இந்த இதழ் வெளிவரும்போது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும். திமுகவின் வெற்றியைப் பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. மக்கள்தீர்ப்பு இந்நேரம் முழுமையாக வெளிவந்திருக்கும். ஜனநாயகத்தில் அதுவே இறுதிமுடிவு. நாம் தேர்தல் வெற்றி தோல்விகளை பற்றி பேசுவதைக் காட்டிலும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையை பற்றி விவாதிப்பதே இப்போது அவசியம்.
‘அரசியல்படுத்துதல்’ என்ற வார்த்தை ஒரு காலத்தில் இடதுசாரிகளால் பிரபலப்படுத்தப்பட்டது. அதேபோல இன்னொரு வார்த்தை ‘வென்றெடுத்தல்’ என்பதாகும். தீவிர இடதுசாரி இயக்கங்கள் பலவீனமடைந்த பிறகு ‘வென்றெடுத்தல்’ என்ற வார்த்தை ஒரு அரிதான சொல்லாக மாறிவிட்டது. ஆனால் ‘அரசியல்படுத்துதல்’ என்ற வார்த்தை இப்போது கவலையுடன் பலராலும்
உச்சரிக்கப்படுகிறது. முக்கியமாக திராவிட இயக்கம் மற்றும் இடதுசாரிகள், இளைஞர்களை அரசியல்படுத்துவது பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான அவசியம் இப்போது என்ன வந்திருக்கிறது?
சமூகத்தின் கண்ணுக்குத் தெரியாமல் உதிரியாக இருந்த ஒரு பண்பாட்டு கிருமி விஜயின் அரசியல் வருகைக்கு பிறகு இளைஞர்களின் வழியே உக்கிரமாக வெளிப்பட்டபோதுதான் பலரும் ஒரு கலாச்சார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்த இளைஞர்களின் அரசியலற்ற அரசியல் பல தளங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் சினிமா பிம்பத்தை மட்டுமே மையமாகக் கொண்டு தனது அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்கிக்கொண்ட இந்த இளைஞர்கள் யார்? இவர்கள் விஜயின் வழியாக மட்டுமே உருவாகி வந்தவர்களா?
இல்லை என்று தோன்றுகிறது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இத்தகைய உதிரி இளைஞர்களை பரவலாகக் காணமுடிந்திருக்கிறது. அது பொத்தாம் பொதுவான ஒரு அராஜக மனநிலை. அராஜகமே கேளிக்கையாக மாறும் ஒரு விசித்திரமான மனநோய். இவர்கள்தான் கல்லூரிகளில் ’ரேகிங்’கில் ஈடுபட்டார்கள். ‘ பஸ் டே’ கொண்டாடி வன்முறைகளில் ஈடுபட்டார்கள். கல்லூரிகளில் மோதல்களில் ஈடுபட்டார்கள். தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக அலைமோதி இருக்கைகளை உடைத்தார்கள். இவர்கள் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்த ரஜினி ரசிகர்களுக்கு அடுத்துவந்த இன்னும் உக்கிரமாக்கப்பட்ட தலைமுறை. ஆனால் இவர்கள் சினிமாவில் மட்டும் உருவாகிவந்தவர்கள் அல்ல. ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவது, போதைப்பொருள்களை பயன்படுத்துவது, குடும்பம் ,கல்வி ,சமூகம் என அனைத்து வேர்களிலிருந்தும் துண்டித்துக்கொண்டு ஒரு உதிரி கும்பல் கலாச்சாரத்தின் கேளிக்கையில் மூழ்குவது என இவர்கள் ஒரு புதிய பண்பாட்டு உயிரிகளாக உருக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு சமூகத்தின் எந்த உயரிய மதிப்பீடுகளின்மீதும் மரியாதை கிடையாது. அரசியல் கட்சிகளின்மீதோ தலைவர்களின்மீதோ அவர்கள் மனதில் அர்த்தமற்ற ஒரு வெறுப்பு வளர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த நூறு வருடங்களில் அரசியல் இயக்கங்களாலும் தலைவர்களாகவும் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சிகள் மாற்றங்கள் பற்றி அவர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையும் நிகழ்காலத்தை பற்றிய அக்கறையின்மையும் கொண்ட அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இளைஞர்களாக அவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
அதோடு மட்டுமல்ல, எல்லோரும் மோசமானவர்கள் எல்லாத் தலைவர்களும் ஊழல்வாதிகள் சமூகத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று அவர்கள் நம்பவைக்கப்பட்டார்கள். இப்படி அரசியலற்ற இயக்கங்களை நோக்கி அவர்களை துண்டு துண்டாக அணிதிரட்டுவதற்கு பல்வேறு சக்திகள் செயல்பட்டன. சகாயம் ஐஏஎஸ் அடுத்த முதல்வராக வேண்டும் என்று யாராவது சொன்னால் அதையும் நம்பினார்கள். அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னால் அதையும் நம்பினார்கள். சுற்றுச்
சூழல் பாதுகாப்பு, மரம்நடுதல், இரத்த தானம் போன்ற எளிய சமூகத்தொண்டுகள் போதும் என்ற மனநிலையும் இன்னொருபுறம் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற தற்காலிக உணர்வெழுச்சிகளும் அவர்களது மனநிலையை வடிவமைத்தன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசியல் கட்சிகள் வரக்கூடாது என அவர்கள் தடுத்தது அப்படித்தான். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு பின்பும் சில அரசியல் நலன்கள் ஒளிந்திருந்தன. அதிமுக அரசின் முழு ஆதரவோடு நடத்தப்பட்டு பிறகு அதே அரசினால் கடுமையாக ஒடுக்கப்பட்ட போராட்டம் ஜல்லிக்கட்டு.
அவர்களுக்கு ஒரு தொடர் இயக்கம் தேவைப்பட வில்லை. மாறாக ஒரு கதாநாயக பிம்பம் அவர்களை வழிநடத்த வேண்டுமென்று விரும்பினார்கள். இதில் நாம் காணவேண்டிய இன்னொரு உண்மையும் இருக்கிறது. இந்த தற்காலிக உணர்வெழுச்சிகொண்ட இளைஞர்களை மரபான கட்சிகளால் தம்மோடு இணைத்துக்கொள்ள முடியவில்லை. அந்த கட்சிகளின் வழிமுறைகளில் இவர்களை உள்வாங்குவதற்கான தன்மையில்லை. ஆனால் திடீரென ஒரு மரபான கட்சியின் எந்த அம்சமும் இல்லாமல், முக்கியமாக கொள்கையோ கோட்பாடோ இல்லாமல் எழுந்துவரும் ஒரு இயக்கத்தில் இவர்கள் அலையலையாக இணைவதன் காரணம் அதில் அவர்கள் உடனடியான ஒரு முக்கியத்துவத்தை பெறுகிறார்கள். எந்த தயாரிப்பும் இன்றி அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஒரு கற்பனையான தலைமைத்துவத்தை அவர்கள் பெறுகிறார்கள். ஒரு பெரிய இயக்கத்திற்கு தாங்கள் சமமானவர்கள் என்று கட்டமைக்கப்படும் பிம்பம் அவர்களை மனக்கிளர்ச்சியடையவைக்கிறது. விஜயைக் காண்பதற்கு கடும் வெயிலில் ஏன் மணிக்கணக்கில் போய் நிற்கிறார்கள்? உயிர் அபாயத்தை ஏன் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்? அவர்களது வெறுமையான மனங்களில் ஒரு போலி உத்வேகம் நிரம்புகிறது. தற்காலிகமாக அதிகாரத்தை நோக்கிய ஒரு கனவு மேழுகிறது. அவர்கள் ஒரு உளவியல் ரீதியான தீவிர பங்கேற்பை உணர்கிறார்கள். இது மரபான கட்சிகலில் அவ்வளவு எளிதில் நிகழாது.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் பண்பாட்டு அரசியலின் இரு கூறுகளை பார்க்கவேண்டும். ஒன்று சமூகநீதி சார்ந்த அரசியலின் பின்னே பெருமளவு திரண் வர்கள். இன்னொருபுறம் சினிமா மாயைக்கு ஆட்பட்டவர்கள். எம்.ஜி.ஆர் தொடங்கி, ஜெயலலிதா, விஜயகாந்த், இப்பொழுது விஜய் என அரசியலை ஒரு சினிமா பாரம்பரியம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இடையில் ரஜினி ஆடிய போங்காட்டம், கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடுகள், கடந்த காலத்தில் சிவாஜி கணேசனின் அரசியல் கனவுகள், இடையில் டி.ராஜேந்தர், கார்த்திக், கருணாஸ் போன்றவர்களின் உதிரி முயற்சிகள் என தமிழ்நாடு அரசியலில் எத்தனையோ சினிமா இடையீடுகள்.
இதை நாம் ஆந்திராவிலும் பார்க்கலாம். என்டி ராமாராவ், சிரஞ்சீவி, பவன் கல்யாண் என ஒரு சினிமா பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியைக் காணலாம். வட இந்தியாவில் எத்தனையோ உச்ச நட்சத்திரங்கள் இருந்தபோதும்கூட ஏன் அவர்கள் அரசியல் களங்களுக்கு வரவில்லை? அவர்களின் புகழ் ஏன் அரசியலில் ஒரு முதலீடாக மாறவில்லை? சிலர் பெரிய கட்சிகளின் தயவுடன் எம்பிக்கள் ஆகியிருக்கலாம். ஆனால் அவர்கள் தனிப்பட்ட அரசியல் சக்தியாக மாறவில்லை. வட இந்தியாவில் மதம் என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் முதலீடாக இருந்து வருகிறபோது அதைத்தாண்டி சினிமா பிம்பங்கள் அங்கு அரசியல் பிம்பங்களாக எழுச்சி பெற முடியவில்லை. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மதத்தை ஒரு அரசியல் முதலீடாக மாற்ற முடியாத ஒரு சூழல் இருந்ததற்கு காரணம் இங்கு கல்வியறிவின் வளர்ச்சியும் திராவிட இயக்கங்களின் தாக்கமும் மிக முக்கிய காரணம்.
ஆனால் வெகுசன உளவியலில் எப்போதும் உணர்ச்சிமயமான தேவைகளுக்கான ஒரு வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் அந்த இடத்தை மதத்திற்கு பதில் சினிமா எடுத்துக்கொண்டது. தங்களது ரசிகர்களை உணர்ச்சிகரமான ஒரு அரசியல் முதலீடாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
ஒரு சினிமா பிம்பத்தின் பின்தொடர்ந்து ஒரு கேளிக்கை அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் அரசியலில் ‘ஏதாவது ஒரு மாற்றம்’ என்று நினைக்கிறார்கள். அந்த ‘ஏதாவது’ என்பதற்கு அவர்கள் ஓர் புதிய தலைவன் என்பதைத்தவிர வேறு எந்தப் பொருளும் கொள்வதில்லை. மேலும் தமிழர்களின் சமூக பொருளாதார வாழ்வில் கல்வி வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, மனிதவளக் குறியீடுகளின் வளர்ச்சி என எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருந்தபோதும் அவர்கள் அதைப்பற்றி எந்த அறிதலும் கொண்டிருப்பதில்லை. தமிழ்நாட்டில் நடந்த இந்த மாற்றங்களைப் பற்றி இளைஞர்களுக்கு எந்த பார்வையும் இல்லாமல் ஆக்கியதில் போலி தூய்மைவாதம் பேசியவர்களுக்கு ஒரு பங்குண்டு. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் இயக்கங்களை ஒழித்துக்கட்டியர்களுக்கும் ஒரு பங்குண்டு. இந்த புதிய யுகத்தைச்சேர்ந்த இளைஞர்களின் குழப்பங்களை அறிந்து அதற்கான உத்தியை வகுக்க முடியாமல்போன அரசியல் இயக்கங்களுக்கு ஒரு பங்குண்டு. இந்த போலி பிம்பங்களின் கூலிப்படையாக செயல்பட்டு அவர்களை ஊதிப்பெருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒரு பங்குண்டு. சமூக இயக்கம் பற்றி ஒரு அறிவார்ந்த தளத்தில்கூட புரிதலற்ற எழுத்தாளர்களுக்கும் ஒரு பங்குண்டு. எல்லோரும் சேர்ந்துதான் டிரான்ஸ்பார்மர்களில் ஏறும் இளைஞர்களை உருவாக்கியிருக்கிறோம். அவர்களை அந்த டிரான்ஸ்பார்மர்களைவிட்டு இறங்க செய்வதற்கு சமூக உணர்வுமிக்க பொறுப்புணர்வு மிக்க ஒரு கல்வியை பரவலாக அளிப்பது முக்கியம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் உலகமயமாதல் சூழலில் டிஜிட்டல் யுகத்தில் அவர்களது சிதறுண்ட மனங்களை, கேளிக்கை கலாச்சார விழுமியங்களை மாற்றி வாழ்வின்மீதும் சமூகத்தின்மீதும் அக்கறை கொண்டவர்களாக வார்த்தெடுப்பது பல தளங்களிலும் மேற்கொள்ள வேண்டிய முயற்சி.
நாம் அனைவரும் மிக மோசமான ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் மேற்கண்ட வகைமாதிரிக்குள் அடக்குவது நியாயமல்ல சமூக விழிப்புணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் கொண்ட தெளிவான பார்வையுடைய எவ்வளவோ இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் எதிர்காலதத்திற்கான நம்பிக்கை நட்சத்திரங்கள். அவர்களே அரசியல் தலைமைப்பண்புடையவர்களாகவும் மாறுவார்கள்.
நாம் இந்த உலகத்தை மாற்றவேண்டுமெனில் அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது இந்த உலகத்தை முதலில் புரிந்துகொள்வது.

மனுஷ்ய புத்திரன்