் ஆந்தையாரின் மகன் வைத்திருந்த மட்கலமோ அது என்ற பேருவகை பெருகுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கீழடிக் காலத்தை அன்றைய நிலைமையோடு தொடர்புபடுத்திப் பார்த்தால்தான் அதன் பெற்றி உணரப்படும். கிழக்கிலும் தென்கிழக்கிலும் மேற்கிலும் கண்மாய்கள் அமைந்த வளமான நிலத்தில் ஒரு நகரமைப்பும் தொழிற்கூடமும் இருந்திருக்கின்றன. வைகை ஆறு ஊற்றுத் தண்ணீருக்குப் பெயர் பெற்றது. வை கை என்ற தொடரே வைகை ஆயிற்று என்பர். வைகை ஆற்றில் வெள்ளம்போனால்தான் தண்ணீர் கிடைக்கும் என்றில்லை. வெள்ளம் வடிந்தபிறகும் அதன் மணற்பரப்பில் கையை வைத்தால் ஊற்றுத் தண்ணீர் கைக்குழியில் நிறைந்துவிடும். அப்படியொரு பஞ்சுப் படுகையைக் கொண்ட ஆறுதான் வைகை. இன்றுள்ள வைகை ஆற்றிலிருந்து கூப்பிடு தொலைவில் அமையப்பெற்றுள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நம் நீர்மேலாண்மையைப் பறைசாற்றுபவை. மூன்றடி விட்டத்திற்குப் பன்னிரண்டு அடிகள் வரைக்கும் ஆழமாய் எடுக்கப்பட்ட கிணற்றிலிருந்து நிலத்தடி ஊற்றுநீர் பெருகிவர, அதனைக் காப்புச் செய்வதற்கு மட்பாண்ட அமைப்பினை வனைந்து கவிழ்த்து உறையிட்டிருக்கின்றனர். அதனால் நீர் நிறைந்ததும் குளிர்ந்துவிடும். நிறைநீரினால் கிணற்றின் ஓரச்சுவர்கள் அரிக்கப்படமாட்டா. ஊற்றாய்ப் பெருகிய நீர் ஓரச்சுவர்களால் உறிஞ்சப்படுவதும் தடுக்கப்படும். வேறுசில பானைகள் அளவான துளைகளோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் கூழாங்கல், மணல் போன்றனவற்றை இட்டு நீரினை வடிகட்டியிருக்கிறார்கள். வேறொரு பானையிலும் கணக்கான துளைகள் உள்ளன. ஒரு விளக்கினை ஏற்றிவைத்து அவ்விளக்கினை அப்பானையைக் கொண்டு மூடிவிடுவார்கள். விளக்கின் சுடரானது காற்றில் அணையாமல் எல்லாத் திக்கிலும் சீரான ஒளியைக் கொடுக்கும் ஏற்பாடு. அவை மட்டுமின்றி, ஓரிடத்தில் பானை உடைவுகள் பெருங்குவியலாய்க் கிடக்கின்றன. அவ்விடத்தில் மட்பாண்டங்கள் வனையும் தொழிலகம் இருந்திருக்கும் என்பது துணிவு.

தொல்மாந்தரின் கட்டுமான அறிவினில் மூன்று முறைகள்தாம் பெரிதாக வியக்கப்படுகின்றன. முதலில், இயற்கைக் குகைகளைத் தமக்கான இருப்பிடமாகக் கொண்டான். அடுத்து, குகையைக் குடையும் கலையையும் கற்றான். தன் தலைக்குமேல் பேரெடையை நிறுவிக்கொள்ளும் கூரை முறைகளில் திட்டமான இடத்திற்கு அவன் சேராததால் பாறைகளையும் மலைகளையும் குடைந்து பெற்ற வதிவிடங்களில் பாதுகாப்பாய் வாழ்ந்தான். மனித வாழ்வு பரவலாக்கம் ஆனபோது எல்லாவிடங்களிலும் பாறையையும் மலையையும் தேடமுடியாதே. அதனால் கற்களைச் சீராக அடுக்கும் முறையில் ஒரு கட்டுமானத்தைக் கண்டான். முறையான வடிவங்களில் உடைத்தெடுக்கப்பட்ட கற்களை அடுக்கிச் சுவர்களை நிறுத்தி அதற்கு மேற்கூரை வேயும் முறை அது. அந்த மேற்கூரைகள் கீற்றுகளாகவோ, ஓலைகளாகவோ, கற்பாளங்களாகவோ இருந்தன. கற்கள் கிடைக்காத இடத்தில் என்ன செய்வது? அங்கேதான் கட்டுமானத்திற்கு உதவும் கற்களைச் செயற்கையாக ஆக்கிக்கொள்ளவும் தொடங்கினான். வண்டலும் களிமண்ணும் சேர்ந்த கலவையை நன்கு பிசைந்தெடுத்து வேண்டிய வடிவில் பாளங்களாக வார்த்தெடுத்துச் சுட்டால் அதுதான் செங்கல். அவ்வாறு சுடப்பட்ட செங்கல் எடை தாங்கும் வலிமையோடு காலங்கடந்து நிற்கும். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடித் தமிழனுக்குச் சுட்ட செங்கல்லின் ஆக்கமும் பயன்பாடும் தெரிந்திருக்கிறது. அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவர்க் கட்டுமானங்கள் நல்ல திட்டமான வடிவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியானால், கட்டுமானக் கலையில் தமிழர்கள் உலகோர்க்கு முன்னோடியாக விளங்கியிருக்கிறார்கள் என்றே கொள்ளலாம். அந்தக் கட்டுமானப் பேரறிவு சுவரோடு நின்றுவிடுவதில்லை. கலம் கட்டுவது வரைக்கும் நீளும்.

உலோகங்கள் எனப்படுகின்ற மாழைப் பொருள்கள் கத்திகளாகவும் வாள்களாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆறாம் நூற்றாண்டுத் தமிழன் அம்பு, ஈட்டி என்று வைத்திருப்பான் என்று நினைத்தால் அவனுக்கு இரும்பு உருக்கு முறைகளும் கருவியாக்கங்களும் தெரிந்திருக்கின்றன. அந்நாள் தமிழணங்குத் தங்கப் பொருள்களை அணிகலன்களாக அணிந்திருக்கிறாள். தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட அருமணிகள் கிடைத்திருக்கின்றன. சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மண்மணிகளையும் கோத்து அணிந்திருக்கிறார்கள். கண்ணாடி மணிகள், பீங்கானைப்போன்ற உடைவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நெய்வுக்குப் பஞ்சிலிருந்து நூல்கோக்கும் தக்களிப் பொருள்கள் பல கிடைத்திருக்கின்றன. எலும்பினால் செய்யப்பட்ட கீறுபொருள்களும் தந்தத்தினால் செய்யப்பட்ட வேறுபொருள்கள் சிலவும் காணக் கிடைக்கின்றன. ஓய்ந்த நேரத்தில் பகடை விளையாடியிருக்கிறார்கள். பகடைக்காய்கள் சுட்ட மண்ணால் செய்யப்பட்டிருக்கின்றன. இன்றைய சதுரங்க விளையாட்டினைப் போன்ற ஒரு விளையாட்டையும் விளையாடியிருக்கிறார்கள். அவ்விளையாட்டுக்குரிய காய்கள் கருங்களிமண்ணால் தனியாகச் செய்யப்பட்டுள்ளன. பாண்டி விளையாடுவதற்குப் பயன்படும் தட்டை வட்ட ஓடுகள் பலப்பல எடுக்கப்பட்டுள்ளன. எதனைச் சொல்வது எதனை விடுவது! அன்றைய தமிழரின் வளவாழ்வின் தடயங்களைக் காணுகையில் காலத்திடம் தொலைத்துவிட்ட தலைவாயிலின் தங்கத் திறவுகோலினைக் கண்டுபிடிக்கப்பட்டதைப்போல் உணர்கிறேன்.

கீழடித் தொல்லியல் சான்றுகள், தமிழர்களின் தொன்மையைக் ‘கனவுப்பொருள்கள் நினைவில் வந்ததைப்போல்’ மீட்டுக் கொடுத்திருக்கின்றன. அவற்றின் அருமையுணர்ந்து அவ்விடத்தைக் கண்போல் காக்கவேண்டும். அங்கே கண்டெடுக்கப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பொருள்களை முறையாக அருங்காட்சியகப்படுத்த வேண்டும். ஆந்திர அரசாங்கம் கரும்பெண்ணை ஆற்றின் நாகார்ச்சுனசாகர் அணை நடுவில் ஒரு தீவுப்பகுதியை ஒதுக்கியிருக்கிறது. எதற்குத் தெரியுமா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகனப் பேரரசின் சான்றுகள் யாவற்றையும் அங்கே அருங்காட்சியம் ஒன்றைக் கட்டிக் காட்சிப்படுத்துவதற்காக. அங்குள்ள ஒரு சிலையைக்கூட நாம் படமெடுக்க முடியாதபடி கடுங்காவல் போட்டிருக்கிறார்கள். கீழடித் தொல்லகத்தையும் அவ்வாறு காவல் செய்யவேண்டும். கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் அனைத்தையும் ஆந்திர அரசு செய்ததைப்போன்று காட்சிக்கு வைக்கலாம். உணர்கருவிகள் போன்ற உயர்வகை அறிவியல் முறைகளைக்கொண்டு தமிழகத்தின் தொல்லியல் அகழ்வுக்கு வாய்ப்புள்ள இடங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வுசெய்து மேலும் பல புதிய திறப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவை யாவும் நிறைவேறுகையில் நாம் வரலாற்றின் உயர்முடிகளில் கொடிநாட்டிக்கொண்டிருப்போம்.