ஜெர்மனியைச் சேர்ந்த என் இரண்டு நண்பர்கள் பலமுறை என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார்கள். “வேற்று நாட்டவர் யார் எங்களைப் பார்த்தாலும் அவர்களின் நினைவுக்கு வருவது ஹிட்லர்தான். உரையாடலின் போது ஒருமுறையாவது ஹிட்லர் பற்றிப் பேசிவிடுவார்கள். அது எங்களுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். எங்கள் முந்தைய தலைமுறை செய்த தவறுகளை நாங்கள் இன்னும் சுமந்து திரிகிறோம்.” என வேதனையோடு சொல்வார்கள். ஹிட்லர் பற்றி அதிகம் தெரியாத ஒன்றிரண்டு விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஹிட்லர் ராணுவப் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தவர் அல்ல. ராணுவப் புரட்சி செய்ய முயன்று, அதில் தோற்று, அதற்குப் பின்னர் ஜனநாயக வழியில் மக்களின் பேராதரவுடன் ஆட்சியைப் பிடித்தவர். அதன்பிறகு ஜெர்மனியில் தேர்தல் நடக்கவில்லை.
மக்கள் எப்படி ஒருமனதாக ஹிட்லருக்கு ஆதரவளித்தார்கள்? ஹிட்லர் தேசபக்தியை, இனவெறியைத் தம் ஆயுதமாக எடுத்தார். யூதர்களால் நாம் வஞ்சிக்கப்படுகிறோம், என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள். ‘புதிய ஜெர்மனி’யை உருவாக்கிக் காட்டுகிறேன் என மூலைமுடுக்குகளில் எல்லாம் பிரச்சாரம் செய்தார். மக்கள் அந்த வலையில் வீழ்ந்தார்கள். வாக்குகளை அள்ளி வீசினார்கள். கடைசியில் அவமானப்பட்டு நின்றார்கள்.

இந்தக் கதை இந்தியாவிலும் இப்போது நம் கண்முன் நடந்து கொண்டிருக்கிறது. குஜராத் எனும் முன்னேறாத ஒரு மாநிலத்தை முன்னேறியதாகப் போலியாகச் சித்தரித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏமாற்றினார்கள். அதெல்லாவற்றையும் விட இன்றளவும் செய்யும் சாடிசங்களை எல்லாம் செய்துவிட்டு அவர்கள் உபயோகிக்கும் வாசகம், “புதிய ஜெர்மனி’யைப் பெற்றெடுத்துக் கொண்டிருக்கிறோம், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதே!” வடிவேலு பாணியில்

சொல்லவேண்டுமானால் ஹிட்லர் உபயோகித்த அதே கெட்டவார்த்தையை பாரபட்சமில்லாமல் உபயோகிக்கிறார்கள்.
இதெல்லாம் ஏனைய இந்திய மாநிலங்களில் தெரிந்திருக்கிறதா புரிந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் புரிந்திருக்கிறது. தமிழகத்தில் அதி தீவிர சங்கிகள் மற்றும் அடிமுட்டாள் எடுபிடிச் சங்கிகளைத் தவிர மோடியை நம்பும் பொதுமக்கள் என யாரும் இலர். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலே மோடி ஆதரவைப் பொது இடத்தில் பேசுவதென்பது அசூசையை வரவழைக்கும் ஒரு செயலாகவும் கூட இருக்கிறது. ஆனால் மோடியைப் பற்றி, மோடியின் மோசடிகளைப் பற்றிப் புரிந்துள்ள தமிழக மக்களுக்கு, தமிழக இளைஞர்களுக்கு மோடிக்கு எதிராக இந்தத் தேர்தலை எப்படிச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது புரிந்திருக்கிறதா என்றால் சந்தேகமாக இருக்கிறது.

இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், “GoBackModi” எனக் கும்பலாகக் குரல் எழுப்பத் தெரிந்த தமிழர்களுக்கு மோடியை விரட்ட வேண்டுமானால் யாரை ஏகமனதாக “Welcome” செய்யவேண்டும் எனப் புரிந்திருக்கிறதா என்றால் இல்லை. பலவகைகளில் ஊடகங்களாலும், நடுநிலைப் போர்வையைப் போர்த்திய ஊடகவியலாளர்களாலும் தொடர்ந்து குழப்பப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, கட்சிகள் அல்லாமல் சிறுசிறு அமைப்புகளாகச் செயல்படும் பலரை எடுத்துக்கொண்டால், மக்களுக்கு தேர்தலையொட்டிய தெளிவை ஏற்படுத்துவதைவிட தங்களை நல்லவர்களாக நடுநிலையாளர்களாகக் காட்டிக்கொள்வதில்தான் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. அதற்காக மோடியை ரெண்டு கேலி, அதிமுகவை ரெண்டு கேலி, பாமகவை ரெண்டு கேலி செய்யும் அதேசமயத்தில், நடுநிலையாளர் பட்டம் போய்விடக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தில் ராகுலை ரெண்டு கேலி, ஸ்டாலினை ரெண்டு கேலி என முடித்துவிடுகிறார்கள். இதுதான் இவர்கள் அரசியலை அணுகும் லட்சணமாக இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், ஆட்சியில் இருக்கும் மோடியைப் பதவியில் இருந்து துரத்த வேண்டும் என்பதில் இருக்கும் உறுதி, மோடியை யாரை வைத்து விரட்ட முடியும், நாம் அனைவரும் யாரை ஆதரித்தால் மோடி விரட்டப்படுவார் என்பதில் எல்லாம் தெளிவில்லாமல் போகிறது.

ஜனநாயகத்தில் நம் வாக்குகள் நம்மைச் சார்ந்ததாக, சுயநலப் பார்வை கொண்டதாக மட்டுமே இருக்கக் கூடாது. நம்முடைய ஒரு வாக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளிம்புநிலை மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிக்கப்போகும் வாக்கு என்பதற்கான புரிதல் நமக்கு வேண்டும். உதாரணத்திற்கு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு நீட் பிரச்சினை முக்கியப் பிரச்சினையாக இல்லாதிருக்கலாம். ஆனால் நாளை நீட் எனும் அநீதி தொடரப்போகிறதா, நீக்கப்படப் போகிறதா என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் அவனது வாக்கும் இருக்கிறது. தனக்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத அனிதாக்களைப் பற்றியும் அவன் சிந்திப்பானேயானால் அதுதான் சரியான ஜனநாயகப் புரிதல்.

ஆனால் இந்தப் பார்வை பல முற்போக்காளர்களிடம் கூட இல்லை என்பதும், தங்களை மட்டுமே உலகம் என்றும், தங்களைச் சுற்றித்தான் உலகம் என்றும் ஒரு மாயத்தில் வாழ்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் எப்பேர்ப்பட்ட இக்கட்டனான சுழலிலும் நடுநிலையாகப் பேசுகிறேன், புத்திசாலித்தனமாகப் பேசுகிறேன் எனும் பெயரில் மக்களைக் குழப்பும் வேலை நடக்கிறது. உதாரணத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியனை உதயநிதி அழகான வேட்பாளர் எனச் சொன்ன உடனே விமர்சிப்பதாகட்டும், சீமான் 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தியவுடன் அவருக்கு பெண்ணியவாதி பட்டம் கொடுப்பதாகட்டும் என இந்த லிஸ்ட் நீள்கிறது. இதிலே பலர் முற்போக்குவாதிகளாகவும் இருப்பதுதான் வேடிக்கை.

இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும். டீமானடைசேஷனின் போது கார்டு வைத்திருப்பவர்களில் பலர் இந்தியாவில் எல்லோருமே கார்டு வைத்திருக்கிறார்கள் என்கிற மாயையில் டீமானடைசேஷன் எனும் சாடிசத்தை ஆதரித்தபடி வலம் வந்தார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் மட்டும்தான் உலகம், இந்த உலகத்தில் எல்லோருமே அவர்களைப் போன்றவர்கள். அவர்களிடம் இருக்கும் எல்லாமும் எல்லோரிடமும் இருக்கும். இதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்த எண்ணம்தான் அவர்களை டீமானடைசேஷனை ஆதரிக்க வைத்தது. அதேபோலத்தான் சதாசர்வகாலமும் திமுகவுக்கு அட்வைஸ் மழை பொழிகின்ற முற்போக்காளர்களும்.

அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் விமர்சிக்கத் தக்க கட்சி திமுக மட்டுமே. அதிமுக எனும் கட்சியே அவர்களைப் பொறுத்தவரை சீனில் இல்லை. நீங்கள் போய், ”திமுகவையே ஏன் திட்றீங்க?” எனக் கேட்டால் கூட “அதிமுக எல்லாம் ஒரு கட்சியா? அதை விமர்சிச்சு என்ன ஆகப் போகுது?” என்பார்கள். அதாவது அவர்களின் அறிவுக்குச் சமமாகவே தமிழகத்தில் எல்லா மக்களின் அறிவும், பார்வையும் இருக்கும் என்கிற திமிரில் வெளிப்படுவதுதான் இது. ஏனெனில் இவர்களுக்கு அதிமுக ஒரு கட்சியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் பாதிப்பேர் அதிமுகவையும், திமுகவையும் ஒன்றாகப் பார்க்கிறானே! ரெண்டும் ஒன்றுதான் எனச் சொல்கின்றவன் இருக்கிறானே!! உதயசூரியனையும், இரட்டை இலையையும் ஒன்றாகக் கருதுவோர் உண்டே! நிதர்சனம் இப்படி இருக்கையில் நீங்கள் தொடர்ந்து உதயநிதிக்கு மீது மட்டுமே பாய்ச்சும் வெளிச்சத்தில், ஓ.பி.ஆர். எனப்படும், ஓ.பி.எஸ்சின் மகன் எந்த எதிர்ப்புமின்றி தேர்தல்களத்தில் குதித்திருக்கிறாரே! “அப்பாடா, எல்லா லைட்டையும் எப்பயும் போல அந்தப் பக்கம் திருப்பிட்டாய்ங்க. நம்ம சைலண்டா இருந்துக்கலாம்” என மகிழ்கிறார்களே!! இன்னும் எத்தனைநாள் அதிமுக எனும் விஷம் வளரக் காரணமாக இருக்கப் போகிறீர்கள்?

உதயநிதி தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என ’மகாபுத்திசாலியான,’ உங்கள் வீட்டுக்கு வந்து வாக்குக் கேட்ட போது சொன்னாரா? ஒரு பொதுக்கூட்டத்தில், பல தரப்பட்ட மக்களிடையே பேசும்போது சொன்னார். அந்தப் பலதரப்பட்ட மக்களில் எம்.ஜி.ஆர். சிகப்பாக இருந்ததனால் வாக்களித்தவன் இருக்கிறான், ஜெயலலிதா லட்சணமாக இருந்ததால் வாக்களித்தவன் இருக்கிறான், ராஜீவ்காந்தி சிகப்பாக இருக்கிறார் என ஓடிச்சென்று எட்டிப்பார்த்த கிழவிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரிடமும் உதயநிதி வாக்கு கேட்கிறார், உங்களிடம் மட்டுமல்ல என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறீர்கள்? இந்தக் கிழவிகளுக்கெல்லாம் பெண்ணிய வகுப்பெடுத்து உங்களைப் போல தெளிவுமிக்கவர்களாக மாற்ற உங்களுக்கு வேண்டுமானால் நேரம் உண்டு. நாட்டுக்கு இல்லை. ஏனெனில் இந்தத் தேர்தலையும் விட்டால், இனி நாடே இல்லை!!

ஆமாம், நூறு சதவிதிகம் இங்கே யாரும் யோக்கியம் இல்லைதான். அரசியலில் ஊழல் பண்ணுவார்கள்தான். உடனே எல்லாம் மாறாதுதான். ஆனால் உடனே மாறவேண்டும், நாளையே மாறவேண்டும் என எவனையாவது நம்பித் தொலைக்கும்போதுதான் முதலுக்கே மோசம் செய்யும் மோடி போன்றவர்கள் வருகிறார்கள். அண்டர்வேரைக் கூட அம்பானியிடம் அடகு வைத்துவிடுகிறார்கள்.

இதோ இன்று கமல் வந்திருக்கிறார். இவர் சொல்கிறார், ஊழல் இல்லாத ஆட்சி என்று! அடேங்கப்பா! எப்படித்தான் கூச்சமின்றிப் பேச முடிகிறதோ!! அதைவிட வேடிக்கை, அவர் கட்சி வேட்பாளர்கள் எல்லோரும் பட்டப்படிப்பு படித்தவர்களாம்!! இவர் படித்தவரா? நாளை இவர் கட்சி சட்டமன்றத்தேர்தலில் நின்றால், “தம்பிகளா, நான் பட்டம் வாங்கல. நீங்க சி.எம் ஆகுங்க,” என எவனாவது ரசிகனுக்கு விட்டுக் கொடுப்பாரா? கேட்கிறவன் எல்லோரையும் கேணப்பயல்களாக நினைத்துத்தானே இப்படியான மாய்மாலங்களை நிகழ்த்த முடிகிறது!! தன்னுடன் நடித்த ஒரே காரணத்துக்காக கோவை சரளாவை வேட்பாளர் நேர்முகம் செய்யவைத்த ஒரு ஆள் வாரிசு அரசியல் பற்றியெல்லாம் பேசலாமா!!!

”ரத்தவன்தான் ஆளணும், மத்தவன் ஆளக்கூடாது,” என ரைமிங்காக டயலாக் பேசிய சீமான், மத்தவன் என்பவன் மச்சானாக இருந்தால் தாராளமாக ஆளலாம் என அவர் தெலுகு மச்சானுக்கு விருதுநகரில் சீட் கொடுத்திருக்கிறார். இதைவிட வேடிக்கை என்ன தெரியுமா? நாம் தமிழர் கட்சி அதிகாரபூர்வமாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பே சீமான் மச்சான் வேட்புமனு தாக்கலை முடித்துவிட்டார். ஆக, காலையில் டைனிங் டேபிளில் அமர்ந்து அண்ணன், அண்ணி, மச்சான் மூவரும் தங்களுக்குள் பேசி முடிவுசெய்துவிட்டார்கள். எவனாவது போன் செய்து நியாயம் கேட்டால் முட்டாப்பயலே, அந்தப் பயலே இந்தப் பயலே என வாயில் வயலின் வாசிப்பார்!! இது ஒரு கட்சி. இதுக்குத் தொண்டர்கள் வேறு.

நீங்கள் சுற்றிச் சுற்றிப் பாருங்களேன்! மாற்றம் தருகிறேன், மாத்தி வைக்கிறேன், எருமைமாடு மேய்க்க வைக்கிறேன் என வருவதெல்லாம் வரும்போதே பூட்டகேசுகள்தான்!

மோடியை உங்களுக்குப் பிடிக்காது. மோடிக்கு கூஜா தூக்கும் ஜாம்பி சங்கிகளை உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. எச்.ராஜா குரலைக் கேட்டால் வாந்தி எடுப்பீர்கள். ஆஃசீபாவின் மரணம் உங்களை உலுக்கி இருக்கும். அனிதாவின் மரணம் உங்களை வாட்டி எடுத்திருக்கும். உங்கள் தங்கைகளைப் பார்க்கும்போதெல்லாம் பொள்ளாச்சியில் கதறிய நம் தங்கைகளின் நினைவு வந்து வாட்டும். இவர்களை எப்போதடா தூக்கி எறிவோம் எனக் காத்திருப்பீர்கள். ஆனால் உங்களைப் போட்டுக் குழப்புவார்கள்! உங்கள் ஆதரவைப் பெற முடியாதவர்கள் உங்களைப் பல வழிகளில் குழப்புவார்கள். ஜனநாயகம் என்றால் வேட்பாளர் நல்லவரா எனப் பார்த்து ஓட்டு போடவேண்டும், மாற்று அரசியல் வேண்டும், நோட்டாவுக்குப் போட வேண்டும், ஓட்டே போடக் கூடாது, அவனுக்குப் போடலாம், இவனுக்குப் போடலாம், இவன் நல்லாப் பேசுகிறான், அவன் நல்லாப் பேசுகிறான் என ஏதேதோ சொல்லிச் சொல்லிச் சொல்லிக் குழப்புவார்கள். ஏமாந்துவிடாதீர்கள்!! துப்பாக்கிச் சண்டைக்கு கத்தியை எடுத்துப் போகச் சொல்வார்கள். எடுத்துப் போனால் மரணம்தான்! நாம் துப்பாக்கிச் சண்டைக்கு துப்பாக்கியைத்தான் எடுத்துப் போக வேண்டும். யாரை யாரால் தூக்கி எறிய முடியுமோ அவர்களுக்கு ஆதரவளிப்பதுதான் புத்திசாலித்தனம், சரியான ஜனநாயகப் புரிதல்.

நான் ஒன்றைச் சொல்கிறேன். ஹிட்லர் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் ஒருவேளை ஜெர்மானியர்களுக்கு தேர்தல் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஹிட்லருக்கு அங்கே ஒரு வாக்கு கூட விழுந்திருக்காது. அவரைத் துரத்தி அடித்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அமையாத ஒரு வாய்ப்பு இந்தியர்கள் நமக்கு வாய்த்திருக்கிறது. தவறவிட்டோம் என்றால் இன்றைய ஜெர்மானியர்கள் அவர்கள் மூதாதையர்களின் தவறுகளைத் தூக்கிச் சுமந்ததைப் போல நம் தவற்றை நம் பிள்ளைகள் தூக்கிச் சுமப்பார்கள். கவனம்!!